நேர்த்தியாக பராமரிக்கப்படும் எல்லா வீடுகளும் அழகானவை அல்ல.


சென்ற வாரம் எனக்கு அலுவலக வேலைகள் மிக அதிகமாக இருந்தன. செவ்வாய்க்கிழமை மாலை ஒன்பது மணிக்கு வந்த உத்தரவுப்படி அடுத்த முப்பத்தாறு மணி நேரத்துக்குள் நாங்கள் அதுவரை கத்திரியைக் காணாத துணிகளை ஆடைகளாக்கி மும்பையில் சென்று சேர்ப்பிக்க வேண்டும். அதற்கடுத்த பனிரெண்டு மணிநேரத்துக்குள் அந்த ஆடைகள் சுவிட்சர்லாந்து தலைநகருக்கு சென்றாகவேண்டும் என்றாலும் அது எங்கள் பொறுப்பல்ல என்பதால் நாங்கள் முப்பத்தாறு மணிநேர சவாலை மட்டும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கடந்த பத்தாண்டுகளில் நான் சந்தித்திராத நெருக்கடி நிறைந்த பொறுப்பு இது என்றாலும் இப்பதிவு அதனைப்பற்றியதல்ல.

சாத்தியமில்லாத ஒன்றை சாத்தியமாக்கிவிட்ட திருப்தி எங்கள் முதலாளிகளில் ஒருவரது வீட்டை அடைந்த பிறகு காணாமல்போனது பற்றிய பகிர்வு இது. பெட்டிகளை மும்பை அலுவலர்களிடம் ஒப்படைத்த பிறகு தங்குவதற்காக எங்கள் முதலாளி வீட்டில் இறக்கிவிடப்பட்டேன். அவர் அடுத்தகட்ட ஏற்றுமதி வேலைகளுக்காக விமான நிலையத்திலேயே இருக்க அவரது மனைவியும் வீட்டில் இல்லாத நேரத்தில் அவ்வீட்டுக்கூடத்தில் சுமார் நான்கு மணிநேரம் அமர்ந்திருக்கும் துர்பாக்கியம் அன்று வாய்த்தது. பெருந்தனக்காரர்கள் சிலரோடு பழக்கமுடையவன் என்றாலும் அவர்கள் வீடுகளுக்கு செல்வதையோ அல்லது விருந்துகளுக்கு போவதையோகூட இதுவரை நான் தவிர்த்து வந்திருக்கிறேன். ஆகவே மிக அந்நியமாக இருந்த அச்சூழலில் அந்த வீட்டை நிதானமாகவும் கவனமாகவும் திரும்பத்திரும்ப பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லாது போயிற்று.

மும்பையின் மிகப் பிரதானமான இடத்தில் இருக்கும் மூன்று படுக்கையறை குடியிருப்பு அது. என் பார்வையில் பட்ட அத்தனையும் மிக கவனமாக பராமரிக்கப்பட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது கூடவே அங்குலம் தவறாது அங்கிருந்த சுத்தமும்.  அந்த நான்கு மணிநேரத்தில்  அவ்வீட்டு வேலைக்கார பெண் ஏதேனும் ஒரு வேலை செய்தவண்னமிருந்தார். ஒருவழியாக இருவரும் இரவு ஒன்பதரை மணிக்கு வந்தார்கள். பத்தரை மணிக்கு ஐந்துவகை பதார்த்தங்களுடன் எங்கள் இரவு உணவு துவங்கி பதினோரு மணிக்கு முடிந்தது.( எனக்குத் தரப்படும் இப்படியான உபசரிப்புகள் எல்லாம் நாய்க்கு நவரத்தின மாலை போட்ட மாதிரிதான். அதன் மதிப்பு தெரியாது என்பது மட்டுமல்ல அது ஒரு கூடுதல் சுமையாகவே எனக்கு இருக்கும். ) அதன் பிறகு அவ்வீட்டின்  நீண்ட நேரம் பாத்திரம் தேய்க்கும் ஓசை முடியும் முன்பே நான் உறங்கிப் போனேன்.

ஏறத்தாழ பதினேழு மணிநேரம் அவ்வீட்டில் செலவிட்டிருக்கிறேன். உறங்கும் நேரம் தவிர்தது (அனேகமாக பனிரெண்டு முதல் ஆறு மணிவரை) மற்ற நேரங்களில் எல்லாம் அவ்வீட்டுப் பணிப்பெண் செய்வதற்கென வேலைகள் அங்கு நிறைந்திருந்தன. அவ்வீட்டு நாயும் நானும் கலைத்துப் போட்ட சோஃபா தலையனைகள் அடுத்த சில நிமிடங்களில் அதனதன் இடங்களில் வைக்கப்பட்டன. வீட்டு உரிமையாளர்கள் அங்கிருக்கையில் பதினைந்து நிமிடத்துக்கு ஒருமுறை அவருக்குத் தருவதற்காக என்றே ஒரு வேலையை வைத்திருந்தார்கள். ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் இடையேயான இடைவெளிகூட அங்கு அவருக்கு வேறொரு வேலையாகத்தான் இருந்தது.  அந்த முக்கால் நாளுக்கும் அந்த பணிப்பெண் பேசிய மொத்த வார்த்தைகளுமே இருபத்தைந்தை தாண்டியிருக்காது. பேச்சுத் துணைக்கு ஆள் கிடையாது. வேலையை கண்காணிக்கவும் வேலைகளை ஏவவும்  ஒன்றுக்கு இரண்டுபேர். தன் சாப்பாடுக்குக்கூட வீட்டு உரிமையாளர்கள் சாப்பிட்டு முடிக்கும்வரை காத்திருக்க வேண்டிய அவலம். பொழுதுபோக்கு என்பதும் வார விடுமுறை என்பதும் அறவே இல்லாத இம்மாதிரி மாளிகையொன்றின் கொத்தடிமையை நான் முதல்முறையாக நேரில் பார்க்கிறேன்.

ஏராளமான பணக்கார வீடுகளில் இப்படியான வீட்டிலேயே தங்கவைக்கப்பட்டிருக்கும் வேலையாட்கள் கட்டாயமாக இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன. திருப்பூரில் உள்ள வட இந்திய முதலாளிகள் அத்துனைபேரும் தங்கள் வீடுகளுக்கு வடக்கே இருந்து வேலையாட்களை அழைத்து வருகிறார்கள்.  எனது பழைய அலுவகம் இருந்த அடுக்ககத்தில் வசித்த எல்லா சேட்டு வீடுகளிலும்  வீட்டோடு இருக்கும் வேலையாட்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் அந்த அடுக்ககமே உலகம். இவர்கள் நிலைமை கொத்தடிமையைவிட மோசமானது, அவர்களது உணவு உறக்கம் யாவையும் அவ்வீட்டு உரிமையாளரது நேரத்தைப் பொறுத்து மாறக்கூடியது.  சில தினங்களில் அவர்கள் கார் நிறுத்தும் தளத்தில் உறங்கக்கண்டிருக்கிறேன். வீடொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று கழிவறைகள் கொண்ட அந்த அடுக்ககத்தில் வீட்டுவேலை செய்பவர்களுக்கும் மற்றும் பாதுகாவலர்களுக்கும் ஒரேயொரு குளியல் மற்றும் கழிவறையே இருந்தது.

தன் வழக்கமான சோகத்தையோ மகிழ்ச்சியையோ இவர்கள் யாரிடம் பகிர்ந்துகொள்வார்கள்? உடல் நலமில்லாது போனால் இவர்களை கவனிப்பார் யார்? அடுக்களையே தங்குமிடமாக இருக்கையில் இவர்களுக்கு உடல்நலமில்லாது போனால் எங்கு தங்குவார்கள்? இம்மாதிரி வேலையாட்கள் தூரமான ஊர்களில் இருந்தே அழைத்து வரப்படுகிறார்கள். இவர்கள் துன்புறுத்தப்பட்டாலோ அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாலோ யாரை அணுகுவார்கள்? இப்படியான பணியாட்கள் பலர் சிறுவர்கள் அல்லது சிறுமியர்கள், ஏனையோர் திருமணமாகாத இளைஞர்கள் அல்லது இளம்பெண்கள்.  மிகச் சிறிய வயதில் வேலைக்கு அழைத்துவரப்படும் இவர்கள் மிகக்குறைவான அளவுக்கு வெளியுலக அறிவு கொண்டவர்கள் (தமிழில் ஒரு வாக்கியம்கூட பேசத்தெரியாத, ஐந்து வருடங்களாக திருப்பூரில் இருக்கும் ஒரு வேலைக்கார இளைஞனை நான் பார்த்திருக்கிறேன்)  . குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவர்கள் நிச்சயம் வீட்டுவேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் (வீட்டோடு இருக்கும் வேலையாட்கள் எப்போதும் இளம் வயதினரே). பிறகு இவர்கள் எங்கே போகிறார்கள் என்பதும் என்ன வேலை செய்து பிழைக்கிறார்கள் என்பதும் நாம் யாரும் சிந்தித்திராத விடயங்கள்.

நாள் கணக்கில் வீட்டுக்கு வர இயலாதவாறு வேலைவாங்கும் நிறுவனங்களில் நான் பணியாற்றியதுண்டு (செவ்வாய்க்கிழமை அலுவலகம் போய் சனிக்கிழமை இரவு வீடுதிரும்பிய சம்பவம்கூட ஒருமுறை நடந்திருக்கிறது). மிகமோசமான வார்த்தைகளையெல்லாம் சர்வசாதாரணமாக பயன்படுத்தும்  உயரதிகாரிகளிடமும் வேலைசெய்திருக்கிறேன். ஆனாலும் கற்பனையில்கூட இப்படியான ஒரு வேலையில் என்னை பொருத்திப்பார்க்க அச்சமாக இருக்கிறது. ஒரு தனிநபரின் சுதந்திரத்தையும் சுயத்தையும் சிதைக்கிற இந்த நடைமுறை முற்றிலும் அநாகரீகமானது. ஆயினும் இந்தப் பழக்கம் தேசம் முழுக்க எவ்வித குற்ற உணர்வுமின்றி பின்பற்றப்படுகிறது. ஆகவே நேர வரையறை இல்லாமல் வீட்டில் தங்கவைத்து வேலைவாங்கப்படும் பணியாளரைக் கொண்டுள்ள எந்த வீட்டையும் வீடென்றுகூட இனி நான் குறிப்பிடுவதாயில்லை.

Advertisements

“நேர்த்தியாக பராமரிக்கப்படும் எல்லா வீடுகளும் அழகானவை அல்ல.” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. dear sir

    rules are drafted to suit the convenience of the influential people. most of the people are unaware of their legitimate rights . i have seen people treating their servants/house assistants very well as well as heartlessly worse to the core. the irony is these people are devotees of the many demi living gods nadamadum theivangal . the most irresponsible lot of people are the IT people whom have one ambition in lite to make the most or earn a high pay packet. nobody realizes that at a point you find the highest mental wrecks in the society

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s