தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு – வழக்கம்போல சனிப்பெயர்ச்சி தமிழ்நாட்டுக்கு பாதகமாகத்தான் இருக்கிறது.


தமிழக அரசு, சிறந்த??? திரைப்படங்களுக்கும் திரைக்கலைஞர்களுக்கும் விருது அறிவித்திருக்கிறது. பத்திரிக்கைகளில் வந்த கணிப்பின்படியே ரஜினிக்கும் கமலுக்கும் விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எல்லைகடந்த பயங்கரவாதமாக தமிழக முதல்வருக்கே விருது அறிவித்திருக்கிறார்கள். சரி அவருடைய ” ஐந்து மணி நேர சாகும்வரை உண்ணாவிரதம் ” எனும் நாடகத்திற்குத்தான் விருதோ என்று பார்த்தால் அது உளியின் ஓசைக்கு அவர் எழுதிய வசனத்திற்காகவாம். ஒருவேளை தேர்வுக்குழுவினர் அந்தப்படத்தை பார்த்திருப்பார்களேயானால், நாம் அவர்களை மெனக்கெட்டு திட்டுவதற்கு அவசியம் இல்லை.
ஒரு நாள் நான் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து குமார் நகர் போகும்போது நடராஜ் தியேட்டரில் உளியின் ஓசை பட போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. ‘கலைஞரின்‘ உளியின் ஓசை என்ற எச்சரிக்கை வாசகமும் அதில் இடம்பெற்றிருந்தது என்பதை குறிப்பிடாமல் இருப்பது அத்தனை நியாயமான செயல் அல்ல. திரையரங்கிலிருந்து சற்று விலகி பாதுகாப்பு வலையப்பகுதியை அடைந்த உடன் திரும்பிப்பார்த்தேன், இரவுக் காட்சிக்கு ஐந்து நிமிடம் இருக்கும் வேளையில் இரண்டு பேர் மட்டும் நின்றுகொண்டிருந்தார்கள் ( அதில் ஒருவர் தியேட்டர் வாட்ச்மேன் என்பதை வேறு ஒரு படம் பார்க்கப்போகையில் தெரிந்துகொண்டேன் ). இது பத்தாவது நாள் நிலவரம். ஆனாலும் படத்தை நூறு நாட்கள் அங்கு ஓட்டினார்கள்.அந்த நூறு நாட்களும் வேறு படங்களை திரையிடவில்லை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.
அதனால் இந்தப்படத்திற்கு தரப்பட்ட விருது எனக்கு பெரிய அதிர்வுகளை உண்டாக்கவில்லை. ஆனால் ஒரு கேள்வி மட்டும் உறுத்துகிறது, சாதாரணமாக பத்திரிக்கைகள் நடத்தும் ஐந்நூறு ரூபாய் பரிசுப்போட்டிக்கே அந்த பத்திரிக்கை ஊழியர்களும் அவர்கள் உறவினர்களும் கலந்துகொள்ளக்கூடாது எனும் விதி வைத்திருக்கும் போது, தமிழக அரசு வழங்கும் விருதுகளுக்கு இப்படி ஏதும் விதிகள் கிடையாதா என்ன? . விட்டால் கல்பனா சாவ்லா விருதை அடுத்த ஆண்டு மீரா ஜாஸ்மினுக்கு ( பெண்சிங்கம் படத்தில் தைரியமாக நடிப்பதற்கு ) தருவார்கள் போல. நான் என்னவோ உளியின் ஓசை படம் எந்த விருதுக்கும் லாயக்கில்லை என்று சொல்வதாக எண்ணாதீர்கள். படத்தை முழுவதும் பார்த்த எடிட்டருக்கு ஆஸ்கார் விருதே தரவேண்டும் என்று சொல்பவர்களில் நானும் ஒருவன்.
சரி விஷயத்திற்கு வருவோம். இந்த விருதுப்பட்டியலில் கலைஞரின் பாராட்டு மேனியாவும் அவரது குடும்ப பொருளாதார நலனும் அடங்கியிருக்கிறது என்பது ஒன்றும் ரகசியம் இல்லை (அதென்ன பொருளாதார நலன் என்று கேட்பவர்கள், ரஜினி, கமல், வடிவேலு மற்றும் விவேக் கலந்துகொள்ளும் விழாவின் தொலைக்காட்சி ஒளிபரப்பு டி.ஆர்.பி ரேட்டிங் மற்றும் விளம்பர வருவாயை கணக்கிட்டுப்பாருங்கள்). ஆனால் இத்தனை சின்னபுள்ளத்தனமாக இதை செய்திருக்கவேண்டியதில்லை. தேர்வுக்குழு உறுப்பினர் குமரிமுத்து வாழ்நாளில் தான் பங்கேற்ற சிறந்த காமெடி காட்சியாக இதை குறிப்பிடுவதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விருது அறிவிப்பை கடுமையாகக் கண்டித்து அறிக்கை விட்டிருகிறார் ஜெயலலிதா.
கூடிய விரைவில் சென்னைக்கு வந்து கடுமையான ஓய்வெடுக்கவேண்டியிருப்பதால், கொடநாட்டில் அதற்கான பயிற்சியில் இருக்கும் ஜெயாவையும் இந்த செய்தி பாதித்திருக்கிறது.நம்மைவிட அவர் அதிகம் கோபப்படுவது நியாயமானதே, நாமும் விழித்திருக்கும் நேரத்தைவிட தூங்கும்போது தொந்தரவு செய்தால்த்தான் அதிகம் கோபப்படுவோமில்லையா ?. அவரது விருது பற்றிய விமர்சனத்தை கவனியுங்கள், ஒட்டுமொத்தமாக அவர் விருது வழங்கிய முறையை குறைசொல்லவில்லை. உளியின் ஓசைக்கான விருதைத்தான் அவர் விமர்சனம் செய்திருக்கிறார்.இதன் பொருள் அவர் ஆட்சி காலத்திலும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என்பதுதான்.ஒருவேளை அவரது ஆதங்கம் அப்படி விருது வழங்குகையில் தனக்கு ஒரு விருது வழங்கிக்கொள்ள முடியாதே என்பதாக இருக்கலாம்.
அதற்கும் சில உபாயங்கள் இருக்கிறது., மம்மியின் பழைய படங்களை மீண்டும் திரையிடுவது, அதை 100 நாட்கள் ஓட்டுவது பிறகு அந்தப்படத்திற்கு விருதை வழங்குவது என்ற நடைமுறையை பின்பற்றுவதன் மூலம் அம்மாவை குளிர்விக்கலாம், ரஜினியின் இரண்டாவது மகள் என்ன பாவம் செய்தார் ? அதனால் அவருக்கும் ஒரு கலைச்சேவைக்கான கலைமாமணி விருது வழங்கலாம் ( சௌந்தர்யா அப்படி என்ன கலைச்சேவை செய்துவிட்டார் என்று கேட்பவர்களிடம் அவர் இதுவரை எந்த நடன அரங்கேற்றமும் செய்யவில்லை என்பதை நினைவுபடுத்தினால் போதும்) , அந்த விழாவில் ரஜினி அம்மாவை பாரட்டித்தான் ஆகவேண்டும். ஒருவேளை  இதையும் கருணாநிதியே செய்துவிட்டால் இருக்கவே இருக்கிறார் ரஜினி பேரன் யாத்ரா. ரஜினி வீட்டில் நடந்த கொலுவில் ரஜினியோடு ” பள்ளிக்கட்டு சபரிமலைக்கு ” என்ற பாடலை யாத்ரா பாடியிருக்கிறார் என்பதால் அவருக்கு கலைமாமணி பட்டம் வழங்குவதில் லாஜிக் மீறல் எதுவும் இருக்காது.
தலைப்பு சம்பந்தமில்லாமல் இருக்கிறதே என்று குழம்பாதீர்கள்.
இந்த சனிப்பெயர்ச்சி கருணாநிதிக்கும் ஜெயாவிற்கும் சாதகமாக இருப்பதாக கணிப்புகள் வந்திருக்கிறது. அதன் அடிப்படையில் தமிழகத்தின் பலன்களை கணித்திருக்கிறேன் அவ்வளவுதான்.

Advertisements

“தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு – வழக்கம்போல சனிப்பெயர்ச்சி தமிழ்நாட்டுக்கு பாதகமாகத்தான் இருக்கிறது.” இல் 4 கருத்துகள் உள்ளன

 1. அன்புள்ள வில்லவன்,

  உங்கள் கட்டுரைகள் அனைத்தும் கூர்மையாகவும், எள்ளலோடும் எளிமையாகவும் உள்ளன. வாழ்த்துக்கள். சில கட்டுரைகளை உங்கள் அனுமதியுடன் வினவிலும் மீள் பிரசுரம் செய்கிறோம். தொடர்ந்து எழுதுங்கள்.

  தோழமையுடன்
  வினவு

 2. மறுமொழிக்கு மிக்க நன்றி. எனது எழுத்துக்களின் தரத்தையும் பொருளடக்கத்தையும் மேம்படுத்ததொடர்ந்து முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். பதிவிடப்படுபவை ஏதேனும் மீள்பிரசுரம் செய்யத் தகுதியுடையதாக இருப்பின் பயன்படுத்திக்கொள்ளவும், எனது அனுமதிக்கு அவசியமிருக்காது.

  villavan.

 3. நீங்களும் திருபூரா ?

  அருமையாக உள்ளது உங்கள் எழுத்து.

  அதிலும் / / கூடிய விரைவில் சென்னைக்கு வந்து கடுமையான ஓய்வெடுக்கவேண்டியிருப்பதால், கொடநாட்டில் அதற்கான பயிற்சியில் இருக்கும் ஜெயாவையும் இந்த செய்தி பாதித்திருக்கிறது . // மிகவும் ரசனைக்குரியது.

  பாரட்டுக்கள்.

 4. அடி நொறுக்குகிறீர்கள், சிந்தித்தேன்..வயிறு குலுங்கச் சிரித்தேன் … “நாமும் விழித்திருக்கும் நேரத்தைவிட தூங்கும்போது தொந்தரவு செய்தால்த்தான் அதிகம் கோபப்படுவோமில்லையா ?” என்பது, உச்சக்கட்ட காமடி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s