கர்நாடகாவிடம் இருந்து நாம் கற்க வேண்டியவை என்னென்ன?

கர்னாடகாவில் தமிழக வாகனங்கள் மற்றும் ஓட்டுனர்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு இருவகையான எதிர்வினைகளை சமூக ஊடகங்களில் பார்க்க முடிகிறது. அதாவது பெங்களூர் பாதுகாப்பாக இருக்கிறது எனும் feel good பதிவுகள் அல்லது இந்த கன்னடர்களே இப்படித்தான் எனும் பதிவுகள் வெளியாகின்றன. இரண்டும் உண்மை இல்லை எனும் பதிவுகளும் இருக்கின்றன அவையும் தெளிவான கர்நாடக சூழலை காட்டுவதாக இல்லாமல் காவிரியின் வரலாறும் கர்நாடகாவின் வன்முறைகளுக்கான பிண்ணனி பற்றிய புரிதல் அற்றவைகளாக உள்ளன. இதற்கான தீர்வுகள் என வரும் கருத்துக்கள் இன்னும் நகைப்பூட்டுபவையாக இருக்கின்றன. இரண்டு மாநில முதல்வர்களை வைத்து பேசுங்கள் என்கிறார் ஸ்டாலின். நதிகளை இணையுங்கள் என்கிறார் நடிகர் சிவகுமார். இன்னொருபுறம் கன்னடனைப் பார்த்து இன உணர்வை கற்றுக்கொள் என புலம்பும் தமிழ்தேசிய கருத்துக்களும் உலவுகின்றன்.

ஒப்பீட்டளவில் கர்நாடக மக்கள் அதிகம் நட்புணர்வுள்ளவர்கள், சாமானிய கன்னட மக்களிடம் நீங்கள் வெள்ளந்தித்தனமான தோழமையை சுலபத்தில் பெற முடியும். பெங்களூர் பேருந்து நடத்துனர்கள் தமிழக நடத்துனர்களைவிட பயணிகளிடம் அதிகம் இணக்கமாக இருப்பதை பார்க்கலாம். ஆனாலும் எப்போதும் கர்நாடகா சுலபத்தில் கலவரம் நடக்க சாத்தியம் உள்ள இடமாக (எல்லா காவிரி வேலைநிறுத்தங்களும் பெங்களூரில் ஒரு மிகையான அச்சத்தை பராமரிக்கும்) இருக்க காரணம் அந்த மக்களிடம் உள்ள அரசியல் அறிவீனம். பலருக்கும் தங்கள் மாநில அமைச்சர்களைக்கூட தெரிந்திருக்காது, கொள்கை சார்ந்தெல்லாம் அவர்கள் உரையாடி நான் பார்த்ததில்லை. கட்சியை தெரிவு செய்வதே பெருமளவில் சாதி அடிப்படையில்தான் அங்கே நடக்கும்.

//நீங்க எந்த கட்சி என்று நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, நாங்க ஒக்கலிகா சாதிக்காரங்க சார், பீஜேபிக்குதான் ஓட்டுபோடுவோம் என்றார் //

பெருங்கூட்ட உளவியல் மிகவும் பாமரர்களிடம் சுலபமாக வேலைசெய்யும். தமிழகத்தின் மரியாதை தெரிந்த ஊராக கருதப்படும் கோவை கலவரத்தின்போது கடைகளை சூறையாடியது தொழில்முறை ரவுடிகள் மட்டுமல்ல, சாதாரண மக்களும்தான். முஸ்லீம் பெண்கள் நடுவீதியில் வைத்து சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகையில் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து ரசித்தவர்கள் இறைச்சி வெட்டுவதைக்கூட பார்த்திராத குஜாராத் பெண்கள். வன்முறை செய்ய தூண்ட முடியாத மக்கள் கூட்டம் என்றொன்று இல்லை, அதற்கான நியாயத்தை கற்பிப்பதிலும் பரவலாக வன்முறையை ஆரம்பித்து வைக்கும் அளவுக்கு ஆள்பலத்தை வைத்திருப்பதிலும்தான் இருக்கிறது சூட்சுமம்.

கர்நாடகாவின் இந்த சிக்கலான சூழலுக்கு அடிப்படையாக 3 காரணிகளை கருதலாம். முதலில் மத மற்றும் இன அடிப்படைவாத இயக்கங்களுக்கு கிடைக்கும் சற்றே பெரிய எண்ணிக்கையிலான ஆள்பலம். வாட்டாள் நாகராஜ் போன்ற தாதாக்கள் தமிழகத்திலும் இருக்கிறார்கள். அவர்கள் குரலுக்காக பாதி மாநிலம் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளாது, ஆனால் அது கர்நாடகாவில் நிகழ்கிறது. இரண்டாவது அரசியல் அறிவற்ற மற்றும் அதற்கு வழியற்ற மக்கள். மூன்றாவது இதற்கு எதிர்குரல் எழுப்ப போதுமான அளவில் ஆட்கள் இல்லாத சூழல். இங்கே தமிழ் தேசியவாதிகளில் சிலர் இனவெறியை தூண்ட முனையும்போதெல்லாம் வினாடி தாமதமில்லாமல் எதிர்க் குரல்கள் எழுகின்றன. கர்நாடகாவில் அது அனேகமாக இருக்காது. ஒருங்கினைப்பும் முன் தயாரிப்பும் இல்லாமல் தற்போதைய பெங்களூர் கலவரம் சாத்தியமே இல்லை. மூன்றாண்டுகளுக்கு முன்னால்கூட பெரிய அளவிலான எதிர்ப்பை கர்நாடகா சந்தித்தது, கிட்டத்தட்ட மாண்டியா 12 நாட்கள் முடங்கியது. அப்போதுகூட இத்தகைய கலவரம் நிகழவில்லை.

// கன்னட டிவி ஒன்றில் பேசிய விவசாய சங்க பிரதிநிதி எங்கள் ஊர் மழையில் அவர்கள் பங்கு கேட்கிறார்கள், தமிழகத்தில் பெய்யும் மழையில் ஒரு சொட்டுகூட நமக்கு வராது… தண்ணீருக்கு ரிவர்ஸ் கியர் கிடையாது என ரொம்ப சீரியசாக பேசுகிறார். அதே விவாதத்தில் அமர்ந்துகொண்டு நதிநீர் பங்கீட்டு சட்டங்களை விளக்காமல் இருந்தார் ஜெயா வழக்கில் அச்சமின்றி வாதாடிய வழக்கறிஞர் ஆச்சார்யா//

தமிழகத்திலும் முஸ்லீம்களுக்கு எதிராக வெகுமக்களின் மௌனத்தின் வழியேயான வன்முறை இருந்தது. அதுவே அவர்களுக்கு எதிரான அரச வன்முறையின் ஆதாரமாக இருந்தது. இராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும் உணவில்லாமல், மருந்தில்லாமல் மடிந்துபோன லட்சக்கணக்கான குழந்தைகளின் மரணத்தின் பின்னால் இருப்பது அமெரிக்கர்களின் மௌனமும்தான். குஜராத் கலவரத்தின்போது இந்தியா முழுவதும் இருந்தது அதுதான். இப்போது காஷ்மீர் பெல்லட் குண்டு தாக்குதல்களை இந்தியா அமைதியாய் கடப்பதும் வன்முறையின் passive வடிவம்தான். இவை எல்லா இடங்களிலும் இருக்கிறது, கர்நாடகாவில் வன்முறையை செயலில் காட்ட ஒரு கூட்டம் வளர்த்துவிடப்பட்டிருக்கிறது. நமக்கு அது இல்லை அல்லது இன்னும் இல்லை அல்லது போதுமான அளவுக்கு இல்லை, அதற்கு எதிராக சிந்திக்கவும் பேசவும் செயல்படவும் நம்மிடம் ஆட்கள் இருக்கிறார்கள், அது அங்கே இல்லை அல்லது போதுமான அளவு இல்லை.

இந்த கலவரத்தின் பலனை முழுமையாக அனுபவிக்கப்போவது பாஜக, தண்ணீர் கொடுக்காதே என உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் எதிர்ப்பது எடியூரப்பாவும் அவர் கட்சியும், வினாயகர் சதுர்த்திக்காக பல அடிப்படைவாத இளைஞர்கள் சில நாட்களுக்கு முன்னால்தான் ஒன்றுகூடியிருக்கிறார்கள். இப்போது நடந்திருப்பது நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கலவரம். இந்த புள்ளிகளை இணைத்தால் உங்களுக்கு பிரச்சினையின் அடிப்படை புரியும். இதனை எதிர்க்க தெரியாத மற்றும் முடியாத மக்களால் ஒட்டுமொத்த மாநிலமும் ஒரு மோசமான அடையாளத்தை சுமக்கிறது. (பிரச்சினை ஏதும் இல்லை எனும் பிரிவினர் உயர் மத்தியதர வகுப்பினர், நிலநடுக்கம், பெருவெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களைத் தவிர வேறெந்த சிக்கலும் இவர்களை குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பதில்லை… குறிப்பாக மனிதர்களால் செய்யப்படும் பாதிப்புக்கள்).

// ஊருக்குள் வரும்போது தமிழில் பேசாதே என தன் தமிழ் நண்பருக்கு எச்சரிக்கை செய்த கன்னட இளைஞர், இருவரும் இணைந்திருக்கும் குழுவில் “ரத்தத்தைக் கொடுப்போம், காவிரியைத் தரமாட்டோம்” எனும் வாசகத்தை பகிர்கிறார்//

தமிழ் தேசிய இயக்கங்கள் குறிப்பிடும் கன்னட இன உணர்வு என்பது அங்கிருக்கும் முட்டாள்த்தனம் மற்றும் பயத்தின் கூட்டு வெளிப்பாடு. உண்மையில் அதனால் கன்னடர்களுக்கு எந்த பலனும் கிடையாது. பெங்களுர் மைசூரைத் தவிர்த்து வேறெந்த இடத்திலும் வளர்ச்சி ஏற்படாத மாநிலம் அது. விவசாயிகளுக்காக எனும் பெயரில் ஒரு மாநகரம் அடிக்கடி முடக்கப்படும் மாநிலத்தில்தான் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். பெங்களூரின் நிலமும் வளமும் ரெட்டிகளாலும் மார்வாடிகளாலும்தான் ஆளப்படுகிறது, கன்னடர்களெல்லாம் அடிமை வேலைக்குத்தான் இங்கு போட்டியிட்டாக வேண்டும். ஓசூரில் கட்டிட வேலை செய்யும் மாண்டியா பகுதி விவசாயக்குடும்பங்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் சிறு நில உடமையாளர்கள் என்பதையும் விவசாயம் பொய்த்ததால் இந்த கூலிப்பணிகளுக்கு வந்தவர்கள் என்பதையும் நினைவில் வையுங்கள்.

இவையெல்லாம் நாம் எதிர்மறையாக கர்நாடகாவிடம் இருந்து கற்க வேண்டியவை. அரசியல் அறிவீனமும், இன மற்றும் மத அடிப்படைவாதிகளுக்கான கிடைத்திருக்கும் எதிர்ப்பு குறைவான பரப்பும்தான் ஒரு மாநிலத்தை வளரவிடாமல் வைத்திருக்கிறது. சிறு எண்ணிக்கையிலான அராஜகவாதிகளின் செயலை கண்டிக்க முடியாத பிற மக்கள் அதற்கான மொத்த அவமானத்தையும் சுமக்கிறார்கள். தமிழகத்தில் உருவாகும் பிள்ளையார் பொறுக்கிகளும் அரசியல் பிரக்ஞையற்ற தலைமுறையும் நமக்கு எச்சரிக்கை கொடுக்கும் அறிகுறிகள். இவற்றை ஒழிக்காவிட்டால் கர்நாடகாவின் நிலைதான் நமக்கும். (விவசாயம் அழிந்துபோகவிருக்கும் நிலையிலும் தஞ்சாவூரில் வினாயகன் ஊர்வலம் நடக்கிறது எனும் செய்தியை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்)

நேர்மறையாகவும் அவர்களிடம் கற்க சில விடயங்கள் இருக்கிறது. அங்கே அமைச்சர்களையும், முதல்வரையும்கூட சாதாரண மக்கள் எளிதில் சந்திக்க முடியும். மைசூர் சாலை விரிவாக்கப் பணிகளின்போது நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் “நான் பணம் தருகிறேன், உங்கள் வீட்டை காலி செய்வீர்களா? என அப்போதைய முதல்வர் எடியூரப்பாவிடம் வினவினார் ஒரு விவசாயி (அப்போது விகடனில் இந்த செய்தி வெளியானது). முதல்வருக்காக மணிக்கணக்கில் சாலையை மூடிவைக்கும் அரச ரவுடியிசத்தை நான் பெங்களூரில் கேள்விப்பட்டதில்லை. இப்போதுகூட பத்திரிக்கையாளர் சந்திப்பில் சித்தராமையா நின்றுகொண்டிருக்கும்போது மாநில உள்துறை அமைச்சர் உட்கார்ந்துகொண்டு “சொந்தமாக” பதில் சொல்கிறார். தமிழகத்தில் மதச்சார்பற்றவராக காட்டிக்கொள்வது ஒரு அரசியல்வாதிக்கு எத்தனை அவசியமோ அத்தனை அவசியமானது அங்கே ஒரு அரசியல்வாதி எளிமையானவனாக இருப்பது.

தமிழகத்தில் சாதிச்சங்கங்கள் வலுவடையவும் கர்நாடகத்தில் இனவாத குழுக்கள் வலுவடையவும் அடிப்படையாக இருப்பது மதவாத இயக்கங்கள். இரு இடங்களிலும் அவை வேறு வேறான வழிகளில் தங்கள் நரவேட்டையை நடத்துகின்றன. மக்களின் அறிவுக்குத்தக்கவாறு அவற்றின் வினைவேகம் மாறுபடுகிறது. இவற்றை எதிர்கொள்ள நாம் இன்னும் தீவிரமான அரசியல் அறிவுள்ள சமூகத்தை அமைக்க உழைக்க வேண்டும். நிறைவாக சொல்லிக்கொள்ள ஒன்றிருக்கிறது, லட்சக்கணக்கான மக்களை அச்சமூட்டி எக்காளமிடும் போலித்தனமான கர்நாடக ஒற்றுமையைவிட கருத்து சொல்லவும் பயமின்றி நடமாடவும் எல்லா மக்களையும் எப்போதும் அனுமதிக்கும் தமிழக ஒற்றுமையின்மை மேலானது. இரண்டு தரப்பையும் வெறுக்காமல் இருக்கவும் இரண்டு தரப்பில் இருந்து கற்கவும் நமக்கு ஏராளமான செய்திகள் இருக்கின்றன.

(இது காவிரிப் பிரச்சினை பற்றிய பதிவல்ல. கர்நாடகா பற்றிய எனது அறிவுக்கெட்டிய பார்வை மட்டுமே. அவை சரியான விளக்கமாக இல்லாமல்போக எல்லா வாய்ப்பும் உண்டு என்பதை வாசிப்பவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். )

நாய் லவ்வர்ஸ் வாழ்க.

தென்னகத்து திரிசா முதல் வடக்கத்தி மேனகாஜீ வரை தெருநாய்கள் மீது காதல் கொண்ட பிரபலங்கள் உள்ள நாட்டில் பிறந்ததை நினைத்து மனம் பூரித்துப் போகிறது.

சமீபத்தில் கேரளாவில் தெருநாய்களால் கடித்து கொல்லப்பட்ட பெண் குறித்து மேனகாஜீ சொன்ன தகவல் ஒவ்வொரு இந்தியனும் கற்க வேண்டிய பாடம் (செத்தவர் கையில் கறி வைத்திருந்ததால் நாய்கள் கடித்திருக்கும் – மேனகா). வடக்கேயாவது மாட்டுக்கறி வைத்திருக்கும் மக்களை நாய்கள் தாக்குகின்றன. தெற்கே எந்தக்கறி வைத்திருந்தாலும் மேனகாவின் நாலுகால் தொண்டர்கள் கொல்கிறார்கள். கடைசியில் தயிரும் பருப்புமே தேசிய உணவாக உள்ள ராமராஜ்யம் அமைந்துவிடும் எனும் நம்பிக்கை பலருக்கும் வந்திருக்கிறது.

நாய்களை உயர்குடி மக்கள் நேசிப்பதில் ஒரு காரணம் இருக்கிறது. அவை பணக்காரர்களைப் பார்த்து பொறாமை கொள்வதில்லை. ஏன் முஸ்லீமை கொன்றாய் என்றோ ஏன் தலித்தை கொன்றாய் என்றோ அவை கேட்பதேயில்லை. நாட்டின் இறையான்மையை அவை அந்த அளவுக்கு மதிக்கின்றன. பணக்காரர்கள் வாழும் பகுதிகளில் எந்த தெருநாயும் சுற்றிக்கொண்டிருப்பதில்லை. அதனால்தான் விஷால், சிபிராஜ் போன்ற     ஆக்‌ஷன் ஹீரோக்களும் நாய்களுக்காக ஆதரவுக்குரல் கொடுக்கிறார்கள்.

மோஹன்ஜீ இந்துக்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளச்சொன்னால், பெத்தா சோறு யாரு போடுவா? என எதிர்கேள்வி கேட்கிறார்கள் எகத்தாளம் கொண்டவர்கள். ஆனால் பாரத தேச நாய்கள் அப்படியல்ல, கார்த்திகை, மார்கழி வந்தால் அவை மோஹன்ஜீயின் உத்தரவை கண்ணும் கருத்துமாக நிறைவேற்றுகின்றன. நாய்கள் என்றைக்காவது வேலைநிறுத்தம் செய்திருக்கிறதா, யமஹ, நமஹ என ஓதி புரோகிதன் இறைவனை நாடுவதைப்போல நாய்களும் ஒலியெழுப்பி உழைக்கின்றன. காரில் போகும் தேசபக்தர்களை எந்த தெருநாயும் கடித்ததில்லை, எந்த பணக்காரனும் ரேபீஸ் வந்து இறந்ததில்லை. பிறகு ஏன் பணக்காரன் நாயை நேசிக்கக்கூடாது?

இந்தியாவில் 3 கோடி தெருநாய்கள் இருக்கின்றன. மும்பையில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் 434 பேர் நாய்க்கடி காரணமாக ரேபீஸ் நோய் தாக்கி இறந்திருக்கிறார்கள் (ஆனால் இந்த காலகட்டத்தில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்கள் எண்ணிக்கை 422. பாருங்கள், நம் நாய்கள்கூட வெளிநாட்டு தீவிரவாதிகளை ஜெயிக்க விடுவதில்லை). 2008 முதல் 2012 வரை தெருநாய்களிடம் (மட்டும்) கடி வாங்கிய காஷ்மீரிகள் எண்ணிக்கை 50000. இந்த ஒரு காரணம் போதாதா தேசபக்தர்கள் தெருநாய்களை நேசிக்க? போகட்டும், பல லட்சம் பேர் கடிபடுகிறார்கள், ரேபீசால் ஆண்டுக்கு 20000 பேர் சாகிறார்கள் (உலக ரேபீஸ் மரணங்களில் 35% இந்தியாவில் நிகழ்கிறது).. அதனால் நாட்டின் ஜி.டி.பி குறைந்துபோய்விட்டதா?

ஆனால் ஒரு நாய்க்கு குடும்பக்கட்டுப்பாடு செய்ய 1000 ரூபாய் செலவாகிறது. ஒன்னரைகோடி நாய்களுக்கு கு.க செய்தால் நாட்டின் பொருளாதாரம் என்னாவது? அன்னிய முதலீட்டுக்கு ஆபதில்லை எனும்போது செத்தவர்கள் சொர்கத்தில் இருந்து வல்லரசு இந்தியாவை பார்த்தால் போதாதா… சொர்கத்துக்கு போனால் அவர்கள் என்.ஆர்.ஐ எனும் உயர்தகுதி அடைவார்கள் என்கிற அறிவுகூட இவர்களுக்கு இல்லையே? நாய்கள் பைரவனின் வடிவம் இல்லையா… மக்களின் உயிரை எடுப்பதில் பகவானுக்கு உரிமையில்லை என்பது ஆச்சார விரோதம்.

இந்தியாவில் 7 பேருக்கு ஒரு நாய் எனும் விகிதாச்சாரம் இருக்கிறது. ஆனால் பொலிவியாவிலோ இரண்டு பேருக்கு ஒரு நாய் எனும் விகிதாச்சாரம் (2:1) இருக்கிறது. அவர்கள் என்ன நாயைக்கொல் என குதிக்கிறார்களா, இல்லை காயடித்து பாபம் செய்கிறார்களா? தினமணி வைத்தி எனும் உலகம் போற்றும் விஞ்ஞானி அசைவம் சாப்பிடுவதால்தான் மனிதர்களுக்கு வன்முறை எண்ணம் வருகிறது என்பதை டெஸ்கில் உட்கார்தபடியே கண்டுபிடித்திருக்கிறார். அப்படிப்பட்ட துர்குணம் கொண்ட மக்களிடம் வளரும் நாய்களும் துர்குணம் கொண்டவையாகத்தானே வளரும்? அதற்குத்தான் அசைவத்தை தடைசெய் என அறிஞர் பெருமக்கள் வேண்டுகோள் வைக்கிறார்கள்.

எதையும் நேர்மறையாக யோசிக்க சிலர் மறுக்கிறார்கள், அவர்கள் தெருநாய் பிரச்சினையையும் அப்படியே அணுகுகிறார்கள். நடந்து போவோரை நாய் கடிக்கிறது என புலம்புகிறார்கள். அதையே காரணமாக வைத்து “கடுமையாக உழைத்து” கார் வாங்குங்கள். பிளாட்ஃபார்ம் கடைகளுக்கு அருகே நாய் சுற்றுகிறதா, சரவணபவன் செல்லுங்கள். பணக்காரர்கள் வசிக்கும் பிரதேசத்தில் நாய்களே இருப்பதில்லை. அதனால் பணக்காரனாகுங்கள், நாய் தொந்தரவே இருக்காது.

தெருநாய் விரோதிகளுடன் விவாதம் செய்து புண்ணியமில்லை. ஆகவே நாய்க் காதலர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறோம். நாய்களை நேசிப்பதால்தான் அந்த இறைவன் உங்களை பொருளாதார நிலையில்  உச்சத்தில் வைத்திருக்கிறான். ஆகவே நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஊருக்கு ஊர் ஒரு நாய்கள் சரணாலயம் ஆரம்பியுங்கள். தெருநாய்கள் எல்லாவற்றையும் அங்கே கூட்டிக்கொண்டுபோய் மறுவாழ்வு கொடுங்கள். பணம் படைத்தவன் மனிதனுக்குத்தான் எதையும் செய்யக்கூடாது, நாய்களுக்கு எவ்வளவு வாரிக்கொடுத்தாலும் உங்கள் திரண்ட செல்வம் குறைந்துவிடாது. ஆகவே வாருங்கள் தேசபக்தர்களே, நாயைக் காப்போம் நாய் விரோதிகளுக்கு பாடம் புகட்டுவோம்.

அன்புடன்

நாய்களுக்கான மனிதர்கள் இயக்கம் (people for dogs)

புதிய கல்விக்கொள்கை – கார்ப்பரேட்- வர்ணாசிரம கள்ளக்காதலுக்கு பிறந்த பிள்ளை.

ஊரில் பெரும்பான்மையோர் நோயுற்றிருக்கையில் அந்த ஊருக்கு ஒரு போலி மருத்துவர் வந்தால் என்ன நடக்கும் என யோசித்திருக்கிறீர்களா? அது நோயைக்காட்டிலும் ஆபத்தானது என்கிறீர்களா… சற்றேறக்குறைய அதே நிலையில்தான் இப்போது கல்விச்சூழல் இருக்கிறது. சமீப காலங்களில் பல பெற்றோர்களுடனும் மாணவர்களுடனும் உரையாட நேர்கிறது. அப்போதெல்லாம் எழும் அச்சம் நமது கல்விசூழல் குறித்தாகவே இருக்கும். ஆனால் அதைவிடவும் பெரிய பயம் பாஜக அரசு புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்ட போது எழுந்தது.

கல்வித்துறை மேம்பாடு பற்றி எந்த அறிக்கை எழுதப்பட்டாலும் அதில் சில அம்சங்கள் கட்டாயம் இடம்பெறும். பாடத்திட்டத்தை காலத்துக்கேற்ப மீள்வடிவமைப்பு செய்வது, கல்வி நிலையங்களில் உளவியல் ஆற்றுப்படுத்துனர்களை பணியமர்த்துவது என்பதுபோன்ற மானே தேனே பாணி ஆலோசனைகள் இணைக்கப்படும். அப்படியான பரிந்துரைகள் இந்த வரைவு அறிக்கையிலும் ஏராளமாக இருக்கின்றன. அவை செய்யப்படுவதற்கான காலக்கெடு எப்போதும் நிர்ணயிக்கப்படுவதில்லை. உதாரணமாக பள்ளிகளில் ஆற்றுப்படுத்துனர்களை பணியமர்த்தச் சொல்லி வருடம் ஒரு நீதிமன்ற ஆணையாவது வெளியாகும், பள்ளி மாணவர்கள் ஏதேனும் கொலை செய்தால் மட்டும் அவை பரபரப்பாக விவாதிக்கப்பட்டு அடங்கிவிடும். அப்படியான வெற்று லட்சியவாத பில்டப் பரிந்துரைகளோடுதான் ஆரம்பிக்கிறது டி.எஸ்.ஆர் சுப்ரமணியம் அறிக்கை.

நான் முதல்வரானால் எனும் தலைப்பில் மாணவர்கள் கட்டுரை எழுதுவது போல இங்கேயும் பல மெச்சத்தக்க பரிந்துரைகள் இருக்கின்றன. அவற்றை பட்டியலிட்டால் தேர்தலுக்கு முன்னால் மோடி மூஞ்சியை பார்த்து ஏமாந்ததுபோல இதிலும் நீங்கள் மயங்கிவிடக்கூடும். ஆகவே தேவைப்படுவோர் தனியே வாசித்துக்கொள்க.

உதாரணத்துக்கு ஒன்றிரண்டை எடுத்துக்கொள்ளலாம், தொடக்கக்கல்வியை பெறுவதற்கான தகுதியை அங்கன்வாடியிலேயே பெறுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்கிறது இந்த வரைவு அறிக்கை (பகுதி -முன்னோக்கத்தையும் செயலாக்கத்தையும் நிறைவு செய்யத்தக்கவாறான முதன்மையான கல்வி குறிக்கோள்கள்). இந்த ஒரு குறிக்கோளை அடையவே இந்தியா இருக்கும் நிலையில் நூறு ஆண்டுகள் ஆகும். ஓரளவு நல்ல கட்டிடம், உபகரணங்கள் கொண்ட அங்கன்வாடியை நான் என் வாழ்நாளில் இதுவரை பார்த்ததில்லை. தமிழக அரசின் ஆரம்பப்பள்ளிகளில் 50% பள்ளிகள் இரண்டு அல்லது அதற்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்டு செயல்படுகிறது. ஆரம்பக் கல்வியை இப்படி சிதைப்பதில் அரசுக்கு ஒரு உள்நோக்கம் உண்டு, ஆரம்பத்திலேயே படிக்கவிடாமல் துரத்திவிட்டால் பிறகு உயர்நிலைக்கல்வியில் இருந்தும் அரசு விலகிக்கொள்ளலாம் இல்லையா?

இந்த கல்விச்சூழல் பற்றிய எந்த கரிசனமும் புதிய கல்விக்கொள்கையில் இல்லை. ஆனால் சிறப்பான முன்தயாரிப்புக்கல்வி, எல்லோருக்கும் உயர்கல்வி, வாழ்நாள் முழுக்க கல்வி கற்கும் வாய்ப்பு என மோடியின் மேடைப்பேச்சைப்போல ஜிகினா குறிக்கோள்கள் மட்டும் இருக்கின்றன.

இன்னொரு உதாரணத்தையும் பார்ப்போம். பயிற்சி பெற்ற ஆற்றுனர்களை பள்ளிகள் பணியமர்த்தும் என்கிறது இவ்வறிக்கை (4.2 production of rights of the child and adolescent education). இந்தியாவில் ஆற்றுப்படுத்துனர்களின் தகுதி என எந்த வரையறையும் இதுவரை செய்யப்படவில்லை. வெறுமனே உளவியல் படித்தவர்களால் ஆற்றுப்படுத்துனராக பணி செய்ய முடியாது. பெரியவர்களின் உளவியல் பிரச்சினைகளை கையாளத் தெரியாதவர்களால் குழந்தைகளுக்கான ஆற்றுப்படுத்துதலை செய்ய இயலாது. காரணம் குழந்தைகள் பெரும்பாலும் பெரியவர்களின் பிரச்சினையை எதிரொலிப்பதைத்தான் நாம் சிறார் நடத்தைக் கோளாறாக புரிந்துகொள்கிறோம் (மூளைத்திறன் குறைவு போன்ற விதிவிலக்குகள் தவிர). 2009 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி இந்தியாவில் 13 லட்சம் பள்ளிகள் உள்ளன.

பள்ளிக்கு ஒன்றாக நியமித்தாலும் நமக்கு 13 லட்சம் ஆற்றுப்படுத்துனர்கள் தேவை. (கவனிக்க: ஒரு ஆற்றுப்படுத்துனர் நாளொன்றுக்கு 3 பேரைத்தான் கையாள முடியும், அதன் பிறகான ஆற்றுப்படுத்துதல் நடவடிக்கைகள் பெரிய அளவில் பலன் தராது. ஆகவே பெரிய பள்ளிகளில் ஒரு ஆற்றுப்படுத்துனர் பதவி என்பது வெறும் கண்துடைப்பே. மேலும் சிறார்களால் தங்கள் பிரச்சினையை தெளிவாக விளக்கி சொல்ல முடியாதாகையால் பிரச்சினைக்கான காரணத்தை கண்டறியவே பல வாரங்கள் ஆகலாம்) இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான கவுன்சிலர்களை (ஆற்றுப்படுத்துனர்) பயிற்றுவிக்கவோ அங்கீகரிக்கவோ இந்தியாவில் எந்த ஏற்பாடும் இல்லை. இன்னும் ஆற்றுப்படுத்துனர்கள் தேவைப்படும் கல்லூரிகள் மற்றும் மற்ற கல்வி நிலையங்கள் உள்ளன. ஆக இந்த அறிக்கையின் ஒற்றைவரி பரிந்துரையை செயல்படுத்தவே பல பத்தாண்டு உழைப்பு தேவை. இனாமாக கிடைத்த முட்டையை கக்கத்தில் வைத்துக்கொண்டு கனவு கண்ட பிச்சைக்கார சாமியாரைப்போல நாமும் இவற்றை வைத்து கனவு காணலாம், வேறெதுவும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை.

இவை சாத்தியப்படுகள் பற்றிய கேள்விகள். ஆனால் மறுபுறம் பல அபாயகரமான பரிந்துரைகள் மிக நயமாக செருகப்பட்டிருகின்றன. திவசம் செய்வதற்கு மட்டும் கட்டாயமாக தேவைப்படும் சமஸ்கிருதத்தை கிட்டத்தட்ட எல்லா மட்டத்திலும் கட்டாயமாக்க இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் சமஸ்கிருதத்தின் சிறப்பான முதன்மையினை கருத்தில் கொண்டும், நாட்டின் பண்பாட்டு ஒற்றுமைக்கு அதன் தனித்தன்மை வாய்ந்த பங்களிப்பைப் கருதியும் பள்ளிகளில் அதனை கற்பிப்பதற்கு வழி செய்யப்படும். பல்கலைக்கழக நிலையில் அதனை கற்பதற்கு மிகவும் தாரளமான வசதிகள் வழங்கப்படும். (பரிந்துரையின் மொழியாக்கம்)

இந்த ”குறிக்கோளை” விளக்க அவசியமில்லை என கருதுகிறேன். இந்தியா என்றால் இந்துக்கள், இந்து என்றால் பார்ப்பனீயம் என்பதுதான் இதன் அடிநாதம் (நாட்டின் பண்பாட்டு ஒற்றுமைக்கு அதன் தனித்தன்மை வாய்ந்த பங்களிப்பைப் கருதியும்…!!)

பத்தாம் வகுப்பில் பலரும் தோல்வியடைய காரணம் அறிவியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் மாணவர்களின் குறைந்த செயல்திறன் என கண்டறிந்துள்ள இந்த குழு, அதற்கான பரிந்துரையாக மாணவர்களை இரு பிரிவாக பிரிக்க சொல்கிறது. A – அதிக செயல்திறன் உள்ள மாணவர்கள்,  B குறைந்த செயல்திறன் உள்ள மாணவர்கள். இரண்டாம் நிலை மாணவர்கள் பிறகு மேற்சொன்ன பாடங்கள் தேவைப்படாத தொழிற்கல்வியை தொடரலாம். மாணவனுக்கு படிக்க வசதியில்லாமல் இருந்தால், ஆசிரியரே பள்ளியில் இல்லாமல் இருந்தால், மாணவருக்கு வேறு பிரச்சினை இருந்தால்கூட மதிப்பெண்கள் குறையலாம். ஆனால் அரசுக்கு அதனால் என்ன நட்டம்? கார்பரேட் நிறுவனங்களுக்கு இத்தகைய கடைநிலை தொழிலாளிகள் அவசியம் இல்லையா?

இந்த பரிந்துரை எத்தகைய கல்விச்சூழலைக் கொண்ட நாட்டில் செய்யப்படுகிறது என்பது மிகவும் தீவிரமாக விவாதிக்கப்படவேண்டியது. ஆரம்பக்கல்வியை முற்றிலுமாக சிதைத்து, சாதாரண வாக்கியத்தைக்கூட படிக்க முடியாத மாணவர்களை அரசே உருவாக்கிவிட்டு அவர்களை கீழ் நிலையிலானவர்கள் என அரசே பிரித்து அவர்களை தொழிற்கல்விக்கு அனுப்புவது ஹிட்லர் போன்ற கொடூர சர்வாதிகாரிகள் சிந்தனையில் மட்டுமே உதிக்க முடிகிற யோசனை.

தமிழக அரசுப்பள்ளிகளில் சராசரியாக பள்ளிக்கு 5 வகுப்பறைகள் உள்ளன, தனியார் பள்ளிகளில் அதன் எண்ணிக்கை 10. 2009 புள்ளிவிவரத்தின்படி பெண்களுக்கு என தனி கழிவறை கொண்ட தமிழக பள்ளிகள் 50 விழுக்காடு மட்டுமே. தமிழகத்தில் சராசரியாக அரசுப்பள்ளி ஒன்றுக்கு 4.2 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் இத விகிதாச்சாரம் 11.7 ஆக உள்ளது. (தரவுகள் National university of educational planning and administration 2011 ல் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையிலானது).

அரசுப்பள்ளிகளை பயன்படுத்துவது பெருமளவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடி மக்களும்தான். இவர்கள் கல்விக்கு உள்ள ஒரே வாய்ப்பான அரசுப் பள்ளிகளை இப்படி கீழினும் கீழான தரத்தில் வைத்துவிட்டு, அதில் படிக்கும் மாணவர்களை செயல்திறனற்றவர்கள் என பிரிப்பதன் மூலம் மாணவர்களை குற்றவாளியாக்குகிறது இந்த அறிக்கை. இதன் மூலம் பெருந்தொகையான பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடி மாணவர்களை வழமையான கல்வி வாய்ப்புக்களில் இருந்து விரட்டியடிக்க உத்தேசித்திருக்கிறது பாஜக. வெள்ளைக்காரன் காலத்தில் மற்ற ஜாதிக்காரர்கள் அரசுப்பணிக்கு வருவதைக் கண்டு பயந்த மராட்டிய பார்ப்பனர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கான விதையை போட்டார்கள். அதன் பலனை இப்போது அறுவடை செய்ய முனைகிறார்கள்.

இன்னும் இருக்கிறது,

Dignity of labour (தொழிற்கண்ணியம்) கற்பிக்கப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது. அனேகமாக யூனியன் எதுவும் ஆரம்பிக்காமல் போட்டதை தின்றுவிட்டு வேலை செய்ய கற்றுக்கொடுப்பார்கள் என நினைக்கிறேன்.

ஒற்றுமை, தொடர்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தி அறிவுரை பெறுவதற்காக ஆசிரமங்களோடு அருகில் உள்ள பள்ளிகளை இணைக்கும் வழிமுறைகள் கையாளப்படும் எனும் பரிந்துரையும் இங்கிருக்கிறது. ஊரில் உள்ள ஆசிரமங்கள் எல்லாம் கஞ்சா சப்ளை முதல் பெரிய லெவல் தரகு வேலை வரை செய்துகொண்டிருக்கும் நாட்டில் அவர்களுக்கு ஆள் அனுப்பும் வேலையை அரசு செய்யவிருக்கிறது. எல்லா மாணவர்களும் RSS ல் உறுப்பினராக்கப்படுவார்கள் என அறிவிக்காததன் மூலம் இக்கமிட்டி தம் மக்கள் மீதான கரிசனத்தை காட்டியிருக்கிறது என நம்பலாம்.

ஊர்புற மாணவர்களின் தொழிற் திறமைகள் மிகுந்த கவனத்துக்குரியன. முறையான பள்ளி நேரத்துக்குப் பிறகு தொழில் அடிப்படையிலான படிப்புகள் தேசிய தொழில் வளர்ச்சி மேம்பாட்டு வாரியத்தின் உதவியோடு ஊர்ப்புற மாணவர்களுக்கு வழங்கப்படும். அதென்ன ஊர்ப்புற மாணவர்களுக்கு மட்டும் தொழிற்கல்வி?

இந்துத்துவா தனது கள்ளக்காதலனான கார்ப்பரேட்டுக்களுக்கு என ஒரு அன்புப்பரிசையும் இந்த அறிக்கையில் கொடுத்திருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 6 விழுக்காட்டை கல்விக்கு ஒதுக்கும் லட்சியம் நிறைவேற்ற முயற்சி எடுக்கப்படும் என சொல்லும் இந்த அறிக்கை, புதிய அரசுக் கல்விநிறுவனங்கள் எதுவும் துவங்கப்படாது என தெளிவுபடுத்துகிறது. ஆனால் கல்வித்துறையில் முதலீடு செய்யும் தனியார்களுக்கு வரிச்சலுகை கொடுத்து ஊக்குவிக்கப்படும் என்கிறது இவ்வறிக்கை. சென்ற ஆண்டு (2015) பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஜெட்லீ கல்விக்கான ஒதுக்கீட்டை 16 விழுக்காடும் சுகாதாரத்துக்கான ஒதுக்கீட்டை 15% வெட்டியிருக்கிறார் என்பதை நினைவில் வைக்கவும்.

ஆராய்ச்சி வளர்ச்சிக்கான அன்னிய நேரடி முதலீடு, வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இங்கே தொழில் செய்ய அனுமதி (அதனை பட்டம் கொடுக்க என நாகரீகமாக குறிப்பிடுகிறார்கள்), கல்வி நிறுவனங்களில் நிதியை பெருக்க முன்னாள் மாணவர் நிதி, பயிற்சிக் கட்டணத்தை உயர்த்துதல், கல்வி நிறுவனங்களில் தனியார் முதலீடு ஆகிய வழிகள் பின்பற்றப்படும் என்கிறது டி.எஸ்.ஆர் சுப்ரமணியம் குழு அறிக்கை.

கல்வியியலின் வாடையே படாத மத்திய அரசு அதிகாரிகளை புதிய கல்விக் கொள்கையை வரயறை செய்ய நியமனம் செய்ததில் இருந்தே பாஜகவின் நோக்கத்தை புரிந்துகொள்ள முடியும். அதிலும் அரசு நேர்மையாக செயல்பட்டதா என்றால், இல்லை. குழுவின் தலைவர் தனது அறிக்கையை முழுமையாக வெளியிடாவிட்டால் தாமே அதனை வெளியிடுவேன் என அரசை எச்சரித்திருக்கிறார் சுப்ரமணியம். இப்படி தன் சொந்த அறிக்கையிலேயே திருட்டுத்தனம் செய்யும் பாஜக இன்னும் எதை வேண்டுமானாலும் செய்யும். தமது படிப்பு சான்றிதழ்களையே போலியாக தயாரிக்கும் தலைவர்களிடம் நாம் நமது குழந்தைகளின் எதிர்காலத்தை ஒப்படைக்கும் துயர நிலையில் இருக்கிறோம்.

இந்தக் கல்விக்கொள்கையின் நோக்கம் தெளிவாக இருக்கிறது. பெருநிறுவனங்களுக்கு மலிவான கூலிகளை உருவாக்குவது, கல்விச்சூழலை முற்றிலுமாக இந்து மயமாக்குவது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழைகளை உயர்கல்வியில் இருந்து துரத்துவது, கல்வியை முற்றாக தனியார் மயமாக்குவது ஆகியவைதான் இவ்வறிக்கையின் சாரம். போதுமான அளவு பசப்பல்கள், ஜோடனைகள் எல்லாம் சேர்க்கப்பட்டு இது கல்வி மேம்பாட்டுக்கான அறிக்கைபோல தோற்றமளிக்கிறது. பார்ப்பனீயத்தின் ஆளுமையின் கீழ் கல்வி இருந்தால் அது நாட்டை எப்படி சீரழிக்கும் என்பதற்கு நம்மிடம் இரண்டாயிரம் ஆண்டு வரலாறு உண்டு.

மாநிலத்திலோ சமச்சீர் கல்வியையே சகிக்க முடியாத சீமாட்டி ஆட்சியில் இருக்கிறார். தமிழக கல்வித்துறையை பீடித்த சாபங்களில் ஒன்றுதான் ஜெயலலிதா. ஆகவே பொதுமக்கள் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. ஏற்கனவே நாம் பெரும் பொருளாதாரத் தாக்குதலில் சிக்கியிருக்கிறோம். கத்தோலிக்க பள்ளிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றன் (சி.எஸ்.ஐ, லூத்தரன் சபைகளின் பள்ளிகள் பரிசுத்த ஆவியின் உத்தரவுக்காக காத்திருகின்றன என நினைக்கிறேன்). அரசியல் இயக்கங்களும் இதற்கான எதிர்ப்பு போராட்டங்களை ஆரம்பித்திருக்கின்றன. ஆனால் அவை போதாது, இவை பற்றிய பரந்த விவாதங்களும் பெரும் எதிர்ப்பும் வெகு மக்கள் மத்தியில் இருந்து எழவேண்டும். இல்லாவிட்டால் பாஜகவின் அறிவுப் படுகொலையை வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறு வழியிருக்காது.

டிஜிட்டல் பர்தா – இது கலாச்சாரத்துக்கான காவல், பெண்களுக்கோ இன்னுமொரு அச்சுறுத்தல்.

சேலம் வினுப்பிரியா மற்றும் சுவாதி வழக்குகளுக்குப் பிறகு கலாச்சாரக் காவலர்கள் தங்கள் பெண்கள் மீதான அக்கறையை உயிர்த்தெழ வைத்திருக்கிறார்கள். சமூக வலைதலத்தின் பக்கம் வராதீர்கள், வந்தாலும் படங்களைப் பகிராதீர்கள் எனும் ஆலோசனைகள் போலீஸ் உயரதிகாரிகளிடமிருந்து வருகிறது. இதே ஆலோசனையை ஒரு உள்ளூர் போலீஸ்காரர் முரட்டுத்தனமாக சொன்னதால்தான் வினுப்பிரியா தற்கொலை செய்துகொண்டார். இதில் சொல்பவரின் உள்நோக்கத்தை விட்டுவிட்டு ஆலோசனையை மட்டும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது. காரணம் இவர்கள் தேர்ந்தெடுத்த சிக்கல்களில் மட்டுமே தலையிடுகிறார்கள். மேலும் இவர்களது யோசனையானது முழுப்பொறுப்பையும் பாதிக்கப்பட்டவர் தரப்பிற்கே கொடுக்கிறது. முன்னாள் டி.ஜி.பி நட்ராஜ் இப்போதுதான் ஒரு கொலைக்காக எதிர்வினை ஆற்றியிருக்கிறார். ஆனால் அவரிடம் சங்கர்களும் இளவரசன்களும் எப்படி சாவிலிருந்து தப்புவது எனும் யோசனை இருக்குமா என தெரியவில்லை.

இவர்கள் பெண்கள் மீதான அக்கறையில்தான் இவற்றையெல்லாம் பேசுகிறார்களா? அதற்கு வாய்ப்பே இல்லை. காரணம் பாதிப்புக்கு ஆளாகும் பெண்களில் மிகச்சில அளவிலான பெண்களே தங்களது வலையுலக செயல்பாட்டால் இந்த பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். ஆனால் இந்த ”முள்ளு மேல சேலை விழுந்தாலும் சேலை மேல முள்ளு பட்டாலும்” ரக மனிதர்கள் மிக கவனமாக பெண்களுக்கு அறிவுரை சொல்லும் வாய்ப்புள்ள சிக்கல்களில் மட்டும் கருத்து சொல்கிறார்கள். இதில் இரண்டு நோக்கங்கள் மட்டுமே இருக்க முடியும், ஒன்று இப்படி கருத்து சொல்வதன் மூலம் அவர்கள் யாரையோ காப்பாற்ற முனைகிறார்கள் (அது அரசாங்கமோ அல்லது காலாச்சாரமாகவோ இருக்கலாம்) இல்லையென்றால் அவர்கள் பெண்களின் நடவடிக்கை சரியில்லை என தீர்மானமாக நம்புகிறார்கள், அதனை நாசூக்காக தெரிவிக்கும் வாய்ப்பை அவர்கள் எதிர்நோக்குகிறார்கள்.

நாம் ஏன் சமூக வலைதளங்களில் இயங்குகிறோம்? நம்மை வெளிப்படுத்திக்கொள்வதற்கான விருப்பம் நமக்கு எப்போதும் இருக்கிறது. மேலும் அதனை வெளிப்படுத்த ஒரு குழுவை நாம் தேடுகிறோம். தாராளமயமாக்கலுக்குப் பிறகு பெரும்பான்மை இந்திய நடுத்தரவர்கம் தங்களை சமூகத்தில் இருந்து துண்டித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் மனித மூளை தனித்திருந்தால் பதற்றமடையும், தனிமை என்பது பாதுகாப்பற்றது என்பதுதான் லட்சக்கணக்கான ஆண்டுகளாக மனித மரபணுவில் பதியப்பட்டிருக்கும் செய்தி. ஆகவே கடந்த 30 ஆண்டுகளாக சமூகத்தில் இருந்து விலகியிருக்கும் சமுகம் தமக்கென ஒரு குழுவை கண்டடையும் வாய்ப்பை சமூக ஊடகங்களில் இருந்து பெறுகிறது.

இந்த டிஜிட்டல் நட்பு பயனுடையதா என்பது விவாதத்துக்குரியது. உங்களுக்கு நிஜ வாழ்வில் நண்பர்களே இல்லாமல் இருந்து உங்கள் முகநூலில் 5000 நண்பர்கள் இருந்தால் அது உங்களது ஆளுமை சிக்கலை காட்டும் அறிகுறி (என்னால் நட்பை திறமையாக பேண முடியாத நிலையில், விரும்பினால் சேர்திருக்கவும் நினைத்தால் எளிதாக துண்டித்துக்கொள்ளவும் முடிகிற இணையவழி நட்பை நான் தெரிந்தெடுப்பேன்). இந்த அடிப்படையில் பார்த்தால் மெய்நிகர் உலகம் ஆபத்தானது, கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டியது (ஆனால் ஆலோசனை வழங்குவோர் இந்த கண்ணோட்டத்தில் பேசுவதில்லை).

புகைப்படம் பதிவது என்பது இதன் நீட்சிதான். அழகாக தோற்றமளிக்க வேண்டும் என விரும்புவது மனித இனத்தில் பொது இயல்பு (பெருமளவில்). சமூக கற்றல் மூலம் ஆண்கள் கம்பீரத்தை அழகு எனவும் பெண்கள் நளினத்தை அழகு எனவும் புரிந்து வைத்திருக்கிறார்கள் (இது அனைவருக்குமானதல்ல, பெரும்பான்மையோருக்கு). அழகு என்பதை அடுத்தவர் பார்வையில் இருந்தே நாம் தீர்மானிக்கிறோம். இஸ்திரி செய்யாத சட்டை அணிய நேர்ந்தால் நம் முதல் கவலை பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதே. ஒப்பனை செய்பவர்கள் அதிகமாக இருக்கிறதா என்பதை மற்றவர்களிடம் கேட்டே திருப்தியடைகிறார்கள்.

நீங்கள் ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் மற்றவர்கள் உங்கள் வாழ்வில் அதீத முக்கியத்துவம் வாய்ந்தவர்களே. நடத்துனர் ஒருரூபாய் பாக்கி தரவில்லை என்றால் பெரும்பான்மை மக்கள் அதனை கேட்க தயங்குவார்கள். காரணம் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ எனும் எண்ணம். தங்கள் வாழ்நாளில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பே இல்லாத சக பஸ் பயணிகளின் கருத்துகூட நமக்கு அவசியமாயிருக்கிறது. ஆகவே நம் தோற்றமும் பிறரால் இன்னும் குறிப்பாக நமக்கு தெரிந்தவர்களால் கவனிக்கப்பட வேண்டும் எனும் நினைப்பு மிக இயல்பானது. அதனால்தான் பலரும் கூடும் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு நாம் சிரத்தையோடு ஆடைகளை தெரிவு செய்கிறோம். இந்த சாதாரண மனித இயல்புதான் தங்கள் புகைப்படத்தை பதிவேற்றும் செயலை செய்யத் தூண்டுகிறது. இதில் பால் வேறுபாடே கிடையாது.

இன்றைய கல்விச்சூழல் பாடங்களைத்தவிர வேறெதையும் தெரிந்துகொள்ளாத இளைஞர்களை பெருமளவில் உற்பத்தி செய்கிறது. அவர்களது தனித்தன்மைக்கான எல்லா கதவுகளும் பள்ளி காலத்திலேயே அடைக்கப்பட்டுவிடுகின்றன. பொதுவான செய்திகளை தேடிப்படிக்கும் பழக்கம் அவர்களிடம் வழக்கொழிந்துவிட்டது. பொதுவான ஒரு செய்தியைப்பற்றி இரண்டு நிமிடம் பேசச்சொன்னால் திகைத்துப்போய் நிற்கும் ஆட்களாத்தான் இன்றைய பெரும்பான்மை கல்லூரி மாணவர்கள் இருக்கிறார்கள். இந்த இளைஞர் சமூகம் ஒரு பொது ஊடகத்தில் எதனை பகிர முடியும்? அவர்களுக்கு உள்ள வாய்ப்பு தாங்கள் என்ன செய்கிறோம் என சொல்வது, வந்த செய்தியை பகிர்வது மற்றும் தங்கள் புகைப்படத்தை பகிர்வது ஆகியவைதான். காரணம் அவர்களைப்பொருத்தவரை முகம்தான் அவர்கள் அடையாளம், சிந்தனை அல்ல. அதனைதான் பள்ளிக்கூடத்திலேயே சிதைத்துவிடுகிறோமே!

இன்னொரு பக்கம் புகைப்பட பதிவேற்றங்களை நிறுவனங்கள் ஊக்குவிக்கின்றன. வெறும் வார்த்தைகள் உங்கள் டேட்டா பயன்பாட்டை அதிகரிக்காது, ஆகவே எல்லா வழிகளிலும் அவர்கள் புகைப்பட பரிமாற்றங்களை அதிகரிக்க முனைகிறார்கள். உங்களை நீங்களே புகைப்படம் எடுக்கவென்றே சிறப்பான செல்ஃபி கேமரா ஃபோன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆகவே படங்களைப் பகிரும் செயலை புரிந்துகொள்ள வேண்டுமேயன்றி சரியா தவறா என ஆராய்வது நியாயமல்ல, அது தவறென்றால் அதற்கு நாம் எல்லோருமே பொறுப்பு.

இந்த நிலையில், புகைப்படத்தை பதிவேற்றாதீர்கள் என பொதுவாகக்கூட சொல்லாமல் பெண்களை நோக்கி மட்டுமே அந்த புத்திமதி சொல்லப்படுவதுதான் முட்டாள்தனமாகவும் கபடத்தனமாகவும் படுகிறது. தோற்றம் மட்டுமே அடையாளம் எனும் நிலைக்கு தள்ளிவிட்டு, அந்த அடையாளத்தையும் மறைத்துக்கொள் என்கிறார்கள் இந்த பெரிய மனிதர்கள்.

எவ்வளவு மென்மையாக பரிசீலித்தாலும் இது சாத்தியமற்ற ஆலோசனை மற்றும் ஆபத்தான ஆலோசனை. இந்த ஆலோசனை மூலம் நாம் பெண்கள் மீது ஏவப்படும் இணைய வன்முறைக்கு அவர்களை முதல் குற்றவாளியாக்குகிறோம். ”ராத்திரி ஆம்பளயோட ஒரு பொண்ணுக்கு வெளியில என்ன வேலை” என நிர்பயா வழக்கின்போது கேட்ட அடிப்படைவாதிகளின் குரலுக்கு கொஞ்சமும் குறைவற்ற வாதம் இது. இத்தகைய உளவியல் நெருக்கடிகள் மூலம் நாம் பெண்களுகளிடம் உருவாக்கும் தயக்கமும் அச்சமுமே மிரட்டும் ஆட்களுக்கான வாய்ப்பை உருவாக்குகிறது. மிரட்டுபவர்களின் உன் நற்பெயரை சிதைப்பேன் எனும் அச்சத்தை விதைப்பதன் மூலம் காரியம் சாதிக்க முனைகிறார்கள். இந்த கலாச்சார ஆலோசகர்களும் உன் நற்பெயரை காப்பாற்றிக்கொள்ள புகைப்படங்களை பகிராதே என்கிறார்கள். இரண்டும் ஒன்றுதான், நோக்கத்தில்தான் வேறுபாடு இருக்கிறது.

காதல் மிரட்டலால் கொல்லப்படும் சம்பவங்கள் ஒன்றிரண்டுதான் நிகழ்கின்றன. ஆனால் காதலித்த காரணத்துக்காக உறவினர்களால் நிகழ்த்தப்படும் மரணங்கள் கணக்கற்றவை. முன்னாள் காதலரால் மிரட்டப்படும் சம்பவங்கள் பல இருக்கின்றன. இவற்றுக்கான ஆலோசனை என்ன… காதலிக்காமல் இருப்பதா? காதலிக்க மறுத்ததால் கொல்லப்படும் பெண்களும் ஆசிட் வீச்சுக்கு ஆளாகும் பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்வது… கிழவியாகும்வரை பர்தா அணிந்துகொள்ள சொல்லலாமா? தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் வன்புணர்ச்சிக்கு ஆளாகும் பெண்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்வது? உறவினர்களாலும் தெரிந்தவர்களாலும் பாலியல் துண்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கான ஆலோசனை என்ன? இந்த கலாச்சார காவலர்கள் பாணியில் யோசித்தால் பெண்கள் தம் பவித்ரத்தை காப்பாற்ற தற்கொலையைத்தவிர வேறு வாய்ப்புக்கள் இல்லை.

அவர்கள் சொன்னது தவறென்றால் வேறு எதுதான் சரியான தீர்வு?

சுவாதி வழக்கை எடுத்துக்கொள்ளுங்கள், அவருக்கும் கொலையாளி என கருதப்படும் ராம்குமாருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்தது எனும் அனுமானத்தையே அவருக்கு நெருக்கமானவர்கள் சுவாதிக்கு செய்யப்படும் அவமானமாக கருதுகிறார்கள். ஒருவேளை அவர் பொருத்தமற்ற ஒருவரை காதலித்திருந்தாலும் அது எப்படி அவரது நற்பெயரை சிதைக்கும் காரணியாகும்? அவருக்கு காதலரே இல்லை என சுவாதி குடும்பத்தார் பதற்றத்தோடு மறுக்கிறார்கள், சுவாதி குறித்த கேள்விகளே தவிர்க்க கொலையாளியை கண்டறிய உதவும் விசாரணையைக்கூட அவர்கள் சந்திக்க மறுக்கிறார்கள். மகளின் கொலைக்கான நியாயத்தைவிட மேலானதா அவரது நற்பெயர்? இதனை நியாயம் என ஏற்றுக்கொண்டால் நற்பெயரை இழந்த பெண்கள் தண்டிக்கப்படுவது (தமிழ் சினிமா பாணியில்) நியாயம் என்றல்லவா பொருளாகிறது?

பெண்கள் தங்கள் மீது நயவஞ்சகமாக போர்த்தப்பட்டிருக்கும் இத்தகைய சில மிகையான அடையாளங்களை தூக்கியெறிந்தாலே போதும். பெண் புனிதமானவள், குடும்பத்தின் விளக்கு, கௌரவத்தின் சின்னம் போன்ற புகழுரைகளை நிராகரிக்க வேண்டும். ஆண்களைப்போலவே இயல்பான முட்டள்தனங்களையும் விருப்பங்களையும் கொண்டிருக்கிற சாதாரண மனிதர்களாக நடத்தப்படுவதைத்தவிர வேறெந்த சலுகைகளும் பெண்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க செய்யப்படும் தந்திரங்களே. தமக்கான நகைகளை வாங்கிக்கொள்ளும் சுதந்திரம் அனேகமாக எல்லா பெண்களுக்கும் உண்டு, ஆனால் அதனை தமது தேவைகளுக்காக விற்கும் சுதந்திரம் அனேகமாக யாருக்கும் இல்லை. இப்படியான நுட்பமான வழிகளில் பெண்கள் தாம் சுதந்திரமாக இருப்பதாக நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

குறிப்பாக இணைய மிரட்டல்களை சமாளிக்க சிறந்த வழி அதனை ஒரு குழுவோடு எதிர்கொள்வதுதான். குடும்பத்தோடு காவல் நிலையம் போனால் அங்கே இன்னும் அவமானங்கள்தான் கிடைக்கும். அவர்கள் மென்மையாக ஆலோசனை சொல்லவே ஒரு தற்கொலை தேவைப்படுகிறது. கபடத்தனமான புகழுரைகளும் நயவஞ்சகமான கட்டுப்பாடுகளும் இந்திய பெண்களை நிழல்போல தொடர்கின்றன. கலாச்சார அழுத்தங்கள் ஆசிட் பாட்டிலோடு பின்தொடரும் ஒருதலைக் காதலனைப்போல நடந்துகொள்கின்றன. அதனை ஏற்றுக்கொண்டு துயரப்படுவதா அல்லது நிராகரித்து துயரப்படுவதா எனும் இரு வாய்ப்புக்கள்தான் இங்கே இருக்கிறது.

ஒரு அரசியல் ரீதியிலான இயக்கத்தில் பங்கேற்பதன் வாயிலாகத்தான் இந்த சூழலை புரிந்துகொள்ளவும் எதிர்கொள்ளவும் முடியும். வெறுமனே முகத்தை மறைத்துக்கொள்வதால் எந்த பிரச்சினையில் இருந்தும் தப்ப முடியாது.

 

வானளாவிய அதிகாரம் ஒருபோதும் நேர்மையாளனை உருவாக்காது.

ஓசூரில் வழிப்பறி திருடர்களால் கொல்லப்பட்ட தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா. அந்த கொலையை செய்ததாக கருத்தப்படும் 19 வயது இளைஞர் போலீஸ் நிலையத்தில் நெஞ்சுவலி காரணமாக இறந்திருக்கிறார். தேச பக்தியை காட்ட ஒரு வாய்ப்பு கிட்டாதா என நாள்தோறும் அல்லாடும் சிலரும் முகநூலில் இயங்கும் போலீஸ்காரர்களும் வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டார்கள். பார்த்தீர்களா போலீசின் தியாகத்தை என ஸ்டேட்டஸை தட்டிவிட ஆரம்பித்தார்கள். ஒரு போலீஸ்காரர் இந்த கொலையை வேடிக்கை பார்த்த மக்களுக்கு சாபம் கொடுத்திருந்தார்.

ஜெயலலிதா இரண்டு வகையான மரணங்களுக்கு படியளப்பார். ஒன்று போலீசாரின் மரணம் (அது இயற்கையானதாக இருந்தாலும்) இன்னொன்று ஜெயலலிதாவுக்காக தானாக முன்வந்து நிகழும் மரணங்கள் (தேர்தல் தோல்வி மரணங்கள், பெங்களூர் சிறைவாச கால மரணங்கள்). மற்றபடி அவரது கொள்கை மனுசனா பொறந்தா சாகத்தான் செய்வான் என்பதுதான். அவரது போலீஸ் பாசம் எத்தனை கொடூரமானது என்பதை சிதம்பரம் பத்மினி வழக்கில் அவர் எதிர்வினையைக் கொண்டே அறிந்துகொள்ளலாம்.

எப்போதெல்லாம் ஆவணக்கொலைகள் நடக்கிறதோ அப்போதெல்லாம் வந்து ஆவணக்கொலைக்கு தனிச்சட்டம் வேண்டும் என கோரிக்கை வைக்கும் நபர்களும் இன்னமும் நம்மிடையே உலவுகிறார்கள். எத்தனை சட்டம் போட்டாலும் அதனை நிறைவேற்ற வேண்டியது போலீஸ். சாதிவெறியர்களுக்கு துணைபோகிற மற்றும் சாதியுணர்வு வலுவாக இருக்கும் அரசுத்துறை போலீஸ்தான். ஒரு இடைச்சதிக்காரனும் தலித்தும் ஒரே மாதிரி நடத்தப்பட வாய்ப்பில்லாத இடங்களில் காவல் நிலையங்களும் நிச்சயம் அடங்கும்.

ஓசூர் காவலர் கொலையில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ”நெஞ்சு வலியால்” கொல்லப்பட்ட இளைஞன் மூலம் அறியப்படும் கருத்து என்ன? காவல் துறைக்கே தங்களுக்கு விதிக்கப்பட்ட சட்டபூர்வ வழிகளில் நம்பிக்கை இல்லை. சட்டப்படி ஒரு குற்றவாளியை தண்டிக்க தங்களுக்கு தகுதி இல்லை, ஆகவே எங்கள் ஆளை கொன்றவனை நாங்கள் தர்மப்படி பழிவாங்குகிறோம் என சொல்லாமல் சொல்கிறது காவல்துறை. மக்களுக்கும் அதேதான், தமக்கு எந்தவகையிலும் சம்மந்தமில்லாதவன் கொல்லப்பட எந்த சிறு காரணத்தையும் அவர்கள் ஏற்க தயங்குவதில்லை. பெங்களூரில் என்னுடன் பணியாற்றியவர் தங்கள் தெருவில் உள்ள சில வட இந்திய இளைஞர்கள் ஒருநாள் குடித்துவிட்டு கலாட்டா செய்ததைப் பார்த்துவிட்டு வந்து சொன்னார் “இவனுங்களுக்கு இரக்கமே காட்டக்கூடாது சார், சுட்டு கொன்னுடனும்”. நமக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாதவன் சிறிய விஷயத்துக்குகூட கொல்லப்படுவதில் இவர்களுக்கு ஆட்சேபனையில்லை.

இந்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தியே காவல்துறை தனது எல்லா என்கவுண்டர்களையும் நியாயப்படுத்திக்கொள்கிறது. இந்த ஓசூர் போலீஸ்காரர் கொலை வழக்கிலும் கொல்லப்பட்ட குற்றவாளி பற்றி எந்த பேச்சும் எழவில்லை. போலீசையே கொன்னா சும்மா விடுவாங்களா என தினசரிகள்கூட அடக்கி வாசித்தன. ஆனால் போலீசின் பழிவாங்கும் குணமும் நேர்மையோடு இருப்பதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தமிழ் நடிகர் (ஆனந்த்) காரை அதிவேகமாக ஓட்டிச்செல்கையில் நிறுத்தச்சொன்ன காவலர் மீது கார் ஏற்றிக் கொன்றார். அவர் பழிவாங்கப்படவே இல்லை, மிகச்சில நாட்களில் அவர் வெளியே வந்து சௌபாக்கியத்துக்கு குறைவின்றி வாழ்கிறார். போலீசின் எல்லா மோசமான எதிர்வினைகளும் ஏழைகளுக்கு எதிராக மட்டுமே இருக்கும். பி.ஆர்.பி காவல்நிலையம் வந்தால் அந்த வளாகமே சுத்தம் செய்யப்பட்டு வெள்ளையடிக்கப்படும் நாட்டில் சல்மான்கானுக்கு எதிராக சாட்சி சொன்ன காவலர் வேலை பறிக்கப்பட்டு ஒரு அநாதையைப்போல இறந்து போகிறார்.

சென்ற வாரம் நடந்த ஸ்வாதி படுகொலை பற்றிய ஊடகம் மற்றும் பிரபலங்களின் கருத்து ”மக்கள் அந்த கொலையைத் தடுக்கவில்லை” என்பதுதான். ஆனால் இது உண்மையில் மக்களின் பிழை அல்ல. சில மாதங்களுக்கு முன்னால் தன் உயிரை பணயம் வைத்து வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்ற சென்றது இதே சென்னை வாழ் மக்கள்தான். அப்படியானால் ஒரு கொலை வழக்கிற்கு சாட்சியாகக்கூட வர விரும்பாமல் மக்களை விலகி ஓடச்செய்வது எது?

சந்தேகமில்லாமல் போலீசுக்கு உள்ள வானளாவிய அதிகாரம்தான். நீங்கள் தெரிந்த ஒருவரை போலீஸ் ஸ்டேஷன்வரை துணைக்கு அழைத்து பாருங்களேன், வர மாட்டார்கள். வெளியாகும் போலீஸ் படங்களை எல்லாம் ஓடவைத்தாலும் மக்களுக்கு போலீஸ் மீது மரியாதை இல்லாமல் பயம் மட்டுமே இருப்பதன் காரணம் அவர்களால் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாக்க இயலும்.

தன் பதினைந்து வயது மகனை புது ஆற்றில் சாகக்கொடுத்தவர் வீட்டில் காத்திருந்து அந்த வழக்கிற்காக (பிணம் எரியூட்ட கிளம்பிய உடனே) பணம் பெற்ற போலீஸ்காரரை எங்கள் தெருவில் பார்த்திருக்கிறோம். நகை திருடுபோன வீட்டில் பறிகொடுத்தவரை குற்றவாளிபோல விசாரித்த காவலர்களை பார்த்திருக்கிறேன். சேலம் வினுப்பிரியா எனும் இளம்பெண்ணை மரணத்துக்கு போலீஸ் அவரை நடத்திய விதமும் ஒரு காரணம். ஒரு சிறுவன் வாயில் துப்பாக்கியால் சுட்ட போலீஸ் அதிகாரி சிறை செல்லவில்லை. ஒரு பெண்ணை கைது செய்து தஞ்சை ஓட்டலில் பல நாட்கள் சட்டவிரோதமாக அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை செய்த காவல் அதிகாரி (அந்தப்பெண் தெளிவாக தற்கொலைக் கடிதம் எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய பின்பும்) சில நாள் சிறைவாசத்துக்கு பிறகு பணியில் நீடிக்கிறார்.

திருப்பூரில் நான் வசித்த வாடகைவீட்டின் கீழ் போர்ஷன்காரர் ஒரு கொலைவழக்கில் கைதானார். அதற்கான சாட்சியாக போன அனுபவம் எனக்கிருக்கிறது. போலீஸ் எப்போது விசாரணைக்கு வந்தாலும் பர்மிஷன் போட்டுவிட்டு வீட்டுக்கு ஓடவேண்டும், வழக்கு சி.பி.சி.ஐடிக்கு போன பிறகே விசாரணை அச்சுறுத்தும் தொனியில் இருந்து மாறியது. குற்றவாளியை அடையாளம் காட்ட எங்களை அழைத்துப்போனபோது மணி நள்ளிரவு 1.30 (காவல் நிலையம் 20 கி.மீ தொலைவில் இருக்கிறது). நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல கோவைக்கு 3 நாட்கள் அலைந்தோம் (விடுப்பு எடுத்தால் சம்பளம் கிடையாது, பயண செலவும் சாப்பாட்டு செலவு கூடுதல் தண்டம்). அதன் பிறகு திடீரென இனி அழைத்தால் மட்டும் வந்தால் போதும் என்றார்கள்… கடைசிவரை சாட்சி சொல்ல அழைக்கப்படவேயில்லை. எத்தனை கஷ்டப்பட்டாவது கடமையை நிறைவேற்றலாம் என நினைத்தாலும் முடியாது. சாட்சியத்தை அவர்கள சொல்லிக்கொடுத்தபடிதான் சொல்ல வேண்டும் (அவர்களே பயிற்சியளிப்பார்கள்). இன்னும் கொடுமை சாட்சிகளான எங்களை குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர் செல்ஃபோனில் படம் எடுத்தார்… அதனை காவல் உதவி ஆய்வாளரிடம் சொன்னபோது நீயும் அவரை ஃபோட்டோ எடுத்துக்க என பதிலளித்தார்.

சாட்சிகளே இந்த அழகில் நடத்தப்பட்டால், யாரால் தைரியமாக குற்றத்தை தடுக்க இயலும் அல்லது யார்தான் துணிந்து புகார் தர முன்வருவார்கள்? நமது வளர்ப்பு முறைக்கும் இந்த ஒதுங்கிப்போகும் போக்கோடு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றாலும் அதனைக் காட்டிலும் வலுவானது போலீசின் மீதான அச்சம் மற்றும் அவநம்பிக்கை.

ஆளுங்கட்சி எதிர்கட்சி என பாகுபாடு இல்லாமல் உதிர்க்கும் கருத்து போலீசுக்கு அதிக அதிகாரம் கொடுத்தால் குற்றங்கள் குறையும் என்பதுதான். ஆனால் கட்டுப்படில்லாத அதிகாரம் குற்றங்களை வளர்க்கவே செய்யும். அதிக அதிகாரத்தின் மூலம் ஒருவர் பணத்தை சம்பாதிக்கவே முயல்வார். அப்படி போலீஸ்காரர் ஒருவர் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் அதன் பலன் யாருக்கு போகும்? குற்றச்செயலில் ஈடுபடுவோருக்குத்தான். அதுதான் இன்றைய குற்றச்செயல்களின் பெருக்கத்துக்கு காரணம் (வறுமை, வேலையின்மை மற்றும் இடப்பெயர்வு ஆகியவையும் பிரதான காரணிகளே, ஆனால் கட்டுரையின் வரம்புக்குள் அவை இல்லை).

போலீசுக்கு கேட்பாரற்ற அதிகாரம் இருக்குவரை,

அவர்களது குற்றங்கள் அவர்களாலேயே விசாரிக்கப்படும்வரை,

அவர்கள் தங்களை மக்களைவிட மேலானவர்களாக கருதிக்கொள்ளும்வரை குற்றங்களும் குறையப்போவதில்லை, குற்றங்களை தட்டிக்கேட்கும் சாமனியரும் உருவாகப்போவதில்லை.

வாக்குப்பதிவு அறசீற்றம்- நிர்வாண விரும்பிகளுக்கு ஆடை அணிந்தோரின் வேண்டுகோள்.

சென்னைக்காரர்களைப் பற்றி ஒரு தர்மபுரிக்காரர் திட்டி போட்ட பதிவு ஒன்று வாட்ஸ்சப் குழுக்களில் உலவுகிறது. இதற்காகவா உங்களுக்கு வெள்ளத்தின்போது அரிசி போர்வையெல்லாம் கொடுத்தோம் எனும் அங்கலாய்ப்பில் தொடங்கி சொரணை கெட்டவர்கள் என சாபம் கொடுப்பதுவரை பல எதிர்வினைகள் அப்பதிவை தொடந்து நீள்கிறது.

சென்னைக்காரர்கள் எல்லா சவுகர்யத்தோடும் இருப்பதால் சோம்பேறியாகிவிட்டார்கள் எனும் கருத்துக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை. ஷாப்பிங் மால்கள், பாலங்கள் மற்றும் கோயம்பேடு மார்க்கெட் ஆகியவை வசதிகள் எனும் வரையறைக்குள் எப்படி வந்தது என்பதும் விளங்கவில்லை.

மற்ற ஊர்காரர்கள் சில வினாடிகள் சகித்துக்கொள்ளாத கூவம் நாற்றத்தில் வாழ சபிக்கப்பட்ட மக்கள் லட்சக்கணக்கில் அங்கே இருக்கிறார்கள். ஓரிரு கிலோமீட்டரை கடக்க ஒரு மணிநேரம் ஆகும் இடங்கள் அங்கே உண்டு. நகர பேருந்தில் ”உட்கார்ந்து” பயணிக்கும் வாய்ப்பு பலருக்கு அங்கே கனவு. சம்பளத்தில் பெருந்தொகையை வாடகையாக கட்டி சேமிப்பை வீட்டு அட்வான்ஸ்சுக்கும் விடுமுறைகளை வீடு தேடியும் தொலைத்தவர்கள் அனேகம். சும்மா சினிமாவில் பார்ப்பதை வைத்து சென்னைக்காரர்கள் எல்லோரும் வசதியாக இருப்பதாக கருதி நியாயம் பேசுவது முட்டாள்தனம்.

விரலில் மை வைத்ததால் மட்டுமே நீங்கள் எல்லோரும் பகத்சிங் ஆகிவிட்டதாக நினைப்பா? பயிற்சி கொடுத்தால் நாய்கூட பட்டனை அமுக்கி ஓட்டுபோடும்.. இந்த மொன்னை வேலைக்கு இவ்வளவு எகத்தாளமா?

சரி நாங்கள் சோம்பேறிகளாகவும் சொரணை கெட்டவர்களாகவும் இருக்கிறோம். நீங்கள்தான் அவை எல்லாவற்றையும் மானாவரியாக வைத்திருக்கிறீர்களே.. கீழேயுள்ள கேள்விகளுக்கு கொஞ்சம் பதில் சொல்லுங்களேன்.

80% மக்கள் வறுமையில் வாடும் நாட்டில் மொத்த மருத்துவ செலவீனத்தில் 15% சதவிகிதத்தை மட்டும்தான் அரசு செய்கிறது. அடையாறு புற்றுய்நோய் மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் புற்றுநோயோடு ஜீவமரண போராட்டம் நடத்திக்கொண்டு காத்திருப்போர் பட்டியலில் நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். சுகாதாரம் அடிப்பட உரிமைதானே, எங்கே விரலைத்தூக்கி காட்டும் நீங்கள் இந்த பிரச்சனைக்காக கையைத்தூக்கிக்கொண்டு ரோட்டுக்கு வாருங்கள் பார்க்கலாம்.

5 வருடம் ஆள்பவனை தெரிவு செய்வதில் அலட்சியம் கூடாதாம், சரிதான். ஆயுளுக்கும் நமக்கு உணவு உற்பத்தி செய்த விவசாயி நகரத்துக்கு கூலியாக போகிறான், லட்சக்கணக்கில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அதற்கெல்லாம் பொங்க மறுக்கிறீர்களே ஏன்? தேர்தலுக்கு அறச்சீற்றம் விவசாயிக்கு வெறும் RIPயா?

நல்ல மதிப்பெண் எடுத்தும் கல்லூரியில் சேர வழியில்லை என அழும் மாணவர்கள் ஆண்டுதோறும் நாளிதழ் செய்திகளில் இடம் பெறுகிறார்கள். அவர்களுக்கு படிப்பை உறுதி செய்ய அரசுக்கு வக்கில்லை என்பதால்தான் அவர்கள் புரவலர்களை நாடுகிறார்கள். சற்றேறக்குறைய ஒரு லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலி. நூற்றுக்கணக்கான பள்ளிகள் இணைப்பு எனும் பெயரில் மூடப்பட்டாயிற்று, இன்னும் பல அதற்கான வரிசையில் நிற்கின்றன. போய் விரல் மையை காட்டி நான் கடமையை செய்துவிட்டேன், எங்கள் கல்வி உரிமையைக் கொடுன்னு கேட்டுப் பாருங்களேன்..

என் வாக்கும் என் உரிமை என பேசும் நீங்கள் எங்கள் ஊர் எங்கள் இயற்கை வளம் என சொல்லி கிரானைட் குவாரி முன்னால் ஆர்பாட்டம் செய்து காட்டுங்களேன்!!! நீங்கள்தான் தேசபக்தியையும் சொரணையையும் சொம்புல் மொண்டு குடித்தவர்கள் ஆயிற்றே?

20 கோடி பேருக்கு வசிக்க வீடில்லை, 70 கோடி பேருக்கு மூன்றாவது வேளை உணவில்லை, சரிபாதி அரசுப்பள்ளிகளுக்கு கழிப்பறை கிடையாது இவை எதையும் 100% சரிசெய்ய அரசிடம் நிதி இல்லை. ஆனால் 100% வாக்குப் பதிவு எனும் லட்சியத்துக்காக அரசு நூற்றுக்கணக்கான கோடிகளை இறைக்கிறது. மக்களின் உணவைவிட வாக்குப்பதிவு விளம்பரம் அத்தியாவசியம் என்பதை நீங்களும் ஏற்கிறீர்களா?

ஓட்டு போடும் அடிப்படை உரிமையை உறுதி செய்ய எல்லா வாய்ப்புக்களையும் அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. இதே போல மற்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் அதனை எப்படி பெறுவது என்பது குறித்த விளம்பரங்களை யாரேனும் பார்த்திருக்கிறீர்களா? அல்லது அதனை நீங்கள் சொல்வீர்களா?

வாக்குப்பதிவு சதவிகிதம் உயர்ந்தால் ஜனநாயகம் வலுப்படும் எனும் கருத்துக்களை கமல்ஹாசன் முதல் அனைவரும் அடிபிறழாமல் ஒப்பிக்கிறீர்கள். கடந்த 25 வருடங்களில் வாக்குப் பதிவு சீராக உயர்ந்து வருகிறது. ஆனால் ஜனநாயகம் இன்னும் சீரழிந்துகொண்டிருக்கிறது. வாக்குக்கு பணம், ஊழல், அடக்குமுறைகள், வறுமை என எதெல்லாம் ஒழியும் என்கிறீர்களோ அவையெல்லாம் இந்த காலகட்டத்தில் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. எப்படி?

251 ரூபாய்க்கு ஸ்மார்ஃபோன், ஈமு கோழி வளர்த்தால் பலகோடிகள் லாபம், சென்னை அமிர்தாவில் படித்தால் ஃபாரினில் வேலை என எதற்கு விளம்பரம் அதிகமாக வந்தாலும் நம்பி ஏமாறும் கூட்டம்தான் இந்த 100% வாக்குப்பதிவு போதையில் இருக்கிறது. அவர்கள்தான் நீ ஏன் ஈமுக்கோழி வியாபாரம் செய்யவில்லை என வம்பிழுக்கிறார்கள்.

போகட்டும், நாங்கள் பொறுப்பற்றவர்கள், சோம்பேறிகள் சொரணையற்றவர்கள் என நீங்கள் தீர்ப்பெழுதிவிட்டபடியால் நாட்டு முன்னேற்றத்துக்கான ஒரு கோரிக்கையை உங்களிடம் வைக்கிறோம். குறைந்த வாக்கு பதிவு கொண்ட சென்னையில்தான் பல தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் இருக்கின்றன. அதிக வாக்குப் பதிவைக்கொண்ட தர்மபுரியில் தரித்திரத்தைத் தவிர எதுவுமேயில்லை. ஆகவே வாக்குப்பதிவின் மகிமையை உணர்ந்த தர்மபுரிக்கே இனி கார், சாப்ட்வேர் என சகல கம்பெனிகளும் இடம்பெயர வேண்டும் என நீங்கள் ஜனநாயக கடமையாற்றி தெரிவு செய்த அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துப் பாருங்களேன்…

நிர்வாணம் உங்கள் உரிமை மறுக்கவில்லை. ஆனால் உங்கள் விருப்பத்துக்காக எங்களால் அவிழ்த்துப்போட்டுவிட்டு ஆட முடியாது. எங்களுக்கான ஆடையும் அரசியலும் எங்கள் உரிமை. அதனை பின்பற்றவும் பிரச்சாரம் செய்யவும் எங்களுக்கு உரிமை உண்டு. முதலில் அந்த அடிப்படை உரிமையை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஜனநாயக கடமைக்கான மார்க்கெட்டிங்கை அப்புறம் வைத்துக்கொள்ளலாம்.

ஜெயா எதிர்ப்பு – ஐயங்களுக்கான விளக்கம், முன்முடிவுகளுக்கல்ல.

சமீபகாலமாக நான் ஒரு திமுக ஆதரவாளன் எனும் விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. முகநூல் நட்பு வட்டத்தில் உள்ள திமுகவினரும் என்னை ஒரு திமுக ஆதரவாளனாக அடையாளம் காட்டுகிறார்கள். சமீபத்தில் வெளியான வினவு கட்டுரை குறித்து எழுந்த விமர்சனங்கள் மகஇகவும் அதன் சார்பு அமைப்புக்களும் திமுக சார்பு நிலை எடுத்திருப்பதாக குற்றம்சாட்டுகிறது. சொல்லும் நபர்கள் எல்லோரும் அதிமுக ஆதரவாளர்கள் என வரையறுக்க முடியாது. பல இடதுசாரி ஆதரவாளர்களுக்கும் இந்த ஐயம் எழுந்திருக்கிறது. இது அபத்தமானது என நிராகரிக்கவோ அல்லது உள்நோக்கமுடையது என முத்திரை குத்தவோ விரும்பவில்லை.

வினவு கட்டுரை திமுகவும் அதிமுகவும் ஒன்றில்லை என்கிறது. அதுவே இத்தகைய விமர்சனங்களை உருவாக்குகிறது. 2011 தேர்தலில் ஜெயலலிதா எந்த வகையிலாவது ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டாரா? 2006 – 2011 காலகட்டத்தில் அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அதிமுக எந்த மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களையும் முன்னெடுக்கவில்ல. ஆனாலும் ஊடகங்கள் அவரது வருகைக்காக காத்திருந்தன. அவரது முதல் தேர்தல் பொதுக்கூட்டத்தினை (கோவை என நினைவு) பரவசத்தோடு குறிப்பிடாத ஊடகங்கள் கிட்டத்தட்ட ஏதுமில்லை.

திமுக ஆட்சிகாலத்தில் அதிமுகவை விமர்சிக்காமல் இருக்கும் ஊடகங்கள் அதிமுக ஆட்சியில் திமுகவை விமர்சிப்பதில் முனைப்பு காட்டுகின்றன. எல்லா ஊடகங்களும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செய்தி போடுகையில் அவை ஜெயாவிடம் பணம் வாங்கிவிட்டதாக கருத்து மக்களிடையே பரவுவதில்லை. ஆனால் ஆனந்தவிகடன் ஜெயாவுக்கு எதிராக சில கட்டுரைகள் எழுதிய உடனேயே அதன் உள்ளடக்கம் குறித்த விவாதம் எழாமல் ஆனந்தவிகடன் திமுகவிடம் விலைபோய்விட்டதாக கருத்துக்கள் வெள்ளமென பரவுகிறது.

தேர்தல் கமிஷன், நீதிமன்றங்கள் உள்ளிட்ட இந்தியாவின் எல்லா அதிகார மையங்களும் ஜெயலலிதாவிடம் மிக அதிகபட்ச கரிசனத்தை காட்டுகின்றன. இந்த அமைப்புக்கள் பணத்துக்கு விலைபோகும் என்பது யதார்த்தம் என்றாலும், அதனை கொடுக்கும் அளவுக்கு திரண்ட செல்வம் கருணாநிதிக்கு இருக்கிறது. ஆனாலும் ஒட்டு மொத்தமாக அதிகார மையங்களும் அதன் அருகில் இருப்பவர்களும் முற்றாக ஜெயாவின் பக்கமிருக்க சில தனிப்பட்ட காரணங்கள் இருக்கிறது என்பது வெளிப்படை.

ஜெயலலிதாவுக்கு ஏன் இத்தகைய சிறப்புத் தகுதி கிடைக்கிறது எனும் விவாதம் இந்த சூழலில் வெகுமக்களிடம் கொண்டு செல்லப்படுவது அவசியம். அதில் திமுகவையும் சேர்த்து விமர்சிப்பது என்பது என் அறிவுக்கு எட்டியவரை சாத்தியமற்றது. 2ஜி ஊழல் பற்றிய எந்த விவாதத்திலும் அதிமுகவை விமர்சிக்க வேண்டும் எனும் கோரிக்கை எழுந்ததில்லை. காங்கிரஸ் ஒரு அரை ஆர்.எஸ்.எஸ் கட்சிதான். ஆயினும் பாஜகவின் இந்துத்துவத்தை எதிர்க்கும்போதெல்லாம் நாம் காங்கிரசை வலிய இழுத்து விமர்சனம் செய்தால் நம்மால் சுலபமாக நடுநிலைவாதியாகிவிட முடியும். ஆனால் அது பாஜக எதிர்ப்பின் வீரியத்தை நீர்த்துப்போகச் செய்யும். இது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக முடியும் என்றாலும் அதனை நாம் வேறு வழிகளில் எதிர்கொள்ள வேண்டுமேயன்றி இருகட்சிகளையும் ஒரே தட்டில் வைத்து எதிர்ப்பது புத்திசாலித்தனமாகாது.

திமுக ஆட்சிகாலத்தில் பு.ஜ, பு.க பத்திரிக்கைகளை அதிமுக ஆட்கள் வாங்குவதும் அதன் தரவுகளை தமக்கு சாதகமாக வைத்து பேசுவதும் நிகழ்ந்துகொண்டுதான் இருந்தது. ஜெயேந்திரன் கைது செய்யப்பட்டபோது ம.க.இ.க போலீசின் நடவடிக்கையை ஆதரித்தது. அந்த வழக்கை நடத்திய அதிகாரி பிரேம்குமாருக்கு எதிராக அப்போது மகஇக பல்வேறு போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பிரேம்குமாருக்கு சாதகமாக போகும் என்பதற்காக ஜெயேந்திரனுக்கு எதிரான நகர்வை நாம் மட்டுப்படுத்திக்கொள்ள முடியுமா?.

2 ஜி ஊழலின் ஆதாரப் புள்ளி அந்த அலைவரிசையை சகாய விலைக்கு வாங்கும் முதலாளிகள். இது எல்லா பெரிய ஊழல்களுக்கும் பொருந்தும் நாம் அந்த முதலாளிகளை அம்பலப்படுத்துகையில் ராசா வெறும் அம்புதான் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் எழுகிறது. அது ஓரளவுக்கு ராசாவுக்கு சாதகாகவே முடியும். ஆனாலும் அதனை நாம் செய்யாதிருக்க முடியாது.

அனேகமாக இத்தகைய சவால்களை நாம் எல்லா செயல்பாடுகளிலும் எதிர்கொண்டாக வேண்டும். காதலிப்பவர்கள் மீது ஏவப்படும் சாதீய வன்முறையை எதிர்த்து விவாதிக்கும்போதெல்லாம் நான் எதிர்கொள்ளும் கேள்வி “ முதிர்ச்சியற்ற வகையில் அவசரத்தில் உருவாகும் காதல்களால் ஏற்படும் பிரச்சினைகளை” ஏன் நீ பேசுவதில்லை என்பதுதான். ஒருவகையில் அதுவும் தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டியதே. ஆனால் இரண்டையும் வேறு வேறு தளங்களில்தான் கையாளவேண்டும்.

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஒரு திட்டமிட்ட கூட்டு நடவடிக்கை என்பது அதிகார வர்கத்தின் தூண்கள் தொடங்கி அதன் தோழனான ஊடகங்களால் மக்களிடமும் செல்வாக்கு பெற்றிருக்கிறது. அதன் ஒரு நடவடிக்கையே திமுகவை முதலில் ஒழிப்போம் எனும் நேரடி மற்றும் மறைமுக பரப்புரைகள். அதனால்தான் தங்கள் ஆச்சாரம் கொள்கைகள் என்பதை எல்லாம் தாண்டி பார்ப்பன அறிவுஜீவிகள் ம.ந.கூவை ஆதரிக்கிறார்கள். திமுகவும் பார்ப்பன சக்திகளுக்கு பணிந்து போகும் கட்சிதானே எனும் கேள்வி நியாயமானது. ஆனால் அப்படியிருந்தும் ஏன் பார்ப்பன சக்திகள் திமுகவை ஒழிக்க விரும்புகின்றன எனும் ஆய்வு மிக நியாயமானது மற்றும் அவசியமானது. அதனை நாம் ஆய்வுக்குட்படுத்தும்போது அது திமுகவுக்கு சாதகமானதாக தோற்றமளிப்பதை தவிர்க்க இயலாது.

பார்ப்பனீய அதிகார மையங்கள் தங்களுக்கு இணக்கமான ஒரு கட்சியை ஒழித்துவிட்டு தங்களது சொந்த கட்சியின் அதிகாரத்தை தக்கவைக்க தீவிரமாக செயல்படுகின்றன. ஆகவே இதன் பிண்ணனி ஆட்சியதிகாரம் என்பதைத் தாண்டி பல நீண்டகால திட்டங்களை உள்ளடக்கியது என்பது வெளிப்படையாக தெரிகிறது. இதேபோல பொதுக்கருத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் எதற்கும் லாயக்கற்ற ஒரு விளம்பர வெறியனை தலைமை பீடத்தில் அமர்த்த முடியும் என்பது நிரூபணமாகி இரண்டாண்டுகள்கூட ஆகவில்லை. 2014 பாராளுமன்ற தேர்தலின்போது ம.க.இ.கவின் பரப்புரைகள் மோடியை இலக்கு வைத்ததாகவே இருந்தது, இது காங்கிரசுக்கு இலவசமாக கிடைத்த அனுகூலம்தான். ஆனால் அது எவ்வளவு சரியான நடவடிக்கை என்பதை இப்போது மோடி நிரூபித்துக்கொண்டிருக்கிறார். ஜெயா எதிர்ப்பையும் இந்த அடிப்படையில் இருந்து விளங்கிக்கொள்ளுங்கள்.

எதிரிகள் எல்லோரையும் ஒரே தரத்தில் வைத்து எதிர்கொள்ள முனைவது அறிவார்ந்த செயல் அல்ல. தினமலரும் இந்துவும் பார்ப்பன ஏடுகள் எனும் அம்சத்தில் ஒன்றுதான். ஆனால் அவற்ரை நாம் பல சந்தர்பங்களில் ஒரே தட்டில் நிறுத்துவதில்லை. மார்க்சிஸ்ட் கட்சியும் பாஜகவும் ஒத்துபோகிற அம்சங்கள் நிறைய இருக்கிறது. ஈழம் தொடர்பான நிலைப்பாட்டில் டி.கே ரங்கராஜனின் குரலும் சுப்ரமணிய சாமியின் குரலும் ஒன்று போலவே பல தருணங்களில் ஒலித்திருக்கின்றன. ஆனாலும் நாம் அவர்களை பொதுமைப்படுத்தி பேசுவதில்லை. மேற்சொன்ன எதற்கும் நாம் பொதுமைப்படுத்தலை கோருவதில்லை. ஆனால் திமுக அதிமுக விவகாரத்தில் மட்டும் இது ஒரு பூதாகரமான பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. காரணம் அதன் பின்னிருக்கும் வலுவான பிரச்சாரம்.

இதே கண்ணோட்டத்தில் பார்த்தால் நம்மால் கோயில் வழிபாட்டு உரிமையைப் பற்றி பேச முடியாது, காரணம் நாம் நாத்திகர்கள். மதுவிலக்கு கேட்டெல்லாம் போராடுவது கம்யூனிஸ்ட் கட்சியோட வேலையாங்க? என சலித்துக்கொண்ட தோழரை சந்திருக்கிறேன். இப்படி எல்லா விமர்சனங்களுக்கும் பயந்துகொண்டே செயல்பட வேண்டுமானால் நம்மால் விவாதத்தைத் தாண்டி ஓரங்குலம்கூட நகர இயலாது.

இந்த காரணிகளுக்கு அப்பால் நின்று யோசித்தால் வேறு காரணங்களும் கிடைக்கிறது. ஒரு ஃபேஸ்புக் பதிவில் பெரிய கட்டுரைக்கான முழுமையை எதிர்ப்பார்ப்பதும், ஒரு கட்டுரையில் முழு புத்தகத்துக்கான முழுமையை எதிர்ப்பார்ப்பதும் இங்கே தொடர்ந்து நிகழ்கிறது.

நாம் வார்த்தைகளை மட்டும் வைத்து எதையும் புரிந்துகொள்வதில்லை. வாசிப்பவரின் அறிவு மற்றும் அனுபவம், வாசிப்பவர் எழுதியவர் பற்றி வைத்திருக்கும் அபிப்ராயம் மற்றும் வாசிப்பவரின் எதிர்பார்ப்பு ஆகியவையும் சேர்த்தேதான் நமது புரிதலை வடிவமைக்கிறது. ஆகவே இது தொடர்பாக இன்னும் ஆயிரம் கட்டுரைகள் எழுதினாலும் அது எல்லோருக்கும் முழுமையான புரிதலை உண்டாக்கும் என சொல்ல முடியாது.

நிறைவாக நான் வேண்டுவதெல்லாம் ஒன்று மட்டும்தான், வெறும் வார்த்தைகளை மட்டும் வைத்து மதிப்பிட ஆரம்பித்தால் உலகத்தில் யாரை வேண்டுமானாலும் நல்லவனாக்கவோ அல்லது கெட்டவனாக்கவோ முடியும். முழுமையான செயல்பாட்டையும் கணக்கில் கொண்டுதான் ஒருவரது வார்த்தைகளை நாம் மதிப்பிட்டாக வேண்டும். இந்த கடைசி பத்தி எந்த வகையிலும் திமுகவுக்கு ஆதரவானதாக தோற்றமளிக்கவில்லை என்பதால் இந்த ஒரு பத்தியை மட்டுமாவது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறேன்.

நன்றி.

%d bloggers like this: