செம்மொழி மாநாடு – இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்கியோர் ஃபெப்சி.

“இந்த மாநாடு கேட்குமே மோர்”

Advertisements

ஒருவழியாக கோவை செம்மொழி மாநாடு நடந்து முடிந்துவிட்டது.  கேட்போர் காதை எல்லாம் கூசவைக்கிக்ற இடைவெளியில்லாத புகழுரைகளை கூச்சமில்லாமல் கேட்டு சாதனை படைத்துவிட்டார் கருணாநிதி. எல்லா மட்டங்களிலும் மாநாடு பற்றிய விவாதங்கள் அனல் பறக்கின்றன. நான் மட்டும் ஏன் சும்மா இருக்கவேண்டும்? அதனால் மாநாடு பற்றி ஒரு மறைமுக ரிப்போர்ட்டை கொடுக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன் (எவ்வளவு நாள்தான் நேரடி ரிப்போர்டுன்னு சொல்லுறது?). செம்மொழி பற்றிய மாநாடு பற்றிப் பேசினாலே கருணாநிதியை போற்றிப்பாடுவதுதான் தமிழ்நாட்டின் இன்றைய ட்ரெண்ட். கற்றாய்ந்த அறிஞர் பெருமக்களே இதை பின்பற்றுகையில் நாயினும் சிறியோனான நானும் அதைப் பின்பற்றுவதுதானே நியாயம்.

தமிழாசிரியர் நியமன கோரிக்கையையும்
வழக்கறிஞர் போராட்டத்தையும்
மவுனமாக கடந்து போகும் ஞானியே,
இத்தாலி மாதாவுக்கு
ஈழத்து பிள்ளைக்கறி படைத்த  பக்தனே,
லாட்டரி கொள்ளையனுக்குக்கூட
பாவமன்னிப்பும் பதவியும் தரும் இறைதூதனே,
மக்களுக்கு மலிவுவிலையில் அன்னமிட
அடையாறு ஆனந்த பவனுக்கெல்லாம் மானியம் தந்த வள்ளலே,
ஆக்கலும் காத்தலும்தான் இறைவன் பணியா ?
தமிழை சத்தமில்லாமல் அழித்துக் கொண்டிருக்கும் தமிழ் நாட்டு ஈசனே,

தமிழ் மக்கள் யாவருக்கும் பிச்சைப் பாத்திரம் கொடுத்தாய்,
அந்தக் கொள்கை பிடித்துப்போன குஷ்புவை கழகத்தில் இணைத்தாய்.

வேலை பார்த்து களைத்த ஆடவர்க்கும்
வேலை தேடி சலித்த ஆடவர்க்கும் ஆறுதல்தர
வீதிதோறும் மதுக்கடை திறந்தாய்,
அதுகண்டு வீட்டுப்பெண்கள் கண்ணீர் வடிக்காதிருக்க
கலர் டிவியும் கொடுத்தாய்.

வைத்தியம் செய்துகொள்ள கட்டுப்பாடு விதித்து
பார்வதியம்மாள் தீவிரவாதியாகாமல் நீதானே தடுத்தாய்.

உன்னைப் பாடாது போனால் தமிழினம் தாங்காது
முழுதாய்ப் பாடினால் தமிழ்மணம் தாங்காது.

அடப்பாவமே என்ன இது,  தமிழ் செம்மொழி மாநாட்டு கவியரங்கங்கள் எனக்குள் இப்படியொரு பாதிப்பை உருவாக்கும் என்று கனவில்கூட நினைக்கவில்லை. நான் பரவாயில்லை தொடர்ந்து ஐந்து நாட்களும் மாநாட்டை டிவியில் பார்த்த என் நண்பர் பினாயில் வாங்க வேண்டும் என்றாலும் கருணாநிதியை வாழ்த்திப் பாடிவிட்டுத்தான் கடைக்காரரிடம்  ஒரு பாட்டில் பினாயில் கொடுங்க என்கிறார். கருத்தரங்கம், கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம் என தொடர்ந்து பார்த்தவர்கள் தமிழ் பேசுபவன் தமிழனா அல்லது கருணாநிதியை வாழ்த்துபவன்தான் தமிழனா என்று குழம்பியிருப்பார்கள்.

ஒரு தனி மனிதனை வாழ்த்துவதற்காக இத்தனை பெரிய விழாவை இதுவரை யாரும் யாருக்காகவும் எடுத்திருக்க முடியாது. அதனால்தான் தமிழக முதல்வர் தானே ஒரு விழாவை ஏற்பாடு செய்து முடித்தும்விட்டார். எந்தத் தலைப்பு கொடுத்தாலும் பேச்சாளர்களோ கவிஞர்களோ எல்லோருமே கருணாநிதியைப் பற்றித்தான் பேசினார்கள். அப்படி பேசுபவர்களை மட்டும் தெரிவு செய்தார்களா அல்லது தெரிவு செய்தவர்களை அப்படி பேசும்படி செய்தார்களா என்பது விடைகாண இயலாத விவாதம். வைரமுத்து வகையறாக்கள் நக்கிப் பிழைப்பவர்கள் என்பது ஒன்றும் ரகசியமல்ல. அந்த எழவை செய்துவிட்டு போவதற்கென்ன? தமிழ்த் தாயே கவலைப்படாதே ஈழத்துத் தாய்மார்களை பாதுகாக்க கருணாநிதி இருக்கிறார் என்று வைரமுத்து கவி பாடுகிறார். முதலில் ஈழத்தமிழர்களை இவர்களிடமிருந்துதான் பாதுகாக்க வேண்டும் போலிருக்கிறது.

இப்படி ஈழத்தைப் பற்றி யாரேனும் பேசி காங்கிரஸ்காரர்கள் கோபப்பட்டுவிடக்கூடாது என்று கலைஞர் முன்பே திட்டமிட்டுவிட்டார் போல., வரும்போதே சிவத்தம்பி நான் முதலில் ஒரு இலங்கைக் குடிமகன் பிறகுதான் தமிழன் என்று ஜூவிக்கு பேட்டி கொடுத்துவிட்டார் (சீக்கிரமே சிவத்தம்பி மகாவம்சத்தை தமிழில் எழுதுவார் என்று எதிர்பார்க்கலாம்). அவருக்கு உலகத்தமிழர்மீது என்ன கோபமோ கருணாநிதி உலகத்தமிழருக்கெல்லாம் தலைவர் என்று வேறு சொல்லியிருக்கிறார், இதற்குபதில் தமிழினம் நாசமாய்ப் போகட்டும் என்று நாசூக்காய் சொல்லியிருக்கலாம்.

லேகிய வியாபாரிக்குக்கூட வாழ்த்துப்பா பாடும்  மு.மேத்தா சொறிந்துவிட்டதில்கூட ஆச்சர்யம் இல்லை, இவரு ஒருவேளை யோக்கியரா இருப்பாரோ என்று சிலரால் நம்பப்பட்டவர்களும் இதை செய்ததுதான் கொஞ்சம் புதிதாக இருந்தது (ஈரோடு தமிழன்பனும் இப்படித்தானா என்று நண்பர் ஒருவர் அதிர்ச்சியடைந்தார்). கொஞ்சம்கூட பேசாமல் ஒருவர் ஜால்ரா அடித்த சம்பவமும் நடந்தது. ஒரு பெண் வீணை வாசிக்க துரைமுருகன் சம்பந்தமே இல்லாமல் ரசித்துக்கொண்டிருந்தார்( டிவியில் பார்த்தது). இது என்ன புதுசா இருக்கே என்று யோசித்தால் வாசித்தது செல்வியின் மகள் எழிரசியாம்.

மாநாட்டு ஜால்ராக்களைப் பற்றி பேச்செடுத்தாலே  கருணாநிதி கூட்டம் போட்டால் இதெல்லாம் இருக்கும் என்று தெரியாதா? இதைப் போய் பெரிசாக்கிகிட்டு என்று சிலர் மனசாட்சியில்லாமல் பேசுகிறார்கள். ஐயன்மீர் இந்த வாதம் அத்தனை நியாயமில்லை. செருப்படி வாங்குவது அவமானம் என்பது எல்லோருக்கும் தெரியும். அது எவ்வளவு பெரிய அவமானம் என்பது செருப்படி வாங்கிப்பார்த்தால்தானே தெரியும்? ஆகவே மாநாட்டைப்பார்த்து அச்சமடந்தோர் சொல்வதை கொஞ்சமேனும் பரிதாபத்தோடு கேளுங்கள்.

பத்து லட்சம்பேர் வந்திருக்கிறார்கள் என்றால் மாநாடு வெற்றிதானே என்று ஒரு கருத்து உலவுகிறது. அவர்கள் தமிழகத்தைப் பற்றி குறிப்பாக கோவையைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வது நல்லது. சென்னையில் ஓனிக்ஸ் நிறுவன வண்டிகளை நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்த்த வரலாற்றை  நாம் மறக்கலாகாது. இவ்விசயத்தில் கோவை கொஞ்சம் அதிக வலுவானது, நாங்களெல்லாம் சாலையில் பத்து பேர் சேர்ந்து நின்று பல் தேய்த்தாலே வேடிக்கை பார்ப்பவர்கள். விடுமுறையும் கொடுத்து கொடீசியாவில் கண்காட்சியும் இருக்கிறது என்று சொன்னால் கேட்கவேண்டுமா? ( சாதாரண பொருட்காட்சிக்கே திருப்பூரில் கூட்டம் கட்டுக்கடங்காதிருக்கும்..). போதாக்குறைக்கு திமுக தொண்டர்களும் திமுகவினரால் காசு கொடுத்து கூட்டிவரப்பட்டவர்களும் பாதி அரங்கை நிறைத்து விட்டார்கள்.( இருநூறு ரூபாய் ஒரு நாள் சம்பளமாகக் கொடுத்து திருப்பூரில் இருந்து ஆட்கள் அழைத்துச்செல்லப்படுவதாக ஒரு தகவல் எங்களுக்கு வந்தது).

அதற்காக கோவை மக்கள் வெறுமனே வேடிக்கை விரும்பிகளென்று கருதலாகாது. இராணுவ வாகனத்தை குறுக்காட்டுவதற்க்கு இரண்டு மணி நேரத்தில் இருநூறு பேரை திரட்டுவது கோவையில் மட்டுமே சாத்தியம், அந்த அளவுக்கு இங்கு உணர்வுள்ளவர்களும் அதிகம். (குறுக்காட்டுவது – கோவை வட்டார வழக்கு, வழிமறிப்பது என்று பொருள்).

மாநாட்டு வளாகத்தில் பல்வேறு வசதிக்குறைவுகள் பலராலும் பட்டியலிடப்பட்டன. போதுமான கழிப்பறைகள் இல்லை, தண்ணீர் குழாய்களுக்கு அருகில் சாக்கடை ஆறாக ஓடுகிறது என அரங்கக் குறைபாடுகளும் பேருந்து வசதி இல்லை என்பன போன்ற மாவட்டம் தழுவிய குறைபாடும் பலராலும் சொல்லப்பட்டுவிட்டது. தமிழ்ப்பால் வழிந்தோடும் இடத்தில் ஆவின் பால் இல்லையே என்று பத்திரிக்கை ஒன்று அங்கலாய்த்ததாம். அதனை அறிந்த ஸ்டாலின் உடனடியாகத் தலையிட்டு ஆவின் கடை ஒன்றை ஏற்பாடு செய்தாராம். ஆனால் அந்தப் பிரச்சனையெல்லாம் இல்லாமல் ஒன்று மட்டும் தாராளமாகக் கிடைத்தது அது ஃபெப்சியின் பொருட்கள்.

யார் நினைவுபடுத்தினார்களோ திடலில் 12 ஃபெப்சி கடைகள் இருந்தன (நான் எண்ணிய வரை). இது போதாதென்று கழுத்தில் பெட்டியொன்றை கட்டிக்கொண்டு மக்களைத் தேடிச்சென்றும் ஃபெப்சி விற்பனை செய்யப்பட்டது. இரண்டாம் நாள் மாநாட்டின்போது மக்கள் கூட்டத்தினைப் பிளந்துகொண்டு பெப்சி சுமந்த லாரியொன்று வந்தது அதில் “செம்மொழி மாநாடு அவசரம்” என்ற வாசகம் ஒட்டப்பட்டிருந்தது. யார் கண்டது “இந்த மாநாடு கேட்குமே மோர்” என்று விளம்பரப் பதாகை வைக்காத ஃபெப்சியின் அவையடக்கத்தைப் பற்றி அடுத்த செம்மொழி மாநாட்டில் ஆய்வுக்கட்டுரையொன்றை யாரேனும் சமர்ப்பிக்கலாம். அல்லது காரைக்கால் அம்மையார் இப்போது இருந்திருந்தால் இறைவன் அவருக்கு மாம்பழத்துக்கு பதிலாக ‘ஸ்லைசை’த்தான் அருளியிருப்பார் என்று யாரேனும் கவிபாடலாம்.

ஆய்வரங்கங்களில் பார்வையாளர்களே இல்லையாம். முன்கூட்டியே பதிவு செய்யாமல் ஒரு ஆர்வத்தில் காணவிரும்பியவர்களுக்கும் அனுமதி தரப்படவில்லை. ஆய்வரங்கத்தை காண அனுமதி பெற்ற பெரும்பாலானவர்கள் தொடர்ந்து ஒலிபரப்பான மாநாட்டுப்பாடலை கேட்க சகிக்காமல் ஓடியிருக்கவேண்டும். யாரோ காலை மிதித்தது மாதிரி ஸ்ருதி ஹாசன் அலறும் அப்பாடலை மக்கள் கதறக் கதற தொடர்ந்து ஒலிபரப்பிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். மாநாட்டுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்த முதல் நன்மை அப்பாடல் ஒளிபரப்பு தொலைகாட்சிகளில் நிறுத்தப்பட்டதுதான்.

நிறைவாக, மாநாட்டின் சிறந்த ஆய்வு என்று தமிழச்சி பாடியதைச் சொல்லலாம். ஏனெனில் இதுவரை கருணாவின் அபிமான கவிகள் தமிழை வைத்துப் பிழைக்கிறார்கள் என்று நாம் கருதிவந்தோம். கருணாநிதியின் உமிழ்நீர்கூட தமிழ்தான் என்று தமிழச்சி சொன்ன பிறகுதான் இவர்கள் எல்லோரும் கருணாவின் எச்சிலைப் பொறுக்கித்தான் பிழைக்கிறார்கள் என்ற உண்மை பலருக்கு உறைத்திருக்கிறது. அந்தவகையின் தமிழச்சி தங்கபாண்டியன்தான் சிறந்த ஆய்வுக்கவிதையை வெளியிட்ட பெருமைக்குரியவராகிறார்.

“செம்மொழி மாநாடு – இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்கியோர் ஃபெப்சி.” இல் 3 கருத்துகள் உள்ளன

 1. தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்

  பறையனுக்கு மந்திரி
  பதவியாம்!!
  சமத்துவம் வந்து புல்லரிக்குது
  அடிச்ச கொள்ளைக்கோ
  கையரிக்குது

  ஈழத்தின் பிணநாற்றம்
  தாங்காமல் ஓடி வந்த சிவத்துக்கு
  பொன்னோடு

  ஈழத்தமிழனுக்கு திருவோடு
  கடலில் துப்பாக்கி சூடு
  சாதி மாறி காதலிச்சா ஒரே போடு

  பாலாறு திரிஞ்சு போக
  பெரியாறு பொரிஞ்சு போக
  எதைப்பிடுங்க மாநாடு ?

  போலீசு சொல்லுது

  டேய் ! இது செம்மொழி மாநாடு

 2. ஹோட்டல் வஸந்தபவனின்” அந்த வண்டியில் 30 ரூபாய் கொடுத்து உணவை வாங்கினேன். மீண்டும் அரைமணி நேரம் கழித்து பரிசோதனைக்குப்பின் மாநாட்டு வளாகத்திற்குள் சென்றேன். உள்ளே கரகாட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள். முன்பு வரும் போது கூட்டம் அவ்வளவாக இல்லை, கலை நிகழ்ச்சிக்கு அதிக அளவில் கூட்டம் மொய்த்தது.

  அடித்துப்பிடித்து ஒரு இருக்கையில் அமர்ந்தேன்.வாங்கிய உணவுப்பொட்டலத்தை பிரித்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஒரு சிறிய டப்பாவில் புளிசோறு, ஒரு சிறிய டப்பாவில் எலுமிச்சை, கின்லே தண்ணீர்,குர்குரே, சின்னீஸ் ஊறுகாய். சோறு மொத்தமாய் 5 ரூபாய்க்கூட போகாத அளவுக்கு கேவலம். கின்லேவையும் குர்குரேவையும் தூக்கி வீசினேன். மொத்தமாய் கணக்குப்போட்டால் 30 ரூபாய் கூட போகாத இதற்கு எதற்கு மானியம்? அதற்கு எத்தனை கோடிகள் அமுக்கினார்களோ தெரியவில்லை. மக்களின் பணத்தை வாரியிறைக்கப்படும் இவ்விழாவில் முடிந்த அளவுக்கு கொள்ளை நடந்திருப்பதற்கு சாட்சி இந்த உணவே போதும்.

 3. 30 ரூபாயில் 10 ரூபாய் கின்லே 5 ரூ குர்குரே செம்மொழித்தமிழனின் வாழ்வை அழித்த கோககோல கம்பெனியின் கின்லே, செம்மொழி மாநாட்டுக்கு தமிழனுக்கு தரப்பட்ட பாலிடாயில்

  பன்னாட்டு பாகாசுரக்கம்பெனிக்கு வரவேற்பு, வறுமைத்தமிழனுக்கு குர்குரே தரும் கொடூரம், பெப்ஸியால் வேலை இழக்கவைக்கப்பட்ட மக்களுக்கு அதையே தந்து கொள்ளையடிக்கும் அற்புதம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s