யார் விபச்சாரம் செய்ய வந்தது ? சோவியத் சுந்தரிகளா அல்லது இந்தியாடுடேவா ?


இரண்டு வாரம் கடுமையான வேலைபளு காரணமாக கணிணியின் பக்கம் தலை வைத்துப்படுக்கக்கூட முடியவில்லை. இதற்குள் அழகிரி அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிசயம் நடந்துவிட்டது. அதுபோகட்டும் என்று பார்த்தால் திடீரென அஜீத்துக்கு வீரம் வந்து விழாவுக்கு வரச்சொல்லி மிரட்டுராங்கய்யா என்று கருணாநிதியிடமே புகார் சொல்லியிருக்கிறார். ஆப்கானிஸ்தான்காரன் ஒபாமாவிடம் புகார் சொன்னதுபோல ஆகிவிட்டது நிலைமை. இதனால்தான் கருணாநிதியே அஜீத் ஒரு குழந்தை என்று சொல்லியிருக்கிறார். அஜீத்தும் நான் கருணாநிதிக்கான விழாவுக்கு வருவதற்கு நான் தயங்கவில்லை ஆனால் தமிழனுக்கான பிரச்சனைக்க்காவெல்லாம் என்னை போராட்டத்திற்கு அழைக்கிறார்கள் “அதுமாத்திரமே எண்ட ப்ரோப்ளெம், கேட்டோ.. ” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

வந்தாரை வாழ வைப்பதுதானே தமிழனின் வேலை, வந்தவனை போராடச்சொன்னால் எப்படி? அவரே கருணாவுக்கான விழாவுக்கு வர எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்ற பிறகு நாமும் அதைப் பற்றி சிலாகித்துப் பேச ஒன்றுமில்லை. ஆகவே அஜீத்தைப்பற்றி எழுதுவதற்கு பதில் போய் முடிதிருத்திவிட்டாவது வரலாம் என்று போனால் அங்கு ஒரு மாதம் பழசான ஒரு இந்தியா டுடே கிடந்தது. அதில் சோவியத் சுந்தரிகள் எனும் தலைப்பில் ஒரு அட்டைப் பட சிறப்புக்கட்டுரை வந்திருந்தது. இந்தியாடுடே பாலியல் கட்டுரை வெளியிடுவது ஒன்றும் புதிய செய்தியல்ல. அதன் விளம்பரக் காகிதங்களை மட்டும் பார்ப்பவன் என்ற வகையில் அவர்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பாலியல் சர்வே செய்பவர்கள் என்று புரிந்துகொள்ளமுடிகிறது ( போதுமான அளவு வீட்டில் தண்ணீர் வசதி இருப்பதால் நான் காசு கொடுத்து இ.டு வாங்குவதில்லை ). ஆயினும் சோவியத் சுந்தரிகள் எனும் தலைப்பு இந்தியாடுடேவின் பாலியல் அரிப்பை மட்டும் கொண்டு வெளியிடப்பட்ட செய்தியல்ல என்பது தெளிவு. அதனால்தான் அக்கட்டுரையில் சோவியத் பற்றிய விளக்கமும் பிறகு அதன் வீழ்ச்சி குறித்தும் பேசி விட்டுப் பிற்கு தனது வழக்கமான செய்திக்கு வருகிறது.

இந்தியாடுடேவின் அக்கட்டுரை முன்னாள் சோவியத் நாடுகளை சேர்ந்த இளம் பெண்கள் இந்தியாவின் பெருநகரங்களுக்கு பாலியல் தொழில் செய்ய வருவது பற்றியது. சுமார் ஐந்தாயிரம் முன்னாள் சோவியத் நாட்டுப்பெண்கள் இங்கு வந்திருப்பதாகவும், இவர்களில் பலர் துபாயின் வீழ்ச்சிக்குப் பிறகு இங்கு தங்கள் ஜாகையை மாற்றியிருப்பதாகவும் சொல்லியிருக்கிறது அப்பத்திரிக்கை. இப்பெணகளை ஏற்பாடு செய்து தரும் ஆண்டிகள், அவர்களது சராசரி கட்டணங்கள், மற்ற விபச்சாரிகளை விட இவர்கள் எவ்வகையில் மேம்பட்டவர்கள் என்ற தகவல்கள்,  ஆங்கில தினசரிகளில் இந்த குழுக்கள் தரும் விளம்பரங்களை எப்படி அடையாளம் காண்பது எனும் யோசனை மற்றும் அவர்களது வாடிக்கையாளர் சிலரது கருத்துக்கள் என ஏராளமான தகவல்களை அள்ளி இறைத்திருக்கிறது டுடே. நல்லவேளையாக யாருடைய தொலைபேசி எண்ணையும் தரவில்லை. ஒரு உயர்மட்ட விபச்சாரத் தரகனுக்குரிய வார்த்தை ஜாலங்கள், அழகிகள் குறித்து ஆர்வத்தைத் தூண்டும் வர்ணணைகள், அதிலும் கொஞ்சம் ரகசியத்தை மறைக்கும் லாவகம் என இ.டுடேவின் திறமை பக்கமெங்கும் பளிச்சிடுகிறது. பத்திரிக்கை துறையில் நொடித்துப்போனால் இவர்கள் மாற்றுத்தொழில் பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை.

அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி இந்தியாவில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை முப்பது லட்சத்திற்கும் அதிகம். பாலியல் தொழிலுக்கு தள்ளும் சமூகச் சூழல் பற்றியோ அல்லது பாலியல் தொழில் நடத்தும் சமூக விரோதிகள் பற்றியோ கொஞ்சமும் கவலைப்பட்டிராத இந்தியாடுடே சோவியத் நாட்டு பெண்கள் சிலரது பாலியல் தொழில் பற்றி செய்தி போடுவதன் காரணம் என்ன ? கம்யூனிசத்தை வெறுக்கிற சமத்துவம் என்ற வார்த்தையைக் கேட்டாலே அலறும் மேல்தட்டு சிந்தனையின் விளைவுதான் தான் நிபுணத்துவம் பெற்ற  விபச்சார செய்திகளை சோவியத் சுந்தரிகள் எனும் தலைப்பில் வெளியிடுகிறது இந்தியாடுடே. கம்யூனிசம் எனும் கருத்தின் மீதான பயம் சோவியத் நாடுகள் சிதறிய பல ஆண்டுகளுக்குப் பிறகும் இவர்களுக்கு இருப்பதன் விளைவுதான் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கம்யூனிசத்தை சீண்டிப்பார்க்க வைக்கிறது. கூடுதலாக மேல்தட்டு மக்களின் வெள்ளைத் தோல் மோகம் பற்றி செய்திபோடவேண்டிய கடமையும் அவர்களுக்கு இருக்கிறது. அதன் பலன், கம்யூனிசத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியும் இந்தியாடுடேவின் அடையாளமான பாலியல் இச்சையும் சம அளவில் கலந்த இந்த காக்டெய்ல்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தியாடுடே சிறப்பிதழில் சோ ராமசாமியின் கட்டுரை ஒன்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்ற தலைப்பில் வெளியானது. அதில் சோவும் தனது பெரியார் விரோத சிந்தனைகளை அள்ளித்தெளித்திருந்தான். பெரியார் கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்தார் இப்போதோ பக்தி மாநிலமெங்கும் பரவிவிட்டது, ஜாதிகள் ஒழிக்கப்படவேண்டும் என்றார் ஆனால் இப்போது ஜாதி சங்கங்கள் பல்கிப் பெருகிவிட்டன ஆகவே பெரியார் கொள்கைகள் தோற்றுவிட்டன என்று எழுதி  தனக்கு தரப்பட்ட வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தினான் சோ. பக்தி பெருகி விட்டதாம், பக்தி மட்டுமா பெருகியது கொலை, கற்பழிப்பு, ஊழல் தொடங்கி பஸ் ஸ்டாண்டில் செயின் அறுப்பதுவரை எல்லாம்தான் பெருகிவிட்டது. ஜாதி சங்கங்கள் பெருகிவிட்டது யாருக்குத் தோல்வி ? இந்த கொழுப்பெடுத்த கிழவன் உட்பட நம் எல்லோருக்குமான தோல்வி இது நிச்சயம் பெரியாரின் தோல்வியல்ல. இது சோவுக்கு பதில் சொல்லும் பதிவு அல்ல என்பதால் இதற்குமேல் நீட்ட வேண்டாம். ஆயினும் நாம் கவனிக்கவேண்டியது ஏன் இந்தியாடுடே ஈவேரா பற்றி எழுத சோவை தெரிவு செய்தது அதன் தலைப்பை ஏன் நாயக்கர் என்று வைத்தது என்பதைத்தான்.

விபி சிங் இறந்தபோது அது பற்றி செய்தி வெளியிட்டது. இந்தியாடுடேயின் தரம் அதில் முழுமையாக வெளிப்பட்டது. மண்டல் கமிஷனுக்கு எதிராக தீக்குளித்த இளைஞனின் உடலைப்பற்றிய தீ இறுதியில் விபி சிங்கின் உடலை எரித்துவிட்டு ஓய்ந்ததாக எழுதியது இப்பத்திரிக்கை. மனதில் வன்மத்தைத் தவிர வேறு எதுவும் இல்லாத ஒருவனால் மட்டுமே சொல்ல முடிகிற வார்த்தைகள் அல்லவா இவை? இடஒதுக்கீடு என்ற வாதத்தை இந்தியாவெங்கும் துவக்கியதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாத வி.பி சிங்குக்கே இந்த கதி என்றால் பெரியாரும் சோவியத்தும் தப்பிக்க முடியுமா என்ன ?

சோவியத்தின் வீழ்ச்சி இந்தியாடுடேவுக்கு வேண்டுமானால் கொண்டாடத்தக்க செய்தியாக இருக்கலாம் நிச்சயம் அது நமக்கான நற்செய்தியல்ல. இரண்டாம் உலகப்போரில் பெரும் தியாகங்களை செய்தவர்கள் சோவியத் மக்கள். இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு உருவான பல பெரும் தொழிற்சாலைகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை செய்தது சோவியத் உள்ளிட்ட கம்யூனிச நாடுகள். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் பெரும் எண்ணிக்கையிலான ஏழை மக்களுக்காக எல்லா தலைப்புக்களிலும் புத்தகங்களை மிக மிக மலிவான விலையில் ( ஏறத்தாழ இனாமாக ) வழங்கியது சோவியத். இன்றைக்கு அமெரிக்காவின் சர்வதேச ரவுடித்தனத்தை குறித்து கோபப்படுபவர்கள் சோவியத்தின் வீழ்ச்சி குறித்து கவலைப்படாமல் இருக்க முடியாது.

வெள்ளையனை எதிர்த்து போராடியதால் இருபத்துமூன்று வயதில் தூக்கிலிடப்பட்டார் பகத்சிங், வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டக்காரர்களை காட்டிக்கொடுத்த வாஜ்பாய் பிற்பாடு இந்தியாவின் பிரதமரானார். இதில் யாரை வெற்றிகரமானவர் என்பீர்கள் ? திப்பு சுல்தான் வெள்ளையருடனான போரில் தோற்றார், அவரது வாரிசுகள் இன்று தினக்கூலிகள். ஆற்காடு நவாப் தோல்வியே அடையவில்லை அவர் வாரிசுகள் இன்றும் இளவரசர்களாக வாழ்கிறார்கள். இதில் யாரை நேசிக்கிறீர்கள் தோற்றவனையா அல்லது வென்றவனையா?

லெனின், ஸ்டாலின் காலத்து சோவியத் குறித்து நினைவுகூறவும்  கற்றுக்கொள்ளவும் நமக்கு ஏராளமான செய்திகள் இருக்கின்றன.  நாம் அவற்றைப் பற்றி தெரிந்துகொள்வோம். எல்லா இடங்களிலும் விபச்சாரிகளைத் தேடும் இந்தியாடுடே மட்டும் சோவியத் சுந்தரிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கட்டும்.

Advertisements

“யார் விபச்சாரம் செய்ய வந்தது ? சோவியத் சுந்தரிகளா அல்லது இந்தியாடுடேவா ?” இல் 8 கருத்துகள் உள்ளன

  1. இந்தியா டுடே, ஹிண்டு பத்திரிக்கைகள் பற்றி அவ்வப்போது இப்படி வெளிப்படுத்துவது நல்லது தான். இன்னும் முக்கியமான, மக்களுக்கு எதிரான, பட்ஜெட்டைப் பற்றி எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

  2. திரு அம்பேதன்,

    அனேகமாக அடுத்த பதிவு பட்ஜெட் பற்றித்தான் ( கொஞ்சம் படிக்க வேண்டியிருப்பதால் சிறிது அவகாசம் தேவைப்படுகிறது )

    நன்றி.

  3. இவர்களை நினைக்கும் போது என்னெனவோ தோன்றுகிறது எப்போது மாறும் என்ற ஏக்கம் என்னை வாட்டுகிறது.தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி.

  4. இவர்களை எல்லாம் பற்றிப் பேசி ஏனையா நேரத்தை வீணடிக்க வேண்டும். காசு பார்க்க மனித மனங்களின் விராக எண்ணங்களை புத்தகமாய் அச்சடித்து கருத்துக்கணிப்பு என்ற பெயரில் வெளியிடும் பத்திரிக்கையைப் பற்றி என்ன பேசுவது. நமக்குத்தான் நேர விரையம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s