காதல்- இதில் ஏமாறுபவர்களே குற்றவாளியாக்கப்படுவார்கள்.


காதல் எனும் தலைப்பில் நான் எழுதத் திட்டமிட்டிருந்த விசயங்களே வேறு. எனது தோழி ஒருவர் எதிர்கொண்ட மோசமான அனுபவங்கள் பற்றிய பதிவாக அது முதலில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அது குறித்து எழுத அவரது அனுமதியை நான் பெற்றிருந்தேன் என்றாலும் சற்று தாமதிப்பது நல்லது என்று தோன்றியதால் முதல் பதிவின் உள்ளடக்கத்தை தலைகீழாக மாற்றவேண்டியதாகிவிட்டது.

ஒரு கருத்து அனேக ஊடகங்களாலும் நகைச்சுவையாகவோ அல்லது அல்லது அழுத்தமாகவோ சொல்லப்பட்டு வருகிறது. பெண்கள் பர்ஸ் கனமாக இருப்பவனையே தெரிவு செய்வார்கள், அவர்கள் மிஸ்டுகால் மட்டும் கொடுப்பவர்கள், வசதியான மாப்பிள்ளை கிடைத்தால் காதலனுக்கு டாட்டா காட்டிவிடுவார்கள் என்பதாக பல காட்சியமைப்புக்கள் இன்றுவரை தமிழ் சினிமாவில் வருகின்றன. வசதியானவரைத் தேடுவது என்பது பால் வேறுபாடு இல்லாமல் இருக்கிற இயல்பு. ஆனால் இது தமிழ் சினிமாவில் வில்லனின் மகனது தனிப்பட்ட இயல்பாகவும் பெண்களில் பொது இயல்பாகவும் காட்டப்படுகிறது.

இந்தப் பிரச்சாரம் இளைய தலைமுறையிடையே பெண்கள் சுயநலக்காரர்கள் எனும் சிந்தனையை விதைத்திருக்கிறது.  நீங்கள் நேர்மையாக சிந்திப்பவராகவும் ஓரளவுக்கு நட்பு வட்டம் உடையவராகவும் இருப்பின் இத்தகவல் முற்றிலும் எதிர்மறையானது என்பதை அறிய முடியும். இதை விரிவாக விவாதிக்கும் முன்பு மேலே குறிப்பிட்ட தோழியின் கதையை அறிந்துகொள்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். மூன்றாண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமான மென்பொருள் துறையில் பணியாற்றும் பெண் அவர். அவரது காதலுக்கு வயது இரண்டாண்டுகள் இருக்கலாம். கடைசி ஆறு மாதங்கள் அவர்கள் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளுமளவு காதலின் எல்லையை விரிவுபடுத்தியிருந்தார்கள்.

காதலரின் புறக்கணிப்புக்கு ஆளான தருணத்தில்தான் தன் காதலைப் பற்றி என்னிடம் அவர் சொன்னார். நிராகரிப்புக்கு முதலில் சொல்லப்பட்ட காரணம் பெண்ணுடைய பிடிவாதம்.  தோழியினுடைய தொடர் கண்ணீருக்குப் பிறகு அந்த இளைஞர் காதலைத் தொடர இயலாமைக்கு தனது குடும்பச்சூழலை காரணம் காட்டினர். பிறகும் இவர் விலகாதிருந்ததால் கடைசி காரணமாக இவரது ஒழுக்கம் பற்றி கேள்வி எழுப்பினார். இத்தனைக்கும் அசராமல் அந்த இளைஞனுக்காகவே காத்திருந்தார் தோழி. இந்த சனியனை விட்டுத்தொலை என்று இவரை சமாதானம் செய்துகொண்டிருந்த வேளையில்தான் தோழி கர்பமாய் இருக்கும் தகவல் தெரியவந்தது (இயல்பாகவே அவருக்கு மாதவிடாய் சுழற்சி சீராக இராது என்பதால் அவருக்கு சந்தேகம் எழுந்தபோதே இரண்டாவது மாதம் ஆகிவிட்டிருந்தது). அப்போதும் இனியாவது அவர் என்னை கல்யாணம் பண்ணிக் கொள்வாரில்லையா என்று என்றுதான் கேட்டார். கருவுற்ற தகவலைக் கேட்டதும் காதலர் கேட்ட முதல் கேள்வி “அது எப்படி சாத்தியம்?”. பிறகு சுதாரித்துக்கொண்டு கருக்கலைப்புக்கு அவசரப்படுத்தினார், திருமணம் செய்துகொள்கிறேன் என்ற வாக்குறுதியோடு.

கருக்கலைப்பு என்பது சாதாரண விவாதத்தின்போது சுலபமான ஒன்றாகவே நமக்குத் தோன்றுகிறது. நிஜத்தில் அது அவ்வளவு எளிதானதல்ல. பெற்றோரில் ஒருவர் உடன் வரவேண்டும் என்பது எல்லா மகப்பேறு மருத்துவர்களும் வைக்கும் விதி. வேறுவழியில்லாத நிலையில் அவரது தாயாரிடம் உண்மையைச் சொல்லியாக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். சாணிபவுடர், தூக்குக் கயிறு ஆகிய வாய்ப்புக்கள் பரிசீலிக்கப்பட்டு பிறகு அவர்கள் மருத்துவரை அணுகினார்கள். கருக்கலைப்புக்கு முன்பு ஸ்கேன் செய்வது கட்டாயம் என்பதால் அவர்கள் அதற்கு அனுப்பப்பட்டார்கள். திருமணமானவரா என்ற கேள்விக்கு தாயும் மகளும் பதில் சொல்லத் தடுமாற, புரிந்துகொண்ட ஸ்கேன் மைய ஊழியர்கள்(அவர்களும் பெண்களே) முகத்தைத் திருப்பிக்கொண்டு ரிப்போர்டை தூக்கியெறிந்திருக்கிறார்கள். மிகையில்லை கேவலமான பார்வையுடன் ரிப்போர்டை மேசையிலிருந்து கீழே தள்ளிவிட்டிருக்கிறார்கள் (திருமணத்துக்கு முன்பு கருவுறும் பெண்கள் இப்படித்தான் மருத்துவமனைகளில் நடத்தப்படுவதாகச் சொல்கிறார் மகப்பேறு மருத்துவமனையொன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர்). வாழ்வில் எதிர்பார்த்திராத மற்றும் எதிர்கொள்ளவியலாத அவமானத்துகாக அழக்கூட அவர்கள் கழிப்பறையின் கதவு திறக்கும்வரை அன்று காத்திருக்க வேண்டியிருந்தது.

பரிசோதனையோடு அவர்களது சோதனைகள் முடியவில்லை. கருக்கலைப்புக்கு ஒருநாள் மருத்துவமனையில் தங்கவேண்டும். உள்ளூரில் எப்படி அது சாத்தியம்? வெளியூரென்றால் எங்கு செல்வது? ஆகப்போகும் செலவு எவ்வளவு? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் அப்போதும் வரிசைகட்டி நின்றன. இரண்டு விவரமறியாத பெண்கள், கட்டாயம் யாரிடமேனும் ஆலோசனை கேட்டாகவேண்டிய கேள்விகள், யாரிடமும் சொல்ல இயலாத பிரச்சனை.. சிக்கலை ஓரளவுக்கேனும் உங்களால் உணர்ந்துகொள்ள முடிகிறதா? எல்லாவற்றையும் கடந்துதான் அவர் கருக்கலைப்பு செய்துகொண்டார். ( ஒரு வாக்கியத்தில் சொல்லிவிட்டேன் என்றாலும் இது அவ்வளவு சிறிய விடயடமல்ல. கருக்கலைப்பினால் ஏற்படும் வலி இன்னுமொரு தண்டனை, பிரசவம் என்பது குழந்தை வெளியே வரும் செயல் என்றால் கருக்கலைப்பு குழந்தையை வலுக்கட்டாயமாக பிடுங்கும் செயல். வலியின் தீவிரத்தை உணர இந்த ஒரு ஒப்பீடு வாசிப்பவருக்குப் போதுமானது என்று நினைக்கிறேன்.)

பரிசோதனை முதல் அபார்ஷன் வரையிலான ஒரு வார காலத்தில் காதலனின் செல்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அவர் திருமணத்தைப் பற்றி என்ன சொல்லியிருப்பார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். விலாவாரியாக சொல்ல முடியாதாகையால் திருமணம் செய்துகொள்வது பற்றிய கோரிக்கைக்கு அவரது  குறுஞ்செய்தி பதில்களில் ஒன்று இது “நான் உன்னுடன் இருந்ததற்கு பதிலாக வேண்டிய அளவு உனக்கு செலவு செய்திருக்கிறேன்”. இதன்பிறகும் அந்தக் காதலை அவர் தூக்கியெறிவதற்கு நானும் எனது இன்னொரு தோழியும் ஒரு மாதம் போராடவேண்டியிருந்தது.

இனி எந்த சிக்கலும் இருந்திருக்காது என்று நீங்கள் நிம்மதியடையலாம், நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். ஆனால் திருமணத்துக்கு முன்பான கருக்கலைப்பு அவ்வளவு லேசில் ஒரு பெண்ணை நிம்மதியடைய விடுவதில்லை. தனது குழந்தையைத் தானே கொன்றுவிட்டதாக  எழும் குற்றஉணர்வு அவரை நீண்ட காலம் அலைகழித்தது( கடைசிவரை அவர் அதைப் பாவம் என்ற வார்த்தையாலேயே குறிப்பிட்டார்). ஏறத்தாழ மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தார் (அதற்குள் எப்படி மனமாற்றம் சாத்தியம் என்று ஆச்சரியப்பட்டார் இவ்விடயம் அறிந்த இன்னொரு தோழி). பெண் பார்க்கும் படலம் துவங்கியதும் அவரது பயம் வெவ்வேறு கிளைகளாக வளர்ந்ததேயன்றி குறையவில்லை. முதலாவது பழைய காதலையும் கருவுற்றதையும் நிச்சயிக்கப்ப்படப்போகும் மணமகனிடம் சொல்வதா வேண்டாமா எனும் குழப்பம்.

தோழி : “இதெல்லாம் சொல்லிடவா ….?” (காதலையும் கருவுற்றதையும்)

நான்: ஏங்க இதையெல்லாம் போய் சொல்றேங்கறீங்க?

தோழி :சொல்லலைன்னா அவங்கள ஏமாத்தின மாதிரி ஆயிடாதா?

நான் :இதுல ஏமாத்த என்ன இருக்கு?

தோழி: ஆமா.. நான்தான் பியூர்  இல்லையே..

இது எங்கள் ஒரு உரையாடலின் சிறு பாகம். (பியூர் எனும் வார்த்தையை கவனியுங்கள், இவை நம் சமூகத்தின் வழமையான கண்ணோட்டத்தின் விளைவன்றி வேறென்ன?)

மாப்பிள்ளை முடிவு செய்யப்பட்ட பிறகும் அவரது அச்சம் தீரவில்லை. கருக்கலைப்பின் காரணமாக இனி கருவுறுவதில் பிரச்சனை வருமா என்றும் ஏற்கனவே கருக்கலைப்பு செய்துகொண்டிருப்பதை வருங்காலத்தில் மருத்துவமனை செல்ல நேர்கையில் கண்டறிந்துவிடுவார்களா என்ற கேள்விகளை ஒரே உரையாடலில் நான்கு முறை கேட்டார். ஒவ்வொரு உரையாடலின்போதும் அவரது குரலில் இருந்த நடுக்கமும் பயமும் என்னை பல நாட்கள் உறுத்தியிருக்கிறது. எழுத்தாக்குவதில் எனக்குள்ள பாண்டித்யக் குறைபாடு காரணமாகவும் அடையாளத்தை மறைக்கவேண்டியிருப்பதாலும் தோழியின் நிலையை முழுமையாக பதிவில் கொண்டு வர இயலவில்லை. ஒன்று மட்டும் உறுதி, அவரது நிலையை முழுமையாக கேட்ட எந்த ஆணும் இதற்காக வெட்கப்பட்டிருப்பார்கள்.

எங்கள் தோழி ஏமாற்றப்பட்டது ஒரு விதிவிலக்கு என்று நாம் கருதிவிட முடியாது. இப்படிப்பட்ட சம்பவங்கள் சில மாறுபாடுகளோடு நம்மைச் சுற்றி நிகழ்ந்தவண்ணமிருக்கின்றன. காதலிக்கையில் படுக்கையைப் பகிர்ந்துகொண்ட ஜோடிகளில் பெரும்பாலானோர் திருமணம் செய்துகொள்ளாமலேயே பிரிகிறார்கள். அப்படிப்பட்ட ஜோடிகளில் உள்ள ஆண்களுக்கு தமது காதலி பாலுறவில் பலவீனமானவளோ என்ற ஐயம் நிச்சயமாக வருகிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் நட்பு வட்டத்தில் இருந்த மாணவர் (19 வயது) தனது காதலை கைவிட்டதற்குக் காரணம் காதலி அவரை முத்தமிட்டதுதான். சொந்த ஊரில் இருந்து திரும்பியவர் பதட்டம் தணியாத குரலில் சொன்னார் ” ஒரு பொம்பள புள்ள என்னங்க பிரபோஸ் பன்னின ரெண்டாவதுநாளே கிஸ் பண்றா.. இவள நம்பி எப்படி நாம வெளியூருல இருக்க முடியும்?”. பிற்பாடு அந்தப் பெண்ணிடமிருந்து வந்த எல்லா இன்லேண்டு கடிதங்களையும் அவர் படிக்காமலேயே கிழித்தெறிந்தார். அவர் பதின் பருவத்தவர் ஆகையால் அவரால் வேறு புத்திசாலித்தனமான காரணங்களை பின்ன இயலவில்லை. சற்று வளர்ந்தவர்கள் இதில் இன்னும் சுதாரிப்பாக இருக்கிறார்கள் அவ்வளவுதான், மற்றபடி பலருக்கும் இந்த மாணவனை ஒத்த சிந்தனையே உள்ளூர  இருக்கிறது.

காதலித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாகச் சொல்லி போலீசில் புகார் கொடுக்கிற அல்லது காதலன் வீட்டுவாசலில் உண்ணாவிரதம் இருக்கிற பெண்கள் குறித்து படிக்கையிலெல்லாம் நான் பல முறை சலிப்புற்றதுண்டு, இவர்கள் ஏன் கைவிட்டவன் காலிலேயே விழுவேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்று. மேலே குறிப்பிட்ட தோழியுடனான உரையாடல்களுக்குப் பிறகுதான் காதல் தோல்விக்குப் பிறகு பெண்களுக்கு இருக்கிற சமூக அழுத்தங்களை என்னால் உணர முடிந்திருக்கிறது.  இப்படி எழுதுவதால்  ஆண்களெல்லாம் உன் கண்ணுக்கு தெரியவே மாட்டார்களா என்ற கேள்வியை நான் எதிர்கொண்டேயாக வேண்டும். காதல் தோல்வி ஒரு ஆணுக்கு ஏற்படுத்தும் சிக்கல்களுக்கும் ஒரு பெண்ணுக்கு ஏற்படுத்தும் சிக்கல்களுக்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. பெரும்பாலும் காதலில் தோல்வியடையும் ஆண் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் பெண் தான் நிராதரவாக்கப்பட்டதாகவுமே நினைக்கிறார்கள். இரண்டும் ஒன்றுபோல தோன்றினாலும் இவை இரண்டும் ஒன்றல்ல. இது ஒரு கோடீஸ்வரன் காலை உடைத்துக்கொண்டு வீட்டில் இருப்பதற்கும் ஒரு கூலித்தொழிலாளி காலை உடைத்துக்கொண்டு வீட்டில் இருப்பதற்கும் எவ்வளவு வேறுபாடு உண்டோ அவ்வளவு வேறுபாடுகளைக்கொண்டது. கோடீஸ்வரன் உடைந்த காலைப் பற்றி கவலைப்பட்டால் போதும் ஒரு கூலித்தொழிலாளிக்கோ அது அவனது அன்றாட உணவைப் பறிக்கக்கூடிய பிரச்சினை.

காதல் தோல்வி என்றில்லை காதலின் எல்லா கட்டங்களிலுமே அதிகம் சிரமப்படுபவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள். காதல் விவகாரம் தெரியவந்தால் அதை ஒத்துக்கொள்ள விரும்பாத பெண் வீடுகளில் செய்யப்படும் முதல் வேலை பெண்ணை வீட்டுக்குள் சிறைவைப்பதும் வேறு மாப்பிள்ளை பார்ப்பதுதான் (இதுதான் அவர்கள் மீது ‘அல்வா கொடுப்பவர்கள்’ என்று நாம் பழிபோடுவதற்கு சுலபமான வாய்ப்பாகிறது).  மீறினால் வீட்டைவிட்டு ஓடிப்போவதுதான் வழி, அதுவும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே ஆபத்தானது. ஓடிப்போன மகனை கொலை செய்த அப்பா இங்கு அனேகமாகக் கிடையாது.  ஆனால் ‘ஓடிப்போன’ பெண்ணைக் கொலை செய்த அப்பாக்கள் கதை இங்கு ஏராளமுண்டு. காதலில் அதிகம் நேர்மையானவர்களும் பெண்களே. சிறுநீரகம் செயலிழந்த ஆண் நோயாளிகளுக்கு சிறுநீரக தானம் தர முதல் ஆளாக முன்வருவது அவர்களது மனைவிகள்தான் (இதற்கு தெளிவான புள்ளிவிவரங்கள் இருக்கின்றன). மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு ஓடிய ஆண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் அப்படி ஓடிய பெண்களின் எண்ணிக்கை மிக அற்பமானது.

நியாமாகப் பார்த்தால் நாம் எந்தப்பாலினத்தையும் ஏமாற்றுக்காரர்கள் என்று பொதுமைப்படுத்தக்கூடாது. இல்லை நான் பொதுமைப்படுத்தியே தீருவேன் என்று யாரேனும் முடிவு செய்தால் அவர்கள் ஆண்களைத்தான் ஏமாற்றுக்காரர்கள் என்று சொல்ல வேண்டும். ஆனால் இதற்கு முற்றிலும் நேர்மாறான விமர்சனத்தை நாம் கொஞ்சமும் குற்ற உணர்வின்றி நம்புகிறோம் அல்லது சிரித்துக்கொண்டே கேட்கவேனும் செய்கிறோம். இது நாம் மாற்றிக்கொண்டேயாகவேண்டிய மனோபாவம். சிரித்துக்கொண்டே யாரேனும் நம்மை பாஸ்டர்ட் என்று சொன்னால் அதை நம்மால் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள முடியுமா என்ன?

(இன்னும் இருக்குங்க…)

Advertisements

“காதல்- இதில் ஏமாறுபவர்களே குற்றவாளியாக்கப்படுவார்கள்.” இல் 7 கருத்துகள் உள்ளன

 1. I do not understand how these girls sleep with their lovers/boy friend before marriage.. This is happening since long time ago… Are they not watching tamil movies/Serial ? 🙂
  Have they not seen “Vidhi” movie.. Like Kushboo said these girls should use condom if they want to sleep with their bof friend.

 2. நெஞ்சை உருகவைக்கும் பதிவு. மனித மனம் விசித்திரமானது , அதிலும் பெண்களின் மனம் இன்னும் விசித்திரம். ஆச்சர்யம் இந்த தேர்ந்த நடைக்கும ஒரு உளவியல் அலசலுக்கும் ஒரே ஒரு பின்னூட்டம்.

 3. திரு.முத்து,
  இந்தப் பதிவை நான் வெளியிட்டபோது அது பரவலாக கவனிக்கப்படவில்லை அவ்வளவுதான். ஆகவே பின்னூட்டமில்லாததற்கு ஆச்சரியம் கொள்ளவேண்டியதில்லை. (எனது பல கட்டுரைகள் ஓரிரு பின்னூட்டங்களை மட்டுமே கொண்டிருக்கின்றன, அதற்கு சீரற்ற இடைவெளியில் நான் எழுதுவதும் எழுதியதை சரியாக வாசிப்பவர்களுக்கு கொண்டுசேர்க்காததும்தான் காரணம்)

  தோழமையுடன்,
  வில்லவன்.

 4. அருமையான பதிவு மற்றும் நல்ல எழுத்து நடை/ஆளுமை……….உங்கள் தோழிக்கு நடந்தது போன்று ஆயிரக்கணக்கான துன்பியல் சம்பவங்கள் இன்றளவும் கூட அதிக அளவில் நடந்து கொண்டு தான் இருக்கிறது…இது குறித்து நீண்ட பதிவிட விரும்பிகிறேன்…இன்னொரு நாள் எழுதுகிறேன்….

  தொடர்ந்து எழுதவும்……..

  வாழ்த்துக்கள்….

 5. நண்பருக்கு வணக்கம்,

  உண்மையை தெளிவாக எழுதியுள்ளீர்கள்.
  இதுபோன்ற சம்பவங்கள் சிலவன அடிக்கடி நடக்கின்றன. அப்படிப்பட்ட தருணங்களில் ஒரு ஆணாக வெட்கப்படுகிறேன். ஒரு பெண் தன் வாழ்வின் ஒவ்வொரு காலகட்டங்களிலும் மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டியுள்ளது. இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு காரணம் பெண்கள் தங்கள் காதலர்மீது வைத்துள்ள அதீத நம்பிக்கைதான்.
  தொடர்ந்து எழுதுங்கள்.

  நட்புடன்,
  அருண் குமார் நாகராஜன்.

 6. உண்மை தான்… காதலில் தோல்வியுற்ற பெண்களின் நிலமை நிச்சயம் கவலைக்கிடம் தான்…

  காதலனாக… கணவனாக … வாழ்வின் அனைத்துமாக எண்ணி வாழ்ந்து வந்த ஒருவன்… திடீரென்று யாரோ ஒருவனாக மாறுவது….

  என் தோழி வாழ்வில் நிகழ்ந்த ஒன்று…

  கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கும் மேல் மனம் ஒத்த காதலர்களாக வாழ்ந்து வந்த அவர்கள்… படுக்கையை முழுதாக பங்கு போடா விடினும்… காதலர்க்கே உரிய அனைத்தும் உண்டு அவள் காதலில்… உடல் உறவை தவிர்த்து…

  தற்போது அவள் காதலன் , என் அம்மாவின் மன நிறைவிற்காக என்று கூறி வேறு பெண்ணை மணந்து கொண்டான்…

  இதில் ஆச்சர்யம் என்ன என்றால்… வேறொரு பெண்ணை மணமுடிக்க இருப்பதை என் தோழியிடம் கூட கூறவில்லை…(ஆனால் அவர்கள் அப்போது முன் போல் பேசிக்கொள்ள இல்லை… அதுவும் அந்த நபரால்… பெற்றோருக்காக பிரிந்து விடலாம் என்று ஒரு நாள் அவர் கூற… அதை ஏதோ உணர்ச்சி பெருக்கு… மற்ற படி அவருக்கு என் மேல் அபார காதல் என்று நம்பிய தோழி விடாமல் அவரை திட்டியோ… கெஞ்சியோ…. அவரை சம்மதிக்க வைக்க….காதலை உணர வைக்க முயற்சித்திருக்கிறார்….இதற்கிடையில்… சந்தித்து… வீட்டில் திருமணம் பற்றி பேச கூட முடிவு எடுத்துள்ளார்… ஆனால் தோழியின் அவர் வீட்டில் பேசாமல்… “என்னால் சொல்ல இயலவில்லை… பெற்றோருக்கு ஏதேனும் ஆகி விடுமோ என்று பயமாக உள்ளது” என்று கூறி வீட்டில் பார்க்கும் நபரை திருமணம் செய்து கொள்ள கூறி இருக்கிறார்…. அப்போதும் உணராத தோழி மேலும் அவரை நம்பி காத்திருந்து பின் அவரின் திருமண விஷயம் தெரிந்தும் நம்பாமல் அவரிடம் கேட்டதற்கு… அவர் இல்லை என்று கூற…பின்னேறில் சென்று கேட்ட பொழுதும் அமைதி காத்து…இவள் பல கேட்ட பின்பு “வீட்டில் எடுத்த முடிவு” என்று பச்சை பொய் வேறு…

  அனைத்தும் தெரிந்தும் தோழியால் அவரை வெறுக்கவோ.. மறக்கவோ முடியவில்லை….

  எப்படி இன்னொருவரை மணப்பேன்…
  அது துரோகம் அல்லவா…
  முதலில் காதல் இருந்ததை மறைக்க மனம் ஒப்பவில்லை… அது தவறு…
  சொன்னால் புரிந்து கொள்வாரா…
  திருமணமே வேண்டாம்
  துரோகம் செய்த அவனுக்காக பெற்றவரை தண்டிப்பதா….

  இப்படி பல புலம்பல்கள்….

  தினமும் அழுகை….

  அந்த நபருக்கு திருமணம் முடிந்து 3 மாதங்கள் மேல் ஆகியும் என் தோழியின் அழுகை குறையவில்லை….

  திருமணத்திற்கும் சம்மதம் சொல்லவில்லை….

  தோழியின் நிலை எல்லோரையும் கவலைக்கிடம் ஆக்குகிறது…

  பெற்றோரை சம்மதிக்க வைக்க தைரியம் இல்லாத ஆண்கள் எதற்கு காதலித்து நம்பிக்கை தர வேண்டும்

  இவர்கள் காதல் பிரியும் என்று நானோ… என் தோழமை, அவர்களின் பெற்றோரோ நினைத்தது இல்லை…

  இவ்வளவு நம்பிக்கைக்கு உரியவர் ஏமாற்றும் போது… உண்மையான அன்பின் மீது கூட சந்தேகம் எழுவது இயல்பே…

  இந்த ஏமாற்றத்தால்… யாரையும் நம்பும் நிலையில்இல்லை என் தோழி… அன்பு காட்டி மோசம் செய்பர்களும் அநேகம் உண்டு இந்நாட்டில்…. இது மிக பெரிய நம்பிக்கை துரோகம்….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s