புவிவெப்பமயமாதல். 2 – இந்தியாவின் நிலை என்ன ??

இந்தியா, கால்நடைகள்

Advertisements

இந்தியா ஒரு சிக்கலான பிரதேசம். உலகின் நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ள இந்த நாடு மக்கள்தொகையில் 17 சதவிகிதத்தை கொண்டிருக்கிறது.  உலகின் 15 சதம் கால்நடைகள் இந்தியாவில் இருக்கின்றன,  மேய்ச்சல் நிலத்தில் அரை சதவீதம் மட்டுமே இங்கு உள்ளது. இந்தியாவில் 70 சதவிகிதம் மக்கள் இன்னமும் விறகு அடுப்பில்தான் சமையல் செய்கிறார்கள், நம் நாட்டின் கரியமிலவாயு வெளியேற்றத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் கார்பன் வெளியேற்றத்தின் பழியை இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் மீது சுமத்த முடியாது. கார்பன் வெளியேற்றத்தின் அடிப்படைக் காரணம் மனிதனின் அதீதமான நுகர்வும் பேராசையுமே. நம் நாட்டில் மக்களில் பாதிபேருக்கு மூன்றாவது வேளை உணவு கிடையாது, இவர்களை எப்படி அதிகம் நுகர்பவர் என்றும் பேராசைக்காரர்கள் என்றும் சொல்லமுடியும்? எனவே இந்தியாவின் கரியமிலவாயு வெளியேற்றத்தினை கட்டுப்படுத்துவது நமது அரசின் கையில்தான் இருக்கிறது.

இந்திய அரசை குறை சொல்லாமல் உன்னால் எதையும் எழுதமுடியாதா எனறு கேட்காதீர்கள். இந்த பிரச்சனையில் அரசினால் மட்டுமே பலன் தரக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும். இந்தியாவில் உள்ள நிலப்பரப்பில் பதினோரு சதம் மட்டுமே இப்போது காடுகளாக உள்ளன. அவையும் மிகவேகமாக அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. காடுகளை அழிப்பதில் வனக்கொள்ளையர்களுக்கு இணையான பங்கு சுரங்க நிறுவனங்களுக்கு உண்டு. பெரும்பான்மையான கனிம நிறுவனங்கள் காடுகளை அழித்துத்தான் தங்கள் கனிமங்களை எடுக்கின்றன. புதிய தொழிற்சாலைத் திட்டங்களும் வனப்பகுதிகளை இலக்கு வைத்தே திட்டமிடப்பட்டிருக்கின்றன. திருவண்ணாமலை முதல் ஜார்கண்ட் வரை இதுதான் நிலைமை.

புவி வெப்பமயமாவதற்கு நகரங்கள் வளர்வது இன்னுமொரு முக்கியமான காரணம். கிராமப்புற மக்கள் பெரும்பான்மையானவர்கள் நகரங்களை நோக்கி ஓடும் நிலைக்கு நீண்ட காலமா தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கிராம வாழ்வு இன்றைய சூழ்நிலையில் நிலையான வருமானமோ நியாயமான வருமானமோ இல்லாதது. பாசனமும் கிடையாது மின்சாரமும் கிடையாது என்பதுதான் காவிரி டெல்டாவின் தலையெழுத்து. எல்லா விவசாயம் சார்ந்த பகுதிகளும் இப்படியான புறக்கணிப்பிற்கு ஆளானவைதான். போதாதென்று சிறப்பு பொருளாதார மண்டலங்கள் யாவும் விவசாய நிலங்களிலேயே அமைக்கப்படுகின்றன. இப்படி வாழ்வாதாரம் பிடுங்கப்படும் விவசாயிகளும் விவசாயக்கூலித் தொழிலாளர்களும் நகரங்களுக்கு போகாமல் வேறு என்ன செய்வார்கள்?.

நகரங்கள் வளர்வது சுற்றுச்சூழலுக்கு நிச்சயமாக எதிரானது. ஒரு லட்சம் மக்கள் நூறு கிராமங்களில் வசிக்கும்போது கழிவு நீரகற்றுவது எனும் துறையே தேவைப்படாது. அதே எண்ணிக்கையினாலான மக்கள்  நகரங்களுக்கு இடம்பெயர்ந்தால் அவர்களுக்குத் தேவைப்படும் கட்டுமானங்களையும் இதர தேவைகளையும் கணக்கிட்டுப்பாருங்கள். தஞ்சாவூரிலும் மதுரையிலும் மழை நன்றாக பெய்யும் வருடங்களில் திருப்பூரில் பல தொழிலாளர்கள் ஊருக்குப்போய்விடுவார்கள். விவசாயப்பணிகள் நடக்கும் நாட்களில் திருப்பூரில் பணியாளர் பற்றாக்குறை ஏற்படுவதை இன்றைக்கும் நாங்கள் சந்திக்கிறோம். ஆக விவசாயத்தை மக்கள் கைவிட விரும்புவதில்லை என்பதையும் பல புறக்காரணிகளே அந்நிலைக்கு மக்களை தள்ளுகின்றன என்பதை அறிய இந்த ஒரு உதாரணமே போதும். சென்னையின் மக்கள்தொகை நாற்பது லட்சமாக இருந்தால் இத்தனை மேம்பாலங்களும் பறக்கின்ற அல்லது பறக்காத ரயில்வே திட்டங்களும் தேவைப்பட்டிருக்காது.

புதிய கட்டுமானங்கள்தான் நாட்டின் வளர்ச்சி எனும் கருத்து பரவலாக நிலவுகிறது. அரசுகளும் பொருளாதாரம் பலவீனமடையும்போது பெரும் நிதியை கட்டுமானங்களுக்கே செலவிடுகிறது. அதாவது கட்டுமானங்கள் நடக்கும்போது அதனுடன் தொடர்புடைய பல துறைகள் வளரும் என்பது வெளியே சொல்லப்படும் காரணம். உண்மையில் பொருளாதாரம் சரிவடையும்போது அரசை கட்டுப்படுத்தும் பெருநிறுவனங்களுக்கு ஏற்படும் லாப இழப்பை சரிசெய்யவே இந்த நிதி செலவிடப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் கட்டுமானங்கள் மீது கவனம் செலுத்தக் காரணம் அதில் கிடைக்கும் அபரிமிதமான லஞ்சம். கட்டுமானத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் குறைந்தபட்சம் பதினைந்து சதவிகிதம் கமிஷன் ஆள்பவர்களுக்கு கிடைக்கிறது. ஒரு அணை கட்டுவதைவிட அதிக பலனை பல சிறு நீர்தேக்கங்களை உருவாக்குவதன் மூலமோ அல்லது ஏற்கனவே உள்ள நீர்நிலைகளை பராமரிப்பதன் மூலமோ அடையமுடியும். ஆனால் ஆட்சியாளர்களுக்கு “வேண்டிய” பலனை ஒரு அணைக்கட்டின் அளவுக்கு உருப்படியான ஒரு திட்டத்தால் தரமுடியாது.

மணல், சிமெண்ட், மரம் என கட்டுமானங்களுக்கு தேவைப்படும்  எல்லா பொருட்களும் இயற்கையை அழித்துத்தான் பெறப்படுகின்றன. நேர்மையாக சொல்வதானால் இயற்கையின் பெரிய எதிரி பெரிய அளவிலான கட்டுமானங்கள்தான்.( அபுதாபியில் நடக்கும் ஒரு ஓட்டல் கட்டுமானத்திற்கு குளியலறைகள் முழுமையாக வெளிநாடுகளில் கட்டப்பட்டு இறக்குமதி செய்யப்படுகிறது. காரணம் மிக அல்பமானது, கட்டிடம் கட்டுவதில் மூன்று மாதங்களை இதன் மூலம் மிச்சம் செய்யமுடியும்  அவ்வளவுதான்).  இனிவரும் ஆண்டுகளில் சுரங்கப் பணிகளால் இந்தியாவில் ஏற்படும் வனப்பகுதி இழப்புகளை ஈடுகட்ட இருபது லட்சம் மரங்களை வளர்க்கவேண்டும். சொன்னது அருந்ததி ராயோ மேதா பட்கரோ இல்லை, இந்திய தொழில் துறையின் நீண்டகால கடவுளான ரத்தன் டாடா. அதாவது அவரும் அவர் பங்காளிகளும் காட்டை அழிக்கும் வேலையை செய்வார்கள், போகிற போக்கில் “அப்படியே ஒரு இருபது லட்சம் மரம் நடனும்.. மறந்துடாதீங்க” என்று நமக்கு நினைவுபடுத்திவிட்டுப் போவார்கள்.

கட்டுமானத்திற்கு அடுத்த பெரும் சிக்கல் போக்குவரத்து. பெட்ரோலியப் பொருட்களின் உபயோகத்தை குறைக்க வேண்டுமானால்  சாத்தியப்படும் இடங்களில் எல்லாம் போக்குவரத்து தவிர்க்கப்படவேண்டும். ஆனால் நம் நாட்டில் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவது எனும் பழக்கம் ஊக்குவிக்கப்படுவதில்லை. மோசமான உள்ளூர் போக்குவரத்து காரணமாக நகரங்களில் உள்ள மக்கள் பலர் இரு சக்கர வாகனங்கள் வாங்கும் கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். ஒரு மனிதனின் கவுரவம் அவன் வாங்கும் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் இருப்பதாக விளம்பரங்கள் தினந்தோறும் பிரச்சாரம் செய்கின்றன. கார் விற்பனை அதிகமாகிறது எனவே பொருளாதாரம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுகிறது என அரைவேக்காடு பொருளாதார நிபுணர்கள் மீடியாக்களில் பெருமிதப்படுகிறார்கள் (அப்படியானால் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை ஏன் உயர்கிறது என்ற் கேட்டால் அவர்களிடம் பதில் இருக்காது). ஒரு கார் வாங்குவது எனும் கனவு அனேகமாக எல்லா இளைஞர்களிடமும் திணிக்கப்பட்டிருக்கிறது.

ஹைட்ரோகார்பன் பயன்பாட்டை கணிசமாக குறைக்கவேண்டுமானால் வாகனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஆனால் நம் நாட்டில் அதற்கான அறிகுறிகள் கொஞ்சமும் தென்படவில்லை. திருப்பூரில் எந்த ஒரு பிரதான சாலையிலும் நடைமேடை கிடையாது. இங்கே குமரன் சாலையில் நீங்கள் பகல்வேளையில் நடக்க விரும்பினால் ஒரு ஜிம்னாஸ்டிக் வீரனின் லாவகம் தேவைப்படும். போதிய அளவு பேருந்துகளும் நகரில் இயக்கப்படுவதில்லை. இவை எல்லாமே மக்களை ஒரு சொந்த வாகனம் வாங்கும் மனநிலைக்கு  தயார்படுத்துகின்றன.

மேலே குறிப்பிட்ட எல்லா விஷயங்களையும் கட்டுப்படுத்ததுவதோ அல்லது சீர்செய்வதோ தனிப்பட்ட மக்களால் முடியாது. இது முழுமையாக ஒரு அரசினால் மட்டுமே செய்யப்படக்கூடியது. ஆனால் நமது அரசுகள் சாதாரண மக்களைப்பற்றி எப்போது கவலைப்படுபவை அல்ல. பொதுமக்களில் கணிசமானோர் பாதிக்கப்படப்போகும் ஒரு பிரச்சனையில் கொஞ்சமும் அக்கறையில்லாமல் இருக்கிற ஒரு நிர்வாகம்தான் மத்தியில் இருக்கிறது. கோபன் ஹேகன் மாநாட்டுக்கு முன்பு, தொழில்துறையை பாதிக்கும் எந்த ஒரு தீர்வையும் ஏற்கமாட்டோம் என்றது மத்திய அரசு. எந்த ஒரு நடவடிக்கையும் ஏதேனும் ஒரு  தரப்பை பாதிக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒரு உண்மை. மக்களா முதலாளிகளா எனும் நிலையில் அரசு எப்போதும் நம் பக்கம் இருக்காது என்பதைத்தான் இவர்கள் வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள்.

வெப்பவாயு வெளியேற்றத்தால் இமயமலை பனி அடுக்குகளுக்கு பாதிப்பில்லை என்று சொன்ன ஜெயராம் ரமேஷ் மக்களை மாட்டுக்கறி சாப்பிடாதீர்கள் என்கிறார். எத்தனை திமிரான நயவஞ்சகமான வார்த்தைகள் இவை ? மாட்டுக்கறியை தவிர்ப்பதன் மூலம் ஒரு மிகக்குறைவான அளவு புவிவெப்பமயமாதலை நாம் கட்டுப்படுத்த முடியும் என்பது உண்மைதான். குலோபல் வார்மிங்கின் முக்கியமான காரணங்களை மறைத்துவிட்டு நாம் எப்போதாவது சாப்பிடும் மாட்டுக்கறியை நிறுத்தச்சொல்லும் ஒருவர்தான் நம் சுற்றுசூழல் துறையின் அமைச்சர். எத்தனை பெருமைக்குரிய தேர்வு.. மாநில அரசைப் பற்றி சொல்லவே வேண்டாம். பூமி சூடானால் அழகிரிக்கு வயிற்றுப்போக்கு வந்துவிடும் என்று சொன்னாலன்றி நம் முதல்வர் இது பற்றி  கவலைப்படமாட்டார். மற்றபடி, எல்லாம் முடிந்த பிறகு முடிந்த பிறகு ஒப்பாரி வைத்து மிச்சமிருப்பவனின் உயிரை வாங்குவதுதான் அவரது பாணி.

சரி, அரசும் மக்களும் இந்த விசயத்தில் என்ன செய்ய முடியும் ?

One thought on “புவிவெப்பமயமாதல். 2 – இந்தியாவின் நிலை என்ன ??”

 1. மிகவும் தாமதமான பின்னூட்டம் என நினைக்கிறேன், மன்னிக்கவும்,

  நன்றாக சொன்னீர்கள் வில்லவன் .
  ஆனால் நாம் நினைப்பது போல அரசு எப்பொழுதுமே இருந்து இல்லை இனி வரும் அரசைப் பற்றி கனவு காணவும் முடியாது கலாம் கூறுவதை போல(!).
  ஆனால் இது போன்ற தருணத்தில் , தனி நபர் கண்ணோட்டமும் தேவைப் படுகிறது.
  எடுத்துகாட்டாக , முள்ளுக்குறிச்சி அருகே பொதுமக்களே மலையைக் குடைந்து சாலை போட எத்தனித்தனர் அனால் அரசு அவர்களை கைது செய்தது ஆனால் சிறுது காலத்திற்கு பிறகே அரசே சாலை அமைத்தது.
  நமது பிற்க்கால மக்களுக்காக இதை போன்ற செயல்களை நேம் துவங்கினால் என்ன ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s