தலைவன் ( எங்கே ) இருக்கிறான் ????


தலைவனின் தகுதி பற்றிய ஏராளமான குறிப்புகள் நமக்கு கிடைக்கின்றன. பல உயர் படிப்புகளில் தலைமைப்பண்புகள் என ஒரு பாடம் இருக்கிறது. பாடம் எதுவும் படிக்காதவர்கள் தாங்களே ஒரு விளக்கத்தை வைத்திருப்பார்கள். படித்திருக்கவேண்டும் அவன் தான் சரியாக வழிநடத்துவான், பணக்காரனாக இருக்கவேண்டும் அவன் தான் திருடமாட்டான் என்பன போன்ற கருத்துக்கள் அவற்றில் சில. இந்த இரு கருத்துக்களையும் இன்னும் நம்புபவர்கள் ஒன்று மனவளர்ச்சி குன்றியவர்களாக இருக்கலாம் அல்லது P.சிதம்பரத்தை போன்றவர்களைப் பற்றி கேள்விப்படாதவராக இருக்கலாம் ( எத்தனை பொருத்தமான இன்ஷியல் இவருக்கு ). ஆனால் தொண்டனின் தகுதி பற்றிய குறிப்புக்கள் எதுவும் கிடைப்பதில்லை.

சுமார் ஓராண்டுக்கு முன்பு குமுதம் ரிப்போர்ட்டரில் ஒரு செய்தி வந்தது. இலங்கை போர் குறித்த ஒரு குறுந்தகடைப் பார்த்துவிட்டு கலைஞர் கண்கலங்க சொன்னாராம் இதை தடுக்காவிட்டால் இந்த ஆட்சி இருந்து என்ன பயன் என்று. திமுகவினர் மட்டுமல்ல பெரும்பாலான தமிழர்கள் அவர் உண்மையாகவே வருத்தப்படுவதாகத்தான் கருதியிருப்பார்கள். அதன் பிறகு அவர் வீசிய அறிக்கை வடிவிலான எறிகணைகளால் பாதிகப்பட்ட பலர் தங்களை தாங்களே செருப்பால் அடித்துக்கொள்ளும் நிலைக்கு ஆளானார்கள். ஆனாலும் இன்னமும் கருணாநிதியை நம்பும் அப்பாவிகள் இருக்கிறார்கள்.

ஜெயலலிதா கதை வேறு. தேர்தல் நெருங்கிய பிறகு திடீரென ஒருநாள், ஆட்சியை தன் கையில் கொடுத்தால் ராணுவத்தை அனுப்பி தனிஈழம் பெற்றுத்தருவேன் என்றார். நானறிந்த பல அதிமுக தொண்டர்களும் அனுதாபிகளும் அப்போது அடைந்த ஆனந்தம் அளவிடமுடியாதது, ஈழ விடுதலையில் (நிஜமான) அக்கறை கொண்ட இளைஞர் பாசறை உறுப்பினர் ஒருவர் ஆனந்தக்கண்ணீருடன் இந்த தகவலை எனக்கு சொன்னார். ஜெயா,  ஈழத்தமிழர்களை தீவிரவாதிகளைப்போல நடத்தியதையும், போர் என்றால் பொதுமக்கள் சாவது சகஜம்தான் என்று அலட்சியமாக பதில் அளித்தையும், ஈழம் என்ற வார்த்தையையே ஏற்றுக்கொள்ளாததையும் எந்தத்தொண்டனும் நினைத்துப்பார்க்கவே இல்லை. ஜெயா கருணா என்றில்லை, நாமறிந்த எல்லா தலைவர்களுமே இந்த வகையறாதான்.

தமிழ்நாட்டின் எல்லா தலைவர்களும் அத்தனை புத்திசாலிகள் அல்ல. பிறகெப்படி இவர்களால் தங்கள் பேச்சை கூச்சப்படாமல் மாற்றிக்கொண்டு அதையும் தங்கள் தொண்டர்களை விமர்சனமில்லாமல் ஏற்றுக்கொள்ள வைக்கிறார்கள் ?.ஏனென்றால் நம்மில் பெரும்பாலானவர்கள் தலைவனை தேர்ந்தெடுத்துவிட்டு பிறகு அவனது கொள்கையை பின்பற்றுகிறார்கள். இந்த முறை மிகவும் சுலபமானது, இதில் நீங்கள் சிந்திக்கவும் திருத்திக்கொள்ளவும் அவசியம் கிடையாது. நடுநிலைவாதிகளாக தங்களை கருதுபவர்கள் பலர் ஈழப்பிரச்சனையில் ஒரு தரப்பில் நின்றுதான் விவாதித்தார்கள் ஒன்று கருணாநிதி ஒரு துரோகியென்றார்கள் அல்லது ஜெயாவின் ஈழஆதரவுக்  கருத்து ஒரு நாடகமென்றார்கள்.

 

எனவே இது விண்டோஸை போல தமிழர்களின் ஏகமனதான ஆப்பரேட்டிங்க் சிஸ்டமாகிவிட்டது. சிவாஜி படத்தை ஸ்டைலிஷாக இருப்பதாக சொன்ன ரஜினி ரசிகர் ஒருவர் பேராண்மை படத்தில் லாஜிக்கே இல்லை என்று சலித்துக்கொண்டார் ( N.C.C பொண்ணுங்க ராக்கெட் லான்சர்ல சுடுறது நம்புற மாதிரியா இருக்கு ?? ). பத்து கிலோ எடையை தூக்க முடியுமா என கேள்வி கேட்கும் அளவு தேகபலம் கொண்ட அறுபது வயது தாத்தா ஐம்பது ரவுடிகளை ஒரே அடியில்  பறக்கவிடும் போது மட்டும் இவருக்கு லாஜிக் நினைவுக்கு வருவதில்லை. இந்த மாதிரி ரசிக மனோபாவமும் பக்தனைப்போன்ற மனோபாவமும்தான் நம்மை எதிர் தரப்பை மட்டும் கேள்வி கேட்கும் ஆட்களாக வைத்திருக்கிறது. மனிதன் தான்  அடிமையாக கருதுபவர்களை தனக்கு  சரிசமமானவர்களாக நடத்த விரும்புவதில்லை   என்றார் டார்வின்.நாமோ அடிமையைவிட கீழானவர்களாக நடந்துகொள்கிறோம்.. ஒரு அனிச்சை செயலைப்போல.

இந்த பலவீனம்தான் கல் தோண்றி மண் தோண்றாக்காலத்திற்கு வாளோடு முன் தோண்றிய !!! ஒரு இனத்தை இப்போது யாசகம் மட்டுமே கேட்கத்தெரிந்த கூட்டமாக மாற்றியிருக்கிறது. ஈழத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் செத்து, மிச்சமிருப்பவர்கள் உயிரை சுமந்து ஓடியபோது இங்கு வெட்கமில்லாமல் அழகிரி தன் பிறந்தநாளை படோடாபமாக கொண்டாடினார்( பக்கத்து வீடு சுடுகாடானாலும் தனக்கு விழா எடுத்துக்கொள்பவர்தான் கருணாநிதியின் மகனாக இருக்கமுடியும் இல்லாவிட்டால் நாம் சந்தேகப்படுவோமில்லையா !! ) ,  ஈழ விவகாரத்தில் தன் கடந்த கால எதிர்நடவடிக்கைகளுக்கு சின்ன வருத்தம் கூட தெரிவிக்காமல் ஜெயலலிதா தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். உச்சகட்டமாக திருமாவளவன், பிரபாகரன் சொன்னதால் தான் சோனியாவை விமர்சிப்பதை நிறுத்தியதாக தெரிவித்தார். எந்தத்தொண்டனாவது இவர்களை விட்டு விலகியதாகவோ அல்லது குறைந்தபட்சம் இவர்களை கேள்விகேட்டதாகவோ செய்தி வந்ததா ?.  எல்லா அயோக்கியத்தனமும் நம்முடைய அடிமை மனோபாவத்தின் மீதான அபரிமிதமான நம்பிக்கையில்தான் செய்யப்படுகின்றன. அதே நம்பிகையில் தான் சுபவீ, சோலை, வீரமணி போன்ற சொம்புதூக்கிகள்கூட முற்போக்கு வேடத்தில் இன்னமும் அலையமுடிகிறது.

தலைவனை தேர்வு செய்வது அவரவர் விருப்பம். அதில் அடுத்தவர் தலையிட முடியாது. ஆனால் தலைவனை கேள்வி கேட்பதும் அவன் முடிவுகளை விமர்சனம் செய்வதும் எல்லா தொண்டர்களின் கடமை. அப்போதுதான் நாம் தலைவனைப்பற்றி தெரிந்து கொள்ள முடியும் என்பது மட்டுமல்ல, அப்போதுதான் தலைவனே தன்னைப்பற்றி தெரிந்துகொள்ள முடியும். இல்லாவிட்டால்  கருணாநிதியின் பேரன் முதல்வராகலாம்,  அதிமுகவில் டாக்டர் வெங்கடேசுக்கு பதிலாக ஒரு கம்பவுண்டர் சீனிவாசன் அதிகாரம் மிக்கவராக மாறலாம்,சொந்தமாக நான்கு கருப்பு சட்டை வைத்திருக்கும் ஒரே தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு வீரமணியின் மகன் திகவின் தலைவராகலாம். நாம் மட்டும் எப்போதும்போல கலர் டிவிக்கு வரிசையில் நிற்பவர்களாகவே இருப்போம்.

கலைஞர் சிந்தனைகள் கட்டாயப்பாடமாவதற்குள் ரசிக மனோபாவத்திலிருந்து வெளியே வாருங்கள். ஏனென்றால் கேள்வி கேட்காமல் விசுவாசமாக இருப்பது நாய்களின் குணம். அதே குணம் நம்மிடம் இருந்தால் நாமும் நாய்களைப் போலத்தான் நடத்தப்படுவோம்.

Advertisements

“தலைவன் ( எங்கே ) இருக்கிறான் ????” இல் 3 கருத்துகள் உள்ளன

  1. நல்ல பதிவு. தொண்டர்கள் தலைவர்களின் செயல்களை சீர் தூக்கி பாக்கும் நிலையில் இல்லை. அதற்கு தலைவர்கள் விடுவதும் இல்லை. யாரோ ஒருவர் மேல் வெறுப்பை வளர்த்தே இவர்கள் தலைவர்களாக தங்களை நிலை நிறுத்திக்கொள்கிறார்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s