கோவிந்தசாமி- மார்க்சிஸ்ட் கட்சியின் துரோகியல்ல., முன்னோடி.


கடந்த வாரம் புதனன்று திருப்பூரின் சகல திசைகளிலும் பயணித்தாக வேண்டிய நிலையில் இருந்தேன். போகும் திசையெங்கும் திருப்பூரின் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி மக்களை பேனர்கள் வாயிலாக அழைத்துக்கொண்டிருந்தார். வியாழக்கிழமை மாலை அவரது அடுத்த கட்ட திட்டம் பற்றி மக்களிடம் விளக்கப்போவதாக ஒலிபெருக்கியில் ஊரெங்கும் அறிவித்தவண்ணமிருந்தார்கள். ஒரே நாளில் ஒரு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ இத்தனை செலவு செய்து ஒரு பொதுக்கூட்டம் நடத்த முடியுமா? என்று விவரமறியாத சிலர் ஆச்சர்யப்பட்டார்கள். இது பற்றி எழுதலாம் என்ற எண்ணம் எழுந்தாலும் அன்றைய பெங்களூர் பயணத்தின் பொருட்டு அந்த யோசனையை கைவிட்டேன்.

ஐந்து நாள் கர்நாடகாவில் தங்கியமையால் கோவிந்தசாமியின் பொதுக்கூட்டம் பற்றிய செய்திகளை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. வெறும் ஐந்து நாளிலேயே எனது சட்டை பேண்டெல்லாம் பெரிதானது உள்ளிட்ட வெளியூர் பயணத்துக்கே உரித்தான பல கவலைகள் இருந்தமையால் கோவிந்தசாமி பற்றி யோசிக்கவே எனக்கு அவகாசமில்லை. ஒருவழியாக திருப்பூர் வந்து இறங்கினால் வேறு பல பேனர்கள் தெருவெங்கும் முளைத்திருந்தன. இந்த முறை கோவிந்தசாமி திமுகவினரோடு இணைந்து ஸ்டாலினை வரவேற்றுக்க்கொண்டிருந்தார். ஒரு மார்க்சிஸ்டு சட்டமன்ற உறுப்பினர் இப்படி நிறம் மாறுவது சாத்தியமா என்று நான் சந்தித்த சிலர் கேள்வி எழுப்பினார்கள். கட்டுரை எழுதும் யோசனையை மீண்டும் கையிலெடுக்க இது போதாதா?

எங்க ஊர் MLAவின் கதை தெரியாதவர்களுக்கு இந்த முன்னோட்டம் கொஞ்சம் உபயோகமாக இருக்கும். இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு வரை இவர் கொஞ்சம் யோக்கியராக இருந்தாரென கல்வெட்டுக்கள் சொல்கின்றன ( அவரது ஆரம்பகால தொழிற்சங்க நண்பர் சொல்கிறார்). முன்னாள் தொழிற்சங்கவாதியான இவர் இந்த முறை சட்டமன்றத்துக்குத் தேர்வான பிறகு அவரது நடவடிக்கைகள் முற்றிலுமாக மாறியிருக்கின்றன. ஆளுங்கட்சியுடன் அதீதமான நெருக்கம் பாராட்டியது, தனது கட்சியின் நடவடிக்கைகளிலிருந்து விலகியிருந்தது என பல கட்சித்தாவல் அறிகுறிகளை அவர் கடந்த மூன்றாண்டுகளாக வெளிப்படுத்திக் கொண்டேயிருந்திருக்கிறார். இம்மாதம் நடந்த பொதுவேலைநிறுத்தத்தின் போது அவர் மட்டும் அப்போராட்டத்தில் பங்கேற்காமல் இருந்தபோதே அவரது நிலைப்பாடு சற்றே வெளிப்படையாக தெரியவந்தது. கடைசியாக, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி ஸ்டாலினுக்கு பாராட்டுவிழா நடத்தப்போவதாக அவர் அறிவித்ததன் வாயிலாக மார்க்சிஸ்ட் கட்சியே அவரை துரத்திவிடும் சூழலை திறமையாக உருவாக்கியிருக்கிறார்.

திருப்பூரில் விவரமறிந்தவர்களுக்கு கோவிந்தசாமியின்  சமீபகால “வளர்ச்சி” தெரிந்தேயிருக்கிறது. ஒரு நாள் அவகாசத்தில் ஒரு மாநகரையே தன் முகம் பதித்த பேனர்களால் நிரப்பமுடியும் அளவுக்கு அவர் செழிப்பானவராக இருக்கிறார். திருப்பூரைச் சுற்றி ஏராளமான நில முதலீடுகள் அவரது சுற்றத்தாரால் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. திருப்பூரின் பெருமுதலாளிகளே பொறாமைப்படும் அளவுக்கு கோடிகளை விழுங்கிவிட்டு பிரம்மாண்டமாக எழும்பியிருக்கிறது அவரது வீடு. முதலாளிகளை அழைத்துப்போய் தொழிலாளர் நலத்துறை அமைச்சரை சந்திக்க வைக்கும் தரகர் வேலை பார்ப்பவர் மற்ற முறைகேடுகளைச் செய்யத் தயங்கியிருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை. ஒரு தொழிற்சங்கவாதி, பணி நேரத்தை பத்து மணி நேரமாக மாற்றச்சொல்லும் கோரிக்கையோடு வரும் ஆலை அதிபர்களை அமைசரிடம் கூட்டிச்செல்கிறார் என்பதைவிட வேறு என்ன அயோக்கியத்தனம் இருக்க முடியும்?

ஊரின் எதிகாலமே கேள்விக்குரியதாக இருக்கும் காலத்தில் ஸ்டாலினுக்கு இங்கு பாராட்டுவிழா நடத்துவது அசிங்கத்தின் உச்சம். நகரம் பற்றியெறிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னனின் செய்கைக்கு இது சற்றும் சளைத்ததல்ல. ஆயினும் நாம் சிந்திக்கவேண்டியது இவ்விடயத்தில் குற்றவாளி கோவிந்தசாமி மட்டுமா என்பதே.

பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ஸ்டாலினுக்கு பாராட்டுவிழா எடுக்கும்வரை மார்க்சிஸ்ட் ஏன் அமைதியாக இருந்தது? ஒரு பார்சலில் இருபத்தைந்து லட்சத்தை அமைச்சருக்கு லஞ்சமாகக் கொடுத்ததை கோவிந்தசாமி ஒப்புக்கொண்டதாக இப்போது சொல்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. தொழிலாளருக்கு விரோதமான ஒரு செயலுக்காக ( 10 மணிநேர வேலைநேரம்) முதலாளிகளிடம் வசூலித்த தொகையை அமைச்சருக்குத் தந்த ஒரு உறுப்பினரை கட்சியின் சில பொறுப்புக்களில் இருந்து மட்டும் நீக்கிவிட்டு இரண்டு ஆண்டுகளாக அமைதியாக இருக்கிறது கட்சி. இதை எவ்வாறு ஒரு தொண்டர் புரிந்து கொள்வார் ? ஒரு குற்றவாளி தண்டிக்கப்படுவதைக் காட்டிலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவி கட்சிக்கு முக்கியம் என்றா? இல்லை லஞ்சக் குற்றச்சாட்டுக்கு தண்டனை தருமளவுக்கு கட்சி அதிகாரம் மிக்கது என்றா?

உண்மையில் கோவிந்தசாமியை கண்டிக்கும் யோக்கியதை மார்க்சிஸ்ட் கட்சிக்கு இல்லை என்பதுதான் முதல் பிரச்சனை. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கேரளாவின் பினராயி விஜயன் மீது இன்றுவரை கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை. பெருநிறுவனங்களுக்கு நேரடியாகவே அடியாள் வேலை பார்க்கும் புத்ததேவ் பட்டாச்சார்யா அதை திமிருடன் பிரகடனமும் செய்கிறார், கட்சி அமைதியாகத்தான் இருக்கிறது. தமிழகத்திலும் ஊழலில் ஊறிய திமுகவையும் அதிமுகவையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாறிமாறி ஆதரித்தவண்ணமிருக்கின்றன. ஆக ஊழலோ அல்லது தொழிலாளர் விரோத நடவடிக்கைகளோ மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிரானவை இல்லை. அவர்களது பிரச்சனை தமது சட்டமன்ற உறுப்பினரது எண்ணிக்கையை காப்பாற்றிக்கொள்வதுதான். சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைந்துவிடாமல் காப்பாற்ற கோவிந்தசாமியை சகித்துக்கொண்டது கட்சி. அந்தப் பதவியை வைத்து அதிகபட்சம் என்ன சாதிக்க முடியும் என்று திட்டமிட்டு ஸ்டாலினை சரணடைந்திருக்கிறார் கோவிந்தசாமி. என்ன வேறுபாடு இருக்கிறது இருதரப்புக்கும்?

திருப்பூரில் உள்ள கம்யூனிஸ்டு கட்சிகளின் தொழிற்சங்கங்கள் வெறும் பஞ்சாயத்து பேசும் அமைப்புக்களாக மாறி பலநாட்கள் ஆகின்றன. பனிரெண்டுமணிநேர கட்டாயவேலையை எதிர்த்து இவர்கள் யாரும் போராடியதில்லை, தொன்னூறு சதம் தொழிலாளர்களுக்கு பி.எஃப் கிடையாது அதற்காகவும் இவர்கள் எதுவும் செய்தது இல்லை, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் சுமங்கலி திட்டம் என நூதன உழைப்புச் சுரண்டலை எதிர்த்தும் இவர்கள் செயல்பட்டதில்லை. மேலே சொன்ன எல்லாவற்றையும் சங்கங்கள் எதிர்க்கின்றன என்பதில் நமக்கு சந்தேகமில்லை. ஆயினும் இவற்றை வீரியத்துடன் எதிர்க்கவேண்டிய தேவையிருக்கும் ஒரு நகரில் இவர்கள் வெறுமனே நிதிவசூல் மட்டும் செய்ய பயிற்றுவிக்கப்படுவார்களேயானால், அதில் உருவான கோவிந்தசாமி புரோக்கராக இருக்க முடியுமேயன்றி போராளியாக முடியாது.

ஒரு காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புதிய உறுப்பினர்களை சேர்த்த இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் இப்போது கிடைப்பவரை எல்லாம் சேர்க்கும் நிலையின் இருக்கின்றன.  கம்யூனிசத்தின் அடிப்படையைக்கூட இவர்கள் உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்வதில்லை. அதை செய்தால் தொண்டன் முதலில் அவன் கட்சியைத்தான் கேள்வி கேட்பான். இந்தியாவின் அதிகார அமைப்புக்குத் தக்கவாறு கம்யூனசத்தை ரீமேக் செய்வதென்பது கொஞ்சமும் பிரயோஜனப்படாதது. வாரம் ஐந்து நாட்கள் நான் ஏகபத்தினி விரதனாக இருப்பேன் என்று யாரேனும் சொன்னால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்களோ அதே விமர்சனத்தைத்தான் இந்த கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகள் மீதும் நாம் வைத்தாகவேண்டும்.

மற்ற கட்சிகளுடன் ஒப்பிடுகையில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளில் யோக்கியர்கள் அதிகம்தான். திராவிடக் கட்சிகளின் கவுன்சிலர்கள்கூட ஸ்கார்பியோ காரில் வலம் வரும்காலத்தில் வரதராஜன் அரசுப் பேருந்தில் பயணித்ததை நான் கண்டிருக்கிறேன். குடிசை வீட்டில் வசிக்கும் எம்.எல்.ஏ மார்க்சிஸ்ட் கட்சியில் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. இக்கட்சிகளின் மீது மக்களுக்குள்ள குறைந்தபட்ச மரியாதையும் இப்படியான ஆட்களால்தான் நீடிக்கிறது.  ஆயினும் இவை எல்லாம் பழங்கதையாகும் காலம் வெகுதொலைவில் இல்லை. ஜோதிபாசுவின் வாரிசு ஒரு தொழிலதிபர், ஈ.கே.நாயனார் வீட்டுத் திருமணத்தில் அவர் வீட்டுப் பெண்கள் கிலோ கணக்கில் நகை அணிந்துகொண்டு உலாவந்தார்கள், சுப்பராயன் சம்மந்தம் செய்திருப்பது திருப்பூரின் மாபெரும் ஏற்றுமதியாளரான K.P.R வீட்டில், மன்னார்குடி எம்.எல்.ஏ சிவபுண்ணியத்தின் சொத்துக்கணக்கு இப்போது கணிசமாகக் கூடியிருக்கிறது.

ஆகவே இன்னும் ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் இக்கட்சிகளும் ஏனைய கட்சிகளுக்கு நூறு சதவிகிதம் வித்தியாசமில்லாததாகிவிடும். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் அரசால் வேட்டையாடப்பட்டவர்கள் இந்தக் கம்யூனிஸ்ட் கட்சியினர்தான். அந்த ரத்த சரித்திரத்தில் வளர்ந்த கட்சி என்பதை நினைவுபடுத்திக்கொள்ளக்கூட இனி அங்கு ஆளில்லாது போகலாம். அப்போது மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவிந்தசாமி மாதிரியான ஆட்கள்தான் உதாரண புருஷர்களாக இருப்பார்கள்.

Advertisements

“கோவிந்தசாமி- மார்க்சிஸ்ட் கட்சியின் துரோகியல்ல., முன்னோடி.” இல் 4 கருத்துகள் உள்ளன

  1. //ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கேரளாவின் பினராயி விஜயன் மீது இன்றுவரை கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை. பெருநிறுவனங்களுக்கு நேரடியாகவே அடியாள் வேலை பார்க்கும் புத்ததேவ் பட்டாச்சார்யா அதை திமிருடன் பிரகடனமும் செய்கிறார், //
    Kochi April 17 : Communist Party of India-Marxist (CPI-M) Kerala state secretary Pinarayi Vijayan, who is among the accused in the Rs.374 crore SNC Lavalin scam, Saturday earned a major reprieve when the Central Bureau of Investigation (CBI) said there is no evidence to prove that he had made any financial gains.
    புத்ததேவ் பட்டாச்சார்யா திமிருடன் பேசியதாக எனக்குத் தெரிந்து இல்லை. மற்ற மாநிலங்களில் கண்ணை மூடிக்கொண்டு ‘SEC(Special Economic Zone)’கள் கொடுக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் கலைஞர் இதுபோன்று பெரிய கம்பெனிகளுக்கு நிலங்களை தானம் செய்ய விழா எடுத்து ‘தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி’ என்று படமும் காட்டுவார். மே.வங்கத்தில் சீனாவின் அடியொற்றி எடுக்கப்பட்ட ஒரு முயற்சியே சிங்கூர் விவகாரம். அதை தோற்கடித்து அரசியலாக்கி வெற்றி கண்டார் மம்தா. மற்றபடி மற்ற மாநிலங்களில் வன்கொடுமையாக நிலங்களைப் புடுங்குவது போல் மே.வங்கத்தில் செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்பது என் கருத்து.

    இன்னும் நிறைய தகவல்கள் சேகரித்து எழுதியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இடதுசாரிகள் எங்கு தவறிழைக்கிறார்கள் என்று சுட்டிக் காட்ட நிறைய தகவல்கள் கொடுத்திருக்கலாம். இன்றைய நிலையில் மக்களுக்காக ஜனநாயக வழியில் போராட எஞ்சியுள்ள சொற்பமான சக்தி அவர்களே. அவர்களும் கரைந்து கொண்டிருக்கிறார்கள் தங்கள் தவறுகளை உணரவே விரும்பாமல்.

  2. OUR ELECTION COMMISSION RULE MUST CHANGE. TO KEEP THE SYMBOL ALL POLITICAL PARTIES JOIN BIG PARTIES TO MAINTAIN VOTE PERCENTAGE. UNLESS U CHANGE THIS RULE NO BODY GIVE INDIVIDUALITY. “ALL IN ONE KUTTAI”

  3. சிறப்பான பதிவு. உள்ளூர்காரரான உங்களின் இந்த பதிவில் தான் இந்த விடயத்தில் கொஞ்சம் தெளிவாய் புரிந்து கொள்ள முடிகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s