முல்லை பெரியாறு – நாம் ஏன் மோகன்லாலுக்கு சென்னையில் ஒரு சிலை திறக்கக்கூடாது ??


எல்லோரிடமும் உதை வாங்குவது என்பது நம் சமீப கால வரலாறு. நான்கு திசைகளிலும் நம் தலையில் மிளகாய் அரைக்கும் ஆட்கள் நிறைந்திருக்கிறார்களே என நாம் கவலைப்படக்கூடாது, கடல் தாண்டி வந்து ஒரு நாடே நம் ஆட்களை சுட்டுவிட்டு போகும்போது பக்கத்து மாநிலம் அதில் பாதியாவது செய்யக்கூடாதா என்ன ? மேலும் வேலை செய்பவனிடம்தான் வேலை வாங்கவேண்டுமென்பது ஒரு மேலாண்மை விதி. அதேபோல ஏமாறுபவனிடம்தானே ஏமாற்றவும் முடியும். அந்தவகையில் நாம் கேரளாவுக்கு தந்திருக்கும் வாய்ப்புதான் முல்லைப்பெரியாறு.

அணையின் வரலாறும் அதன் 999 வருட ஒப்பந்தமும் நமக்கு தெரிந்த செய்திகள்தான். இப்போதைக்கு விவாதிக்கப்பட வேண்டியது கேரளா கட்டப்போகும் புதிய அணைதான் ( இன்னமும் கட்ட அனுமதி தரவில்லை என அப்பாவி போல சொல்லாதீர்கள்.. இது இந்தியா, இங்கு தமிழ்நாட்டிற்கு எதிரானவை மட்டும் மின்னல் வேகத்தில் நடக்கும் ). நமது அரசின் கையாலாகாத்தனத்திற்கு சரியான உதாரணமானது புதிய அணையின் ஆய்வுக்காக மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கொடுத்த ஒப்புதல். ( கொடுத்துவிட்டு என் பொண்டாட்டி தமிழச்சி என கனிமொழியின் அப்பா ஸ்டைலில் ஒரு அறிக்கை வேறு..)

முதலில் மத்திய அரசு ஒப்புதலே தரவில்லை என சொல்லிப்பார்த்தார் முதல்வர். பிறகு மத்திய அரசே ஒப்புதல் தந்துவிட்டதாக சொன்னதும் மதுரையில் கண்டனக்கூட்டத்திற்கு இடம் பார்க்கவேண்டியதானது. ஜெயராம் ரமேஷை எப்படியெல்லாம் கண்டிக்கப்போகிறார்கள் என ஆவலுடன் தமிழகம் எதிர்பார்த்தது. அந்த கூட்டத்தையும் சுலபமாக காலிசெய்தது காங்கிரஸ். இ.வி.கே.எஸ். இளங்கோவன் மிரட்டினால் காங்கிரசின் வார்டு உறுப்பினர் கேட்பாரா என்பதே சந்தேகம். ஆனால் நம் முதல்வரோ சப்தநாடியும் ஒடுங்கி ஒரு கூட்டத்தையே நிறுத்திவைத்துவிட்டார். ராசாவின் அலுவலகத்திற்குள் போன சிபிஐ கனிமொழி வீட்டிற்குப் போக எத்தனைநேரமாகும் என அவரும் யோசிப்பாரா இல்லையா..

மத்திய அரசின் நிலைப்பாடு எப்போதும் பலவீனமானவர்களுக்கு எதிராகவே இருக்கும் . அதனால்தான் மத்திய அரசு முல்லைப்பெரியாறு அணை விவகாரத்திலும் நமக்கு எதிராக இருக்கிறது. மற்றபடி மன்மோகன் சிங்கும் அவர் அரசும் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எதிரானவைதான். உச்ச நீதிமன்றமும் இவ்விவகாரத்தில் பஞ்சாயத்துதான் செய்யுமே தவிர நியாயம் வழங்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது,(பாபர் மசூதியின் இடம் தொடர்பாக உள்ள வழக்கு 50 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளது.. ராமாயணம் எனும் காமிக்ஸ் கதையை ஆதாரமாக வைத்தே ஒரு வழக்கை தொடுத்து அதை இத்தனை ஆண்டு காலம் இழுக்கவும் முடியும் நம் நாட்டில்) . ஆகவே இவ்விவகாரதில் பிரதான குற்றவாளிகள் மூன்று பேர்.

முதல் குற்றவளி கேரள அரசு. புதிய அணை எனும் திட்டம் கேரள மக்களுக்கு எந்த வகையிலும் உதவப்போவது இல்லை. புதிய அணை கட்டுவதன் மூலம் தமிழகத்தின் தண்ணீருக்கான உரிமையை பறிப்பதைத்தவிர வேறு எந்த நோக்கமும் கேரளாவிற்கு கிடையாது. முல்லை பெரியாறு அணையே இல்லாவிட்டால் அந்த ஒப்பந்தமும் செல்லாது, இதுதான் அச்சுதானந்தனின் அல்பத்தனமான திட்டம். இந்த அடிமுட்டாள்த்தனமான யோசனைக்கு கேரளாவும் இந்தியாவும் தரப்போகும் விலை மிக அதிகம். புதிய அணைக்கான திட்ட மதிப்பீடு சுமார் ஐந்நூறு கோடி ரூபாய். இந்தியாவின் எந்த அணையும் திட்டமிட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டதில்லை. காடுகள் அழிக்கப்படுவதால் அணைகளில் சேரும் வண்டல்மண் ஒரு பெரும் பிரச்சினை.வருங்காலத்தில் இது இன்னும் மோசமாகிக்கொண்டே போகும்.

புதிதாக அணை கட்டுவது இனிமேல் ஒரு மடத்தனமான செயலாகவே இருக்கும், உரிய பலனைத்தராமல் தொடர்ந்து செலவு பிடிக்கும் ஒரு திட்டம் எப்படி மக்கள் நலனுக்கான திட்டமாக இருக்க முடியும்? அணைக்கென திட்டமிடப்பட்டிருக்கும் இடம் இந்தியாவில் மிச்சமிருக்கும் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் ஒன்று. பல காட்டு விலங்குகளின் கடைசி வாழிடம். தங்களிடம் இருக்கும் பெருமைக்குரிய செல்வத்தை வெறும் அதிகாரப் போட்டிக்காக அழிக்க போகிறது கேரளா. கூடுதலாக தமிழகத்திடம் தண்ணீருக்கு பணம் வசூலிக்கலாம் எனும் சாத்தியக்கூறும் மறுப்பதற்க்கில்லை.  அம்மாவின் தாலியை அறுத்தால்கூட பணம் கிடைக்கும், சேட்டன்கள் செய்யப்போவதும் அதைத்தான்.

இரண்டாவது குற்றவாளி தமிழக அரசு. மத்திய அரசு கொடுத்த அனுமதிகூட தெரியாமல் இருக்கும் அல்லது அதை மறைக்கும் ஒரு முதல்வர். மத்திய அமைச்சரை  ஏமாற்றி கேரளா ஒப்புதல் வாங்கிவிட்டதாகச் சொல்லும் தமிழக காங்கிரஸ் தலைவர்.. விளங்குமா ?? கேரளா சொல்வது என்ன? அணை பாதுகாப்பாக இல்லை, நிலநடுக்கம் வந்தால் அணை தாங்காது. இது முதலில் ஒரு வெற்றுக் காரணமாக கருதப்பட்டது, இப்போதோ மத்திய அரசு பரிசீலனை செய்யும் அளவு பூதாகரமாகிவிட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு நம்மிடம் இருக்கும் ஒரே பதில் அணை பலமாக இருக்கிறது என்பதுதான். ஒருவேளை அணை பலவீனமடைந்தால் நம்மிடம் இருக்கும் மாற்று திட்டம் என்ன எனும் கேள்விக்கு நம் பதில் என்ன?.

நீர்வளத்தை உருப்படியாக பயன்படுத்த எந்த திட்டமும் நம்மிடம் கிடையாது. முல்லைப்பெரியாறு நீரை தமிழகப்பகுதிகளில் சேமிக்கமுடியுமா என்பது பற்றிய ஆய்வுகள்கூட நடத்தியதாக தெரியவில்லை.நீர் மின்சாரத்திற்காகத்தான் தமிழக அரசு முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த விரும்புகிறது என்பது கேரளாவின் குற்றச்சாட்டு. உண்மையில் நீர்மின்சார உற்பத்திக்கான கருவிகள் இரண்டில் ஒன்று ஆண்டுக்கணக்கில் பழுதடைந்திருக்கிறது. கேரளாவில் ஆற்றில் மணல் எடுப்பதுகூட தடை செய்யப்பட்டிருக்கிறது, ஆனால் இங்கோ டெல்டா பகுதிகளில் சிறிய கால்வாய்களே தூர்க்கப்பட்டு கட்டிடங்கள் எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த லட்சனத்தில் நடக்கும் அரசு மாநிலத்தின் உரிமைகளை காப்பதில் மட்டும் எப்படி சுறுசுறுப்பாக இருக்கும்? இக்குற்றச்சாட்டுக்களுக்கு தன் குடும்பத்திற்காக உழைக்கும் கருணநிதியும் விதிவிலக்கல்ல இன்னொருவர் குடும்பத்திற்காக உழைக்கும் ஜெயலலிதாவும் விதிவிலக்கல்ல.

மூன்றாவது குற்றவாளி, சாட்சாத் நாம்தான். இங்கு அரசு ஊழியர் பிரச்சனை பற்றி மற்ற பொதுமக்களுக்கு அக்கறை கிடையாது. மீனவர் பிரச்சனை பற்றி விவசாய சங்கங்களுக்கு கவலை கிடையாது. விவசாயிகள் பிரச்சனைகளை அரசு ஊழியர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். மற்றவர்களின் சிரமங்களைப் பற்றி தெரிந்துகொள்வதே அனாவசியம் என கருதும் நடுத்தரவர்க சிந்தனை பன்றிக்காய்ச்சல் போல மாநிலமெங்கும் வியாப்பித்திருக்கிறது. தாய்மொழிக்கல்வியையே எதிர்க்கும் மக்களைக்கொண்டிருக்கும் மாநிலமில்லையா இது ?. 1984ல் நடந்த சீக்கிய படுகொலைகாக இன்றளவும் பஞ்சாபில் பெரிய அளவிலான போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால் காவிரி பிரச்சினையோ மீனவர் பிரச்சினையோ அவை அந்தந்த வட்டாரத்திற்கு உரிய சிக்கலாக மட்டுமே  தமிழகத்தில் பார்க்கப்படுகின்றன. சாதிச்சங்க அழைப்புக்கு திரளும் கூட்டத்தில் பாதிகூட பொதுவான பிரச்சினைகளுக்கு வருவதில்லை.

பிறகு நாம் எப்படி அண்டை மாநிலங்களால் வஞ்சிக்கப்படாமல் இருப்போம் ?, சேலம் ரயில்வே கோட்டத்திற்கான ஆயிரத்து முன்னூறு ஊழியர்களை இன்னமும் விடுவிக்கவில்லை பாலக்காடு கோட்டம். மாநில அரசு நேரடியாக தலையிடமுடியாத ரயில்வேயிலேயே இப்படியென்றால் மாநில அரசுகளின் நேரடி கட்டுப்பாட்டில் வரும் விவகாரங்களில் நாம் எப்படியெல்லாம் பாதிக்கப்படுவோம் என புரிந்துகொள்ளலாம். இத்தனை பலவீனமான மக்கள் கூட்டத்தை பக்கத்து மாநிலத்தால் அல்ல ஒரு பஞ்சாயத்து போர்டால்கூட வஞ்சிக்க முடியும் என்பதுதான் கசப்பான உண்மை.

நம் சமூகத்தின் ஒரு சாராருக்கான பிரச்சனைகளில்  மற்றவர்களும் அக்கறை காட்டும் சூழல் இங்கு வந்தாலொழிய இந்த நிலை மாறப்போவதில்லை. அதுவரை சிலை திறப்பது, கடிதம் எழுதுவது மாதிரியான கேனத்தனமான செயல்களை ‘ நடவடிக்கை ‘ என நம்பிக்கொண்டிருப்பதைத்தவிர வேறு வழி யில்லை.

Advertisements

“முல்லை பெரியாறு – நாம் ஏன் மோகன்லாலுக்கு சென்னையில் ஒரு சிலை திறக்கக்கூடாது ??” இல் 4 கருத்துகள் உள்ளன

 1. This article confirms many of our feelings about what is going on in our state. When we are going to select and elect politicians on their merit basis, these thigs won’t happen. Till that time M.K and Family will rul this kingdom as they like. It can happen only here in our place:
  Deputy CM’s son can become movie producer and no body will even think that feom where he gets money to make a movie wirh crores of Rs? It is all our public money swindled competely by M.K &Family by the means of govt illgally and by media (Sun TV) legally..

  I wish Mayan’s Calender shall be the real one!

  The Netherlands

 2. மிக நல்ல பதிவு.

  காவிரி நீர் பிரச்னையிலும் தமிழகத்தின் நிலை இதுவே.

  நீங்கள் குற்றம் சாட்டிய மூன்று குற்றவாளிகளில் மூன்றாவது : நாம்.
  மிகச் சரி. நாம், பொது மக்கள், மாற வேண்டும். உதய மூர்த்திகள் சொல்லிய போது நாம் கண்டு கொள்ளவில்லை. இப்போதாவது மாற முயற்சிப்போம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s