நடிகர் ஜெயராம் – கருத்தை நாம் மன்னிப்போம், கல்வீச்சை அவர்கள் மறக்காதிருக்கட்டும்.


கேரள நடிகர்கள் மீது எனக்கு மிகக்குறைவான அளவுக்கேனும் மரியாதை உண்டு ( தமிழ் நடிகர்கள் மீது அதுவும் கிடையாது ). ஏனெனில் அவர்கள் ஓரளவுக்கேனும் தமிழில் பேசுவதில் அக்கறை கொண்டிருக்கிறார்கள், தொலைக் காட்சி பேட்டிகளின்போது அவர்களை இயல்பான மனிதப்பிறவிகள் என்று நம்பிவிட முடியும். மலையாளப் படங்களில் தமிழரை கேலி செய்யும் காட்சிகள் வருவதாக கேள்விப்படும் போதும் நான் கோபம் கொள்வதில்லை, காரணம் தமிழ் படங்களிலும் அதற்கு நிகரான அளவில் மலையாளிகள் கேலி செய்யப்படுகிறார்கள் குறிப்பாக கேரளப் பெண்கள்.

ஆயினும் கடந்த வாரம் நடிகர் ஜெயராம் அளித்த பேட்டி ஒன்று அவரை இப்படியான கவுரவமான நடிகர்கள் பட்டியலில் வைக்கக்கூடாது என்று சமிஞ்சை தந்திருக்கிறது. உங்கள் வீட்டு வேலைக்காரியை சைட் அடிப்பீர்களா என்ற கேள்விக்கு தன் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி என்றும் பார்க்க எருமைபோல இருப்பாள் அவளை எப்படி சைட் அடிப்பது என்றும் சொல்லியிருக்கிறார். சற்று தாமதமாக வந்த இந்த செய்தி தமிழகத்தில் ஓரளவு எதிர்ப்பை சம்பாதித்தது. குஷ்பு அளவுக்கு அதிகமான எதிர்ப்பை சம்பாதிக்கும் முன்பே ஜெயராம் மன்னிப்பு கேட்டு சிக்கலை ஓரளவு சமாளித்திருக்கிறார்.

முதலில் தனது கருத்தை ஒரு ஜோக் என்று சொன்ன நடிகர் ஜெயராம் பிறகு மன்னிப்பு கேட்டார். அவரது வீட்டு சன்னல்கள் உடைக்கப்பட்ட மறுநாள் சென்னைக்கு ஓடோடி வந்து மீண்டும் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

அவரது பேச்சில் நாம் முதலில் கவனிக்கவேண்டியது தமிழர் விரோதத்தை அல்ல. தனது வீட்டில் வேலை செய்பவரின் உருவத்தைக் குறித்து ஒரு நடிகர் பொது நிகழ்ச்சியில் பகடி செய்யும் பணத்திமிரைக் குறித்துத்தான் நாம் கவலை கொள்ளவும் கோபம் கொள்ளவும் வேண்டும். இது ஒரு சாதாரண நபரால் சாலையில் செல்லும் பெண்ணைப் பார்த்து சொல்லப்பட்டிருந்தால் அது ஈவ் டீசிங் வழக்கு போடுமளவுக்கான குற்றம். தன்னிடம் சம்பளம் வாங்கும் நபரை எத்தனை மட்ட ரகமாக வேண்டுமானாலும் கிண்டலடிக்கலாம் எனும் மேல்தட்டு சிந்தனை நிச்சயம் தண்டிக்கப்படவேண்டியது. கிண்டலடிக்கப்பட்டது தமிழ் பெண்மணியாக இருந்தாலும் சரி அல்லது ஜெயராமின் மாநிலத்து பெண்ணாக இருந்தாலும் சரி.

நல்லவேளையாக நாம் தமிழர் இயக்கத்தவர்கள் ஜெயராம் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் அஞ்சாத நடிகர்கள் வீட்டின் சன்னல்கள் உடைந்தால் மட்டும் உடனடியாக திருந்திவிடுகிறார்கள். குஷ்பு சொன்ன தமிழ் பெண்களின் கற்பு குறித்த கருத்து இப்போது முற்றிலும் மறைக்கப்பட்டுவிட்டது. அவர் இந்தியா டுடே இதழுக்களித்த பேட்டியில் சொன்ன கருத்து ஒரு சலசலப்பை மட்டுமே உருவாக்கியது. அது தொடர்பாக ஒரு மாலை நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் நாட்டில் எத்தனை பெண்கள் கற்போடு இருக்கிறார்கள் என்று வினவினார் ( பிறகு அந்த பொருளில் தான் சொல்லவில்லை என்று மறுத்தார் ) அதுதான் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியது.

இப்போது அவரது இரண்டாவது கருத்து ஊடகங்களால் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டு இந்தியா டுடேவில் சொன்ன பாதுகாப்பான உறவு குறித்த கருத்து மட்டுமே வெளியிடப்படுகிறது. இதுபோன்ற பெரிய இடங்களின் ஆதரவுதான் இவர்களை எது குறித்தும் அச்சப்படாமல் இருக்க வைக்கிறது. தான் பார்த்துப் பார்த்து கட்டிய வீடு கல்வீச்சுக்கு ஆளானால் கண்ணீர் விடும் ஜெயராம் தன் வீட்டில் உழைக்கும் பெண்ணின் தன்மானம் குறித்து கவலைப்படாதவர் என்றால் அதை அவருக்குப் புரியும்படி சொல்ல வேண்டியது  நம் கடமை. ஆகவே அதை செய்த இருபத்தியாறு பேரை பாராட்டுவோம்.

யாரேனும் ” அதற்காக வீட்டு சன்னல் கண்ணாடியை உடைப்பதா? ” என்று கேட்பார்களேயானால்  கண்டு கொள்ளாதீர்கள், யார் கண்டது அவர்களது வீட்டுப் பெண்கள் உயரதிகாரிகளால் இழிவுபடுத்தப்பட்டால் மறப்போம் மன்னிப்போம் என்று சொல்லும் பக்குவம் உடையவர்களாக அவர்கள் இருக்கக்கூடும்.

சரி பெரியதிரைக்காரரால் ஒரு பிரச்சனை என்றால் சின்னத்திரக்குள் வேறொரு தகராறு. பிரபல நெடுந்தொடர் இயக்குனர் சி.ஜே. பாஸ்கரின் தொடர்களுக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று சின்னத்திரை சங்கங்களின் ஒரு பிரிவினர் முடிவெடுத்திருக்கிறார்கள். காரணம் அவர் நடிகைகளுக்கு கொடுக்கும் பாலியல் தொந்தரவு. பாஸ்கரின் சீண்டல்கள் ‘அதிகமாகிவிட்டதால்’ அவரை டிவி உலகிலிருந்து தள்ளி வைக்கவேண்டும் என்று தயரிப்பாளர்களிடம் கோரிக்கை வைக்கப்போவதாகவும் அவ்வட்டரங்கள் சொல்லியிருக்கின்றன. இதுவரை கிசுகிசு செய்திகளாக மட்டும் இருந்தவை இப்போதுதான் செய்திகளாக டி.வி வட்டாரங்களால் தரப்படுகிறன.

பதின்நான்கு வயது பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார். அத்துமீறி நடிகைகள் அறைக்குள் பிரவேசித்தார், தன் விருப்பத்திற்கு பணியாத நடிகைகளை துன்புறுத்தும் விதமாகவும் அவமானப்படுத்தும் விதமாகவும் காட்சியமைத்தார், என்பனபோன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்படுகிறது. இவை எல்லாம் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பிருந்தே நடப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் டி.வி ஒரு கவுரவமான மீடியா எனும் பிம்பம் அவர்களாலேயே தகர்க்கப்பட்டிருக்கிறது. இதுவரை டி.வியில் நடிப்பது அலுவலகம் போவது போல ஒரு சாதாரண மற்றும் பாதுகாப்பான பணி என்று சொல்லி வந்தவர்கள் இவர்கள்.

இப்படி ஆண்டுக்கணக்காக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தவர் மீது இவ்வளவு சாவகாசமாக நடவடிக்கை எடுக்கின்றன சின்னத்திரை சங்கங்கள். அதுவும் ஒத்துழைப்பு தரமாட்டோம் எனும் படு மொக்கையான தண்டனை. என்ன அடிப்படையில் நடவடிக்கை தீர்மானிக்கப்படுகின்றன ? பத்து ஆண்டுகள் பாலியல் தொந்தரவு எக்ஸ்பீரியன்ஸ் இருந்தால்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா ? சரி இப்போது நடக்கும் அத்துமீறல்களுக்கு எப்போது நடவடிக்கை எடுப்பார்கள் ? ஏற்கனவே பாஸ்கர் மீதான குற்றச்சாட்டுக்கள் வந்தபோது அவரை தான் காப்பாற்றியதாக சொல்கிறார் சங்கத் தலைவர் விடுதலை. அப்படியானால் சங்கமும் குற்றவாளிக்கு உடந்தையாக இருந்ததா அல்லது திருந்த ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கும் அளவுக்கு பாலியல் வன்முறை டி.வி உலகில் ஒரு சாதாரண பிரச்சனையா ?

கற்பழிப்பு முயற்சி, சிறார் மீதான பாலியல் வன்முறை என்று ஏராளமான கிரிமினல் குற்றங்களை ஏதோ சங்க விதிமுறைகளை மீறிய  செயலைப் போல இவர்களே கையாள்கிறார்களே, இது (criminal negligence ) குற்றமுறு மறதி அல்லது செயல் எனும் குற்றச்சாட்டின் கீழ் வருமா வராதா ?  இனி வரும் காலங்களில் இப்படியான சம்பவங்கள் நடக்காமல் இருக்க சங்கம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது ? யோசித்தால் பைத்தியம் பிடித்துவிடும் போலிருக்கிறது.

எல்லா கேள்விகளுக்கும் ஒரே வரியில் பதில் சொல்லியிருக்கிறார் சி.ஜே.பாஸ்கர், ‘இது எங்கள் குடும்பப் பிரச்சனை. அதை நாங்களே பேசித் தீர்த்துக்கொள்வேம்’. நல்ல குடும்பம்தான்..

Advertisements

“நடிகர் ஜெயராம் – கருத்தை நாம் மன்னிப்போம், கல்வீச்சை அவர்கள் மறக்காதிருக்கட்டும்.” இல் 3 கருத்துகள் உள்ளன

 1. அன்பு வில்லவன்,
  சரியாகப் பேசியிருக்கிறீர்கள். தமிழகப் படங்களில் மலையாளிகளை காண்பிப்பதில் கூட அவர்கள் ‘அந்த’ விஷயத்தில் படு கில்லாடிகள் என்கிற ரீதியான கிண்டல்களே காணப்படும். தாராளமாக மனசிருந்தா கேரளான்னு தெரிஞ்சுக்கோ என்கிற பாடல் வரிகள் உதாரணம். இக்கிண்டல்கள் அவர்களை இழிவு படுத்தும் நோக்கில் உள்ளவையல்ல. மாறாக காமரசம் பூசுவதற்கு உபயோகப்படுத்தப்படும் காட்சியமைப்புகளாகவே இருக்கும். இந்த மாதிரியான காமெடிகளில் முடிவில் அந்த வேற்று இனத்தாரிடம் தமிழ்க் காமெடியன் அடி வாங்குவதாகவே இது பெரும்பாலும் முடியும்.

  வேறு இனம் என்கிற நோக்கில் இந்த மாதிரியான கிண்டல்கள் சகஜமாக எல்லா திரைப்படங்களிலும் உண்டு. இந்தியில் மதராஸிக்காரர்கள் காமெடியர்களாய் வருவதும், தமிழில் கேரளத்தவரும் இந்திக்காரரும், கேரளாவில் தமிழரும் காமெடியர்களாய் வருவதும் இந்த வேற்று இனம் என்கிற உணர்வை அடிப்படையாகக் கொண்டதே.

  ஆனால் ஜெயராம் சொன்னது வேற்று இனம் என்பதைத் தாண்டி தனது அதிகாரத்தின் கீழ் வேலை செய்பவரை இழிவாகப் பார்க்கும் எண்ணம் கொண்டது. ஜெயராம் தாக்கப்பட்டதற்கு தமிழக முதல்வரும், காவல்துறையும் மின்னல் வேகத்தில் பதில் நடவடிக்கையில் இறங்கியதை என்னவென்று சொல்ல. மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை செவிடன் காதில் ஊதிய சங்காக கேட்டுக்கொண்டிருப்பவர் நடிகர்கள் என்றதும் துள்ளிக்குதித்து வருவானேன்.

 2. மலயாளப் பெண்களை காமப்பொருளாகவும், ஆந்திரப்பெண்கள் என்றாலே விபச்சாரப் பெண்ணாகவும், மார்வாடி என்றாலே வட்டிக்கடை நடத்தும் பணப்பேய் என்றும் காட்டுவது மட்டும் யோக்கியமா. அயன் படத்தில் கூட கடத்தலுக்கு குருவே ஒரு நேமிசந்த் என்ற மார்வாடி தான் என்கிறார்கள். தமிழன் மட்டும் யோக்கியமா?

 3. சினிமாக்கள் பெண்களை எப்போதும் காமப் பொருளாகத்தான் ‘காண்பித்து’ வந்திருக்கின்றன. மலையாளப் பெண்கள் (சேரநன்னாட்டின் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து…) பற்றிய அடையாளம் வெறும் சினிமாவினால் உண்டாக்கப்பட்டதல்ல. அது பொதுவான ஒரு சமூக அபிப்பிராயம். எல்லா நாடுகளிலும் இம்மாதிரியான விஷயங்கள் உண்டு. அமெரிக்கர்களை ‘வெளிப்படையாகப் பேசுபவர்கள்’ என்றும், ஸ்பானிஷ் பெண்கள் ‘கவர்ச்சியானவர்கள்’ என்றும், பிரிட்டிஷ்காரர்கள் ‘சம்பிரதாயமானவர்கள்’ என்றும் கூறும் இந்தமாதிரி பொது அபிப்பிராயங்கள் எண்ணிலடங்காதவை.

  சினிமா படம் ஒவ்வொன்றையும் எடுத்துப் பார்க்க ஆரம்பித்தால் தமிழனும், மலையாளியும், தெலுங்கனும், மார்வாடியும் அடித்துக்கொண்டு தான் சாவார்கள். ஏனென்றால் இந்தியாவில் இருக்கும் பாலிவுட், கோலிவுட், டோலிவுட்கள் எல்லாம் இப்படிப்பட்ட ஆட்களால் நிரம்பியுள்ளன. மாற்று இனத்தாரை தரமாகக் காட்டும் படங்களும் வருகின்றன. ஆனால் எண்ணிக்கையில் குறைவாக.

  இவை எல்லாவற்றிற்கும் மூல காரணம் வேற்று இனம் என்ற வெறுப்பு கலந்த உணர்வு. வேற்று இனத்தைப் புரிய இயலாமல் ஒரு குறிப்பிட்ட முத்திரை குத்தத் தோன்றும் எண்ணங்களே இப்படியான கலை வெளிப்பாடுகளை உண்டாக்குகின்றன. அடிப்படையில் எந்த இந்திய இனத்தாரும் தம்முள் வேற்று இனத்தாரை தன் இனத்தாரைப் போல நட்பு ரீதியாகப் பார்ப்பதில்லை. வடநாட்டில் இருக்கும் தமிழனுக்கு இங்கிருக்கும் மார்வாடியின் உணர்வுதான். வங்காளிகள் மட்டும் ஓரளவிற்கு எல்லோருடனும் நட்பு பாராட்டும் மனோபாவம் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
  தனது இனத்திற்குள்ளேயே வெறுப்பைக் கக்கும் கூடுதல் குணம் தமிழனுக்கு மட்டும்.

  இங்கிருக்கும் மார்வாடிக்கும் அங்கிருக்கும் தமிழனுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் பொருளாதார ரீதியானது. தமிழன் வட மாநிலங்களுக்குப் போவது பிழைப்புக்கு வழி தேடி. மார்வாடி இங்கு வந்தது தனது பணத்திற்கு மார்க்கெட் தேடி.
  மார்வாடியை அடகுக் கடைக்காரனாகக் காட்டுவதில் உண்மையே இல்லை என்று கூற முடியாது. மார்வாடி அடகுக்கடைக்காரனாக இருப்பது பெரும்பான்மையான உண்மை (புள்ளிவிவர ஆதாரம் எதையும் கேட்டுவிடாதீர்கள்).

  நீங்கள் மலையாளம், தெலுங்கு மற்றும் இந்திப்படங்களைப் பார்த்தால் தமிழனுக்கும் அங்கு இதே காமெடியன் நிலை தான். எல்லா இனங்களும் தங்கள் இனம் மற்றும் கலாச்சார அடிப்படைகளை மதிக்க ஆரம்பிக்க வேண்டும். அவற்றை ஆங்கிலம், உலகமயமாக்கல் போன்ற விஷயங்களிலிருந்து காப்பாற்றி வரவேண்டும். அப்போது தான் தன் இனத்தின் மீதும் அத்தோடு மாற்று இனங்களின் மீதும் மரியாதை வரும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s