ஆண்டர்சனின் பாதுகாவலர்கள் அருந்ததிராயை கைது செய்யத் துடிப்பதில் வியப்பென்ன இருக்கிறது?

காங்கிரசும் பாரதீய ஜனதாவும் ஒருமித்த கருத்துடன் செயல்படுவது ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில் இவர்கள் ஒன்றினைந்து குரைத்தது அருந்ததி ராயை கைது செய்வதற்காக. தேச துரோக வழக்கு பதிவு செய் என்று இரண்டு கட்சிகளின் செய்தித்தொடர்பாளர்களும் அரசுக்கு உத்தரவிட்டுவிட்டார்கள். ஆர் எஸ் எஸ் விரும்பியபடி தீர்ப்புக்களே வாசிக்கப்படுகையில் செக்ஷனைக் குறிப்பிட்டு வழக்கு பதியச்சொல்வதெல்லாம் ஒன்றுமே இல்லாத சமாச்சாரம். எதற்காக இந்த கொலைவெறி? காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக என்றைக்குமே இருந்ததில்லை என்று அருந்ததிராய் சொல்லிவிட்டாராம். அவ்வளவுதான் சீக்கியர்களை படுகொலை செய்தவர்களும் இசுலாமியர்களை படுகொலை செய்தவர்களும் ஒன்றுசேர்ந்து பொங்கித் தீர்த்துவிட்டார்கள்

அது மட்டுமா அவர் மீது கோபம்கொள்ள இன்னும் ஏராளமானவை இருக்கின்றனவே.. ஒரு படைப்பாளி என்பவன் எப்படி இருக்கவேண்டும்?? இயக்குனர் சங்கரைபோல இருக்கலாம். எதிலும் பட்டுக்கொள்ளாமல் இருந்துவிட்டு தன் படத்தின் ஆபாசக் காட்சிகளைக் காப்பாற்ற அதை ஆந்திராவுக்கு சென்சாருக்கு அனுப்பலாம்,வெற்றிக்கு ஷர்ட்கட் நேர்மைதான் என்று பாட்டும் எழுதிக்கொள்ளலாம். ரஜினி கமலைப்போல இருக்கலாம், யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு பக்கவாத்தியம் வாசித்துக்கொண்டு ஆட்சியில் இருப்பவர்கள் கூப்பிடும்போதெல்லாம் போய் வாழ்த்திவிட்டுவரலாம். இல்லை வைரமுத்து மாதிரி ஒரே தலைவனின் காலை நக்குவதையும் தினசரி கடமையாகக் கொள்ளலாம் காலைக்கடனைப் போல. அதுவும் இல்லாவிட்டால் சத்தியராஜைப் போல ஷேமத்துக்கு சேதாரம் வராத அளவுக்கு மட்டும் கொள்கை பேசலாம். இன்னும் குழுச்சண்டை முதல் குடிப்பதைப்பற்றிக்கூட இலக்கியவாதிகள் சிலாகித்து எழுதலாம்.

இப்படி படைப்பாளிகளுக்கென சுதந்திரங்கள் கொட்டிக்கிடக்கையில் ஒரு எழுத்தாளர் மட்டும் எப்படி மக்களைப் பற்றி சிந்திக்கலாம்? பத்தாயிரம் கோடிக்கு முகேஷ் அம்பானி வீடுகட்டுமளவுக்கு தேசம் வளர்ந்துவிட்டது. பெருமிதம் கொள்ளவேண்டிய தருணத்தில் சட்டீஸ்கர் பழங்குடிகளின் வறுமை பற்றியும் வாழிடம் பற்றியும் ஒரு எழுத்தாளர் கவலைகொள்வது தேசதுரோகமன்றி வேறென்ன? ஒடுக்கப்படும் மக்களின் உரிமையையும் சுதந்திரத்தையும் பற்றி பேசுவோர் கைதுகூட செய்யப்படாவிட்டால் ராஜபக்சேவின் உயிர்த்தோழனாக விளங்கும் ஒரு அரசு நடக்கும் ஒரு நாட்டுக்கு அசிங்கம் இல்லையா?

அரசைக்காட்டிலும் அருந்ததிராயை சிறைவைக்க துடித்த இன்னொரு கூட்டமும் இருக்கிறது. அருந்ததிராய் பேசிய அந்த குறிப்பிட்ட கருத்தரங்கம் நடந்த அன்று அளவுக்கு மீறி கொந்தளித்தது டைம்ஸ் நவ் தொலைக்காட்சிதான். இதை இன்னும் எத்தனை நட்களுக்கு நாம் அனுமதிக்கப்போகிறோம் என்று ஆத்திரப்பட்டார் அர்னாப் கோஸ்வாமி. இது அர்னாபா அல்லது மாறுவேடமணிந்த மன்மோகனா என்று சந்தேகமே வந்திருக்கும் அன்று அவரை டிவியில் நீங்கள் பார்த்திருந்தால். அனேக ஊடகங்கள் அவர்களது வாசகர்களுக்கு விசுவாசமாக இல்லாமல் விளம்பரம் தரும் முதலாளிகளுக்கு விசுவாசமாக இருக்கின்றன. அதனால்தான் தாராளமயத்துக்கு எதிரான எந்த ஒரு சிறு சலனத்தையும் அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அருந்ததிராயுடனான நேர்கானல் ஒன்றில் கரண் தாப்பர் கேட்ட எல்லா கேள்விகளிலும் அவரையும் ஒரு மாவோயிஸ்டாக அடையாளப்படுத்தும் நரித்தனமே மேலோங்கியிருந்தது. (புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் மாவோயிஸ்டுக்களை ஆதரிக்கிறார் என்பதைவிட புக்கர் பரிசு பெற்ற மாவோயிஸ்ட் எழுத்தாளர் எனும் பிரச்சாரம் செய்யப்படுவதற்கான முயற்சி இது)

இந்த தேசபக்தர்களின் எப்போதும் சாதாரண மக்களைப் பற்றி கவலை கொள்பவர்கள் அல்லர். ஜெசிகா லால் எனும் மாடல் அழகியின் கொலைக்காக லட்சக்கணக்கான கையெழுத்தை பெற்று நாள் கணக்கில் செய்தியாக்கிய என் டி டி வி, காஷ்மீர் இளம்பெண்கள் இருவர் ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட செய்தியை மட்டும் ஏன் கண்டுகொள்ள மறுக்கிறது? காமன்வெல்த் கிராமத்தின் கட்டிட சுவர்களில் படிந்திருந்த பான்மசாலா எச்சிலைக்கூட புலனாய்வு செய்து செய்தியாக்கிய சி.என்.என் தொலைக்காட்சி, கலவரத்தை அடக்க நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட காஷ்மீர் சிறுவர்கள் மிக அருகிலிருந்து (பாயிண்ட் பிளங்க்) சுடப்பட்டார்கள் என்கிற செய்தியை மட்டும் ஏன் ஒரு வரியில் முடித்துக்கொள்கிறது? இதையெல்லாம் கேள்வியாக்குகிறார் அருந்ததி.. பதில் சொல்ல திராணி இல்லாமல் அதை பலவீனமான பின்வாங்கல் (weak U turn) என்று வீரம் பேசுகிறார் அர்னாப்.

அருந்ததியின் கேள்விகளுக்கு இவர்களிடம் பதில் நிச்சயம் இருக்காது., அமிதாப் வீட்டு திருமணத்தை படமெடுக்கப்போய் தெருநாயைப்போல அடித்துவிரட்டப்பட்டவர்கள் இந்த தேசிய ஊடகத்தவர்கள். பாதுகாப்புத்துறை அமைச்சராய் இருந்த ஜார்ஜ் பெர்னாண்டர்சை அம்மணமாக்கி சோதனை செய்தது அமெரிக்கா அதுவும் ஒன்றுக்கு இரண்டுமுறை. அதை அவரே ஒத்துக்கொண்டபிறகும் அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று சாதித்து தேசத்தையே அம்மணமாக்கியவர்கள் இந்த ஆட்சியாளர்கள். இந்த இரண்டு கூட்டுக்களவானிகளையும் அம்பலப்படுத்தும் ஆளாக இருப்பதால்தான் இந்த இரு தரப்பினரும் அருந்ததிராயை முடக்கிவிட நினைக்கிறார்கள்.

சிறுவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதையும் அப்பாவிப்பெண்கள் வன்புணர்ச்சி செய்து கொல்லப்படுவதையும் கண்டிக்காதவன் மனிதனாகவே இருக்கமுடியாது. மனிதனாகவே இல்லாதவர்கள் இந்தியனாக இருந்து மட்டும் என்ன கிழிக்கப்போகிறார்கள்? உலகம் அறிந்த எழுத்தாளர் நாளொன்றுக்கு இருபது ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிக்கும் என்பத்துமூன்று கோடிபேருக்காக சிந்திக்கிறார் என்பதும் சொந்த நாட்டு ராணுவத்தின் அத்துமீறலுக்கு எதிராக குரல்கொடுக்கிறார் என்பதும் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய சங்கதி. ஒரு கோடிரூபாய் செலவில் பயணம் செய்து ஒரு ஏழைவீட்டில் சப்பாத்தி சாப்பிடும் ராகுல் காந்தி பற்றி சிலாகித்து எழுதிவிட்டு, உயிரைப் பணயமாக வைத்தாவது பழங்குடிகளில் அவலம் குறித்து எழுதவிரும்பும் அருந்ததியைப் பற்றி அரசுக்கு கோள்மூட்டும் வேலையை செய்வதற்காக ஊடகங்கள்தான் வெட்கப்படவேண்டும். அவர் தேசதுரோகி என்றால் நாமெல்லாம் தேசபக்தனாக இருப்பதைப் பற்றித்தான் வருந்தவேண்டும்.

இப்போது அரசு அருந்ததிராய் மீதும் கிலானி மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறது. எனவே இவர்கள் பேச்சு சுதந்திரத்தை மதிப்பவர்கள் என்று கருதிவிட முடியாது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச விவாதமாக மற்ற அரசு விரும்பவில்லை என்பதால் அருந்ததிராயை எரிச்சலுடன் சகித்துக்கொண்டிருக்கிறது. அருந்ததி போன்றோரிடம் மென்மையாக நடந்துகொள்வதாக பாஜக அரசாங்கத்தை நொந்துகொள்கிறது. காங்கிரசும் மனிதஉரிமை பற்றிப் பேசும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத இந்த சூழலைக்குறித்து நொந்துகொண்டிருக்கும். அதற்கான தருணத்தை எதிர்நோக்கித்தான் அரசு காத்திருக்கிறது, அதுவரை தேசதுரோக பழிபோட்டு பரப்புரை செய்ய தங்கள் எடுபிடி ஊடகங்கள் இருக்கின்றன எனும் திருப்தியோடு.

ஒரு அறிமுகம், சில விளக்கங்கள் மற்றும் பற்பல நன்றிகள்.

(தளத்திற்கு புதியவர்கள் இப்பதிவை வாசிப்பதைத் தவிர்க்கவும், ஏதேனும் பொதுவிவகாரத்தை எதிர்நோக்கி இப்பதிவை திறந்திருப்பீரேயானல் ஏமாற்றமடைவீர்கள்., தயவுசெய்து வேறு நல்ல தளத்துக்கு செல்லவும் ).

பல்வேறு குழப்பங்களுடனேயே இப்பதிவை துவக்குகிறேன். வழக்கமாக கட்டுரைகள் எழுதத்துவங்குகையில் என்னிடமிருக்கும் திட்டமிடல் எதுவும் இப்போதில்லை. வில்லவன் என்ற பெயரில் எழுதுகிற என்னை அறிமுகம் செய்துகொள்ள மட்டுமே இந்த இடுகை. பள்ளிப்பருவத்தில் இருந்தே எதையும் முழுமையாகவே அல்லது தொடர்ந்தோ நான் செய்ததாக வரலாறில்லை. ஆகவே வில்லவன் வலைப்பூவை தொடங்கி சில கட்டுரைகள் எழுதிய பிறகு தொடர்ந்து எழுதலாம் என்ற யோசனை வந்த போது குறைந்தபட்சம் ஐம்பது கட்டுரைகளேனும் எழுதிய பிறகே என்னை அறிமுகம் செய்துகொள்ளவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். வலைப்பூ துவங்கி சற்றேறக்குறைய ஓராண்டு முடிந்திருக்கிறது, அறிமுகம் செய்துகொள்ள காலம் இப்போதுதான் வந்திருக்கிறது. ஆயினும் அதற்கான தகுதி வந்துவிட்டதாக நான் கருதவில்லை.

இலங்கையில் இறுதிகட்டப்போர் துவங்கியபோதுதான் இணையத்தில் தமிழை தீவிரமாக வாசிக்க ஆரம்பித்திருந்தேன். அப்போது பல தளங்களில் கருத்துக்களை பின்னூட்டமிட விரும்பினாலும் தமிழில் எழுதுவது எப்படி என்பது தெரியாதாதமையால் அக்காரியத்தை செய்ய இயலவில்லை. சில முறை ஜிமெயிலில் எழுதி அதை வெட்டி ஒட்டலாம் எனக்கருதி முயற்சி செய்து படுதோல்வி அடைந்திருக்கிறேன். முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களுக்குப் பிறகு பல நாட்கள் இணையத்தை விட்டு விலகியிருந்தேன் இணையம் மட்டுமல்ல செய்தி வழங்கும் எல்லா ஊடகங்களையும் காணாது விலகியிருந்தேன். ஒரு வாரத்தில் ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்பதையும் புலிகள் வீழ்ந்துவிட்டார்கள் என்கிற செய்தியையும் கேட்குமளவுக்கு மனதை தயார் செய்யவே இரண்டு மாதங்களானது (பல விமர்சனங்கள் இருப்பினும் பிரபாகரன் மீதான எனது பால்யகால ஈர்ப்பு இன்னமும் குறையவில்லை.. இப்படிப்பட்ட வழிபாட்டு மனோபாவமும் அவரது துயரமான முடிவுக்கு ஒரு காரணம் என்கிற கசப்பான உண்மையை உணர்ந்தும்கூட).

ஓரளவு மனோபலம் வந்தபிறகு மீண்டும் இணையத்தில் வாசிப்பை தொடங்கினேன். இடைவெளிக்குப் பிறகு என்பதால் இயல்பாகவே கூடுதல் நேரத்தை இணையம் எடுத்துக்கொண்டது. அப்போது எதேச்சையாக கிடைத்ததுதான் அழகி எனும் தமிழ் மென்பொருள். சரி இனி சுலபமாக பின்னூட்டமிடலாம் என்று நினைத்தது மீண்டும் பிழையானது. பல வார்த்தைகளை என்னால் தட்டச்சு செய்யவே முடியவில்லை. அதே காலத்தில் பின்னூட்டமிட வலைப்பூ அவசியமோ எனும் சந்தேகமும் எனக்கு இருந்தது (வினவு பின்னூட்டப் பகுதியில் வலைதள முகவரி எனும் பகுதி இருந்தமையால் வந்த சந்தேகம் இது). ஆகவே ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி எழுதி தட்டச்சைப் பழகுவது அப்படியே அதை ஒரு வலைபூவில் வலையேற்றுவது எனும் விபரீத எண்ணம் உருவானது.

எந்த பெயரில் வலைப்பூவை ஆரம்பிப்பது என்பது முதல் கேள்வி. சொந்தப் பெயரில் வலைப்பூ ஆரம்பித்து சொதப்பிவிட்டால்? அதனால் ஒரு மாற்றுப் பெயர் அவசியமானது. சும்மா பேருக்கு ஆரம்பிப்பதால் சிறப்பான தனித்துவமான ஒரு பெயரை தேடும் சூழல் இருந்திருக்கவில்லை. சிறு வயதில் எனக்கு வைக்கப்பட்ட பெயர் வில்லவன் கோதை. பிற்பாடு எங்கள் ஆத்தா (அதாவது பாட்டி (அப்பாவின் அம்மா)) இறந்தபோது அவர் என்னை செல்லமாக அழைத்துவந்த பெயருக்கு நான் மாற்றப்பட்டேன். இருபத்தைந்து ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத பெயரை வலைதள முகவரிக்கு பயன்படுத்துவது என்பது முடிவானது. அடுத்த பிரச்சனை எதைப் பற்றி எழுதுவது என்பது. அதிகம் சிரமப்படாமல் இருக்க மற்றவர்க்கு பரிச்சயமான மற்றும் எனக்கு எழுத எளிதான திருப்பூரை எடுத்துக்கொண்டேன். இப்படித்தான் எனது villavan.r எனும் பிளாகர் தளம் துவங்கியது.

 

இது நியாயமாக நான்கு அல்லது ஐந்து இடுகைகளுடன் முடிந்திருக்கவேண்டும். ஆச்சரியப்படத்தக்க வகையில் சில பின்னூட்டங்கள் வந்தன (ஒன்றுகூட வராது என்றே கருதினேன்), உலகின் இன்னொரு கோடியில் இருந்த பள்ளிக்கூட நண்பன் பூங்குன்றன் இது நான்தான் என்பதைக் கண்டுபிடித்து தொலைபேசினான், ” சிரமம் பார்க்காமல் தொடர்ந்து எழுதுப்பா” என்று இரண்டொரு முறை நினைவுபடுத்தினார் என் அப்பா. இவைதான் நான் வலையுலகில் ஒரு ஓரமாகவேனும் நிற்கலாம் என்று முடிவெடுக்கக் காரணமாக அமைந்தன. ஆயினும் பிளாக்ஸ்பாட் அவ்வளவு எளிதானதாக தோண்றவில்லை. எப்படி இருக்கிறது என்று சோதனை செய்துபார்க்க துவங்கப்பட்ட வோர்டுபிரஸ் வலைப்பூ மிக சுலபமாக இருந்தமையால் அதையே தொடர்வது என்று முடிவானது.

அனேக விசயங்களில் நான் சிரமப்பட்டதே இல்லை. எனக்கானவை பலவற்றை எனை சுற்றியிருப்பவர்களே செய்திருக்கிறார்கள், என் அலுவலகப் பணிகளில்கூட. எழுத்திலும் அதுதான் நடக்கிறது. பல கட்டுரைகளுக்கான யோசனைகள் மற்றவர்களிடமிருந்துதான் கிடைக்கின்றன. அரசியல் தொடர்பான கட்டுரைகளின் உள்ளடக்கத்தில் பாதி, நான் கேட்ட அரசியல் விவாதங்களில் இருந்தே பெறப்பட்டது. ஒரு முறைகூட பதில் சொல்லாவிட்டாலும் தொடர்ந்து பின்னூட்டமிடும் நண்பர்கள், மற்றவர்களுக்கு அறிமுகம் செய்த நண்பர்கள் என நன்றிக்குரியவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். கட்டுரைகளின் உள்ளடக்கத்திலிருந்து அதன் பரப்பை விசாலப்படுத்தியதுவரையான நிகழ்வுகளில் இவர்களது பங்களிப்பைப் கணக்கிட்டால் எனது பணி இத்தளத்தில் டி.டி.பி வேலை செய்தது மட்டுமே.

 

என் மீதே என்னால் வைக்க முடிகிற விமர்சனம், நான் பின்னூட்டங்களுக்கு பதில் தருவதில்லை என்பதுதான். இதற்கு நான் எழுதும் சூழ்நிலையை விளக்கியாக வேண்டும். பகலில் அலுவலகக் கணிணி இணைப்பில் வாசிப்பது சாத்தியம், ஆனால் எதையும் எழுத இயலாது. இணைய இணைப்பு இல்லாத வீட்டுக் கணிணியில் எழுதுவது மட்டுமே சாத்தியம். இப்படியான இருவேறு வாய்ப்புக்களை இணைத்து வேலைசெய்தால் மட்டுமே என்னால் பதில்களை எழுத இயலும். இது எளிதானதே என்றாலும் என் சோம்பேறித்தனம் அதற்கு அனுமதித்தாக வேண்டுமென்பதுதான் அதன் ஆகப்பெரிய இடையூறு. சில இடுகைகளைத் தவிர ஏனையவை எல்லாம் இரவு பத்து மணிக்கு எழுதத் துவங்கி இரண்டு அல்லது மூன்று மணிக்கு நிறைவுபெற்றவையே. காலம் கடந்தமையால் பாதியில் கைவிடப்பட்டவை மட்டும் இருபத்துயோரு கட்டுரைகள். “காதல்” கட்டுரையின் இறுதிப் பாகம், கடைசி பத்தி எழுத முடியாமையால் ஒரு மாதமாக டிராப்டில் இருக்கிறது.

பாராட்டி எழுதப்படும் பின்னூட்டங்களுக்கு எப்படி பதில் எழுதுவது என்று எனக்கு இப்போதுவரை தெரியவில்லை. ஒன்றிரண்டைத் தவிர மற்ற இடுகைகள் அவசரமாக முடித்துவைக்கப்பட்டவை. அவை பாராட்டப்படுகையில் அதற்குத் தகுந்த அளவு நான் உழைப்பை தரவில்லை என்கிற கூச்சம்தான் வருகிறதேயன்றி நன்றி சொல்லத் தோன்றவில்லை. நண்பர் இராவணன் எழுதிய விமர்சனம் ஒன்று “முதல்ல நிறைய படிங்க.. அப்புறம் எழுதலாம்” என்று பொருள்படும்படி வந்திருந்தது. அவருக்கு மட்டும் பதிலை மறக்காமல் எழுதிவிடவேண்டும் என்று நினைத்தேன், அதுவும் முடியவில்லை. அந்த பதில் இதுதான் ” நிறைய படித்துவிட்டு பிறகுதான் எழுதவேண்டும் என்றால் நான் எந்த காலத்திலும் எழுத முடியாது. ஆயினும் நிறைய வாசி எனும் உங்கள் ஆலோசனை முற்றிலும் சரியானது, இனியாவது அதற்கு (மட்டும்) நிச்சயம் முயற்சிப்பேன்”. ஆகவே நண்பர்களே சூழல் சாதகமானவுடன் உடனுக்குடன் பதில் எழுதுகிறேன். அதுவரை முன்தேதியிட்ட எனது மன்னிப்பையும் நன்றியையும் உங்களுக்கு அர்பணிக்கிறேன் (புரியலையின்னா டெடிகேட் பண்றேன்னு படிச்சுகோங்க).

இந்த வலைப்பூ (எனக்கு) கொண்டுவந்த ஆச்சர்யங்கள் ஏராளம். பத்து பதிவுகள்கூட எழுதப்படாத நிலையில் எனது கட்டுரைகள் வினவு தளத்தில் வெளியிடப்பட்டன. போதுமான தரவுகளோடு எழுதும் பழக்கம் இல்லாத எனக்கு புதிய கலாச்சாரத்திற்கு கட்டுரை எழுத வேண்டிய நிலை வந்தது முதல் திகைப்பு என்றால், ‘சுமாராத்தான் தம்பி இருக்கு’ என்று என் அப்பா சொன்ன அக்கட்டுரை வெளியீட்டிற்கு தெரிவு செய்யப்பட்டது இன்னும் பெரிய திகைப்பு (சிறப்பானதாகத் தோன்றவில்லை என்று சொல்லித்தான் அனுப்பினேன்). வாசிப்பதற்காக திறந்த கலையரசனின் தளத்தில் அவர் வாசிக்கும் வலைபூக்கள் பட்டியலில் என் தளமும் இருந்ததை பார்த்தபோது ‘உனக்கு இதெல்லாம் கொஞ்சம் ஜாஸ்திதான்’ என்று என் உள்ளம் சொன்னதென்னவோ நிஜம். ஆயினும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரங்கள் என்றால் இவைதான்.

நன்றி அறிவிப்பு இல்லாமல் இப்பதிவை எப்படி நிறைவு செய்வது? இந்தத் தளத்தில் சொல்லிக்கொள்ளும்படியான நல்ல விஷயம் ஒன்றேனும் இருக்குமானால் அதற்கு பொறுப்பானவர் என் அப்பா. நாங்கள் சமூகத்தை பார்க்கும் பார்வை அவரைப் பார்த்து கற்றுக்கொண்டதுதான். பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைப்பதில் அவருக்கு இருந்த பிடிவாதமே  எங்கள் ரசனைக்கும் ஆளுமைக்கும் அடிப்படையாக இருக்கிறது. அவர் எங்களுக்கு கொடுத்த சிறப்பான விசயங்களில் முதலிடம் பெறுவதும் இதுவே (இதை என் அண்ணனும் தங்கையும்கூட வழிமொழிவார்கள் என்று நம்புகிறேன்). இவ்வலைப்பூ தொடங்கப்பட்டபோதும் வினவில் கட்டுரைகள் வெளியானபோதும் பு.கவில் கட்டுரைகள் வெளிவந்தபோதும் என்னைவிட மகிழ்ச்சியடைந்தவர் அவரே. இப்போதும் நாங்கள் பேசிக்கொள்ளும்போது அவர் இரண்டாவதாக கேட்கும் கேள்வி என் அடுத்த இடுகை பற்றியதாகவே இருக்கிறது. ஆகவே என் முதல் நன்றி அவருக்கானதே.

அடுத்து குறிப்பிட விரும்புவது வினவு குறித்து. நான் வாசிக்கும் மிகச்சில வலைதளங்களில் வினவு முதலானது. வேர்டுபிரஸ் வலைப்பூவாக வினவு இருந்தபோதிலிருந்து அதன் வாசகன் நான். அங்கு எனது பதிவு வெளியானபோது அதிகம் அச்சமடைந்தேன் என்பதே நிஜம். அறிவார்ந்த மற்றும் நேர்மையான பார்வைகொண்ட வாசகர்கள் மத்தியில் ஒரு கற்றுக்குட்டியின் படைப்பு வைக்கப்படும்போது வரும் பதட்டம் அது. ஆனால் வினவும் அதன் வாசகர் வட்டாரமும் எனக்களித்த ஆதரவு மகத்தானது. அங்கு வெளியான என் கட்டுரைகளைக் காட்டிலும் அதற்கு வந்த பின்னூட்டங்கள் சிறப்பானதாவும் பொருள் பொதிந்ததாகவும் இருந்தன (கார்க்கி போன்றோரின் பின்னூட்டத்துடன் ஒப்பிட்டால் பிடி கத்திரி பற்றிய என் பதிவெல்லாம் ஒன்றுமேயில்லை ). வினவுக்கும் அதன் வாசகர்களுக்கும் நன்றி.. அரசியலை அணுகும் விதத்தை அங்கிருந்துதான் ஓரளவு கற்றுக்கொண்டிருக்கிறேன். இட்லிவடை, பட்டாபட்டி, செங்கொடியின் சிறகுகள் எனும் தளங்களும் இன்னும் என் நினைவுக்கு வராத பல பதிவர்களும் நான் யாரென்றுகூட தெரியாது எனது தளத்தை அறிமுகம் செய்தார்கள்,  இன்னும் பலர் உரிய பதில் கிடைக்காத நிலையிலும் தொடர்ந்து பின்னூட்டமிடுகிறார்கள். நன்றி தோழர்களே., உங்கள் வாயிலாகக் கிடைத்த ஊக்கமே எனை அடுத்தடுத்த கட்டுரைகளை எழுதும்படி தூண்டியிருக்கிறது.

ஒரு வருடம் கடந்தும் இன்னமும் வில்லவன் தளத்தின் வருகைப் பதிவு இருபத்தைந்தாயிரத்தை தாண்டவில்லை. புதிய இடுகைகள் வெளிவந்த ஓரிரு நாட்களைத் தவிர ஏனைய நாட்களில் சராசரியாக ஐம்பது முறை மட்டுமே வாசிக்கப்படும் மிகச்சிறிய வலைப்பூ இது.  ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்துக்கொண்டு அதற்கான முழுமையான தயாரிப்புக்களோடு கட்டுரைகள் எழுதுவது என்கிற இலக்கு இருக்கிறது அதற்கான பயிற்சிக்களம் என்று வேண்டுமானால் இத்தளத்தை இப்போதைக்கு சொல்லிக்கொள்ளலாம்.  முழுமையான மற்றும் நேர்த்தியான ஒரேயொரு பதிவையேனும் எழுதிவிடுவேன் என்ற உறுதியை என்னால் இப்போது தரமுடியாது. ஆனால் பொறுப்பற்ற வகையிலோ வெறும் அரட்டையாகவோ ஒரேயோரு பதிவுகூட என்னிடமிருந்து வராது எனும் உறுதியை நிச்சயமாக தரமுடியும்.

நன்றி,
வில்லவன்.

நேர்த்தியாக பராமரிக்கப்படும் எல்லா வீடுகளும் அழகானவை அல்ல.

சென்ற வாரம் எனக்கு அலுவலக வேலைகள் மிக அதிகமாக இருந்தன. செவ்வாய்க்கிழமை மாலை ஒன்பது மணிக்கு வந்த உத்தரவுப்படி அடுத்த முப்பத்தாறு மணி நேரத்துக்குள் நாங்கள் அதுவரை கத்திரியைக் காணாத துணிகளை ஆடைகளாக்கி மும்பையில் சென்று சேர்ப்பிக்க வேண்டும். அதற்கடுத்த பனிரெண்டு மணிநேரத்துக்குள் அந்த ஆடைகள் சுவிட்சர்லாந்து தலைநகருக்கு சென்றாகவேண்டும் என்றாலும் அது எங்கள் பொறுப்பல்ல என்பதால் நாங்கள் முப்பத்தாறு மணிநேர சவாலை மட்டும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கடந்த பத்தாண்டுகளில் நான் சந்தித்திராத நெருக்கடி நிறைந்த பொறுப்பு இது என்றாலும் இப்பதிவு அதனைப்பற்றியதல்ல.

சாத்தியமில்லாத ஒன்றை சாத்தியமாக்கிவிட்ட திருப்தி எங்கள் முதலாளிகளில் ஒருவரது வீட்டை அடைந்த பிறகு காணாமல்போனது பற்றிய பகிர்வு இது. பெட்டிகளை மும்பை அலுவலர்களிடம் ஒப்படைத்த பிறகு தங்குவதற்காக எங்கள் முதலாளி வீட்டில் இறக்கிவிடப்பட்டேன். அவர் அடுத்தகட்ட ஏற்றுமதி வேலைகளுக்காக விமான நிலையத்திலேயே இருக்க அவரது மனைவியும் வீட்டில் இல்லாத நேரத்தில் அவ்வீட்டுக்கூடத்தில் சுமார் நான்கு மணிநேரம் அமர்ந்திருக்கும் துர்பாக்கியம் அன்று வாய்த்தது. பெருந்தனக்காரர்கள் சிலரோடு பழக்கமுடையவன் என்றாலும் அவர்கள் வீடுகளுக்கு செல்வதையோ அல்லது விருந்துகளுக்கு போவதையோகூட இதுவரை நான் தவிர்த்து வந்திருக்கிறேன். ஆகவே மிக அந்நியமாக இருந்த அச்சூழலில் அந்த வீட்டை நிதானமாகவும் கவனமாகவும் திரும்பத்திரும்ப பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லாது போயிற்று.

மும்பையின் மிகப் பிரதானமான இடத்தில் இருக்கும் மூன்று படுக்கையறை குடியிருப்பு அது. என் பார்வையில் பட்ட அத்தனையும் மிக கவனமாக பராமரிக்கப்பட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது கூடவே அங்குலம் தவறாது அங்கிருந்த சுத்தமும்.  அந்த நான்கு மணிநேரத்தில்  அவ்வீட்டு வேலைக்கார பெண் ஏதேனும் ஒரு வேலை செய்தவண்னமிருந்தார். ஒருவழியாக இருவரும் இரவு ஒன்பதரை மணிக்கு வந்தார்கள். பத்தரை மணிக்கு ஐந்துவகை பதார்த்தங்களுடன் எங்கள் இரவு உணவு துவங்கி பதினோரு மணிக்கு முடிந்தது.( எனக்குத் தரப்படும் இப்படியான உபசரிப்புகள் எல்லாம் நாய்க்கு நவரத்தின மாலை போட்ட மாதிரிதான். அதன் மதிப்பு தெரியாது என்பது மட்டுமல்ல அது ஒரு கூடுதல் சுமையாகவே எனக்கு இருக்கும். ) அதன் பிறகு அவ்வீட்டின்  நீண்ட நேரம் பாத்திரம் தேய்க்கும் ஓசை முடியும் முன்பே நான் உறங்கிப் போனேன்.

ஏறத்தாழ பதினேழு மணிநேரம் அவ்வீட்டில் செலவிட்டிருக்கிறேன். உறங்கும் நேரம் தவிர்தது (அனேகமாக பனிரெண்டு முதல் ஆறு மணிவரை) மற்ற நேரங்களில் எல்லாம் அவ்வீட்டுப் பணிப்பெண் செய்வதற்கென வேலைகள் அங்கு நிறைந்திருந்தன. அவ்வீட்டு நாயும் நானும் கலைத்துப் போட்ட சோஃபா தலையனைகள் அடுத்த சில நிமிடங்களில் அதனதன் இடங்களில் வைக்கப்பட்டன. வீட்டு உரிமையாளர்கள் அங்கிருக்கையில் பதினைந்து நிமிடத்துக்கு ஒருமுறை அவருக்குத் தருவதற்காக என்றே ஒரு வேலையை வைத்திருந்தார்கள். ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் இடையேயான இடைவெளிகூட அங்கு அவருக்கு வேறொரு வேலையாகத்தான் இருந்தது.  அந்த முக்கால் நாளுக்கும் அந்த பணிப்பெண் பேசிய மொத்த வார்த்தைகளுமே இருபத்தைந்தை தாண்டியிருக்காது. பேச்சுத் துணைக்கு ஆள் கிடையாது. வேலையை கண்காணிக்கவும் வேலைகளை ஏவவும்  ஒன்றுக்கு இரண்டுபேர். தன் சாப்பாடுக்குக்கூட வீட்டு உரிமையாளர்கள் சாப்பிட்டு முடிக்கும்வரை காத்திருக்க வேண்டிய அவலம். பொழுதுபோக்கு என்பதும் வார விடுமுறை என்பதும் அறவே இல்லாத இம்மாதிரி மாளிகையொன்றின் கொத்தடிமையை நான் முதல்முறையாக நேரில் பார்க்கிறேன்.

ஏராளமான பணக்கார வீடுகளில் இப்படியான வீட்டிலேயே தங்கவைக்கப்பட்டிருக்கும் வேலையாட்கள் கட்டாயமாக இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. திருப்பூரில் உள்ள வட இந்திய முதலாளிகள் அத்துனைபேரும் தங்கள் வீடுகளுக்கு வடக்கே இருந்து வேலையாட்களை அழைத்து வருகிறார்கள்.  எனது பழைய அலுவகம் இருந்த அடுக்ககத்தில் வசித்த எல்லா சேட்டு வீடுகளிலும்  வீட்டோடு இருக்கும் வேலையாட்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் அந்த அடுக்ககமே உலகம். இவர்கள் நிலைமை கொத்தடிமையைவிட மோசமானது, அவர்களது உணவு உறக்கம் யாவையும் அவ்வீட்டு உரிமையாளரது நேரத்தைப் பொறுத்து மாறக்கூடியது.  சில தினங்களில் அவர்கள் கார் நிறுத்தும் தளத்தில் உறங்கக்கண்டிருக்கிறேன். வீடொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று கழிவறைகள் கொண்ட அந்த அடுக்ககத்தில் வீட்டுவேலை செய்பவர்களுக்கும் மற்றும் பாதுகாவலர்களுக்கும் ஒரேயொரு குளியல் மற்றும் கழிவறையே இருந்தது.

தன் வழக்கமான சோகத்தையோ மகிழ்ச்சியையோ இவர்கள் யாரிடம் பகிர்ந்துகொள்வார்கள்? உடல் நலமில்லாது போனால் இவர்களை கவனிப்பார் யார்? அடுக்களையே தங்குமிடமாக இருக்கையில் இவர்களுக்கு உடல்நலமில்லாது போனால் எங்கு தங்குவார்கள்? இம்மாதிரி வேலையாட்கள் தூரமான ஊர்களில் இருந்தே அழைத்து வரப்படுகிறார்கள். இவர்கள் துன்புறுத்தப்பட்டாலோ அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாலோ யாரை அணுகுவார்கள்? இப்படியான பணியாட்கள் பலர் சிறுவர்கள் அல்லது சிறுமியர்கள், ஏனையோர் திருமணமாகாத இளைஞர்கள் அல்லது இளம்பெண்கள்.  மிகச் சிறிய வயதில் வேலைக்கு அழைத்துவரப்படும் இவர்கள் மிகக்குறைவான அளவுக்கு வெளியுலக அறிவு கொண்டவர்கள் (தமிழில் ஒரு வாக்கியம்கூட பேசத்தெரியாத, ஐந்து வருடங்களாக திருப்பூரில் இருக்கும் ஒரு வேலைக்கார இளைஞனை நான் பார்த்திருக்கிறேன்)  . குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவர்கள் நிச்சயம் வீட்டுவேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் (வீட்டோடு இருக்கும் வேலையாட்கள் எப்போதும் இளம் வயதினரே). பிறகு இவர்கள் எங்கே போகிறார்கள் என்பதும் என்ன வேலை செய்து பிழைக்கிறார்கள் என்பதும் நாம் யாரும் சிந்தித்திராத விடயங்கள்.

நாள் கணக்கில் வீட்டுக்கு வர இயலாதவாறு வேலைவாங்கும் நிறுவனங்களில் நான் பணியாற்றியதுண்டு (செவ்வாய்க்கிழமை அலுவலகம் போய் சனிக்கிழமை இரவு வீடுதிரும்பிய சம்பவம்கூட ஒருமுறை நடந்திருக்கிறது). மிகமோசமான வார்த்தைகளையெல்லாம் சர்வசாதாரணமாக பயன்படுத்தும்  உயரதிகாரிகளிடமும் வேலைசெய்திருக்கிறேன். ஆனாலும் கற்பனையில்கூட இப்படியான ஒரு வேலையில் என்னை பொருத்திப்பார்க்க அச்சமாக இருக்கிறது. ஒரு தனிநபரின் சுதந்திரத்தையும் சுயத்தையும் சிதைக்கிற இந்த நடைமுறை முற்றிலும் அநாகரீகமானது. ஆயினும் இந்தப் பழக்கம் தேசம் முழுக்க எவ்வித குற்ற உணர்வுமின்றி பின்பற்றப்படுகிறது. ஆகவே நேர வரையறை இல்லாமல் வீட்டில் தங்கவைத்து வேலைவாங்கப்படும் பணியாளரைக் கொண்டுள்ள எந்த வீட்டையும் வீடென்றுகூட இனி நான் குறிப்பிடுவதாயில்லை.

அயோத்தி தீர்ப்பு- நல்லகாலம், உடன்கட்டை ஏறுதல் வெள்ளையன் காலத்திலேயே சட்டவிரோதமாக்கப்பட்டுவிட்டது.

இது இன்னமும் ஒரு மதச் சார்பற்ற தேசமா? தீர்ப்புக்கு அடிப்படை சாட்சி ஆதாரமா அல்லது நீதிபதியின் சொந்த மத நம்பிக்கையா? இந்தியாவின் காவிமயமான அரசு அமைப்பை மீண்டும் ஒருமுறை இவ்வுலகம் காண்பதற்கு வாய்ப்பளித்து இருக்கிறது அலகாபாத் தீர்ப்பு. பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பது வழக்கு. ஒரு கட்டப்பஞ்சாயத்தைப் போல இடித்தவனுக்கும் இழந்தவனுக்கும் இடத்தை பாதியாக அல்லது அதனைவிட மோசமாக பங்கிட்டுத் தந்திருக்கிறது அலகாபாத் நீதிமன்றம். ராமர் பிறந்த இடம் அதுதான் என இரண்டு நீதிபதிகள் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.  மக்கள் நம்புவதாகக் கருதும் எதையும் நீதிபதிகள் இனி தீர்ப்பாக்கலாம், மேலும் மக்கள் யார் என்பதையும் அவர்களே முடிவு செய்யலாம்.ஆர்.எஸ்.எஸ் காரர்கள் இனி தாராளமாக ராமனின் ஆயிரக்கணக்கான சித்திகளின் பிறந்த வீட்டைத் தேடலாம், இனிதான் அவர்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைக்கவும் வழியிருக்கிறதே . பாமியன் புத்தர் சிலைகளை இசுலாமுக்கு எதிரானவை என்ற தீர்ப்பை எழுதிவிட்டு இடித்தார்கள் தாலிபன்கள், இங்கு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு  இடிக்கப்பட்ட இடம் ராமன் பிறந்த இடம் என்று தீர்பாகியிருக்கிறது.

இது வேறுவழியில்லாமல் வழங்கப்பட்ட தீர்ப்பு போலத்தோன்றலாம். தேசத்தின் சட்டம் ஒழுங்கை மனதில் கொண்டு தரப்பட்ட முடிவாகவும் தோன்றலாம். ஆனால் இத்தீர்ப்பின் பின்னே இருப்பது நீதித்துறையில் வியாப்பித்திருக்கும் அப்பட்டமான காவி சிந்தனை. பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்பது வழக்கு. மதம் என்ற ஒன்று இல்லாதபட்சத்தில் இவ்வழக்கு அடிப்படைகூட இல்லாதது. இதற்கு முன்பு எந்த ஒரு தீர்ப்புக்கும் முன்னால் உயர் நீதிமன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ சட்டம் ஒழுங்கு பற்றி கவலைப்பட்டதாக வரலாறு இருக்கிறதா? சட்டம் ஒழுங்கை காப்பது அரசின் கடமை என்றே நீதிமன்றங்கள் சொல்லியிருக்கின்றன. முடியாவிட்டால் ஆட்சியை விட்டு இறங்குங்கள் என்றுகூட ஒரு பந்த் வழக்கின்போது நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.  பொது அமைதியை காப்பாற்றும் முகமாக இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதற்கான முகாந்திரம் எவ்விடத்திலும் இருப்பதாக தெரியவில்லை. (எட்டாயிரம் பக்கமென்றாலும் தீர்ப்பின் உள்ளடக்கம் சில வாக்கியங்களுக்குள் அடங்கிவிடக்கூடியதே.. ஆகவே தீர்ப்பை படித்துவிட்டு கருத்துசொல்லலால் என்பது தள்ளிப்போட ஒரு வாய்ப்பு மட்டுமே).

மாறாக இந்நாடு இந்துக்களுக்கானதே என்று மறைமுகமாக ஊர்ஜிதப்படுத்தும் கடைசி நிகழ்வாக இத்தீர்ப்பைக் கருத பல ஆதாரங்கள் இருக்கின்றன. வழக்கு அறுபது ஆண்டுகளுக்கு மேல் தாமதிக்கப்பட்டது. மக்களிடம் இது ராமனுக்கு பாத்தியப்பட்ட இடம் என்ற பிரச்சாரத்துக்கான அதிகபட்ச காலக்கெடு. கூடுதலாக ராமன் சிலையை வைக்கவும் மற்ற ‘ஆதாரங்களை’ வானரப்படைகள் அங்கு உருவாக்கவும் இது தேவைக்கதிகமான காலமே. பாபர் மசூதி என்பது மாறி பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடமாகி பிறகு எல்லா தரப்பினராலும் அது சர்ச்சைக்குரிய இடமென குறிப்பிடப்படுவதற்கும் இக்கால அவகாசம் மிகச் சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  இடம் யாருக்கு என்பது பிரச்சனை, ஆனால் பாபர் மசூதியின் மையப்பகுதி ராமன் பிறந்த இடம் என்பதை ஏற்பதாக இரண்டு நீதிபதிகள் சொல்கிறார்கள். ஆதாரமெதுவுமில்லையென்றாலும் இதை நீதிபதிகள் இதை நம்புவார்களாம். எந்த பெயர் நூற்றுக்கணக்கான இசுலாமியர்களது உயிரைப் பறித்ததோ எந்த பெயர் கோடிக்கணக்கான சிறுபான்மையோரை பாதுகாப்பற்றவர்களாக்கியதோ அந்த கற்பனைக் கதாபாத்திரத்துக்கு இப்போது சட்டபூர்வமாக பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

பாபர் காலத்தில் கட்டப்பட்டது உண்மை என்பது ஏற்கப்பட்டாயிற்று. பிறகெதற்கு அங்கு தொழுகை நடந்ததற்கு ஆதாரமில்லை என்றும் அது மசூதியின் அமைப்பு மாதிரி தெரியவில்லை என்றும் தேவையில்லாத சப்பைக்கட்டு? காவி காலிகளால் இடிக்கப்பட்டது ஒரு புனிதத்தலமல்ல என்று வேறு வார்த்தைகளால் சொல்கிறார்கள், அவ்வளவுதான். ராமன் பிறந்த இடம் என்ற ஒப்புதலும் அங்கு கோயிலின் இடிபாடுகள் இருக்கின்றன் என்ற தொல்லியல் துறையின் கருத்து தீர்ப்பில் சுட்டப்படுவதும் பாபர் மசூதியிடமிருந்து வெட்டப்பட்ட புனிதத்தன்மையை ராமன் கோயிலுக்கு ஒட்ட வைக்கும் நரித்தனம். ராமர் கோயில் இருந்தது என்பது மக்கள் நம்பிக்கை என்றால் மக்கள் என்பவர்கள் யார்? ஆர்.எஸ்.எஸ்சில் உள்ள  மக்களா அல்லது ஆர்.எஸ்.எஸ்காரர்கள் மட்டும்தான் மக்களா?

இது வெறும் ஒரு இடம் தொடர்பான பிரச்சனை அல்ல. இத்தீர்ப்பின் மூலம் கரசேவைக்கு ஒரு சட்டபூர்வ அங்கீகாரம் தரப்பட்டிருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளும் சில ஏற்ற இறக்கங்களோடு இத்தீர்ப்பை ஆதரித்திருக்கின்றன. இசுலாமியர்களின் காவலன் என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்ளும் கருணாநிதி ஆதரித்திருக்கிறார் (அவருக்கு பேரப்பிள்ளைகளுக்கு ஆபத்தில்லாத அத்துனை சமாச்சாரமும் வரவேற்கக்கூடியதே). அயோத்தியில் இல்லாமல்  ராமனுக்கு வேறு எங்கு கோயில் கட்டுவது  என்று கேட்ட ஜெயாவோ எல்லையில்லாத மகிழ்ச்சியில் அறிக்கை தந்திருக்கிறார். அனேகமாக இந்த அறிக்கையை எழுத அவர் பூங்குன்றனை எதிபார்த்திருக்க மாட்டார்.  ராஜீவ் காந்தியால் ராமன் வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டு பிறகு நரசிம்மராவால் இடிக்கப்பட அனுமதிக்கப்பட்டிருப்பதால் காங்கிரசின் நிலையும் பாரதீய ஜனதாவின் நிலையும் இவ்விவகாரத்தில் ஒன்றாகவே இருக்கும்.

தீர்ப்பு அநீதியானது என்பது முதல் பிரச்சனை என்றால் அனேக தலைவர்கள் இதை வரவேற்றிருப்பது அதைவிட பெரிய பிரச்சனை. தங்கள் மதசார்பற்ற மூகமூடி காணாமல் போவது பற்றிக்கூட கவலைகொள்ளாது கருணாநிதி போன்றோர் கருத்து சொல்வது இந்தியாவில் இருக்கும் அரசியல் கட்சிகளின் பெயரளவுக்கான சிறுபான்மையோர் ஆதரவுக் குரல்களும் காலாவதியாவதற்கான அறிகுறி.  இவர்கள் சொல்ல விரும்பிய கருத்தைத்தான் நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் தீர்ப்பின் பின்னால் நின்றுகொண்டு சிறப்பான தீர்ப்பு என்றோ வரவேற்கத்தக்க தீர்ப்பு என்றோ அல்லது சாத்தியமான தீர்ப்பு என்றோ சொல்லி சிக்கலை இத்துடன் முடித்துக்கொள்ளச் சொல்கிறார்கள். கொடுப்பதை வாங்கிக்கொண்டு அமைதியாக இரு என்ற செய்தி அரசு எந்திரத்தைக் கட்டுப்படுத்தும் எல்லா அதிகாரமட்டத்தினராலும் இப்போது இசுலாமியர் யாவருக்கும் அறிவிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படுவது ஊர்ஜிதமாகியிருக்கிறது என்ற ஷபனா ஆஸ்மியின் கருத்து வெறுமனே விரக்தியின் வெளிப்பாடல்ல அப்பட்டமான யதார்த்தம்.

பாபர் மசூதி இருந்த இடம் தொடர்பான வழக்கின் முடிவு பல எதிர்கால சிக்கல்களுக்கான தொடக்கமே. இனி நீதிபதிகள் தங்கள் சொந்தக் கருத்தை தீர்ப்பாக்க இயலும் என்ற ஒரு மிகமோசமான முன்னுதாரணம் இவ்வழக்கினால் கிடைத்திருக்கிறது (ஒரு சாதாரண சிவில் வழக்கில் பின்பற்றப்படும் நடைமுறைகூட இங்கு பின்பற்றப்படவில்லை). வானரங்கள் இப்போது தமது வெற்றியை அமைதியாக கொண்டாடிக்கொண்டிருக்கின்றன. இனி அவர்கள் காசி, மதுரா, பரங்கிமலை என இடிப்புப்பட்டியலை நீட்டிப்பார்கள். இது மிகையான அனுமானமல்ல, சங்கப் பரிவாரங்கள் எப்போதும் கலவரங்களாலேயே தங்களை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு, காவி எப்போதுமே அப்பாவி மக்களின் ரத்தத்தால்தான் தனது நிறத்தை மங்காமல் பாதுகாக்கிறது. அதனால்தான் வினாயகர் ஊர்வலங்கள் மசூதிகள் இருக்கும் பக்கமாக செல்லும்படி வம்படியாக திட்டமிடப்படுகின்றன.

மதசார்பற்றவர்கள் மட்டுமல்ல மனிதன் என்று தன்னை நம்புகிற யாவருமே எதிர்க்க வேண்டிய தீர்ப்பு இது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது காவி பயங்கரவாதிகளால் பறிபோன நாட்டின் மானம் இப்போது சட்டத்தின் வாயிலாகவே பறிபோயிருக்கிறது. இந்த இந்துத்துவாதான் கடுமையான சாதீயப்பகுபாடுகளையும் கவுரவக்கொலைகளையும் இன்றளவும் தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்கிறது. வெள்ளையன் காலத்தில் பிளேக் நோய் பரவியபோது எலிகளைக் ஒழிக்க வந்த ஆய்வுக்குழுவை குஜராத்தில் எரித்துக்கொன்றது இதே இந்துத்துவாதான் (ஸ்பான்சர்டு பை பால கங்காதர திலகர் ). குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏ(ற்)றுவது, விதவைகளை காசியில் கொண்டுபோய் விட்டுவிட்டு அவர்களை விபச்சாரத்தில் தள்ளியது என இந்துத்துவத்தின் நீண்ட சைக்கோத்தனத்தின் பட்டியலில் கடைசி சேர்க்கை ராமர் கோயில்.  ஒரே கோத்திரமுடையோர் திருமணம் செய்வது சட்டவிரோதமென  அறிவிக்கப்படவேண்டும்  என்று ஒரு கூட்டம் மத்திய அரசை சமீபத்தில் கேட்டுக்கொண்டது. அதேபோன்ற முட்டள்த்தனம்தான் ‘இது ராமன் அவதரித்த இடம் என்றோ ராமன் ஒன்னுக்கு போன இடம்’ என்றோ சொல்வதும்.

நாம் எதிர்க்காமல் இருக்கும்பட்சத்தில் நம்மையும் அமைதியாக இருக்கும் பங்காளிகளாகவே காவிக்கூட்டம் கருதும். நடத்தப்படும் எல்லா அரஜகங்களும் நமது பெயராலேயே நடத்தப்படும். நான் உங்களோடு இல்லை என்று சங்கப் பரிவாரங்களுக்கு  சொல்ல வேண்டிய நேரத்தில் நாம் இருக்கிறோம். அதன்பொருட்டுத்தான் எல்லோரும் அறிந்த தகவலென்றாலும்  நானும் என் பங்கிற்கு பதிவிட்டிருக்கிறேன். நீங்கள் ரவுடியில்லை என்று நிரூபிக்க விரும்பினால் நான் இந்துவெறியன் இல்லை என்று சொல்லுங்கள், ராமன் கோயில் அங்கில்லை என்று சொல்லுங்கள். நான் முட்டாள் இல்லை என்று சொல்லிக்கொள்ள விரும்பினால் நான் இந்து இல்லை என்றும் ராமன் என்றொருவன் இல்லை என்றும் உரக்க சொல்லுங்கள்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 98 other followers