கல்வி = ஆங்கிலம், கணிதம், அறிவியல், தற்கொலை மற்றும் கொலை.

ஒரு சென்னை மாணவர் தமது ஆசிரியரை கொலை செய்தபோது எழுத ஆரம்பித்த கட்டுரை இது. வேலை அழுத்தத்தில் நின்றுபோன அதனை அதன் பிறகு நடந்த மற்றொரு ஆசிரியர் கொலை தொடர வைத்திருக்கிறது.

தஞ்சாவூரில் உள்ள டி.கே.சுப்பையா நாயிடு ஆரம்பப்பள்ளியில் நான் படித்தபோது நடந்த சம்பவம் இது. சீனிவாசபுரம் அகழிக்கு அருகே இருக்கும் மனநலம் குன்றிய இளைஞர் ஒருவரை சிறுவன்  ஒருவன் கல்லால் அடித்துவிட்டான். சற்றே புடைத்த நெற்றியுடன் அவர் அருகே இருக்கும் எங்கள் பள்ளிக்கு வந்து அது குறித்து குற்றம்சாட்டினார். அன்றைய காலைநேர அணிவகுப்பிற்கு அவரை கூட்டிவந்து கல்லால் அடித்த மாணவனை அடையாளம் காட்டச்சொன்னார்கள். டிராயர் போட்டிருந்த பையன் என்பதைத் தவிர அவரால் வேறு அடையாளம் சொல்ல முடியவில்லை, அந்த கூட்டத்தில் தேடவும் அவர் முன்வரவில்லை. அதன்பிறகு எங்கள் பள்ளியின் ஐந்தாம்வகுப்பு ஆசிரியர் ஒருவர். அவரைப் போல (மன வளர்ச்சி குன்றியோரிடம்) இருப்பவர்களிடம் சண்டைக்கு போக்க்கூடாது என அறிவுரை சொன்னார். வேறொரு ஆசிரியர் அவரை பள்ளி வாயிற்கதவு வரை கொண்டுவிட்டு வந்தார்.

நானூற்றுக்கு குறையாத மாணவர்கள், கிட்டத்தட்ட இருபது ஆசிரியர்கள் கொண்ட ஒரு பள்ளி, மனவளர்ச்சி குன்றிய ஒரு இளைஞரின் குற்றச்சாட்டை செவிமடுத்து அதற்கு பத்து நிமிடத்தை செலவிட்டது. விவரம் தெரிந்த பிறகு என் பள்ளி குறித்து நான் பெருமிதம் கொள்ளும் ஒரு நிகழ்வு இது. சராசரிக்கும் குறைவான மதிப்பெண் பெறும் மாணவனாகவே அந்த பள்ளியிலிருந்து நான் வெளியே வந்தேன் (இன்றைய மதிப்பீடுகளின் அடிப்படையில் எதற்கும் லாயக்கற்றவனாக வெளியே வந்தேன் என்று சொல்லலாம்). ஆனால் சக மனிதர்கள் எல்லோரையும் சமமாக மதிக்கும் அடிப்படை மனிதப்பண்பை நான் கற்றுக்கொண்டதற்குப் பின்னால் என் பள்ளியும் இருக்கிறது.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதைய பள்ளிகளின் சூழலை ஒப்பிட்டு பார்க்கையில் அதிர்ச்சியாகவும் திகைப்பாகவும் இருக்கிறது. தலையைச் சுற்றி கையால் காதைத் தொடும் ஒற்றை தேர்வு முறை மட்டும் இருந்த நிலை மாறி இப்போது பள்ளிகளின் அட்மிஷன் என்பது பெற்றோரின் வருமானம், படிப்பு மற்றும் அவர்களது முந்திச்செல்லும் திறமை (ஆறுமாதம் முன்பே இரவெல்லாம் கண்விழித்து விண்ணப்பம் வாங்குவது போன்ற முயற்சிகள்) என ஏராளமான விடயங்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு காரை சர்வீஸ் செய்யும் பணியைப்போல கற்பித்தலையும் குறிப்பிட்ட காலத்துக்குள் செய்து அனுப்பும் சேவையாக மாற்றியிருக்கின்றன நம் சமகாலப் பள்ளிகள்.

ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கற்றுத்தரவேண்டிய பள்ளிகளே அரசு விதிகளை சர்வசாதாரணமாக புறந்தள்ளுகின்றன. சமூகத்தில் ஆசிரியர்களுக்கு இருந்த மரியாதையை காலி செய்ததில் பெரும் பங்கு தனியார் பள்ளிகளுக்கு உண்டு. அறுநூறு ரூபாய்க்கு ஆசிரியர்கள் கிடைப்பார்கள் எனும் அரிய உண்மையை அவர்கள்தான் கண்டுபிடித்தார்கள். வீட்டில் சும்மாயிருப்பதற்கு பதிலாக ஏதேனும் நர்சரி பள்ளியில் டீச்சர் வேலை பார்க்கலாம் எனும் நிலை வந்த பிறகுதான் ஆசிரியர் பணியின் மரியாதை முற்றாக குறைந்தது.

இந்த வருடத்து மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களே அடுத்த ஆண்டுக்கான வருவாய்க்கான ஆதாரம் என்பதால் தனியார் பள்ளிகள் எல்லா மாணவனையும் அதிக மதிப்பெண் பெற வைக்க துடிக்கின்றன. சில சுமாரான தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்பில் 480 வாங்கிய மாணவர்களை பதினொன்றாம் வகுப்பில் கட்டணமில்லாமல் சேர்த்துக்கொள்கின்றன. அவர்கள் பணிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்வாங்கி பள்ளி ஊர் முக்கில் ஃபிளக்ஸ் பேனர் வைக்க உதவுவார்கள்.  தனியார் பள்ளிகள் புண்ணியத்தில். இப்போது மதிப்பெண் என்பது ஒரு சரக்காக உருமாற்றம் பெற்றிருக்கிறது. ஒரு இரும்பு பட்டறைக்கும் பள்ளிக்கும் ஒரேவிதமான வியாபார நியாயங்கள் வந்த காலகட்டம்தான் நமது சமூகத்தின் அபாயகரமான அத்தியாயத்தின் துவக்கம் என கருதுகிறேன்..

தனியார் பள்ளிகளின் ஆசிரியர் தரப்பு மிகவும் பரிதாபகரமானது. எப்படியாவது எல்லா மாணவனையும் அதிக மதிப்பெண் வாங்கவைத்தால் போதும் எனும் ஒற்றை இலக்கு மட்டுமே ஒரு ஆசிரியருக்கு தரப்படுகிறது. இன்றைய நிலையில் ஆசிரியர் மாணவர் உறவென்பது ஒரு கஸ்டமர் கேர் ஊழியருக்கும் நுகர்வோருக்குமான உறவைப்போல ஆகியிருக்கிறது.. மிகக் குறைவான ஊதியம் மட்டுமே தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தரப்படுகிறது. ஆகவே உள்ளூரை விட்டு போக விரும்பாதவர்கள், வேறு வாய்ப்பு இல்லாதவர்கள் ஆகியோர்தான் பெரும்பாலும் பள்ளி ஆசிரியர் பணியை தெரிவுசெய்கிறார்கள். இவர்கள் வசம்தான் அனேக நடுத்தர வர்க குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

நான் ஒரு வருடம் எங்கள் கிராமத்து பள்ளியில் படித்தபோது உடன் படித்தவர்கள் பலரும் விவசாய கூலித்தொழிலாளர்களின் பிள்ளைகள். அறுவடை மற்றும் நடவு காலங்களில் பதினைந்து இருபது நாட்கள் மாணவர்கள் விடுப்பு எடுப்பது சர்வ சாதாரணம். மூன்று ஆண்டுகள் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் எல்லா வகுப்பிலும் உண்டு (அடுத்து ஆசிரியர் சொல்லப்போகும் ஜோக்கைக்கூட சரியாக கணிக்கும் திறமைசாலிகள் அவர்கள்). அங்கே பல பெற்றோருக்கு தமது பிள்ளைகளை கலெக்டராக்கும் டாக்டராக்கும் கனவெல்லாம் இல்லை. மகனை மகனாக பார்க்கும் குணம் மட்டுமே உண்டு. நாலு எழுத்து படிச்சா நல்லதுதானே எனும் எண்ணத்தினால் மட்டுமே அவர்கள் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்கள்.

இப்போது அதே கிராமத்தின் பல குடும்பங்கள் மன்னார்குடிக்கு இடம் பெயர்ந்திருக்கின்றன, முதன்மை காரணமாக குழந்தைகள் படிப்புதான் சொல்லப்படுகிறது. எனது சக ஊழியர்கள் பலர் தங்கள் வருமானத்தில் பெருந்தொகையை தங்கள் பிள்ளைகளின் படிப்புக்கு செலவிடுகிறார்கள். எங்கள் அலுவலகத்தில் இரண்டு உயரதிகாரிகள் தங்கள் மகள்களது பொதுத்தேர்வுக்காக ஒரு மாத மற்றும் இரண்டு மாத விடுப்பிலிருக்கிறார்கள். கசப்பானதொரு உண்மை என்னவென்றால், பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள்தான் தங்கள் எதிர்காலம் என சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் தமது பிள்ளைகளின் படிப்புதான் தமது எதிர்காலம் என முடிவு செய்து செயல்படுகிறார்கள். (ஒன்றுபோல தோன்றினாலும் இது முற்றிலும் வேறானது).

இப்படி மூன்று முக்கிய குழுவும் தங்கள் ஆசை, லட்சியம், கோபம் என சகலத்தையும் இறக்கிவைக்கும் தளமாக குழந்தைகளை வைத்திருக்கிறார்கள். இந்த கூட்டணியால்தான் மாணவர்களது வாழ்வு பெரும் சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறது. அவர்கள் எதிகொள்ளும் பிரச்சனைகள் கண்டுகொள்ள நாதியற்று இருக்கின்றன. ஆனால் இந்த சூழலால் பாதிக்கப்படும் மாணவர்களில் சிலர் வன்முறையில் ஈடுபடும்போதோ அல்லது அதிகப்பிரசங்கித்தனமாக ஏதேனும் செய்யும்போதோ நாமெல்லோரும் விழித்துக்கொள்கிறோம்.

சென்னையில் ஆசிரியரை கொலை செய்த மாணவர் விவகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கொலைகாரனை விருந்தாளி மாதிரி உபசரிக்கிறார்களே என ஆசிரியர் சமூகம் அங்கலாய்க்கிறது, எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என அரசை வலியுறுத்துகிறது. ஒரு குற்றவாளிக்கும் குற்றமிழைத்த சிறுவனுக்குமான வேறுபாடு ஆசிரியர்களுக்கே புரியாத சூழ்நிலை இங்கு நிலவுகிறது. ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு கொலை என்பதன் நிஜமான அர்த்தம் தெரியாது. அது ஒரு நபரை காணாமல் போகவைக்கும் வழியாக மட்டுமே தெரியும். நாம் இவ்விடயத்தில் யோசிக்க வேண்டியது ஒரு மாணவன் ஏன் ஆசிரியை காணாமல் போக்ச்செய்ய விரும்பினான் என்பதையும் கொல்வதை கோபத்தின் வெளிப்பாடாக்கும் கற்றலையும்தான்.

ஒருவேளை அந்த மாணவன் வன்முறையில் ஈடுபடும் இயல்புடையவனாக இருந்திருப்பானேயானால் அதை கண்டறிந்து எச்சரித்திருக்க வேண்டியது பள்ளியின் பொறுப்பு. அப்படியெதுவும் நடந்திருக்கவில்லை. அவன் ஒரு சாதாரண மாணவன் எனில் அவன் கையில் கத்தியை கொடுத்ததற்கான பொறுப்பு பள்ளிக்கும் பெற்றோருக்கும்தான் இருக்கிறது. ஆனால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள பலரும் தயாராயில்லை.

இன்றைய மாணவர்கள் தங்கள் வயது மற்றும் சக்திக்கு மீறி பணியாற்ற வைக்கப்படுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த செய்தி. அது நல்லதற்கா கெட்டதற்கா என்பதில்தான் கருத்து முரண்பாடு வரும். தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அவர்கள் தங்கள் மதிப்பெண்னுக்காவே உழைக்க வைக்கப்படுகிறார்கள். அவர்களது வயதுக்கான விருப்பங்கள் பெரும்பாலும் புறந்தள்ளப்படுகின்றன. குழந்தைகள் வாழ்வே அவர்கள் வாங்கும் மதிப்பெண்னில்தான் இருக்கிறது என அறிவுறுத்தப்படுகிறார்கள். அதனை செய்ய முடியாதபோதோ அல்லது செய்ய விரும்பாதபோதோ அவர்கள் கோபம் மற்றவர்கள் மீது திரும்புகிறது. அல்லது தங்களை எதற்கும் லாயக்கற்றவர்களாக கருதிக்கொள்கிறார்கள். இது அனேக சந்தர்பங்களில் தற்கொலையில் முடிகிறது. இரண்டொரு சந்தர்பங்களில் கத்தி எதிர்புறமாக திரும்பியிருக்கிறது.

இதற்கு நேரெதிரான சம்பவம் ஒரு மாணவனும் ஆசிரியரும் ஊரைவிட்டு ஓடியது. கோபப்படாமல் ஆராய்ந்தால் இதிலும் குற்றவாளிகளாக நாம்தான் இருப்போம். பெருநகரங்களில் வளரும் சிறார்கள் மிகக் குறைவான அளவு சமூக உறவுகளை கொண்டிருக்கிறார்கள். பலதரப்பட்ட உறவுகள் மற்றும் நட்பினை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைப்பதில்லை. பெரும்பாலும் அன்பு என்பது பெற்றோரிடம் மட்டுமே கிடைப்பதாக இருக்கிறது. நல்லது கெட்டது மற்றும் நியாயம் ஆகியவை பெரும்பாலும் சுற்றத்தினை பார்ப்பதன் வாயிலாக குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். அந்த கற்றல் இல்லாதபோது நியாயத்தை தேவைகள் தீர்மானிக்கத் துவங்குகின்றன.

இருபது வயது மூத்தவரை காதலிக்காதே எனும் பாடத்தை பெற்றோரால் சொல்லித்தர முடியாது. ஆனால் ஒருவனது சுற்றம் பரந்ததாக இருக்கையில் அந்தப் பாடம் அவனுக்கு தன்னியல்பாக கிடைக்கிறது. வெவ்வேறு துறைகளை தெரிந்துகொள்ளவும் விவாதிக்கவும் அவர்கள் அனுமதிக்கப்பட்டால் அவர்களது சிற்றின்பத் தேடல்களுக்கான தேவையும் அவகாசமும் குறைகிறது. அந்த கதவு அடைக்கப்படுகையில் மனிதர்களின் இயல்பான உந்துதல்களில் ஒன்றான காமம் அவ்விடத்தை நிரப்புகிறது. தவறுகளை நாம் கற்றுத்தருவதில்லை என்பது நிஜம்தான். ஆனால் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட பொழுதுபோக்கான சினிமாவும் டி.வியும் எதை சொல்லித்தருகிறது.. டிசைன் டிசைனாக காதலிப்பதையும், சங்கை அறுப்பதையும்தானே?

குழந்தைகள் தங்கள் வயதுக்கு மீறிய அறிவுடனும் ஆற்றலுடனும் இருக்கவேண்டும் என விரும்புகிறோம். அவர்கள் பெரிய மனுசத்தனமாக டிவியில் நடந்துகொண்டால் பெற்றோர்கள் ஆனந்த கண்ணீரோடு அதை ரசிக்கிறார்கள். அதே டிவியில், பெரியவர்கள் பைசாவுக்கு பிரயோசனமில்லாத விசயத்துக்கெல்லாம் கண்ணீர்விட்டு அழுது சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறார்கள். பிறகு ஒரு சிறுவன் பெரிய ஆளைப்போலவும் மூத்த ஆசிரியர் சிறுபிள்ளைத்தனமாகவும் நடந்துகொள்ளும்போதுமட்டும் குய்யோ முய்யோவென கத்துவது என்ன நியாயம்?

ஒரு சமூகத்தில் குழந்தைகள் அதிகமாக தவறு செய்கிறார்கள் எனில் அங்கு அவர்களைத் தவிர மற்ற எல்லோரும் குற்றவாளிகள் என பொருள். எனக்கு சொந்தக்காரர்களை பிடிக்காது, காரணம் அவர்கள் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை என ஒரு பதின் வயது மாணவன் சொல்லக் கேட்டபோது எனக்கு அவனது பெற்றோர்கள் மீதுதான் ஆத்திரம் வந்தது. எதையும் தராத சொந்தக்காரன் கெட்டவன் என வேறு யார் அவனுக்கு கற்றுத்தந்திருக்க முடியும்? லஞ்சம் வாங்கி சுகபோகமாக இருக்கும் அப்பா இருக்கையில் மகனுக்கு எந்த நீதிபோதனை வகுப்பும் நேர்மையை கற்றுத்தர முடியாது. நம் குழந்தைகளுக்கு நாம் நடத்தும் மிகப்பெரிய பாடம் நம் வாழ்க்கைதான். அது மோசமானதாக இருக்கையில் மற்ற எந்த சிறப்பு பயிற்சிகளும் நீண்டகால அடிப்படையில் பலன் தராது.

உங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து என்னை பெரிய பள்ளியில் படிக்க வை என எந்தக் குழந்தையும் கேட்பதில்லை. குழந்தைகளுக்காகவே வாழ்கிறேன் எனும் வாக்கியத்தைப்போல ஒரு அபத்தமான வாசகம் ஒன்றிருக்க முடியாது.. உங்களை எவன் குழந்தைகளுக்காவே வாழுங்கள் என கட்டாயப்படுத்தியது? அந்த முட்டாள்தனத்தை நீங்கள் செய்கிறீர்கள் என்பதற்காக உங்கள் குழந்தைகள் உங்களுக்காக தியாகம் செய்யவேண்டுமா? ஒழுங்காக நமக்காக வாழலாம், குழந்தைப் பருவ வாழ்வை அவர்கள் வாழட்டும் என விட்டுவிடலாம். இதுதான் இளைய தலைமுறைக்கு நாம் செய்யும் உருப்படியான சகாயம்.

ஒரு மாணவனை அவனது மதிப்பெண்ணை மட்டும் வைத்து மதிப்பிடுவதுதான் அவர்கள் மீது நடத்தப்படும் மிகப்பெரிய வன்முறை. பள்ளி என்பது ஒருவன் தனக்கு எந்த துறை சரியாக இருக்கும் என முடிவு செய்வதற்கான அடிப்படை பயிற்சிகளை வழங்கும் இடம் அவ்வளவுதான். இந்த எளிய உண்மையை புரிந்துகொள்ளாமல் குழந்தைகள் நாம் மூர்கமாக கையாண்டதன் விளைவுதான் ஆங்காங்கே நடக்கும் மேற்கூறப்பட்ட சம்பவங்கள். நல்வாய்ப்பாக மாணவர்களால் நடக்கும் மோசமான சம்பவங்களின் எண்ணிக்கை அவர்கள் மீதான வன்முறையோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவே. ஆனால் பெற்றோர் தரப்பு தங்களை இனியும் மாற்றிக்கொள்ளாவிட்டால் இந்த ஆறுதலுக்கும் வழியில்லாது போய்விடும்.

கொத்தனார் சம்பளமே இப்போ அறுநூறு ரூபாயாயிடுச்சு, வீடு கட்டுறதெல்லாம் இனி சாமானியமில்லைங்க.. என்று என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார் மாதம் எண்பதாயிரம் சம்பளம் வாங்கும் ஒரு மென்பொருள் பொறியாளர். 25 டிகிரி வெப்பநிலையில் வேலைசெய்து வாரம் தவறாது சொந்த ஊர் செல்ல வாய்ப்பிருக்கும் அவருடைய வேலைக்கு என்பதாயிரம் கிடைக்கையில் உடலை வருத்தி வேலை செய்யும் கொத்தனாருக்கு கிடைக்கும் (அதிகபட்சம்)  பதினெட்டாயிரம் அநியாயமாகப்படுவதை வெறும் சுயநலம் என வரையறுக்க முடியாது. மனிதர்களிடையே பாரபட்சம் பார்க்கும் இழிவான பழக்கத்தின் நீட்சி இது. இன்றைய கல்வித்துறையை பீடித்திருக்கும் தரித்திரத்துக்கான கதவை இந்த பழக்கம்தான் திறந்துவைத்தது.

தனியார் பள்ளிகள் முளைத்தபோது அவர்கள் சிறப்பான கல்வியை தருவார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இருந்திருக்கவில்லை. மற்றவனைக் காட்டிலும் நான் உயர்ந்தவன் என காட்டிக்கொள்ள மட்டுமே இந்த பள்ளியில் குழந்தைகள் சேர்க்கப்பட்டார்கள். பிறகு இந்த பழக்கம் உன்னைவிட நானொன்னும் குறைந்தவனில்லை எனக் காட்ட பயன்பட்டது. இதுதான் வாய்ப்பென்று தனியார் பள்ளிகள் ஊரெங்கும் முளைத்தன, வாய்ப்பை தவறவிடாது அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து மெல்ல மெல்ல விலகிக்கொண்டது. அரசுப்பள்ளிகள் வக்கற்றவர்களுக்கு மட்டுமே என்றாகிப்போன இன்றைய சூழலை உருவாக்கியதில் நடுத்தர வர்கத்தின் வெற்று கௌரவம், முதலாளிகளின் லாபவெறி மற்றும் அரசாங்கத்தின் அலட்சியம் ஆகிய மூன்றின் பங்கும் சமமாக இருக்கிறது.  இதில் இழக்கும் தரப்பு என்று என்று பார்த்தால் அது பெற்றோர் மட்டுமே.

ஒரு அடிமுட்டாள்தனமான நம்பிக்கையை அடிப்படையாக வைத்து தனியார்பள்ளிகள் நம் வருமானத்தை சுரண்டிக் கொழுக்கின்றன. நில அபகரிப்பு, ரவுடித்தனம், கட்டப்பஞ்சாயத்து எனும் வரிசையில் அமைச்சர்களும் கட்சிக்காரர்களும் செய்யும் பிரதான தொழிலாக கல்வி இருக்கிறது. பின்னாளில் பிள்ளைகள் நமக்கு நிறைய சம்பாதித்து கொடுக்கவேண்டும் எனும் ஆசையை வைத்து இவர்கள் நிறைய சம்பாதிக்கிறார்கள். கல்வி தொழிலாக நீடிக்கும்வரை குழந்தைகள் எந்திரங்களாகவே நடத்தப்படுவார்கள். எந்திரமாக நடத்தப்படும் குழந்தைகளிடம் குற்ற நடத்தையும் பிறழ்நடத்தைகளும் உருவாகியே தீரும்.

மார்க் வாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்கள் பற்றிய செய்தியை வெளியிடும் அதே டிவியில்தான் குறைந்த மதிப்பெண் வாங்கிய சிறுவனது வாயிலிருந்து இனிப்பை அவன் அம்மா பிடுங்கும் விளம்பரமும் வருகிறது. படிப்பு படிப்பு என மாணவர்களை துன்புறுத்தாதீர்கள் என அறிவுரை சொல்லும் எல்லா பத்திரிக்கைகளிலும் எங்களிடம் எல்லா சிறப்பு வகுப்புக்களும் உண்டு என பெருமையாக அறிவிக்கும் பள்ளிகளின் விளம்பரமும் வருகிறது. கல்வி பெருந்தொழிலாக மாறிவிட்ட சூழலில் தொழிலதிபர்கள் நலனுக்காக மட்டுமே நடத்தப்படும் நமது அரசாங்கங்கள் மாணவர்களது தற்கொலை பற்றியோ அல்லது அவர்கள் செய்யும் கொலை பற்றியோ கவலைப்படாது. ஆகவே இந்த பிரச்சனைக்கான தீர்வை நாம்தான் தேடியாகவேண்டும்.

பெருகிவரும் மாணவர் தற்கொலைகளுக்கும் குற்றங்களுக்கு கல்வி வணிகமயமானது மட்டும் காரணமல்ல. ஆனால் சிறார் குற்றங்களை தடுப்பதற்கு செய்யவேண்டிய முதல் நடவடிக்கை கல்வியை வணிகர்களிடமிருந்து பறிப்பதுதான். நம் அடுத்த தலைமுறையின் சிறப்பான எதிர்காலத்துக்கு இது மட்டும் போதாது என்பது நிஜம்தான். ஆயினும் எல்லா நீண்ட பயணங்களும் முதல் அடியிலிருந்தே துவங்குகிறது.

என்கவுண்டர்- உங்களுக்கு என்ன வேண்டும்.. நீதியா அல்லது பிணங்களா?

தேர்தலில் ஜெயித்த பிறகு ஆட்சி நடத்த போலீஸ் மட்டுமே போதும் எனும் எண்ணத்தில் இருக்கும் ஜெயலலிதா. எதிர்க்கும் துணிவில்லாத மனிதர்களை மட்டும் கொஞ்சமும் இரக்கமில்லாமல் தாக்குவதற்கு பயிற்றுவிக்கப்பட்ட காவல்துறை. செய்திகளில்கூட சுவாரஸ்யத்தை எதிர்பார்க்கும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள். வெற்றிகரமான என்கவுண்டர், சுட்டு வீழ்த்தப்பட்ட கொள்ளையர்கள் என்பன போன்ற வர்ணனைகளை கொடுக்கும் பாக்கெட் நாவல் தரத்திலான ஊடகங்கள். இந்த கூட்டணி இருக்கும் வரை தமிழ்நாட்டில் என்கவுண்டர்கள் தொடர்கதையாகவே இருக்கும்.
அரசாங்கத்தின் தேவைக்காக என்கவுண்டர் செய்யும் பழக்கத்தை வீரப்பன் கொலை மூலம் ஆரம்பித்து வைத்தவர் ஜெயலலிதாதான். அதன் பிறகு இது ஒரு தொடர் நிகழ்வாகிவிட்டது. அதிகமாக ஜெய்சங்கர் படம் பார்க்கும் பழக்கம் இருக்கிறதா அல்லது அப்பிராமணர்கள் சொம்பு திருடியதற்காக கொல்லப்பட்டாலும் அதனை ஆதரிக்கும் சோ ராமசாமியை நண்பனாக கொண்டிருக்கும் பழக்கதோஷமா தெரியவில்லை, ஜெயா படுகொலைகள் வாயிலாகவே சட்டம் ஒழுங்கை காப்பாற்ற இயலும் என நம்புபவர். அவரது ஆட்சியில் என்கவுண்டர்கள் அதிகமாக நடக்கும், எனது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் என்று அவர் பெருமிதம் கொள்வதும் நடக்கும்.

இந்த தருணத்தில் நாம் அச்சமடைய வேண்டியது ஜெயலலிதா பற்றியோ அல்லது போலீஸ் பற்றியோ அல்ல. அவர்கள் எதை விரும்புகிறார்களோ அவர்களுக்கு அதிகாரமிருக்கையில் என்ன நடக்குமோ அதுதான் நடந்திருக்கிறது. ஆனால் “இப்படி சுட்டாத்தான் அடுத்து கொள்ளையடிக்கனும்னு நினைக்கிறவனுக்கு பயம் வரும்” எனும் வாசகங்களோடு இதை ஆதரிக்கும் பொதுமக்கள்தான் அதி அபாயகரமானவர்களாக தெரிகிறார்கள். இவர்களில் பலர் எவன் தாலியறுந்தாலும் பரவாயில்லை எங்களுக்கு கூடங்குளம் மின்சாரம் வேண்டும் என்று சொல்பவர்கள்.

வங்கிக் கொள்ளைக்கு பதிலடியாக ஐந்து பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலரது புரிதல் இத்தோடு முடிந்துவிடுகிறது. ஒருவன் குற்றவாளியா இல்லையா என்று உறுதியாகும் முன்பே, குற்றத்துக்கு கொலைதான் தண்டனையா எனும் பரிசீலனைகூட செய்ய விரும்பாது அவன் கொல்லப்படுவது இவர்களுக்கு சம்மதம் என்றால், ஒன்று இவர்கள் கொலையை ரசிக்க பழகியிருக்க வேண்டும். அல்லது தன்னோடு தொடர்பில்லாத யாரோ ஒருவன் கொல்லப்படுவது பற்றி கவலையற்றவர்களாக இருக்கவேண்டும். சமூகத்தால் புறந்தள்ளப்படவேண்டிய இவர்களது கருத்து சமூகத்தின் பொதுக்கருத்தாக கட்டமைக்கப்படுகிறது. கருத்து ஏதுமில்லாதவர்கள் இதன் மூலம் இதனை தங்கள் கருத்தாக வரித்துக்கொள்ளும் நிலைக்கு ஆளாகிறார்கள்.

சென்னை வேளச்சேரி என்கவுண்டர் ஒரு போலி என்கவுண்டர் என்பதை தினமலரின் “சிறப்பு நிருபரே” கிட்டத்தட்ட ஒத்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும் அவர் எழுப்பும் கேள்வி சுருக்கமானது, போலியா இருந்தாத்தான் என்ன? படம் நல்லாயிருக்கான்னு பாரு டிவிடி போலியா இருந்தா உனக்கென்ன என்கிறார் அவர்(கள்). மனித உரிமை ஆர்வலர்களை தேசவிரோதிகளாக சித்தரிக்கும் வேலையை செவ்வனே செய்துவரும் இந்த வகை பத்திரிக்கைகள் அதற்காக சாதாரண மக்களை ரத்த வெறியர்களாக மெல்ல மெல்ல மாற்றுகின்றன. அதன்படியே மக்களில் பலரும் போட்டு தள்ளுடா அவனை என கவுதம் மேனன் படத்து வில்லனைப் போல கூவி குதூகலிக்கிறார்கள்.

அவர்கள் பேசுவதற்கான பாயிண்டுக்களையும் இந்த ஊடகங்களே வழங்குகின்றன. கொள்ளைக்காரர்கள் கொல்லப்பட்டால் அடுத்து கொள்ளையடிப்பவனுக்கு பயம் வரும். சட்டம் அதிகமான வாய்ப்புக்களை குற்றவாளிகளுக்கு வழங்கி அவர்களை சுதந்திரமாக உலவவிடுகிறது. ஆகவே மக்களை பாதுகாக்க இந்த வழியை போலீஸ் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. இதெல்லாம் போலி என்கவுண்டர் ஆதரவாளர்களின் வாதங்கள். இந்த வேட்டுச் சத்தத்தில் ஒரு குறிப்பிட்த்தக்க மாற்றம் நம் கண்ணில்படாது மறைந்து போயிருக்கிறது. இதுவரை ரவுடிகள் மற்றும் கொடூரமான கொலைகாரர்கள் எனும் பட்டியலில் வந்தவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட வாசகங்கள் இப்போது கொள்ளையர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

நல்லது, தமிழகத்தை கொள்ளையர்களிடமிருந்தும் காப்பாற்றும் வெறி காவல்துறைக்கு வந்து விட்டதாக வைத்துக்கொள்வோம். ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மீதான எல்லா வழக்குகளும் நிரூபணம் இல்லாமல் தோற்றுவிட்டன. ஆகவே தங்கள் முயற்சிகள் வீணாகிவிட்டதாக பொங்கியெழுந்து ஒரு தோட்டாகூட காவல்துறையில் இருந்து புறப்படவில்லையே ஏன்? வங்கிக்கொள்ளையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மக்களை நேரடியாக கொள்ளையடித்த ஃபைனான்ஸ் நிறுவனங்களின் முதலாளிகளில் ஒருவனும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. பணத்தை மீட்டுத்தா என்று சொல்லி வீதிக்கு வந்த மக்கள் மீது தடியடி நடந்திருக்குமேயன்றி அந்த நிறுவன முதலாளிகள் எவன்மீதேனும் போலீசின் லத்திக் கம்புகள் தொட்டுப்பார்த்திருக்குமா? இந்த கேள்விகள் எழ குற்றவாளிகள் மீதான இரக்கம் தேவையில்லை, குறைந்தபட்ச அறிவு போதும். அறிவு அதிகமாக இருந்தும் இந்தவினாக்கள் ஒருவனுக்கு வரவில்லை எனில் அவன் கொலைகளை நேசிக்கும் ஹிட்லர்தனத்துக்கு ஆட்பட்டிருக்கிறான் என்று பொருள் (உதாரணம் ரொம்ப பழசு என கருதினால் மோடித்தனம் என மாற்றிக்கொள்ளவும்.. நடுநடுவே இந்துத்வா, சர்வாதிகாரம் எல்லாம் போட்டுக்கொள்ளலாம்).

சமீபகால என்கவுண்டர்கள் அரசியல் காரணங்களுக்காகவே செய்யப்பட்டிருக்கின்றன. கோவை மோகன்ராஜ் என்கவுண்டர் திமுக அரசின் மீது இருந்த கடுமையான அதிருப்தியை தண்ணீர் தெளித்து ஆற்ற செய்யப்பட்டது. இப்போது நடந்த சம்பவம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக காட்டுவதற்கு நட்த்தப்பட்டிருக்கிறது. இதில் மக்கள் நலன் என்று எதுவுமே இல்லை. மக்கள் சிலரை மகிழ்விக்க என்று வேண்டுமானால் சொல்லலாம். குற்றங்கள் பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு வளர்பவை. அதனை கட்டுப்படுத்த ஒருங்கினைந்த நடவடிக்கைகள் தேவையேயன்றி காவல்துறைக்கு கொலை செய்யும் அதிகாரம் வழங்கப்படுவது காவல்துறை மேலும் குற்றமிழைக்கவே வழிசெய்யும்.

சட்டத்தால் தண்டிக்க முடியாது என்பதால் காவல்துறைக்கு அதிகாரம் வழங்குவது சரியென்பது இந்திய சட்டங்களை அவமதிக்கிற செயல்தான். காவல்துறைக்கு அதீத சுதந்திரம் தருவது கொள்ளையர்களுக்கு சுதந்திரம் தருவதைவிட அபாயகரமானது. இருளர் இன பெண்கள் கற்பழிக்கப்பட்ட விவகாரத்தில் இன்னமும் சம்பந்தப்பட்ட போலீசாரை சம்பிரதாயமாகக் கூட கைது செய்ய இயலவில்லை. இதுவரை நடந்த லாக்அப் மரணங்கள் எதற்காவது தண்டனை தரப்பட்டிருக்கிறதா? குற்றவாளிகளுக்கும் காவல்துறைக்கும் உள்ள பிணைப்பு என்பது எல்லா என்கவுண்டர் ஆதரவாளர்களுக்கும் தெரியும். பிறகும் இவர்கள் என்கவுண்டரை ஆதரிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்களது கொலைரசனையன்றி வேறொன்று இருக்க இயலுமா?

கொலைகாரன் கொல்லப்படவேண்டும் என்று இதற்கு முன்பான என்கவுண்டர்களில் வசனம் பேசப்பட்டது. இப்போது கொள்ளையர்கள் சாகட்டும் என அது வளர்ந்திருக்கிறது. நாளை அந்த விதி எந்த எல்லைக்கும் செல்லலாம். ஒருவன் கொல்லப்பட்ட பிறகு அவனை குற்றவாளி என நிரூபணம் செய்தால் போதும் எனும் நிலை முழுமையான ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு நம்மை இட்டுச்செல்லும். சன்மானத்துக்காக சாதாரண ஆடு மேய்க்கும் நபர்களை கொன்று அவர்களை தீவிரவாதிகள் என கணக்கு காட்டிய சம்பவங்கள் ஆந்திராவில் நடந்திருக்கின்றன. காஷ்மீரிலும் வடகிழக்கிலும் இந்த வேலையை ராணுவம் செய்கிறது. கொள்ளையனை கொல்வது சரி என்று அனுமதிக்கும் மனம் உங்களுக்கிருந்தால், கொல்லப்பட்டவனை கொள்ளையனாக்கும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறது.

துப்பாக்கி போலீசின் கையிலிருக்கு ஒரு கருவியென்றால், போலீஸ் அரசாங்கத்தின் கையிலிருக்கும் ஒரு கருவி. என்ன சிக்கலென்றால் அரசின் கருவிக்கு சொந்த விருப்புவெறுப்பு உண்டு. ஆயுதத்துக்கு அதிகாரம் தந்தால் அவை எஜமானனின் இலக்குகளை தாக்க மட்டுமே செய்யும். இலக்கு எப்போதும் நமக்கு பிடிக்காதவர்களாகவோ அல்லது தேவையற்றவர்களாகவோ இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நமக்கு ஒரு வங்கிக்கொளையன் கொல்லப்படுவது நியாயம் என்று தோன்றினால் நம் மகனுக்கு மதிப்பெண் போடாத ஆசிரியர் கொல்லப்படுவது நியாயம் என்று தோன்றலாம். நம் எண்ணத்தில் வன்மத்தை சுமந்துகொண்டு பிள்ளைகளிடம் நேர்மையாக நடக்கும் பழக்கத்தை நாம் எதிர்பார்க்க இயலாது. எல்லோரிடத்திலும் மனிதாபிமானம் இருக்கவேண்டும் என நினைப்பது பேராசையாக இருக்கலாம். ஆனால் எல்லோரும் மனிதர்களாக இருக்க வேண்டும் என நினைப்பது நிச்சயம் பேராசையல்ல. கொலையை விரும்புவது மனிதத்தன்மையற்ற செயல், அதை அரசாங்கம் செய்தாலும் இந்த விதி பொருந்தும்.

ஜனவரி 29 – ஒரு வரலாற்றின் துவக்கம்.

இனி தமிழ் மற்றும் தமிழினம் ஆகிய வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்படாது போகும் என நம்பியவர்கள் ஏமாந்து போனதற்கு பின்னால் இருக்கும் நாள் – ஜனவரி 29. இந்த நூற்றாண்டில் தன்னை தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் எல்லோர் மனதிலும் இருக்கும் பெயர் – முத்துக்குமார்.

இந்த கட்டுரையின் சாயலில் ஏராளமான கட்டுரைகளை இதற்குள் வெளிவந்திருக்கும். நான் புதிதாகவோ சிறப்பாகவோ எழுதுவதற்கு எதுவுமில்லை. ஆயினும், என் அம்மா அன்பானவள் என்பது பலரும் சொல்லிவிட்ட கருத்து என்பதற்காக அதை நான் சொல்லாமலிருக்க முடியுமா?  முத்துகுமாரும் அப்படியே.. அவரைப் பற்றி நினைவுகூர நம் எல்லோரிடமும் ஏதோ ஒரு செய்தி நிச்சயம் இருக்கிறது.

பெரும்பான்மை தமிழக மக்களின் கருத்துக்கு எதிராகவே எப்போதும் செய்தி வெளியிடும் பார்ப்பன ஊடகங்கள் முத்துகுமார் விடயத்தில் மட்டும் இன்றுவரை அடக்கிவாசிக்கின்றன. சோனியா சொன்னால் பெற்ற தாயையே வேசி என சொல்லத் தயங்காத காங்கிரஸ்காரர்கள், தங்கள் கட்சியின் மீதான பரவலான வெறுப்பை உருவாக்கியதில் முக்கியமானவரான முத்துகுமாரைப் பற்றி மூச்சுகூட விடுவதில்லை. அவரைப் பற்றி எதிர்மறை செய்திகள் வெளியிடுவதும் குறை சொல்வதும் தங்களை முற்றாக தனிமைப்படுத்திவிடும் என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். இன்றைய தமிழக சூழலில் முத்துகுமார் ஒரு தவிர்க்கவியலாத ஆளுமை என்பதற்கான எளிய உதாரணங்கள் இவை.

தமிழர்கள் உணர்ச்சிவயப்பட்டு தற்கொலை செய்துகொள்பவர்கள் எனும் கருத்தோட்டம் தமிழ்நாட்டிலேயே பலருக்கும் உண்டு. துரதிருஷ்டவசமாக அது உண்மை என நம்புவதற்கான உதாரணங்கள் தமிழகத்தில் ஏராளமுண்டு. ஆனால் முத்துகுமாரின் “தற்கொலை” முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. செய்தியையும் சீரியல்போல பார்க்க பழகிவிட்டிருந்த ஒரு சமூகத்தை குற்ற உணர்வு கொள்ளவைக்க தனது உடலை தீயிலிட்டார் அவர். மரணத்தின் போது உணர்ச்சி வயப்படுபவர்களை மட்டுமல்ல தற்கொலை செய்துகொள்வது மூடத்தனம் என அறிவுபூர்வமாக சிந்திப்பவர்களையும் தன் இறுதி ஊர்வலம் வரை தன்னுடன் நிற்க வைத்தார் அவர்.

எந்த நிலைப்பாட்டை எடுப்பது எனும் குழப்பத்தில் இருந்தவர்களை முடிவெடுக்க வைக்கும் கருவியாக இருந்தது அவரது இறுதிக் கடிதம். ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தாலும் அதனை வெளிப்படையாக காட்டிக்கொள்ள தயங்கியவர்களை துணிவு கொள்ளச்செய்தது அந்த கடிதம். வெறும் ஊழியர்களாக மட்டுமே பல ஆண்டு காலம் நான் அறிந்திருந்த பலரும் திருப்பூரில் நடந்த பல ஈழ ஆதரவு கூட்டங்களில் அவரது மரணத்திற்குப் பிறகு தட்டுப்பட ஆரம்பித்தார்கள். தானொரு தமிழீழ ஆதரவாளன் என பல இளைஞர்கள் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ள முத்துகுமார் ஒரு காரணமாக இருந்தார் என்பது நிச்சயம் மிகையான வாசகமல்ல.

நல்லடக்க வல்லுனர்களான காவல்துறை, நாடக கலைஞரான முதல்வர் எனும் சூழ்நிலையில்கூட அவரது உடலை மூன்று நாட்களுக்கு அவர்களால் கைப்பற்ற இயலவில்லை. ஒரு உடலை எப்படியாவது எரியூட்டிவிடவேண்டும் என தமிழ்நாட்டின் எல்லா ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளும் மெனக்கெட்டது அவரது மரணத்தின்போதுதான். தன் உடலை ஆயுதமாக்குங்கள் என்று சொல்லி மரணித்தார் அவர். உண்மையில் அவரது உடல் ஒரு ஆயுதமாகவே இருந்தது, அதைக் கண்டுதான் அன்று ஆண்ட கட்சி கூட்டணியும் அன்றைய எதிர்க்கட்சிக் கூட்டணியும் அஞ்சி நடுங்கின. முத்துகுமாரின் உடலை காண திரண்டு வந்த கூட்டம்தான் அந்த காலகட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு நாம் அளித்த ஒரேயொரு மற்றும் குறைந்தபட்ச நம்பிக்கை. அவரது இறுதி ஊர்வலத்தின்போதே கல்லூரிகளை மூடி தாங்கள் மாணவர்களுக்கும் பயப்படுகிறோம் என காட்டிக்கொண்டது தமிழக அரசு. இந்த இரண்டு அங்கீகாரங்களுக்கும் உண்மையான உரிமையாளர் முத்துகுமார்தான்.

இந்த நூற்றாண்டின் தமிழக அரசியல் களத்தை முத்துகுமாருக்கு முன் மற்றும் முத்துகுமாருக்கு பின் என பிரித்து பார்த்தால் அவரது வீச்சை நம்மால் உணர இயலும். அவரது மரணத்துக்கு முன்னால் தமிழ், தமிழீழம், தமிழினம் என பேசுவோர் யாவரும் சுலபமாக தீவிரவாதியென அடையாளப்படுத்தப்பட்டார்கள். தமிழகத்தில் ராணுவ வண்டிகளை மறிக்கும் வீரம் அவரிருந்திருக்காவிட்டால் 99 விழுக்காடு வந்திருக்க சாத்தியமில்லை. ராஜீவ் காந்தியின் சாவுக்கு தமிழகம் இன்னமும் அழுகிறது எனும் காங்கிரஸ் கூட்டம் உருவாக்கிய மாயையையும் தன் உடலிலிட்ட தீயைக்கொண்டு பொசுக்கினார் அவர். இணையத்திலும் பொது வெளியிலும் கூடும் தமிழ் இளைஞர்கள் கூட்டத்தின் பிண்ணனியில் முத்துகுமார் இருக்கிறார். சோனியா கும்பல் அவரது இறுதி ஊர்வலத்துக்கு பிறகு தமிழகத்தை இன்னும் அதிகமாக வெறுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சோனியாவால் வெறுக்கப்படும் தேசம் என்பதைத் விட தமிழகத்துக்கு வேறு பெரிய கௌரவம் இருக்கிறதா என்ன?

அவரது தியாகத்தை வீணாக்கிவிட்டோம் எனும் குற்ற உணர்வில் நாம் இருந்தால் முத்துகுமார் எனும் சகாப்தம் முடிந்துவிட்டதாக பரப்புரை செய்ய ஒரு கூட்டம் காத்திருக்கிறது. ஆகவே, அவரது நினைவை போற்றும் பணியையேனும் தவறாது செய்வோம். வருங்கால இளைஞர்களாவது அவரது கனவை நிறைவேற்றும் வாய்ப்பை அது உருவாக்கும். இன்னொரு இளைஞனை பெட்ரோல் கேனுடன் சாஸ்திரி பவனுக்கு விரட்டும் அநியாயத்தை நாம் செய்யாதிருக்க முத்துகுமாரை நாம் மறக்காதிருப்பதுதான் முதல் பணி.

இனிவருங்காலங்களில், தன் உயிரை மாய்த்துக்கொள்வது தியாகமா? இதற்கு இத்தனை ஆர்பாட்டம் தேவையா என தினமலர் வகையறாக்கள் பிரச்சாரம் செய்யலாம். அதையே உங்களுக்கு அருகிலிருக்கும் ஒருவரும் சொல்லலாம். அப்போது தயங்காது சொல்லுங்கள்,சம்பளமும் இதர சலுகைகளும் பெற்றுக்கொண்டு மேலதிகாரி உத்தரவிடுமிடத்துக்குப் போய் செத்துப்போகும் ராணுவவீரன் தியாகி என்றால், எங்கள் முத்துக்குமார் அவர்களைவிட கோடி மடங்கு மேலானவன்.

மூன்று லட்சம் மக்களின் போராட்டமும் நான்கு ஜெனரேட்டர்களும்… 2

அணுசக்தியின் தேவை குறித்த பிரச்சாரமும், அதன் உற்பத்தி செலவீனம் பற்றிய விவரங்களும் அபத்தமானவை. ஒரு விஞ்ஞானி உற்பத்தி செலவு மூன்று ரூபாய்/ யூனிட் என்கிறார் (சூரிய மின்சக்திக்கு 20, காற்றாலைக்கு 10 என கூடுதல் தகவல்கள் வேறு). இது எப்படியான நிர்ணயம் என யாரும் கேட்கமுடியாது. முதலீட்டு செலவு மற்றும் உற்பத்தி செலவு மட்டுமே ஏனைய தொழில்களுக்கு அடிப்படை கணக்கீடு. இங்கோ அது கட்டுமானத்தைவிட அதிகம் செலவு பிடிக்கும் மூடும் செலவு, கழிவுகளை பல்லாண்டு காலம் காப்பாற்றும் செலவு என புதிய தலைவலிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது, இவையெல்லாம் அவர்கள் 3ரூ விலைநிர்ணயத்தில் நிச்சயம் வந்திருக்காது. 2000 மெகாவாட் உற்பத்திக்கு முதலீடு 15000 கோடி, இயக்க செலவுகள் தனி. இதே அளவுக்கான முதலீட்டில் எவ்வளவு சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும் என்றோ அல்லது எவ்வளவு காற்றாலை மின்னுற்பத்தி செய்ய இயலுமென்றோ அரசு நிச்சயம் ஒப்பிட்டு பார்க்க விரும்பாது.

குஜராத்தில் நிறுவப்படவிருக்கும் 3000 மெகாவாட் சூரியசக்தி மின் திட்டமொன்றுக்கான உத்தேச முதலீடு 50000 கோடி. கூடங்குளத்தின் 2000 மெ.வா நிர்மாண செலவையும் 30 வருடங்களுக்குப் பிறகு அதற்கு ஆகும் கருமாதி செலவையும் (அணுவுலையின் கருமாதி செலவு மட்டும்- நமக்கு தனி கணக்கு) கணக்கிட்டால் இரண்டுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. நூற்றுக்கணக்கிலான வெளிநாட்டு நிபுணர்களை பணியமர்த்தும் தேவையும் சூரிய சக்தி மின்நிலையங்களுக்கு கிடையாது. ஆனால் ஏன் இந்திய அரசு அணுசக்திக்கு மட்டும் பணத்தை இறைக்கிறது?

நட்டம் ஏற்படுத்தும் அரசு நிறுவனங்களை விற்றே தீருவோம் எனும் நிலைப்பாட்டை மத்தியஅரசு எடுத்து பல ஆண்டுகளாகிறது. இப்போதுகூட மூன்று நிறுவனங்களை கைகழுவ முடிவெடுத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் பல லட்சம் கோடி பணத்தை விழுங்கிவிட்டு அணுசக்தித் துறை நாட்டுக்கு சம்பாதித்து கொடுத்த லாபம் என்ன?  ஏன் அணுவுலைகளை புதிதாக நிறுவ மட்டும் இந்தியா இத்தனை மெனக்கெடுகிறது எனும் நியாயமான கேள்வியும், எந்த சந்தர்ப்பத்திலும் இந்தியாவில் உள்ள பாமர மக்களின் நல்வாழ்வைப்பற்றி சிந்தித்திராத பெருமுதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக மட்டுமே ஆட்சி நடத்தும் “கொலைவெறி ரசிகர்” மன்மோகன் ஏன் அணுமின்சார நிலையங்களுக்காக இத்தனை தூரம் சிரமம் எடுத்துக்கொள்கிறார் எனும் சந்தேகமும் அணுமின்சக்தி பற்றி நாம் முடிவெடுக்க போதுமான அடிப்படை ஆதாரங்கள். (ஒப்பந்த விதிகளை திருட்டுத்தனமாக மாற்றுவது, எம்.பிக்களுக்கு பணம் கொடுப்பது, அமர்சிங்கை அமெரிக்காவில் வைத்து குளிப்பாட்டியது ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு பார்த்தாலும் மன்மோகனின் அணுசக்தி சிரமம் கொஞ்சநஞ்சமல்ல)

 

தார்கரீதியாகவும் அணுவுலை ஆதரவு கோஷம் வலுவில்லாத்து. மேலோட்டமாக பார்த்தால் அணுவுலை எதிர்ப்பு பயம் எனும் உணர்வை அடிப்படையாக கொண்டதாகவும் ஆதரவு அறிவியல்பூர்வமானதாகவும் தெரியலாம். உண்மையில் எதிர்ப்பவர்கள் அறிவியல்பூர்வமான தரவுகளின் அடிப்படையில் பேசுகிறார்கள். செர்னோபில் விபத்தால் உண்டான நீண்டகால விளைவுகள், புகுஷிமா உலையை மூட ஆகும் 78000 கோடி செலவு, யுரேனிய சுரங்கங்களின் அருகே வசிக்கும் மக்களிடையே உருவாகும் உடல்நல பாதிப்புக்கள் எல்லாம் ஆதாரபூர்வமான தகவல்கள். ஆதரவு கட்சியினர்தான் நம்பிக்கையின் அடிப்படையில் யோசிக்க சொல்கிறார்கள். கூடங்குளத்தில் ஆறு ரிக்டருக்கு மேல் நிலநடுக்கம் வராது, செர்னோபில், புகுஷிமா போல விபத்துக்கள் நடக்காது, அணுவுலைக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றும் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்படும்.. இவையெல்லாம் வெறும் நம்பிக்கையன்றி வேறென்ன?

கட்டுரை தேவையற்ற திசையில் பயணிப்பதாக கருதுகிறேன். காரணம் அணுவுலையின் பாதிப்புக்கள் அதனை எதிர்ப்பவர்களைவிட ஆதரிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் அவர்கள் அணுவுலையை தீவிரமாக ஆதரிக்க காரணம் அவர்கள் இருக்கும் அல்லது இருக்க விரும்பும் வர்கம்தான். மேல்தட்டு வர்கத்தின் நலன் எப்போதும் பாமரமக்களின் துயரத்தை நம்பியிருக்கிறது. நிலம் கையகப்படுத்தும் பிரச்சனைகளில் அவர்கள் எப்போதும் காசை வாங்கிகிட்டு காலி பண்ணவேண்டியதுதானே என்றுதான் பதில் சொல்வார்கள்.. நிலமற்ற கூலி விவசாயிகள் என்ன செய்வார்கள் என்ற யோசனைகூட அவர்களுக்கு வராது. இந்தியாவில் பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோதெல்லாம் சென்செக்ஸ் விழுந்துவிடுமோ என்று மட்டுமே அஞ்சிய மேல்தட்டு கூட்டம் தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த உடன் கைகளில் விளக்கு பிடித்துக்கொண்டு வீதிகளில் ஊர்வலம் போனது. குஜராத் பூகம்பத்துக்கு தாரளமாக நிதியளித்து போதாதென்று உண்டியல் குலுக்கும் அளவுக்கு வந்த பெரிய மனிதர்கள் அதற்கு முன்னால் நிகழ்ந்த பெரும் பேரழிவான ஒரிசா புயலின்போது பெரிதாக எதுவும் செய்திருக்கவில்லை. அங்கு மாதக்கணக்கில் பிணங்கள் கூட அகற்ற நாதியற்று கிடந்தன. காரணம், குஜராத் ஒரு உற்பத்தி கேந்திரம், ஒரிசாவோ சோற்றுக்கு வழியற்று மாங்கொட்டை சாப்பிட்டு உயிரை விட்ட மக்கள் வாழும் மாநிலம். பேரழிவின்போதான கருணையிலும் மேல்தட்டு வர்கத்தினரிடையே ஒரு கபடத்தனம் இருக்கும்.

கூடங்குளம் விவகாரத்திலும் இதுதான் நடக்கிறது. நிதி மிகுந்தோருக்கு அணுவுலையின் அபாயங்கள் குறைவு. அவர்கள் கூடுமானவரை பாதுகாப்பான தூரத்தில் இருக்கிறார்கள், அப்படியே அபாயம் நேர்ந்தாலும் தப்பிவிடும் வாய்ப்புடையவர்களாக இருக்கிறர்கள். ஆகவே அவர்களுக்கு மின்சாரம் மட்டுமே பிரதானமாக தெரிகிறது. கைகா, கல்பாக்கம் என அணுவுலைகளுக்கு அருகிலிருப்போர் மாநிலத்தின் வழக்கமான மின்வெட்டைத்தான் சந்திக்கிறார்கள். மாறாக அதன் அபாயங்களை அவர்கள் மட்டுமே பெரிதும் எதிர்கொள்கிறார்கள். அணுவுலை தொடர்பான நிலைப்பாட்டில் இரண்டு பெரும் துருவங்களுக்குப் பின்னால் இருப்பது அவர்களது வர்கம் மட்டுமே.

எந்த பக்கம் இருக்கிறோம், எந்த பக்கம் இருப்பது எனும் குழப்பத்தில் இருக்கும் பலரும் இங்கிருக்கிறோம். அவர்களை கவனத்தில் கொண்டே இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. ஏழையாகிவிடக்கூடாது எனும் ஒற்றை லட்சியத்தில் இருக்கும் நடுத்தரவர்கம் தாராளமயத்துக்கு பிறகு தம் நடவடிக்கைகளில் ஒரு பணக்காரத்தனத்தை காட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. அன்னா ஆதரவு தொடங்கி ஜாக்கி ஜட்டி வாங்குவது வரை சாத்தியப்படும் இடங்களிலெல்லாம் இப்பழக்கம் பின்பற்றப்படுகிறது. அணுவுலை தொடர்பிலும் இது பிரதிபலிக்க வாய்ப்பிருப்பதை மறுப்பதற்கில்லை.

இந்த காப்பியடிக்கும் இயல்பு அசிங்கமானது, நன்றிகெட்டத்தனம் மற்றும் பிரயோஜனமில்லாதது. சாலையில் நிகழும் விபத்தின்போது எந்த மெர்சிடீஸ் காரும் நின்றதாக சரித்திரமில்லை. சமானிய மக்கள்தான் ஒவ்வொரு விபத்து மீட்பு நடவடிக்கையின்போதும் உடனிருக்கிறார்கள். மருத்துவ சிகிச்சைக்கு பண உதவி கேட்டு வரும் பத்திரிக்கை விளம்பரங்களை பார்த்து பணம் அனுப்புவோரில் பாதிபேர் தமது எதிர்காலத்துக்கென சேமிக்க வழியற்ற தினக்கூலிகள் (மேலோட்டமான கருத்தல்ல.. முழு உண்மை). ஒவ்வொரு தேசத்தின் விடுதலைப்போராட்டத்திலும் முன்னால் நின்றுவிட்டு விடுதலைக்குப் பிறகு மீண்டும் கடைசிக்கு போவது ஏழை மக்கள்தான். இப்படி ஒவ்வொரு தருணத்திலும் அவர்களது உழைப்பிலும் தியாகத்திலும் வாழ்க்கையை நடத்தும் நாம் சிந்தனையில் மட்டும் பணக்காரனைப்போல வாழ நினைப்பது…. கோடிட்ட இடங்களை பூர்த்திசெய்வது உங்கள் வசதியைப் பொறுத்த்து, நான் சொல்ல எதுவுமில்லை.

கூடங்குளம் விவகாரத்தில் முதலில் நாம் பதில் சொல்லவேண்டிய கேள்வி, யாருடைய நல்வாழ்வை நாம் விரும்புகிறோம் என்பதுதான். அதுதான் நமது முடிவை தீர்மானிக்கிறது.

கூடங்குளம் மக்களுக்கு சீக்கிரம் லஞ்சம் கொடுங்கள் இல்லாவிட்டால் இந்த போராட்டம் இந்தியா முழுக்க மற்ற அணுவுலை திட்டங்களுக்கு எதிராக பரவிவிடும் என பிரதமருக்கு புலம்பல் கடிதம் எழுதியிருக்கிறார் கலாம். அதையேதான் நானும் சொல்கிறேன். இந்த எழுச்சி நாடு முழுமைக்கும் பரவியாகவேண்டிய ஒன்று. சாதாரண மக்களிடமிருந்து எடுத்தே பழக்கப்பட்ட நடுத்தர வர்கம், அதற்கான தமது நன்றியை காட்டுவதற்கான மகத்தான வாய்ப்பு இது. மென்மேலும் நமது பணம் பன்னாட்டு அணுஉலை முதலாளிகளுக்கு சென்று சேராது தடுக்க கிடைத்த பொன்னான சந்தர்பம் இது. ஆகவே எளிய மக்களின் உரிமைக்கும் பாதுகாப்புக்கும் துணையிருப்போம், கூடங்குளம் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவளிப்பதை அதற்கான முதல் நடவடிக்கையாக்குவோம்.

மூன்று லட்சம் மக்களின் போராட்டமும் நான்கு ஜெனரேட்டர்களும்…

பெரும்பாலான வலைதள தமிழர்கள் விஞ்ஞானிகளாகி ஒரு நான்கு மாதங்கள் ஆகியிருக்கலாம், தமிழ் இணைய உலகில் இவ்வளவு அறிவியல்பூர்வமான கருத்துக்கள் ஒரே நேரத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்டதாக எனக்கு நினைவில்லை. ஏராளமான தொழில்நுட்ப விளக்கங்கள், மின்சாரத்தின் தேவை பற்றிய அறிவுரைகள் என நீண்ட அதிகாரவர்கத்தின் குரல் அப்துல் கலாமின் தியாகம் செய்வது எப்படி எனும் விளக்க உரை வெளியாகும்வரைக்கும் மென்மையாகவே இருந்தது. அவர்களது கடுமையான உழைப்பால் உருவாக்கப்பட்ட கலாம் எனும் பொம்மை ஒப்பித்த ரைம்சும் நிராகரிக்கப்பட்ட பிறகு தேசவிரோதம், தேசிய பாதுகாப்பு சட்டம் என அதிகாரவர்கத்தின் குரல் கடுமைகாட்ட ஆரம்பித்திருக்கிறது. பாமர மக்கள் ஒன்றும் கேந்திரிய வித்யாலயா குழந்தைகள் அல்ல என கலாமும் அவரது ஸ்பான்சர்களும் உணர்ந்ததால் வந்த விளைவு இது.

தமிழகம் பல சந்தர்பங்களில் இந்தியாவுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. சமூகநீதிக்காக, மரணதண்டனை ஒழிப்புக்காக நடக்கும் மக்கள்திரள் போராட்டங்களாகட்டும் அல்லது ரயிலில் டிக்கட் எடுத்து பயணிக்கும் தனிமனித ஒழுக்கமாகட்டும் எல்லாவற்றிலும் நம் மாநிலம் ஒரு முன்னோடியாகவே இருந்திருக்கிறது.. இருக்கிறது. அந்த பட்டியலில் இணைக்க வேண்டிய இன்னொரு விடயம் அணுஉலை எதிர்ப்பு.

ஜெய்தாபூர் மக்களின் போராட்டம் பற்றிய தொலைக்காட்சி விவாதங்களில் இருந்து நான் தொடர்ச்சியாக கவனித்தவரை விஞ்ஞானிகள் (அப்படியான பொறுப்பில் இருப்பவர்கள் என பொருள் கொள்ளவும்) திமிர்தனமாகவும் எதிரே இருப்பவனுக்கு எதுவுமே தெரியாது எனும் மமதையிலுமே பேசுகிறார்கள். பெரும்பாலான ஊடகங்கள் இரண்டு தரப்புக்கும் பொதுவாக விவாதம் செய்வதாக காட்சியை உருவாக்கி அதன் முடிவை அணு உலைக்கு சாதகமானதாக ஆக்குகின்றன. இப்போது அணுவுலை ஆதரவு என்பது திட்டமிட்ட முறைப்படுத்தலோடு இயங்க ஆரம்பித்திருப்பதாக தெரிகிறது. ஆகவே அணுவுலை எதிர்ப்பும் எல்லா கோணங்களிலும் கொண்டு செல்லப்பட்டாகவேண்டும். ஆகவே தொழில்நுட்பம் தவிர்த்த மற்ற விடயங்களை விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன்.

வளர்ச்சிக்காக அணுவுலை எனும் கோஷம் ஓங்கி ஒலிக்கத் துவங்கியிருக்கும் வேளையில் வளர்ச்சி என்பது என்ன என்பதை நாம் முடிவு செய்தாகவேண்டும். கடந்த இருபதாண்டுகளில் இந்தியா வளர்கிறது என பல கணக்குகளை அரசு சொல்கிறது. டாடா, அம்பானி போன்ற பெரு முதலாளிகளின் சொத்துக்கள் கணக்கிட முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. கருப்பு பணம் பெருமளவு விளையாடும் ரியல் எஸ்டேட் துறை வளர்ந்து இந்தியாவின் பெரு மற்றும் சிறு நகரங்களின் நில மதிப்பு கற்பனைக் கெட்டாத அளவுக்கு கூடியிருக்கிறது. பெரும்பாலான சாமானிய மக்களுக்கு டி.வியும் செல்போனும் கிடைத்திருக்கிறது. இந்த இரண்டு பொருட்களும் பயன்படுத்துபவனைவிட சேவை வழங்குபவனுக்கே லாபம் தருபவை.

நமக்கு என கிடைத்த வளர்ச்சி என்ன? இருபதாண்டுகளில் நாம் நமக்கான வாழிடங்களை சுருக்கிக்கொண்டிருக்கிறோம். இருபதாண்டுகளுக்கு முன்னால் கிடைத்த அளவு இடத்திலா இப்போது நீங்கள் வசிக்கிறீர்கள்? சொந்த ஊரில் இருந்து பிழைக்கும் சாத்தியம் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது? இலவசமாக கிடைத்த தண்ணீருக்கு பணம் செலுத்த வேண்டிய நிலைக்கு நாம் வந்திருக்கிறோம். தனிநபர்கள் நுகரும் கலோரியின் அளவு இந்தியாவில் குறைந்துவிட்டதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. நான்கில் மூன்று இந்தியர்கள் நாளொன்றுக்கு இருபது ரூபாய்க்கும் குறைவான பணத்தைக்கொண்டு வாழவேண்டியவர்களாக இருப்பதாக அரசே ஒப்புக்கொள்கிறது. இதுவரை நாம் சாதித்த வளர்ச்சி இதுதான். இந்திய அரசு நாம் இழக்கப்போவதாக அச்சுறுத்தும் வளர்ச்சியும் இதுதான். நாம் முதலில் முடிவு செய்யவேண்டியது நமக்கு செல்போனையும் டிவியையும் கொடுத்துவிட்டு மிச்ச சொச்சத்தை பறித்துக்கொள்ளும் வளர்ச்சி தேவையா என்பதைத்தான்.

இந்தியாவில் மருத்துவத்துக்கு செலவாகும் மொத்த தொகையில் பதினேழு சதவிகிதத்தைத்தான் அரசுகள் செலவிடுகின்றன. கல்வியின் லட்சணம் இன்னும் மோசம். இந்தியாவில் 13 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் பட்டினியாலும் சத்துக்குறைபாட்டினாலும் இறக்கின்றன, (இந்த எண்ணிக்கை ஏறத்தாழ இரண்டு பூடான் நாடுகளுக்கு சமம்). எழுபது சதம் பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் நாட்டில் ரிலையன்ஸ் நிறுவனம் தனது உள்நாட்டு பெட்ரோல் உற்பத்தியில் பாதிக்கும் மேலானவற்றை ஏற்றுமதி செய்கிறது. இவற்றில் எதை சரிசெய்யவும் முயலாத அரசுகள் அணுமின்சார நிலையங்களை காப்பாற்றவும் இன்னும் மிகையாக கொண்டுவரவும் ஏன் இந்த முக்கு முக்க வேண்டும் எனும் கேள்வி நம்மிடம் எழுந்தாலே கூடங்குளம் விவகாரத்தில் நாம் எடுக்கவேண்டிய முடிவு என்ன என்பதில் நாம் ஒரு முடிவுக்கு வரலாம்.

ஒவ்வொரு பட்ஜெட்டின்போதும் நாம் கவனிக்க தவறும் செய்தி ஒன்றுண்டு. பெரிய முதலாளிகளை சந்தித்து ஆலோசனை செய்துவிட்டுத்தான் நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை தயாரிப்பார். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வெளிநாட்டு சிறைகளில் யாதொரு குற்றமும் செய்யாமல் வாடுவதைப் பற்றி கவலைகொள்ளாத அரசுகள் சில ஆண்டுகளுக்கு முன்னால் போலாரீஸ் நிர்வாகிகள் இந்தோனேசியாவில் சிறைவைக்கப்பட்டபோது துடித்த துடிப்பு எந்த கல்நெஞ்சுடையோரையும் கரையவைப்பது. மருத்துவமனைகளில் குளிரூட்டப்பட்ட அறைகளுக்கு வரிவித்தார் பிரணாப் முகர்ஜி (கடந்த பட்ஜெட்டில்). ஒரே சந்திப்பில் அந்த வரியை விலக்க வைத்தார் தேவி ஷெட்டி, பெங்களூரில் உள்ள ஒரு கார்பரேட் மருத்துவமனையின் முதலாளி.

ஆக, இங்கு இருப்பது முழுமையானதொரு முதலாளிகள் ராஜ்ஜியம். இதில் நடுத்தர வர்கத்துக்கோ அல்லது பாமர மக்களுக்கோ ஏதேனும் நன்மை நடந்தாலும் அது தவிர்க்கவியலாமல் நடப்பதேயன்றி அரசின் விருப்பமல்ல. ஆகவே நம் அரசு எடுத்த முடிவு என்பதற்காக நாம் அதனை ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை. எந்த முடிவெடுத்தாலும் ஆதரிக்க வேண்டிய அளவுக்கு இவர்கள் நியாயமான மனிதர்களும் அல்ல எதையும் ஆதரித்தேயாக வேண்டிய அளவுக்கு நாம் அவர்களுக்கு கடன்பட்டவர்களும் அல்ல. அணுவுலை விவகாரத்தில் நம் பரிசீலனைக்கு உரியவை நம் எதிர்காலமும் நம் மனசாட்சியும்தான் (இதற்கான விளக்கம் பின்னால்..).

ஒருவேளை நம் அரசுகள் மின்சார வசதியில் முழுமையான தன்னிறைவை பெற்றுவிட்டு பிறகு பட்டினியால் சாகும் குழந்தைகளைப் பற்றியோ அல்லது தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் பற்றியோ கவலைப்படலாம் எனும் லட்சியத்தில் இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். அணுவுலையால் இவர்களால் 10 சதம் மின்தேவையை பூர்த்தி செய்ய இயலும் என்றும் வைத்துக்கொள்ளலாம். அதற்காக இவர்கள் பல்லாயிரம் கோடிகளை செலவிடுகிறார்கள். யுரேனிய உற்பத்தியில் 8ஆம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவோடு ஒப்பந்தம் செய்கிறார்கள். இந்த ஒப்பந்தம் நிறைவேற வாஜ்பாயை பீஷ்ம பிதாமகன் என வர்ணித்து ஆதரவு பிச்சை கேட்டார் மன்மோகன். அமர்சிங்கை அமெரிக்காவுக்கு அனுப்பி (அல்லது அழைத்து) எல்லா “சேவைகளும்” செய்து அனுப்பிவைத்தார்கள். 10 சதவிகித மின்சாரத்துக்கு இவ்வளவு பாடு படுகிறவர்கள் மீதி 90 சதவிகித மின்சாரத்துக்கு என்ன செய்தார்கள்? எதுவுமில்லை. இங்கே மின் தேவை பற்றிய பீதி அணுசக்தியை ஏற்றுக்கொள்ள வைக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

ஒரு அணுமின் நிலையம் கணக்கு கேட்கவியலாத பெரும்பணத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொண்டுசேர்க்க உதவுகிறது. உலகெங்கும் 8 கோடிபேர் வேலைபார்க்கும் அணுசக்தி வியாபாரம் ஒருசில முதலாளிகளுக்கு மட்டும் உரியது. அவர்களால் சம்பாதிக்காமல் இருக்க முடியாது. இனியும் அவர்களுக்காக தங்கள் நாட்டுக்கு ஆபத்தை தேடிக்கொள்ள வளர்ந்த நாட்டு மக்கள் தயாரில்லை. ஆகவேதான் அதிகபட்சமாக 1500 கோடிக்குமேல் நட்டஈடு தரதேவையில்லாத இந்தியாவை அவர்கள் குறிவைக்கிறார்கள். மகள் நன்றாக வாழவேண்டுமாயின் அவளை விற்றுவிடு எனும் அதிசிறந்த கொள்கையுடைய நமது பிரதமரும் அவர்களை வரவைப்பதே நாட்டுக்கு ஒளியேற்ற ஒரேவழி என கூவிக்கொண்டிருக்கிறார்.

ஒருவேளை அணுமின்சாரத்தில் 100 சதவிகிதம் பாதுகாப்பான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டாலும் (அது சாத்தியமல்ல என்றாலும்) அது இந்தியாவில் அபாயகரமானதாகவே இருக்கும். இங்கு எந்த ஒப்பந்தக்காரர் சரியான தரத்தில் தங்கள் கட்டுமானத்தை செய்கிறார்கள், அணுவுலை கட்டும்போது மட்டும் இவர்கள் பரிசுத்தமாகிவிடுவார்களா? நமது அணுவுலை கட்டுமான பொறியாளர்களுக்கு மட்டும் கைநீட்டாதிருக்க சிறப்பு பயிற்சிகள் தரப்பட்டிருக்கிறதா? காமன்வெல்த் போட்டிக்காக தலைநகரில் கட்டிய பாலம் திறக்கும் முன்னரே இடிந்துபோனது. போபால் மரணங்களுக்கே நீதி வழங்க வக்கற்ற இந்திய அரசுக்கு மக்கள் பாதுகாப்பில் நாங்கள் அக்கறை செலுத்துகிறோம் என சொல்லவே அருகதை கிடையாது.

ஃபுகுஷிமாவுக்கு முன்னால் ஜப்பானை பார், பிரான்சை பார் என்றார்கள். அவர்களால் முடியும்போது நம்மால் முடியாதா என முழங்கினார்கள். ஜப்பானிலும் ஜெர்மனியிலும் விபத்து நடந்த பிறகு அவர்களைவிட நமது தொழில்நுட்பம் உசத்தி என்கிறார்கள். ஒருவேளை ஊழல் செய்வது பற்றி சொன்னார்களா என்று தெரியவில்லை. பஸ்ஸ்டாண்டில் ஒழுங்காக கக்கூஸ் கட்டமுடியாத அரசுகள் அணுசக்தியில் கரைகண்ட மாதிரி பேசுவதை என்னவென்று சொல்வது? கனவு நாயகனோ செர்னோபில் விபத்தில் 37 பேர்தான் செத்தார்கள் என புதிய வரலாறு சொல்கிறார். அணுக்கழிவு விவகாரத்திலோ அதை உருண்டையாக்கி உள்ள வச்சு பூட்டிரலாம் என்று புதிய கண்டுபிடிப்பை அவிழ்த்துவிடுகிறார். இன்னொருவரோ அதை பாதுகாப்பாக ரயிலில் கொண்டுபோய் இன்னொரு இடத்தில் வைத்துவிடுவோம் என்கிறார் மற்றொருவர் கழிவில் முக்கால்வாசியை மீளவும் பயன்படுத்திவிடுவோம் என்கிறார். நல்லவேளையாக அதை எடைக்கு போட்டுவிடலாம் என சொல்லவில்லை.. அந்த அளவுக்கு நமது அறிவுத்திறனை அவர்கள் மதித்திருக்கிறார்கள் என்று நாம் பெருமைப்படவேண்டியதுதான்.

காலக்கொடுமையாக இன்னொரு அணுசக்தி விஞ்ஞானி நாராயணசாமி, உதயகுமாரை அன்னிய கைக்கூலி என்கிறார். அன்னியரால் ஆளப்படும், அன்னியர் வந்தால்தான் நாடு செழிக்கும் என்று சொல்லும், கொள்ளையிட்ட பணத்தை அன்னிய நாட்டில் வைத்திருக்கும் நபர்களின் பெயரைக்கூட சொல்ல மறுக்கும் ஒரு கட்சியின் பிரதிநிதி இன்னொருவரை அன்னிய கைக்கூலி என்றால்.. என்ன செய்ய, சோனியா காந்தி ஊழலை ஒழிப்போம்னு சொன்னபோதுகூட அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தவர்கள்தானே நாம்.

நிறைவுப் பகுதி நாளை அல்லது அதற்கு மறுநாள் வெளியாகும்.

காந்தி- ஆதரவும் எதிர்ப்பும் அல்லது பக்தியும் புரிதலும். 2

எதிரியை எப்படி எதிர்கொள்வது என்பதையும் நீங்கள் பகத்சிங் உள்ளிட்ட தியாகிகளின் வாழ்வில் இருந்து தெரிந்து கொள்ளலாம். தங்கள் கோரிக்கையை வெள்ளை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் அறிவிக்கவே அவர்கள் கைதானார்கள். ஒவ்வொரு விசாரணையையும் அவர்கள் தங்களுக்கான பிரச்சார களமாக மாற்றினார்கள்.

பாராளுமன்றத்தின் மீது குண்டு வீசிய வழக்கு லாகூர் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, அங்கு குண்டு வீசியதன் நோக்கம் பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அது நியாயமற்றது என அவர்கள் வாதிடுகிறார்கள்,

//நாம் நோக்கத்தை புறக்கணித்துவிட்டால், உலகின் மிகப்பெரிய தளபதிகள்கூட சாதாரண கொலைகாரர்களைப் போல தோன்றுவர். வருவாய்த்துறை அதிகாரிகள் திருடர்களாகவும் ஏமாற்றுக்காரர்களாகவும் காட்சியளிப்பர். ஏன் நீதிபதிகளும் கொலைக் குற்றத்துக்கு ஆளாகலாம்.// -விசாரணையின்போது பகத்சிங்.

அவர்களுடைய நோக்கம் அவர்களின் குற்றத்தைக் காட்டிலும் அதிகபட்ச தண்டனைக்குரியது என அவர்களுக்கு தெரியும். ஆயினும் அவர்கள் தங்கள் நோக்கம் பரிசீலிக்கப்படவேண்டும் என கடுமையாக வாதிடுகிறார்கள். நிராயுதபாணி மக்களை சுட்டுக்கொன்ற ஜெனரல் டயரின் அராஜகத்தை குறிப்பிடுகிறார்கள். தங்களது வாக்குமூலத்தில் இருந்து நீக்கப்பட்ட இன்குலாப் ஜிந்தாபாத், ஏகாதிபத்தியம் ஒழிக எனும் வாசகங்கள் நீக்கப்பட்டதை குறிப்பிடும் சாக்கில் நீதிமன்றத்தில் அதற்கான விளக்கங்களை சொல்கிறார் பகத்சிங்.

அவரது இந்த நிலைப்பாட்டை முழுதாக புரிந்துகொள்ள இன்னொரு சம்பவம் உதவிகரமாக இருக்கும். 1930 டிசம்பர் 23ல் லாகூர் பல்கலைக் கழகத்தில் பஞ்சாப் ஆளுநரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார் ஹரி கிஷன் எனும் போராளி. ஆளுநர் லேசான காயமடைய இன்னொருவர் இறந்துபோனார். இவ்வழக்கு விசாரணையின்போது ஹரி கிஷனின் வழக்குரைஞர், தன் கட்சிக்காரர் கொலை செய்யும் நோக்கில் சுடவில்லை என்றும் ஒரு எச்சரிக்கையாகவே அந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார் என வாதிடுகிறார். இதையறிந்த பகத்சிங் புரட்சியாளர்கள் தங்கள் வழக்குகளை எவ்வாறு கையாளவேண்டும் எனும் ஆலோசனையை தன் நண்பருக்கு ஒரு கடிதமாக எழுதுகிறார், (1931 ஜூன் பீப்பிள் இதழில் வெளிவந்தது).

அதில் அரசுக்கு நாம் போதுமான எச்சரிக்கை கொடுத்த பிறகுதான் செயல்பாட்டுக்கு வருகிறோம். ஆனால் அதிருஷ்டவசமாக் ஆளுநர் தப்பித்துக்கொண்டதற்காக (அதிருஷ்டம் ஆளுநருக்கு, சுட்டவருக்கல்ல) அதனை நமக்கு சாதகமாக்கிக்கொண்டு வாதிடுவதால் நமக்கு (இயக்கம்) என்ன பலன் கிடைத்துவிடும்? இதுபோன்ற செயல்களால் இயக்கத்தின் அழகை சிதைக்கக்கூடாது என்கிறார் பகத்சிங். (அடைப்புக்குறிகளுக்குள் உள்ள அழுத்தம் நம்முடையது). அந்த நீண்ட கடிதத்தில் அவர் சொல்வதன் சுருக்கம் இதைதான், ஆளுனரைக் கொல்வது எனும் நோக்கம் இரண்டாம் பட்சமே. கொலைமுயற்சி எனும் வழக்கையே நம்க்கான போராட்ட களமாக்க வேண்டுமேயன்றி, அதனை வெறும் எச்சரிக்கை எனும் வாதத்தால் நம் போராட்ட களத்தை சுருக்கிக்கொள்ளக்கூடாது.

காந்தி ஏரியாவுக்கு வரலாம், ரவுலட் கமிட்டி அறிக்கை வெளியானபோது அவர் முடிவெடுத்த போராட்ட முறையை கொஞ்சம் படியுங்கள்,

சாத்வீக சட்ட மறுப்பை செய்வது எப்படி என்று எனக்கு விளங்கவேயில்லை. சட்ட மறுப்பு செய்வதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் அளித்தால்தானே ஒருவன் சட்டத்தை மீற முடியும்? (சத்திய சோதனை பக்கம் 552) – இது அவரது குழப்பம்.

நேற்றிரவு கனவில் ஒரு யோசனை வந்தது. பொது ஹர்தாலை நடத்த வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொள்வது என்பதே அது. நம்முடைய போராட்டமோ ஒரு புனிதமான போராட்டம். ஆகையால் அதை ஆன்ம தூய்மை செய்துகொள்வதோடு துவங்கவேண்டும். இந்திய மக்கள் எல்லோரும் அன்று தங்கள் வேலைகளைய்யெல்லாம் நிறுத்திவிட்டு உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்யட்டும்-இது அவரது தீர்வு (ச.சோதனை பக்கம் 552) மக்கள் இந்த ஹர்தாலை அனுஷ்டித்தது ஒரு அற்புதக்காட்சி என விவரிக்கிறார் காந்தி (ஒரு அற்புதக்காட்சி என்றுதான் அந்த அத்யாயத்துக்கு பெயரிட்டிருக்கிறார்).

நான் விளக்க இதில் ஏதுமில்லை. போராட்டம் என்பது எப்படியிருக்கவேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யலாம். அதற்கான முன்னோடியாக யாரை கருதவேண்டும் என்பதும் உங்கள் முடிவிற்கானதே.

பகத்சிங்கின் மீதான இன்னொரு குற்றச்சாட்டு ஆங்கிலேய காவல் அதிகாரி (டெபுடி சூப்பிரெண்டென்ட்) சாண்டர்சை கொலை செய்தது. அதன் காரணம், லாலா லஜபதிராயை தடியடி மூலம் கொன்றதற்கு பதிலடி தருவது (அவர்கள் இலக்கு லஜபதிராயை தடியால் தாக்கிய ஸ்காட்டை கொல்வது. ஜெய்கோபாலால், சாண்டர்ஸ் தவறுதலாக அடையாளம் காட்டப்பட்டார்) . கொல்லப்பட்ட லஜபதிராய் பகத்சிங்கின் இயக்க உறுப்பினரல்ல. இன்னும் சொல்வதானால் அவர் தம் கடைசி காலங்களில் புரட்சியாளர்களை வெறுக்கத்துவங்கியிருந்தார் (பகத்சிங் மற்றும் சுகதேவை அவர் தன் பங்களாவுக்குளேயே விடவில்லை). புரட்சியாளர்கள் முற்றாக வெறுத்த மதச்சார்பை அவர் வளர்த்துக்கொண்டிருந்தார் (இதனால் அவருக்கு மோதிலால் நேருவுடனும் கருத்துவேறுபாடு தோன்றியிருந்தது).

இத்தகைய சூழலில் 1928 அக்டோபர் 30ல் சைமன் கமிஷன் லாகூர் வந்தது. அப்போது ஒரு மாபெரும் கூட்டம் அந்த அதிகாரிகளுக்கு கறுப்பு கொடி காட்டியது. அப்போது நடத்தப்பட்ட தடியடியில்தான் லாலா படுகாயமடைகிறார். நவம்பர் 19ல் அவர் மரணமடைய லாலாவின் மரணத்தை தங்கள் நாட்டின் மீதான தாக்குதலாக எடுத்துக்கொள்கிறார்கள் பகத்சிங்கும் அவரது சகாக்களும். அப்போதுதான் ஸ்காட்டை கொலைசெய்யும் முடிவுக்கு வருகிறார்கள். கிட்டத்தட்ட ஒருமாத கண்காணிப்புக்குப் பிறகு டிசம்பர் 17/ 1928 ல் அந்த திட்டம் நிறைவேறுகிறது. போலீஸ் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது ராஜகுருவும் பகத்சிங்கும் அவனை சுட்டுக்கொன்றார்கள் (ஜெயகோபால் வருகையை கண்காணித்து அறிவிக்கவும், ஆசாத் சுட்டவர்கள் பாதுகாப்பாக தப்பிப்போக உதவவும் அங்கே இருந்த மற்ற போராளிகள்). மறுநாள் லாகூர் நகரெங்கும் அந்த கொலையின் காரணங்களை விளக்கும் சுவரொட்டிகளும் துண்டு பிரசுரங்களும் விணியோகம் செய்யப்பட்டன. ஏதோ இளமை வேகத்திலும் பழியுணர்ச்சியிலும் அவர்கள் கொலைசெய்ததாக உள்ள கற்பிதங்களுக்கு முடிவு கட்டவே இந்த சம்பவத்தை நாம் குறிப்பிடவேண்டியிருக்கிறது. அவர் லாலாவின் மரணத்தை தங்களது எதிர் நிலைப்பாடு கொண்ட நபரின் கொலையாக பார்க்கவில்லை. அதை தம் தேசத்தின் மீதான தாக்குதலாக பார்த்தார். காந்தியைப்போல சொந்த மக்கள் சாகையில் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்துவிட்டு ஆக்கிரமித்தவன் வீட்டு எழவுக்கு மட்டும் கடும் எதிர்வினை செய்த அகிம்சாவாதியல்ல பகத்சிங்.

பகத்சிங் வெறும் விடுதலைப் போராளி மட்டுமல்ல. அவருக்கு விடுதலைக்குப் பின்னாலான இந்தியா பற்றியும் பெரிய கனவுகள் இருந்தது.

//வெள்ளையரின் ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் முதல் கட்டமே. இறுதிப்போராட்டம் சுரண்டலுக்கு எதிராக நடக்க வேண்டியுள்ளது.//

//சமூக பொருளாதார சுதந்திரமில்லாமல் வெறும் அரசியல் சுதந்திரம் ஒரு சிலர் பலரை சுரண்டும் சுதந்திரமாகவே இருக்கும்// (இதெல்லாம் பகத்சிங் தன் நண்பர்களுடன் விவாதித்தவை.)

வெறும் துப்பாக்கி மட்டுமே அவரது ஆயுதமல்ல. மக்களை சேர்த்துக்கொள்ளாத போராட்டம் வெற்றியடையாது என்பதை அவர் பலமுறை தம் நண்பர்களிடம் வலியுறுத்துகிறார். தொழிலாளர்களிடையே பணிபுரிவது, பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதுவது, சிலைடு மூலம் பிரச்சாரம் செய்வது மற்றும் துண்டு பிரசுரம் ஆகிய எல்லா வழிகளையும் அவர் பயன்படுத்தினார். இளைஞர்களிடையே அவரது மேடைப்பேச்சுக்கள் அப்போது மிகவும் புகழ்பெற்றவை. அவரது சட்ட ஞானமும் வாதத்திறமையும் எந்த ஒரு உலகத்தலைவருக்கும் சளைத்ததல்ல. அவர் சிறையில் இருந்தபோது அரசுக்கு எழுதிய கடிதங்களையும் நீதிமன்ற வாதங்களையும் படித்தால் அவர் எத்தகைய அறிவுஜீவி என்பது புரியும்.

அவரது தனிப்பட்ட வாழ்வும் சுபாவமும் ஏராளமான செய்திகளை நமக்கு கற்றுத் தருவதாகவே உள்ளது. அவர் ஐந்து மொழிகளில் பேசவும் எழுதவும் தெரிந்தவர். இளம் தோழர்களை ஒருங்கிணைப்பதில் அவரது ஆற்றல் மகத்தானது. அவரது தோழர் சிவவர்மா அவ்வளவாக உடல்வலு உள்ளவரல்ல. அவருக்கு தன்னால் இயக்கத்தின் நடவடிக்கைகளில் ஈடுபட இயலாதோ எனும் கவலை மேலோங்கியபோது பகத்சிங் அவரிடம் நடத்திய உரையாடல் சிவவர்மாவை மட்டுமல்ல நம் எல்லோரையும் கணக்கில் கொண்டு சொன்னதுபோலவே இருக்கும். அவர் தூக்கிலிடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னால் அவரை கடைசியாக சந்தித்த நண்பர்களிடம் புன்சிரிப்போடு சொன்னவை இதைதான்,

“உணர்ச்சி வசப்படும் நேரம் இன்னும் வரவில்லை பிரபாத். நான் இன்னும் சில நாட்களிலேயே இந்த உலகத்தை விட்டு போய்விடுவேன். ஆனால் நீண்ட பயணம் ஒன்று காத்திருக்கிறது. கடமை எனும் பெருஞ்சுமை உன்னை அழுத்திக்கொண்டிருந்தாலும், அந்த நெடும் பயணத்தில் நீ களைத்துப் போய்விடமாட்டாயென்றும், தோல்வியடைந்து உட்கார்ந்துவிட மாட்டாயென்றும் நான் நம்புகிறேன்”.

காந்தி பற்றிய கட்டுரையில் இவ்வளவு அதிகமாக பகத்சிங் பற்றிய தகவல் தேவையில்லைதான். ஆனால் காந்தி இல்லாமல் வேறு யாரைத்தான் சுதந்திரப்போராட்ட வீரர் என்று சொல்லுவீர்கள்? எனும் கேள்விகள் நம்மை எப்போதும் துரத்துகின்றன. போட்டிக்கு ஆளில்லாத மைதானத்தில் காந்தியை நிறுத்தி அவரே மாபெரும் வீரர் என கொண்டாடுவது போல இருக்கிறது நம் வரலாறு. 1950ல் உத்திரப் பிரதேச பாடநூல்கள் சந்திர சேகர ஆசத்தை ரத்த வெறி கொண்டவர், கொள்ளைக்காரர், நல்வாய்ப்பாக நாடு அவர்களது பாதையை தேர்ந்தெடுக்காது காந்திய வழியில் நின்றது என மாணவர்களுக்கு பாடம் நடத்தின. எழுதிய மூதேவியின் பெயர் ஏ.எல்.ஸ்ரீவாஸ்தவா, பிரிட்டிஷ் அரசால் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் என கருதப்பட்டவர். இதே போன்ற பிரச்சாரங்கள் பகத்சிங்கின் மற்ற தோழர்கள் மீது மகாராஷ்டிர அரசு பாடநூல்களில் இருந்தது. மற்ற இடங்களில் எப்படி என்பது பற்றிய செய்தி இல்லை. ஆனால் அவர் தீவிரவாத வழியில் போராடினார்கள் எனும் வாசகங்கள் எல்லா மாநில வரலாற்றிலும் இருக்கின்றன. அப்படியே பின்லேடன், முல்லா ஓமர் ஆகியோர் தீவிரவாதிகள் எனும் செய்தி அன்றாடம் அவர்களுக்கு கிடைக்கிறது. இந்த நிலையில் பகத்சிங் உள்ளிட்ட போராளிகளின் மீதான மதிப்பீடு மாணவர்களுக்கு எப்படியிருக்கும்? இதை சரிசெய்ய வேண்டுமாயின் மேற்சொன்ன பகத்சிங்கின் வரலாறு இன்னும் அதிகமாக எழுதப்படவேண்டும். அதனை வேறொரு சந்தர்பத்தில் பார்க்கலாம்.

இப்போது, காந்தி மக்களின் ஏகோபித்த ஆதரவு கொண்ட தலைவராகவும் புரட்சியாளர்கள் மக்கள் ஆதரவற்றவர்களாகவும் இருந்தார்களா என பார்க்கலாம். 1929 டிசம்பர் 23ல் வைஸ்ராய் சென்ற ரயில் ஒரு குண்டுவெடிப்பில் சிக்கியது. அதில் வைஸ்ராய் மயிரிழையில் தப்பினார். அதற்கு கடவுளுக்கு நன்றி சொன்னார் காந்தி, காங்கிரசில் அச்செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் தீர்மானம் அவ்ரால் கொண்டுவரப்பட்டது. அதனை நிறைவேற்ற அவர் தன் செல்வாக்கு முழுவதையும் பயன்படுத்தினார். இறுதியில் அந்த தீர்மானம் 1713 உறுப்பினர்களைக் கொண்ட அந்த அவையில் வெறும் 81 வாக்குகள் முன்னிலையில் வென்றது.

அந்த பலூனையும் உடைக்கிறார் சரளாதேவி சௌதாராணி, “ நான் உரையாடிய மிகப் பெரும்பாலானாவர்கள் மகாத்மா மீதான விசுவாசம் காரணமாக தங்கள் தனிப்பட்ட கருத்தை மறைத்துக்கொண்டு காந்தியால் முன்மொழியப்படும் தீர்மானத்தை ஆதரித்தார்கள்” என குறிப்பிடுக்கிறார் அவர். (பகவதி சரண் வோரா தலைமறைவாக இருந்தபோது எழுதப்பட்ட கடிதமொன்றில் உள்ள தகவல்- இக்கடிதம் காந்தியின் வெடிகுண்டின் வழிபாடு எனும் கட்டுரைக்கு மறுப்பாக எழுதப்பட்டது). காந்தியின் பல சென்டிமென்ட் பிட்டுகளுக்கு பிறகும் அவரது சீடர் பட்டாபி சீதாராமைய்யா சுபாஷிடம் தோற்ற கதை எல்லோருக்கும் தெரிந்ததே. காந்தி தன்னிச்சையாக ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியதை நேருவே ஆதரிக்கவில்லை.

சாண்டர்சை கொன்ற பிறகு பல காங்கிரஸ்காரர்கள் பகத்சிங்கை ஆதரித்திருக்கிறார்கள். அவர்களது உதவியாலேயே போராளிகள் டெல்லிக்கு தப்பிச்செல்கிறார்கள். டெல்லி பாராளுமன்ற தாக்குதலுக்காக ஒரு காங்கிரஸ் எம்.பிதான் அவர்களுக்கு பாஸ் வாங்கித் தந்திருக்கிறார்.  சுகதேவ், ராஜகுரு, பகத்சிங் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட பிறகு நடந்த லாகூர் காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்த தலைவர்களை எதிர்த்து பெரிய போராட்டங்கள் அங்கு நடந்திருக்கின்றன. பகத்சிங்கை கொன்றவரே திருப்பிப்போ எனும் முழக்கங்கள் ஒலித்திருக்கின்றன. உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த ஜஜீந்திரநாத் தாசின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஏழு லட்சம்.

இந்திய விடுதலைக்குப் பிறகும் இவ்வளவு மெனக்கெட்டு ஏன் காந்தியை உயர்த்திக்காட்ட வேண்டும் மற்றவர்களை ஏன் இருட்டடிப்பு செய்யவேண்டும் எனும் கேள்வி கடைசியாக எழலாம். அதற்கான பதில் அதிகாரவர்கத்துக்கு இன்னும் அவரது தேவை இருக்கிறது என்பதுதான்.

காந்தியின் மற்ற சிந்தனைகள் அவரது காலத்துக்கே பொருந்தாதவை. அவரது மண் சிகிச்சை மற்றும் நீர் சிகிச்சை ஆகியவற்றை இந்த காலத்தில் கொஞ்சநஞ்ச மருத்துவ அறிவுடைய பாமரனே ஏற்க மாட்டான். மனிதன் வாழ பழங்களும் கொட்டைகளும் போதும் எனும் கருத்தை எந்த உணவியல் நிபுணரும் ஏற்கமாட்டார்கள் (சூரிய ஒளியில் பக்குவமான பழங்களையும் கொட்டைகளையும் தவிர மனிதனுடைய உணவில் வேறு எதுவும் இருக்கக்கூடாது- ச.சோதனை பக்:325). இந்திரியத்தை கட்டுப்படுத்தி பிரம்மச்சாரியாக வாழ்வதுதான் மனிதத்தன்மை எனும் வாதத்தை நவீன உளவியல் மட்டுமல்ல பழைய உளவியலே ஒத்துக்கொள்ளாது (பிரம்மச்சர்யம் இல்லாத வாழ்க்கை சாரமற்றதாகவும் மிருகத்தனமானதாகவும் எனக்கு தோன்றுகிறது- ச.சோதனை, பக்:381)

அவரது கிராமச் சார்பு பொருளாதாரத்தை இன்று வற்புறுத்தினால் காந்தி கொடும்பாவியை தன் சகாக்களுடன் கொளுத்தும் முதல் ஆள் மன்மோகனாகத்தான் இருப்பார்.சாராயமா காந்தியா எனும் நிலை வந்தால் தமிழக இன்னாள் முன்னாள் முதல்வர்கள் எதை தெரிவு செய்வார்கள் என உங்களுக்கே தெரியும்!!  ஆக சத்யாகிரகம், அகிம்சாவாதம் ஆகியவற்றைத் தவிர அவரது எல்லா சிந்தனையும் இந்தியாவில் காலாவதியானது என்பதை அவரது ஆதரவாளர்களே ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.

அகிம்சை என்பதை வரையறை துன்பங்களுக்கு தானாகவே கீழ்படிதல் என்பதாகும். அகிம்சையிலிருந்து மயிரளவு பிறழ்ந்து வெற்றி பெறுவதைவிட, ஊடறுபடாத அகிம்சையோடு படுதோல்வியடைவதையே நான் வரவேற்பேன் என பேட்டியளித்திருக்கிறார் காந்தி. இதை வாசிக்கையில் இந்திய விடுதலையைக்காட்டிலும் காந்தி அகிம்சா தர்மத்தில் பிடிப்போடு இருந்ததாக கருதவேண்டியிருக்கும். ஆனால் இந்த தருமத்தை அவர் இந்திய மக்கள் மீது மட்டும்தான் வலியுறுத்தினார்.

போர்களின்போதான அவரது பிரிட்டன் விசுவாசத்தை பார்த்தால் அவரது கடைசி ஆயுதமும் கேள்விக்குள்ளாகும்.

பிரிட்டிஷ் பிரஜை எனும் வகையில் நான் உரிமைகளை கோரினால், அந்த பிரஜை எனும் வகையில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை பாதுகாக்க போரில் ஈடுபடவேண்டியது என் கடமை- 1899ல் நடந்த போயர் யுத்தத்தில் தமது பங்கு பற்றி காந்தி (ச.சோதனை, பக் 258)

இங்கிலாந்தில் வசித்துவரும் இந்தியர், யுத்தத்திற்கு தங்களாலான உதவியை செய்ய வேண்டும் என நான் கருதினேன். ஆங்கில மாணவர்கள் ரணுவத்தில் சேவை செய்ய தொண்டர்களாக முன்வந்திருக்கிறார்கள். அவ்வளவாவது இந்தியரும் செய்ய வேண்டும்- 1914ல் பிரிட்டனில் இருந்தபோது சொன்னவை (ச.சோதனை, பக்:416,417) (போரில் பங்கேற்க வைப்பதுதான் அவர் நோக்கம்.. சேவை என்பது சமரசம் மட்டுமே- இந்த அழுத்தம் நம்முடையது)

படைக்கு ஆள் திரட்டுவது சம்பந்தமான தீர்மானத்தை நான் ஆதரிக்க வேண்டுமென வைசிராய் விரும்பினார். நான் ஹிந்துஸ்தானியில் பேச அனுமதிக்கவேண்டுமென அவரிடம் கேட்டேன். என் கோரிக்கைக்கு அவர் அனுமதியளித்தார். ஆனால் நான் ஆங்கிலத்திலும் பேச வேண்டும் என அவர் யோசனை கூறினார். “என் பொறுப்பை பூரணமாக உணர்ந்தே நான் இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறேன்”’ என்ற ஒரே வாக்கியம்தான் நான் பேசியது. ஹிந்துஸ்தானியில் நான் பேசியதை பலரும் பாராட்டினார்கள். இத்தகைய கூட்டத்தில் ஹிந்துஸ்தானியில் பேசியது அதுவே முதல் முறை என அவர்கள் சொன்னார்கள். (ச.சோதனை: பக்:532. ஆண்டு குறிப்பிடப்படவில்லை..)  அந்த முடிவுக்கு எந்த காரணத்தையும் காந்தி குறிப்பிடவில்லை. ஹிந்துஸ்தானியில் பேசியதை வைத்து அதை திசை திருப்புகிறார். படைக்கு ஆள் திரட்ட தாம் மேற்கொண்ட பெரிய அளவிலான பிரச்சாரத்தையும் துவக்கத்தில் அதற்கு கிடைத்த பெரிய அளவிலான எதிர்ப்பையும் அவர் அடுத்தடுத்த பக்கங்களில் குறிப்பிடுகிறார் காந்தி.

கடைசி யுத்த ஆதரவு காலத்தில் அவர் சத்யாகிரகத்தில் எல்லா ரிசர்ச் அண்டு டெவலப்மென்டையும் முடித்திருந்தார். ஆகவே அவர் உண்மையான அகிம்சாவாதியெனில் பிரிட்டனுக்கு “துன்பத்தை வலிந்து ஏற்றுக்கொள்ளுங்கள்” என ஆலோசனை சொல்லியிருக்கவேண்டும். வெள்ளைக்காரனுக்கு பிரச்சனை என்றால் அவன் துப்பாக்கி தூக்கலாம், அதற்கு நாம் உதவவேண்டும். இந்தியனுக்கு விடுதலை வேண்டுமானால் மட்டும் எதிரியின் கல்மனம் கரையும்வரை அவன் தாக்குதலுக்கு  நாம் முதுகையும் அதற்கு கீழும் காட்டிக்கொண்டிருக்க வேண்டுமா?

உலகின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்களிலேயே அகிம்சாவாதம்தான் எதிரிக்கு மிக அதிகபட்ச பாதுகாப்பை வழங்கியது. அதனால்தான் வெள்ளையனின் இடத்தை நிரப்பி அவனைப்போலவே இந்தியாவின் செல்வத்தை கடல்கடந்து கொண்டுசெல்லும் சுதேசி ஆட்சியாளர்கள் அவரை கொண்டாடுகிறார்கள். காந்தியின் தேசம் எனும் மறைமுக உருவகம் மக்களை ஒடுக்குமுறை எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும் கூட்டமாக வைத்திருக்கிறது. எப்படி பிராமணன் அசைவம் சாப்பிடக்கூடாது எனும் விதி அவனது பிறப்பினால் எழுதப்படுகிறதோ அப்படியேதான் இந்தியனுக்கு அகிம்சையும் மறைமுகமாக ஒரு விதியாக போதிக்கப்படுகிறது, கொஞ்சம் தீவிரத்தன்மை அடையும் போராட்டங்களின் போதெல்லாம் காந்தி பிறந்த நாட்டில் இப்படியா எனும் அங்கலாய்ப்புக்கள் கேட்கின்றன. போலீஸ் துப்பாக்கியால் சுட்டு எத்தனைபேர் செத்தாலும் “காந்தி பிறந்த நாட்டில்” எனும் சுலோகம் கேட்காது., காந்திதான் அதற்கெதிராக எதையும் சொன்னதில்லையே!. அதற்காகத்தான் இந்திய விடுதலையின் ஒட்டுமொத்த பொறுப்பும் காந்திக்கே உரியது என புகழ்பாடல்கள் இன்றும் தீவிரமாக தொடர்கிறது. அப்போதுதான் அகிம்சாவாதம் வெற்றிகரமானது என மக்கள் நம்புவார்கள்.

நிறைவாக, காந்திய வழிபாடு ஒரு மதமாக இருக்கும் நாட்டில் இந்த விவாதம் முடிவில்லாது போய்க்கொண்டே இருக்கும். காந்தி ஒரு அவதாரம் என்றோ, அகிம்சையே சர்வரோக நிவாரணி என்றோ அல்லது சப்ளா கட்டையே அதிசிறந்த ஆயுதம் என்றோ நம்புவோருக்கு இனியும் சொல்ல நம்மிடம் செய்தி ஏதுமில்லை. இந்த சூழலில் நாம் கேட்டுக்கொள்ள மட்டும் ஒரு செய்தியிருக்கிறது, காந்தி பக்தர்கள் துணிச்சலோடும் ஏனையவர்கள் ஆர்வதோடும் கவனிக்கப்படாத விடுதலைப் போராட்ட வீர்ர்களின் தேடிப்படியுங்கள். அதன் பிறகு ஒரு முடிவுக்கு வரலாம், நாட்டுக்கு அதிகம் சொல்லப்படவேண்டியது, சந்தேகத்தின் பலனை சாதகமாக்கி விடுதலைப் போராட்ட தியாகியாய் இருக்கும் காந்தியையா அல்லது சந்தேகத்திற்கிடமின்றி தியாகியாய் இருக்கும் பகத்சிங்கையா?

சில பின்னிணைப்புக்கள்:

ஆயுதங்களை உபயோகிக்க விரும்பினால் இதோ ஒரு பொன்னான வாய்ப்பு. அரசாங்கத்துக்கு கஷ்டம் ஏற்பட்டிருக்கும் இச்சமயத்தில் மத்தியதர வர்கம் வலிய வந்து அதற்கு உதவி செய்வார்களாயின், அவநம்பிக்கை மறைந்துவிடும்; மக்கள் ஆயுதங்கள் வைத்துக்கொள்ள இருக்கும் தடையும் ரத்தாகிவிடும்- பிரிட்டனின் ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் பணியில் இருந்தபோது காந்தி தந்த பிரச்சாரத்தில் இருந்து.. சத்திய சோதனை பக்: 537.

எனக்கு இருப்பதோ நான் கட்டியிருக்கும் இந்த புடவை ஒன்றுதான். இதை எப்படி துவைப்பது? மகாத்மாவிடம் எனக்கு இன்னொரு புடவை தரச்சொல்லுங்கள். அப்போது தினமும் நான் குளித்து துணிகளை சுத்தமாக வைத்திருப்பதாக வாக்குறுதி அளிக்க முடியும்.- பிகார் கிராம்மொன்றில் காந்தி சுகாதாரம் போதிக்க சென்றபோது கஸ்தூரிபாவிடம் ஒரு கிராமத்துப்பெண் சொன்னது. (ச.சோதனை, பக்:507)

நாங்கள் கட்டிய ஆகாயக் கோட்டைகளில் ஒன்று, கிராம சுகாதாரத்துடன் சம்பராணில் பசுப் பாதுகாப்பு வேலையையும் கவனிப்பது என்பது- ச.சோதனை பக்:511.

நான் உண்ணாவிரதம் இருக்க முற்பட்டது ஆலை முதலாளிகள் செய்த தவறுக்காக அன்று. தொழிலாளர்கள் தங்கள் சத்தியத்தில் இருந்து தவறி விட்டதற்காகவே உண்ணாவிரதமிருந்தேன்- ச.சோதனை பக்:518

வேண்டாம் என்று நான் சொல்லியும் கேட்காமல் பம்பாய் வர்தகர்கள் எங்களுக்கு அவசியத்திற்கும் அதிகமாக பணம் அனுப்பினார்கள்- சாம்பாரண் போராட்டத்திற்கான நிதி ஆதாரம் பற்றி காந்தி (ச.சோதனை பக்:524)

நம்மிடம் நிதி இல்லை என்று உங்களுக்குத் தெரியும். பொது ஜனங்களிடம் பிச்சை எடுத்து, அதைக்கொண்டு வேலைநிறுத்தத்தை தொடர்ந்து நடத்திக்கொள்ள நாம் விரும்பவில்லை- அகமதாபாத் வேலைநிறுத்த போராட்டத்தின் போது காந்தி (ச.சோதனை பக் 516)

ஆங்கிலேயரிடம் ஒவ்வொரு இந்தியருக்கும் விசுவாசத்தை உண்டுபண்ண நான் விரும்புகிறேன் (காந்தி வைசிராக்கு எழுதிய கடிதத்தில் உள்ள கடைசி வாசகம்). படைக்கு ஆள் திரட்டும் வேலையில் என் உடலை அனேகமாக நான் நாசப்படுத்திக்கொண்டேன் (மரணத்தின் வாயிலருகில் எனும் அத்தியாயத்தில்) ( (ச,சோதனை பக்:540)

நாம் தொழிலாளர்களை (விடுதலைப் போராட்டத்தினுள்) திருப்பிவிடக்கூடாது. ஆலைத் தொழிலாளர்களை அரசியல் ரீதியாக பயன்படுத்துவது அபாயகரமானது- அகமதாபாத் போராட்டத்துக்குப் பிறகு காந்தி; தி டைம்ஸ் மே, 1921. (பகத்சிங் எழுதிய அறிக்கையொன்றிலிருந்து.. இவ்வறிக்கை கல்கத்தாவை சேர்ந்த பாதுகாப்புக் கைதி திருமதி விமலா பிரதீபா தேவியின் வீட்டை சோதனையிட்டபோது 1931 அக் 3ல் கிடைத்தது)

செவிகளுக்கு கேட்பதற்காகவே குண்டு வீசப்படுகிறதேயன்றி எவருடைய உயிரையும் பறிப்பதற்காக அல்ல- பகத்சிங் மற்றும் தோழர்கள் பாராளுமன்றத்தில் வீசிய பிரசுரத்தில் இருந்து..

சோசலிச தத்துவம், சுயசரிதை, இந்தியாவில் புரட்சி இயக்க வரலாறு, மரணத்தின் நுழைவாயில்- பகத்சிங் எழுதிய நூல்கள். கையெழுத்துப் பிரதிகளாகவே அழிக்கப்பட்டன.

எனக்கும் வாழ்க்கையின் கவர்ச்சிகளை அனுபவிக்கவேண்டும் எனும் ஆசை நிரம்பவே உண்டு. ஆயினும் தேவைப்படும் நேரத்தில் அனைத்தையும் என்னால் துறந்துவிடவும் முடியும்- 1929 ஏப்ரல் 5 அன்று பகத்சிங் சுகதேவுக்கு எழுதிய கடிதத்திலிருந்து.

எனது உயிர் அந்த அளவுக்கு அருமையானது அல்ல. எனது கோட்பாடுகளை விலையாக கொடுத்து வாங்குமளவுக்கு அது ஒன்றும் அத்தனை மதிப்புடையது அல்ல- 1930 அக்டோபர் 4ல் பகத்சிங் அவரது தந்தைக்கு எழுதிய கடிதம் (சாண்டர்ஸ் கொலைக்கும் என் மகனுக்கும் தொடர்பில்லை என அவரது தந்தை தீர்பாயத்துக்கு கடிதம் எழுதியமைக்கு பகத்சிங்கின் பதிலில் இருந்து)

இர்வின் பிரபுவின் இடத்தில் சர்.தேஜ் பகதூர் சாப்ரு வைக்கப்படுவாராயின், ஒரு விவசாயியைப் பொறுத்தவரை அதில் என்ன வேறுபாடு இருக்கும்? (விமலா பிரதீபா தேவியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட மேற்குறிப்பிட்ட அறிக்கையில் இருந்து..)

மனித குலத்திற்க்கு நான் செய்யவேண்டி சில குறிக்கோள்களை நான் பேணிவளர்த்தேன். அதில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. ஒருவேளை நான் உயிரோடிருந்தால் அவற்றை நிறைவேற்றுவதற்குண்டான வாய்ப்பு எனக்கு கிடைக்கலாம். நான் சாகக்கூடாது என்ற எண்ணம் எப்போதேனும் என் மனதில் உண்டாகுமானால் அது இந்த நோக்கத்தில் இருந்து மட்டுமே உண்டாகும்- 1931 மர்ச் 22. பகத்சிங்கின் கடைசி கடிதத்தில் இருந்து.

காந்தி- ஆதரவும் எதிர்ப்பும் அல்லது பக்தியும் புரிதலும். 1

(காந்தி : வாழும்போதும் வாழ்க்கைக்குப் பிறகும்.,  கட்டுரையின் தொடர்ச்சி)

காந்தி பற்றிய முந்தைய பதிவுக்கான எதிர்வினைகள் நான் எதிர்பார்த்ததே. ஆனால் அதற்கு இரண்டாவது பதிவு எழுதவேண்டியிருக்கும் என்பது எதிர்பாராதது. இடது, வலது மற்றும் நடு சென்டரில் நிற்போர் என எல்லா தரப்பின் விமர்சனங்களும் வெவ்வேறாக இருப்பினும் அவை எல்லாமே முந்தைய பதிவு போதுமானதாக இல்லை என்பதை மறைமுகமாக உணர்த்தின.

முந்தைய கட்டுரைக்கு எதிர்மறை விமர்சனங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வந்திருந்தாலும் அதற்கு ஆதரவு எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே வந்திருந்தது. எதிர்குரல்களில் பல, எங்கே “ஆதாரத்தை காட்டு பார்க்கலாம்” எனும் தொணியில் இருந்ததை நான் வெகுவாகவே ரசித்தேன். காந்தி ஒரு மகாத்மா, அவர்தான் விடுதலை வாங்கித்தந்தார் எனும் பழமொழிகளை ஆதாரம் கேட்காமல் நம்புபவர்களை ஆதாரம் கொடு என கேட்கவைப்பது எவ்வளவு சிரமமான பணி? அதை ஒரு பதிவின் வாயிலாக சுலபமாக செய்வது எத்தனை மகிழ்ச்சிக்குரியது?

காந்தி நல்லவரே எனும் அணியில் இருந்து வந்த பின்னூட்டங்களை பொதுவில் மூன்று வகையாக பிரிக்கலாம்,

  1. சொன்னவையெல்லாம் ஆதாரமற்றவை எனும் வாதம் (காழ்ப்புணர்ச்சி, விளம்பர நோக்கம் ஆகியனவும் இதில் அடங்கும்)
  2. அவர் சொன்னவற்றை வெட்டி, ஒட்டி அர்த்தத்தை மாற்றுகிறீர்கள் என்பது இரண்டாவது வாதம்.
  3. காந்தி வெளிப்படையாக வாழ்ந்தார், எதையும் மறைத்துவைக்கவில்லை. ஆகவே அவர் மகாத்மாவே எனும் வக்காலத்து.

உண்மையில் பலரையும் கோபமுற வைத்திருப்பது காந்தியின் தனிப்பட்ட வாழ்வு பற்றிய விமர்சனங்கள்தான். அது காந்தியின் புனித பிம்பத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. காந்தியின் புனித பிம்பத்தை வைத்துதான் அவரது அரசியல் நிலைப்பாடுகள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. காந்தியின் புனிதம் கெட்டுப்போனால் அவரது அரசியல் நிலைப்பாடு காலாவதியாகும். ஆகவே எந்த அரசியல் நிலைப்பாட்டை மக்களிடம் சேதாரமில்லாமல் கொண்டு சேர்க்க காந்தியின் எந்த பரிசுத்த உருவம் அவர்களுக்கு தேவைப்பதோ அதே நிலைப்பாட்டை அம்பலப்படுத்த எங்களுக்கு காந்தியின் புனித முகத்தையும் சேர்த்து விமர்சனம் செய்யவேண்டிய அவசியம் வருகிறது அவ்வளவுதான்.

ஆகவேதான் காந்தியின் தனிப்பட்ட வாழ்வு குறித்த தகவல்கள் அவர் மீது பேரபிமானம் கொண்ட எழுத்தாளர்களிடம் இருந்து மட்டும் எடுத்தாளப்பட்டது. (சாம்பிளுக்கு இந்த இணைப்பை சொடுக்கவும்http://thoughtsintamil.blogspot.com/2008/08/blog-post_29.html). பெரியார், சட்டபூர்வமாகவும் வெளிப்படையாகவும் செய்துகொண்ட இரண்டாம் திருமணம் இன்றளவும் விமர்சிக்கப்படுகிறது. அதற்கான பதிலை பெரியாரிஸ்டுகள் இன்றுவரை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தலைவர்களின் தனிப்பட்ட முடிவுகள் பற்றி யார் வேண்டுமானாலும் பதில் சொல்ல முடியும், முடிவு நியாயமானதாக இருக்கும்பட்சத்தில். வெறுமனே கோபம் பொத்துக்கொண்டு வந்தால் அங்கே பதிலுக்கு வழியில்லாத நிலை இருக்கிறது என அர்த்தம். இதற்குமேல் காந்தியின் தனிப்பட்ட வாழ்வு பற்றி விளக்க ஏதுமில்லை.

ஒரு வாதத்துக்காக “வெட்டி ஒட்டுதல், அர்த்தத்தை மாற்றி சொல்லுதல்” ஆகியவற்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டாலும், காந்தி ஆதரவாளர்கள் சில கேள்விகளுக்கு பதிலுரைக்க வேண்டியிருக்கும்.

  1. பகத்சிங் தூக்கு தொடர்பாக இர்வினுக்கும் காந்திக்கும்       இடையேயான  கடித உரையாடல்கள் என்ன சொல்கின்றன? எங்கள் கேள்வி அவ்வளவுதான். மற்றபடி அவர் பகத்சிங்கின் தூக்குதண்டனையை விரும்பவில்லை எனும் கருத்தோ அவர் பகத்சிங்கின் விடுதலைக்கு கடிதம் எழுதினார் என்பதோ சொத்தை வாதங்கள். இந்த ஸ்டைல் ஏமாற்றுவேலைகளை கருணாநிதி புண்ணியத்தில் நாம் பல முறை பார்த்தாகிவிட்டது.
  2. காந்தி தன்னிச்சையாக முடிவெடுப்பவரா இல்லையா? எந்த விவாதமும் இல்லாமல் ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்டது மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் காங்.தலைவராக தெரிவு செய்யப்பட்டதை எதிர்த்தது ஜனநாயக விரோத செயலா இல்லையா? உள்ளுணர்வை கேட்டு முடிவெடுத்தாலும் சரி மனைவி மச்சினனை (மட்டும்) கேட்டு முடிவெடுத்தாலும் சரி, அது ஜனநாயக விரோதம்தான்.
  3. காந்தி ஆன்ம பரிசோதனை செய்து கொண்டதை அவரது ஆதரவாளர்களே ஒத்துக்கொள்வார்கள் (மனுவின் பெயர் மட்டும் மறைக்கப்படும்). இதை நியாயம் என்றோ பிரம்மச்சர்யத்தில் இருக்கும் பிடிவாதமான பிடிப்பு என்றோ எந்த அடிப்படையில் வரையறுப்பீர்கள்? இதில் மகாத்மாத்தனம் எங்கே இருக்கிறது? முன்னாள் இத்தாலி பிரதமர் பெர்லூஸ்கோனியும் இதே பரிசோதனையைத்தான் அடிக்கடி செய்கிறார். துரதிருஷ்டவசமாக அவரால் அவரது பிரம்மச்சர்யத்தை ஒருமுறைகூட நிரூபிக்கமுடியாமல் போய்விடுகிறது.

கட்டுரைக்கு திரும்புவோம், பொதுவில் தலைவர்களை இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கலாம். தனது கொள்கைகளால் மட்டுமே அறியப்படுகிற தலைவர்கள் ஒருவகை. இதற்கு சரியான உதாரணம் பெரியார். அவரது சாதியாலோ அல்லது அவரது கட்சியாலோ அவர் அறியப்பட்டிருப்பாரேயானால் பெரியார் இன்றைக்கு கரைந்துபோயிருப்பார். அவரை நேரில் பார்த்திராத ஒரு தலைமுறையிலும் அவர் செல்வாக்குடையவராக இருக்க அவரது கொள்கைகளே காரணம். நேரெதிராக வேறொரு தலைவர்கள் குழாமுக்கு அந்த சிரமம் கிடையாது. அவர்கள் ஒரு குழுவின் குறியீடாக மட்டும் அறியப்படுவார்கள்.

மிக பரிச்சயமான ஒரு உதாரணம் பசும்பொன் முத்துராமலிங்கம். அவரைக் கொண்டாட கொள்கை கோட்பாடு என ஒரு வெண்டைக்காயும் தேவையில்லை, ஒரே சாதிக்காரர்களாக இருந்தால் மட்டும் போதும். ஏறத்தாழ காந்தியும் இந்த பிரிவை சேர்ந்தவரே. ஆனால் அவர் ஒரு குறியீடாக இருக்கும் குழுவாக இந்தியா எனும் நாடு மாற்றப்பட்டிருக்கிறது. தேசியக் கொடியைப்போல தேசிய கீதத்தைப்போல காந்தியின் உருவம் ஒரு தேசிய அடையாளமாக காட்டப்பட்டிருக்கிறது. ஒரு தேசியக்கொடியின் மீது பக்தி கொள்ள எந்த புரிதலும் அவசியமில்லை, என் நாடு, எங்கள் கொடி எனும் ஒரு பந்தம் போதுமானது (துரதிருஷ்டவசமாக நம் தேசிய கீதத்துக்கு அந்த கொடுப்பினை இல்லை.. அப்பாடல் 1911 ல் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியா வந்தபோது அவரை வாழ்த்தி பாடப்பட்டது).

இந்தியாவின் விடுதலை எனும் வார்த்தை காந்தி எனும் வார்த்தையோடு பிணைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள் சுற்றத்தில் இருக்கும் மிகப்பலர் காந்தி எனும் ஒற்றை நபரால் மட்டுமே இந்திய விடுதலை சாத்தியமானதாகவும் முழு தேசமும் அவர் பின்னால் நின்றதாகவும் நம்பிக்கொண்டிருப்பார்கள். விடுதலை எனும் சம்பவத்தை காந்தியின் ஊடாக மட்டும் பார்த்து பழகிய இரண்டு தலைமுறையிடம் காந்தியை பற்றி புரிதலை உண்டாக்குவது சிரமமானது. ஆனால் நமக்கு வேறுவழியில்லை, காந்தி ஆக்கிரமித்திருக்கும் இடத்தை காலிசெய்தாலன்றி நாட்டு விடுதலைக்கு தீரத்துடனும் சமரசமின்றியும் போராடிய வீர்ர்களின் வரலாற்றை நாம் பரப்புரை செய்ய இயலாது.

தேச விடுதலைக்கு போராடியதில் அவரை விஞ்சிய நபர்கள் யாருமே இல்லையா? எனும் கேள்வியோடு இந்த விவாதத்தை துவங்குவது சரியாக இருக்கும் என கருதுகிறேன். காந்தியின் வார்த்தைகளின்படியே பார்த்தாலும் அவர் 1930 வரை இந்திய விடுதலையை கோரியிருக்கவில்லை. அவர் தலைமையிலான காங்கிரஸ் 1930ல் கூட குடியேற்ற (டொமினியன்) அந்தஸ்தைத்தான் வலியுறுத்தியது (12 மாதங்களுக்குள் அது கிடைக்காவிட்டால் பூரண சுயராஜ்யத்துக்காக போராட வேண்டியிருக்கும் என அறிவித்து விடுதலைப்போராட்டத்தை பகடி செய்தது காங்கிரஸ்.) சரியாக சொல்வதானால் 1942ல் துவங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு முன்னால் முழுமையான விடுதலை எனும் கோரிக்கையை காந்தி முன்னிலைப்படுத்தியதில்லை.

இப்போது நான் இந்தியாவின் விடுதலையைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கவில்லை. அது கட்டாயம் வரும். ஆனால் போரில் (இரண்டாம் உலகப்போர்) இங்கிலாந்தும் பிரான்சும் வீழ்ந்துவிட்டால் என்னாவது? என்றார் காந்தி 1939ல் (ஹரிஜன் செப் 9/1930). இன்னும் சரியாக வரலாற்றை கவனித்தால் 1945ல் கூட காந்தியும் காங்கிரசும் அந்த கோரிக்கையில் உறுதியாக இல்லை என்பது புலனாகும். மகாத்மா முடிவு செய்யும்வரை எந்த இயக்கமும் முடிவு செய்யக்கூடாது. எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. இறுதியாக அவர் வேறுவிதமாக முடிவு செய்யலாம். ஒரு பெரிய அனுமதி பெறாத தவறுக்கு நீங்கள் பொறுப்பாளி ஆவீர்கள். விழிப்போடு இருங்கள் ஆனால் எவ்விதத்திலும் செயல்படாதீர்கள்- 1942 ஆகஸ்ட் 7,8 ல் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தயாரிக்கப்பட்ட சுற்றறிக்கை (ஆனால் தொண்டர்களுக்கு அனுப்பப்படவில்லை). இது 1943 ஜீலை 15ல் காந்தியால் மேற்கோள் காட்டப்பட்டது.

1942 ஆகஸ்ட் 9ல் காந்தி (மற்றும் காங்.தலைகள்) கைது செய்யப்பட்டார், அதன் பிறகு மக்கள் போராட்டம் தீவிரமாக நடந்தது. 1944ல் காந்தி சிறையில் இருந்து வெளியே வந்த போதும் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தொடரவில்லை. ஆகஸ்ட் தீர்மானம் தானாகவே ரத்தாகிவிட்டது என அறிவித்தார். 1944 ஆம் ஆண்டில் 1942 க்கு திரும்பிச்செல்ல இயலாது என அதற்கு விளக்கமும் அளித்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியாலோ காந்தியாலோ எந்த இயக்கமும் அதிகாரபூர்வமாக துவங்கப்படவில்லை- நேரு, படேல் மற்றும் ந.பி.பந்த் ஆகியோரால் 1945 செப்டம்பர் 21ல் வெளியிடப்பட்ட காங்கிரசின் அதிகாரபூர்வ அறிக்கை.

ஆக, காங்கிரசின் வரலாற்றுப்படி அவர்கள் இந்திய விடுதலைக்கு போராடியது ஐந்து ஆண்டுகாலம்தான். நிஜமான வரலாற்றுப்படி அது அவர்களுக்கு ஒரு தவிர்க்கவியலாத நிர்பந்தம், அல்லது விடுதலைக்கு பிந்தைய புத்திசாலித்தனமான வரலாற்று பிற்சேர்க்கை. மக்களிடம் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு வரும் அழுத்தத்தை குறைக்கும் ஒரு வால்வைப் போலத்தான் காங்கிரசும் காந்தியும் செயல்பட்டிருக்கிறார்கள். இனியும் பிரிட்டன் ஆதிக்கத்தை அனுமதிக்க முடியாது என மக்கள் முடிவெடுத்தார்கள், காந்தி (காங்கிரஸ்) அந்த முடிவை வேறுவழியில்லாமல் பின்பற்ற வேண்டியதாயிற்று. இந்த சூழல்தான், பிற்பாடு தேசமே காந்தியின் பின்னால் நின்றதாக காட்டப்பட்டது. காந்தியை பின்பற்றியவர்கள் மட்டுமே சுதந்திர போராட்ட வீர்ர்களாக பெருமளவு முன்னிலைப்படுத்தப்பட்டார்கள். ஏனெனில் மற்றவர்கள் முழுமையாக அறிமுகம் செய்யப்பட்டால் காந்தியின் தலையில் உள்ள கிரீடம் அவருக்கு உரியதல்ல என்பது தெரிந்துபோகும்.

அஸ்ரத் மகல், சந்திரசேகர ஆசாத், ஜஜீந்திர நாத் தாஸ், பி.கே.தத், பகவதி சரண் வோரா, மாகாவீர் சிங் இந்த பெயர்களில் நமக்கு யார் யாரெல்லாம் பரிச்சயம்? இந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேசன், அனுசீலன் சமிதி, கதார் கட்சி, நவ்ஜவான் பாரத் சபா, பப்பார் அகாலிகள், யுகாந்தர் குழு, கத்தார் இயக்கம், சிட்டகாங் போராளிகள் இயக்கம், இந்துஸ்தான் ஜனநாயக சங்கம்., இந்த வார்த்தைகள் எல்லாம் எத்தனை பேருக்கு அறிமுகம்?  காந்தி ஏன் அரை வேட்டியில் இருக்கிறார் என்பதும் ஏன் ஆட்டுப்பால் மட்டும் குடித்தார் என்பதும் வரலாறாக இருக்கும் நாட்டில் விடுதலைக்காக தங்கள் உயிரையும் உடமைகளையும் தொலைத்த போராளிகளும் இயக்கத்தவர்களும் மட்டும் இருட்டடிப்பு செய்யப்படுவதன் காரணம் என்ன?

இதற்கான காரணங்களை பிறகு பார்க்கலாம். அதை புரிந்துகொள்ள முதலில் பகத் சிங்குடன் காந்தியை கொஞ்சமாக ஒப்பிட்டு பார்ப்பது பேருதவியாக இருக்கும்.

மிஞ்சிப்போனால் நமக்கு பகத்சிங் பற்றி தரப்பட்ட செய்திகள் என்னென்ன? அவர் பாராளுமன்றத்தின் மீது குண்டு வீசியவர், லாலா லஜபதிராயை கொன்ற பிரிட்டிஷ் அதிகாரி சாண்டர்சை கொன்றவர் அவ்வளவுதான். இருபத்து மூன்றாண்டுகள் மட்டும் இவ்வுலகில் வாழ்ந்த அவர், சிறையில் இருந்த சில மாதங்களில் மட்டும் 151 புத்தகங்களை வாசித்து ஆறு சிறு நூல்களை எழுதிய சிந்தனாவாதி என்பது எத்தனை பேருக்கு தெரியும்? சிறை என்றால் வெள்ளைக்காரர்களின் செல்லப்பிள்ளைகளுக்கு தரப்பட்ட சகல சௌபாக்கியங்களுடன் கூடிய சிறையல்ல. மிக மோசமான சித்திரவதைகளையும் வசதிக் குறைபாடுகளையும் கொண்ட சிறைகள் அவை, அங்கே தன் இரண்டு சக போராளிகளை உண்ணாவிரதத்தில் பலிகொடுத்த உளவியல் அழுத்தத்தின் போதும் அவர் படித்த எழுதிய நூல்கள் அவை (அப்போதைய போராளிகளில் சிறையில் மிக அதிகமாக அடி உதை வாங்கியவர்கள் பகத்சிங், ஜெயதேவ் கபூர், மகாவீர் சிங், டாக்டர் கயா பிரசாத் ஆகியோரே. அதிலும் பகத்சிங்கே முன்னணியில் இருந்திருக்கிறார்.. ஏறத்தாழ விசாரணையின் போது இது தினசரி நிகழ்வு. என தம் நூலில் குறிப்பிடுகிறார் சிவ வர்மா).

இப்போது உண்ணாவிரதம் இருப்பவர்கள் பலரும் தவறாமல் சொல்லும் வாசகம் “நாங்கள் காந்தீய வழியில் போராடுகிறோம்” என்பதுதான். காந்திதான் உண்ணாவிரதத்தையே கண்டுபிடித்தார் எனும்படியான வலுவான பிரச்சாரத்தின் விளைவுதான் இந்த பொதுவான மனோநிலைக்கு அடிப்படை. பகத்சிங் தன் சிறை வாழ்வில் மட்டும் நூற்று பதின்நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். சிறையில் தங்களை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும் என்று கோரியும் கைதிகளுக்கு அடிப்படையான வசதிகள் கோரியும் இருந்தவை அந்த உண்ணாவிரதங்கள். தற்கொலை தொடர்பாக தன் நண்பன் சுகதேவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் “விடுதலைக்கு பிறகான இந்தியாவின் சிறைகளில் புரட்சிகரமான மாற்றங்கள் செய்யப்பட அது குறித்து நேரடி அனுபவம் உள்ளவர்கள் தேவை இல்லையா?” என கேட்கிறார். இரண்டாவது உண்ணாவிரதப்போராட்டம் பற்றி அரசுக்கு அறிவிக்கும் கடிதத்தில் தேவைப்பட்டால் அரசியல் கைதிகளை இரண்டு பிரிவாக பிரித்து (வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டோர் மற்றும் வன்முறையில் ஈடுபடாதோர்) கையாள வேண்டும் என கோரிக்கை வைக்கிறார் பகத்சிங்.

தூக்கு தண்டனை உறுதி என தெரிந்தே வலிய கைதான ஒரு வீரன், விடுதலைக்கு பிறகு தன் தேசத்திற்கான சிறையில் செய்யப்படவேண்டிய சீர்திருத்தங்களுக்காகவும் சமகாலத்தில் தமக்கு எதிர் நிலைப்பாடு கொண்ட கைதிகளுக்காவும் தன் உயிரை பணயம் வைத்து உண்ணாவிரதமிருக்கிறார். (இரண்டாவது உண்ணாவிரதம் அறுபத்து நான்கு நாள் நீடித்தது. ஒரு மாத உண்ணாவிரதத்துக்குப் பிறகு தன் வசீகரமான உருவத்தை இழந்து குற்றுயிராக நீதிமன்றத்துக்கு தூக்கிவரப்பட்டார் பகத்சிங் என் குறிப்பிடுகிறார் அவரது தோழர் சிவ வர்மா. பகத்சிங்கையும் அவரது தோழர்களையும் சாப்பிடவைக்க மிக மோசமான வன்முறையை கையாண்டது ஆங்கிலேய அரசு. அதிலொன்றாக அவர்கள் அறையில் உள்ள தண்ணீர் பானையில் பாலை நிரப்பி போராட்டத்தை ஒடுக்க முயன்றது. இதன் பொருள் பாலைக்குடி எனும் கருணையல்ல போராடினால் தண்ணீர்கூட இல்லாமல் சாவாய் எனும் எச்சரிக்கை).

உடல் நல ஆராய்ச்சிக்காக உண்ணாவிரதம், தொழிலாளர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாதிருக்க உண்ணாவிரதம், அம்பேத்கர் கொண்டுவர விரும்பிய இரட்டை வாக்குரிமையை ஒழித்துக்கட்ட உண்ணாவிரதம், கணக்கு போட்டு பார்த்தால் காந்தி இந்திய மக்களுக்கு எதிராக இருந்த உண்ணாவிரதம்தான் அதிகமாக இருக்கும் போலிருக்கிறது. காந்தியின் உண்ணாவிரதப்போராட்டத்தின் தன்மையை புரிந்துகொள்ள சத்திய சோதனை புத்தகத்தில் உண்ணாவிரதம் எனும் அத்தியாயத்தை (பக்கம் 516) படித்துப்பாருங்கள். அதில் தொழிலாளர்களுக்கான தன் உண்ணாவிரதம் ஆலை முதலாளிகளுக்கு நிர்பந்தம் தருவதற்காக இல்லை என மீண்டும் மீண்டும் சொல்கிறார் காந்தி. தொழிலாளர்களுக்காக போராடுவதாக சொல்லிக்கொண்டு அது முதலாளிகளை நிர்பந்திப்பதற்காக இல்லை என சொன்ன ஒரே தலைவன் காந்தி மட்டுமே (போராட்ட முடிவில் மிட்டாய்கள் சிதறியதை பற்றி விவரிக்கும் அளவுகூட அந்த போராட்டம் பற்றியோ அதன் முடிவு பற்றியோ அவர் விவரிக்கவில்லை என்பது வேறு விஷயம்).

இப்போது முடிவு செய்யுங்கள்.. உண்ணாவிரதம் என்பது உண்மையில் காந்திய வழிப் போராட்டமா?

பகத்சிங் இடுப்பில் குண்டை கட்டியபடியே அலைந்தவன் என்பது மாதிரியான வெகுஜன அபிப்ராயமும் யுத்தத்துக்கு ஆள் சேர்த்த காந்திக்கு கிடைத்த சாத்வீக பிம்பமும் ஒரு வலுவான பிரச்சாரத்தினால் உருவான ஒரு வரலாற்று மோசடி.

புரட்சியாளர்கள் எப்போதுமே ஜனநாயகத்துக்கு எதிரானவர்களாகவே சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். நம் முன்முடிவுகள் பகத்சிங் வரலாற்றிலும் அதை பொருத்திப்பார்க்கும். 1928 ல் பகத்சிங் தலைமையில் கூடிய புரட்சியாளர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு இயக்கத்தை ஜனநாயகப்படுத்துவதுதான். யாரோ ஒருவரை இயக்கத்துக்கு தலைவராக்கிவிட்டு, அவருடைய சித்தத்துக்கு இயக்கத்தை விட்டுவிடுவது பகத்சிங்கிற்கு விருப்பமில்லை. அவரது யோசனையின்படி இயக்கத்தை வழிநடத்த ஒரு மத்திய கமிட்டி அமைக்கப்பட்டது. கொள்கைகள் மற்றும் வழிமுறைகளை வகுக்க அதற்கு அதிகாரமும் வழங்கப்பட்டது.-விடுதலைப் பாதையில் பகத்சிங் நூலில் இருந்து(-பக் 59)

பாராளுமன்றத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவதற்கு முன்னால் இயக்கத்தின் மத்திய குழு கூடுகிறது. அதில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் தொழில் தகராறு மசோதா மற்றும் பாதுகாப்பு மசோதா ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்க குண்டு வீசும் முடிவு எடுக்கப்படுகிறது, ஆட்கள் இல்லாத இடத்தில் குண்டுவீசிவிட்டு கைதாவது, அதன்வாயிலாக பிரச்சாரத்தை மேற்கொள்வது என்றும் முடிவாகிறது. அதனை தானே செய்யவதாக சொல்கிறார் பகத்சிங். மற்ற உறுப்பினர்கள் அவரை அனுப்பும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் (குண்டு வீச்சில் ஈடுபடுபவருக்கு தூக்கு உறுதி என உணர்ந்தே அவர்கள் அம்முடிவை எடுக்கிறார்கள். ஆகவே எதிர்கால இயக்க நடவடிக்கைகளுக்கு அவசியம் என்று கருதி பகத்சிங்கை இச்செயலில் ஈடுபடுத்த மற்ற தோழர்கள் விரும்பவில்லை.). முடிவு, கமிட்டியின் பரிசீலனைக்கு வருகிறது. பெரும்பான்மை முடிவுப்படி பகத்சிங் இந்த செயலில் பங்கேற்கக்கூடாது என முடிவாகிறது.

இந்த முடிவுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு சுகதேவ் பஞ்சாபிலிருந்து வருகிறார். அவர் இம்முடிவைக்கேட்டு மற்ற தோழர்களை கடிந்துகொள்கிறார். மற்ற தோழர்கள் குண்டு வீசி கைதானால் அதனை பகத்சிங் அளவுக்கு பிரச்சாரமாக்க முடியாது எனும் அச்சத்தை சுகதேவ் விளக்குகிறார். நோக்கமும் நிறைவேறாது வீணே இரண்டு பேரின் உயிரையும் பலியிட வேண்டுமா என வினவுகிறார். நீண்ட சமாதானங்களுக்குப் பிறகு மீண்டும் முடிவு ஓட்டெடுப்புக்கு வருகிறது, பகத்சிங் தாக்குதலில் கலந்துகொள்வது என முடிவாகிறது.

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.. தங்கள் வாழ்வின் இன்பங்களை நுகரும் பேரவாவில் இருக்கும் வயதுடைய இளைஞர்கள் தங்கள் உயிரை கொடுக்க முன்வந்து தங்கள் தோழனின் உயிரை நீட்டிக்க முடிவெடுக்கிறார்கள், இயக்கத்தின் எதிர்கால நலனுக்காக. காப்பாற்ற விரும்பிய நபர் உயிரைக்கொடுக்க முடிவாகிறது, தங்கள் லட்சியமும் மற்ற தோழர்களின் தியாகமும் கவனிக்கப்படாது போய்விடக்கூடாது என்பதற்காக. வீரமென்றால் இது வீரம். தியாகமென்றால் இதுதான் தியாகம். ஜனநாயகம் என்றாலும் இதுதான் ஜனநாயகம்.

மறுபுறம் காந்தியின் செயல்பாடுகளை பாருங்கள். சௌரி சௌரா சம்பவத்துக்காக தன்னிச்சையாக ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்துகிறார். சக காங்கிரஸ் தலைவர்களே திகைத்தார்கள். எல்லோருக்கும் தெரிந்த செய்திதான், பட்டாபி சீதாராமையாவின் தோல்விக்கான அவரது எதிர்வினை. தன்னை எதிர்க்கும் ஒருவரது தேர்வை ஏற்க மறுக்கும் எதேச்சதிகாரம். தன் விருப்பத்துக்கு எதிராக இருந்தால் ஜனநாயகத்தை சவக்குழிக்கு அனுப்பும் அடாவடித்தனம். இதுதானே காந்தியின் முகம்?

ஜெயா மட்டும் எப்படி மாறுவார்… நாம் மாறத் தயாராக இல்லாதபோது?

நல்லம்ம நாயிடு கைப்பற்றியது போக ஜெயலலிதாவிடம் இன்னும் ஏராளமான செருப்புகள் கைவசம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அவற்றை விரும்பியபோதெல்லாம் தமிழக மக்கள் முகத்தை நோக்கி எறிந்துகொண்டிருக்கிறார் அவர். பண்டிகை எனும் பெயரில் புத்தகங்களை ஆற்றில் விட்டு தமிழர்களின் அறிவு மூலங்களை சிதைக்கும் ஆரிய கபடத்தனத்தின் பிரம்மாண்டமான மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறார் ஜெயா.

கருணாநிதியின் சொந்த யோசனைகள் பெரும்பாலும் கட்டிடம் கட்டுவதாகவே அல்லது ஏதாவது விழா நடத்துவதாகவோ இருக்கும். கருத்தியல் ரீதியாகவோ அல்லது செயல்பாடுகள் மூலமாகவோ அவரால் தன் பெயரை நிலைநிறுத்த முடியாது. ஆகவே அவர் ஏதாவது கட்டிடத்தை நம்புவதில் வியப்பதற்கு எதுவுமில்லை. எப்படி ஜெயாவின் அடாவடித்தனம் சு.சாமியையும் ஜெயேந்திரனையும் தட்டிவைத்தபோது (மட்டும்) மக்களுக்கு திருப்தியளிக்கும் விதமாக இருந்ததோ அப்படியே கருணாநிதியின் சுயபெருமை மோகத்தில் விளைந்த ஓரளவு உருப்படியான விசயம் அண்ணா நூலகம்தான்.

ஜெயாவையும் கருணாவையும் ஒரே புள்ளியில் இணைப்பது இந்த பெயர் மோகம்தான் (ஜெயாவின் பெயர் மோகம் கருணாநிதிக்கு சற்றும் சளைத்ததல்ல.. இவ்விடயத்தில் கருணா ஹோட்டலுக்கு போய் சாப்பிடுபவர் என்றால் ஜெயா வீட்டுக்கு பார்சல் வரவைத்து சாப்பிடுபவர்). அரசு நிதியைக்கொண்டும் தன் பெயரை வரலாறாக்க கருணாநிதி முயல்கிறார், அதே அரசு நிதியைக் கொண்டு அவரது காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களின் பயன்பாட்டை மாற்றி அவரது பெயரை காலி செய்கிறார் ஜெயா.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் இந்த முடிவு கடுமையான எதிர்வினைகளை உருவாக்கும் என்பதை அவர் உணராமல் இல்லை. அதனால்தான் குழந்தைகள் மருத்துவமனை, ஒருங்கிணைந்த அறிவுசார் வளாகம், கன்னிமாரா நூலகத்துக்கு பக்கத்திலேயே இருக்கும் என ஏராளமான பசப்பல் வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருக்கிறார். தலைமைச் செயலக கட்டிட விசயம் போலல்லாது இம்முறை மாற்றப்போவது எந்த கட்டிடம் என்பதை ரொம்பவும் அடக்கிவாசிக்கிறது ஜெயா டிவி.

இதை அவருடைய கருணாநிதிக்கான எதிர்நடவடிக்கையாக மட்டும் பார்க்க இயலாது. இது என் அரசு, நீங்கள் எனக்கொரு பொருட்டல்ல என மக்களை பார்த்து அவர் விடுக்கும் அறிவிப்பு. ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிமுக உறுப்பினர்களைப் போல பாவித்து, “பொத்திக்கிட்டு நான் கொடுக்குறதை வாங்கிக்க” எனும் செய்தியை அவர் நமக்கு சொல்கிறார். நம் யாவரையும் அவர் யாசகர்களாக கருதி, நம் பாத்திரம் அவர் தரும் பிச்சையில் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும் என கருதுகிறார்.

திமுகவினர் மீது அவர் நிலமோசடி வழக்குகளை முடுக்கிவிட்டாலும் சென்னையில் திமுக அரசால் பெருநிறுவனங்களுக்கு முறைகேடாக ஒதுக்கப்பட்ட நிலம் குறித்து விசாரணை செய்ய “ஆணை”யிடவில்லையே ஏன்? கருணாநிதி கொண்டுவந்த சமச்சீர் கல்வியை மறுபரிசீலனை செய்யும் அம்மா அவர் காலத்து சாராய லைசென்ஸ்களை மட்டும் விட்டுவைப்பது ஏன்?.  ஜெயாவுக்கு கருணாநிதி மீது எத்தனை வெறுப்பு உண்டோ அவ்வளவு அலட்சியம் தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் உண்டு. அதனால்தான் அவர் கருணாவுக்கு எதிராக செய்யும் எல்லா காரியங்களும் கருணாவுக்கு பெயரிழப்பையும் நமக்கு பொருளிழப்பையும் (சமயங்களில் அறிவு) உண்டாக்குகின்றன.

மறுபுறம் கருணாநிதி, நான் ஜெயாவுக்கு கொஞ்சமும் இளைத்தவன் இல்லை என அறிவிப்பது மாதிரி நடத்துகொள்கிறார். அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டியபோதும், திறந்தபோதும், ஹிலாரி கிளிண்டன் வந்து பாராட்டியபோதும், இது தன்னுடைய முயற்சியாகவும் சாதனையாகவும் பீற்றிக்கொண்ட அவர் இப்போது மட்டும் தன்மானமுள்ள தமிழர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என ஒதுங்குகிறார். கனிமொழி ஜாமீனுக்கு கட்சித்தலைமை டெல்லியில் முகாமிடலாம், நிலமோசடி வழக்குக்கு ஆஜராகாத வழக்கறிஞர் அணியை கட்சி முடுக்கிவிடலாம் ஆனால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மட்டும் தமிழர்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டுமா? தமிழர்கள் பணத்தை உங்கள் சவுகர்யத்து எடுத்து செலவிடும்போது உள்ள தைரியம் அது வீணாக்கப்படும்போது எதிர்க்க வரவில்லை என்றால் உங்கள் இலக்கு நான்தான் கட்டினேன் எனும் பெயர் மட்டும்தானே?

துரதிருஷ்டவசமாக, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகளாக இருக்கிறோம். கருணாநிதியை தண்டிக்க ஜெயாவை தேர்ந்தெடுப்பது, ஜெயாவை தண்டிக்க கருணாவை தேர்ந்தெடுப்பது என மாறி மாறி ஓட்டுபோட்டு இவர்களை வளர்த்துக்கொண்டிருக்கிறோம். தோல்வியடைய வைப்பது தண்டனை என கருதிக்கொண்டு இன்னொருவனுக்கு குற்றமிழைக்கும் வாய்ப்பை வழங்கிக்கொண்டிருக்கிறோம். கடந்த தேர்தல் கருணாவுக்கான தண்டணை என நாம் கருதுவது சரியென்றால் அது தன் திமிருக்கான அங்கீகாரமாக ஜெயா கருதுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஓட்டு ஒரு ஆயுதமல்ல என்பதை நாம் எப்போதுதான் உணரப்போகிறோம்? சமச்சீர் கல்வி பட்ட பாட்டிற்கும் நாசமான 160 கோடிக்கும் தேர்தலால் என்ன தண்டனை கொடுக்கமுடியும்? உள்ளாட்சித் தேர்தல் முடிந்த்தும் மூவர் தூக்கிற்கு முகூர்த்தம் பார்க்க ஆரம்பித்துவிட்டார் ஈழத்தாய். ரெக்கமண்டேஷன் செய்தவர் ஏமாற்றமளிக்கிறது என அறிக்கைவிட்டு அமைதியாகிவிட்டார். நாம் என்ன செய்யலாம்.. அடுத்த தேர்தல்வரை காத்திருந்து அஸ்தி கலசத்தோடு நீதி கேட்கலாமா?

ஜெயாவையும் கருணாவையும் தேர்தலால் தண்டிக்கவும் முடியாது.  தண்டிக்கப்பட்டாலன்றி இவர்களை மாற்றவும் முடியாது. வழக்கமாக ஜெயா ஆட்சியில் தன்மானம் மிக்கவர்களுக்கு கடுமையான வேலை கொடுப்பார். ஆனால் அண்ணா நூற்றாண்டு நூலக விவகாரத்தின் மூலம் அவர் தன்மானமுள்ளவர்கள் எண்ணிக்கையை தெரிந்துகொள்ள விரும்புகிறார். தன்மானத் தமிழர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என அறிக்கை விட்டு திமுக இதில் செய்ய ஏதுமில்லை என சொல்லிவிட்டார் கருணா.

ஆகவே இப்போது நாம் மட்டும்தான் இருக்கிறோம். காப்பாற்றப்படவேண்டியது நூலகம் மட்டுமல்ல, நம் சுயமரியாதையும்தான்.

என்கவுண்டருக்கு நாம் தரும் ஒப்புதலில் இருந்து முளைக்கிறது துப்பாக்கிச் சூட்டுக்கான துணிச்சல்.

போலீஸ் நடத்தும் என்கவுண்டருக்கும் துப்பாக்கிச்சூட்டுக்கும் என்ன வேறுபாடு? பெயர் தெரிந்து சுட்டால் அது என்கவுண்டர். சுட்டபிறகு பெயரைத் தெரிந்துகொண்டால் அது துப்பாக்கிச்சூடு.

சுட்டார்கள், செத்தார்கள் எனும் சாதாரண மனோநிலையுடன் நம்மில் பலரும் இந்த செய்தியை கடந்து செல்கிறோம். பத்திரிக்கைச் செய்திகளை அப்படியே நம்புவோர், கலவரம் பண்ணினா போலீஸ் என்னதான் செய்யும் என நியாயம் பேசலாம். ஜான் பாண்டியன் மாதிரி தலைவர்களுக்காகவெல்லாமா ரோட்டுக்கு வந்து போராடுறது என சிலர் சலித்துக்கொள்ளலாம்.. ஒட்டுமொத்தமாக நம் சமூகத்திலிருந்து வெளிப்படும் அலட்சியத்தால் ஏராளமான ஆபத்துக்கள் முளைக்கக் காத்திருக்கின்றன அல்லது ஏற்கனவே முளைத்துவிட்டன.

இந்த நேரத்தில் வந்த வேறொரு செய்தியையும் நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டிருப்போம். அது சன் டிவி சக்சேனாவின் அடியாள் அய்யப்பன் மீதான போலீசின் தாக்குதல். இவனுக்கு நல்லா வேணும் என்பதுதான் இங்கு பொதுக்கருத்து. எப்படியோ அடிவாங்குனவன் என்ன யோக்கியனா என நாம் அவனது மீதான தாக்குதல் குறித்து மகிழ்ச்சி கொள்கிறோம். இங்குதான் போலீசின் திமிர் அங்கீகாரம் பெறுகிறது. ரவுடிகள்தானே அடி வாங்குகிறார்கள் என காவல்துறையின் கொட்டடித் தாக்குதல்கள் மக்களால் நியாயப்படுத்தப்பட்டு அவை கொட்டடிக் கொலைகளில் முடிந்தன.

பிறகு லாக்கப் மரணங்கள் பரவலான கண்டனங்களுக்கு உள்ளானபிறகு என்கவுண்டர்கள் வந்தன (இப்போதும் லாக்கப் கொலைகள் தொடர்கின்றன என்பது வேறு விசயம்). அப்போதும் நமக்கு இதே நிலைப்படுதான், சாகப்போவது ரவுடிதானே?

ஒரு கோணத்தை நாம் எப்போதும் யோசிப்பதில்லை. ஏன் அய்யப்பனை ஷிப்ட் போட்டு அடிக்கும் போலீஸ் சக்சேனாவை கொஞ்சம் மரியாதையுடன் நட்த்தியிருக்கிறது? (அது அவர் நடப்பதிலேயே தெரிகிறது). ஏன் கலாநிதியை இன்னும் விசாரிக்கக்கூட முடியவில்லை? என்கவுண்டரில் ரவுடிகள் கொல்லப்படுவது ரவுடியிசத்தை ஒழிக்கும் என்றால் இத்தனை என்கவுண்டர்களுக்கு பிறகு ஏன் ரவுடியிசம் குறையவில்லை? கொஞ்சம் யோசித்தாலே போலீசாரின் அத்துமீறல்களுக்கு காரணம் வேறு என்பது புலனாகும்.

போலீசின் துப்பாக்கிப்பிரயோகம் என்பது ஒரு கற்பித்தல் முறை. முதலில் ரவுடிகள் காவலர்களால் தாக்கப்பட்டு தாக்குதல் மீது நல்லெண்ணம் உருவாக்கப்படுகிறது. இதன் நீட்சியாக அவர்களுக்கு தேவையில்லாத ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்படுக்கிறார்கள். சமூகவிரோதிகள் தண்டிக்கப்படுகிறார்கள் எனும் சிந்தனை மெல்ல தண்டிக்கப்படுபவர்கள் சமூகத்தின் விரோதிகள் எனும் நிலைக்கு உருமாற்றம் பெறுகிறது. தங்களுக்கு நெருக்கமானவர்கள் பாதிக்கப்படாதவரை பெரும்பான்மையான சாமான்ய மக்கள் காவல்துறைக்கு தரப்படிருக்கும் அதீத அதிகாரம் சரியானதே எனக் கருதுகிறார்கள். முரண்நகையாக காவல்துறைதான் லஞ்ச ஊழலில் புரையோடிப்போயிருக்கும் துறை என்பதை இவர்களில் பெரும்பாலானாவர்கள் ஒத்துக்கொள்வார்கள்.

கவனமாக பரிசீலிக்கையில் காவல்துறையின் அனேக அத்துமீறல்களும் ரவுடித்தனங்களும் அவர்களது தனிப்பட்ட லாபத்துக்காக செய்யப்படுபவை அல்லது லாபத்துக்கு இடையூறு வராமல் இருக்க செய்யப்படுபவை என்பது தெரியவரும். இதனை அனுமதிப்பதால் அரசுக்கு எந்தவித லாபமும் இல்லை. ஆனால் இதனை அனுமதிப்பதன் வாயிலாக யாரை வேண்டுமானாலும் மனசாட்சியின்றி தாக்குவதற்கு அவர்கள் மனதளவிலும் உடலளவிலும் தகுதியுடையவராகிறார்கள். இந்த பயிற்சிதான் அரசு விரும்பும்போதெல்லாம் யார்மீது வேண்டுமானாலும் தடியடி நடத்தவும் யார் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தவும் அவர்களை தயார் நிலையில் வைக்கிறது. இல்லாவிட்டால் தங்களுக்கு யாதொருவகையிலும் எதிரியல்லாத மக்கள்மீது அரசு உத்தரவிட்டதாலேயே துப்பாக்கிச்சூடு நடத்த இவர்களால் எப்படி முடியும்? எதிர்த்து தாக்குமளவு உடல்வலு இல்லாத பெண்களையும்கூட மிருகத்தனமாக விரட்டிவிரட்டி அடிக்க இவர்களால் எங்கணம் முடியும்?

அரசு அதிகாரிகளுக்கு தரப்படும் அதிகப்படியான ஊதியம் அரசே அவர்களுக்கு அளிக்கும் லஞ்சம் என்கிறார் தோழர் லெனின். அரசு ஊழியர்களின் லஞ்சம் மறைமுகமாக அனுமதிக்கப்படுவதுகூட உயர்மட்டத்தில் நடக்கும் பெரிய அளவிலான ஊழலை அவர்கள் கண்டுகொள்ளாதிருப்பதற்கும் அதற்கு ஒத்துழைப்பதற்கும்தான். இந்த சாத்தியப்பாட்டை போலீசுடன் பொருத்திப்பாருங்கள். உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் போலீசின் தனிப்பட்ட விருப்பமென்றால் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் துப்பாக்கிகள் முழங்குவது அரசின் விருப்பம். இது இருவருக்குமான் புரிந்துணவு நடவடிக்கைகள்.

ஏன் துப்பாக்கிச்சூடு பெரும்பாலும் தலித் மக்கள்மீதும் பழங்குடி மக்கள் மீதும் நடத்தப்படுகிறது? காரணங்கள் இரண்டு. அவர்கள் அதிகாரவர்கத்துக்கு எளிமையான இலக்காக இருக்கிறார்கள், அத்துமீறலை சட்டபூர்வமாக எதிர்கொள்ளும் பொருளாதார வலு அவர்களிடம் இருக்காது. இரண்டாவது காரணம் அடிப்பவனுக்கும் அடிவாங்குபவனுக்கும் தெரியாத பூடகமான விசயம். எந்த நாட்டின் உரிமைப்போராட்டங்களும் சுதந்திரப்போராட்டங்களும் பொருளாதாரரீதியாகவே அல்லது இனரீதியாக ஒடுக்கப்பட்டவர்களாலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே ஒரு அரசு மக்களிடம் உரிமைப்போராட்டங்களோ விடுதலைப்போராட்டங்களோ நடக்கக்கூடாதென விரும்பினால் ஒடுக்கப்பட்டவர்களை ஒன்றுகூடவிடாமல் செய்துவிட்டால் போதும். சாராயத்தையும் சினிமாவையும் மீறி ஒன்றுசேரும் சாத்தியம் தென்படும்போதெல்லாம் அரசு தடியடியையோ துப்பாக்கிச்சூட்டையோ பிரயோகிக்கிறது.

பரமக்குடி துப்பாக்கிச்சூடு அரசின் உத்தரவாலோ அல்லது போலீசின் அதிகாரத்திமிராலோ நடந்திருக்கலாம். எதனால் நடந்திருந்தாலும் அதற்குப்பின்னால் இருப்பது தலித் விரோத சிந்தனை மட்டும்தான். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் ஊர்வலம் எல்லா அராஜகங்களைமும் உள்ளடக்கியவாறு நடக்கிறது. அங்கேயெல்லாம் போலீசின் நாக்குகூட அத்துமீறுவதில்லை. மசூதிகளுக்கு அருகே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலான வெறித்தனமான நடவடிக்கைகளை வருடாவருடம் செய்கிறார்கள். குறைந்தபட்சம் பாதையை மாற்றும் வேளையைக்கூட போலீஸ் செய்ததில்லை. முழுபோதையில் இருக்கும் விநாயக பக்தர்களிடம் போலீஸ் காட்டும் மென்மையான அணுகுமுறையையை நீங்கள் எல்லா ஊரிலும் காணலாம். பிறகு எப்படி தலித் மக்கள் ரோட்டுக்கு வந்தால் மட்டும் போலீசின் ஆயுதங்கள் உடனடியாக உயர்கின்றன??

ஜான் பாண்டியன் ஒரு ரவுடி, அவரை கைது செய்ததற்கு ரோட்டை மறிப்பார்களா என கேட்பதற்கும்  ****தானே சாகட்டும் என பேசுவதற்கு  பெரிய வேறுபாடு கிடையாது. ஒவ்வொரு சாதித்தலைவரும் ரவுடிதான். எல்லோரும் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள்தான். சிதம்பரத்தில் பல பத்தாண்டுகளாக தாதாவேலை பார்ப்பது (ஸ்ரீதர்) வாண்டையார் கோஷ்டி. போலி தங்கக்காசு விற்றது, சொந்த மனைவியை மன்நோயாளி என்று சொல்லி ஒதுக்கிவைத்தது என சேதுராமனின் முகம் பொறுக்கிகளின் எல்லா லட்சனங்களும் பொருந்தியது. இவர்களால் வராத கலவரம் ஜான் பாண்டியன் வந்தால் மட்டும் வந்துவிடுமா?

பரமக்குடி துப்பாக்கிச்சூடு நம் சமூகத்தின் பல அங்கங்களின் நிஜ முகத்தை அம்பலப்படுத்துகிறது. ஜெயலலிதாவின் விளக்க அறிக்கை அவரது போலீஸ் பாசத்தை மட்டும் காட்டவில்லை, அது அவரது தலித் மக்கள் மீதான அலட்சியத்தையும் வெறுப்பையும் காட்டுகிறது. சுட்டவர்கள் மீது போடப்படாத வழக்கு உயிருக்காக ஓடியவர்கள் மீது பாய்கிறது. கண்டன அறிக்கை எந்த வகையிலும் போலீசாரை காயப்படுத்திவிடக்கூடாது என பார்த்துப் பார்த்து தயாரிக்கப்பட்டது போலிருக்கிறது கருணாநிதியின் அறிக்கை. போலீசார் கற்களோடு காத்திருக்கும் புகைப்படத்தை வைத்திருந்தாலும் கலவரம் ஏற்பட்டதால் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியிருந்தது என ஒப்பிக்கின்றன ஊடகங்கள்.

போலீசுக்கு எதிராக எந்த வலுவான சக்தியும் பேசுவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு போலீசால் ஏராளமான அனுகூலமிருக்கிறது. ஆனால் நம்மைப்போன்ற சாமான்ய மக்கள் போலீஸ் மீது பக்தி கொள்வது நம் வீட்டில் நாமே கொள்ளிவைத்துக்கொள்வதைப் போன்றதே. தன்னுடன் தகராறு செய்த பக்கத்து வீட்டுப்பெண்ணின் புகைப்படத்தை செயின் திருடர்கள் பட்டியலில் சேர்த்து பேருந்துநிலையத்தில் பேனராக வைத்தார் ஒரு காவல் அதிகாரி (திருச்சி). மாநிலத்தில் நடக்கும் நில அபகரிப்புக்களும் கட்டப்பஞ்சாயத்துக்களும் பெரும்பாலும் இவர்களது தலைமையிலோ அல்லது கவனத்திலோ நடப்பவைதான்.

இந்த அழகில் நாம் போலீசை தியாகிகள் எனவும் சமூகத்துக்காக அயராது உழைப்பவர்கள் என புகழ்வதும் இன்னும் கொடுமை. உண்மையில் இந்த புகழுரைகளுக்கு நிஜமாகவே சொந்தக்காரர்களான சுகாதாரத் தொழிலாளர்களை நாம் சக மனிதனாகக்கூட நடத்துவதில்லை. ஒரு மந்திரியோ அல்லது தாசில்தாரோகூட யாரோ ஒருவரை பொது இடத்தில் தாக்கியதற்கான ஆதாரம் கிட்டினால் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவது கட்டாயம் (தற்காலிகமாக). ஆனால் நடுரோட்டில் எந்த எச்சரிக்கையுமில்லாமல் மக்களை சுட்டு வீழ்த்தவும், சுட்டுக்கொன்றுவிட்டு சந்தேக மரணம் என முதல் தகவல் அறிக்கை தயாரிக்கும் அளவுக்கு இவர்களுக்கு அதிகாரமிருக்கிறது. சுடப்பட்டு இறந்தவர்கள் பலர் சொந்த வேலைக்காக அந்த சாலைக்கு வந்திருந்தவர்கள். இந்த கதி தமிழ்நாட்டில் வசிக்கும் யாருக்கு வேண்டுமானாலும் நேரலாம்.

பரமக்குடி சம்பவம் நமக்குத் தரும் செய்தி இதுதான், நாம் உடனடியாக போலீஸ் பஜனா மண்டலியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டிய நேரமிது. காவல்துறையின் துப்பாக்கி ரவுடிகளை சுட உருவாக்கப்பட்டதல்ல, அது அவர்களுக்கு பிடிக்காதவர்களையும் தேவையில்லாதவர்களையும் கொல்லவே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை பெரிய விலை கொடுத்து நாம் தெரிந்துகொண்டிருக்கிறோம்.

தினமலர் கட்டுரையில் விஞ்சிநிற்பது- அவர்கள் ஆள் செத்துப்போன கவலையா? நம் ஆட்கள் சாகவில்லையே எனும் எரிச்சலா?

செய்திகள் சற்று தாமதமாக வந்துசேரும் தூரத்தில் இருப்பதால் தினக்கோமியத்தின் தூக்குதண்டனை குறித்த கட்டுரை பற்றிய தகவலும் தாமதமாகத்தான் கிடைத்தது. காதல் தோல்வியில் தீக்குளிக்கும் செங்கொடிகளும் எனும் வாசகத்தை உள்ளடக்கிய அக்கட்டுரையை தினமலர் வெளியிட்டிருக்காவிட்டால்தான் நாம் ஆச்சர்யப்பட்டிருக்க வேண்டும். விதவைகளை காசியில் அநாதையாக தள்ளிவிட்டு அவர்களை விபச்சாரியாக்கும் ஈராயிரம் ஆண்டு இந்து பாரம்பரியத்தின் வாரிசு தினமலர். பெண்களை வெறும் பண்டமாக பார்க்கும் அவர்கள் புத்தி செங்கொடி எனும் பெண் தற்கொலை செய்துகொண்டால் அதற்கு காதல் தோல்வி தவிர வேறு காரணம் இருக்க முடியாது என்றுதான் யோசிக்கும்.

தோழர் செங்கொடி குறித்து தினமலர் நல்லவிதமாக ஏதாவது சொல்லியிருந்தால் அது அவரது பொதுவாழ்வின் பெரிய களங்கமாக இருந்திருக்கும். செங்கொடி பற்றிய தினமலரின் கருத்துக்கு அப்பால் அந்த கட்டுரை கொண்டிருக்கும் மற்ற கருத்துக்களுக்கு இந்த சமயத்தில் நாம் எதிர்வினை செய்தாக வேண்டும். உணர்ச்சிவயப்பட்டு நாம் செங்கொடி குறித்த விசமத்தனமான கருத்துக்கு மட்டும் எதிர்ப்பு காட்டிக்கொண்டிருந்தால், கட்டுரையின் மற்ற கருத்துக்களுக்கு நம்மிடம் பதிலில்லை என்றாகிவிடும்.

தினமலர், தந்தி மட்டுமல்ல ஏனைய தேசிய ஊடகங்களும் “ராஜீவ் கொலையாளிகள்” எனும் சொல்லையே பயன்படுத்துகின்றன. டை அனதர் டே என கட்டுரை எழுதுகிறது ஒரு ஆங்கில நாளிதழ். தூக்கை நிறுத்திவைக்கும் நீதிமன்ற தடையுத்தரவுக்கு சட்ட வலு இல்லை என சாம்பிராணி போடுகிறது டெக்கன் கிரானிக்கல் நாளேடு. செத்துப்போய்விட்டான் எனும் ஒரே காரணத்துக்காக ராஜீவின் சகல பாவங்களையும் மன்னித்து அவற்றை குறிப்பிடக்கூட மறுக்கும் நமது ஊடகங்கள், தூக்குதண்டனை விதிக்கப்பட்ட மூவரும் செய்த “குற்றத்தின்” தன்மையை குறிப்பிட மறுக்கின்றன. திட்டமிட்டு சமூகத்தின் வில்லன்களும் கதாநாயகர்களும் இவர்களால் உருவாக்கப்படுகிறார்கள். துரதிருஷ்டவசமாக பார்வையாளர்கள் சிந்திக்கவேண்டிய முறையையும் இவர்களே தீர்மானிக்கிறார்கள். ஆகவேதான் அன்னா ஹசாரேவை ஆதரிப்பவர்களும் மரண தண்டனையை ஆதரிப்பவர்களும் அதன் காரணம் புரியாதவர்களாக இருக்கிறார்கள்.

ராஜீவின் எழவுச்சேதி கேட்கையில் நான் ஐந்தாம் வகுப்பு கோடைவிடுமுறையில் இருந்தேன். அப்போது ராஜீவின் சாவு எனக்கு எந்த கவலையையும் ஏற்படுத்தவில்லை. அப்போது நான் சென்றிருந்த கிராமத்தில் அனேகமாக எல்லோருமே பெருங்கவலையில் இருந்தார்கள், சிலர் அழவும் செய்தார்கள். இப்போதும் என் நிலையில் மாற்றமில்லை, அந்த சாவு குறித்த கவலை எனக்கில்லை. ஆனால் இன்றைய சூழலில் இருக்கும் ஒரே மாறுதல் என்னை சுற்றியிருப்பவர்கள் பலர் ராஜீவ் மரணம் பற்றி கவலைப்படவில்லை. ஆகவேதான் ஈழவிடுதலைக்கான குரலும் மூவர் விடுதலைக்கான குரலும் தமிழகமக்களின் இதயங்களில் இருந்து தயக்கமில்லாமல் வெளிப்படுகிறது.

தினமலர் உண்மையில் அச்சமடைவது மூவருக்கு ஆதரவான குரலுக்காக இல்லை. மக்களிடம் உருவாகியிருக்கும் ஒருமித்த கருத்தும், ராஜீவ் பிணத்துக்கு இதுவரை இருந்துவந்த மதிப்பு காலாவதியாவதும்தான் இவர்களை அதிகம் கலக்கமுற வைக்கிறது. இல்லாவிட்டால் சீமான், வைகோ மற்றும் நெடுமாறன் ஆகியோர் தங்கள் சுயலாபத்துக்கு செய்யும் போராட்டம் என தினமலரே குறிப்பிடும், ஒரு வெகுமக்கள் ஆதரவில்லாத செயல்பாட்டுக்கு (அவர்களது கணிப்பின்படி) ஏன் இத்தனை முக்கியத்துவம் தருவானேன்? இதுநாள்வரை ராஜீவ் கொலை என்று மட்டும் செய்தி போட்ட தினமலர் இப்போது திடீர் ஞானோதயம் பெற்றதுபோல அவனுடன் இறந்த அப்பாவிகளுக்காக கண்ணீர் வடிக்கிறது. இனி ராஜீவ் பிணம் இங்கு போணியாகாது என தினமலரே மறைமுகமாக ஒத்துக்கொள்கிறது.

இந்த பத்திரிக்கையின் கபடத்தனத்தை எதிகொள்ளும் முன்னால் தினமலர் என்பது ஒட்டுமொத்த மக்கள் விரோத சக்திகளின் ஒரு அங்கம் என்பதை புரிந்துகொள்வது மிக முக்கியம். ராஜீவ் கொலைவழக்கை விசாரித்த சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமனின் ஜூவி பேட்டி உங்களுக்கு நினைவிருக்கலாம். பேரறிவாளன் தூக்கு தண்டனைக்கு தகுதியானவரே என அவர் அடுக்கும் காரணங்கள் இவைதான் 1. அவர் எதற்காக என்று தெரிந்தேதான் பேட்டரி வாங்கித்தந்தார். 2. புலிகளுக்கு ஆதரவாக புத்தகம் வெளியிட்டார் 3. ராஜீவ் சாகவேண்டும் என அவர் விரும்பியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆக ஒரு அரசு அதிகாரியின் கருத்துப்படி ஒருவர் கொலையை செய்திருக்காவிட்டாலும் அதற்கு உதவி செய்த காரணத்திற்காகவே அவர் தூக்கிலிடப்படலாம். இன்னும் ஆழமாக அவரது கருத்தை உற்று நோக்கினால் அவர் ஒட்டுமொத்த தமிழினத்தையுமே குற்றவாளியாக கருதுவது புரியும். புலிகளுக்கு ஆதரவாக எழுதுவது குற்றமென்றால் வலையுலகில் உள்ள ஏராளமான தமிழர்கள் அந்த பட்டியலில் வருவார்கள். ராஜீவ் சாகவேண்டும் என விரும்பியவர்கள் குற்றவாளிகள் என்றால் தமிழகத்தில் பாதிபேர் தூக்கிலிடப்படவேண்டும். ரகோத்தமன் பேட்டி ஒரு தனிமனிதனின் கருத்தல்ல, அரசின் ஒரு முன்னாள் கூலியாகவே அவர் பேசியிருக்கிறார். அதனை அரசின் கருத்தாகவே நாம் பார்க்கவேண்டும்.

சட்டத்தின் முன்னால் எல்லோரும் சமமெனில் லீலாவதியை கொன்றவர்கள் ஏழாண்டு தண்டனையோடு விடுதலையாவதும் ராஜீவ் கொலைவழக்கு குற்றவாளிகள் பரோல்கூட கிடைக்காமல் இருபதாண்டுகள் சிறையில் இருப்பது எப்படி சாத்தியம்? இந்த யோசனை தினமலருக்கும் ரகோத்தமன்களுக்கும் வராதா? வரும்.. ஆனால் அவர்கள் கடுமையான தண்டனைக்கு வலியுறுத்துவதன் நோக்கம் நடந்த குற்றத்துக்கு தண்டனை வழங்குவதல்ல. அரசின் நடவடிக்கை எத்தனை கொடூரமானதாக இருப்பினும் அதனை மக்கள் சகித்துக்கொள்ள வேண்டுமேயன்றி எதிராக சிந்திக்கவோ அல்லது சிந்திப்பவர்களுக்கு உதவவோ கூடாது என்பதை வலியுறுத்தத்தான். காந்தகார் விமானக் கடத்தல் சம்பவத்தில் ரூபின் கட்யால் எனும் பயணி கொல்லப்பட்டார். கடத்தல்காரனுக்கு எதிராக அவர் எதுவும் செய்திருக்காதபோது அவர் ஏன் கொல்லப்படவேண்டும்? அது ஒரு எச்சரிக்கைக்கான படுகொலை, அதற்கு காரணம் எதுவும் தேவையில்லை. அதேபோலத்தான் இதுவும்.

ஆகவே இவ்விடயத்தில் அரசின் கருத்தையே தினமலர் பிரதிபலிக்கிறது. கூடுதலாக அவர்களுக்கே உரிய லட்சியங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு தமிழர்கள் ஒன்றிணைவது இடையூறாக இருக்கும் என்பதால் அவர்கள் கூடுதலாக கவலைகொள்கிறார்கள். ஒருவேளை நாம் மெனக்கெட்டுப் போராடி தினமலர் ஒழித்தாலும் அரசால் இன்னொரு பிணமலரை உருவாக்குவது சுலபம். தினமலர் எதிர்ப்பு எனும் ஒற்றை இலக்கோடு நாம் செயல்பட்டால் ஜெயிக்கப்போவது தினமலர்தான். அதேபோல ஈழவிவகாரத்தில் மட்டும் சோனியா மன்மோகன் கும்பலின் நிலைப்பாட்டை நாம் எதிர்த்தால் வெல்லப்போவது அவர்கள்தான்.

நாம் செல்ல வேண்டிய பாதையை மறைமுகமாக தினமலரே சுட்டிக்காட்டியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக அரசு ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டபோது தன் வியாபாரம் பாதிக்கப்படும் என தெரிந்தே அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது தினமலர் (அவர்களது பெரும்பாலான வாசகர்கள் அரசு ஊழியர்கள்). தன் எதிர்கால விற்பனைக்கு ஆங்கிலவழிக்கல்வி ஆபத்தாக முடியும் என அறிந்தேதான் அவர்கள் கல்வி தனியார்மயமாவதை ஆதரிக்கிறார்கள் (பிராந்திய மொழி நாளேடுகள் இந்தியாவில் மெல்ல அழிந்துவருவதாக ஆய்வு முடிவுகள் வந்து பத்தாண்டுகள் ஆகிறது). ஆனால் மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தவுடன் தினமலர் அஞ்சிநடுங்கி கூப்பாடு போடுகிறதென்றால், அவர்களை ஒழித்துக்கட்டும் வழி நம் ஒற்றுமையிலும் போர்குணத்திலும்தான் இருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும். தினமலரின் கட்டுரை நாம் சரியான பாதையில்தான் இந்த போராட்டங்களை முன்னெடுக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.

தெரிந்தோ தெரியாமலோ வைக்கப்படும் இரக்கம் காட்டுங்கள் தாயே, மனிதாபிமான அடிப்படையில் விடுதலைசெய்யுங்கள் எனும் வாதங்கள் நம் எதிர்தரப்புத்தான் சாதகமாக முடியும், குறிப்பிட்ட அந்த கட்டுரை மனிதாபிமான வாதத்தைத்தான் வலுவிழக்க வைக்கிறது. மனிதாபிமானம் எனும் வாதம் மறைமுகமாக அவர்கள் குற்றவாளிகள் என உறுதி செய்கிறது. நம் மாநிலத்தில் பரவலாக நடக்கும் போராட்டங்கள் அவர்கள் குற்றவாளிகள் அல்ல எனும் கருத்தை வலியுறுத்துபவை. நாம் இதனை இன்னமும் செம்மையாக வீரியமாக செய்வதுதான் நாம் செங்கொடிக்கு சரியான மரியாதை. பத்திரிக்கை எரிப்பு என்பதெல்லாம் நம் ஓய்வு நேரப்பணியாகத்தான் இருக்கவேண்டும்.

இறுதியாக, தினமலர் கட்டுரை நம் எதிரி அச்சத்தில் இருப்பதைக் காட்டுகிறது. ஆனால் அவர்கள் நிச்சயம் பலவீனமாக இல்லை. ஜெயலலிதா, சோனியா மற்றும் தினமலர் என எல்லோரும் நம்முடைய பலவீனமான தருணத்துக்காக காத்திருக்கிறார்கள். அந்த நேரம் வந்தால் இவர்களின்  இலக்கு வெறும் நால்வர் மட்டுமல்ல என்பது நிச்சயம்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 98 other followers