காதல்.


ஏழு ஆண்டுகளாக திருப்பூரில் வசிப்பவன் காதலைப்பற்றி எழுதாமலிருப்பதுதான் என் பாவக்கணக்கில் பிரதானமானதாயிருக்குமென்று நினைக்கிறேன். வெளியூரில் காதலித்துவிட்டு இங்கு ஓடிவரும் சிலராலும் இங்கு வந்தபின்பு காதலிக்கும் பலராலும் நிறைந்திருக்கிறது எங்கள் நகரம். வேலை தேடிவரும் பலரும் இளையோர்கள், பெரும்பாலான பணியிடங்கள் நெருக்கடியானவை, நீண்ட பணிநேரங்கள் (குறைந்தபட்சம் 12 மணி நேரம் ), சினிமாவைத் தவிர வேறு பொழுதுபோக்கு கிடையாது., இவையெல்லாம் இளையோர்கள் ஒரு துணையைத் தேடிக்கொள்வதற்கான காரணத்தையும் வாய்ப்பையும் தருகின்றன. நான் தஞ்சாவூரிலோ அல்லது புதுக்கோட்டையிலோ மட்டும் இருந்திருந்தால் இந்த பதிவெழுதும் யோசனைகூட வந்திருக்காது என்பதுதான் நிஜம்.
என் அண்ணன் கல்லூரியில் படித்தபோது அவனுடன் படித்த மாணவனின் பதிவுத்திருமணத்தை தஞ்சாவூரில் நடத்தி வைக்கும் வேலையை செய்தான் ( ஒரு குழுவாக). சுமாராக ஒரு வாரம் ஜோடியை தலைமறைவாக வைத்து தேடிவந்த மணமகனின் தந்தையை எதுவுமே தெரியாது என்று அப்பாவிபோல சொல்லி நம்பவைத்து.., அவன் செய்த இந்த ஒரு செயற்கரிய செயலைத்தவிர வேறு சொல்லிக்கொள்ளும்படியான சம்பவம் அங்கு நடந்ததில்லை. அவனது அந்த காரியம் “எவ்வளவு பெரிய கிரிமினல் வேலை” என்று என் அம்மாவால் வர்ணிக்கப்பட்டது.
வேலைதேடி இங்கு வந்தபோது நான் தங்கியது ஒரு அடித்தட்டு மக்கள் வசிக்கும் காலனி வீட்டில் ( அது என் அப்பாவின் நண்பரின் அலுவலகம் அல்லது அதுபோன்றதொரு இடம், அவர் சாயத்தொழிலுக்கான வேதிப்பொருட்களை விற்பனை செய்பவர்.. ஆகவே மற்ற வட்டார வீடுகளில் அவர் மூலப்பொருட்களை இருப்புவைக்க அனுமதிக்க மாட்டார்கள்.) இதை நான் குறிப்பிடக்காரணம் எனது திருப்பூர் நண்பர்கள் பலர் இதுபோன்ற  வீடுகளை பார்த்தேயிராதவர்கள். அந்த தெருவில் வசிக்கும் யாவரும் வாரக்கூலி வாங்குபவர்கள். சரிபாதிபேர் பிரம்மச்சாரிகள். அங்குதான் காதல் திருமணங்கள் எத்தனை சுலபமானது என்பதை தெரிந்துகொண்டேன்.
எங்கள் காலனியின் முதல் வரிசை வீட்டிலிருந்த ஒரு தமிழ் இளைஞனும் இரண்டாம் வரிசை வீடு ஒன்றில் வசித்த கேரளப் பெண்ணும் காணாமல் போனார்கள். பதினைந்து நாட்கள் கழித்து அதே காலனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியேறினார்கள். கொடுமையிலும் கொடுமையாக அது குறித்து தெருவில் யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. எனது குழப்பத்தைப் பார்த்து பரிதாபப்பட்ட காலனிவாசி திருமணத்திற்கான எளிமையான வழியை சொன்னார். நண்பர்கள் சிலருடன் காதலர்கள் சிவன்மலைக்கு செல்வது அங்கு திருமணம் செய்துகொண்டு பிறகு ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்துக் குடியேறுவது.. சுலபம். யாருக்கும் தெரியாமல் இருகவேண்டுமா? ஏரியாவை மாற்றினால் போதும். நகரைச்சுற்றி புறாக்கூண்டு வீடுகள் சிதறிக்கிடக்கின்றன.
குடியிருப்புக்கு நேர் எதிரான நிலையில் இருந்தது அப்போது நான் வேலை செய்த அலுவலகம். அங்கு பணியாற்றிய எல்லோரும் முப்பது வயதுக்குக் குறைவான ஆண்கள் ( ஓரிருவர் தவிர). பிறகு அங்கு  ஒரு பெண் வரவேற்பாளராக நியமிக்கப்பட்டார். அதுவரை தூங்கி வழிந்த அந்த அலுவலகம் அதன் பிறகு வழிந்தபடியேதான் விழித்தது. ஓயாது ஒலித்த தொலைபேசிகள், நிற்க இடமில்லாமல் நிறைந்திருந்த வரவேற்பறை என எங்கள் தகுதிக்கு மீறிய கூட்டத்துடன் காணப்பட்டது அலுவலகம். சிறீராமனின் தோளை பார்த்தவர்கள் தோளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்று கம்பர் சொன்னதைப்போல இங்கு அலுவலகம் வந்தோர் “ரேஷ்மா கண்டார் ரேஷ்மாவே கண்டார்” என்று சொல்லும்படியானது நிலைமை ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ). தலைப்புக்கு அனாவசியமான சம்பவம் என்றாலும் இதில் ஒரு செய்தி இருக்கிறது, அதாவது சைட் அடிக்கவும் நம் ஆட்கள் தகுதி பார்க்கிறோம் என்பதுதான் அது.
இதே தகுதி பார்க்கும் பழக்கம் காதலிலும் தொடர்கிறது. நான் பார்த்தவரை அலுவலகப் பணியில் உள்ளவர்கள் தங்கள் தகுதிக்கு நிகரான பணியில் உள்ளவர்களையே காதலியாகத் தெரிவு செய்கிறார்கள் ( இதே தகவலை மூன்றாமாண்டு உளவியல் பாடமும் உறுதி செய்கிறது). நடுத்தர வர்கத்தவர்கள்தான் காதலிப்பதில் மிகவும் திட்டமிடலோடு இருப்பதாக நான் கருதுகிறேன். காதலிப்பவரின் பொருளாதார நிலை அவரது சாதி ஆகியவை காதலை திருமணத்தை நோக்கி நகர்த்துவதுவதற்கு மிக முக்கியமான காரணியாக உள்ளது. என் உடன் படித்த மாணவி, அவரது காதலன் விரும்புவதாக தெரிவித்தபோது அவரது சாதியை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே தான் சம்மதித்ததாக தெரிவித்தார், அதாவது துணைவர் தனது சாதிக்காரராக இருக்கவேண்டும் என்பதல்ல ஆனால் தனக்கு நிகரான சாதிக்காரராக இருக்கவேண்டும் என்பதுதான் ( பிற்பட்டவர் =பிற்பட்டவர்). மிடில் கிளாஸ் காதல் பெரும்பாலும் பெற்றோருக்கு பதிலாக மணமக்களே செய்துகொள்ளும் திருமண ஏற்பாடு எனும் கருத்து ஓரளவு சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ( நான் பார்த்தவற்றை வைத்து சொல்கிறேன் உண்மை இதற்கு மாறானதாவும் இருக்கக்கூடும் ).
இதுவரை திருப்பூர் மேல்தட்டு வட்டாரங்களில் காதல் திருமணத்தை நான் கண்டதில்லை. இங்கு அவர்களது திருமணமும்  ஒரு வியாபார ஒப்பந்தத்தைப்போலவே உள்ளது. ஆகவே நிதி மிகுந்தோரது காதல் பற்றிய தகவல் ஏதும் எழுதுவதற்கில்லை. எல்லா இடங்களிலும் போலிகள் வந்த பிறகு காதலிலும் இல்லாதிருக்குமா என்ன ? அதற்கும் ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. என் சென்னை நண்பன் ஒருவன் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை ‘சின்சியராக’ காதலிப்பதாக சொல்லியிருக்கிறான். கொங்கு வட்டாரத்தில் உள்ள எனது கல்லூரி கால நண்பன் ஒருவன் கடைசிகட்ட நிலவரப்படி ஏழு பெண்களுடன் நட்புக்கும் காதலுக்கும் இடையேயான ஒரு விஷயத்தை தொடர்கிறான்.  ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தனி செல்போன் எண் வைத்துக்கொண்டு அவன் அதை கையாளும் லாவகம் நம்மால் கற்பனைகூட செய்ய முடியாதது. தொழில்முறை (ப்ரொபஷனல்) காதலனானஅவனும் இதைப் படிக்கக்கூடுமென்பதால் அவன் ஓய்வு நேரத்தில் ஒரு நூற்பாலையில் பணி செய்வதையும் நான் குறிப்பிடட்டாக வேண்டியிருக்கிறது ( நீங்க அவனை வெறுமனே காதல் மட்டும் செய்பவனாக நினைக்கக்கூடாதில்லையா?? ). ஆயினும் ஆறுதலான செய்தி யாதெனில் திருமணத்தில் முடியும் காதல்கள் திருப்பூரில் மிக அதிகம்.
காதல் என்பது காதலர்களுக்கு மட்டும் ஆச்சர்யமளிப்பதல்ல பார்வையாளர்களுக்கும் அவ்வாறானதே. நான் கடைசியாக வேலை பார்த்த அலுவகம் உள்ள அடுக்ககத்தில் ஒரு சேட்டு வீடு இருந்தது, அவரது வீட்டு பதினேழு வயது வேலைக்கார (உ.பி மாநில)  இளைஞன் ஒரு நாள் தனது முதலாளியம்மாவுடன் சண்டை போட்டுவிட்டு வெளியேறினார். அவர் வெளியேறிய அன்றே அருகிலிருக்கும் அங்காடியில் வேலை செய்த ஒரு இளம் பெண் அவரை தேடி எங்கள் வளாகத்துக்கு வந்தார். நடந்தது என்னவென்றால் இளைஞர் கடைக்கு சென்று வந்த வகையில் இருவருக்கும் காதலாகியிருக்கிறது. கடையை மூடிவிட்ட கவலையில் இளைஞர் முதலாளியுடன் சண்டையிட்டு வெளியேற காதலியோ கடையில்லாவிட்டாலும் காதல் இருக்கும் நம்பிக்கையில் வந்துவிட்டார். இதில் ஆச்சர்யப்படும் சங்கதி என்னவெனில் இவர்கள் சந்தித்து மூன்று மாதங்களே ஆகியிருக்கிறது, பையனுக்கு தமிழ் தெரியாது பெண்ணுக்கு ஹிந்தி தெரியாது, இருவருக்கும் ஆங்கிலம் தெரியாது. ஆண் பெண் என்ற காரணத்தைத் தவிர வேறு எதுவும் இவர்களுக்கு சாதகமானதாக இல்லை ஆயினும் காதல் வந்து விட்டது!!. கிட்டத்தட்ட ஆயுளின் பாதியை தொட்டுவிட்ட என் முப்பது வருட வாழ்கையிலும் இதைவிட பேரதிசயம் ஒன்றை நான் கண்டதில்லை.
( விடுபட்ட தகவல்கள் இருக்கின்றன பதிவை தொடரும் எண்ணமும் இருக்கிறது… பார்க்கலாம் ).
Advertisements

“காதல்.” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. IPL பார்க்கும் அளவுக்கு என் நிலைமை மோசமாகிவிடவில்லை.

    வேலைப்பளு மிக அதிகமாக இருப்பதால் படிக்க அவகாசம் கிடைப்பதில்லை. ஆகவே எழுதுவதற்கு விஷயம் கிடைப்பதில்லை அவ்வளவுதான். இனி கூடுமானவரை வாரம் ஒரு இடுகை எழுத முயற்சி செய்கிறேன், நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s