முத்துக் குமார்- இறப்பினில் பிறந்தான்., இனத்தையே உயிர்த்தெழவைத்தான்.


தமிழினத்தின் சமீபகால வரலாறு அத்துணை சிறப்பானதல்ல. சில பத்தாண்டுகளாக அதன் பக்கங்கள் துரோகங்களாலும் இழப்புகளாலும் நிறைந்திருந்தது குறிப்பாக ஈழ விவகாரங்களில். அன்று மக்கள் அறிந்த தலைமைகளில் ஒரு பிரிவு ரத்தத்தை சுவைத்துக்கொண்டிருந்தது மற்றோர் கூட்டமோ கண்ணீரை அறுவடை செய்யக்காத்திருந்தது. சிறிய அளவு போராட்டங்களைக்கூட ஒடுக்கும் பெரும்பணியை கருணாநிதி செய்தார். அந்த பாக்கியம் கிடைக்காததை எண்ணி புலம்பினார் ஜெயலலிதா. ஏனைய சிறு தலைவர்கள் இவ்விரண்டுபேருக்குப் பின்னால் போவதைத்தவிர வேறு மார்கமில்லை என்று யதார்த்தவாதம் பேசினார்கள்.

மக்களின் போக்கும் நம்பிக்கை அளிக்கும்படியாக இல்லை. ஒரு பெரும் மனிதப் பேரழிவு கூப்பிடு தூரத்தில் நடந்துகொண்டிருக்க நாமெல்லோரும் உச்சு கொட்டிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்க்கொண்டிருந்தோம். ஐரோப்பாவின் ஒரு மூலையில் உள்ள குருத்துவாராவில் துப்பக்கிசூடு நடந்ததற்கே பஞ்சாப் நாள் கணக்கில் முடக்கப்பட்டது. இங்கோ, ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு மீதமிருப்பவர்கள் உயிரை மட்டும் சுமந்து ஓடியபோது நாம் கருணாநிதியின் வாயைப்பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தோம்.

ஒரு நெடுந்தொடர் கதாநாயகிக்கு கிட்டும் பரிதாபமும் கவனமும் இறந்துகொண்டிருக்கும் சகோதரிகள் மீது இல்லாதுபோனதை கேவலம் என்பீர்களா இல்லை துரதிருஷ்டம் என்பீர்களா ? ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் நாம் சுயமரியாதை உள்ளவர்கள் என்பதற்கான இறுதி ஆதாரமா ? நீங்கள் காயமுற்று வீதியில் கிடக்கையில் உங்களை காப்பாற்றாமல் பிச்சையிட்டுப் போகிறவன் தன்னைக் கடவுள் என்று சொல்லிக்கொண்டால் அதை மண்டையை ஆட்டி ஏற்றுக்கொள்வீர்களா ? நாளை ஒரு வன்னித் தமிழனை சந்திக்க நேர்ந்தால் அவனுக்கு சொல்ல என்ன பதில் வைத்திருக்கிறீர்கள் ? இப்படி நமக்குள் எழும்பிய கேள்விகள் ஆயிரம். நல்ல பதில் சொல்வார்கள் என்று நம்பிய பலரும் புதிய கேள்விகளை உற்பத்தி செய்பவர்களாகத்தான் இருந்தார்கள் என்பது தமிழர்களின் தனிச்சிறப்பு கொண்ட தலைவிதி.

இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டபோது வாசலில் மெழுகுவர்த்தி ஏற்றிய மக்கள் சிலர் கொஞ்சம் பிசியாக இருந்தார்கள். அக்கறை கொண்ட மக்களில் சிலர் எல்லாவற்றையும் பிரபாகரன் பார்த்துக்கொள்வார் என்று சமாதானம் சொல்லிக்கொண்டார்கள். பெரும்பான்மை மக்களோ பதற்றத்திலும் குழப்பத்திலுமே வாழ்ந்தார்கள். யாரை நம்புவது எனும் விடைகாண முடியாத கேள்வி எல்லோர் மௌனத்தினூடேயும் எதிரொலித்தது. நம்பிக்கையளிக்கும் செய்தி ஏதும் நம்மை வந்தடையவில்லை நாமும் நம்பிக்கையளிக்கும் காரியம் எதுவும் செய்திருக்கவில்லை. ஆட்சியாளர்களும் நம்மை கையாலாகாதர்வர்கள் என்று உறுதிசெய்துவிட்டமையால் வழக்கமான பணிகளுக்குத் திரும்பும் உத்தேசத்திலிருந்தார்கள், ஒரு இளைஞன் பெட்ரோல் கேனுடன் சாஸ்திரி பவனில் நுழையும் வரை.

தற்கொலை தமிழகத்திற்கு புதிதல்ல, தினத்தந்தியின் இரண்டு பத்தி செய்தி அளவுக்கே அது தகுதியுடையது. ஆயினும் முத்துக்குமரா, உனது உயிர்தியாகம் ஆள்பவர்களுக்கு அச்சத்தையும் குறைந்தபட்ச சொரணை உள்ளவர்களுக்கு குற்ற உணர்வையும் ஒருங்கே விதைத்தது. உன் மரணச்செய்தி கிடைத்த வினாடியில் (நான் அறிந்த ) பலருக்கும் தோன்றிய உணர்வு இதுதான் ” நாம் ஏதேனும் உருப்படியாய் செய்திருந்தால் இவனை இழந்திருக்கமாட்டோம் “. ஒரு உயிரின் இழப்பு மட்டுமே தமிழர்களை துயிலெழுப்பும் எனும் உனது கணிப்பு உண்மையானது. ஆயிரமாயிரம் மரணங்களை அமைதியாகக் கடந்துபோன தமிழினத்தை ஒரு தற்கொலை கோபம்கொள்ள வைக்கும் என்று உலகம் எதிர்பார்த்திருக்காது.

தன்னெழுச்சியாக திரண்ட இளைஞர் கூட்டம் கொளத்தூரை முற்றுகையிட்டது. உன் கடிதம் கிடைத்த மக்கள் யாவரும் உறக்கம் கலைந்து எழுந்தார்கள். திமுக அதிமுக என்ற பின்புலத்துடன் மாலை சுமந்து வந்தவர்கள் பாரபட்சமில்லாமல் செருப்பு வீச்சுக்கும் கல்வீச்சுக்கும் ஆளானார்கள். வீசிய கற்களின் அடித்தளத்தில் கம்பீரமாக நின்றது தமிழனின் கவுரவம். ஒவ்வொரு தமிழனும் தன் வாழ்நாளில் காண சாத்தியமில்லாத இக்காட்சியை உன் தியாகம் உலகமே காணும்படி செய்தது.  இருபெரும் துரோகிகளில் ஒருவர் வைகோவை முன்னிருத்தி பின்வாங்கினார் இன்னொருவருக்கோ ஒளிந்துகொள்ள முதுமையையும் முதுகுவலியைத் தவிர வேறெதுவும் கிட்டவில்லை. நாற்பது எம்பி சீட்டுக்கு பயந்து மத்திய அரசின் சிவசங்கர் மேனனும் பிணம் தின்னிகள் இரண்டு நாட்கள் விரதமிருப்பார்கள் என்று அவசர அறிக்கை வாசித்தார்.

நன்றி சகோதரனே, உன் உயிர் பிச்சையில்தான் நாங்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆம் நீ உயிரை பிச்சையாக எமக்கு தந்திருக்காவிடில் எதையும் எதிக்கத்தெரியாத சவங்களாகத்தான் நாங்கள் நடமாடிக்கொண்டிருப்போம்.

நன்றி சகோதரனே,உன் உடல் கொளத்தூரில் வைக்கப்பட்டது முதல் மூலக்கொத்தளம் சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது வரையிலான மூன்று நாட்கள்தான் தமிழர்கள் தமிழர்களாக வாழ்ந்த தினங்கள்.

நன்றி சகோதரனே, நம்பிக்கை இழந்துபோயிருந்த உலகத்தமிழனுக்கும் உள்ளூர் தமிழனுக்கும் அந்த நாட்களில் உன் தியாகம்தான் முதல் வெளிச்சம்.

நன்றி சகோதரனே, ஈழ ஆதரவு இயக்கங்களில் உன் இறுதி ஊர்வலத்தைத் தவிர வேறொரு குறிப்பிடத்தக்க போராட்டம் எங்கள் வசமில்லை.

இதோ வரப்போகிறது உன் நினைவு தினம். எனினும் உனக்கு அஞ்சலி செலுத்தும் துணிவு எமக்கில்லை. என்ன தகுதியோடு நாங்கள் அதைச் செய்வது ? என் உடலை வைத்து அரசியல் செய் என இறுதிக்கடிதம் எழுதிவைத்தாய். என் மரணத்தை அரசியலாக்கு என்றாய் நீ, ஆனால் மரணத்தை அரசியலாக்கக்கூடாது என்று சொன்ன குழுவினரிடம் தோற்றோம். என்ன சொல்லி அஞ்சலி செலுத்த, தமிழகத்தின் ஈழ ஆதரவுப்போராட்டத்தில் உன்னை மிஞ்சிய போராளி இல்லை என்றா ? அல்லது இனியொரு முத்துக்குமார் உருவாதற்கான காரணங்கள் இங்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விட்டதென்றா ?

ஜெயலலிதாவா கருணாநிதியா என விவாதிக்கும் சூழல் மறைந்து மகிந்தாவா ஃபொன்சேகாவா என்று விவாதம் செய்யும் நிலைக்கு முன்னேறிய இழிநிலையைச் சொல்லி அஞ்சலி செலுத்துவதா அல்லது ஆயிரமாயிரம்பேரைக் கொன்ற பேரினவாதம் கடைசியில் பிரபாகரனின் தலையில் கோடரியை பாய்ச்சி தன் கடமையை முடித்துக்கொண்டது என்ற தகவலைச் சொல்லி அஞ்சலி செலுத்தவா ? இல்லை சோனியாவின் விசுவாசமான கையாள் கருணாநிதி இன்று தனக்குத்தானே உலகத்தமிழர்களின் ரட்சகராக பட்டம் சூட்டிக்கொண்டதையும் அவரிடம் நக்கிப்பிழைக்கும் கூட்டம் இன்று பல்கிப்பெருகிவிட்டதையும் சொல்லி அஞ்சலி செலுத்துவதா ?

நேர்மையாக சொல்வதானால், நீ உயிரைக்கொடுத்து ஏற்றிய நெருப்பை நாங்கள் உன் சிதைக்கு தீயிட்ட கணத்திலேயே ஏறத்தாழ அணைத்துவிட்டோம். ஈழப்போரின் கடைசி நாட்களில் ஐம்பதாயிரம் பேர் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதாக செய்தி வந்தது. ஈழப்போராட்டத்தைபோல நம் போராட்ட குணமும் அதன் ஆரம்பநிலைக்கே போனது. சொல்லிக்கொள்வதற்கு நல்ல செய்தி ஏதுமில்லாமல் வெறுமனே புகைப்படத்துக்கு பூத்தூவுவதில் எனக்கு சம்மதமில்லை.

ஆயினும் உனக்கும் எனக்கும் சொல்வதற்கு செய்தி ஒன்று என்னிடம் உண்டு. காலம் ஒரு தரப்புக்கு மட்டும் நம்பிக்கையளிப்பதாக எப்போதும் இருந்ததில்லை. தமிழ்நாட்டின் எதிர்ப்புணர்வு இன்னும் தொலந்துவிடவில்லை என்பது உன் இறுதி ஊர்வலத்தின்போதே நிரூபனமாகிவிட்டது. துரோகங்களையும் நயவஞ்சகங்களையும் தேவைக்கதிகமாகவே பார்த்து பயிற்சி பெற்றுவிட்டோம். எல்லா மட்டத்திலும் கைவிடப்பட்டவர்கள் இனி நமக்கான உரிமைகளை நம்மால்தான் பெற முடியும் என்ற ஞனோதத்தை பெற்றிருப்பார்கள். வன்னித் தமிழனுக்கு எதிரானவன் உள்ளூர் தமிழனை எந்தநாளும் நேசிக்கமாட்டான் என உணர்ந்திருப்பார்கள்.

ஆகவே நாங்கள் நம்புகிறோம் நண்பனே, உனக்கு அஞ்சலி செலுத்த சீக்கிரம் வருவோம். அப்போது நிச்சயம் அதற்கான தகுதியுள்ளவர்களாக நாங்கள் இருப்போம்.

Advertisements

“முத்துக் குமார்- இறப்பினில் பிறந்தான்., இனத்தையே உயிர்த்தெழவைத்தான்.” இல் 10 கருத்துகள் உள்ளன

 1. i accept every word in this article.. i can remember each and every word written by kolluvainallur muthukumar.
  how much he value thiruma .. what happend later… last year we have distributed his wish(article) to as much as we capable.. dear vills tell me what do u want us to do now?

 2. வில்லவன் என் மனம் என்னெதிரே பேசுவது போல் உணர்கிறேன் .கையலாகதனத்தால் கையை பெசைந்து கொண்டு நிற்கிறேன்

 3. என் நிலையும் உங்களைப் போன்றதுதான் baskar.

  என்ன நீங்கள் பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள், நான் பதிவெழுதியிருக்கிறேன். அது மட்டும்தான் வித்தியாசம்.

 4. முத்துக்குமாரது நினைவு நமது சமூக அக்கறையையும், செயல்பாட்டையும் முன்னேற்றுவதற்காகவாவது பயன்படட்டும். நினைவு கூர்ந்தமைக்கு நன்றி வில்லவன்

 5. //tell me what do u want us to do now?//

  தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள் வினோத்.

  முத்துக்குமார் நினைவு நாளில் அவரை நினைவுறுத்தும் ஒரு பதிவை இட வேண்டும் என்று விரும்பினேன். மேலும் வலையுலகில் முத்துக்குமாருக்கான அஞ்சலிகளிலும் எனது பங்களிப்பை தந்துவிட வேண்டும் என்றும் எண்ணியதால் இந்தப் பதிவை எழுதினேன்.

  அஞ்சலி என்பது வெறும் ஒப்பாரியாக இருந்துவிடக்கூடாது என்றும் முடிவெடுத்தமையால் எழுதப்பட்ட வாசகங்கள் அவை. மற்றபடி என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கும் விடை தெரியாத கேள்வியே.

  இப்பிரச்சனையில் வெறும் பதிவு எழுதியது மட்டும்தான் எனது பங்களிப்பு.ஆகவே இந்த கேள்விக்கு பதில் சொல்லும் தகுதி எனக்கு இன்னும் வரவில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s