மன்மோகன் -முந்தைய பதிவு மீதான மற்றும் பதிவு சாராத விவாதங்களின் தொகுப்பு.


மன்மோகன் குறித்த எனது பதிவிற்குப்பிறகு அதுபற்றிய ஒரு நீண்ட விவாதமொன்றில் பங்கேற்க வேண்டியதாயிற்று. நல்வாழ்வு என்பது வெங்கடாஜலபதியால் அருளப்படுவது என்று நம்புகிற, சன் டிவி  வழியே மட்டும் செய்திகளை அறிகிற ஒரு நண்பருடனான விவாதமது. மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய வீட்டுமனைப் பட்டாவுக்கான போராட்டத்தை பிச்சைக்காரத்தனம் என்று கொந்தளிக்கிற, அடிமாட்டு விலைக்கு கம்பெனிகளுக்கு நிலம் கொடுப்பதை வளர்ச்சிக்கான நடைமுறை என்றும் நம்புகிற ஒரு அப்பாவி நடுத்தர வர்கத்தவர் அவர் (மார்க்சிஸ்ட் போராட்டம் ஒரு ஸ்டண்ட் என்பது வேறு விவகாரம் ).  எனக்கு அதேபோன்ற சிந்தனையுடைய பல நண்பர்கள் இருக்கிறார்கள். இந்திய அரசு பற்றிய அவர்களது வழமையான வாதங்களை மட்டும் பட்டியலிட்டுப்பார்த்தால் என்ன என்கிற யோசனையின் விளைவுதான் இப்பதிவு.

யார் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் எனும் தாராளமய சிந்தனையே ஏழ்மைக்கு அடிப்படை காரணி என்பதை புரிய வைப்பதற்கே நாம் கடுமையாக சிரமப்படவேண்டியிருக்கிறது. செல்வம் என்பது பெருகக்கூடியது என்றே பலரும் கருதுகிறார்கள். உண்மையில் செல்வம் இடம் மாறக்கூடியது மட்டுமே. மக்கள்தொகை எவ்வளவு உயர்ந்தாலும் பூமியின் எடை எப்படி உயராமல் அப்படியே இருக்குமோ அதுபோலவே செல்வமும் ஒரு வரையறைக்குட்பட்டதே.( உலகப்போர் சமயங்களில் பணம் கணிசமாக அச்சடிக்கப்பட்ட நாடுகளில் ரூபாய் நோட்டுக்கள் குளிர் காய்வதற்காக நெருப்புமூட்ட பயன்படுத்தப்பட்டதை நீங்கள் படித்திருக்ககூடும்.) ஆக இந்தியாவின் கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு உயர்வது என்பது இந்தியாவின் ஏழ்மையோடு நேரடியாக தொடர்புடையது. சுருக்கமாக சொல்வதானால் அம்பானியின் சொத்து இன்னும் ஒரு லட்சம் கோடி உயரவேண்டுமானால் மேற்கொண்டு இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டும், முப்பத்தைந்து சதவிகித மக்கள் இரண்டுவேளை உணவோடு நாளைக் கழிக்கிறார்கள், அந்த எண்ணிக்கை எழுபது சதவிகிதமாக உயரவேண்டும் அவ்வளவுதான். இதை ஒத்துக்கொள்ளாத வரை நாமும் ஒரு அதிகாரமில்லாத மன்மோகனாகத்தான் இருப்போம். ஒருவரியில் சொல்வதானால், அவனுக்குத் திறமை இருக்கு சம்பாதிக்கிறான் எனும் வாசகம் அவனுக்கு ஆண்மையிருக்கு கற்பழிக்கிறான் எனும் வாக்கியத்திற்கு நிகரானது.

அடுத்த பெரும் மூட நம்பிக்கை இந்தியாவின் ஏழை மக்கள் எப்போதும் சலுகைகளை எதிர்பார்த்தே வாழ்கிறார்கள் என்பது. நூறு நாள் வேலைத்திட்டம், எழுபது ஆயிரம் கோடி விவசாயக் கடன் ரத்து இதற்கு மேலும் என்ன செய்யச்சொல்கிறீர்கள் என்று மாண்டேக் சிங்கின் பேரப்பிள்ளை போல சிலர் பேசுகிறார்கள். அவர்களை சொல்லிக் குற்றமில்லை, தினமும் டிவியிலும் செய்தித்தாள்களிலும் இந்த செய்தி வந்தபடியே இருக்கிறது. சீனாவில் ஒரு மீன்பிடி முறை இருக்கிறது, மீனை நீருக்கடியில் சென்று வேட்டையாடி உண்ணும் பறவைகளைப் பிடித்து மீன் பிடிக்கப் பழக்குவார்கள். அதன் கழுத்தில் ஒரு வளையத்தை மாட்டி ( மீனை விழுங்காதிருக்க ) மீன் பிடிக்க வைப்பார்கள். இரவு விற்காமல் மீந்திருக்கும் மீன்களை பறவைகளுக்கு தருவார்கள். ஏறத்தாழ அதையொத்த நடைமுறையே இங்கும் பின்பற்றப்படுகிறது. 2008 /09 நிதி ஆண்டில் பெரும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நேரடியான சலுகைகளின் மதிப்பு சுமார் மூன்று லட்சம் கோடி. எழுபதாயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்ட செய்தியை காங்கிரசு மற்றும் அதன் கூட்டணிக்காரர்கள் எழுபதாயிரம் கோடி முறைக்கும் மேலாக சொல்லியிருப்பார்கள், இந்த மூன்று லட்சம் கோடி பற்றி எவனும் மூச்சுகூட விடவில்லை.

ஒரு விவசாயி இலவச மின்சார இணைப்புக்கு ரூபாய் இருபத்தைந்தாயிரம் கட்ட வேண்டும், ஆனால் ஒரு வெளிநாட்டு முதலீட்டாளர் அரசுத்துறை பங்கை (ஷேருங்க..) வாங்க முதலில் பத்து சதவிகிதம் பணம் செலுத்தினால் போதும். வெளிநாட்டு கம்பெனிகளுக்கு இருபத்து நான்கு மணி நேர மின்சாரம் சலுகை விலையில் தரப்படுகிறது, டெல்டா கிராமப்பகுதிகளில் பனிரெண்டு மணிநேர மின்வெட்டு சர்வ சாதாரணம். மலிவு விலைக்கு நிலம், வரி விலக்கு என்று தொடங்கி லாப உத்திரவாதம் (குறிப்பிட்ட காலத்துக்குள் லாபம் குறைந்தால் அரசே அதை ஈடுகட்டும் முறை ) வரை அன்னிய நிறுவனங்களுக்கு அள்ளி இறைக்கப்படும்  சலுகைகளுக்கு எல்லையே இல்லை. மக்களின் பணத்தை சேதாரமில்லாமல் முதாலாளிகளிடம் கொண்டுசேர்க்கும் ஒரு அரசு எந்திரம்தான் நம்நாட்டில் இருக்கிறது.

உதாரணத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில செயல்பாடுகளை கவனியுங்கள். வில் தொலைபேசிக்கான உரிமத்தைப் பெற்று CDMA சேவையை துவங்கி திருட்டுத்தனத்தைப் பகிரங்கமாக செய்தார் அம்பானி . வெளிநாட்டு அழைப்புக்களை உள்ளூர் அழைப்புக்கள் போல காட்டி ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது, அதற்கான அபராதம் வெறும் நூற்று சொச்சம் கோடி.  உலக சந்தையில் கச்சா எண்ணை நூற்று எழுபது டாலராக இருந்தபோது ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் கச்சா எண்ணையை சுத்திகரித்து ஏற்றுமதி செய்து கொள்ளை லாபம் ஈட்டியது.  பழைய துணி திருடுபவனைக் கூட கட்டிவைத்து அடிக்கும் நாட்டில் அம்பானி போன்றவர்கள் ரோல்மாடலாக கருதப்படுவதைவிட வேறு கேவலம் வேறு இருக்கமுடியுமா.. இந்த அழகில் சலுகைக்கு ஏங்குபவர்கள் ஏழைமக்கள் என்பது எத்தனை பெரிய மோசடி?

புள்ளிவிவரங்களோடு பேசத்தேவையேயில்லாத வேறொரு கூட்டம் உலவுகிறது. அவர்கள் எந்த செய்திகளையும் கேட்கத்தயாராயிருப்பதில்லை, எதை கேட்டாலும் இரண்டாயிரத்து இருபதில் இந்தியா வல்லராசாகிவிடும் என்ற பதில்தான் வரும். புதிய பொருளாதார ஆதரவாளர்களைவிட இந்த அப்துல் கலாம் வழிபாட்டு மன்றத்துக்காரர்கள்  இன்னும் கடுப்பேற்றுகிறார்கள். ஒரு முறை கலாம் சொன்னார் “வளரும் தலைமுறையை லஞ்சம் ஊழலுக்கு எதிரான சிந்தனையுடன் பெற்றோர் வளர்க்கவேண்டும் அப்படி வளர்த்தால் 2020ல் இந்தியா ஊழலற்ற நாடாக மாறும்”. ஒரு பெண் அது பற்றிய விவாதத்தில்  “லஞ்சம் வாங்கும் இன்றைய தலைமுறை பெற்றோர்கள் எப்படி தங்கள் வாரிசுகளை ஊழலுக்கு எதிரானவர்களாக வளர்ப்பார்கள்?” என்று வினவினார். அதற்கு கலாம் சொன்ன பதில்  ” லஞ்சம் மற்றும் ஊழலற்ற சமுதாயத்தை இந்தியா 2020 விரும்புகிறது” அவ்வளவுதான். என்ன எழவு பதில் இது ?  இந்த நூற்றாண்டில் இந்திய ஊடகங்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட நபருடைய சிந்தனையின் லட்சணம் இதுதான்.

காசநோயில் முதலிடம், பார்வையிழப்பில் முதலிடம், எயிட்சில் இரண்டாமிடம் இப்படி இந்தியாவின் மானத்தை வாங்க ஓராயிரம் விசயங்கள் இருக்கின்றன. இந்த அழகில் வல்லரசு என்று சொல்லிக்கொள்வது அசிங்கமில்லையா ? இலங்கை கூட கிராமப்புற மருத்துவ வசதியில் இந்தியாவைவிட சிறப்பாக இருக்கிறது. பொது சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயம் என எதிலும் கவனம் செலுத்தாமல் வெறும் ஆயுதம் செய்வதால் மட்டுமே ஒரு நாடு வளர்ந்த நாடாகிவிடும் என்று நம்பும் கலாம், அவரைப்போலவே சிந்திக்கும் அவரது பக்தர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்வது ஒரே ஒரு காரியம்தான் அது மக்களிடம் இருக்கும் கொஞ்சநஞ்ச சொரணைக்கும் காயடிப்பது.

அடுத்ததாக சொல்லப்படும் வாதம், வலுவானது தப்பிப்பிழைக்கும் எனும் டார்வினின் கொள்கை. அதாவது பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது தவிர்க்க இயலாதது, ஆகவே நாம் நம்மைப்பற்றி  மட்டும் கவலைப்படுவதுதான் பிழைப்பதற்கான வழி என்பது அதன் பொருள். டார்வின் சொன்னது மிருகங்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது. விலங்குகள் தங்கள் தேவைக்கு மேல் எதையும் எடுத்துக்கொள்வதில்லை. மான் கூட்டத்திற்கு மத்தியில் பசியில்லாத சிங்கம் அமைதியாக உலாவும் படக்காட்சிகளை நாம் பார்த்திருப்போம். அப்படி தேவைக்குமேல் நுகர விரும்பாத சமூகத்தில் ஏழ்மை என்பதே இருக்கமுடியாது. காசில்லாதவர்கள் சாவுங்கள் என்பதை நேரடியாக சொன்னால் சாடிஸ்ட் என்று கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால் டார்வினை துணைக்கழைத்து ஒரு தத்துவம் போன்ற தோற்றத்தை உண்டாக்குகிறார்கள். உண்மையில் வலுவானது மட்டுமே பிழைக்கும் என்பதை சாதாரண மக்கள் நம்பத்தொடங்கினால் தாராளமயத் திருடர்கள் யாரும் உயிரோடு இருக்க முடியாது. மிட்டலும் மல்லையாவும் உதிர்த்துவிட்ட நியாய தர்மத்தையும் மனிதாபிமானத்தையும் மக்கள் இன்னும் நினைவு வைத்திருப்பதுதான் எல்லா கொள்ளையர்களின் உயிரையும் உடமையும் இன்றளவும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது.

வாதத்தின்போது மிகவும் பலவீனமான நிலையில் இருந்தாலோ அல்லது மிகவும் கோபப்பட்டாலோ இவர்கள் சொல்லும் கருத்து “இங்கு ஜனநாயகம் இருப்பதால்தான் நீங்கள் இப்படி அரசை எதிர்த்துப்போச முடிகிறது ” என்பதாக இருக்கும். துரதிருஷ்டவசமாக அரசுக்கு சொம்பு தூக்கும் பத்திரிக்கைகள்கூட இந்தக் கருத்தை ஆமோதிக்க முடியாத நிலைக்கு நாடு சென்றுவிட்டது. சமீபத்தைய அணுவிபத்து மசோதா, மீன்பிடி ஒழுங்குமுறை மசோதா மற்றும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தொடர்பான சட்ட முன்வரைவு ஆகியவை எல்லாம் வெள்ளையன் காலத்தில்கூட மக்களுக்கு செய்யப்பட்டிராத துரோகங்கள். எல்லா வேடங்களையும் அவிழ்தெறிந்துவிட்டு தனது “அமெரிக்க சேவகன்” உருவத்தின் விசுவரூப தரிசனத்தை காட்டத்துவங்கிவிட்டார் மன்மோகன். நம் தேசமே உரிமைகளை பறிக்கும் ஒரு பெரிய சிறப்புப்பொருளாதார மண்டலமாக மாறிக்கொண்டிருக்கிறது.  சர்வதேச அளவில் எதிர்ப்பு வந்த பிறகும் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட மருத்துவர் பினாயக் சென் ஆண்டுக்கணக்கில் சிறைவைக்கப்பட்டிருந்தார், ஆயிரக்கணக்கான மக்களைக்கொன்று ஒரு நகரையே நாசமாக்கிய யூனியன் கார்பைடு நிறுவன முதலாளி இன்றுவரை சுதந்திரமாக வாழ்கிறான். நான் தெரியாமல்தான் கேட்கிறேன், இனி எதை பிடுங்குவதற்கு இந்த ஜனநாயகம் ?

விவாதங்கள் முடிவில்லாமல் தொடர்கின்றன. வல்லரசுக் கனவில் இருக்கும் மக்கள் நிச்சயம் யதார்த்தத்துக்கு திரும்புவார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆயினும் அதற்குள் நாடு முழுமையாக விற்பனை செய்யப்பட்டிருக்கும் என்பதுதான் என் கவலையெல்லாம்..

Advertisements

“மன்மோகன் -முந்தைய பதிவு மீதான மற்றும் பதிவு சாராத விவாதங்களின் தொகுப்பு.” இல் 11 கருத்துகள் உள்ளன

 1. மிகச் சிறப்பான பதிவு தோழர்,

  வெகு எளிமையாக படிப்பவர் அனைவரின் உள்ளத்திலும் உட்கார்ந்து விடக்கூடிய நடை. தாராளமய தாசர்களின் கேள்விகள் அனைத்திற்கும் விடை கூறி புரியவைத்திருக்கிறீர்கள். தொடர்ந்து இது போன்ற பல கட்டுரைகளை தரவெண்டும்.

  செங்கொடி

 2. //அம்பானியின் சொத்து இன்னும் ஒரு லட்சம் கோடி உயரவேண்டுமானால் மேற்கொண்டு இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்//

  //பழைய துணி திருடுபவனைக் கூட கட்டிவைத்து அடிக்கும் நாட்டில் அம்பானி போன்றவர்கள் ரோல்மாடலாக கருதப்படுவதைவிட வேறு கேவலம் வேறு இருக்கமுடியுமா.. இந்த அழகில் சலுகைக்கு ஏங்குபவர்கள் ஏழைமக்கள் என்பது எத்தனை பெரிய மோசடி?//

  //காசில்லாதவர்கள் சாவுங்கள் என்பதை நேரடியாக சொன்னால் சாடிஸ்ட் என்று கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதால் டார்வினை துணைக்கழைத்து ஒரு தத்துவம் போன்ற தோற்றத்தை உண்டாக்குகிறார்கள்//

  //இனி எதை பிடுங்குவதற்கு இந்த ஜனநாயகம் ?//

  கை குடுங்க தோழர்.. அடி பின்னிப்புட்டீங்க..
  எளிமையான வரிகளைப் போட்டு பெரிய விஷயங்களை அழகாகப் புரிய வைக்கின்றீர்கள்.

 3. அட்ரா சக்கை! சிலிர்க்க வைக்கும் சிந்தனைகள்!

  பலமா மொக்கைய போடுறீங்க பாஸ்!

  நெறைய படிங்க! அப்பா ஆனதுக்கப்புறம் தாத்தா ஆனா போதும்!

 4. எனக்கு விவரம் தெரிந்தா நாளில் இருந்து இன்னும் பத்து ஆண்டுகளில் இந்திய வல்லரசு நாடக
  போகின்றது என்று இருபது ஆண்டக கேட்டு கொண்டு இருக்கின்றேன் இன்னும் பத்து ஆண்டில் என்று திரும்ப திரும்ப அதையே சொல்லுவார்கள்

 5. எனக்கு விவரம் தெரிந்தா நாளில் இருந்து இன்னும் பத்து ஆண்டுகளில் இந்திய வல்லரசு நாடக
  போகின்றது
  என்று !!!!
  இருபது ஆண்டுகளாக கேட்டு கொண்டு இருக்கின்றேன்,
  இன்னும் பத்து ஆண்டில் என்று திரும்ப திரும்ப அதையே சொல்லுவார்கள் .

 6. அத்தனை அறிவாளிகளுக்கும் எளிமையாக பதில் சொல்லி இருக்குறீர்கள் என்ன அறிவாளிகளின் கேள்விகள்தான் மாறது போல …………………….தங்களின் சட்டைபை காளியகதவரை 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s