காதல் – ஒரு வீண் ஆய்வு.


சர்வதேச அளவில் !? பலரை விமர்சனம் செய்தபோதுகூட கடுமையான எதிர்வினைகளை நான் சந்தித்ததே இல்லை. ஆனால் காதல் என்ற இடுகையை எழுதிவிட்டு என் நண்பர்களிடம் வாங்கிகட்டிக்கொண்டது கொஞ்சநஞ்சமல்ல. சொல்லிவைத்த மாதிரி என்னுடன் தொடர்பிலிருக்கும் நண்பர்கள் எல்லோரும் திட்டித்தீர்த்துவிட்டார்கள். உனக்கு ஏன் இந்த அனாவசியமான வேலையெல்லாம்?, இதை நீதான் எழுதினாயா? , உனக்கு என்ன வருதோ அதை மட்டும் செய் ஆகியவை மட்டும்தான் பதிப்பிக்கத் தகுந்த நாகரீகமான விமர்சனங்கள். நல்வாய்ப்பாக இவர்கள் யாரும் பின்னூட்டமிடும் பழக்கம் இல்லாதவர்கள் ஆகையால் யூனிகோடில் உதை வாங்கும் ஆபத்தில் இருந்து தப்பித்தேன்.

ஆயினும் காதலைப் பற்றி உனக்கு என்ன தெரியும் என்ற அவர்களின் கேள்வியில் நியாயமில்லாமல் இல்லை. நான் பத்தாம் வகுப்புவரை படித்தது ஆண்கள் பள்ளியில். விவரம் போதாமையால் ஆண்களுக்கென்றே நேர்ந்துவிடப்பட்ட நெசவியலை பாலிடெக்னிக்கில் எடுத்துத் தொலைத்தேன் ( “நூலும் இல்லை வாலும் இல்லை” மற்றும் “பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி” ஆகிய சினிமா பாடல்கள் எங்களுக்காவே இயற்றப்பட்டதோ என்ற சந்தேகம் எங்கள் வகுப்புத் தோழர்கள் எல்லோருக்கும் இருந்தது).  அடுத்து படித்த  ஆடை உற்பத்தி படிப்பு இருபாலருக்குமானது என்றாலும் அங்கும் வேடிக்கை பார்க்கும் வேலையைத்தான் செய்தேன். முழுதாக மீசை முளைக்கும் முன்பே வேலைக்கு வந்துவிட்டதால் ஆட்டோகிராப் பாணியில் சைக்கிளில் போய் பத்திரிக்கை வைப்பதற்கான தேவை எனக்கு இல்லாமலே போய்விட்டது.

கடுமையாக வேலை செய்தால்தான் முன்னேற முடியும் என்று தவறாக வழிநடத்தப்பட்டேனாகையால் கண்ணாடியின் முகத்தைப் பார்ப்பதற்குள் வயது இருபத்தைந்து ஆகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் சீக்கிரமே பலரை வேலை வாங்கும் வேலைக்கு வந்துவிட்டதால் இருபத்துநான்கு வயதிலேயே என் நடவடிக்கைகளில் சித்தப்பாத்தனம் வேறு வந்துவிட்டது.  இந்தப்பதிவை ஒரு கதையல்ல நிஜம் எபிசோடாக்க விருப்பமில்லையாகையால் சுற்றிவளைக்காமல் சொல்லி விடுகிறேன், ஆகவே காதல் பற்றி எழுத எனக்கு கொஞ்சம் தகுதி குறைவாகத்தான் இருக்கிறது.

சொந்தப் புலம்பல் போதும், தலைப்புக்கு வரலாம். சும்மாயிருப்பவனுக்கு காதலைக் கிளப்பிவிடுவதிலும் ஒழுங்காக போய்க்கொண்டிருக்கும் காதலை கலைத்துவிடுவதிலும் நண்பர்கள் பங்கு மகத்தானது. இங்கு காதலை சேர்த்து வைக்கிற நண்பர்களின் சுபாவத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அது எப்படி காதலுக்கான உதவி நண்பர்களிடமிருந்து மட்டுமே வருகிறது ? இயான் பாவ்லவும் பியாகேயும் தவறவிட்ட ஆராய்ச்சி வாய்ப்பு இது (இந்த யோசனையை மருத்துவர் ருத்ரனுக்கு டெடிகேட் செய்கிறேன்). என்னளவில் சில காரணங்களை தென்படுகின்றன. காதல்வயப்பட்டவர்கள் செய்யும் பல இம்சைகளில் இருந்து தப்பிக்க அவர்களை திருமணத்திற்குள் தள்ளுவது அவசியமாகிறது.

மேன்ஷன் தாழ்வாரங்களில் நள்ளிரவில் பேயைப்போல செல்லில் பேசியபடியே நடந்துகொண்டிருப்பார்கள், நாம் தூங்கவும் முடியாது போகட்டும் ஒட்டுக்கேட்கவாவது செய்யலாம் என்றால் அதற்கும் வழியிருக்காது. மொட்டை மாடி முக்குகளில் மெல்லிய குரலில் போனில் பேசியபடியே சிலர் உட்கார்ந்திருப்பார்கள். நீங்கள் எதேச்சையாக அங்கு போகையில் திடீரென எழுந்து திகிலூட்டுவார்கள். போனில் பேச வழியில்லா நிலையிலும் இவர்கள் சும்மா இருப்பதில்லை. போர்வையைப் போர்த்திக்கொண்டு குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். பீப் ஒலியை எண்ணிக்கொண்டே நீங்கள் தூங்க முயற்சி செய்ய வேண்டும்

காதல் வழியும் காலர்டியூனை வைத்துக்கொள்வது இவர்களது பொது அடையாளம்.  இப்போது பல இடங்களில் உசுரே போகுது உசுரே போகுது எனும் பாடல் ரிங்டோனாக ஒலிக்கிறது. மற்ற பாடல்களோடு ஒப்பிடுகையில் இது கொஞ்சம் பரவாயில்லை, ஏனெனில் இந்த வரிகள் சுற்றியிருப்போரது நிலைக்கும் பொருத்தமாயிருக்கிறது.(இதே காரியங்களை சிற்சில மாற்றங்களோடும் கொஞ்சம் கூடுதல் துணிச்சலோடும் புதிதாக திருமணம் நிச்சயம் ஆனவர்கள் செய்கிறார்கள்).

நாம் கதைகேட்க தயாராக இல்லாத நேரத்தை சரியாகக் கண்டுபிடித்து தனது காதல் துவங்கிய கதையை பதினாறாவது முறையாக சொல்வார்கள். இவர்கள் தொல்லையிலிருந்து தப்பிக்க இரண்டு வழிகளே இருக்கிறது. முதலாவது காதலைப் பிரிப்பது, இதில் ரிஸ்க் குறைவு ஆனால் வேறு இரண்டு பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க தயாராக இருக்கவேண்டும். ஒன்று அவரது காதல் தோல்விப் புலம்பலையும் நீங்கள்தான் கேட்டாகவேண்டும். இரண்டு, அவரது அடுத்த காதலின் கதைகளையும் நீங்கள் கேட்கும் நிலை வரலாம். ஆகவே எத்துனை சிரமம் வந்தாலும் காதலை சேர்த்துவைப்பது நல்லது என்று நண்பர்களின் உள்ளுணர்வு சொல்லிவிடும் போலிருக்கிறது.

உங்கள் நண்பர்களில் ஒருதலைக் காதலர்கள் இல்லையென்றால் நீங்கள் புண்ணியம் செய்தவர்கள். இவர்கள் கொடுமை முற்றிலும் வேறானது. முதல் நாள் நான் ஏன் இவளுக்காக ( அல்லது இவனுக்காக) இவ்வளவு கஷ்டப்படனும் ? எனக்கென்ன தலையெழுத்து என்ற தலைப்பில் ஒன்றரை மணிநேரம் உரையாற்றுவார்கள். அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்துக்குள், நான் ஏன் இவனை( ளை) காதலிக்கிறேன் தெரியுமா? என்ற முற்றிலும் எதிரான தலைப்பில் வாதிடுவார்கள் (‘இப்ப புரியுதா இந்த கட்டிய நான் ஏன் வாங்கினேண்ணு’ எனும் நிர்மா விளம்பர பாணியில் படிக்கவும்). தாங்க மாட்டாமல் நீங்கள் ஏதாவது தீர்வை சொன்னால் வாழ்கைய உணர்வுபூர்வமாக அணுகத்தெரியாதவர்கள் என்ற பட்டத்தை உங்களுக்கு வழங்குவார்கள். நான் பார்த்த மற்றும் கேள்விப்பட்ட இளம்வயது ஆண்களின் தற்கொலை சம்பவங்கள் பெரும்பாலும் ஒருதலைக் காதலால்தான் நிகழ்ந்திருக்கிறது.

காதலைச் சொல்வதில் மூன்று முறைகள் பரவலாகப் பின்பற்றப்படுகிறன. நீங்கள் பிச்சைக்காரர்களிடம்கூட இந்த வழிமுறையை பார்க்கலாம். சில பிச்சைக்காரர்கள் எதுவும் பேசாமல் “ஏதாவது போட்டுட்டு போறது” என்ற முகபாவத்துடன் அமர்ந்திருப்பார்கள், வேறு சிலர் காசு போட்டாலே ஆச்சு என்ற உறுதியுடன் பிச்சை கேட்டபடியே துரத்துவார்கள். காதலை சொல்வதிலிலும் இந்த நுட்பங்களே கையாளப்படுகிறன. முதல் வகையினர் நீ காதலைச் சொன்னால் நான் மறுக்க மாட்டேன் என்ற செய்தியை சம்மந்தப்பட்டவரிடம் தெரிவிப்பார்கள், கேட்டாக வேண்டியது அவரது பொறுப்பு. இரண்டாவது வகை வலுக்கட்டாயமாக காதலைப் பெறுவது, தொடர்ந்து ஏதாவது வழியில் முயற்சி செய்துகொண்டே இருப்பது இவர்கள் பாணி. எனக்குத் தெரிந்த நிறுவனம் ஒன்றின் இளம் அதிகாரி பேருந்து நிறுத்தமொன்றில் ஒரு பெண்ணின் காலில் விழுந்து காதலிக்க வைத்தார் (மிகைப்படுத்தல் ஏதும் இல்லை,போதையில் இருந்த அவர் நிஜமாகவே பலர் வேடிக்கை பார்க்கையில் காலில் விழுந்து அழுதார்… என்னால் சகித்துக்கொள்ள முடியாத செய்கை இதில்லை., அந்தப் பெண் அவரை ஏற்றுக்கொண்டதுதான்).

மூன்றாவது வகை மேற்கூறிய இரண்டுக்கும் இடைப்பட்டது. கலைஞர் டிவி ரமேஷ் பிரபாவின் பாணியை இதனுடன் ஒப்பிடலாம். கலைஞர் டிவியின் சந்தித்த வேளை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் எட்டு முப்பத்தைந்துவரை கலைஞரைப் பாராட்டி ஏதாவது சொல்கிறாரா என்று ரமேஷ் பார்ப்பார். இல்லாவிட்டால் அவரே கலைஞரைப் பற்றி ஏதாவது சொல்லுங்களேன் என்று நேரடியாகவே கேட்டுவிடுவார். அதுபோலவே இந்தவகையினரும் தானாகவே ஏதாவது நடக்கிறதா என்று காத்திருப்பார்கள் நடக்காவிட்டால் கடைசியாக ரமேஷ் பிரபா மாதிரி அவர்களே வேறுவழியில்லாமல் கேட்டுவிடுவார்கள்.

அத்தனை தூரம் மூளையை கசக்க விரும்பாவிட்டால் இருக்கவே இருக்கிறது தமிழ்நாட்டின் பாரம்பரிய வழக்கமான மாமன் மகள் மீதான காதல். இது இன்றளவும் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பழக்கமாக இருக்கிறது. இப்போதும் எனது ஒன்றுவிட்ட சகோதரர்கள் இருவர் மாமன் மகளைக் காதலிப்பதை தன் வாழ்வின் ஆகப் பெரிய லட்சியமாக கொண்டிருக்கிறார்கள். இந்திய அளவில்கூட அறுபத்தைந்து சதவிகித திருமணங்கள் சொந்தத்துக்குள்தான் நடக்கிறது என்கிறது சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்று.  இதில் எதிலும் சேர்த்தியில்லாமல் பார்த்த ஓரிரு நாட்களில் காதலிக்கத் துவங்கிய ஜோடிகளை பெங்களூரில் பார்த்திருக்கிறேன்.

ஒப்பீட்டளவில் ஆண்களைவிட பெண்களே காதலில் அதிகம் நேர்மையானவர்களாகவும், உறுதியானவர்களாகவும் மற்றும் அப்பாவிகளாகவும் இருக்கிறார்கள். பெரும்பாலான ஆண்களது சிரமம் காதலை ஏற்றுக்கொள்ளவைப்பதோடு முடிந்துவிடுகிறது. அதன் பிறகு அந்த உறவை பெண்கள்தான் அதீத அக்கறையோடு தொடர்கிறார்கள். வேறொரு பெண்ணுடன் காதலனுக்கு திருமணம் நடக்கும்வரை அவரது வாக்குறுதியை நம்பிக்கொண்டிருந்த பெண்ணை எனக்குத் தெரியும். காதலனின் கைச்செலவுக்குப் பணம் கொடுத்துவிட்டு அவனிடம் சாக்லேட் வாங்கித்தரச்சொல்லி கேட்கும் பெண் ஒருவர் என் நட்புவட்டத்தில் இருக்கிறார்.

(கடைசி பத்தி ஒரு தனி பதிவு போடுமளவுக்கு விஷயமுடையது., வேறு வழியில்லை மூன்றாம் பாகம் எழுதியே ஆகவேண்டும்)

Advertisements

“காதல் – ஒரு வீண் ஆய்வு.” இல் 6 கருத்துகள் உள்ளன

  1. மிகவும் ரசித்தேன் நீங்க ஏன் வடிவேலுக்கு இதுமாரி எழுத கூடாது அட நல்ல நகைசுவையாவது எங்களுக்கு கிடைக்குமில்ல

  2. // நீங்க ஏன் வடிவேலுக்கு இதுமாரி எழுத கூடாது //

    சார்.. உங்க ஜட்ஜுமெண்டு ரொம்ப தப்பு. ஒரே ஒரு பக்கத்தை படிச்சுட்டு இப்படி ஒரு முடிவெடுக்குறது அவ்வளவு நல்லா இல்லைங்க.

  3. உங்கள் எழுத்து பானி நன்றாக உள்ளது .. நான் மிகவும் தாமதமாகவே உங்கள் தளத்திற்கு வந்திருக்கிறேன் . அனால் இதற்க்கு முன் வினவில் வாசித்து இருக்கிறேன் தொடர்ந்து எழுதவும்

  4. உண்மையாகவே நீங்கள் குறிப்பிட்ட படிதான் காதல் வயப்பட்ட நண்பர்கள் துன்புறுத்துவார்கள். அதை விட கொடுமை ஒவ்வொரு புகைப்படங்களை காட்டி எப்படி ஜோடி பொருத்தம் என்று கேட்பதோடு நிற்காமல் நாங்கள் ஏதாவது நல்ல இருக்கு அப்படின்னு சொல்லிவிட்டா போதும் ஒரு மார்க்கமாக சிரித்து கொண்டிருப்பார்கள் அதற்கு பயந்தே ஒரு கருத்தும் சொல்வதில்லை. அவர்களுக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாதவர்களை விரும்புவார்கள் நாம் இதெல்லாம் சரி வருவது கஷ்டம் என்றால் நம்ப மாட்டார்கள் ஆனால் ஒரு நாள் அவர்களே வந்து முடியல்ல விட்டேன் என்பார்கள். அது என்னவோ தெரியவில்லை கொஞ்சம் சராசரியை விட வயதுக்கும் மீறிய பக்குவம் இருந்து இதையெல்லாம் எதிர்த்தால் நம்மை உனக்கு காதல் என்றால் என்னன்னு தெரியுமா என்று சொல்லியே வாயடைத்து விடுவார்கள்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s