பெண் சிங்கம் – விமர்சனங்களின் மீதான ஒரு விமர்சனம்.


அந்த முடிவை எப்படி நான் எடுத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும் அந்த முடிவை நான் எடுத்துவிட்டேன். அதைக் கேட்ட என் அறை நண்பர்கள் திகைத்தார்கள், நான் முடிவில் உறுதியாக இருப்பதைக்கண்டு  ஏதேனும் அசம்பாவிதம் என்றால் செல்லுக்கு கூப்பிடு என்று நினைவுபடுத்திவிட்டுப் போனார்கள். காரணம் என்ன என்பதை அனுமானிக்கவே முடியவில்லை, ஆயத்த ஆடைத்துறை மிகவும் ஆபத்தில் இருப்பதால் வந்த விரக்தியா? ஒழுங்காக படிக்காதது, அதிகப்பிரசங்கிக்த்தனமாக பேசியது போன்ற சிறுவயதில் செய்த தவறுகளால் வந்த அச்சமா? அல்லது தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் சிந்தனை  எல்லா  மனிதருக்குள்ளும் உண்டு எனும் உளவியலின் விளைவா?

நேற்று விடிந்தும் விடியாத காலை வேளையில் ( சுமார் 8 மணி)  இரண்டு கிருஸ்துவ மிஷனரி பிரச்சாரகர்கள் வீட்டுக்கதவைத் தட்டி உலகின் சுபிட்சத்துக்கான வழி அறிவியலிலோ அரசியலிலோ இல்லை அது பைபிளின் சகல பக்கங்களிலும் நிறைந்து வழிகிறது என்று சொல்லி கூடுதலாக சிலவற்றையும் சொன்னார்கள். அதாவது சைக்கிள் சக்கரம் சுற்றுவது முதல் ஷகீலா படம் ஓடுவது வரை யாவற்றையும் இறைவனே செயல்படுத்துகிறார். அக்கிரமங்களை அழித்து பூமியை காப்பாற்றும் யுகாந்திர மெயிண்டனன்ஸ் பணிக்காக பரிசுத்த ஆவி விரைவில் இங்கு வரப்போகிறது என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள். அவர்கள் போன பிறகுதான் முதல் பத்தியில் குறிப்பிட்ட முடிவை நான் எடுத்தேன் என்பதால் வேறு சில சந்தேகங்களும் எழுந்தன. ஒருவேளை பரிசுத்த ஆவி தனது தனது பராமரிப்புப் பணியை துவங்கியதால் வந்த சிந்தனையா? இல்லை மிஷனரிக்காரர்கள் அடுத்த வாரமும் வருவேன் என்றதால் ஏற்பட்ட பதற்றத்தால் எடுக்கப்பட்ட முடிவா?  இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒன்று என்னை பெண்சிங்கம் படம் பார்க்கும் முடிவிற்குத் தூண்டியது. ( அதற்காக நான் எப்போதும் சோகமான மனநிலையுடன் இருப்பதாக நீங்கள் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். கௌதம் மேனன் இனி தமிழில் படமே இயக்க மாட்டேன் என்ற விகடன் பேட்டியை படித்தபோதெல்லாம் நான் மட்டற்ற மகிழ்ச்சியில்தான் இருந்தேன்.)
மாலை திரையரங்கைத் தேடி திருப்பூரின் பிரதான வீதிகளில் சுற்றி வந்தேன். என்ன ஆச்சர்யம் கலைஞரின் காவியம் இங்கே எந்தத் திரையரங்கிலும் ஓடவில்லை. வெறும் ஆபரேட்டரை மட்டும் வைத்தே உளியின் ஓசை படத்தை நூறு நாட்கள் ஓட்டிய திருப்பூரா இது?  முன்வைத்த காலை பக்கவாட்டில் வைத்துக்கூட பழக்கமில்லாததால் திருட்டு டிவிடியிலாவது பார்க்கலாம் என்று கடைகளில் தேடினால் அந்தப்படத்து டிவிடி வரவேயில்லை என்றார்கள். திருட்டு விசிடியில்கூட பார்க்க முடியாத படங்கள் தமிழில் ஏராளமாக வருகின்றன ஆயினும் திருட்டு விசிடிக்காரர்ககளே தொட பயப்படும் படங்களும் தமிழில் வருவது எத்தனை பெரிய முன்னேற்றம்? இந்த செல்லுலாய்டு சிலப்பதிகாரத்தை இனி கலைஞர் தொலைக்காட்சியில்தான் காணவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டமையால் படத்தின் விமர்சனங்களையும் காட்சிகளையும் மட்டும் பார்த்துவிடலாம் என்று இறங்கி வந்தேன்.  இதற்காக தொலைக்காட்சியையும் இணையத்தையும்தானே நம்பியாக வேண்டும்.

முதலில் படத்தின் விளம்பரத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். படம் வெளியாவதற்கு முன்னால் விளம்பரங்களில் எல்லா நடிகர்களின் முகமும் காட்டப்பட்டதாம். பிறகு என்ன நினைத்தார்களோ இப்போது லட்சுமி ராய் மட்டும்தான் எல்லா  விளம்பரங்களிலும் வருகிறார். கூடிய சீக்கிரம் கலைஞரின் கதை வசனத்தில்  என்ற வாகியத்துக்கு பதிலாக ‘லட்சுமி ராயின் கவர்ச்சிக் கலக்கலில் பெண் சிங்கம்’ என்று குங்குமம் விளம்பர பாணியில் சொன்னாலும் ஆச்சரியப்பட வேண்டாம். திமுக பொதுக்கூட்டத்துக்கே குஷ்புவை வைத்துத்தான் கூட்டம் சேர்க்க வேண்டும் என்றானபிறகு கலைஞரின் எழுத்துத்திறனை உலகிற்குக் காட்ட லட்சுமையை நனையவிட்டு விளம்பரம் செய்வதில் என்ன அதிசயம் இருக்கிறது?  (தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பாடல்காட்சியில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனராலேயே (கே.ஏ. குணசேகரன்) ஒரு இடுக்கிலிருந்துதான் எட்டிப்பார்க்க முடிகிறது. )

போகட்டும் விடுங்கள். படத்தில் நடிகர்களின் நடிப்பு எப்படி என்று பார்த்தால் பத்திரிக்கைகளின் விமர்சனத்தின்படி ஜே.கே.ரித்தீஷ்தான் சிறப்பாக நடித்திருக்கிறாராம். எனக்கென்னவோ சிறப்பாக நடித்திருப்பது ரஜினிதான் என்று தோன்றுகிறது. படம் வெளியாவதற்கு முன்பான சிறப்புக்காட்சியை பார்த்துவிட்டு வந்து குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் என்று வாய்கூசாமல் சொல்லிவிட்டுப் போனார். ஆனால் மிக கவனமாக தன் குடும்பத்தை அவர் அந்தப் படத்துக்கு அழைத்துப்போகவில்லை. அட கலைஞரின் மொத்தக் குடும்பமாவது படத்தைப் பார்த்திருந்தால் ஒட்டுமொத்த திமுகவும் பார்த்த மாதிரி ஆகியிருக்கும், அதுவும் நடந்த மாதிரி தெரியவில்லை. வழக்கமாக முக்கால் ரூபாய் கொடுத்தால் ஒன்னரை ரூபாய்க்கு நடிக்கும் நடிகர்கள்கூட இந்தப் படத்தில் சொதப்பியிருப்பதாக விமர்சனங்கள் சொல்கின்றன. அது ஏன் என்பது யோசிக்க வேண்டிய விடயம்.

படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. அதாவது  ஐபிஎஸ் முடித்த கையோடு மீரா ஜாஸ்மின் கமிஷனராகி விடுகிறாராம்.  முரசொலி மாறன் இறந்த பிறகு அதுவரை என்ன செய்துகொண்டிருந்தார் என்றே தெரியாத தயாநிதி மாறன் மத்திய அமைச்சராகும்போது கட்சியின் சேர்ந்து ஒரே வாரத்தில் சரத்குமார் மக்களவை தொகுதிக்கான வேட்பாளராகும்போது இதில் என்ன லாஜிக் மீறல் இருக்கிறது? அதற்காக கவர்மெண்டையே கருணாநிதி கதை வசனம் எழுதுவது மாதிரி  நடத்துகிறார் என்று நாம் கருதலாகாது,  கதை வசனம் எழுதுவதற்கு கவர்மெண்ட்டை  நடத்துமளவுக்கு முக்கியத்துவம் தருகிறார் என்று வேண்டுமானால்  சொல்லிக்கொள்ளலாம்.

எல்லா பத்திரிக்கை விமர்சனங்களும் என்பத்து ஏழு வயதிலும் கருணாநிதி இப்படி  இளமையாக சிந்திக்கிறாரே என்று மேனி சிலிர்த்து எழுதியிருக்கின்றன.    கலைஞர்  படத்திலும் இரட்டை அர்த்த வசனமா? என்று விவேக்கை நோக்கி கேள்வி எழுப்புகின்றன. அடப்பாவமே, விமர்சனம் எழுதுபவர்கள் கலைஞரின் அறிக்கைகளையோ மேடைப்பேச்சையோ கேட்டதே இல்லையா? அதுமட்டுமில்லாமல் படத்தில் ஒரு படுக்கையறைக் காட்சியும் ஐட்டம் நம்பர் நடனமும் இருக்கும்போது இரட்டை அர்த்த வசனம் இல்லாவிட்டால் அது எப்படி தமிழ்ப் படமாகும்? மனோகராவுக்கு வசனம் எழுதியவர் இப்படி குப்பைகளை கொடுக்கிறாரே என்று விமர்சனம் செய்யாமல் இளமையாக சிந்திக்கிறார் என்று சப்பைகட்டு கட்டி எல்லா இளைஞர்களையும் அசிங்கப்படுத்துகின்றன நம்ம ஊர் பத்திரிக்கைகள்.

சொல்லிவைத்த மாதிரி எல்லா பத்திரிக்கைகளுமே இந்தப்படத்தில் கலைஞரின் வசனத்தைத் தவிர வேறு எதுவுமே உருப்படியாக இல்லை என்று சொல்கின்றன. இது எப்படி கலைஞரின் எல்லா படங்களுக்கும் பொதுவான விமர்சனமாக இருக்கிறது ? மற்றவர்கள் போகட்டும், தேசிய விருது வாங்கிய மீரா ஜாஸ்மினும்  ஏன் இப்படி பாடாவதியாக நடிக்கிறார்? இந்தக் கருத்தை நாம் கவனமுடன் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. எல்லோரும் சொல்கிறார்கள் என்றால் அதில் கொஞ்சம் உண்மையிருக்கலாம் இல்லையா? அதனால் இது பற்றி ஒரு இரவு முழுக்க சிந்தனை செய்து பார்த்தேன். காலையில் ஒரு வழியாய் விடை கிடைத்துவிட்டது. கதை வசனம் கண்றாவியாக இருப்பது  படிக்கையிலேயே தெரிந்துவிடும். பிறகு எப்படி அதை சிறப்பானது என்று மற்றவர்களை சொல்ல வைப்பது? இந்த இடத்தில்தான் கலைஞரின் ராஜதந்திரம் வேலை செய்கிறது. வசனத்தைத் தவிர எல்லாவற்றையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மட்டமாக இருக்கும்படி பார்த்துக்கொண்டால் எல்லோரும் வசனமே பரவாயில்லை என்று சொல்லித்தானே ஆகவேண்டும்?

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s