காமன்வெல்த் போட்டிகள்- அவமானத்தின் விலை எழுபதாயிரம் கோடி.


வழக்கமாக ஒரு விளையாட்டுப்போட்டி நடக்கப்போகிறதென்றால் எந்த நாடு அல்லது எந்த அணி வெல்லப்போகிறது என்ற பரபரப்பு நிலவுவது வழக்கம். காங்கிரசும் கல்மாடியும் நடத்தவிருக்கிற காமன்வெல்த் போட்டிகள் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. இந்த முறை உலக வரலாற்றில் முதல் முறையாக போட்டிகள் நடக்குமா நடக்காதா என்று விவாதிக்கும் அளவுக்கு போட்டி ஏற்பாடுகள் பல்லிளித்துக்கொண்டிருக்கின்றன. சென்ற மாதம் வரை போட்டி ஏற்பாடுகளில் ஏற்பட்ட மலைக்க வைக்கும் அளவுக்கான ஊழல்கள் அம்பலமாயின. இந்தியாவின் பொதுவிதியின்படி அவை கொஞ்சம் மறக்கப்பட்டிருந்த வேளையில் இந்தியாவின் அலட்சியமான போட்டி ஏற்பாடுகள் வெளியே வர ஆரம்பித்திருக்கின்றன.

சென்ற மாதமே பல தேசிய ஊடகங்கள் போட்டி ஏற்பாடுகள் மிகவும் தாமதமாக இருப்பதாக சுட்டிக்காட்டியபோது அதிகாரவர்கத்தின் சகல மட்டத்திலிருந்தும் மறுப்புக்கள் பறந்தன. இவை உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புக்கள், இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு விளையாட்டுத்துறைக்கு பயன்படப்போகும் அரங்களாக இவை இருக்கும் என்று சொன்னதோடு இல்லாமல் பெய்ஜிங் ஒலிம்பிக்கைவிட சிறப்பான போட்டிகளை நாங்கள் நடத்தப்போகிறோம் என்றெல்லாம் நூற்றுஇருபது கோடி மக்களுக்கும் அருள்வாக்கு சொன்னார்கள். ஒட்டுமொத்த மக்களையும் நம்பவைக்க செய்யப்பட்ட முயற்சிகள் நேற்றுடன் (21 செப்டம்பர்) முடிவுக்கு வந்திருக்கின்றன. கடைசி நாற்பத்தெட்டு மணிநேர நிலவரப்படி போட்டிகள் நடப்பதே இப்போதைக்கு சந்தேகம்தான்.

ஸ்காட்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட ஆறு நாடுகள் நேற்று வீரர்கள் தங்குமிடங்களை ஆய்வு செய்து இவை வசிக்கவே லாயக்கில்லாத (unlivable) அறைகள் என்று சொல்லியிருக்கின்றன. பூட்டுக்கள் உடைக்கப்பட்ட அறைகள், திறக்க முடியாத அறைகள், முழுமையாக முடிக்கப்படாத பிளம்பிங் மற்றும் மின்சார வசதிகள், இயங்காத மின்தூக்கிகள், அழுக்கடைந்த கழிப்பறைகள் என நீண்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. சில நாடுகள் போட்டிக்கு வீரர்களை அனுப்புவது குறித்து மறுபரிசீலனை செய்யப்போவதாக சொல்லியிருக்கின்றன. வீரர்கள் அறைகளின் படுக்கையில் நாய்கள் படுத்திருந்தால் வேறென்ன செய்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க இயலும்? பல முண்ணனி தடகள வீரர்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிக் குறைபாடுகளைக் காரணம் காட்டி போட்டிகளில் இருந்து விலகியிருக்கிறார்கள். மீதமிருக்கும் நாடுகள் உள்ளே வரும்போது இன்னும் பல அவலட்சனங்கள் வெளியே வரும்.

ஏழாண்டுகளுக்கு முன்பே துவங்கப்பட்ட பணிகள் இவை. இன்னும் பதினைந்து நாட்களே மீதமிருக்கும் நிலையில் பெரும்பாலான பணிகள் முடிவடையவில்லை என்றால், நம் திட்டமிடலின் லட்சனம் எப்படியிருந்திருக்கும்? பத்துகோடி ரூபாயை விழுங்கிய நடைபாலம் போட்டி துவங்கும் முன்பே இடிந்துவிழுந்தாயிற்று. குத்துச்சண்டை அரங்கில் உள்ள அலுமினிய கூரைகள் இன்று கீழே விழுந்திருக்கின்றன. அறுநூறு கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட நேரு விளையாட்டரங்கத்தின் கூரை திறக்கப்பட்ட நாளில் இருந்து மழைக்கு ஒழுகிக்கொண்டிருக்கிறது. கட்டப்பட்டிருக்கும் விளையாட்டு கிராமம் கட்டுமானத்துக்கு சாதகமில்லாத யமுனையின் கரையில் கட்டப்பட்டிருக்கிறது. அவற்றின் கதி கூடியவிரைவில் தெரிந்துவிடும். சந்தேகமில்லாமல் இவ்விளையாட்டுப் போட்டி இந்தியர்களிடம் கொள்ளையடிக்க மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது. கேட்போதெல்லாம் கூடுதல்நிதி இவ்விளையாட்டுக்கென வாரிவழங்கப்பட்டிருக்கிறது. எதிர்கட்சிகளும் மவுனம் காத்திருப்பதன் பிண்ணனியில் நியாமான கமிஷன் இருந்திருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

போதும். சகலமும் சகலருக்கும் இந்த நேரத்தில் தெரிந்திருக்கும். நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய விவரங்களைப் கொஞ்சம் பார்க்கலாம். ஏராளமான குடிசைவாசிகள் அவர்களது வாழிடங்களில் இருந்து விரட்டப்பட்டிருக்கிறார்கள். மிச்சமிருக்கும் குடிசைகள் இப்போது மறைத்துவைக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான பிச்சைக்காரர்கள் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். வெளியேற்ற முடியாத பிச்சைக்காரர்கள் தனியே தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வெளியே போகக்கூடாது எனும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது, எஃப்.ஐ.ஆர் பதியப்படவில்லை என்கிற வகையில் மட்டும் இதை சிறை இல்லை என்று சொல்ல இயலும். இந்த செயல்பாடுகள் மட்டும் எந்த தாமதமும் இல்லாமல் செய்யப்பட்டுவிட்டன. வீரர்களுக்கு கக்கூசைக்கூட சரியான நேரத்தில் கட்டித்தர முடியாத அரசு பாமர மக்களை மட்டும் கனகச்சிதமாக தாமதமில்லாமல் வெளியேற்றுகிறது என்றால், அரசு நிஜமான அவமானம் என்று ஏழைமக்களைக் கருதுகிறது என்றுதானே பொருள்?

நடைபாலம் இடிந்தது பற்றிய கேள்வியொன்றுக்கு அப்பாலங்கள் வீரர்கள் நடப்பதற்கானது,  அது பொதுமக்கள் உபயோகத்திற்கானது அல்ல என்கிறார் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் . இடிந்த பாலத்தில் பணியாற்றிய இருபத்து மூன்றுபேர் படுகாயமடைந்திருக்கிறார்கள், மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டியோ சிறிய விபத்துக்களை பெரிதுபடுத்தாதீர்கள் என்கிறார். ஒரு எழவுக்கு பதிலாக ஒரு லட்சம் ஈழத்தமிழர்களைக் கொல்ல வைத்த காங்கிரஸ் இப்போது காயமுற்றோர் கூலிகள் என்றவுடன் ஃபிரீயாவுடு என்று ஆலோசனை சொல்கிறது.

வெள்ளை மாளிகையின் பூந்தோட்டக்காவல்காரர் மன்மோகனாகட்டும், விளையாட்டுத்துறை அமைச்சர் ‘கில்’லாகட்டும் அல்லது ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் கல்மாடியாகட்டும் இப்போதுவரை இவ்விவகாரம் பற்றி வாயைத் திறக்கவில்லை (அவர்களது வீரர்கள் தங்குமிடம் சரியில்லை என்றது நியூசிலாந்து பிரதமரே இதில் தலையிடுகிறார்) . சரியான திட்டமிடல் இருக்கும்பட்சத்தில் எழுபதாயிரம் கோடிரூபாயைக் கொண்டு இரண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடியும். இதற்குமுன்னால் காமன்வெல்த் போட்டியை நடத்திய ஆஸ்த்ரேலியா அதை மிக லாபகரமாகவே நடத்தியிருக்கிறது. அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு இப்போதே லண்டன் தயாராகிவிட்டது. அடுத்த வல்லரசு என்று நாளைக்கு நூறுமுறை சொல்லிக்கொள்ளும் நம் நாட்டின் வல்லமைதான் இப்போது சந்திசிரிக்கிறது. எழுபதாயிரம் கோடி ரூபாயை மக்களிடம் திருடி நடத்தப்படும் இப்போட்டியின் சரிசெய்ய இயலாத படுதோல்வி குறித்து பதில் சொல்லக்கூட இங்கு ஆளில்லை என்பதைவிட வெட்கக்கேடு ஒரு தேசத்துக்கு இருக்கவியலாது.

விளையாட்டுத் துறையைக் கட்டுப்படுத்தும் பலரும் அரசியல் பெரும்புள்ளிகள் அல்லது பெரு முதலாளிகள். இவர்கள் இத்துறையை பற்றிக்கொண்டிருப்பதன் காரணம் இங்கு இருக்கும் சுரண்டிக்கொழுப்பதற்கான வாய்ப்புக்கள்தான். இந்நிலையில் வெறுமனே ஆளை மாற்றுவது வெறும் கண்துடைப்பாகத்தான் இருக்கும். சுரேஷ் கல்மாடியை மாற்றினாலும் அவரைப்போல இன்னொரு மனிதர்தான் இந்த இடத்தை நிரப்புவார். நாட்டின் ஒப்பந்தத்தில் ஃபோர்ஜரி செய்யும் மன்மோகன் கல்மாடி செய்த மின்னஞ்சல் மோசடியை எப்படி தட்டிக்கேட்க முடியும்? கல்மாடி போன்ற ஆட்களுக்கு திருடத் தரப்படும் வாய்ப்புக்கள் காங்கிரசின் தேர்தல் செலவுக்கும் மன்மோகனின் அமெரிக்க சேவகத்தை இடையூறில்லாமல் தொடரவும் போடப்படும் எலும்புத்துண்டுகள். அதனால்தான் அடுத்த ஐந்தாண்டுத்திட்டத்தில் உயர்கல்விக்கு இருபத்தைந்தாயிரம் கோடி ஒதுக்கும் அரசு காமன்வெல்த் போட்டிக்கு மட்டும் எழுபதாயிரம் கோடியை கேள்விமுறையில்லாமல் வாரிக்கொடுக்கிறது. ஆகவே மன்மோகன் ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா என்று யோசிப்பதைவிட இப்போட்டியின் இறுதியில் வெல்லப்போவது ஊழலா அல்லது அலட்சியமா என்று என்றாவது யோசிக்கலாம்., பொழுதாவது போகும்.

இது இந்தியாவிற்கு அவமானம் என்று கூக்குரலிடுவது மிகையானது. காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்துவோம் என்று ஐ.நாவுக்கு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டபோது வராத அவமானம், பாபர் மசூதி காலிகளால் இடிக்கப்பட்டபோது வராத அவமானம், ஆயிரக்கணக்கான இசுலாமியர்கள் குஜராத்தில் நரவேட்டையாடப்பட்டபோது வராத அவமானம், அரசுகளே கூலிப்படைகளை நடத்தும்போது (சல்வா ஜுடும்) வராத அவமானம், நாட்டில் பிறக்கும் பிள்ளைகளில் சரிபாதி சவலைப்பிள்ளைகள் என்று சொல்லப்படுவதில் வராத அவமானமா இதில் வரப்போகிறது?

ஆயினும் இதில் குறிப்பிட வேண்டியது, ஒரு அவமானம் இடம் மாறியிருக்கிறது என்பதுதான். இந்தியர்களின் விளையாட்டுத்திறன் குறித்த ஒரு கருத்துரு இப்போது தகர்க்கப்பட்டிருக்கும். நாம் விளையாட்டுக்கு லாயக்கற்றவர்கள் என்று நாமேகூட இதுவரை நம்பிக்கொண்டிருந்திருப்போம். சுண்ணாம்பு டப்பா அளவில் இருக்கும் நாடுகளும் வறுமையைத் தவிர வேறெதுவும் இல்லாத நாடுகளும் ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்குகையில் நமக்கு மட்டும் ஏன் பதக்கம் கிடைப்பதில்லை என்ற கேள்வி எல்லோர் மூளையிலும் உதயமாகியிருக்கும். இப்போது இந்த போட்டி ஏற்பாடுகளின் அழகை பார்த்தபிறகு நாம் ஏன் விளையாட்டுத்துறையில் இத்தனைதூரம் பின்தங்கியிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதில் நமக்கு சிரமமிருக்காது. ஏனைய நாடுகள் தமது வீரர்களின் தங்குமிடம் பற்றிக்கூட அக்கறை காட்டுவதையும் நம் நாடு விளையாட்டுத்துறைமீது காட்டும் அக்கறையையும் ஒப்பிட்டால் விளையாட்டு இங்கு எத்தனை கடினமானது என்பது விளங்கும். ஆக, இந்தியாவின் விளையாட்டுத் துறை பின்னடைவுக்கு காரணம் இந்திய மக்கள் இல்லை இங்கிருக்கும் அரசுதான் என்பது இப்போட்டிகளின் வாயிலாக உலகிற்கே விளம்பரப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் இதை உலகிற்குணர்த்த நாம் தத்த விலை?

Advertisements

“காமன்வெல்த் போட்டிகள்- அவமானத்தின் விலை எழுபதாயிரம் கோடி.” இல் 6 கருத்துகள் உள்ளன

 1. இது நம் போன்ற மானமுள்ள இந்தியருக்குத்தான் அவமானம் இதை எந்த தலைவரும் பெரிதாய் எடுத்துக்கொள்ள போவதில்லை.
  இந்தியாவின் மானம் கப்பலேரிப்போகிறது.இதில் ஒரு நல்ல காலம் விளையாடும் போது இடிந்து விழுந்து விளையாட்டு வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் முதலிலேயே இடிந்தது தான்.

  http://www.naalayavidiyal.blogspot.com

 2. கட்டுரையில் சிறிய பிழை நேர்ந்துவிட்டது. ஷீலா தீட்சித் சொன்ன கருத்தில் தட்டச்சின்பொழுது தவறுதலாக வார்த்தைகள் இடம் மாறிவிட்டன. (பாலம் மக்களுக்கானது அல்ல என்பது விரர்களுக்கானது அல்ல என்று வந்துவிட்டது). இப்போது சரிசெய்யப்பட்டுவிட்டது. தரப்பட்ட தவறான தகவலுக்கு மன்னிக்கவும்.

  தோழமையுடன்,
  வில்லவன்.

 3. vidunga bossu, naama 70000 kodi spectrum-la adichom, avanunga badhilukku CWG-la adichitanuva. Vadakku vazhgirathu, therku theykirathunnu evanum nakku mela palla pottu nakku-mooka paatu ini pada mudiyathu illa? vaalga sananayagam:-)

 4. இப்பொது தான் தெரிகிறது ஏன் இன்னும் உலக புகழ் பெற்ற தமிழ் விளையாட்டுகள் இன்னும் உலகுக்கு சென்றடையவில்லை என்று…விளையாட்டு துறை என்பதை விட வியாபாரத்துறை என்பது சரியான பெயர்…..உண்மையை உணர வைத்ததுக்கு நன்றி வில்லவன்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s