திருப்பூர் -சிக்கல் நகராகும் பின்னல் நகரம்.

திருப்பூர், வங்காளதேசம், நூல் விலையேற்றம், ஏற்றுமதி, பழங்குடிகள், அன்னிய செலாவணி, டாலர், யூரோ

Advertisements

தமிழ்நாட்டில் செய்தி வாசிக்கும் பழக்கமுடைய எல்லோருக்கும் திருப்பூர் இப்போது சிரமதிசையில் இருக்கும் தகவல் தெரிந்திருக்கும். ஆயினும் அது எத்தனை தூரம் சிக்கலில் இருக்கிறது என்பது திருப்பூர்வாசிகள் பலருக்கே தெரிந்திருக்க நியாயமில்லை. பல நிறுவனங்களின் விரிவாக்கப்பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. ஏற்றுமதி ஆடைகளுக்கான விலை நிர்ணயம் செய்வது முன்னெப்போதுமில்லாத வகையில் கடினமானதாகவும் முடிவெடுக்கவியலாததாகவும் இருக்கிறது. ஆயத்த ஆடை ஏற்றுமதி ஆண்டொன்றுக்கு ஐந்து சதவிகிதம் வீழ்ச்சியடைவதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது ( 2007 ல் இருந்து). இங்கு எதிர்காலம் உறுதியற்றதாக இருக்கிறது என்பதைத்தவிர உறுதியாக சொல்லிக்கொள்ள வேறு செய்தி இப்போதைக்கில்லை.

கடந்த ஓராண்டில் மட்டும் பின்னலாடை நூல் விலை ஐம்பது சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. சாயமிடுவதற்கான கூலி இதைவிட அதிகமாக உயர்ந்திருக்கிறது.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டாலர் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்ததால் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவந்த நிறுவனங்கள் எல்லாம் தங்கள் பரிமாற்றத்தை யூரோவுக்கு மாற்றின. இந்த காலகட்டத்தில் யூரோ மதிப்பு பதினைந்து சதவிகிதம் சரிவடைந்திருக்கிறது. நான் ஏற்றுமதி ஒப்பந்தங்களை கையாளும் பணியை துவங்கியபோது (2007) காதுகுடைவதைப் போல சுலபமானதாக இருந்த விலை பேரங்கள் இப்போது அழகிரியை பாராளுமன்றத்துக்கு அழைத்துவருவதைப் போல சிரமமானதாதாக இருக்கிறது. திருப்பூர் நிலவரத்தைச் சொல்லி நான் இருபது செண்ட் கூடுதலாக கேட்க ஸ்பெயினில் உள்ள எங்கள் வாடிக்கையாளர் அவர்கள் பொருளாதார வீழ்ச்சிக்கு இது கட்டுப்படியாகாது என்று சொல்லி பத்து செண்ட் குறைக்கச்சொல்கிறார். அடுத்த மாதத்திலிருந்து பிச்சையெடுக்கும் முடிவில் இருக்கும் இரண்டுபேர் பேசிக்கொள்வதுபோல இருக்கிறது எங்கள் பேரங்கள். ஜெர்மன், போலந்து என எங்கு திரும்பினாலும் இதுதான் நிலைமை.

இப்போது நிலைமையை சீராக்க நடவடிக்கை எடுப்பதுபோல சில செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆயினும் சூழ்நிலை சரியாவதற்கான எந்த முகாந்திரங்களும் இப்போதில்லை, மேலும் மோசமாவதற்குத்தான் சாத்தியங்கள் அதிகமிருக்கிறது. போன வாரத்து உரையாடலொன்றில் நான் பணியாற்றும் நிறுவனத்தில் முதலாளி ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகை பத்து சதவிகிதமாக உயரப்போகிறது என்கிறார். அன்று மதியமே ஏற்றுமதி மதிப்புக்கு பதிலாக மூலப்பொருள் மதிப்புக்கு ஊக்கத்தொகை தருவது பற்றி கருத்து கேட்டு அரசிடமிருந்து சுற்றறிக்கை வந்திருப்பதாக தகவல் வருகிறது. நூல் ஏற்றுமதிகான வரிவிதிப்பும் பலனளிக்கப்போவதில்லை. ஏனெனில் வரியை சேர்த்தாலும் நூல் ஏற்றுமதி என்பது லாபகரமானது. முழுத் தொகையும் கொடுத்தால்தான் இப்போது நூல் பையை நாம் வாங்க முடியும் அதுவும் மாதத்தின் மத்தியில் வினியோகம் செய்வது நிறுத்தப்படுகிறது ( மாதத்தின் முதல் வாரத்தில் விலை மாற்றப்படும் என்பதால்).

கடன் வட்டிக்கு வழங்கப்பட்ட நான்கு சதவிகித சலுகை படிப்படியாக நிறுத்தப்பட்டுவிட்டது. மாநில அரசு தன் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து மின்சாரத்தில் விளையாடுகிறது. இனி நாள் ஒன்றுக்கு மூன்று மணிநேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இப்போது தொழிற்சாலைகளுக்கு தரப்பட்டிருக்கிறது. ஜெனரேட்டர் செலவினத்திற்காக மட்டும் ஆடை விலையை ஐந்து முதல் பத்து யூரோ செண்ட்டாவது உயர்த்தியாக வேண்டும். கடந்த ஏழு ஆண்டுகளில் வங்காளதேசம் தனது டீ சர்ட் ஏற்றுமதியை மூன்று மடங்காக உயர்த்தியிருக்கிறது. எனவே அங்கு போய்விட்ட இறக்குமதியாளர்கள் இனி இங்கு திரும்புவது சிரமம். பட்டியலை நீட்டிக்காமல் ஒருவரியில் சொன்னால் எடுக்கப்பட்ட நடவடிக்கையானது திருப்பூரில் தயாநிதி மாறனுக்கு சில பேனர் வைக்க மட்டுமே உதவியிருக்கிறது.

இது ஏதோ உலகப்பொருளாதார வீழ்ச்சியின் விளைவு என்றோ அல்லது எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்ட சம்பவமோ அல்ல. இந்த வீழ்ச்சியின் அறிகுறிகள் 2007 ல் இருந்தே தெரியத் துவங்கிவிட்டன. ஒரு சிறு கூட்டத்தின் சுயநலமும் சிறுதொழில்கள் மீதான அரசின் பாராமுகமும் இந்த வீழ்ச்சிக்கான காரணங்களில் முதன்மையானவையாக இருக்கின்றன.  திருப்பூரில் ஆதிக்கம் செலுத்துகிற எல்லா பெரிய நிறுவனங்களும் சொந்தமாக நூற்பாலை வைத்திருக்கின்றன. ஆகவே நூல் விலையுயர்வு பற்றி அவர்கள் யாரும் கவலை கொள்வதில்லை மாறாக இதனை அவர்கள் மறைமுகமாக விரும்புகிறார்களோ என்றும் எண்ணத்தோண்றுகிறது. ஏற்றுமதியாளர்கள் சங்கத்தை கட்டுப்படுத்தும் இவர்கள் நீண்ட காலமாக இந்த பிரச்சனை பற்றி பெரிய ஆர்வம் காட்டாமல் இருந்திருக்கிறார்கள். அனேகமாக இந்த சூழ்நிலை நீடித்தால் முப்பது சதவிகித நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு ஆளாகும், சந்தேகமில்லாமல் அவை எல்லாமே சிறிய அளவிலான தொழிற்சாலைகள்.

முப்பது சதவிகித  தொழிலாளர்களின் வேலையிழப்பு என்பது வெறும் புள்ளிவிவரமல்ல. காவிரி கைவிட்ட தஞ்சை வட்டாரத்து விவசாயக் கூலிகளின் வாரிசுகளும் வேலைக்கு வழியில்லாத மதுரை வட்டார மக்களுமே இங்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள். சொந்த ஊரில் வாழ வழியில்லாமல் திருப்பூருக்கு பிழைக்க வந்தவர்களுக்கு இங்கிருக்கும் வேலையும் பறிபோனால் என்னதான் செய்வார்கள்?  உழைப்பைத் தவிர வேறெதுவும் அறியாத மக்களால்தான் இந்த ஊரில் நிலைத்திருக்க முடியும்.  அவர்களில் முப்பது சதவிகிதம் பேருக்கு இந்த குறைந்தபட்ச வாழ்வாதாரமும் பறிபோனால் அவர்களுக்கு வேறு தொழிலோ போக்கிடமோ இனி கிடையாது.

இதற்கு அரசு என்ன செய்யும்  என்று யாரும்  கேள்வி கேட்க முடியாது. டாலர் கொட்டுகிறது என்பதற்காக நொய்யலும் காவிரியும் மாசுபடுவதை கண்டுகொள்ளாதிருந்த அரசு இப்போது பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியின் மூலம் அன்னிய செலாவணி வருவதால் இப்போது ஆடை ஏற்றுமதித் தொழிலின் வீழ்ச்சியை கண்டுகொள்ளாதிருக்கிறது. கண்ணனைத் தவிர வேறு சிந்தனை இல்லாதிருந்த பக்த மீராவைப்போலவே அரசும் அன்னியசெலாவணியைத் தவிர வேறு சிந்தனை இல்லாமல் இருந்தால் தரித்திரம் தேசியமயமாகாமல் என்ன செய்யும் ? இன்று உன்னுடையது நாளை வேறொருவருடையதாகும் எனும் கீதையின் வரிகள் நம் நாட்டில் துன்பத்துக்கு மட்டுமே பொருந்தக்கூடியது.

வெளிநாடுகளில் உபயோகப்படுத்தப்பட்ட கார் இறக்குமதிக்கு கடுமையான வரிவிதிப்பு இந்தியாவில் உண்டு.  டாடாவும் யூண்டாயும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் முன்யோசனையுடன் இருக்கும் அரசால் ஆடை ஏற்றுமதித்துறை குறித்து மட்டும் சிந்திக்க முடியாமல் போனதெப்படி ? நூல் ஏற்றுமதியின் திடீர் எழுச்சியும் மாறன் வாரிசுகள் மற்றும் கனிமொழி & கார்த்தி சிதம்பரம் கூட்டணியின் நூற்பாலை முதலீடுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றதாக இருக்கும் என்று கருதுகிறீர்களா? வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடைவிடாமலும் சலுகைவிலையிலும் மின்சாரம் தரும் அரசு திருப்பூருக்கு மட்டும் மின்சாரம் தரமுடியாதா ? சாராய வியாபாரத்தில் லாபத்தை அள்ளித்தரும் நன்றிக்காகவாவது அரசு ஏதேனும் செய்யவேண்டுமா இல்லையா?

இதற்கு என்ன தீர்வு என்று சொல்லுமளவுக்கு நான் ஏற்றுமதித்துறையில் விற்பன்னன் அல்ல. இன்னும் சொல்லப்போனால் எனக்கு சில வருடம் இளையவர்களைவிட இத்துறை விவகாரங்களில் நான் குறைவான அறிவுடையவன்.  ஆயினும் என் அறிவுக்கு எட்டியவரை இந்த பிரச்சனைக்கு தனித்த ஒரு தீர்வு இல்லை என்றே கருதுகிறேன். முல்லைத்தீவு, விதர்பா, சட்டீஸ்கர், சிங்கூர் என எல்லா ஊர் பிரச்சனைகளுக்கும் காரணம் ஒன்றுதான், திருப்பூர் ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. அரசின் கட்டுமானமே மக்கள் நலன் சார்ந்ததாக இல்லாதபோது எல்லா தரப்பு மக்களும் பாதிக்கப்படுவது என்பது தொடர்கதையாகத்தான் இருக்கும். சட்டீஸ்கர் பழங்குடிகளை வாழிடத்திலிருந்து விரட்டியடிக்கும் அரசு திருப்பூர்காரர்கள் தெருவில் நிற்பதைப் பற்றி மட்டும் எப்படி கவலைப்படும்?

ஓட்டல்கள் மூடப்பட்ட பந்த் அன்று காதை அடைக்கும் பசியுடன் இந்த பதிவை எழுதுகிறேன். இந்த பட்டினி இனி இங்கு நிரந்தரமாகிவிடுமோ என்ற எனது அச்சத்தைத் தவிர இப்பதிவில் இறுதியாகக் குறிப்பிட வேறு தகவல் என்னிடமில்லை.

“திருப்பூர் -சிக்கல் நகராகும் பின்னல் நகரம்.” இல் 13 கருத்துகள் உள்ளன

 1. மோசமடைந்து வரும் நிலையை அதன் பின் உள்ள வேதனையை அதனால் லபமடைபவர்க்ளை அடையாள படுதிஎருக்குரீர்கள் வாழ்த்துக்கள். ஆனால் இது பற்றிய தொழிலாளர்களின் எதிர்ப்புணர்வு மற்றும் அதை அவர்கள் வெளிபடுத்தும் விதம் பற்றி எதுவும் பதியவில்லையே? திருப்பூர் வாசிகளை பற்றிய உங்களது இந்த கட்டுரை அவர்களை சென்றடைகிறதா? அதற்கு ஏதேனும் முயற்சிகளில் ஈடுபடுலீர்களா?

 2. இதுபோன்ற சூழ்நிலைகளிலிருந்துதான் `தீவிரவாதிகள்’ ( என்று அதிகார வர்க்கத்தால் குறிப்பிடப்படுபவர்கள்) தோன்றுகிறார்கள் போலும்!
  ஒரு அம்பானிக்கு உதவும் அரசால்தான் ஓராயிரம் தீவிரவாதிகள்
  உருவாக்கப்படுகிறார்கள்! இது நிற்க,
  இனி திருப்பூரில் பந்த் என்றால் நேராக என் வீட்டுக்கு வாருங்கள் நண்பரே.
  எங்கள் குடும்பத்தோடு விருந்துண்டு பேசலாம்!

  (பி.கு. சமீபத்திலிருந்துதான் உங்கள் பதிவுகளை படிக்கிறேன்.)
  அன்புடன்,
  மாயகிருஷ்ணன்.

 3. இன்னும் சில செய்திகள்..
  என்னுடைய அலைபேசி எண்: 9976770671
  நான் திருப்பூர், வேலம்பாளையம் பகுதியில்தான் குடும்பத்தோடு வசித்து
  வருகிறேன். mayakrishnanv.blogspot.com என்ற பெயரில் சென்ற
  வாரத்திலிருந்து எழுதத் தொடங்கியிருக்கிறேன்.
  அன்புடன்,
  மாயகிருஷ்ணன்.

 4. என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. எனக்கு மிகக்குறைவான கால அவகாசமே எழுதுவதற்கென்று கிடைக்கிறது, சமீபமாக அது இன்னும் மோசம். நேரமின்மை காரணமாக தமிழிஷ் போன்ற தளங்களில்கூட இப்போது நான் புதிய பதிவுகளை விளம்பரப்படுத்துவதில்லை. ஆகவே பொதுவான மக்களின் மனோநிலையை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கில்லை.

  இந்த கட்டுரை எழுதியதை தவிர்த்துப் பார்த்தால் நானும் இப்பிரச்சனை பற்றி அக்கறையில்லாதிருப்பவர்கள் செய்வதைத்தான் செய்கிறேன் என்றே தோண்றுகிறது.

 5. அரசியலற்று அக்கறையின்றி வாழும் மனோநிலையை நம் மக்களுக்கு போதுமான அளவு ஊட்டிவிட்டது இந்த அரசும், வாழ்க்கை முறையும். ஓட்டுப் போட காசு வாங்கும் அற்ப நிலைக்கு மக்கள் தாழ்ந்து போனதன் காரணம் இதுதான். வேறு வழியின்றி அவர்கள் போராடக் கூடினாலும் சரியான தலைமை, அரசியல் பார்வையில்லாமல், நயவஞ்சகத் தலைமைகளால், வலுவில்லாமல் சிதறடித்து அழிக்கப்படுவார்கள்.

  அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் மக்களை அரசியல் உணர்வற்ற தனித்தீவுகளாக தங்கள் வாழ்க்கையைப் பற்றி தன்னந்தனியாக மட்டுமே போராடும் மனிதர்களாக மாற்றிவிட்டது முதலாளியங்கள். அங்கு இப்போதும் கம்யூனிஸம், யூனியன் போன்றவை எல்லாம் கெட்டவார்த்தைகள் போல் பார்க்கப்படும் மனநிலை வளர்ந்துள்ளது. இந்தியாவிலும் அந்த நிலை வராது என்பது என்ன நிச்சயம் ?

 6. அழைப்பிற்கு மிக்க நன்றி நண்பரே..

  (பி.கு: பந்த் அன்று என் பட்டினிக்குக் காரணம் சோம்பேறித்தனமே.. கொஞ்சம் தேடியிருந்தால் ஏதேனும் வழியை கண்டு பிடித்திருக்கலாம் )

 7. இந்தியாவின் நடுத்தர வர்கம் ஏறத்தாழ அரசியல் உணர்வற்ற நிலைக்கு ஏற்கனவே சென்றுவிட்டது என்றே கருதவேண்டியுள்ளது.

  இல்லாவிட்டால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு எனும் பிரச்சினை இப்படி வெறும் புலம்பலோடு சகித்துக்கொள்ளும் விஷயமாக இருந்திருக்காது.

 8. // எனக்கு மிகக்குறைவான கால அவகாசமே எழுதுவதற்கென்று கிடைக்கிறது, சமீபமாக அது இன்னும் மோசம். நேரமின்மை காரணமாக தமிழிஷ் போன்ற தளங்களில்கூட இப்போது நான் புதிய பதிவுகளை விளம்பரப்படுத்துவதில்லை. ஆகவே பொதுவான மக்களின் மனோநிலையை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கில்லை// சொல்வதற்கு தகுதி இல்லைதான் இருப்பினும் இந்த வேண்டுகோள் இதற்க்கு எதாவது மாற்று வழியை காணுங்களேன் இது போன்ற நல்ல விசயங்களை மக்களுக்கு கொண்டு செல்ல நேரம் கிடைக்கின்ற வேலையை தேடி பெற முயலுங்கள் விரைவில் பெற வாழ்த்துக்கள் 

 9. இன்று தான் தங்கள் பதிவினை படிக்க முடிந்தது. நன்றாக அனாலிசிஸ் செய்து எழுதி உள்ளீர். என் பங்குக்கு சில விபரங்கள்:

  நம்மவர்கள் லாப்பி (Lobby) செய்வதில் வடக்கத்தி காரர்களை விட திறமை கொஞ்சம் குறைவு தான். மேலும் நம்மவர்கள் பையர்களிடம் பேரம் பெசுவதைவிடு விட்டு தங்கள் நிறுவனத்தின் நிர்வாக திறனை இம்ப்ரூவ் செய்ய வேண்டும்.

  நான் கன்சல்டன்சி துறையில் இருப்பதால் சிலவற்றை குறிப்பிடுகிறேன்.
  Being in textile field for more than seven years and in tirupur for the past 2 years i would say,” we need to improve ourself and have to elevate into the next level in order to sustain”. Many people mis interpret the word Sustainability,
  there are lot of new business concepts like Lean Manufacturing, Waste minimization, Energy conservation by adopting industries can surely gain lot of benefits. if you can able to save few bucks in the process itself why you have to bargain with your customer. i have done several audits in Tirupur especially on Energy conservation we have lot of scope to conserve energy in our plants and get profits from waste 🙂

  may be if time permits we can surely discuss many things in person.

  and above all i too had a good experience on that day: பந்த அன்று காலைல டிபன் சாப்பிட 20KM சுத்தினேன் சார். எல்லா கடையும் மூடிட்டாங்க பந்த்னால. ஆனா பாருங்க பச்சை கலர் போர்டு போட்ட கடை (சாராய கடைதான்) மட்டும் திறந்து இருந்துது. போய் கேட்டாக்க அரசு அலுவலகங்களுக்கு பந்த் கிடையாதாம்.

  என்னோமோ போங்க.
  நேரம் இருந்தால் http://www.manavalan.wordpress.com பாருங்க ஏதோ அப்போ அப்பா எழுதறேன்.
  அப்புறம் http://www.virtualvastra.org/forum டெக்ஸ்டைல் க்காக ஒரு போரம் வெப் சைட்.
  எங்க கம்பனி சைட்: http://www.wisemgmtsys.com மார்கெட்டிங் பன்னாட்டி எப்பிடி??
  Thx & Regards
  Raman Azhahia Manavalan
  +91-9486467049

 10. Even if Karunanidhi allots 1% of the Spectrum money he got to rebuild Tiruppur in the upcoming “Ulaga Tamizh Maanadu”, it will help long way for Tirupur’s progress. Will he?

  And hats off to you that you brought up this issue when mainstream media (both nationwide and statewide) are talking about IPLs and Paarattu vizhas

 11. எங்க ஊருகாரய்ங்க(இராமநாதபுரம்) விவசாயம் செஞ்சு அதுல ஒன்னும் லாபம் கேடய்க்காத சூழல் வரும்போது ரோம்ப தைரியமா சொல்லுவாய்ங்க இதுல போன என்ன திருப்பூர் போயி ஒரு வருசம் வேல பாத்து கடன அடைச்சுருவம்ல அப்புடிம்பய்ங்க அதுவும் இப்ப இவிய்ங்காளுக்கு இல்லாம போயிரும் போல இருக்கே

 12. நீங்கள் சொன்ன தொழில்நுட்பக் குறைபாடுகளும் நிச்சயம் கவனத்தில் கொள்ளவேண்டியவையே. கட்டுரையில் குறிப்பிட்டதைப் போல நான் தொழில்நுட்பத்தில் பலவீனமானவன், ஆகவே அந்தத் தகவல்களை உங்களைப் போன்ற தகுதியுள்ளவர்கள் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

  ஆடைத்துறையை பாதிக்கும் அரசியல் காரணிகளை விளக்குவதற்காக அல்லது விவாதிப்பதற்காக எழுதப்பட்ட பதிவு இது. ஆகவே தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை நான் கட்டுரையில் சேர்க்க முயற்சிக்கவில்லை.

  பின்னூட்டத்தின் வாயிலாக விடுபட்ட சில தகவல்களை தந்தமைக்கு நன்றி நண்பரே.

 13. இன்றைய விலைவாசிக்கு திருப்பூரில் வேலைபார்த்து கடனை அடைப்பதெல்லம் நடக்காத காரியம். ஜெயலலிதா புண்ணியத்தில் வந்த டாஸ்மாக் கடைகள் கூடுதலாக கடன்காரர்களை இங்கு உருவாக்கிவிட்டது. ஏற்றுமதி சீரானாலும் பிழைப்பை ஓட்டும் அளவுக்குத்தான் சம்பள விகிதம் இப்போதைக்கு இருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s