ஆகவே நான் மன்மோகனை வெறுக்கிறேன், ஏனெனில் நான் இந்தியாவை நேசிக்கிறேன்.


பட்ஜெட் குறித்து பதிவெழுதலாம் என்று யோசித்து ஒரு மாதமாகிவிட்டது. அதற்குள் நித்தியானந்தாவின் சமாதிநிலை சரசத்தில் தொடங்கி மாயாவதிக்கு அணிவிக்கப்பட்ட பண மாலை வரை ஏகப்பட்ட சமாச்சாரங்கள் நடந்துவிட்டன. தேசமே சாமியார்களின் லீலாவினோதங்களைப் பற்றி கதைத்துக்கொண்டிருந்தபோது மத்திய அரசு இரண்டு சட்டங்கள் இயற்றத் திட்டமிட்டது. மரபணு மாற்றப்பட்ட பயிர்களைக் குறித்து எதிரான தகவல்களை பிரச்சாரம் செய்தால் சிறை தண்டணை எனும் சட்டமும் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் நிறுவனம் முன்னூறு கோடிக்கு மேல் இழப்பீடு தரத்தேவையில்லை எனும் சட்டமும் பிரசவிக்கத் தயார் நிலையில் இருந்தன. எதிர் கட்சிகளை சரிகட்டும் வரை அவை சட்டமாக்கப்படாது என்பது கடைசி கட்ட நிலவரம். இந்த சூழலில் பட்ஜெட்டைப் பற்றி எழுதுவது மடமை என்பதால் அதை கைவிட வேண்டியதாயிற்று. நரியைப் பற்றி எழுதுவது நரியின் வாலைப் பற்றி எழுதுவதைவிட சரியானது இல்லையா ?

இந்தியாவில் அறுபத்தைந்து சதவிகிதம் மக்கள் விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்கிறார்கள். பன்னெடுங்காலமாக வெள்ளத்தையும் வறட்சியையும் எதிர்கொண்டு விவசாயத்தை வெற்றிகரமாக செய்தவர்கள் அவர்கள். ஆயினும் நம் பிரதமரின் புதிய பொருளாதாரக்கொள்கையுடன் அவர்களால் போராட இயலவில்லை. விலைபொருளுக்கான விலையில் நியாயமான உயர்வில்லை, ஆயினும் நுகர்வோருக்கு தரப்படுவது கொள்ளை விலையில். இடையில் உயர்த்தப்பட்ட பணம் எங்கே போகிறது என்று நாம் கேட்கக்கூடாது, மீறிக் கேட்பவர்கள் நக்சலைட் என்று பெயர் சூட்டப்படுவார்கள். ஆன்லைன் வணிகத்தின் பெயரால்  கள்ளச் சந்தை சட்டபூர்வமாக்கப்பட்டுவிட்டது.பி.டி பருத்தி விதைகள் தோல்வி என்று மான்சாண்டோவே ஒத்துக்கொண்டுவிட்டது, ஆனால் அதை நீங்களோ நானோ சொன்னால் குற்றம் என்கிறது புதிய சட்டம்.

இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைவோம் நாள்தோறும் கூவுகின்றனர் பிரதமரும் நிதியமைச்சரும், நான்கு சதவிகித விவசாய வளர்ச்சி என்று பட்ஜெடில் அறிவித்ததோடு சரி. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் விவசாயத்துறையை கைப்பற்ற அனுமதிக்கும் உடன்பாடு, அதன் பிறகு விவசாய எந்திரங்கள் மற்றும் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க 5 சதம் வட்டியில் கடன் வழங்கும் பட்ஜெட். சலுகை யாருக்கு என்று புரிகிறதா? விவசாயத்துக்கு முக்கியத்துவம் தந்த பட்ஜெட்டின் லட்சணம் இதுதான்.  கரும்பு விலையை அரசு நிர்ணயம் செய்யும் நாட்டில் உரவிலையை கம்பெனியே நிர்ணயம் செய்யலாம் எனும் ஒற்றை சட்டமே போதும் அரசு யாருக்காக இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள. வேலையிழந்த விவசாயக்கூலிகள் நகரங்களின் பிளாட்பாரங்களில் கைத்துடைக்கும் காகிதம்போல வீசப்படுகிறார்கள். கடன் மிகுந்த விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். மவுனமாக சிரிக்கிறார் மன்மோகன், ஏனெனில் செத்துப்போன விவசாயிகள் குடித்த பூச்சிமருந்தும் அவரது முதலாளிகளுடையதுதான்.

விவசாயிகளுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவன தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள். பல ஐரோப்பிய நாடுகள் தங்களது வருமானத்தின் பெரும் பகுதியை தங்களது வயதான குடிமக்களுக்கு செலவிடுகின்றன. இங்கோ அரசு ஊழியருக்கு வழங்கும் ஓய்வூதியத்திலிருந்தும் தன்னை விலக்கிக்கொள்ள துடிக்கிறது. பொது சேமநல நிதியை பங்குசந்தைக்கு திருப்பும் முயற்சியும் ஒரு பக்கமாக நடக்கிறது. ஓய்வூதியம் எனும் பிராப்தம் இல்லாத தனியார் ஊழியர்கள் தங்கள் ஓய்வுகால சேமிப்பின் வட்டியை மட்டும் நம்பியிருக்கிறார்கள். அவர்களையும் ஒழித்துக்கட்டும் பெரும்பணியும் செய்யவேண்டியிருப்பதால் வங்கி வட்டி விகிதம் கணிசமாக குறைக்கப்பட்டிருக்கிறது. மக்களின் சேமிப்பை பங்கு சந்தைக்குத் திருப்பி பெருமுதலாளிகள் நோகாமல் கொழுப்பதற்கான முயற்சி இது என்பதில் யாரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. இந்த வலையில் சிக்கப்போவது மன்மோகனின் பரம பக்தர்களான உயர் மத்தியதர வர்கமும்தான்.

பொருளாதார மேதையில்லையா அதனால் எதிலும் நூறு சதவிகிதம் வெற்றி என்பதுதான் இவரது இலக்கு. எல்லோருக்கும் முடிவுகட்டும்போது சிறு வணிகர்களை மட்டும் விட்டுவைத்தால் எப்படி ? சில்லறை வணிகத்தில் போட்டி குறைவாக இருப்பதால்த்தான் விலைவாசி கூடிவிட்டதாக திருவாய் மலர்ந்திருக்கிறார் பிரதமர். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து சுமக்கமாட்டாத சுமையுடன் சந்தையிலிருந்து திரும்பி நாம் விழிக்கும் நேரத்தில் கடை திறந்து ஊரடங்கும் நேரம் வரை வியாபாரம் செய்யும் கடைக்காரர்களுக்கு போட்டி குறைவாக இருப்பதாகக் கருதுகிறார் மன்மோகன். உணவுப்பொருள் பதுக்கலை ஒரு துறையாகவே மாற்றிவிட்ட இவர் விலைவாசிக்கான பழியை வணிகர்கள் மீது திருப்புகிறார். மளிகைக் கடை வைத்து பெரும் பொருள் ஈட்டிய எத்தனை பேரை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள்? இவர்களை ஒழித்துவிட்டு வால்மார்ட் போன்ற நிறுவனங்களை களமிறக்கும் தனது ஆவலை ஒரு அரசியல்வாதிக்கே உரிய நயவஞ்சகத்துடன் சொல்கிறார் மன்மோகன். இவரை காணும்போதெல்லாம் மகாபாரம் தொடரின் சகுனி பாத்திரம் எனது நினைவுக்கு வருகிறது. அந்த ஒப்பீட்டை நான் நிச்சயம் ரசிக்கவில்லை ஏனெனில் சகுனி பாத்திரத்தின் மீது எனக்கு அத்துணை வெறுப்பு கிடையாது.

மேலே சொன்ன எல்லாம் தொன்னூற்று ஒன்றாம் ஆண்டுக்குப் பிறகு வந்த எல்லா ஆட்சிகளாலும் நடைமுறைப்படுத்தப்பட்டவைதான். ஆயினும் இந்த கொள்ளை(அல்லது கொள்கை )யை அறிமுகம் செய்தவர் மன்மோகன். அமெரிக்க விமான நிலையத்தில் அம்மணமாக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட ஜார்ஜ் பெர்ணாண்டர்ஸ் உட்பட எல்லா ஆட்சியாளர்களும் அமெரிக்க அடிமைகளே. ஆனால் அதை ஆத்ம சுத்தியோடு ஏற்றுக்கொண்டவர் என்பதில்தான் மன்மோகன் வேறுபடுகிறார்.

மன்மோகனின் அடையாளம்தான் என்ன ? தமிழருவிமணியன் சொல்வதுபோல நெறியாளரா ?  எந்த நெறியாளனும் பத்தாயிரம் ரூபாய் பொருளை பத்து ரூபாய்க்கு விற்க மாட்டான். (தகவலறியும் உரிமைச் சட்டம் கொண்டுவந்ததால்)  வெளிப்படையான நிர்வாகத்தை விரும்புபவரா ? அந்த இயல்புடைய ஒருவர் திருட்டுத்தனமாக ஒப்பந்தம் போடமாட்டார்.  பாரபட்சமில்லாத தொழில் போட்டியை விரும்புபவரா ? அப்படியானல் எதற்கு வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு சலுகை தந்து உள்ளூர் மீனவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கிறார் ? சமரசம் செய்துகொள்ளாத வித்தியாசமான அரசியல்வாதியா ? அப்படிப்பட்டவர் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற வாஜ்பாயை பீஷ்ம பிதாமகர் என்று சொல்லி பிச்சை கேட்கவேண்டிய அவசியமில்லை.

ஒருவேளை, தேசத்தின் வறுமையை அறியாமல்  தன் கொள்கையில் பிடிவாதம் காட்டும் ஞானச்செருக்குடைய மேதையா? பாகிஸ்தானில் பிறந்த இந்த தாயில்லாப்பிள்ளை வறுமையைக் காணாமல் வளர்ந்தவர் அல்ல, மாறாக நூறு கோடி மக்களின் வாழ்வை சிதைத்தால்த்தான் ஒருசில கோடீசுவரர்களின் சொத்துமதிப்பை வானளாவ உயர்த்த முடியும் என்ற பொருளாதார வித்தையைக் கற்ற உலக வங்கியின் ஊழியர்.  தொலையட்டும், இந்தியாவை விற்பனை செய்ய வந்த தரகர் என்றாவது சொல்லலாமா ? அதுவும் முடியாது. ஏனெனில் தரகர்கள் இருதரப்புக்கும் இடையேயான விற்பனையை முடித்துவைப்பவர்கள், ஒருதரப்புக்காக அராஜகம் செய்பவர்கள் கட்டப்பஞ்சாயத்துக்காரர்கள்.

ஐந்நூறு கோடி மதிப்புடைய மாடர்ன் பிரெட் நூற்றியிருபது கோடிக்கு விற்கப்பட்டது. பி.எச்.ஈ.எல் நிறுவனத்தின் ஆயிரக்கணக்காண கோடி லாபம் உபரி நிதியாக சேமிக்கப்படுகிறது, எதிர்காலத்தில் வாங்கப்போகும் முதலாளிகளின் தேவைக்காக. இதை நம்ப முடியாதவர்கள் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்தவற்றை நினைவுபடுத்திக்கொள்ளலாம். மீதமிருக்கும் அரசுத்துறை நிறுவனங்களும் விற்பனை செய்யத் தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த செயல்பாடுகள் யாவையும் காங்கிரஸ் , பா.ஜ.க என யார் ஆட்சியில் இருந்தாலும் நடைபெறக்கூடியவையே. மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்தாலும் முப்பத்து மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நடக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் மன்மோகனே இந்த பகல்கொள்ளையின் முதலும் முழுமையாகவும் இருக்கிறார்.

திருட்டை சட்டபூர்வமாக்குவதையும் தற்பாதுகாப்பை தண்டணைக்குரியதாக்குவதையும் வேறொரு நபரால் இத்தனை திமிருடன் செய்ய முடியாது (அணு விபத்து மற்றும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தொடர்பான சட்ட முன்வரைவுகள் உணர்த்துவது இதைத்தான். இன்றுவரை மன்மோகன் இதுபற்றி யாதொரு விளக்கமும் தரவில்லை என்பதையும் கவனியுங்கள்). நேர்மையின் சுவடுகூட இவரிடம் கிடையாது என்பதுதான் யதார்த்தம். தமிழருவி மணியனுக்காக வேண்டுமானால் இவரை யோக்கியர் என்று ஒத்துக்கொள்ளலாம், ஆனால் அதன் பிறகு உலகில் அயோக்கியர்கள் என்று யாரையுமே குறிப்பிட இயலாது என்பதுதான் அதிலிருக்கும் ஒரே பிரச்சனை.

இந்தியா எனும் தேசம் வெறும் எல்லைகளில் இல்லை, அந்த எல்லைக்குள் வசிக்கும் மக்களிடம்தான் இருக்கிறது. ஆகவே நான் மன்மோகனை வெறுக்கிறேன், ஏனெனில் நான் இந்தியாவை நேசிக்கிறேன்.

Advertisements

“ஆகவே நான் மன்மோகனை வெறுக்கிறேன், ஏனெனில் நான் இந்தியாவை நேசிக்கிறேன்.” இல் 3 கருத்துகள் உள்ளன

 1. \\இந்தியா எனும் தேசம் வெறும் எல்லைகளில் இல்லை, அந்த எல்லைக்குள் வசிக்கும் மக்களிடம்தான் இருக்கிறது\\ இந்த வரிகளை நான் மிகவும் நேசிக்கிறேன். 

 2. இந்த ஆட்சி இந்தியாவை அடகு வைக்காமல் விடாது போலிருக்கிறது.
  எல்லா மீடியாக்களும் நித்யானந்தாவை பற்றியே பேசியபோது தன் தலையங்கதிலும், தலைப்பு செய்தியிலும் இந்த கட்டுரையின் விசயத்தை பிரசரித்தது “ திணமணி “ மட்டுமே.
  அதில் படித்த சில விடயங்கள்
  1. பி.டி. கத்தரி என்பது கத்தரிக்காயின் தோல், தவளையின் தோலுடன் மாற்றம் செய்யப்பட்ட ஜீன்.
  2. அணு சக்தி ஒப்பந்தபடி அணு உலை உடைந்தால் அதை பாராமரிக்கும் அமெரிக்க தனியார் கம்பெனி தரும் நஷ்ட ஈடு 500 கோடி மட்டுமே..

  நிச்சயம் இந்த கட்டுரை அனைத்து இந்தியரும் படிக்க வேண்டியது.. இது போன்ற விசயங்களை மேலும் மேலும் பதிவுசெய்யுங்கள்.. இதுவும் ஒரு சுதந்திர போராட்டமே….

  அன்பன்
  குணசேகரன்.சு.
  உதவி பேராசிரியர்(பொறியியல் கல்லுரி)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s