எல்லா ராசிக்காரர்களுக்கும் பொதுவான பலன் ஒன்று உண்டு.


ஜாதகம் இல்லாமல் வாழும் சிறுபான்மையோரில் நானும் ஒருவன். இந்தவகை சிறுபான்மையோருக்கென உள்ள பல்வேறு சிறப்பு சலுகைகளை அனுபவித்தாலும் சிற்சில சிரமங்களும் இருப்பதை மறுப்பதற்கில்லை. இரண்டாண்டுகளுக்கு முன்பு, எங்களுடன் சிலகாலம் பணியாற்றிய பழைய நண்பர் அழைத்திருந்தார். பேச்சினூடே எனது ஜாதகத்தை கேட்டார் ( அவரது உறவினர் மகளுக்கு பொருத்தம் பார்க்க). என்னிடம் அப்படியொன்று இல்லை என்ற உடன் ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல தன் வாழ்வின் அதியுயர் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதன் பிறகு நடைபெற்ற பல திருமணங்களை கண்ணுற்ற போது கல்யாணத்திற்கு மாப்பிள்ளை பெண்ணை விட ஜாதகம் முக்கியம் என்பது தெரிந்தது. புகைப்படம் இல்லாவிட்டாலும் பெயரை பதிவு செய்துகொள்ளும் பல திருமண தகவல் மையங்கள் ஜாதகம் இல்லாதவர்களை பதிவு செய்து கொள்வதே இல்லை.  முன்பு குழந்தை பிறந்த உடன் மிட்டாய் வாங்கவும், மற்றவர்களுக்கு தகவல் சொல்லவும் ஓடிய அப்பாக்கள் இப்போது கம்ப்யூட்டர் ஜாதகம் வாங்கிய பின்புதான் மறுவேலை பார்க்கிறார்கள்.  குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு ஆலோசனை கேட்பவர்களும் ‘ச அல்லது சா’ இரண்டு எழுத்துக்களில் மட்டும் சந்தர்ப்பம் என பாட்டுக்கு பாட்டு அப்துல் ஹமீதைப் போல நிபந்தனை விதிக்கிறார்கள்.

இந்த கட்டங்கள் வரையப்பட்ட காகிதத்தை வைத்து நடத்தப்படும் அழிச்சாட்டியங்கள் ஏராளம். முப்பத்து மூன்று வயது வரை கல்யாணம் செய்யக்கூடாது என ஒருவருக்கு பலன் சொல்கிறார்கள். வீட்டு மாடி காலியாக இருக்கக்கூடாது உடனே மாடியில் ஒரு அறை கட்டு என இன்னொருவருக்கு பலன் சொல்கிறார்கள். தம்பதிகளுக்கு, ஏழாம் இடத்தில் கிரகங்கள் பொருந்திப் போகாவிட்டால் அவர்கள் தேனிலவு முடிந்ததும் நேராக கோர்ட்டுக்குத்தான் போவார்கள் என்கிறார் ஒரு சோதிடர். கிரக பலன்கள் சாதகமாக இல்லாததால் சொந்த வீட்டை விட்டுவிட்டு வாடகை வீட்டில் இருப்பவரை நான் பார்த்திருக்கிறேன். சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி மாதிரியான செய்திளுக்கு தேசீயப் பேரழிவு நடந்ததைப்போல பல பக்கங்களை ஒதுக்குகின்றன அச்சு ஊடகங்கள். பக்தர்களை இழுக்க துண்டுப் பிரசுரம் மூலம் சண்டையிடுகிறது திருநள்ளாறு கோயிலும் திருவாரூர் கோயிலும். அடுத்த சனிப்பெயர்ச்சிக்கு அனல்வாதம் புனல்வாதம் வரை போவார்கள் என எதிர்பார்க்கலாம்,( யார் தோற்றாலும் தண்டனை  என்னவோ பக்தனுக்குத்தான்). மிக்சி குக்கருக்கு சர்வீஸ் முகாம் நடத்துவதைப்போல பெயர்ச்சிகளுக்கும் வேங்கட சர்மா என்பவர் முகாம் நடத்தி தீய விளைவுகளை கட்டுப்படுத்துகிறார். ரிப்பேருக்கு தக்கபடி சர்வீஸ் சார்ஜும்  வேறுபடுகிறது.

முன்பு கைரேகை பார்பவர்கள் உங்கள் வீதியில் அலைவார்கள் அல்லது பிளாட்பார்மில் இருப்பார்கள். அவர்கள் கூலி ஐந்து பத்துடன் போய்விடும். இப்போது அதிலும் பணம் பிடுங்கிகள் வந்துவிடார்கள். அடிக்கடி கைரேகை பார்த்துக்கொள்ளும் எனது உறவினர் ஒருவர் ரேகை பார்ப்பதில் தற்போது நிபுணத்துவம் பெற்றுவிட்டார். கையின் பக்கவாட்டில் உள்ள கோடுகளை வைத்து ஒருவருக்கு எத்தனை மனைவி என சொல்லலாம் என்கிறார் அவர். கைகளின் கோடுகள் அதிகாரப்பூர்வ மனைவிகளை மட்டும்தான் குறிப்பிடுமா என்பதை விளக்குமளவுக்கு அவர் இன்னும் பாண்டித்யம் பெறவில்லை என்பதால் என்னால் அது தொடர்பான விளக்கம்  பெற முடியவில்லை.  கோவை வட்டாரத்தில் ஒருவர் கால் ரேகையை வைத்து எதிர்காலத்தை கணிக்கிறாராம். ஓசூரிலோ ஒரு சோதிடர் கைரேகையை கார்பன் பேப்பரில் பதிய வைத்து அதை பார்த்து பலன் சொல்கிறார். இருபத்துஏழு வயதில் உன் வாழ்வில் திருப்பம் வரும், ஈரோடு தாண்டினால் பெருந்துறை வரும் என எல்லாவற்றையும் சரியாக கணித்து சொல்கிறார் என்று அவரைப்பற்றி பரவசமாக குறிப்பிடுகிறார் திருப்பூரில் உள்ள ஒரு சிறு முதலாளி. நம் முகத்தை பார்த்தே பலன் சொல்கிறேன் என்று சொல்பவரை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கக்கூடும்.

ரேகையும் ஜாதகமும் சரியாக இருந்தும் உங்களுக்கு பிரச்சினை இருப்பின் கோளாறு உங்கள் வீட்டில் இருக்கலாம் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள். பல நிறுவனங்களில் வாசலுக்கு எதிரே ஒரு பெரிய கண்ணாடியை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். அது எதற்கு என்றால், அங்கு வரும் கெட்ட சக்திகள் கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்துவிட்டு  ஏற்கனேவே நம்ம ஆள் ஒருத்தன் உள்ளே இருக்கான் என்று எண்ணி வெளியே போய்விடும் என்கிறார்கள்.  அதுசரி கண்ணாடியைப் பார்த்து இதேபோல ஏமாந்து நல்ல சக்திகள் வெளியே போய்விட்டால் என்ன செய்வது என நாம் கேட்டால், கண்ணாடிக்கும் ஏமாறாத கெட்ட சக்தி என்று நம்மை பற்றி முடிவு செய்துவிடுகிறார்கள். வெளிநாடு செல்ல விரும்புபவர்கள்  வடமேற்கு அறையில் படுத்தால்தான் அவர்கள் கனவு நிறைவேறுமாம், மாறாக திசை மாற்றிப் படுப்பீர்களேயானால் உங்கள் தெரு முக்கை கூட தாண்ட மாட்டீர்கள் என பயமுறுத்துகிறது வாஸ்து சாஸ்திரம். மேலும் உங்கள் வீட்டு மருமகன் மேற்கு மத்திய பகுதி அறையில் படுத்தால் நல்லது என்கிறது வாஸ்து, மருமகனுக்கு நல்லதா அல்லது மாமனாருக்கு நல்லதா என்பதுதான் தெரியவில்லை. CMDA அப்ரூவல் இருக்கிறதோ இல்லையோ வாஸ்து அப்ரூவ்டு என்பதை விளம்பரத்தில் குறிப்பிட மறப்பதில்லை கட்டுமான நிறுவனங்கள்.

இன்னும் நியூமராலஜி, நேமாலஜி, ஜெம்மாலஜி, ப்ரோனாலஜி என ஏகப்பட்ட ‘ஜி’க்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

பலன் பார்ப்பதன் அடுத்த நிலை பரிகாரம். எல்லா துன்பங்களுக்கும் பரிகாரம் வந்துவிட்டது இப்போது. துர்கையம்மனுக்கு நெய் விளக்கேற்றுவதில் தொடங்கி கைலாஷ்நாத் யாத்திரை வரை சகட்டுமேனிக்கு பரிகாரங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. கண்வலி காதுவலி உள்ளிட்ட பல வியாதிகளை குணப்படுத்த தனித்தனியே கோயில்கள் இருப்பதாக  தொடர் (கதை!) ஒன்றை வெளியிட்டது குங்குமம் வார இதழ். நான் பணியாற்றும் நிறுவனத்துடன் பணி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள தொழிற்சாலையொன்றில் வியாபார மேம்பாட்டிற்காக வாஸ்து மீன்கள் வளர்க்கப்பட்டன. ஒரு தீபாவளி விடுமுறையின்போது கவனிப்பாரின்றி அவை இறந்துபோயின. வியாபரத்தை காப்பாற்ற மீனைப் படைத்த வாஸ்து பகவான் மீனை கைவிட்டது துரதிருஷ்டமே (மீனின் விலை இருபதாயிரமாக்கும் ).மேலும்   பெயரை மாற்றினால் வாழ்வின் பல துன்பங்களை வராமல் செய்யலாமாம். முன்பே தெரிந்திருந்தால் மூன்று வயதிலேயே இறந்துபோன எங்கள் வீட்டு நாயின் பெயரை மாற்றி வைத்திருந்திருக்க்கலாம்.

எதிரில் இருப்பவர்கள் சொல்வதை கனிவுடன் கேட்பது, நம்பிக்கை அளிக்கும்படி பேசுவது என்பன போன்ற எளிமையான வழிகள் மூலம் ஜோதிடத்தை ஒரு பணம் கொழிக்கும் தொழிலாக மாற்றியிருக்கிறார்கள். தொலைபேசி வழியே ஜோதிட ஆலோசனை வழங்கும் மும்பை நிறுவனமொன்று கூடுதலாக ஐந்நூறு ஜோதிடர்களை பணியமர்த்தப்போவதாக அறிவித்திருக்கிறது. ஈ எறும்புக்கு கூட தீங்கு நினைக்காத சாமானியர்கள் முதல் படுகொலைகளையே மூலதனமாகக் கொண்ட இலங்கை அதிபர் வரை எல்லோருமே ஜோதிடப் பித்தில் ஒன்றுபடுகிறார்கள். நல்ல விளக்கு ஏற்றுவது திருவிழாவுக்கு மட்டும் கோயிலுக்குப் போவது போன்ற பழக்கங்களைத் தாண்டி இப்போது அன்றாடப் பூஜைகளும்   ஆன்மீகப்பயணங்களும் பரவலாகியிருக்கின்றன. இது நிச்சயம் ஒரு கவலை கொள்ளத்தக்க பிரச்சினையே. ஏனெனில் இந்த முட்டாள்த்தனங்களுக்கு இரையாபவர்கள் பெரும்பாலானவர்கள் உழைப்பின் மீது நம்பிக்கையில்லாதவர்கள் அல்ல. மாறாக தங்கள் உழைப்பின் பலன் வேறொரு சக்தியால் வந்தது என நம்பவைக்கப்பட்டவர்கள்.

கொஞ்சம் சொறி, கொஞ்சம் சிரங்கு ஆகியவை உடனடியாக குணப்படுத்தப்படவேண்டும் இல்லாவிட்டால் அவை பெரிதாகி மோசமான விளைவுகளை உண்டாக்கக்கூடும், அதுபோலவே உடனடியாக சரிசெய்யப்படவேண்டியதுதான் கொஞ்சமாக இருக்கும் பக்தியும்  ஜோதிட நம்பிக்கையும். ஏனெனில் வெற்றியை அடைவது உங்கள் உழைப்பாலும் தோல்வியை எதிர்கொள்வது உங்கள் சுற்றதவர்களின் அன்பிலும் மட்டும்தான் சாத்தியம்.  தவிர்க்க முடியாத பேருந்துப் பயணத்தில் விஜயகாந்த் படம் ஒளிபரப்பாவது போன்ற கடினமான சூழ்நிலைகளில் வாழ்வின் மீது அவநம்பிக்கை ஏற்படுவது இயற்கையே. அந்த மாதிரியான சந்தர்பங்களில் உங்களிடம் மட்டும் விதி விளையாடுவதாக எண்ணாதீர்கள். மாறாக உங்கள் துன்பத்தை பகிர்ந்துகொள்ள இன்னும் ஐம்பதுபேர் இருக்கிறார்கள் என தைரியப்படுத்திக்கொள்ளுங்கள்!!

Advertisements

“எல்லா ராசிக்காரர்களுக்கும் பொதுவான பலன் ஒன்று உண்டு.” இல் 4 கருத்துகள் உள்ளன

 1. //your writing quality is becoming low, I think you must be busy//

  எழுத்தின் தரம் குறைவது குறித்து சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. காரணம், சரக்கு தீர்ந்துவிட்டதா அல்லது எனது அலட்சியமா என்பது இனி வரும் பதிவுகளில் தெரிந்துவிடும். மற்றபடி நான் பிஸி எல்லாம் இல்லை, அதனால் நேரத்தின் மீது நான் பழி போட முடியாது.

  (அடுத்த பதிவுகளிலும் தரம் குறித்த கருத்துக்களை தெரிவிப்பீர்களேயானால் இன்னும் உதவியாக இருக்கும்.)

 2. உங்கள் கட்டுரையின் நகைச்சுவைத் தொனியை நன்கு ரசித்தேன். வெளிநாடுகளிலும் Paranormal activities என்று கேமராக்களை பாழுடைந்த வீடுகளில் வைத்து ஆவிகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

  போன வருடம் ஒரு இங்கிலீஷ் சன்னியாசி, ஹரேராமா வகையாக இருக்கலாம், வாஷிங்டன் White House ன் முன் ஒரு 6.5 அடி உயர கம்பை தரையில் 30 டிகிரி சாய்வாக நிற்க வைத்து கையில் பிடித்தபடி அதன் மேல் முனையின் அருகே அந்தரத்தில் சப்பணமிட்டு உட்கார்ந்திருந்தார். கீழே ஒரு பிடிமானமும் இல்லை. இது மாயஜால வித்தை அல்ல. யோகப் பயிற்சி என விளக்குகிறார்.

  ஜோதிடம் உண்மையா பொய்யா, அறிவியலா அல்லது அறியாமையா என்று பதிலிறுப்பது இன்னும் கடினமான ஒன்றுதான். உதாரணமாக என் அப்பாவின் ஜாதகக் கட்டத்தை பார்த்த ஜோதிடர் என் அப்பாவுடன் கூடப் பிறந்த ஆண்கள் 6 பெண்கள் 4, அதில் ஒரு பெண் நடுவில் இறந்துவிட்டது என்று சாதாரணமாக சொல்லிக் கொண்டு போகிறார். என் அப்பா ஆமா, என்று தலையசைக்கிறாரா.. இல்லை மறுக்கிறாரா என்று கூட ஏறெடுத்துப் பார்க்கவில்லை. மிகச் சரியாக சொல்லிய இந்த ஜோதிடரை நான் எப்படிப் புரிந்து கொள்வது? ஏமாற்றுக் காரரென்றா ?

  அது பூமியை மையமாகக் கொண்டு கோள்கள் சுற்றுவதை கணக்கடிப்படையாகக் கொண்டுள்ளது, அதனால் அதன் ஆரம்பமே தவறு என்று வாதிடுபவர்கள் உண்டு. அது கோள்களுக்கிடைப்பட்ட தூர வித்தியாசங்களையே கணக்கில் கொள்வதால் தோற்றப் பார்வையில் தெரிவது போல கணக்கு சரியே. உதாரணமாக பூமியை மையமாகக் கொண்டவனைப் பொறுத்தவரை சூரியன் மறைவது முதல் மீண்டும் வருவதற்கு பனிரெண்டு நேரமாகும். சூரியனை மையமாகக் கொண்ட கணக்கில் அது பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள்ளும் அரை நாள் நேரமாகும். இது குறைந்த பட்சம் ஒரு குத்துமதிப்பு கணக்காகவாகவது இருக்கிறது. இதை போலி அறிவியல் என்று கூறலாம். ஆனால் பொய்யானது என்று கூற எனக்கு தயக்கமாக உள்ளது.

  ஆனால் அதே நேரத்தில் அதனை வைத்து தலையில் மொளகா அரைக்கும் பத்திரிகைகள் முதல் ஜோதிடப் பரிகார ரிப்பேர் ஆசாமிகள் வரை இதை வியாபாரமாக்கி மக்கள் வாழ்வை பாழாக்குவதை பார்க்கும் போது இது அறிவியல் தான் என்று என்றாவது, யாராவது ராமானுஜன் கண்டுபிடித்து சொன்னாலன்றி இதை நம்ப வேண்டாம் என்றுதான் படுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s