ஒரு சாட்சியின் சங்கடங்கள் கேளீர்…


(குறிப்பு : இது எந்த பொதுப் பிரச்சினை பற்றிய பதிவும் அல்ல )

திருப்பூருக்கு வந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நானும் என் நண்பர்கள் இருவரும் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்தோம். மேன்ஷன் அறைகளின் உள்ள சகல சிரமங்களையும் அனுபவித்துவிட்ட காரணத்தால்  ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும் முடிவுதான் அது. மாதம் இருபதுவேளை  பட்டினி, இருபது வேளை பரோட்டா எனும் உணவு முறை போதுமான உடல் உபாதைகளை எங்களுக்கு உண்டாக்கிவிட்டிருந்தது. விட்டால் சம்பளத்தை மொத்தமாக மருத்துவமனைக்கு ஈ டிரான்ஸ்பர் செய்யும்படியாகிவிடுமோ என அஞ்சும்படியிருந்தது எங்களின் நிலைமை. எனவே உடல் நலம் கருதியேனும் நாங்கள் வீடு ஒன்றில் குடியேறும் அவசியம் ஏற்பட்டது ( அதிகபட்ச இலக்கு சொந்தமாக சமையல் செய்து சாப்பிடுவது குறைந்த பட்சம் வெந்நீராவது வைப்பது ஆகியன எங்கள் திட்டமாக இருந்தது ). வருபவர்கள் எல்லோரையும் நோயாளியாக்கும் ஊர் என்பதால் எங்களது இந்தத் திட்டம் மருத்துவர்களின் வருமானத்தை பாதிக்குமோ என்ற குற்ற உணர்வுக்கும் தேவையில்லாமல் போனது.

போணியாகாத வீடுகளை மட்டும் பிரம்மச்சாரிகளுக்கு தரும் வழக்கத்துக்கு திருப்பூரும் விதிவிலக்கல்ல. எனினும் எங்களுக்கு ஒரு உருப்படியான வீடு கிடைத்தது அல்லது அப்படி நாங்கள் கருதும்படிக்கு ஒரு வீடு கிடைத்தது. வீட்டு உரிமையாளர் வெளியூரில் வசிப்பதைவிட  பெரிய சவுகரியம் ஒரு வாடகைக்காரனுக்கு இருக்கமுடியும் என நான் கருதவில்லை. ஒரு PWD இளநிலை பொறியாளருக்கான அபரிமிதமான வருமானம் அவ்வீட்டில் தெரிந்தது. இருபதாயிரம் சதுர அடி நிலப்பரப்பு அதில் நான்காயிரம் சதுர அடி கட்டிடம் என யோக்கியமான அரசு ஊழியரால் கற்பனை மட்டுமே செய்யக்கூடிய சொத்து அது ( கோடி ரூபாய்க்கு குறையாத மதிப்புடையது அவ்வீடும் நிலமும் ). நான்கு போர்ஷன்கள் உள்ள வீட்டில் இரண்டில் பிரம்மச்சாரிகள் இருந்தோம், மீதி இரு வீடுகள் ஆறு மாதங்கள் காலியாக இருந்தன. வீட்டை பார்க்க வரும் குடும்பஸ்தர்கள் பேச்சுலர்கள் குடியிருக்கும் வளாகமா என திரும்பிப் பார்க்காமலோ அல்லது திரும்பிப்பார்த்துவிட்டோ வெளியேறினார்கள்.

இந்த கூடுதல் வாய்ப்பால் எங்கள் ராஜ்ஜியம் அந்த வளாகத்தில் சிறப்பாகவே தொடர்ந்தது. நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு ஒரு குடும்பம் அவ்வளாகத்தின் கீழ் வீட்டுக்கு குடிவந்தது. அளவோடு வரும் நல்ல தண்ணீருக்கு வந்ததடா ஆபத்து என நாங்கள் கவலைப்பட்ட வேளையில் அந்த எண்ணத்தை அனாவசியமாக்கியது அக்குடும்பம். நல்ல தண்ணீருக்கும் உப்புத்தண்ணீருக்கும் வித்தியாசம் பார்க்காத, வாசலில் கோலம் போடாத, பக்கத்து மளிகைக்கடையில் பொருள் வாங்காத ஒரு அதிசயக் குடும்பத்தை எங்கள் வாழ்நாளில் அப்போதுதான் பார்த்தோம்.  அப்படி ஆச்சர்யப்படுவதற்கான சூழ்நிலை மூன்று மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. என்ன கீழ் வீடு பூட்டியே இருக்கு என்று நாங்கள் பேசிக்கொண்ட போது இரண்டு மாதங்கள் ஆகிவிட்டிருந்தது. தொடர்ந்து இடையூறு இல்லாமல் தண்ணீர் கிடைக்கும் என்பதால் அவர்களது பூட்டிய வீடு  எங்களை கவலையை தள்ளிப்போட்டது. அறை நண்பர்களில் ஒருவரேனும் பூர்வ ஜென்மத்தில் பல தான தர்மங்களை செய்திருக்காவிட்டால் இந்த அதிருஷ்டம் சாத்தியமில்லை என எங்களை பார்க்க வந்த நண்பர்கள் சொன்னார்கள்.

பிறகுதான் இந்த கதையின் மோசமான சம்பவங்கள் நடந்தேறின, போகட்டும் அவ்வாறு நடந்திருக்காவிடில் நான் இப்போது என்.டி. திவாரி பற்றித்தான் பதிவிட வேண்டியதிருந்திருக்கும். 2007 ஜனவரி இறுதியில் ஒருநாள் ஒட்ட முடி வெட்டப்பட்ட விஜய் படத்து வில்லன்களைப்போல தடி தடியாய் சிலர் எங்கள் வீட்டு வளாகத்தில் வாயிலில் நின்றிருந்தார்கள். தங்களை போலீசார் என அதட்டலாக அறிமுகம் செய்து கொண்டார்கள், அன்றைய அவர்களது விசாரணை வீடு எதுவும் காலியாக இருக்கிறதா எனும் அளவுக்கே இருந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு இரவு பதினோரு மணிக்கு சேவூர் காவல்நிலையத்திலிருந்து ஆய்வாளர் தலைமையில் ஒரு குழு  எங்கள் வீட்டுக்கு வந்து விசாரிக்க வேண்டும் என்றார்கள். விசாரணையில் எங்கள் கீழ்வீட்டில் குடியிருந்த குடும்பத்தைப் பற்றி பல அதிசயிக்கத்தக்க தகவல்கள் தரப்பட்டது.

அதாவது எங்கள் கீழ் வீட்டில் குடியிருந்தது ஒரு விபச்சார புரோக்கரும் அவரது தொழில் குடும்பமும். குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு தொழில் நடத்தினால் அது குடும்பத்தொழில், தொழில் நடத்துபவர்கள் ஒரு குடும்பமாக இருந்தால் அதை தொழில் குடும்பம் என்று சொல்லலாம் இல்லையா ? அது கிடக்கட்டும், அந்தப்படுபாவி உலகின் ஆதித் தொழிலான  விபச்சாரத்தோடு நிறுத்தித் தொலைத்திருந்தால் எங்கள் கவுரவம் காப்பாற்றப்பட்டிருக்கும். துரதிருஷ்டவசமாக அந்த ஆள் தங்கள் வசமிருந்த ஒரு பெண்ணை கொலை வேறு செய்துவைத்ததுதான் எங்களுக்கு வினையாகிப்போனது. சேவூர் சாலையில் தலை நசுங்கி பிணமாகக் கிடந்த ஒரு இளம் பெண்ணின் கொலை வழக்கின் விசாரணை எங்கள் வளாக வாசலில் போலீஸ் ஜீப்பை நிறுத்துமளவு முன்னேறியிருந்தது. கொலையான அப்பெண் எங்கள் வளாகத்தில் இருந்தவர் என்பதும் அவரை கொலை செய்தது எங்கள் கீழ்வீட்டுத் “தொழிலதிபர்” என்பதும் போலீசாரது இரு மாத கால விசாரணையின் கண்டுபிடிப்புக்கள்.
இதன்பிறகு விசாரணை எங்களிடம் துவங்கியது. ஆய்வாளரின் முதல் எச்சரிக்கையே கடுமையாக இருந்தது, நீங்கள் மிக சிக்கலான பிரச்சனையில் சிக்கியிருக்கிறீர்கள் என்றார். அனேகமாக அதன் காரணம் நாங்கள் அந்த விசாரணையை மிக இயல்பாக பயமில்லாமல் எதிர்கொண்டதால் இருக்கலாம். அடுத்த கேள்வி இத்தனை மர்மமான நடவடிக்கை கொண்ட ஒரு குடும்பத்தை எப்படி சந்தேகப்படாமல் இருந்தீர்கள் என்பது. இந்தக் கேள்வியை திருப்பூரின் பெரும்பான்மை மக்களிடம் கேட்க முடியாது அதிலும் குறிப்பாக பிரம்மச்சாரிகளிடம்.இங்கு வேலை செய்யும் எல்லோரும் குறைந்தபட்சம் பதினைந்து மணி நேரம் வீட்டில் இருக்கமுடியாது. குளிக்கவும் தூங்கவும்தான் பலர் வீட்டை பயன்படுத்துகிறார்கள். இங்கே வீட்டில் இருப்பவர்களை கண்காணிக்கவே நேரமிருக்காது, இந்த அழகில் அடுத்தவீட்டுக்காரனை எங்கிருந்து கண்காணிப்பது ?
இரண்டாவது கேள்வி, அவ்வீட்டில் “இளம் பெண்களை நீங்கள் பார்த்ததில்லையா?” அதை வேறு வேறு ஒலி அளவுகளிலும் வெவ்வேறு வாசகங்களாலும் கேட்டார்கள். கேள்வியின் மறை பொருள் இதுதான் ” கீழ் வீட்டில் கருவாடு இருக்கையில் மாடியில் உள்ள பூனைகள் எப்படி சும்மா இருந்திருக்க முடியும் ? “. அடப்பாவிகளா எத்தனை பெரிய சந்தேகம், எத்தனை மோசமான குற்றச்சாட்டு ? சீதாபிராட்டி அயோத்தி மக்களிடம் தன் கற்பை நிரூபிக்கும் சூழல் வந்ததைப்போல எங்களுக்கு சேவூர் காவலர்களிடம் கற்பை நிரூபிக்கும் இக்கட்டு வந்ததற்காக யாரை நொந்துகொள்வது? எனினும்  நாங்கள் அவ்வப்போது தமிழ் சினிமா பார்ப்பதைத்தவிர வேறு பாவம் எதுவும் செய்யாதவர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொண்டமையால் அக்கேள்வியை பிந்தைய விசாரணைகளில் அவர்கள் கேட்கவில்லை. அதனால் (சத்தியம் செய்ய ஏதுவாக) பக்கத்து கடையில் கற்பூரம் வாங்கி வரும் செலவு எங்களுக்கு மிச்சமானது.
இருந்தாலும் எங்களுக்கான சோதனைகள் மட்டும் நின்றபாடில்லை. நான் மட்டும் தீவிர இலக்கியவாதியாக இருந்திருந்தால் ” எல்லையற்ற பெருவெளியில் பின்தொடரும் பேயைப்போல ”  என என் அனுபவத்தை ஒரு நாவலாகவே எழுதியிருப்பேன் என்றால் அது மிகையல்ல!!!
( நள்ளிரவு காவல் நிலைய அனுபவம், CBCID விசாரணை மற்றும் செசன்ஸ் கோர்ட் அனுபவங்கள் அடுத்த பதிவில் )
Advertisements

“ஒரு சாட்சியின் சங்கடங்கள் கேளீர்…” இல் 4 கருத்துகள் உள்ளன

  1. திரு வினோத்,

    திருப்பூரைப்பற்றி அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரவேண்டாம். குறிப்பிட்ட “அந்த ” தொழிலானது எல்லா ஊர்களிலும் நடப்பதுதான். பதிவில் குறிப்பிட்ட அந்த தொழிலதிபரும் பல ஊர்களிலும் கிளைகள் வைத்திருந்ததாக காவலர்கள் விசாரணையின்போது குறிப்பிட்டார்கள்.

    மற்றபடி திருப்பூரைப்பற்றி குறிப்பிட ஏராளமான நல்ல செய்திகளும் இருக்கின்றன. ( முடிந்தால் மற்றொரு சந்தர்பத்தில் எழுதுகிறேன் )

    எங்களையும் மதித்து பரிதாபப்பட்டதற்கு நன்றி!!!!!!!!!!!.

  2. சிலகாலம் உங்கள் பதில் இல்லாமல் குழம்பிப்போயிருந்தேன்.

    ஆகவே பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. ( நீங்கள் “பதிவு சகிக்கவில்லை” என்று சொல்லியிருந்தாலும் இதே அளவு மகிழ்ந்திருப்பேனாக்கும் !! )

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s