யார் சொன்னது நாங்கள் செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் என்று?

கடவுள் மறுப்பு – பால்ய காலத்திலிருந்தே எங்கள் வீட்டவர்களின் அடையாளமாக இருந்திருக்கிறது (என் அம்மாவைத் தவிர). ஒருகாலத்தில் இந்த ஒரு விவகாரம் குறித்து எங்கள் வாயைப் பிடுங்குவதுதான் உறவினர்களது பொழுதுபோக்காக இருந்தது. இயேசுவின் படத்தை வாங்க மறுத்தமைக்காக என் தங்கை அவரது வகுப்பாசிரியரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டிருக்கிறார். நாங்கள் (நாத்திகர்கள்) எப்போதும் ஏதாவது ஒன்றுக்கான பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். கருணாநிதி மஞ்சள் துண்டு போட்டாலும் வீரமணி ஜால்ராவை மாற்றிப்போட்டாலும் நாங்கள் அதற்கு பதில் சொல்லியாகவேண்டும்.

கடவுளை மறுப்பவர்கள் வாழ்க்கை சிரமமானது. நாங்கள் தவறுதலாகக்கூட தவறு செய்ய முடியாது. ஆத்திகர்கள் ஏதாவது பூச்சியை வணங்கினாலும் அதனை தன் நம்பிக்கை என்று சொல்லிவிட்டால் போதும். ஆனால் அதனை மறுப்பவன் ஆதாரபூர்வமாகவும் அறிவியல்பூர்வமாகவும் அதை செய்தாகவேண்டும். சென்ற மாதம் செந்தழல் ரவி சொன்ன விமர்சனத்தை கண்டித்து வந்த ஒரு இடுகையை படித்தேன். பகுத்தறிவுவாதியான ரவி எப்படி ஒருவரது உருவத்தை கேலி செய்யலாம் என்ற கேள்வி அங்கு எழுப்பப்பட்டிருந்தது (அது உண்மையா என்று எனக்குத் தெரியாது). ஆக நாத்திகன் நியாயவானாக இருந்தாக வேண்டியது கட்டாயம்.

நாத்திகர்களின் வாழ்க்கை சுவாரஸ்யமானது. ஏனெனில் எங்களை சந்திக்கும் அனேக பக்திமான்கள் எங்களை தோற்றுப்போனவர்கள் என்று நிரூபிக்க போராடுகிறார்கள். அறிவுடமையை அறியாமை வெற்றிகொள்ள போராடுவது ஒரு சுவாரசியமென்றால், சமயங்களில் அறியாமை வென்றுவிட்டதாக (அவர்கள்) சொல்வது இன்னுமொரு சுவாரஸ்யம். ஒரு முன்னாள் நாத்திகர் பட்டு வேட்டி சட்டை கட்டினால் அது நாத்திகத்தின் வீழ்ச்சியாகவே பார்க்கப்படும். ஆனால் எல்லா மடத்திலிருந்தும் கசமுசா சமாச்சாரங்கள் அம்பலமானாலும் மதம் புனிதமானதாகவே நீடிக்கும். இத்தகைய சவால்களே நாத்திகர்கள் வாழ்வை சுவாரசியமாக்குகின்றன. அதனால்தான் எம்.ஆர்.ராதா வசனத்தை நூறுமுறை கேட்டாலும் சலிக்காத வெகுஜனத்துக்கு ஒருமுறை சாமி படம் பார்ப்பதே எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.

நாத்திகர்கள் வாழ்வு பொறுப்புகள் நிறைந்தது. எந்த முட்டாள்தனத்தை ஒழிக்க விரும்புகிறார்களோ அந்த முட்டாள்தனத்தை பின்பற்றுபவர்களது உரிமைகளுக்கும் அவர்கள்தான் குரல்கொடுத்தாக வேண்டும். அதனால்தான் பெரியார் கடவுளை மற என்று சொன்னதோடு நில்லாமல் மனிதனை நினை என்றும் சொன்னார். இதன் இன்னொரு விளக்கம் கடவுளை மறந்தால்தான் மனிதனைப்பற்றி நினைக்கமுடியும். தஞ்சை பெரியகோயிலின் இடது பக்கம் பன்றியைப்போல உருவமுடைய ஒரு சிலையைக்கொண்ட சன்னதி உண்டு. அதை தோப்புப்கரணம் போட்டபடியே வணங்கிய ஒருவர் “யானை மாதிரியும் இருக்கு பன்னி மாதிரியும் இருக்கே.. என்ன சாமி இது??” என்ற சந்தேகத்தை வாய்விட்டு சொல்லிக்கொண்டிருந்தார். இந்த வாய்ப்பு கடவுளை நம்பாவதவனுக்கு கிடையாது. அவர்கள் பெரியாரையும் தெரிந்துகொண்டாக வேண்டும் புராணங்களையும் தெரிந்துகொண்டாக வேண்டும்.

நாத்திகம் சிக்கனமானது மற்றும் எளிமையானது. விபூதி குங்குமத்தில் தொடங்கி மாட்டுச்சாணி வரை எதுவும் வேண்டியதில்லை. வீடு கட்டினால் ஒரு கழிப்பறைக்கான இடம் கூடுதலாக கிடைக்கும் (பூஜை அறைக்கான குறைந்தபட்ச இடம் அத்தியாவசியமான ஒரு பயன்பாட்டு இடத்துடன் ஒப்பிடப்பட்டிருக்கிறது.. அவ்வளவுதான்). ஒரேயொரு நபர் திருப்பூரிலிருந்து திருப்பதி போய்வரும் செலவைவிட என் ஒருமாத வீட்டு வாடகை குறைவு. குலதெய்வத்துக்கான பூஜை தொடங்கி பேருந்தில் நீட்டப்படும் சாமி உண்டியல்வரையான எல்லா நன்கொடை வேண்டுகோள்களை நிர்தாட்சண்யமாக நிராகரிக்க முடியும். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று நீங்கள் அறியப்பட்டுவிட்டால் சோதிடம், ஜாதகம், பரிகாரம் போன்ற தீயசக்திகள் பற்றி உங்களிடம் பிரச்சாரம் செய்யப்படமாட்டாது. மலச்சிக்கலுக்குக்கூட ஜாதகத்தை ஒருமுறை பார்த்துவிடலாம் என்று சொல்வது பேஷனாகிவிட்ட காலத்தில் இது எத்தனை பெரிய சவுரியம்?

“எல்லாம் சரி, இவ்வளவு பெருமை பேசினாலும் உங்க ஏரியா ஏன் வீக்காயிகிட்டே இருக்கு?” எனும் நக்கல் எனக்கு கேட்காமலில்லை. இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை, பெரியார் காலத்தைவிட இப்போது எங்கள் அணி பலவீனமான நிலையில்தான் இருக்கிறது. எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் மதம் பிரச்சாரம் செய்யப்படுமளவுக்கு கடவுள் மறுப்பு பிரச்சாரம் செய்யப்படுவதில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் பிரதோஷம் என்றால் என்னவென்றே தெரியாத தஞ்சாவூரில் இன்று அந்த நாளில் பெரியகோயில் பக்கமே போக முடியவில்லை. டிவியை திறந்தால் லேகிய வியாபாரிகளைவிட தாயத்து வியாபாரிகளே அதிகம் ஆக்கிரமித்திருக்கிறார்கள். சம்சாரத்தோடு சண்டையிட்டவர்களும் வாழ்வு சலித்த வெளிநாட்டவர்களும் மட்டும் வந்துபோகும் இடமான திருவண்ணாமலையில் ரஜினிகாந்தின் அருணாசலம் படத்துக்குப் பிறகு கிரிவலத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது

ஆனால் இதுகுறித்தெல்லாம் நாம் கவலைகொள்ளத் தேவையில்லை. காரணம் கடவுள் மறுப்பு என்பது கொள்கையல்ல. அது ஒரு உண்மை அவ்வளவே. பூமி சூரியனை சுற்றுகிறது என்பதைப் போல, உலகம் உருண்டை என்பதைப் போல இதுவும் ஒரு கண்டுபிடிப்பு. என்ன, மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றை பொய்யென சொல்லும் கண்டுபிடிப்பு. ஐன்ஸ்டீன் ரிலேட்டிவிட்டி தியரிகூட பலருக்கு புரிவதில்லை, அதற்காக புரிந்தவர்கள் வருந்த முடியுமா? இல்லை பெரும்பான்மையோடு ஐக்கியமாவதற்காக புரிந்துகொண்டதை மறக்க முடியுமா? பல மேம்பட்ட மனிதப் பண்புகளுக்கு இது அடிப்படையானது என்பதால் நாத்திகம் எல்லோருக்கும் பரிந்துரைக்கப்படவேண்டியது என்பது மட்டும்தான் நாம் நினைவில் கொள்ளவேண்டிய செய்தி.

மேலும் மதம் பணக்காரனையே மதிக்கும் என்பதையும் மடங்கள் கிரிமினல்களின் கூடாரம் என்பதையும் நாத்திகர்களை மெனக்கெட வைக்காமல் அவர்களாகவே அம்பலமாக்கிக்கொள்கிறார்கள். மத பாரபட்சமில்லாமல் எல்லா கடவுளரின் ஏஜெண்ட்களும் இதில் அடக்கம். கேள்வி கேட்காத ஞானத்தைக் கொடு என்கிறது பைபிள். இது எல்லா மதங்களின் பொதுக்கருத்தாக இருப்பதால்தான் டி.ஜி.எஸ்.தினகரனும் மேல்மருவத்தூர் பங்காருவும் ஆயிரக்கணக்கான கோடிகளில் புரள்கிறார்கள். பர்தா பெண்ணுக்கு பாதுகாப்பு எனும் அராஜகமான வாதத்தை கைவிட இன்றுவரை மறுக்கிறது இசுலாம். நாய்கள்கூட உலவ முடியும் கோயிலில் மூன்றிலொரு பங்கு மக்களை அனுமதிக்க மறுக்கிறது இந்து மதம். வாழ்வில் உருப்படுவதற்கான மார்க்கமானது யாதொரு மார்கத்தையும் பின்பற்றாதிருப்பதுதான் என்பதை மார்கங்களே இப்போது ஓரளவுக்கு சொல்லித்தருகின்றன. ஆகவே நமக்கு பாதிவேலை மிச்சம்.

பெண்ணடிமைத்தனம், சாதிக்கொடுமை, மூடநம்பிக்கை என சமூகத்தின் சகல நோய்களுக்கும் வேராக கடவுள் நம்பிக்கையே இருந்திருக்கிறது என்ற காரணத்தால்தான் பெரியார் தன் கோடரியை அதன்மீது வீசினார். அதனால்தான் அவரது இயக்கம் மிகவேகமாகவும் மிக வீரியமாகவும் பரவிற்று. திராவிட இயக்கம் நாற்றம் பிடிக்கத்தொடங்கியது ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் சமரசத்துக்குப் பிறகுதான். நாமும் வேரை விட்டுவிட்டு சுலபமானவற்றை வெட்டுவதற்கு முயற்சி செய்கிறோம். சூத்திரன் என்றால் வேசிமகன் என்று பொருள், அந்த அடையாளத்தை துடைத்தெறிவது பெரியாரின் நோக்கமாக இருந்தது. இப்போது அந்த நோக்கத்தின் நிலை எப்படி இருக்கிறது? வேசிமகன் எனும் அடையாளம் பற்றிய கவலை போய் இப்போது பெரிய வேசிமகன் யார் எனும் போட்டியில் திருப்தியடைந்து நிற்கிறது சமூகம். ஆகவே நாத்திகம் தோற்றதாக என்றைக்குமே கருதமுடியாது, உண்மைக்கு போட்டியே கிடையாது எனும்போது தோல்வி எங்கேயிருந்து வரமுடியும்?. ஆனால் நாத்திகர்கள் கடமைதவறிவிட்டார்கள் (அல்லது தவறிவிட்டோம்) என்பதில் வேறு கருத்து இருக்க முடியாது.

பெருமையையும் ஆராய்ச்சியும் போதும். இறைமறுப்பாளர்கள் செய்வதற்கான குறைந்தபட்ச கடமை ஒன்றுண்டு அதுபற்றி பேசிவிடலாம். சென்ற தலைமுறை நாத்திகர்கள் பலர் தங்கள் வீட்டில் புதிய நாத்திகர்களை உருவாக்கத்தவறிவிட்டார்கள். குறைந்தபட்சம் நமது பிள்ளைகளை மட்டுமாவது கடவுளை மறுப்பவர்களாக தயாரிப்பது அவசியம். இதில் சுதந்திரம் பேசுவது பேராபத்தில் முடியும். சைவமா அசைவமா என்பதை வேண்டுமானால் அவர்களே தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் அவர்களை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது நம் கடமை அதனை குழந்தையின் விருப்பத்துக்கு விட்டுவிடுவேம் என்று நியாயம் பேசக்கூடாது . அதுபோலவே இல்லாதவற்றை நம்புவோராக குழந்தைகள் வளர்வதும் ஒருவகையில் ஆரோக்யக்கேடானதுதான்.

(இனி ஆத்திகர்கள் வாசிப்பது நல்லதல்ல… வாசித்து உண்டாகும் விளைவுகளுக்கு நான் பொறுப்புமல்ல)

கண்ணைத் திறந்தாலே பக்தியையும் பஜனையையும் கற்றுத்தர ஓராயிரம் வழிகள் இருக்கின்றன. இந்த நிலையில் நாம் நம் பிள்ளைகளுக்கு நாத்திகத்தை அறிமுகப்படுத்தாததுதான் பாரபட்சமான வளர்ப்பு முறை. சுதந்திரம் என்று சொல்லி ஒன்றை திணித்து ஒன்றை மறைத்து வைத்து வளர்த்து விட்டு பிறகு அவர்கள் விபூதி குங்குமத்தோடு வந்து நின்ற பிறகு நொந்துகொள்வதில் என்ன பிரயோஜனம்?

சில எளிமையான வழிகள் வாயிலாக நம் வாரிசுகளின் பூஜை அறைக்கு போகும் எல்லா வழிகளையும் அடைத்துவிட முடியும். முதலில் கடவுள் மறுப்பை அறிமுகம் செய்யுங்கள். கூர்ந்து கவனித்தால் சாமி கும்பிடுவது எனும் பழக்கம் இரண்டு வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படுகிறது என்பது தெரியும். ஆகவே அதை மறுப்பதும் அப்போதே கற்றுத்தரப்படவேண்டும். குழந்தைகள் ஓரளவு தனது சூழலை கவனிக்கத்துவங்கும்போது இறை மறுப்பின் அவசியம் பற்றி பேசுங்கள் அல்லது அவர்கள் முன்னால் வேறு நபர்களுடன் அது குறித்து பேசுங்கள். அவர்கள் படிக்கும் வயதுக்கு வந்த உடன் நாத்திகம் பற்றிய புத்தகங்களை நீங்கள் வாசியுங்கள் (அவை நீங்கள் ஏற்கனவே வாசித்ததாயினும் சரி அல்லது உங்கள் லெவலுக்கு மிகவும் அடிப்படை புத்தகமாயினும் (basic) சரி).

கடவுள் மறுப்பை பின்பற்றும் வேறு குழந்தைகளை உங்கள் வீட்டு குழந்தைகள் முன்னால் முடியுமளவு பாராட்டுங்கள், சம காலத்தில் கிடைக்கவில்லையானால் போகிறது. உங்கள் பள்ளிப்பிராயத்தில் சந்தித்த நாத்திக மாணவர்களைப் பற்றியாவது பாராட்டி பேசுங்கள் (இது மிக சிறப்பாக வேலை செய்யக்கூடியது, ஒரு தந்தையால் செய்யப்படும் போது இதன் பலன் பிரம்மிக்கத்தக்க அளவில் இருக்கும்). சாமியார்களின் (எல்லா மதத்தையும் சேர்த்துதான்) லீலாவிநோதங்கள் செய்தியாக வரும்போது உங்கள் குழந்தைகள் முன்னாலேயே கண்டியுங்கள் (சாமியார் செய்திகள் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் வந்துகொண்டேயிருக்கும், ஆகவே அதை செய்வது சுலபமே). மூடத்தனமான பழக்கங்களை பற்றியோ அல்லது அதை பின்பற்றுவோரைப்பற்றியோ குறிப்பிடுகையில் ஒரு கடுமையான விமர்சனத்துடன் அதை செய்யுங்கள், எதையாவது மிதித்த மாதிரி முகத்தை சுழித்து வைத்துக்கொண்டு அதை செய்வது இன்னும் ஷேமமானது.

குழந்தைகள் தங்கள் தாயையும் தந்தையையும் பார்த்தே தங்கள் ஆளுமையை வடிவமைத்துக்கொள்கிறார்கள். ஆகவே நீங்கள் நாத்திகர் என்பதை பெருமையுடன் அடிக்கடி குழந்தைகளிடம் சொல்லிக்கொண்டிருங்கள். வீட்டுக்காரம்மா ஒத்துக்கொள்ளாவிட்டாலும் வீட்டில் பெரியார் படத்தை மாட்டுங்கள். மனைவிக்கு விட்டுத்தர வேண்டிய சங்கதிகள் ஏராளமான இருக்கின்றன. அந்த பட்டியலில் நாத்திகத்தை சேர்க்காதீர்கள்.

கடவுளை மறுப்பவர்கள் அதிகம் தர்மசங்கடத்துக்கு உள்ளாவது கருணாநிதி ஆன்மீகவாதியாவதாலோ அல்லது சபரிமலைக்கு கூட்டம் சேர்வதாலோ இல்லை (ஆன்மீகவாதியாகி கருணா நாத்த்கத்துக்கு சேவைதான் செய்திருக்கிறார்… காரணம் அவர் ஆன்மீக உணர்வு அதிகமாக அதிகமாக அவரது ஊழலும் வளர்ந்திருக்கிறது). மாறாக அவர்களது வாரிசுகள் கடவுள் நம்பிக்கையுடையோராக ஆகையில்தான் பெரும் தர்மசங்கடத்துக்கு ஆளாகிறார்கள். ஆகவே அவர்களே கற்றுக்கொள்வார்கள் என்று சோம்பியிராமல் பிள்ளைகளை நாத்திகர்களாக வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்.

அப்படி செய்யும்போது “நீயே ஒருநாள் கோயில் கோயிலா அலையப்போற பாரு” எனும் சாபங்கள் உங்கள் நெருங்கிய வட்டாரங்களில் இருந்தே கேட்கும். அதைக்கேட்டு பயப்படாதீர்கள் அல்லது கோபப்பட்டு சவால்விடாதீர்கள். இன்றைக்கு நான் சரியான, தெளிவான மனநிலையில் இருக்கிறேன், நாளையே மண்டையில் அடிபட்டு நான் பைத்தியமாகிவிடக்கூடும்.. அதற்காக இப்போதே சட்டையை கிழித்துக்கொண்டு அலைய முடியுமா என்று மென்மையாக கேட்டால் அவர்கள் அடங்கிவிடுவார்கள். நாம் செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அல்ல.. செக்கு எத்தனை மகத்தான கண்டுபிடிப்பு என்ற உண்மையை உணர்ந்தவர்கள் எனும் விவரத்தை அவர்களும் ஒருநாள் புரிந்துகொள்வார்கள்.

நோயைவிடக் கொடியது நோயாளியாய் இருப்பதே.

தமிழ்நாட்டின் மருத்துவ வசதிகளின் நிலை பற்றி எழுதுவதற்கு தமிழகத்தின் எல்லா மக்களிடமும் ஏதாவது ஒரு விசயம் நிச்சயமாக இருக்கும். எனக்கு கொஞ்சம் அதிகமாகவே எழுதுவதற்கு இருக்கிறது. காரணம் உடன்பிறந்தவர்கள் இருவரும் மருத்துவத்துறையில் இருப்பது, தஞ்சாவூரில் வளர்ந்தது (சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஊர்காரர்கள் சிகிச்சைக்கு தெரிவு செய்வது தஞ்சையைத்தான்) என்பது மட்டுமல்ல வருடத்துக்கு நான்கு முறையாவது டாக்டரை பார்த்துத் தொலைக்கவேண்டிய அளவுக்கு உடல்வலு கொண்டவன் என்பதும் ஒரு முக்கியமான காரணமாயிருக்கிறது.

இன்றைய பள்ளிக் குழந்தைகள் எப்படியோ தெரியாது, நான் படித்த காலத்தில் ஒரு வகுப்பில் முக்கால்வாசி மாணவர்கள் தங்கள் எதிர்கால கனவு மருத்துவராவதே என்றுதான் சொன்னார்கள். காரணம் மிக எளிமையானது அப்போது தஞ்சாவூரில் சீக்கிரம் வசதியானவனாக வேண்டுமானால் ஒன்று சசிகலாவுக்கு சொந்தக்காரனாக இருக்கவேண்டும் அல்லது ஒரு மருத்துவராக இருக்கவேண்டும். மிகையான வர்ணனை இல்லை நான் மாணவனாக இருக்கையில் தஞ்சை நகரில் நின்றுகொண்டிருக்கும் பெரும்பாலான கார்கள் Dr. என்ற அடையாளத்தைத் தாங்கி இருக்கும். சாஃப்ட்வேர் ராஜாங்கத்துக்கு முன்னால் மாணவர்களை வசீகரித்த ஒரே படிப்பு மருத்துவமாகத்தான் இருந்தது.

ஆகவே இப்போதைய மருத்துவத்துறையின் பெரும் சுரண்டலுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. நோயாளியின் சட்டைப்பையை சோதனை செய்த பிறகே வைத்தியம் செய்வது எனும் செயலை ஹிப்போகிரெட்டஸ் கற்பனைகூட செய்துபார்த்திருக்க மாட்டார். ஆனால் அவரது பெயரைச் சொல்லி சத்தியம் செய்துவிட்டு வரும் இன்றைய மருத்துவர்கள் இதுபற்றி கொஞ்சமும் கூச்சம் கொள்வதில்லை.

சமீபத்தில் பார்த்த ஒரு விளம்பரமும் தொலைக்காட்சி நிகழ்ச்சியும் நமது மருத்துவத்துறையின் பணத்தாசையையும் சட்டமீறலையும் அப்பட்டமாக வெளிக்காட்டின. அவைதான் இந்தப் பதிவை எழுதவும் தூண்டுதலாக அமைந்தன. கண்ணாடியால் என் அழகே போச்சு, லாசிக் சிகிச்சைக்குப் பிறகுதான் என் அழகு திரும்பி கல்யாணமும் நடந்தது என ஒரு பெண், வாசன் விளம்பரத்தில் சொல்கிறார். அடிப்படை அழகுணர்வுக்கும் மருத்துவத்துக்கும் முற்றிலும் முரணான செய்தியை காசுக்காக தினசரி மக்களிடம் விளம்பரம் செய்கிறது வாசன் கண் மருத்துவமனை. பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் பலர் கூச்சம் காரணமாக கண்ணாடி அணிய மறுக்கிறார்கள் என்று பெற்றோர்கள் குறைபடும் சூழலில் இப்படி ஒரு விளம்பரம் எத்தனை தூரம் சிக்கலானது?

ஜெயா டிவியில் ஒரு மருத்துவர் உடல் எடைகுறைப்புக்கான அறுவை சிகிச்சை ஒன்றைப் பற்றி நிகழ்ச்சி வழங்குகிறார். இரைப்பையையும் குடலையும் சிறிதாக்கி உணவு எடுப்பதை குறைக்கும் சிகிச்சை அது. ஒன்றுக்கு இருமுறை அந்த நிகழ்ச்சியை பார்த்தேன். அடிப்படையான ஒரு செய்தியை மறைத்துவிட்டு அந்த சிகிச்சையை விளம்பரம் செய்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அதி அத்தியாவசியமான சமயங்களைத் தவிர இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படக்கூடாது, இந்த சிகிச்சை இல்லாவிட்டால் நோயாளி மரணமடையக்கூடும் என்ற நிலையிலோ அல்லது கட்டுப்பாடில்லாமல் உணவு உண்ணும் நோய் ஒருவருக்கு இருந்தாலோ மட்டுமே இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம். அனேகமாக இந்த சிகிச்சையை தமிழ்நாட்டில் பிரபலமாக்கியவர் பிரகாஷ் எம் சுவாமி. சில ஆண்டுகளுக்கு முன்னால் அவர் செய்துகொண்ட இந்த அறுவை வைத்தியம் மருத்துவர்களது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. ஏனெனில் இப்படி இரைப்பையும் குடலும் வெட்டியெடுக்கப்படும்போது கல்லீரல் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும் சாத்தியம் உள்ளிட்ட பல மோசமான பின்விளைவுகள் அப்போது பல மருத்துவர்களால் பட்டியலிடப்பட்டன.

இந்த சிக்கல்களைப் பற்றியெல்லாம் லைஃப் லைன் மருத்துவமனை கிஞ்சித்தும் கவலைகொண்டதாக தெரியவில்லை. அதுபற்றி அவர்கள் விளக்கவும் இல்லை. நீங்கள் அழகாக இருக்கலாம், சர்க்கரை இரத்த அழுத்தம் குறையும் என பிரச்சாரம் இருக்கிறதே ஒழிய இதன் பக்க விளைவுகள் பற்றிய குறிப்பு எந்த இடத்திலும் சொல்லப்படவே இல்லை. K.A.S ராமதாசின் லாட்டரி வியாபாராத்தைப்போல போல மருத்துவமனைகள் மாறிவிட்டன என்பதன் சிறிய அடையாளங்கள்தான் மேலே குறிப்பிட்ட இரு விளம்பரங்களும்.

மருத்துவ சுற்றுலாவில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை சென்னை அடைந்துவிட்டது என்று மார்தட்டுகிற ஓசையில் தொன்னூறு சதவிகிதம் மக்களிடம் இருந்து உயர் சிகிச்சை அன்னியப்படுத்தப்பட்ட செய்தி மறைக்கப்பட்டுவிட்டது. சில மாதங்களுக்கு முன்னால் எனது ஒன்றுவிட்ட சகோதரர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக இறந்துபோனார். வாரம் இருமுறை டயாலசீஸ் செய்துகொள்ளவேண்டியதன் செலவும் அதற்கு தஞ்சாவூருக்கு வந்து போகவேண்டிய அலைச்சலும் அவரது நோயைக் காட்டிலும் அவரை அச்சுறுத்துபவையாக இருந்தன. அவரிடம் பேசிக்கொண்டிருந்த வகையில் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது இதைத்தான், ஒருவேளை மன்னார்குடியில் டயாலசீஸ் வசதி இருந்து அதன் செலவு இருநூறு ரூபாயாக இருந்திருந்தால் என் அண்ணன் இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருந்திருப்பார்.

மருத்துவர் மாத்ருபூதம் தனது மாதாந்திர மருத்துவ செலவாக குறிப்பிட்டது எழுபதாயிரம் ரூபாய். பத்து சதவிகித மக்கள் உளவியல் பிரச்சனை உடையவர்கள் என்கிறது ஒரு ஆய்வு. ஒரு முறைக்கான ஆலோசனைக் கட்டணமாக ஐந்நூறு ரூபாய் வசூலிக்கிறது கோவை வழிகாட்டி மருத்துவமனை. தொடர் சிகிச்சை தேவைப்படும் மனநல பிரச்சனைக்கு ஒரு சாதாரண மருத்துவமனையின் கட்டணம் இதுவென்றால் பாண்டிமடத்திலும் ஏர்வாடியிலும் கூட்டம் சேராமல் என்ன செய்யும்?

சாதாரண காய்ச்சலையும் சளியையும் தவிர ஏனைய உடல் உபாதைகள் பெரும் பணம் விழுங்குபவையாக மாறிவிட்டன. மருத்துவருக்கான கமிஷனை நீக்கினால் இப்போதைய விலையில் நாற்பது சதத்தை மட்டும் நாம் ஸ்கேன் கட்டணமாக செலுத்தினால் போதும். பல மருந்துகள் மருத்துவமனைக்கு விற்கப்படும் விலைக்கும் நோயாளிக்கு விற்கப்படும் விலைக்கும் உள்ள வேறுபாட்டை கேட்டால் நீங்கள் மனநோயாளியாக வேண்டியிருக்கும் (செரிடலீன் ஹைட்ரோகுளோரைடு மாத்திரை ஒன்றின் விலையே எட்டு ரூபாயாகிறது, ஆகவே மனநலத்தை பாதிக்கும் தகவல்கள் இங்கு வேண்டாம்.)

பிரச்சனை கட்டணத்தில் மட்டும் இருப்பதில்லை. பொதுவான தொழில் தர்மமும் நியாய உணர்வும் மருத்துவத்துறையில் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. உங்கள் மருத்துவரிடம் இதையெல்லாம் கேளுங்கள் என்று ஒரு பட்டியலே (நோயாளிகளின் உரிமைகள்) திருவாரூர் மருத்துவர் ஜெயசேகரது மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள தஞ்சையில் ஒரு மருத்துவரது மருந்து சீட்டில் “நோயளியுடன் வருபவர்கள் டாக்டரிடம் கேள்வி கேட்கக்கூடாது” எனும் உத்தரவு ரப்பர் ஸ்டாம்ப் குத்தப்பட்டிருக்கிறது. இப்போது பல மருத்துவர்கள் நோயாளியின் நாடியையும் ரத்த அழுத்தத்தையும் பார்ப்பதேயில்லை. அவை அவரது உதவியாளர் மூலம் பார்க்கப்பட்டு அந்த சீட்டு நோயளிவசம் தரப்படுகிறது. தேவை ஏற்பட்டால் ஒரு மருத்துவர் அவரது நோயாளியின் மலத்தைக்கூட நேரடியாக பார்த்தாக வேண்டும். இங்கோ நோயாளியை தொட்டுகூட பார்க்க நேரமில்லாத டாக்டர்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ச்சி அடுத்த பதிவில்… (நீளம் கருதி இருபாகங்களாக பதிவிடப்பட்டிருக்கிறது.)

 

-

தேவைக்கு மேலிருப்பவை திருடப்பட்டவையே.

எனக்காக சில வாக்கியங்கள்.

நவம்பர் மாத மத்தியில் தமிழ்மணத்திலிருந்து நட்சத்திர அழைப்பு வந்தபோது நான் கொஞ்சம் குழம்பித்தான் போனேன். காரணம் ஏழு பதிவுகள் எழுதவேண்டும் என்பதாக இருக்கலாம். ஒரு பிறவி சோம்பேறிக்கு இருபதுநாளில் ஏழு கட்டுரைகள் எழுதுவது எப்படி சாத்தியம்? (நான் எங்க போவேன்.. எனக்கு யார தெரியும்…) ஆகவே அவர்களிடம் மேலும் இருவாரங்கள் அவகாசம் வாங்கி, இப்போது அந்த நாளும் வந்தாயிற்று.

ஏதாவது செய்தியைத் தொடர்ந்தே நான் பலமுறை பதிவிட்டிருக்கிறேன், ஆகவே கட்டுரைகளுக்கான மேலோட்டமான யோசனையை கொண்டுவருவதே சற்று சவாலாக இருந்தது. காலியான மனதுடன் எப்படி ஏழு தலைப்புக்களை பிடிப்பது என்கிற குழப்பத்திலேயே பாதிநாட்களை கடத்திவிட்டேன். நல்வாய்ப்பாக உன்னதம் இதழுக்கு எழுதி பதிவேறாத பணம் எனும் கட்டுரை கையில் இருந்தது (அதுதான் முதல் கட்டுரையாக கீழே தரப்பட்டுள்ளது). மீதி கட்டுரைகளை முடிந்த அளவுக்கு வெவ்வேறு தளங்களில் இருந்து எடுத்து எழுத முயற்சி செய்திருக்கிறேன்.

உங்கள் வாசிப்பையும் விமர்சனங்களையும் எதிர்நோக்குகிறேன்.

நன்றி,

வில்லவன்.

————————————————————————

பணம், கடந்த இரு நூற்றாண்டுகளாக மிக அதிகமாக உச்சரிக்கப்பட்ட சொல்.இன்று உலகின் பெரும் பேரழிவுகளுக்கான உந்துசக்தி. இதை கைப்பற்றும் விதத்தில்தான் நீங்கள் நல்லவரா, கெட்டவரா, இளிச்சவாயரா அல்லது திறமைசாலியா என்பது முடிவு செய்யப்படும். திருடனாய் இருந்தாலும் திருடும் பணத்தின் அடிப்படையிலேயே ஒருவன் போலீசாரால் நடத்தப்படுவான். நூறுரூபாய் வழிப்பறி செய்பவன் கைவிலங்கிட்டும் மூவாயிரம் கோடி திருடிய கேதான் தேசாய் மாகாராஜா போலவும் நடத்தபடுவதன் பின்னனியில் வேறென்ன இருக்க முடியும்? பத்து ரூபாய் கஞ்சா விற்பவனை விட கோடி ரூபாய் கோகைன் விற்பவனுக்கு சிறையில் சட்டபூர்வமாகவே பல சலுகைகள் வழங்க இயலும். சந்தேகமில்லை பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை எனும் சொற்றொடர் நூறு சதவிகிதம் பொருந்தும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

மனிதன் தனித்த ஒரு இடத்தில் நிரந்தரமாக வாழத்துவங்கியபோதே பணம் போன்றதொரு பொருளுக்கான தேவையும் எழுந்துவிட்டது. உங்களுக்கு வேண்டியது யாவற்றையும் உங்களால் உற்பத்தி செய்ய இயலாது. நீங்கள் கூடுதலாக உற்பத்தி செய்ததைக் கொடுத்து உங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்ளலாம் எனும் பண்டமாற்று முறை அவ்வளவு சிறப்பானதாக இல்லை. எந்தப் பொருளுக்கு எவ்வளவு மதிப்பு என்பது எப்படித் தீர்மானிப்பது? ஒருவர் அரிசியை உற்பத்தி செய்கிறார் அவருக்கு பருப்பு தேவையாக இருக்கிறது என்று வைத்துக்கொண்டால் எவ்வளவு அரிசியைக் கொடுத்து எவ்வளவு பருப்பை வாங்குவது என்ற குழப்பம் அங்கு மேலிடும். ஆகவே இரண்டு பொருட்களை பரிமாற்றம் செய்துகொள்ள இடையே ஒரு பொதுவான ஒரு வஸ்து தேவையாக இருந்தது. இந்த இடைப்பட்ட பரிமாற்றத்துக்கான பல பொருட்கள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. ஆலிவ் எண்ணையும் மீன் எண்ணையும்கூட பணத்திற்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

பணம் எனும் பொருள் வணிகத்தை சுலபமாக்கியிருக்கிறது என்பதை நம்மால் உணர இயலாது. ஒரு உதாரணத்தை சொல்வதன் மூலம் இதை ஓரளவு புரியவைக்க முடியும். இன்றைய மியான்மரில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை நடந்த சந்தையில் நீங்கள் பொருட்கள் வாங்கப் போவதாக வையுங்கள்,  நீங்கள் ஒரு கட்டி வெள்ளியை நீங்கள் எடுத்துச்செல்லவேண்டும். வாங்கும் பொருளுக்கு ஈடாக  கொஞ்சம் வெள்ளியைத் தரவேண்டும். ஆகவே ஒரு உளியையும் தராசையும் நீங்கள் எடுத்துச்செல்ல வேண்டும். போகட்டும் என்று நீங்கள் அதையும் எடுத்துச்சென்றாலும் உங்கள் தராசும் பொருளை விற்பவனது தராசும்  நியாயமானது என்று எப்படி நம்புவது? ஆகவே எல்லா சந்தைகளிலும் சிலர் தராசுடனும் எடைக் கற்களுடனும் எடைபோடும் வேலைக்காக இருப்பார்கள், நடுநிலையான எடைபோடுவதற்காக அவர்களுக்கும் கூலியை வெள்ளியில் தரவேண்டும்.  இந்தத் தலைசுற்றவைக்கும் ‘ஷாப்பிங்குடன்’ இன்றைக்கு அட்டையை உரசி  வாங்குவதை கொஞ்சம் ஒப்பிட்டுப்பாருங்கள்.

தேவைக்கு என்று மட்டும் இருந்தவரை நாணயம் ஒரு ஆட்கொல்லியாக இருந்திருக்க முடியாது. கள்ள நாணயம் முகம்மது பின் துக்ளக் காலத்திலிருந்தே இருக்கிறது (அவர்தான் தோலாலான நாணயத்தை அறிமுகப்படுத்தினார்). பணத்தின் மதிப்பு வரையறைக்கு உட்பட்டதாக்கப்பட்ட பிறகும் அதன் பரிமாற்றங்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட பிறகும்தான் அதன் மோசமான விளைவுகளை நாம் சந்திக்கிறோம்.

சர்வதேச பொதுச்செலாவனியாக அமெரிக்க டாலர் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன் அமெரிக்கா தனது டாலர் இருப்பை இருமடங்காக உயர்த்தியது, கூடுதலாக அச்சடித்த பணத்திற்கு ஈடாக தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கவேண்டும் என்பது நிபந்தனை. ஆயினும் இன்றுவரை அந்த நிபந்தனை நிறைவேற்றப்படவில்லை. அதிகாரமிருந்தால் வெறும் காகிதத்தை மட்டும் சொத்தாக மாற்ற இயலும் என்பது இதில் கவனிக்கப்படவேண்டிய செய்தி.

பணம் விழுங்கிய முதல் விசயம் தொழில் தர்மம். உண்ண லாயக்கில்லாத காலாவதி உணவை அம்பானியின் கம்பெனி மலிவான விலைக்கு விற்பனை செய்கிறது, பொருள் மலிவானதாக இருக்க வேண்டுமென்றால் உன் உடல் நலத்தை விலையாகக் கொடு என்கிறார் அம்பானி ( சென்னையில் உள்ள ஒரு ரிலையன்ஸ் கடையில் காலாவதியான அமேஸ் ப்ரெயின் ஃபூட் எனும் குழந்தைகள் உணவு பாதி விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது).

அணுவிபத்து இழப்பீட்டு மசோதா எத்தனை பெரிய அணுவிபத்து இந்தியாவில் நடந்தாலும் முதலாளிகள் ஐந்நூறு கோடி தந்தால் போதும் என்கிறது, இதே முதலாளிகள் அமெரிக்காவில் விபத்து நடந்தால் இதுபோல நூற்று நாற்பது மடங்கு அதிகத் தொகை தரவேண்டும். அணு முதலீடுகள் வந்துவிட்டால் ஊரெல்லாம் விளக்கெரியும் என்று நமக்கு ஆசை காட்டுகிறது அரசு, ஊரே எரிந்தாலும் ஐந்நூறு கோடி கொடுத்தால் போதும் என்று கணக்கிடுகின்றன நிறுவனங்கள். விமான விபத்தில் செத்தவர்களுக்கு “இழப்பீடு” எழுபது லட்சம் அரசுப்போருந்து விபத்தில் இறந்தவருக்கு முதல்வரின் “கருணைத்தொகை” ஐம்பதாயிரம், வேறுபாடு புரிகிறதா? ஒரு உயிரின் விலை அவன் வசிக்கும் தேசத்தையும் அவனது பயணச்சீட்டையும் பொறுத்தது, யார் சொன்னது உயிர் விலைமதிப்பற்றது என்று?

உலகமயமாக்கல் எனும் வார்த்தையின் பொருளே பணத்தை தடையில்லாமல் சுரண்டுவது என்பதுதான்.  ஈராக் போரில் பங்கேற்காத நாடுகள் போருக்குப் பிறகான புணரமைப்புப் பணிகளில் பங்கேற்க முடியாது என்றார் ஜூனியர் புஷ். காண்ட்ராக்ட் வேண்டுமானால் படுகொலைக்கும் பங்காளியாக வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தது வெள்ளை மாளிகை. எத்துனை நாடுகள் கோபப்பட்டன? ஈழத்துப் போரழிவுக்குப்பிறகு, ஒவ்வொரு பேரழிவுக்குக் பின்னாலும் ஒரு சிறப்பான வாய்ப்பு காத்திருக்கிறது என்றார் பசுமைப்புரட்சி நாயகன் எம்.எஸ்.சுவாமிநாதன். அப்போது தமிழ்நாட்டில் அவருக்கு எதிராக பெரிய கண்டனங்கள் ஏன் எழவில்லை? காரணம் எளிமையானது, நாடுகளும் நிறுவனங்களும் மட்டுமல்ல நம்மில் பலரும் சுவாமிநாதனைப்போலவே சிந்திக்குமாறு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம்.

உலகமயமாக்கலில் முதல் வெற்றி மக்கள் தங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவர்களாக மாற்றுவதில்தான் இருக்கிறது. நம் நாட்டிலும் அதுதான் நடந்தது. மின்வெட்டா? ஊரைகூட்டி ஏன் ஆர்பாட்டம் செய்யவேண்டும், ஒரு இன்வெர்ட்டர் வாங்கு. விலைவாசி அதுபாட்டுக்கு உயர்ந்துகொண்டுதான் இருக்கும், குறைக்கச்சொல்லி ஏன் கத்தவேண்டும், கூடுதலாக சம்பாதித்தால் போகிறது? பணத்தை நோக்கி ஓடு எனும் ஒரே பாடத்தின் மூலம்  இந்தியாவின் பெரும்பான்மை நடுத்தர வர்கத்து மக்கள் இப்படிப்பட்ட எருமைமாட்டு சிந்தனை திணிக்கப்பட்டிருக்கிறது. நானும் என் சகோதரனும் IT படிக்காததுதான் என் அம்மாவின் குறையாக இருக்கிறதேயன்றி மற்ற துறைக்காரர்களுக்கு  ஏன் சம்பளம் குறைவாக இருக்கிறது எனும் கேள்வி அவருக்கு எழுவதே இல்லை.

சௌகர்யங்களை அனுபவிக்க கற்றுத்தந்த பணம் அதற்கு பதிலாக உரிமையை கேட்கும் பழக்கத்தை மறக்கடித்தது. என் மகன் யோக்கியன் என்று எந்த தந்தையாவது சொன்னால் அதுக்கென்ன இப்போ என்ற நக்கலான பதில்தான் எதிரிலிருந்து வரும், மாதம் என்பதாயிரம் சம்பாதிக்கிறான் என்று ஒரு தந்தை சொன்னால் அதுக்குமேல என்னவேணும் என்ற கௌரவமான பதிலை பெற்றுவிடலாம்.

சம்பாதிக்கும் வெறியை தூண்டிவிடும் அதே அளவுக்கு நுகர்வு வெறியும் தூண்டப்படுகிறது. வாங்கும் சம்பளத்துக்கு ஏற்ப கடன் தரப்படும், அதற்கேற்ப நீங்கள் உங்கள் வாழ்வின் வசதிகளை மேம்படுத்திக்கொள்ளலாம். சவுரியத்துக்கான பணத்தேவையும் பணத்துக்காக விட்டுத்தரப்படும் சவுகர்யங்களும் ஒன்றோடொன்று போட்டியிடுகின்றன. எது வெற்றி பெற்றாலும் நாம் கடனாளியாவது நிச்சயம். சேமிப்பதோடு நிறுத்திக்கொள்ள விரும்பினாலும் நீங்கள் தப்ப முடியாது.

பங்கு சந்தையில் பணத்தை கொட்டிவிட்டு மறுவேலை பாருங்கள் என்று எல்லா ஊடகங்களும் கத்தித் தீர்க்கின்றன. நான்கு ஆண்டுகளில் நூறு சதவிகித வளர்ச்சி நிச்சயம் என்று சொல்லிக்கொண்டே மிகுதியாக இருக்கும் பணத்தை மட்டும் முதலீடு செய்யுங்கள் என்று எச்சரிக்கையும் செய்கிறார்கள். உள்ளிருக்கும் செய்தி ஒன்றுதான் கூடுதலாக இருக்கும் பணத்தை ஒரு முதலாளிக்கு கொடுத்துவிடு. உன் தேவைக்கான பணத்தை முதலீடு செய்யாதே, ஏனெனில் வேலைசெய்து வருமானத்தைப் பெருக்கவும் சேமித்ததை முதலீடாக்கவும் முடிகிற இருபலன்தரும் அடிமைகள் இருப்பது இன்றைய முதலாளிகளுக்கு அவசியம்.

குடும்பத்தகராறிலிருந்து குலோபல் வார்மிங் வரை எல்லா பிரச்சனைகளுக்குப் பின்னாலும் பணமிருக்கிறது. உங்களுக்குப் பணம் வேண்டும் அது உங்களுக்கு கீழிருப்பவன் சாப்பாட்டை பறித்துவிட்டு வந்ததானாலும் சரி என்று நீங்கள் ஒரு நியாயம் கற்பித்துக்கொள்ளும் வேளையிலேயே உங்களிடமிருந்து பறித்துக்கொள்ளும் உரிமையை உங்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பவனுக்கு நீங்கள் வழங்கியதாகத்தான் பொருள். மதுகோடா என்ற ஒருவனின் சொத்து மதிப்பு சட்டீஸ்கர் மாநிலத்தில் வாழும் எல்லா சிறுவிவசாயிகளின் மொத்த சொத்துமதிப்பைவிட அதிகம். மதுகோடாவின் மொத்த ஊழல் மதிப்பைக் காட்டிலும் முகேஷ் அம்பானியின் மும்பை வீட்டின் மதிப்பு அதிகம்.

அம்பானி உழைத்து முன்னேறினார் என்று நாம் வாதிட்டால் மதுகோடாவும் ஏதோ ஒரு வகையில் உழைத்தே இந்த பணத்தை சம்பாதித்திருக்கிறார், ஆகவே அவரையும் நாம் உழைப்பால் உயர்ந்தவர் என்றே குறிப்பிட்டாக வேண்டும். அம்பானி உழைத்து இந்த சொத்தை சம்பாதித்தார் என்றால் சொத்து ஏதுமில்லாத என்பது சதவிகித மக்களை நாம் உழைக்காத சோம்பேறிகள் என்று சொல்வதாகத்தான் பொருள்.

பணமே எல்லாம் எனும் சிந்தனையை நம் மூளையில் இருந்து வெளியேற்றுவதுதான் நாம் மனிதனாக வாழ்வதற்கு எடுக்கப்படும் முதல் முயற்சியாக இருக்கும். ஏனெனில் ஒருவனிடம் தேவைக்கு அதிகமாக இருக்கும் பணம் எல்லாம் யாரோ ஒருவரிடமிருந்து திருடப்பட்டதே.

ஒரு அறிமுகம், சில விளக்கங்கள் மற்றும் பற்பல நன்றிகள்.

(தளத்திற்கு புதியவர்கள் இப்பதிவை வாசிப்பதைத் தவிர்க்கவும், ஏதேனும் பொதுவிவகாரத்தை எதிர்நோக்கி இப்பதிவை திறந்திருப்பீரேயானல் ஏமாற்றமடைவீர்கள்., தயவுசெய்து வேறு நல்ல தளத்துக்கு செல்லவும் ).

பல்வேறு குழப்பங்களுடனேயே இப்பதிவை துவக்குகிறேன். வழக்கமாக கட்டுரைகள் எழுதத்துவங்குகையில் என்னிடமிருக்கும் திட்டமிடல் எதுவும் இப்போதில்லை. வில்லவன் என்ற பெயரில் எழுதுகிற என்னை அறிமுகம் செய்துகொள்ள மட்டுமே இந்த இடுகை. பள்ளிப்பருவத்தில் இருந்தே எதையும் முழுமையாகவே அல்லது தொடர்ந்தோ நான் செய்ததாக வரலாறில்லை. ஆகவே வில்லவன் வலைப்பூவை தொடங்கி சில கட்டுரைகள் எழுதிய பிறகு தொடர்ந்து எழுதலாம் என்ற யோசனை வந்த போது குறைந்தபட்சம் ஐம்பது கட்டுரைகளேனும் எழுதிய பிறகே என்னை அறிமுகம் செய்துகொள்ளவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். வலைப்பூ துவங்கி சற்றேறக்குறைய ஓராண்டு முடிந்திருக்கிறது, அறிமுகம் செய்துகொள்ள காலம் இப்போதுதான் வந்திருக்கிறது. ஆயினும் அதற்கான தகுதி வந்துவிட்டதாக நான் கருதவில்லை.

இலங்கையில் இறுதிகட்டப்போர் துவங்கியபோதுதான் இணையத்தில் தமிழை தீவிரமாக வாசிக்க ஆரம்பித்திருந்தேன். அப்போது பல தளங்களில் கருத்துக்களை பின்னூட்டமிட விரும்பினாலும் தமிழில் எழுதுவது எப்படி என்பது தெரியாதாதமையால் அக்காரியத்தை செய்ய இயலவில்லை. சில முறை ஜிமெயிலில் எழுதி அதை வெட்டி ஒட்டலாம் எனக்கருதி முயற்சி செய்து படுதோல்வி அடைந்திருக்கிறேன். முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களுக்குப் பிறகு பல நாட்கள் இணையத்தை விட்டு விலகியிருந்தேன் இணையம் மட்டுமல்ல செய்தி வழங்கும் எல்லா ஊடகங்களையும் காணாது விலகியிருந்தேன். ஒரு வாரத்தில் ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்பதையும் புலிகள் வீழ்ந்துவிட்டார்கள் என்கிற செய்தியையும் கேட்குமளவுக்கு மனதை தயார் செய்யவே இரண்டு மாதங்களானது (பல விமர்சனங்கள் இருப்பினும் பிரபாகரன் மீதான எனது பால்யகால ஈர்ப்பு இன்னமும் குறையவில்லை.. இப்படிப்பட்ட வழிபாட்டு மனோபாவமும் அவரது துயரமான முடிவுக்கு ஒரு காரணம் என்கிற கசப்பான உண்மையை உணர்ந்தும்கூட).

ஓரளவு மனோபலம் வந்தபிறகு மீண்டும் இணையத்தில் வாசிப்பை தொடங்கினேன். இடைவெளிக்குப் பிறகு என்பதால் இயல்பாகவே கூடுதல் நேரத்தை இணையம் எடுத்துக்கொண்டது. அப்போது எதேச்சையாக கிடைத்ததுதான் அழகி எனும் தமிழ் மென்பொருள். சரி இனி சுலபமாக பின்னூட்டமிடலாம் என்று நினைத்தது மீண்டும் பிழையானது. பல வார்த்தைகளை என்னால் தட்டச்சு செய்யவே முடியவில்லை. அதே காலத்தில் பின்னூட்டமிட வலைப்பூ அவசியமோ எனும் சந்தேகமும் எனக்கு இருந்தது (வினவு பின்னூட்டப் பகுதியில் வலைதள முகவரி எனும் பகுதி இருந்தமையால் வந்த சந்தேகம் இது). ஆகவே ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி எழுதி தட்டச்சைப் பழகுவது அப்படியே அதை ஒரு வலைபூவில் வலையேற்றுவது எனும் விபரீத எண்ணம் உருவானது.

எந்த பெயரில் வலைப்பூவை ஆரம்பிப்பது என்பது முதல் கேள்வி. சொந்தப் பெயரில் வலைப்பூ ஆரம்பித்து சொதப்பிவிட்டால்? அதனால் ஒரு மாற்றுப் பெயர் அவசியமானது. சும்மா பேருக்கு ஆரம்பிப்பதால் சிறப்பான தனித்துவமான ஒரு பெயரை தேடும் சூழல் இருந்திருக்கவில்லை. சிறு வயதில் எனக்கு வைக்கப்பட்ட பெயர் வில்லவன் கோதை. பிற்பாடு எங்கள் ஆத்தா (அதாவது பாட்டி (அப்பாவின் அம்மா)) இறந்தபோது அவர் என்னை செல்லமாக அழைத்துவந்த பெயருக்கு நான் மாற்றப்பட்டேன். இருபத்தைந்து ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத பெயரை வலைதள முகவரிக்கு பயன்படுத்துவது என்பது முடிவானது. அடுத்த பிரச்சனை எதைப் பற்றி எழுதுவது என்பது. அதிகம் சிரமப்படாமல் இருக்க மற்றவர்க்கு பரிச்சயமான மற்றும் எனக்கு எழுத எளிதான திருப்பூரை எடுத்துக்கொண்டேன். இப்படித்தான் எனது villavan.r எனும் பிளாகர் தளம் துவங்கியது.

 

இது நியாயமாக நான்கு அல்லது ஐந்து இடுகைகளுடன் முடிந்திருக்கவேண்டும். ஆச்சரியப்படத்தக்க வகையில் சில பின்னூட்டங்கள் வந்தன (ஒன்றுகூட வராது என்றே கருதினேன்), உலகின் இன்னொரு கோடியில் இருந்த பள்ளிக்கூட நண்பன் பூங்குன்றன் இது நான்தான் என்பதைக் கண்டுபிடித்து தொலைபேசினான், ” சிரமம் பார்க்காமல் தொடர்ந்து எழுதுப்பா” என்று இரண்டொரு முறை நினைவுபடுத்தினார் என் அப்பா. இவைதான் நான் வலையுலகில் ஒரு ஓரமாகவேனும் நிற்கலாம் என்று முடிவெடுக்கக் காரணமாக அமைந்தன. ஆயினும் பிளாக்ஸ்பாட் அவ்வளவு எளிதானதாக தோண்றவில்லை. எப்படி இருக்கிறது என்று சோதனை செய்துபார்க்க துவங்கப்பட்ட வோர்டுபிரஸ் வலைப்பூ மிக சுலபமாக இருந்தமையால் அதையே தொடர்வது என்று முடிவானது.

அனேக விசயங்களில் நான் சிரமப்பட்டதே இல்லை. எனக்கானவை பலவற்றை எனை சுற்றியிருப்பவர்களே செய்திருக்கிறார்கள், என் அலுவலகப் பணிகளில்கூட. எழுத்திலும் அதுதான் நடக்கிறது. பல கட்டுரைகளுக்கான யோசனைகள் மற்றவர்களிடமிருந்துதான் கிடைக்கின்றன. அரசியல் தொடர்பான கட்டுரைகளின் உள்ளடக்கத்தில் பாதி, நான் கேட்ட அரசியல் விவாதங்களில் இருந்தே பெறப்பட்டது. ஒரு முறைகூட பதில் சொல்லாவிட்டாலும் தொடர்ந்து பின்னூட்டமிடும் நண்பர்கள், மற்றவர்களுக்கு அறிமுகம் செய்த நண்பர்கள் என நன்றிக்குரியவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். கட்டுரைகளின் உள்ளடக்கத்திலிருந்து அதன் பரப்பை விசாலப்படுத்தியதுவரையான நிகழ்வுகளில் இவர்களது பங்களிப்பைப் கணக்கிட்டால் எனது பணி இத்தளத்தில் டி.டி.பி வேலை செய்தது மட்டுமே.

 

என் மீதே என்னால் வைக்க முடிகிற விமர்சனம், நான் பின்னூட்டங்களுக்கு பதில் தருவதில்லை என்பதுதான். இதற்கு நான் எழுதும் சூழ்நிலையை விளக்கியாக வேண்டும். பகலில் அலுவலகக் கணிணி இணைப்பில் வாசிப்பது சாத்தியம், ஆனால் எதையும் எழுத இயலாது. இணைய இணைப்பு இல்லாத வீட்டுக் கணிணியில் எழுதுவது மட்டுமே சாத்தியம். இப்படியான இருவேறு வாய்ப்புக்களை இணைத்து வேலைசெய்தால் மட்டுமே என்னால் பதில்களை எழுத இயலும். இது எளிதானதே என்றாலும் என் சோம்பேறித்தனம் அதற்கு அனுமதித்தாக வேண்டுமென்பதுதான் அதன் ஆகப்பெரிய இடையூறு. சில இடுகைகளைத் தவிர ஏனையவை எல்லாம் இரவு பத்து மணிக்கு எழுதத் துவங்கி இரண்டு அல்லது மூன்று மணிக்கு நிறைவுபெற்றவையே. காலம் கடந்தமையால் பாதியில் கைவிடப்பட்டவை மட்டும் இருபத்துயோரு கட்டுரைகள். “காதல்” கட்டுரையின் இறுதிப் பாகம், கடைசி பத்தி எழுத முடியாமையால் ஒரு மாதமாக டிராப்டில் இருக்கிறது.

பாராட்டி எழுதப்படும் பின்னூட்டங்களுக்கு எப்படி பதில் எழுதுவது என்று எனக்கு இப்போதுவரை தெரியவில்லை. ஒன்றிரண்டைத் தவிர மற்ற இடுகைகள் அவசரமாக முடித்துவைக்கப்பட்டவை. அவை பாராட்டப்படுகையில் அதற்குத் தகுந்த அளவு நான் உழைப்பை தரவில்லை என்கிற கூச்சம்தான் வருகிறதேயன்றி நன்றி சொல்லத் தோன்றவில்லை. நண்பர் இராவணன் எழுதிய விமர்சனம் ஒன்று “முதல்ல நிறைய படிங்க.. அப்புறம் எழுதலாம்” என்று பொருள்படும்படி வந்திருந்தது. அவருக்கு மட்டும் பதிலை மறக்காமல் எழுதிவிடவேண்டும் என்று நினைத்தேன், அதுவும் முடியவில்லை. அந்த பதில் இதுதான் ” நிறைய படித்துவிட்டு பிறகுதான் எழுதவேண்டும் என்றால் நான் எந்த காலத்திலும் எழுத முடியாது. ஆயினும் நிறைய வாசி எனும் உங்கள் ஆலோசனை முற்றிலும் சரியானது, இனியாவது அதற்கு (மட்டும்) நிச்சயம் முயற்சிப்பேன்”. ஆகவே நண்பர்களே சூழல் சாதகமானவுடன் உடனுக்குடன் பதில் எழுதுகிறேன். அதுவரை முன்தேதியிட்ட எனது மன்னிப்பையும் நன்றியையும் உங்களுக்கு அர்பணிக்கிறேன் (புரியலையின்னா டெடிகேட் பண்றேன்னு படிச்சுகோங்க).

இந்த வலைப்பூ (எனக்கு) கொண்டுவந்த ஆச்சர்யங்கள் ஏராளம். பத்து பதிவுகள்கூட எழுதப்படாத நிலையில் எனது கட்டுரைகள் வினவு தளத்தில் வெளியிடப்பட்டன. போதுமான தரவுகளோடு எழுதும் பழக்கம் இல்லாத எனக்கு புதிய கலாச்சாரத்திற்கு கட்டுரை எழுத வேண்டிய நிலை வந்தது முதல் திகைப்பு என்றால், ‘சுமாராத்தான் தம்பி இருக்கு’ என்று என் அப்பா சொன்ன அக்கட்டுரை வெளியீட்டிற்கு தெரிவு செய்யப்பட்டது இன்னும் பெரிய திகைப்பு (சிறப்பானதாகத் தோன்றவில்லை என்று சொல்லித்தான் அனுப்பினேன்). வாசிப்பதற்காக திறந்த கலையரசனின் தளத்தில் அவர் வாசிக்கும் வலைபூக்கள் பட்டியலில் என் தளமும் இருந்ததை பார்த்தபோது ‘உனக்கு இதெல்லாம் கொஞ்சம் ஜாஸ்திதான்’ என்று என் உள்ளம் சொன்னதென்னவோ நிஜம். ஆயினும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரங்கள் என்றால் இவைதான்.

நன்றி அறிவிப்பு இல்லாமல் இப்பதிவை எப்படி நிறைவு செய்வது? இந்தத் தளத்தில் சொல்லிக்கொள்ளும்படியான நல்ல விஷயம் ஒன்றேனும் இருக்குமானால் அதற்கு பொறுப்பானவர் என் அப்பா. நாங்கள் சமூகத்தை பார்க்கும் பார்வை அவரைப் பார்த்து கற்றுக்கொண்டதுதான். பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைப்பதில் அவருக்கு இருந்த பிடிவாதமே  எங்கள் ரசனைக்கும் ஆளுமைக்கும் அடிப்படையாக இருக்கிறது. அவர் எங்களுக்கு கொடுத்த சிறப்பான விசயங்களில் முதலிடம் பெறுவதும் இதுவே (இதை என் அண்ணனும் தங்கையும்கூட வழிமொழிவார்கள் என்று நம்புகிறேன்). இவ்வலைப்பூ தொடங்கப்பட்டபோதும் வினவில் கட்டுரைகள் வெளியானபோதும் பு.கவில் கட்டுரைகள் வெளிவந்தபோதும் என்னைவிட மகிழ்ச்சியடைந்தவர் அவரே. இப்போதும் நாங்கள் பேசிக்கொள்ளும்போது அவர் இரண்டாவதாக கேட்கும் கேள்வி என் அடுத்த இடுகை பற்றியதாகவே இருக்கிறது. ஆகவே என் முதல் நன்றி அவருக்கானதே.

அடுத்து குறிப்பிட விரும்புவது வினவு குறித்து. நான் வாசிக்கும் மிகச்சில வலைதளங்களில் வினவு முதலானது. வேர்டுபிரஸ் வலைப்பூவாக வினவு இருந்தபோதிலிருந்து அதன் வாசகன் நான். அங்கு எனது பதிவு வெளியானபோது அதிகம் அச்சமடைந்தேன் என்பதே நிஜம். அறிவார்ந்த மற்றும் நேர்மையான பார்வைகொண்ட வாசகர்கள் மத்தியில் ஒரு கற்றுக்குட்டியின் படைப்பு வைக்கப்படும்போது வரும் பதட்டம் அது. ஆனால் வினவும் அதன் வாசகர் வட்டாரமும் எனக்களித்த ஆதரவு மகத்தானது. அங்கு வெளியான என் கட்டுரைகளைக் காட்டிலும் அதற்கு வந்த பின்னூட்டங்கள் சிறப்பானதாவும் பொருள் பொதிந்ததாகவும் இருந்தன (கார்க்கி போன்றோரின் பின்னூட்டத்துடன் ஒப்பிட்டால் பிடி கத்திரி பற்றிய என் பதிவெல்லாம் ஒன்றுமேயில்லை ). வினவுக்கும் அதன் வாசகர்களுக்கும் நன்றி.. அரசியலை அணுகும் விதத்தை அங்கிருந்துதான் ஓரளவு கற்றுக்கொண்டிருக்கிறேன். இட்லிவடை, பட்டாபட்டி, செங்கொடியின் சிறகுகள் எனும் தளங்களும் இன்னும் என் நினைவுக்கு வராத பல பதிவர்களும் நான் யாரென்றுகூட தெரியாது எனது தளத்தை அறிமுகம் செய்தார்கள்,  இன்னும் பலர் உரிய பதில் கிடைக்காத நிலையிலும் தொடர்ந்து பின்னூட்டமிடுகிறார்கள். நன்றி தோழர்களே., உங்கள் வாயிலாகக் கிடைத்த ஊக்கமே எனை அடுத்தடுத்த கட்டுரைகளை எழுதும்படி தூண்டியிருக்கிறது.

ஒரு வருடம் கடந்தும் இன்னமும் வில்லவன் தளத்தின் வருகைப் பதிவு இருபத்தைந்தாயிரத்தை தாண்டவில்லை. புதிய இடுகைகள் வெளிவந்த ஓரிரு நாட்களைத் தவிர ஏனைய நாட்களில் சராசரியாக ஐம்பது முறை மட்டுமே வாசிக்கப்படும் மிகச்சிறிய வலைப்பூ இது.  ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்துக்கொண்டு அதற்கான முழுமையான தயாரிப்புக்களோடு கட்டுரைகள் எழுதுவது என்கிற இலக்கு இருக்கிறது அதற்கான பயிற்சிக்களம் என்று வேண்டுமானால் இத்தளத்தை இப்போதைக்கு சொல்லிக்கொள்ளலாம்.  முழுமையான மற்றும் நேர்த்தியான ஒரேயொரு பதிவையேனும் எழுதிவிடுவேன் என்ற உறுதியை என்னால் இப்போது தரமுடியாது. ஆனால் பொறுப்பற்ற வகையிலோ வெறும் அரட்டையாகவோ ஒரேயோரு பதிவுகூட என்னிடமிருந்து வராது எனும் உறுதியை நிச்சயமாக தரமுடியும்.

நன்றி,
வில்லவன்.

காதல் – ஒரு வீண் ஆய்வு.

சர்வதேச அளவில் !? பலரை விமர்சனம் செய்தபோதுகூட கடுமையான எதிர்வினைகளை நான் சந்தித்ததே இல்லை. ஆனால் காதல் என்ற இடுகையை எழுதிவிட்டு என் நண்பர்களிடம் வாங்கிகட்டிக்கொண்டது கொஞ்சநஞ்சமல்ல. சொல்லிவைத்த மாதிரி என்னுடன் தொடர்பிலிருக்கும் நண்பர்கள் எல்லோரும் திட்டித்தீர்த்துவிட்டார்கள். உனக்கு ஏன் இந்த அனாவசியமான வேலையெல்லாம்?, இதை நீதான் எழுதினாயா? , உனக்கு என்ன வருதோ அதை மட்டும் செய் ஆகியவை மட்டும்தான் பதிப்பிக்கத் தகுந்த நாகரீகமான விமர்சனங்கள். நல்வாய்ப்பாக இவர்கள் யாரும் பின்னூட்டமிடும் பழக்கம் இல்லாதவர்கள் ஆகையால் யூனிகோடில் உதை வாங்கும் ஆபத்தில் இருந்து தப்பித்தேன்.

ஆயினும் காதலைப் பற்றி உனக்கு என்ன தெரியும் என்ற அவர்களின் கேள்வியில் நியாயமில்லாமல் இல்லை. நான் பத்தாம் வகுப்புவரை படித்தது ஆண்கள் பள்ளியில். விவரம் போதாமையால் ஆண்களுக்கென்றே நேர்ந்துவிடப்பட்ட நெசவியலை பாலிடெக்னிக்கில் எடுத்துத் தொலைத்தேன் ( “நூலும் இல்லை வாலும் இல்லை” மற்றும் “பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி” ஆகிய சினிமா பாடல்கள் எங்களுக்காவே இயற்றப்பட்டதோ என்ற சந்தேகம் எங்கள் வகுப்புத் தோழர்கள் எல்லோருக்கும் இருந்தது).  அடுத்து படித்த  ஆடை உற்பத்தி படிப்பு இருபாலருக்குமானது என்றாலும் அங்கும் வேடிக்கை பார்க்கும் வேலையைத்தான் செய்தேன். முழுதாக மீசை முளைக்கும் முன்பே வேலைக்கு வந்துவிட்டதால் ஆட்டோகிராப் பாணியில் சைக்கிளில் போய் பத்திரிக்கை வைப்பதற்கான தேவை எனக்கு இல்லாமலே போய்விட்டது.

கடுமையாக வேலை செய்தால்தான் முன்னேற முடியும் என்று தவறாக வழிநடத்தப்பட்டேனாகையால் கண்ணாடியின் முகத்தைப் பார்ப்பதற்குள் வயது இருபத்தைந்து ஆகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் சீக்கிரமே பலரை வேலை வாங்கும் வேலைக்கு வந்துவிட்டதால் இருபத்துநான்கு வயதிலேயே என் நடவடிக்கைகளில் சித்தப்பாத்தனம் வேறு வந்துவிட்டது.  இந்தப்பதிவை ஒரு கதையல்ல நிஜம் எபிசோடாக்க விருப்பமில்லையாகையால் சுற்றிவளைக்காமல் சொல்லி விடுகிறேன், ஆகவே காதல் பற்றி எழுத எனக்கு கொஞ்சம் தகுதி குறைவாகத்தான் இருக்கிறது.

சொந்தப் புலம்பல் போதும், தலைப்புக்கு வரலாம். சும்மாயிருப்பவனுக்கு காதலைக் கிளப்பிவிடுவதிலும் ஒழுங்காக போய்க்கொண்டிருக்கும் காதலை கலைத்துவிடுவதிலும் நண்பர்கள் பங்கு மகத்தானது. இங்கு காதலை சேர்த்து வைக்கிற நண்பர்களின் சுபாவத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அது எப்படி காதலுக்கான உதவி நண்பர்களிடமிருந்து மட்டுமே வருகிறது ? இயான் பாவ்லவும் பியாகேயும் தவறவிட்ட ஆராய்ச்சி வாய்ப்பு இது (இந்த யோசனையை மருத்துவர் ருத்ரனுக்கு டெடிகேட் செய்கிறேன்). என்னளவில் சில காரணங்களை தென்படுகின்றன. காதல்வயப்பட்டவர்கள் செய்யும் பல இம்சைகளில் இருந்து தப்பிக்க அவர்களை திருமணத்திற்குள் தள்ளுவது அவசியமாகிறது.

மேன்ஷன் தாழ்வாரங்களில் நள்ளிரவில் பேயைப்போல செல்லில் பேசியபடியே நடந்துகொண்டிருப்பார்கள், நாம் தூங்கவும் முடியாது போகட்டும் ஒட்டுக்கேட்கவாவது செய்யலாம் என்றால் அதற்கும் வழியிருக்காது. மொட்டை மாடி முக்குகளில் மெல்லிய குரலில் போனில் பேசியபடியே சிலர் உட்கார்ந்திருப்பார்கள். நீங்கள் எதேச்சையாக அங்கு போகையில் திடீரென எழுந்து திகிலூட்டுவார்கள். போனில் பேச வழியில்லா நிலையிலும் இவர்கள் சும்மா இருப்பதில்லை. போர்வையைப் போர்த்திக்கொண்டு குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். பீப் ஒலியை எண்ணிக்கொண்டே நீங்கள் தூங்க முயற்சி செய்ய வேண்டும்

காதல் வழியும் காலர்டியூனை வைத்துக்கொள்வது இவர்களது பொது அடையாளம்.  இப்போது பல இடங்களில் உசுரே போகுது உசுரே போகுது எனும் பாடல் ரிங்டோனாக ஒலிக்கிறது. மற்ற பாடல்களோடு ஒப்பிடுகையில் இது கொஞ்சம் பரவாயில்லை, ஏனெனில் இந்த வரிகள் சுற்றியிருப்போரது நிலைக்கும் பொருத்தமாயிருக்கிறது.(இதே காரியங்களை சிற்சில மாற்றங்களோடும் கொஞ்சம் கூடுதல் துணிச்சலோடும் புதிதாக திருமணம் நிச்சயம் ஆனவர்கள் செய்கிறார்கள்).

நாம் கதைகேட்க தயாராக இல்லாத நேரத்தை சரியாகக் கண்டுபிடித்து தனது காதல் துவங்கிய கதையை பதினாறாவது முறையாக சொல்வார்கள். இவர்கள் தொல்லையிலிருந்து தப்பிக்க இரண்டு வழிகளே இருக்கிறது. முதலாவது காதலைப் பிரிப்பது, இதில் ரிஸ்க் குறைவு ஆனால் வேறு இரண்டு பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க தயாராக இருக்கவேண்டும். ஒன்று அவரது காதல் தோல்விப் புலம்பலையும் நீங்கள்தான் கேட்டாகவேண்டும். இரண்டு, அவரது அடுத்த காதலின் கதைகளையும் நீங்கள் கேட்கும் நிலை வரலாம். ஆகவே எத்துனை சிரமம் வந்தாலும் காதலை சேர்த்துவைப்பது நல்லது என்று நண்பர்களின் உள்ளுணர்வு சொல்லிவிடும் போலிருக்கிறது.

உங்கள் நண்பர்களில் ஒருதலைக் காதலர்கள் இல்லையென்றால் நீங்கள் புண்ணியம் செய்தவர்கள். இவர்கள் கொடுமை முற்றிலும் வேறானது. முதல் நாள் நான் ஏன் இவளுக்காக ( அல்லது இவனுக்காக) இவ்வளவு கஷ்டப்படனும் ? எனக்கென்ன தலையெழுத்து என்ற தலைப்பில் ஒன்றரை மணிநேரம் உரையாற்றுவார்கள். அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்துக்குள், நான் ஏன் இவனை( ளை) காதலிக்கிறேன் தெரியுமா? என்ற முற்றிலும் எதிரான தலைப்பில் வாதிடுவார்கள் (‘இப்ப புரியுதா இந்த கட்டிய நான் ஏன் வாங்கினேண்ணு’ எனும் நிர்மா விளம்பர பாணியில் படிக்கவும்). தாங்க மாட்டாமல் நீங்கள் ஏதாவது தீர்வை சொன்னால் வாழ்கைய உணர்வுபூர்வமாக அணுகத்தெரியாதவர்கள் என்ற பட்டத்தை உங்களுக்கு வழங்குவார்கள். நான் பார்த்த மற்றும் கேள்விப்பட்ட இளம்வயது ஆண்களின் தற்கொலை சம்பவங்கள் பெரும்பாலும் ஒருதலைக் காதலால்தான் நிகழ்ந்திருக்கிறது.

காதலைச் சொல்வதில் மூன்று முறைகள் பரவலாகப் பின்பற்றப்படுகிறன. நீங்கள் பிச்சைக்காரர்களிடம்கூட இந்த வழிமுறையை பார்க்கலாம். சில பிச்சைக்காரர்கள் எதுவும் பேசாமல் “ஏதாவது போட்டுட்டு போறது” என்ற முகபாவத்துடன் அமர்ந்திருப்பார்கள், வேறு சிலர் காசு போட்டாலே ஆச்சு என்ற உறுதியுடன் பிச்சை கேட்டபடியே துரத்துவார்கள். காதலை சொல்வதிலிலும் இந்த நுட்பங்களே கையாளப்படுகிறன. முதல் வகையினர் நீ காதலைச் சொன்னால் நான் மறுக்க மாட்டேன் என்ற செய்தியை சம்மந்தப்பட்டவரிடம் தெரிவிப்பார்கள், கேட்டாக வேண்டியது அவரது பொறுப்பு. இரண்டாவது வகை வலுக்கட்டாயமாக காதலைப் பெறுவது, தொடர்ந்து ஏதாவது வழியில் முயற்சி செய்துகொண்டே இருப்பது இவர்கள் பாணி. எனக்குத் தெரிந்த நிறுவனம் ஒன்றின் இளம் அதிகாரி பேருந்து நிறுத்தமொன்றில் ஒரு பெண்ணின் காலில் விழுந்து காதலிக்க வைத்தார் (மிகைப்படுத்தல் ஏதும் இல்லை,போதையில் இருந்த அவர் நிஜமாகவே பலர் வேடிக்கை பார்க்கையில் காலில் விழுந்து அழுதார்… என்னால் சகித்துக்கொள்ள முடியாத செய்கை இதில்லை., அந்தப் பெண் அவரை ஏற்றுக்கொண்டதுதான்).

மூன்றாவது வகை மேற்கூறிய இரண்டுக்கும் இடைப்பட்டது. கலைஞர் டிவி ரமேஷ் பிரபாவின் பாணியை இதனுடன் ஒப்பிடலாம். கலைஞர் டிவியின் சந்தித்த வேளை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் எட்டு முப்பத்தைந்துவரை கலைஞரைப் பாராட்டி ஏதாவது சொல்கிறாரா என்று ரமேஷ் பார்ப்பார். இல்லாவிட்டால் அவரே கலைஞரைப் பற்றி ஏதாவது சொல்லுங்களேன் என்று நேரடியாகவே கேட்டுவிடுவார். அதுபோலவே இந்தவகையினரும் தானாகவே ஏதாவது நடக்கிறதா என்று காத்திருப்பார்கள் நடக்காவிட்டால் கடைசியாக ரமேஷ் பிரபா மாதிரி அவர்களே வேறுவழியில்லாமல் கேட்டுவிடுவார்கள்.

அத்தனை தூரம் மூளையை கசக்க விரும்பாவிட்டால் இருக்கவே இருக்கிறது தமிழ்நாட்டின் பாரம்பரிய வழக்கமான மாமன் மகள் மீதான காதல். இது இன்றளவும் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பழக்கமாக இருக்கிறது. இப்போதும் எனது ஒன்றுவிட்ட சகோதரர்கள் இருவர் மாமன் மகளைக் காதலிப்பதை தன் வாழ்வின் ஆகப் பெரிய லட்சியமாக கொண்டிருக்கிறார்கள். இந்திய அளவில்கூட அறுபத்தைந்து சதவிகித திருமணங்கள் சொந்தத்துக்குள்தான் நடக்கிறது என்கிறது சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்று.  இதில் எதிலும் சேர்த்தியில்லாமல் பார்த்த ஓரிரு நாட்களில் காதலிக்கத் துவங்கிய ஜோடிகளை பெங்களூரில் பார்த்திருக்கிறேன்.

ஒப்பீட்டளவில் ஆண்களைவிட பெண்களே காதலில் அதிகம் நேர்மையானவர்களாகவும், உறுதியானவர்களாகவும் மற்றும் அப்பாவிகளாகவும் இருக்கிறார்கள். பெரும்பாலான ஆண்களது சிரமம் காதலை ஏற்றுக்கொள்ளவைப்பதோடு முடிந்துவிடுகிறது. அதன் பிறகு அந்த உறவை பெண்கள்தான் அதீத அக்கறையோடு தொடர்கிறார்கள். வேறொரு பெண்ணுடன் காதலனுக்கு திருமணம் நடக்கும்வரை அவரது வாக்குறுதியை நம்பிக்கொண்டிருந்த பெண்ணை எனக்குத் தெரியும். காதலனின் கைச்செலவுக்குப் பணம் கொடுத்துவிட்டு அவனிடம் சாக்லேட் வாங்கித்தரச்சொல்லி கேட்கும் பெண் ஒருவர் என் நட்புவட்டத்தில் இருக்கிறார்.

(கடைசி பத்தி ஒரு தனி பதிவு போடுமளவுக்கு விஷயமுடையது., வேறு வழியில்லை மூன்றாம் பாகம் எழுதியே ஆகவேண்டும்)

நடிகர் ஜெயராம் – கருத்தை நாம் மன்னிப்போம், கல்வீச்சை அவர்கள் மறக்காதிருக்கட்டும்.

கேரள நடிகர்கள் மீது எனக்கு மிகக்குறைவான அளவுக்கேனும் மரியாதை உண்டு ( தமிழ் நடிகர்கள் மீது அதுவும் கிடையாது ). ஏனெனில் அவர்கள் ஓரளவுக்கேனும் தமிழில் பேசுவதில் அக்கறை கொண்டிருக்கிறார்கள், தொலைக் காட்சி பேட்டிகளின்போது அவர்களை இயல்பான மனிதப்பிறவிகள் என்று நம்பிவிட முடியும். மலையாளப் படங்களில் தமிழரை கேலி செய்யும் காட்சிகள் வருவதாக கேள்விப்படும் போதும் நான் கோபம் கொள்வதில்லை, காரணம் தமிழ் படங்களிலும் அதற்கு நிகரான அளவில் மலையாளிகள் கேலி செய்யப்படுகிறார்கள் குறிப்பாக கேரளப் பெண்கள்.

ஆயினும் கடந்த வாரம் நடிகர் ஜெயராம் அளித்த பேட்டி ஒன்று அவரை இப்படியான கவுரவமான நடிகர்கள் பட்டியலில் வைக்கக்கூடாது என்று சமிஞ்சை தந்திருக்கிறது. உங்கள் வீட்டு வேலைக்காரியை சைட் அடிப்பீர்களா என்ற கேள்விக்கு தன் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி என்றும் பார்க்க எருமைபோல இருப்பாள் அவளை எப்படி சைட் அடிப்பது என்றும் சொல்லியிருக்கிறார். சற்று தாமதமாக வந்த இந்த செய்தி தமிழகத்தில் ஓரளவு எதிர்ப்பை சம்பாதித்தது. குஷ்பு அளவுக்கு அதிகமான எதிர்ப்பை சம்பாதிக்கும் முன்பே ஜெயராம் மன்னிப்பு கேட்டு சிக்கலை ஓரளவு சமாளித்திருக்கிறார்.

முதலில் தனது கருத்தை ஒரு ஜோக் என்று சொன்ன நடிகர் ஜெயராம் பிறகு மன்னிப்பு கேட்டார். அவரது வீட்டு சன்னல்கள் உடைக்கப்பட்ட மறுநாள் சென்னைக்கு ஓடோடி வந்து மீண்டும் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

அவரது பேச்சில் நாம் முதலில் கவனிக்கவேண்டியது தமிழர் விரோதத்தை அல்ல. தனது வீட்டில் வேலை செய்பவரின் உருவத்தைக் குறித்து ஒரு நடிகர் பொது நிகழ்ச்சியில் பகடி செய்யும் பணத்திமிரைக் குறித்துத்தான் நாம் கவலை கொள்ளவும் கோபம் கொள்ளவும் வேண்டும். இது ஒரு சாதாரண நபரால் சாலையில் செல்லும் பெண்ணைப் பார்த்து சொல்லப்பட்டிருந்தால் அது ஈவ் டீசிங் வழக்கு போடுமளவுக்கான குற்றம். தன்னிடம் சம்பளம் வாங்கும் நபரை எத்தனை மட்ட ரகமாக வேண்டுமானாலும் கிண்டலடிக்கலாம் எனும் மேல்தட்டு சிந்தனை நிச்சயம் தண்டிக்கப்படவேண்டியது. கிண்டலடிக்கப்பட்டது தமிழ் பெண்மணியாக இருந்தாலும் சரி அல்லது ஜெயராமின் மாநிலத்து பெண்ணாக இருந்தாலும் சரி.

நல்லவேளையாக நாம் தமிழர் இயக்கத்தவர்கள் ஜெயராம் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் அஞ்சாத நடிகர்கள் வீட்டின் சன்னல்கள் உடைந்தால் மட்டும் உடனடியாக திருந்திவிடுகிறார்கள். குஷ்பு சொன்ன தமிழ் பெண்களின் கற்பு குறித்த கருத்து இப்போது முற்றிலும் மறைக்கப்பட்டுவிட்டது. அவர் இந்தியா டுடே இதழுக்களித்த பேட்டியில் சொன்ன கருத்து ஒரு சலசலப்பை மட்டுமே உருவாக்கியது. அது தொடர்பாக ஒரு மாலை நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் நாட்டில் எத்தனை பெண்கள் கற்போடு இருக்கிறார்கள் என்று வினவினார் ( பிறகு அந்த பொருளில் தான் சொல்லவில்லை என்று மறுத்தார் ) அதுதான் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியது.

இப்போது அவரது இரண்டாவது கருத்து ஊடகங்களால் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டு இந்தியா டுடேவில் சொன்ன பாதுகாப்பான உறவு குறித்த கருத்து மட்டுமே வெளியிடப்படுகிறது. இதுபோன்ற பெரிய இடங்களின் ஆதரவுதான் இவர்களை எது குறித்தும் அச்சப்படாமல் இருக்க வைக்கிறது. தான் பார்த்துப் பார்த்து கட்டிய வீடு கல்வீச்சுக்கு ஆளானால் கண்ணீர் விடும் ஜெயராம் தன் வீட்டில் உழைக்கும் பெண்ணின் தன்மானம் குறித்து கவலைப்படாதவர் என்றால் அதை அவருக்குப் புரியும்படி சொல்ல வேண்டியது  நம் கடமை. ஆகவே அதை செய்த இருபத்தியாறு பேரை பாராட்டுவோம்.

யாரேனும் ” அதற்காக வீட்டு சன்னல் கண்ணாடியை உடைப்பதா? ” என்று கேட்பார்களேயானால்  கண்டு கொள்ளாதீர்கள், யார் கண்டது அவர்களது வீட்டுப் பெண்கள் உயரதிகாரிகளால் இழிவுபடுத்தப்பட்டால் மறப்போம் மன்னிப்போம் என்று சொல்லும் பக்குவம் உடையவர்களாக அவர்கள் இருக்கக்கூடும்.

சரி பெரியதிரைக்காரரால் ஒரு பிரச்சனை என்றால் சின்னத்திரக்குள் வேறொரு தகராறு. பிரபல நெடுந்தொடர் இயக்குனர் சி.ஜே. பாஸ்கரின் தொடர்களுக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று சின்னத்திரை சங்கங்களின் ஒரு பிரிவினர் முடிவெடுத்திருக்கிறார்கள். காரணம் அவர் நடிகைகளுக்கு கொடுக்கும் பாலியல் தொந்தரவு. பாஸ்கரின் சீண்டல்கள் ‘அதிகமாகிவிட்டதால்’ அவரை டிவி உலகிலிருந்து தள்ளி வைக்கவேண்டும் என்று தயரிப்பாளர்களிடம் கோரிக்கை வைக்கப்போவதாகவும் அவ்வட்டரங்கள் சொல்லியிருக்கின்றன. இதுவரை கிசுகிசு செய்திகளாக மட்டும் இருந்தவை இப்போதுதான் செய்திகளாக டி.வி வட்டாரங்களால் தரப்படுகிறன.

பதின்நான்கு வயது பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார். அத்துமீறி நடிகைகள் அறைக்குள் பிரவேசித்தார், தன் விருப்பத்திற்கு பணியாத நடிகைகளை துன்புறுத்தும் விதமாகவும் அவமானப்படுத்தும் விதமாகவும் காட்சியமைத்தார், என்பனபோன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்படுகிறது. இவை எல்லாம் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பிருந்தே நடப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் டி.வி ஒரு கவுரவமான மீடியா எனும் பிம்பம் அவர்களாலேயே தகர்க்கப்பட்டிருக்கிறது. இதுவரை டி.வியில் நடிப்பது அலுவலகம் போவது போல ஒரு சாதாரண மற்றும் பாதுகாப்பான பணி என்று சொல்லி வந்தவர்கள் இவர்கள்.

இப்படி ஆண்டுக்கணக்காக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தவர் மீது இவ்வளவு சாவகாசமாக நடவடிக்கை எடுக்கின்றன சின்னத்திரை சங்கங்கள். அதுவும் ஒத்துழைப்பு தரமாட்டோம் எனும் படு மொக்கையான தண்டனை. என்ன அடிப்படையில் நடவடிக்கை தீர்மானிக்கப்படுகின்றன ? பத்து ஆண்டுகள் பாலியல் தொந்தரவு எக்ஸ்பீரியன்ஸ் இருந்தால்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா ? சரி இப்போது நடக்கும் அத்துமீறல்களுக்கு எப்போது நடவடிக்கை எடுப்பார்கள் ? ஏற்கனவே பாஸ்கர் மீதான குற்றச்சாட்டுக்கள் வந்தபோது அவரை தான் காப்பாற்றியதாக சொல்கிறார் சங்கத் தலைவர் விடுதலை. அப்படியானால் சங்கமும் குற்றவாளிக்கு உடந்தையாக இருந்ததா அல்லது திருந்த ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கும் அளவுக்கு பாலியல் வன்முறை டி.வி உலகில் ஒரு சாதாரண பிரச்சனையா ?

கற்பழிப்பு முயற்சி, சிறார் மீதான பாலியல் வன்முறை என்று ஏராளமான கிரிமினல் குற்றங்களை ஏதோ சங்க விதிமுறைகளை மீறிய  செயலைப் போல இவர்களே கையாள்கிறார்களே, இது (criminal negligence ) குற்றமுறு மறதி அல்லது செயல் எனும் குற்றச்சாட்டின் கீழ் வருமா வராதா ?  இனி வரும் காலங்களில் இப்படியான சம்பவங்கள் நடக்காமல் இருக்க சங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது ? யோசித்தால் பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறது.

எல்லா கேள்விகளுக்கும் ஒரே வரியில் பதில் சொல்லியிருக்கிறார் சி.ஜே.பாஸ்கர், ‘இது எங்கள் குடும்பப் பிரச்சனை. அதை நாங்களே பேசித் தீர்த்துக்கொள்வேம்’. நல்ல குடும்பம்தான்..

இன்னொரு பாராட்டுவிழாவாம் – என்.டி திவாரி முதல்வராக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் திரைக்’கலைஞர்களே’?

நம் நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் கட்டிட வேலை செய்கிறார்கள். அதைவிட சுலபமான ஆனால் வெளியே சொல்லிக்கொள்ள முடியாத பல வேலைகள் இருப்பது அவர்களுக்குத் தெரியும். ஆயினும் அவர்கள் அவ்வேலைகளை தேர்வு செய்வதில்லை. இவ்வாறே தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணகான மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் கவுரவமான வாழ்வையே தெரிவு செய்திருக்கிறார்கள். அதன்பொருட்டு அவர்கள் தமது வாழ்வியல் சிரமங்களை சகித்துக்கொள்ள தயங்குவதில்லை. துரதிருஷ்டவசமாக திரையுலகினர் இப்படிப்பட்ட தன்மானமுள்ளவர்கள் பட்டியலில் சேரும் தகுதியை பலியிட்டுவிட்டார்கள், அதுவும் அவர்களது துறையின் மேல்மட்டத்து ஆட்களில் நலன்களுக்காக மட்டும்.

கருணாநிதியின் கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில் மிக அதிகமான சகாயங்கள் திரையுலகினருக்கு செய்யப்பட்டிருக்கிறது. அவர்களும் வஞ்சனை இல்லாமல் பாராட்டுவிழாக்கள் நடத்தி செம்மொழி நாயகனை முடிந்த மட்டும் குளிர்விக்கிறார்கள். தன்னைத்தானே பாராட்டிக்கொள்வதிலும் தன்னை பிறர் பாராட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என விரும்புவதிலும் கருணாநிதிக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்பது  I.Q வில் அறுபது மதிப்பென் பெற்றவர்களுக்குக்கூட தெரியும். பலரும் கருணாநிதிக்கு பாராட்டுவிழா நடத்தத் தயாராக இருந்தும் இவர் சினிமாக்காரர்களுக்கு மட்டும் தனி கரிசனம் காட்டுவது ஏன் ? ஏதோ சுவிசேஷ கூட்டத்துக்கு வருவதைப்போல நடிகர்கள் இவரிடம் வருவதும் அவர்களது பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படுவதும் எப்படி ?

உள்ளாட்சிகளின் வருவாய் சுமார் நூறு கோடி ரூபாய் திருடப்பட்டுத்தான் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு தரப்படுகிறது. திரையுலகினருக்கு வீடுகட்ட ஏராளமான நிலம் தரப்படுகிறது, ஒதுக்கீட்டில் தயாரிப்பாளர்களும் அடக்கமாம். கமலஹாசன் நடத்திய கருத்தரங்குக்கு ஐம்பது லட்சம் அரசினால் இனாமாக தரப்பட்டது. இப்போதோ ராதிகா கண்ணை கசக்கியவுடன் திருட்டு வி.சி.டி வைத்திருப்பவர்களும் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கிறார் முதல்வர். வரும் காலங்களில் நடிகர் நடிகை வீடுகளில் பித்தளை சொம்பு காணாமல் போனால்கூட நேரே கோபாலபுரத்துக்குத்தான் போவார்கள் போலிருக்கிறது. இனி ஒவ்வொருவரும் எல்லா தமிழ்ப் படங்களையும் பார்க்கவேண்டும் என்பதை கட்டாயமாக்கும் சட்டம் போட்டுவிடுவாரோ என்று வேறு பயமாக இருக்கிறது.

இப்படியான மிதமிஞ்சிய சினிமா சினேகம்தான் கருணாவை திவாரியுடன் ஒப்பிட வைக்கிறது. திவாரி மீதான குற்றச்சாட்டு என்ன? ராதிகா எனும் பெண்மணிக்கு அரசின் சலுகைகளும் சில சுரங்க ஒப்பந்தங்களும் தரப்பட்டன. அவரும் (ராதிகா ) அவரது சக ஊழியர்களும் ?? திவாரியை சுலபமாக சந்திக்க முடிந்தது. ராதிகாவை சந்தோஷப்படுத்தும் காரியங்களை திவாரி செய்தார் பதிலுக்கு திவாரியை திருப்திப்படுத்தும் ஏற்பாடுகளை ராதிகா செய்தார். இந்த செய்திகளை கலைஞர் & கலையுலக கோஷ்டியுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஆட்கள் வேறு, செய்கைகள் வேறு ஆனால் ‘ பெரியவரை திருப்திப்படுத்த’ வேண்டும் என்ற நோக்கம் மட்டும் ஒன்றுதான் இல்லையா ?  ஹைதராபாத் ராதிகா ஏற்பாடு செய்த சந்தோஷப்படுத்தும் விழாக்களின் தொலைக்காட்சி உரிமம் முன்கூட்டியே விற்பனை செய்யப்படவில்லை என்பது மட்டுதானே வேறுபாடு ?

இப்படி விழாக்கள் எடுத்து அவரிடம் எங்களுக்கு வேண்டியதை உரிமையுடன் கேட்கிறோம் என்று கமலஹாசன் ஒரு விழாவில் வெளிப்படையாகவே சொல்கிறார். வரும் ஆறாம் தேதி (பிப்ரவரி) இன்னொரு பாராட்டுவிழா நடத்தப்போகிறார்கள். இது இடம் ஒதுக்கியதற்கும் திருட்டு வி.சி.டி ஒழிப்பு முயற்சிக்காகவுமாம். அவ்விழாவில் என்னென்ன கேட்கப்போகிறார்களோ தெரியாது . பருப்புவிலை உயர்ந்து ஒரு வருடம் கழித்து சில்லறை விலை குறைய நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லும் சோம்பேறி அரசிடம் சினிமா பிரபலங்கள் மட்டும் எல்லா காரியங்களையும் போர்க்கால அடிப்படையில் முடித்துக்கொள்ள முடிவது ஒரு மோசமான முன்னுதாரணம்.  நடிகைகளின் நடனத்துடன் கூடிய விழா ஏற்பாடு செய்து கோரிக்கை வைத்தால்தான் காரியம் நடக்கும் என்றால் ஏழை மீனவனும் விவசாயியும் எங்கே போவார்கள்?

போகட்டும், இந்த விசயத்தில் நம்மால் ஒன்றும் செய்துவிட முடியாது. ஆயினும் இது போன்ற சொறிந்துவிடும் விழாக்களை பார்க்காமல் புறக்கணிப்பது நமக்கு சாத்தியம்தான். மேலும் நண்பர்கள் யாரும் திருட்டு விசிடி பார்ப்பதற்கு கூச்சமோ வருத்தமோ கொள்ளாதீர்கள். கதையையும் காட்சியையும் திருட இயக்குனர்கள் தயங்குவதில்லை, டிக்கெட் விலையை தாறுமாறாக உயர்த்தி ரசிகனிடம் கொள்ளையடிக்க தயாரிப்பாளர்கள் தயங்குவதில்லை, மன்றம் எனும் பெயரில் ஊரில் உள்ள இளைஞர்கள் நேரத்தைத் திருட நடிகர்களும் அவர்களது அப்பாக்களும் தயங்குவதில்லை, பிறகு ஏன் நாம் மட்டும் திருட்டு வி.சி.டிக்கு தயங்க வேண்டும் ? ஆகவே தமிழ் சினிமா பார்ப்பது என்று விபரீதமாக முடிவு எடுத்த பிறகு படத்தை குறைவான செலவிலேயே பாருங்கள். இணையத்தில் தரவிறக்கம் செய்து பார்ப்பது இன்னும் ஷேமம்.

ஏனெனில் நம் பணத்தை நாம்தான் பாதுகாக்கவேண்டும், சினிமாக்காரர்களை பாதுகாக்க கருணாநிதி இருக்கிறார்.

Tools ‹ வில்லவன் . . . — WordPress

Tools ‹ வில்லவன் . . . — WordPress.

முத்துக் குமார்- இறப்பினில் பிறந்தான்., இனத்தையே உயிர்த்தெழவைத்தான்.

தமிழினத்தின் சமீபகால வரலாறு அத்துணை சிறப்பானதல்ல. சில பத்தாண்டுகளாக அதன் பக்கங்கள் துரோகங்களாலும் இழப்புகளாலும் நிறைந்திருந்தது குறிப்பாக ஈழ விவகாரங்களில். அன்று மக்கள் அறிந்த தலைமைகளில் ஒரு பிரிவு ரத்தத்தை சுவைத்துக்கொண்டிருந்தது மற்றோர் கூட்டமோ கண்ணீரை அறுவடை செய்யக்காத்திருந்தது. சிறிய அளவு போராட்டங்களைக்கூட ஒடுக்கும் பெரும்பணியை கருணாநிதி செய்தார். அந்த பாக்கியம் கிடைக்காததை எண்ணி புலம்பினார் ஜெயலலிதா. ஏனைய சிறு தலைவர்கள் இவ்விரண்டுபேருக்குப் பின்னால் போவதைத்தவிர வேறு மார்கமில்லை என்று யதார்த்தவாதம் பேசினார்கள்.

மக்களின் போக்கும் நம்பிக்கை அளிக்கும்படியாக இல்லை. ஒரு பெரும் மனிதப் பேரழிவு கூப்பிடு தூரத்தில் நடந்துகொண்டிருக்க நாமெல்லோரும் உச்சு கொட்டிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்க்கொண்டிருந்தோம். ஐரோப்பாவின் ஒரு மூலையில் உள்ள குருத்துவாராவில் துப்பக்கிசூடு நடந்ததற்கே பஞ்சாப் நாள் கணக்கில் முடக்கப்பட்டது. இங்கோ, ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு மீதமிருப்பவர்கள் உயிரை மட்டும் சுமந்து ஓடியபோது நாம் கருணாநிதியின் வாயைப்பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தோம்.

ஒரு நெடுந்தொடர் கதாநாயகிக்கு கிட்டும் பரிதாபமும் கவனமும் இறந்துகொண்டிருக்கும் சகோதரிகள் மீது இல்லாதுபோனதை கேவலம் என்பீர்களா இல்லை துரதிருஷ்டம் என்பீர்களா ? ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் நாம் சுயமரியாதை உள்ளவர்கள் என்பதற்கான இறுதி ஆதாரமா ? நீங்கள் காயமுற்று வீதியில் கிடக்கையில் உங்களை காப்பாற்றாமல் பிச்சையிட்டுப் போகிறவன் தன்னைக் கடவுள் என்று சொல்லிக்கொண்டால் அதை மண்டையை ஆட்டி ஏற்றுக்கொள்வீர்களா ? நாளை ஒரு வன்னித் தமிழனை சந்திக்க நேர்ந்தால் அவனுக்கு சொல்ல என்ன பதில் வைத்திருக்கிறீர்கள் ? இப்படி நமக்குள் எழும்பிய கேள்விகள் ஆயிரம். நல்ல பதில் சொல்வார்கள் என்று நம்பிய பலரும் புதிய கேள்விகளை உற்பத்தி செய்பவர்களாகத்தான் இருந்தார்கள் என்பது தமிழர்களின் தனிச்சிறப்பு கொண்ட தலைவிதி.

இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டபோது வாசலில் மெழுகுவர்த்தி ஏற்றிய மக்கள் சிலர் கொஞ்சம் பிசியாக இருந்தார்கள். அக்கறை கொண்ட மக்களில் சிலர் எல்லாவற்றையும் பிரபாகரன் பார்த்துக்கொள்வார் என்று சமாதானம் சொல்லிக்கொண்டார்கள். பெரும்பான்மை மக்களோ பதற்றத்திலும் குழப்பத்திலுமே வாழ்ந்தார்கள். யாரை நம்புவது எனும் விடைகாண முடியாத கேள்வி எல்லோர் மௌனத்தினூடேயும் எதிரொலித்தது. நம்பிக்கையளிக்கும் செய்தி ஏதும் நம்மை வந்தடையவில்லை நாமும் நம்பிக்கையளிக்கும் காரியம் எதுவும் செய்திருக்கவில்லை. ஆட்சியாளர்களும் நம்மை கையாலாகாதர்வர்கள் என்று உறுதிசெய்துவிட்டமையால் வழக்கமான பணிகளுக்குத் திரும்பும் உத்தேசத்திலிருந்தார்கள், ஒரு இளைஞன் பெட்ரோல் கேனுடன் சாஸ்திரி பவனில் நுழையும் வரை.

தற்கொலை தமிழகத்திற்கு புதிதல்ல, தினத்தந்தியின் இரண்டு பத்தி செய்தி அளவுக்கே அது தகுதியுடையது. ஆயினும் முத்துக்குமரா, உனது உயிர்தியாகம் ஆள்பவர்களுக்கு அச்சத்தையும் குறைந்தபட்ச சொரணை உள்ளவர்களுக்கு குற்ற உணர்வையும் ஒருங்கே விதைத்தது. உன் மரணச்செய்தி கிடைத்த வினாடியில் (நான் அறிந்த ) பலருக்கும் தோன்றிய உணர்வு இதுதான் ” நாம் ஏதேனும் உருப்படியாய் செய்திருந்தால் இவனை இழந்திருக்கமாட்டோம் “. ஒரு உயிரின் இழப்பு மட்டுமே தமிழர்களை துயிலெழுப்பும் எனும் உனது கணிப்பு உண்மையானது. ஆயிரமாயிரம் மரணங்களை அமைதியாகக் கடந்துபோன தமிழினத்தை ஒரு தற்கொலை கோபம்கொள்ள வைக்கும் என்று உலகம் எதிர்பார்த்திருக்காது.

தன்னெழுச்சியாக திரண்ட இளைஞர் கூட்டம் கொளத்தூரை முற்றுகையிட்டது. உன் கடிதம் கிடைத்த மக்கள் யாவரும் உறக்கம் கலைந்து எழுந்தார்கள். திமுக அதிமுக என்ற பின்புலத்துடன் மாலை சுமந்து வந்தவர்கள் பாரபட்சமில்லாமல் செருப்பு வீச்சுக்கும் கல்வீச்சுக்கும் ஆளானார்கள். வீசிய கற்களின் அடித்தளத்தில் கம்பீரமாக நின்றது தமிழனின் கவுரவம். ஒவ்வொரு தமிழனும் தன் வாழ்நாளில் காண சாத்தியமில்லாத இக்காட்சியை உன் தியாகம் உலகமே காணும்படி செய்தது.  இருபெரும் துரோகிகளில் ஒருவர் வைகோவை முன்னிருத்தி பின்வாங்கினார் இன்னொருவருக்கோ ஒளிந்துகொள்ள முதுமையையும் முதுகுவலியைத் தவிர வேறெதுவும் கிட்டவில்லை. நாற்பது எம்பி சீட்டுக்கு பயந்து மத்திய அரசின் சிவசங்கர் மேனனும் பிணம் தின்னிகள் இரண்டு நாட்கள் விரதமிருப்பார்கள் என்று அவசர அறிக்கை வாசித்தார்.

நன்றி சகோதரனே, உன் உயிர் பிச்சையில்தான் நாங்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆம் நீ உயிரை பிச்சையாக எமக்கு தந்திருக்காவிடில் எதையும் எதிக்கத்தெரியாத சவங்களாகத்தான் நாங்கள் நடமாடிக்கொண்டிருப்போம்.

நன்றி சகோதரனே,உன் உடல் கொளத்தூரில் வைக்கப்பட்டது முதல் மூலக்கொத்தளம் சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது வரையிலான மூன்று நாட்கள்தான் தமிழர்கள் தமிழர்களாக வாழ்ந்த தினங்கள்.

நன்றி சகோதரனே, நம்பிக்கை இழந்துபோயிருந்த உலகத்தமிழனுக்கும் உள்ளூர் தமிழனுக்கும் அந்த நாட்களில் உன் தியாகம்தான் முதல் வெளிச்சம்.

நன்றி சகோதரனே, ஈழ ஆதரவு இயக்கங்களில் உன் இறுதி ஊர்வலத்தைத் தவிர வேறொரு குறிப்பிடத்தக்க போராட்டம் எங்கள் வசமில்லை.

இதோ வரப்போகிறது உன் நினைவு தினம். எனினும் உனக்கு அஞ்சலி செலுத்தும் துணிவு எமக்கில்லை. என்ன தகுதியோடு நாங்கள் அதைச் செய்வது ? என் உடலை வைத்து அரசியல் செய் என இறுதிக்கடிதம் எழுதிவைத்தாய். என் மரணத்தை அரசியலாக்கு என்றாய் நீ, ஆனால் மரணத்தை அரசியலாக்கக்கூடாது என்று சொன்ன குழுவினரிடம் தோற்றோம். என்ன சொல்லி அஞ்சலி செலுத்த, தமிழகத்தின் ஈழ ஆதரவுப்போராட்டத்தில் உன்னை மிஞ்சிய போராளி இல்லை என்றா ? அல்லது இனியொரு முத்துக்குமார் உருவாதற்கான காரணங்கள் இங்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விட்டதென்றா ?

ஜெயலலிதாவா கருணாநிதியா என விவாதிக்கும் சூழல் மறைந்து மகிந்தாவா ஃபொன்சேகாவா என்று விவாதம் செய்யும் நிலைக்கு முன்னேறிய இழிநிலையைச் சொல்லி அஞ்சலி செலுத்துவதா அல்லது ஆயிரமாயிரம்பேரைக் கொன்ற பேரினவாதம் கடைசியில் பிரபாகரனின் தலையில் கோடரியை பாய்ச்சி தன் கடமையை முடித்துக்கொண்டது என்ற தகவலைச் சொல்லி அஞ்சலி செலுத்தவா ? இல்லை சோனியாவின் விசுவாசமான கையாள் கருணாநிதி இன்று தனக்குத்தானே உலகத்தமிழர்களின் ரட்சகராக பட்டம் சூட்டிக்கொண்டதையும் அவரிடம் நக்கிப்பிழைக்கும் கூட்டம் இன்று பல்கிப்பெருகிவிட்டதையும் சொல்லி அஞ்சலி செலுத்துவதா ?

நேர்மையாக சொல்வதானால், நீ உயிரைக்கொடுத்து ஏற்றிய நெருப்பை நாங்கள் உன் சிதைக்கு தீயிட்ட கணத்திலேயே ஏறத்தாழ அணைத்துவிட்டோம். ஈழப்போரின் கடைசி நாட்களில் ஐம்பதாயிரம் பேர் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதாக செய்தி வந்தது. ஈழப்போராட்டத்தைபோல நம் போராட்ட குணமும் அதன் ஆரம்பநிலைக்கே போனது. சொல்லிக்கொள்வதற்கு நல்ல செய்தி ஏதுமில்லாமல் வெறுமனே புகைப்படத்துக்கு பூத்தூவுவதில் எனக்கு சம்மதமில்லை.

ஆயினும் உனக்கும் எனக்கும் சொல்வதற்கு செய்தி ஒன்று என்னிடம் உண்டு. காலம் ஒரு தரப்புக்கு மட்டும் நம்பிக்கையளிப்பதாக எப்போதும் இருந்ததில்லை. தமிழ்நாட்டின் எதிர்ப்புணர்வு இன்னும் தொலந்துவிடவில்லை என்பது உன் இறுதி ஊர்வலத்தின்போதே நிரூபனமாகிவிட்டது. துரோகங்களையும் நயவஞ்சகங்களையும் தேவைக்கதிகமாகவே பார்த்து பயிற்சி பெற்றுவிட்டோம். எல்லா மட்டத்திலும் கைவிடப்பட்டவர்கள் இனி நமக்கான உரிமைகளை நம்மால்தான் பெற முடியும் என்ற ஞனோதத்தை பெற்றிருப்பார்கள். வன்னித் தமிழனுக்கு எதிரானவன் உள்ளூர் தமிழனை எந்தநாளும் நேசிக்கமாட்டான் என உணர்ந்திருப்பார்கள்.

ஆகவே நாங்கள் நம்புகிறோம் நண்பனே, உனக்கு அஞ்சலி செலுத்த சீக்கிரம் வருவோம். அப்போது நிச்சயம் அதற்கான தகுதியுள்ளவர்களாக நாங்கள் இருப்போம்.

கருணாநிதியின் ஓய்வு அறிவிப்பு – அடப்பாவமே., இனி தமிழ்நாட்டின் கதி ?

தலைப்பை பார்த்ததும் பயங்கர கோபத்தில் இருப்பீர்கள் ஆகவே நான் படித்த ஒரு கதையை  சொல்லி உங்களை சகஜநிலைக்கு கொண்டுவர முயற்சி செய்கிறேன். ஒரு ஊரில் ஒரு பண்ணையார் இருந்தாராம். பண்ணையார் என்பதால் வாழ்நாள் முழுக்க ஊர்மக்களுக்கு எதிரான காரியங்களையே செய்துவந்தாராம். துரதிருஷ்டவசமாக அவர் பிறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டமையால் முதுமையடைந்து நோய்வாய்பட்டாராம். மரணப்படுக்கையில் இருந்த அவர் ஊர் மக்களை அழைத்து என் சவ ஊர்வலம் என்போன்ற கெட்ட பண்ணையார்களுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும், எனவே தான் இறந்ததும் தனது சவத்தை கயிற்றில் கட்டி தெருத்தெருவாக இழுத்துச்செல்லுங்கள் என்றும் சவத்தை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவு அவ்வளவு படுத்துங்கள் என்று சொல்லிவிட்டு செத்துப்போனாராம்.

ஊர் மக்களும் பரிதாபப்பட்டு அவரது விருப்பப்படியே ஏற்பாடுகளை செய்தார்களாம். அதற்கு முன்பு அந்த பண்னையார்  தன் மகனிடம் ஒரு புகார் கடிதம் எழுதி அதை போலீசில் கொடுக்கும்படி சொல்லியிருந்தாராம். அந்த கடிதம் என்னவெனில் ” ஊரில் உள்ள என் அப்பாவின் எதிரிகள் அவரது பிணத்தை கைப்பற்றி அதை அவமானப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள். எனவே அவரது பிணத்தை காப்பாற்றி நல்ல முறையில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்பதுதான். ப்ண்ணையார் வீட்டு புகார் இல்லையா போலீசும் உடனடியாக உரிய படையுடன் போன போது ஊர்மக்கள் பண்ணையாரை கட்டி இழுத்துக்கொண்டு ஊர்வலம் போனார்கள். அதை பார்த்த காவலர்கள் ( உயர்நீதிமன்றம் என்று நினைத்தார்களோ என்னவோ ) தங்கள் பாணியில் அதை கையாள அன்று சில பல ஜீவன்கள் பண்ணையாருக்குத் துணையாக பரலோகம் போனார்கள். இப்படி செத்தும் பண்ணையார் பண்ணையாராகவே இருந்தார் என்று கதை முடியும்.

நிற்க, நாம் தலைப்புக்கு வரலாம். ஓய்வுக்கே ஓய்வு கொடுப்பவர், சாய்வுக்கே சாய்வு கொடுப்பவர் என்று பல புகழாரங்களுக்கு சொந்தக்காரர் என்பதால் முதலில் நம்பத்தான் முடியவில்லை. எனினும் ஓய்வு உறுதி என்று இரண்டு முறை சொல்லிவிட்டதால் அதை பற்றி யோசிக்காமல் இருக்கமுடியவில்லை. என் அறிவுக்கு எட்டியவரை கருணாநிதியின் ஓய்வுக்குக் பிறகு கீழ்காணும் சிக்கல்கள் வரலாமோ என்று பயப்படுகிறேன்.

குடும்பம் ஒன்றுக்கு மேற்பட்ட கதம்பம் : இறை நம்பிக்கையுள்ள இந்த பகுத்தறிவுக் குடும்பத்தின் கிளைகள் அவ்வளவு சுலபத்தில் எண்ணிவிட முடியாதவை. இவை கருணாநிதி எனும் ஒற்றை இழையில் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கின்றன. ஸ்டாலின் முதல்வராகும் பொழுது ஏனைய மக்கட்செல்வங்கள் உரிமைக்குரல் எழுப்புவார்கள் அவர்களுக்குள் பல உப குழுக்களும் தோண்றும். சமாதான நடவடிக்கை எடுக்கவேண்டிய மக்களைப் பெற்ற மகராசிகள் இரண்டுபேருக்குள்ளும் ஒத்துவராது என்பதால் இது இன்னும் சுவாரசியமாக இருக்கப்போகிறது. இந்திரா வங்கிகளை தேசியமயமாக்கியதைப்போல கருணாநிதி இப்போதைக்கு திமுக மாவட்ட செயலர் பதவிகளை குடும்பமயமாக்கிவிட்டு இன்னும் பத்தாண்டுகள் கழித்து எல்லா சட்டமன்ற உறுப்பினர் சீட்டையும் குடும்பமயமாக்கினால் மட்டுமே  சுமுக  நிலையை பராமரிக்கலாம் (பின்னே இப்போ பள்ளிக்கு போகும் வாரிசுகள் பிற்பாடு சும்மா இருப்பார்களா ??). வேண்டுமானால் கட்சியை சட்டீஸ்கர், உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்களுக்கு விரிவுபடுத்தி அங்கே கட்சிக்காரர்களுக்கு  வாய்ப்பு கொடுத்துக்கொள்ளலாம்.

அட்டானமஸ் அழகிரி : அனேகமாக கடந்த ஆண்டு மத்தியில் கருணாநிதி தனது வாழ்நாள் சாதனையாக அழகிரி மற்றும் ஸ்டாலினுக்கான சென்ட்ரல் மற்றும் ஸ்டேட் பாகப்பிரிவினையைத்தான் எண்ணியிருப்பார். என்ன பாராட்டுவிழா நடத்த முடியவில்லையே என்ற ஒரு குறை மட்டுமே இருந்திருக்கும். அஞ்சாநெஞ்சனை ஆங்கிலம் பயமுறுத்தும் என்று யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள். ஃபெர்டிலைசர், ஃபார்மசூட்டிகல்ஸ் என்று கடினமான வார்த்தைகளை கொண்டிருக்கும் ஒரு துறையை ஏமாற்றி அஞ்சாநெஞ்சனின் தலையில் கட்டியது தாமதமாகத்தான் அவருக்குத் தெரிந்தது. ஹிந்தி டியூசனும் வேலைக்காகவில்லை ( குறைந்தபட்சம் “தூக்குடா அவனை” ” கொஞ்சம் தட்டிவை அவனை ” போன்ற வார்த்தைகளின் ஹிந்தி மொழி பெயர்ப்புகளையாவது கற்றுக்கொண்டாரா என தெரியவில்லை  ).

இப்போது மாநில அரசியலுக்குத்தான் வருவேன் என்று சொன்னதில் துவங்கிவிட்டது முகவின் திருகுவலி. தமிழ்நாட்டின் சரிபாதி மாவட்டங்களில் திமுகவை கட்டுபடுத்தும் அதிகாரத்தைக் கேட்கிறார் அண்ணன். இப்போதே கருணாநிதியின் ஓய்வை அழகிரி விரும்பவில்லை என்பது அவரது பேச்சில் தெரிகிறது. கருணாநிதி பதவியிறங்கும் பட்சத்தில் கட்சியினர் இவ்விருவரில் ஒருவரது கோஷ்டியில் ஐக்கியமாகி நாட்டை இருமடங்கு ரணகளப்படுத்துவார்கள். கொஞ்சமேனும் கட்டுப்படுத்தும் அப்பாவும் இல்லாவிட்டால் தமிழ்நாடு அஞ்சாநெஞ்சனுக்கு அஞ்சாமல் இருக்கமுடியாது.

ஒரு பய தொழில் பண்ண முடியாது, ஒரு சோடா விக்க முடியாது.. தெரிஞ்சுக்க : முரசொலி மாறனால் அறிமுகப்படுத்தப்பட்ட கலாச்சாரமான தொழில் சாம்ராஜியத்தை அமைப்பது எனும் பழக்கம் எல்லோராலும் இப்போது பின்பற்றப்படுகிறது. இப்போதே கனிமொழி கார்த்தி சிதம்பரத்துடன் கூட்டணி போட்டு கோவை வட்டாரத்தில் நூற்பாலைகளை வாங்கிக்குவிக்கும் தகவல் கிடைக்கிறது. கருணாவின் ஓய்வுக்குப் பிறகு குடும்ப உறுப்பினர்கள் போட்டி போட்டு தொழிற்சாலைகளை வாங்கும் சாத்தியம் பிரகாசமாக இருக்கிறது. இவர்களுக்குள் அடித்துக்கொண்டால் இவர்களது நிறுவன ஊழியர்கள் மோட்சமடையும் சாத்தியம் இன்னும் பிரகாசமாக இருக்கிறது. ஆகவே இந்த குடும்பத்தாரது நிறுவனங்களில் வேலைசெய்வோர் உடனடியாக இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள் (தியாகம் செய்யும் ஊழியர்கள் வேலைசெய்யும் நிறுவனத்தைப் பொறுத்து ஏதேனும் ஒரு டிவியில் காடப்படும் வாய்ப்பைப் பெறுவர்..).

இங்கு சிறந்த முறையில் வாழ்த்துப்பா இயற்றப்படும் : ஒரு பரிதாபத்துக்குரிய கூட்டம் கருணாநிதியை வழ்த்திப்பாடியே வயிறு வளர்த்துவருகிறது. கருணாநிதி ஓய்வு பெற்றபின் அவரை வாழ்த்திப்பாடுவது பிரயோஜனப்படாது.  நீண்ட நாட்களாக அவருக்கு வார்த்தைகளால் சொறிந்து விட்டே வாழ்க்கையை வளமாக்கிக்கொண்டதால் வேறு வேலைக்கும் போக முடியாது. அழகிரி ஸ்டாலினிடம் ஏற்கனவே அந்த வேலைக்கான ஆட்கள் தாராளமாக இருக்கிறார்கள். இங்கு திருமணம் மற்றும் இதர சுப காரியங்களுக்கு சிறந்த முறையில் ஒளி ஒலி அமைத்துத்தரப்படும் என்ற மைக்செட் கடைக்காரர்களின் வாசகத்தைபோல இவர்களும் “இங்கு சிறந்த முறையில் வாழ்த்துப்பா இயற்றப்படும் ( டோர் டெலிவரி இலவசம் )” என ஒரு போர்டை வைத்துக்கொண்டு யாராவது வர்றாங்களா என்று காத்திருக்க வேண்டியதுதான்.

ஆஸ்கார் லட்சியம். கோல்டன் குளோப் நிச்சயம் : ( ஒன்னு எழுதுனதுக்கு கொடு, இல்லை எழுதாம இருக்குறதுக்காச்சும் கொடு) முக அவர்கள் எப்போதும் ஏதாவது வேலை செய்தே பழகியவர். அவரால் நிச்சயம் வீட்டில் ஓய்வாக இருக்கமுடியாது. திடீரென இரண்டு மாதத்திற்கு ஒரு திரைக்கதை என முறைவைத்து எழுதினால் நாம் என்ன ஆவது ?? (அது எப்படி இவரது  படத்தில் பணியாற்றுபவர்கள் பாடாவதியாகவே இருக்கிறார்கள் என்று ஒரு நண்பரிடம் கேட்டேன், உளியின் ஓசையை ஸ்பீல்பெர்க் எடுத்தாலும் இப்படித்தான் இருக்கும் என்றார்) இது மற்ற எல்லா பிரச்சனைகளையும்விட முக்கியமானது. ரகுமானோடு இணைகிறார் கருணாநிதி என்று ஒரு இணையதளம் இப்போதே பீதி கிளப்புகிறது. கலைஞர் திரையுலகிற்கு பல நன்மைகள் செய்திருக்கிறார் என்று ரஜினியும் கமலும் அடிக்கடி சொல்கிறார்கள். அதில் அவர் முழுநேரமும் திரைக்கதை எழுதாததும் ஒன்றாம். எது எப்படியோ டிரைலரையாவது கொஞ்சம் பாக்குற மாதிரி எடுங்க அய்யா.. இது அதிக நேரம் டி.வி பாக்குறவுங்க இருக்குற மாநிலம்.

இன்னும் பாராட்டுவிழாக்கள் குறைந்துபோவது, திரையுலகம் ஆதரவில்லாமல் நிற்பது என பல விசயங்கள் இருக்கின்றன. இருந்தாலும் இந்த பதிவுக்கு இது போதுமென்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்ளலாம்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 98 other followers