ஒரு அறிமுகம், சில விளக்கங்கள் மற்றும் பற்பல நன்றிகள்.


(தளத்திற்கு புதியவர்கள் இப்பதிவை வாசிப்பதைத் தவிர்க்கவும், ஏதேனும் பொதுவிவகாரத்தை எதிர்நோக்கி இப்பதிவை திறந்திருப்பீரேயானல் ஏமாற்றமடைவீர்கள்., தயவுசெய்து வேறு நல்ல தளத்துக்கு செல்லவும் ).

பல்வேறு குழப்பங்களுடனேயே இப்பதிவை துவக்குகிறேன். வழக்கமாக கட்டுரைகள் எழுதத்துவங்குகையில் என்னிடமிருக்கும் திட்டமிடல் எதுவும் இப்போதில்லை. வில்லவன் என்ற பெயரில் எழுதுகிற என்னை அறிமுகம் செய்துகொள்ள மட்டுமே இந்த இடுகை. பள்ளிப்பருவத்தில் இருந்தே எதையும் முழுமையாகவே அல்லது தொடர்ந்தோ நான் செய்ததாக வரலாறில்லை. ஆகவே வில்லவன் வலைப்பூவை தொடங்கி சில கட்டுரைகள் எழுதிய பிறகு தொடர்ந்து எழுதலாம் என்ற யோசனை வந்த போது குறைந்தபட்சம் ஐம்பது கட்டுரைகளேனும் எழுதிய பிறகே என்னை அறிமுகம் செய்துகொள்ளவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். வலைப்பூ துவங்கி சற்றேறக்குறைய ஓராண்டு முடிந்திருக்கிறது, அறிமுகம் செய்துகொள்ள காலம் இப்போதுதான் வந்திருக்கிறது. ஆயினும் அதற்கான தகுதி வந்துவிட்டதாக நான் கருதவில்லை.

இலங்கையில் இறுதிகட்டப்போர் துவங்கியபோதுதான் இணையத்தில் தமிழை தீவிரமாக வாசிக்க ஆரம்பித்திருந்தேன். அப்போது பல தளங்களில் கருத்துக்களை பின்னூட்டமிட விரும்பினாலும் தமிழில் எழுதுவது எப்படி என்பது தெரியாதாதமையால் அக்காரியத்தை செய்ய இயலவில்லை. சில முறை ஜிமெயிலில் எழுதி அதை வெட்டி ஒட்டலாம் எனக்கருதி முயற்சி செய்து படுதோல்வி அடைந்திருக்கிறேன். முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களுக்குப் பிறகு பல நாட்கள் இணையத்தை விட்டு விலகியிருந்தேன் இணையம் மட்டுமல்ல செய்தி வழங்கும் எல்லா ஊடகங்களையும் காணாது விலகியிருந்தேன். ஒரு வாரத்தில் ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்பதையும் புலிகள் வீழ்ந்துவிட்டார்கள் என்கிற செய்தியையும் கேட்குமளவுக்கு மனதை தயார் செய்யவே இரண்டு மாதங்களானது (பல விமர்சனங்கள் இருப்பினும் பிரபாகரன் மீதான எனது பால்யகால ஈர்ப்பு இன்னமும் குறையவில்லை.. இப்படிப்பட்ட வழிபாட்டு மனோபாவமும் அவரது துயரமான முடிவுக்கு ஒரு காரணம் என்கிற கசப்பான உண்மையை உணர்ந்தும்கூட).

ஓரளவு மனோபலம் வந்தபிறகு மீண்டும் இணையத்தில் வாசிப்பை தொடங்கினேன். இடைவெளிக்குப் பிறகு என்பதால் இயல்பாகவே கூடுதல் நேரத்தை இணையம் எடுத்துக்கொண்டது. அப்போது எதேச்சையாக கிடைத்ததுதான் அழகி எனும் தமிழ் மென்பொருள். சரி இனி சுலபமாக பின்னூட்டமிடலாம் என்று நினைத்தது மீண்டும் பிழையானது. பல வார்த்தைகளை என்னால் தட்டச்சு செய்யவே முடியவில்லை. அதே காலத்தில் பின்னூட்டமிட வலைப்பூ அவசியமோ எனும் சந்தேகமும் எனக்கு இருந்தது (வினவு பின்னூட்டப் பகுதியில் வலைதள முகவரி எனும் பகுதி இருந்தமையால் வந்த சந்தேகம் இது). ஆகவே ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி எழுதி தட்டச்சைப் பழகுவது அப்படியே அதை ஒரு வலைபூவில் வலையேற்றுவது எனும் விபரீத எண்ணம் உருவானது.

எந்த பெயரில் வலைப்பூவை ஆரம்பிப்பது என்பது முதல் கேள்வி. சொந்தப் பெயரில் வலைப்பூ ஆரம்பித்து சொதப்பிவிட்டால்? அதனால் ஒரு மாற்றுப் பெயர் அவசியமானது. சும்மா பேருக்கு ஆரம்பிப்பதால் சிறப்பான தனித்துவமான ஒரு பெயரை தேடும் சூழல் இருந்திருக்கவில்லை. சிறு வயதில் எனக்கு வைக்கப்பட்ட பெயர் வில்லவன் கோதை. பிற்பாடு எங்கள் ஆத்தா (அதாவது பாட்டி (அப்பாவின் அம்மா)) இறந்தபோது அவர் என்னை செல்லமாக அழைத்துவந்த பெயருக்கு நான் மாற்றப்பட்டேன். இருபத்தைந்து ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத பெயரை வலைதள முகவரிக்கு பயன்படுத்துவது என்பது முடிவானது. அடுத்த பிரச்சனை எதைப் பற்றி எழுதுவது என்பது. அதிகம் சிரமப்படாமல் இருக்க மற்றவர்க்கு பரிச்சயமான மற்றும் எனக்கு எழுத எளிதான திருப்பூரை எடுத்துக்கொண்டேன். இப்படித்தான் எனது villavan.r எனும் பிளாகர் தளம் துவங்கியது.

 

இது நியாயமாக நான்கு அல்லது ஐந்து இடுகைகளுடன் முடிந்திருக்கவேண்டும். ஆச்சரியப்படத்தக்க வகையில் சில பின்னூட்டங்கள் வந்தன (ஒன்றுகூட வராது என்றே கருதினேன்), உலகின் இன்னொரு கோடியில் இருந்த பள்ளிக்கூட நண்பன் பூங்குன்றன் இது நான்தான் என்பதைக் கண்டுபிடித்து தொலைபேசினான், ” சிரமம் பார்க்காமல் தொடர்ந்து எழுதுப்பா” என்று இரண்டொரு முறை நினைவுபடுத்தினார் என் அப்பா. இவைதான் நான் வலையுலகில் ஒரு ஓரமாகவேனும் நிற்கலாம் என்று முடிவெடுக்கக் காரணமாக அமைந்தன. ஆயினும் பிளாக்ஸ்பாட் அவ்வளவு எளிதானதாக தோண்றவில்லை. எப்படி இருக்கிறது என்று சோதனை செய்துபார்க்க துவங்கப்பட்ட வோர்டுபிரஸ் வலைப்பூ மிக சுலபமாக இருந்தமையால் அதையே தொடர்வது என்று முடிவானது.

அனேக விசயங்களில் நான் சிரமப்பட்டதே இல்லை. எனக்கானவை பலவற்றை எனை சுற்றியிருப்பவர்களே செய்திருக்கிறார்கள், என் அலுவலகப் பணிகளில்கூட. எழுத்திலும் அதுதான் நடக்கிறது. பல கட்டுரைகளுக்கான யோசனைகள் மற்றவர்களிடமிருந்துதான் கிடைக்கின்றன. அரசியல் தொடர்பான கட்டுரைகளின் உள்ளடக்கத்தில் பாதி, நான் கேட்ட அரசியல் விவாதங்களில் இருந்தே பெறப்பட்டது. ஒரு முறைகூட பதில் சொல்லாவிட்டாலும் தொடர்ந்து பின்னூட்டமிடும் நண்பர்கள், மற்றவர்களுக்கு அறிமுகம் செய்த நண்பர்கள் என நன்றிக்குரியவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். கட்டுரைகளின் உள்ளடக்கத்திலிருந்து அதன் பரப்பை விசாலப்படுத்தியதுவரையான நிகழ்வுகளில் இவர்களது பங்களிப்பைப் கணக்கிட்டால் எனது பணி இத்தளத்தில் டி.டி.பி வேலை செய்தது மட்டுமே.

 

என் மீதே என்னால் வைக்க முடிகிற விமர்சனம், நான் பின்னூட்டங்களுக்கு பதில் தருவதில்லை என்பதுதான். இதற்கு நான் எழுதும் சூழ்நிலையை விளக்கியாக வேண்டும். பகலில் அலுவலகக் கணிணி இணைப்பில் வாசிப்பது சாத்தியம், ஆனால் எதையும் எழுத இயலாது. இணைய இணைப்பு இல்லாத வீட்டுக் கணிணியில் எழுதுவது மட்டுமே சாத்தியம். இப்படியான இருவேறு வாய்ப்புக்களை இணைத்து வேலைசெய்தால் மட்டுமே என்னால் பதில்களை எழுத இயலும். இது எளிதானதே என்றாலும் என் சோம்பேறித்தனம் அதற்கு அனுமதித்தாக வேண்டுமென்பதுதான் அதன் ஆகப்பெரிய இடையூறு. சில இடுகைகளைத் தவிர ஏனையவை எல்லாம் இரவு பத்து மணிக்கு எழுதத் துவங்கி இரண்டு அல்லது மூன்று மணிக்கு நிறைவுபெற்றவையே. காலம் கடந்தமையால் பாதியில் கைவிடப்பட்டவை மட்டும் இருபத்துயோரு கட்டுரைகள். “காதல்” கட்டுரையின் இறுதிப் பாகம், கடைசி பத்தி எழுத முடியாமையால் ஒரு மாதமாக டிராப்டில் இருக்கிறது.

பாராட்டி எழுதப்படும் பின்னூட்டங்களுக்கு எப்படி பதில் எழுதுவது என்று எனக்கு இப்போதுவரை தெரியவில்லை. ஒன்றிரண்டைத் தவிர மற்ற இடுகைகள் அவசரமாக முடித்துவைக்கப்பட்டவை. அவை பாராட்டப்படுகையில் அதற்குத் தகுந்த அளவு நான் உழைப்பை தரவில்லை என்கிற கூச்சம்தான் வருகிறதேயன்றி நன்றி சொல்லத் தோன்றவில்லை. நண்பர் இராவணன் எழுதிய விமர்சனம் ஒன்று “முதல்ல நிறைய படிங்க.. அப்புறம் எழுதலாம்” என்று பொருள்படும்படி வந்திருந்தது. அவருக்கு மட்டும் பதிலை மறக்காமல் எழுதிவிடவேண்டும் என்று நினைத்தேன், அதுவும் முடியவில்லை. அந்த பதில் இதுதான் ” நிறைய படித்துவிட்டு பிறகுதான் எழுதவேண்டும் என்றால் நான் எந்த காலத்திலும் எழுத முடியாது. ஆயினும் நிறைய வாசி எனும் உங்கள் ஆலோசனை முற்றிலும் சரியானது, இனியாவது அதற்கு (மட்டும்) நிச்சயம் முயற்சிப்பேன்”. ஆகவே நண்பர்களே சூழல் சாதகமானவுடன் உடனுக்குடன் பதில் எழுதுகிறேன். அதுவரை முன்தேதியிட்ட எனது மன்னிப்பையும் நன்றியையும் உங்களுக்கு அர்பணிக்கிறேன் (புரியலையின்னா டெடிகேட் பண்றேன்னு படிச்சுகோங்க).

இந்த வலைப்பூ (எனக்கு) கொண்டுவந்த ஆச்சர்யங்கள் ஏராளம். பத்து பதிவுகள்கூட எழுதப்படாத நிலையில் எனது கட்டுரைகள் வினவு தளத்தில் வெளியிடப்பட்டன. போதுமான தரவுகளோடு எழுதும் பழக்கம் இல்லாத எனக்கு புதிய கலாச்சாரத்திற்கு கட்டுரை எழுத வேண்டிய நிலை வந்தது முதல் திகைப்பு என்றால், ‘சுமாராத்தான் தம்பி இருக்கு’ என்று என் அப்பா சொன்ன அக்கட்டுரை வெளியீட்டிற்கு தெரிவு செய்யப்பட்டது இன்னும் பெரிய திகைப்பு (சிறப்பானதாகத் தோன்றவில்லை என்று சொல்லித்தான் அனுப்பினேன்). வாசிப்பதற்காக திறந்த கலையரசனின் தளத்தில் அவர் வாசிக்கும் வலைபூக்கள் பட்டியலில் என் தளமும் இருந்ததை பார்த்தபோது ‘உனக்கு இதெல்லாம் கொஞ்சம் ஜாஸ்திதான்’ என்று என் உள்ளம் சொன்னதென்னவோ நிஜம். ஆயினும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரங்கள் என்றால் இவைதான்.

நன்றி அறிவிப்பு இல்லாமல் இப்பதிவை எப்படி நிறைவு செய்வது? இந்தத் தளத்தில் சொல்லிக்கொள்ளும்படியான நல்ல விஷயம் ஒன்றேனும் இருக்குமானால் அதற்கு பொறுப்பானவர் என் அப்பா. நாங்கள் சமூகத்தை பார்க்கும் பார்வை அவரைப் பார்த்து கற்றுக்கொண்டதுதான். பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைப்பதில் அவருக்கு இருந்த பிடிவாதமே  எங்கள் ரசனைக்கும் ஆளுமைக்கும் அடிப்படையாக இருக்கிறது. அவர் எங்களுக்கு கொடுத்த சிறப்பான விசயங்களில் முதலிடம் பெறுவதும் இதுவே (இதை என் அண்ணனும் தங்கையும்கூட வழிமொழிவார்கள் என்று நம்புகிறேன்). இவ்வலைப்பூ தொடங்கப்பட்டபோதும் வினவில் கட்டுரைகள் வெளியானபோதும் பு.கவில் கட்டுரைகள் வெளிவந்தபோதும் என்னைவிட மகிழ்ச்சியடைந்தவர் அவரே. இப்போதும் நாங்கள் பேசிக்கொள்ளும்போது அவர் இரண்டாவதாக கேட்கும் கேள்வி என் அடுத்த இடுகை பற்றியதாகவே இருக்கிறது. ஆகவே என் முதல் நன்றி அவருக்கானதே.

அடுத்து குறிப்பிட விரும்புவது வினவு குறித்து. நான் வாசிக்கும் மிகச்சில வலைதளங்களில் வினவு முதலானது. வேர்டுபிரஸ் வலைப்பூவாக வினவு இருந்தபோதிலிருந்து அதன் வாசகன் நான். அங்கு எனது பதிவு வெளியானபோது அதிகம் அச்சமடைந்தேன் என்பதே நிஜம். அறிவார்ந்த மற்றும் நேர்மையான பார்வைகொண்ட வாசகர்கள் மத்தியில் ஒரு கற்றுக்குட்டியின் படைப்பு வைக்கப்படும்போது வரும் பதட்டம் அது. ஆனால் வினவும் அதன் வாசகர் வட்டாரமும் எனக்களித்த ஆதரவு மகத்தானது. அங்கு வெளியான என் கட்டுரைகளைக் காட்டிலும் அதற்கு வந்த பின்னூட்டங்கள் சிறப்பானதாவும் பொருள் பொதிந்ததாகவும் இருந்தன (கார்க்கி போன்றோரின் பின்னூட்டத்துடன் ஒப்பிட்டால் பிடி கத்திரி பற்றிய என் பதிவெல்லாம் ஒன்றுமேயில்லை ). வினவுக்கும் அதன் வாசகர்களுக்கும் நன்றி.. அரசியலை அணுகும் விதத்தை அங்கிருந்துதான் ஓரளவு கற்றுக்கொண்டிருக்கிறேன். இட்லிவடை, பட்டாபட்டி, செங்கொடியின் சிறகுகள் எனும் தளங்களும் இன்னும் என் நினைவுக்கு வராத பல பதிவர்களும் நான் யாரென்றுகூட தெரியாது எனது தளத்தை அறிமுகம் செய்தார்கள்,  இன்னும் பலர் உரிய பதில் கிடைக்காத நிலையிலும் தொடர்ந்து பின்னூட்டமிடுகிறார்கள். நன்றி தோழர்களே., உங்கள் வாயிலாகக் கிடைத்த ஊக்கமே எனை அடுத்தடுத்த கட்டுரைகளை எழுதும்படி தூண்டியிருக்கிறது.

ஒரு வருடம் கடந்தும் இன்னமும் வில்லவன் தளத்தின் வருகைப் பதிவு இருபத்தைந்தாயிரத்தை தாண்டவில்லை. புதிய இடுகைகள் வெளிவந்த ஓரிரு நாட்களைத் தவிர ஏனைய நாட்களில் சராசரியாக ஐம்பது முறை மட்டுமே வாசிக்கப்படும் மிகச்சிறிய வலைப்பூ இது.  ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்துக்கொண்டு அதற்கான முழுமையான தயாரிப்புக்களோடு கட்டுரைகள் எழுதுவது என்கிற இலக்கு இருக்கிறது அதற்கான பயிற்சிக்களம் என்று வேண்டுமானால் இத்தளத்தை இப்போதைக்கு சொல்லிக்கொள்ளலாம்.  முழுமையான மற்றும் நேர்த்தியான ஒரேயொரு பதிவையேனும் எழுதிவிடுவேன் என்ற உறுதியை என்னால் இப்போது தரமுடியாது. ஆனால் பொறுப்பற்ற வகையிலோ வெறும் அரட்டையாகவோ ஒரேயோரு பதிவுகூட என்னிடமிருந்து வராது எனும் உறுதியை நிச்சயமாக தரமுடியும்.

நன்றி,
வில்லவன்.

Advertisements

“ஒரு அறிமுகம், சில விளக்கங்கள் மற்றும் பற்பல நன்றிகள்.” இல் 6 கருத்துகள் உள்ளன

 1. i am one of your reader… inially i found some similarities between yours and pamaran.( during eelam war)
  i though he is writing in 2 diffrant names. but u have separate identity now. some times i feel guilty that am not giving feedback. so now my hearty congradulations for your writing anniversary.

 2. Villavan avrkala, nan unkal parama vecri – Mudialai –

  Vai villavan, i am ur regular reader. As u i am also try write something in wordpress. But time not allowed. But i read ur articles. it’s reflect the majority of tamil people in the world. Wish u for the great success in the coming years.
  Note: I am near to college road. It time permit we will met.

 3. வில்லவன்,

  உங்களின் மொழி நடையும், நிகழ்வுகளைப் பற்றிய உங்கள் கண்ணோட்டமும் மிகவும் அருமை மட்டுமல்ல தெளிவும் கூட.

  இதைப் பற்றி முன்னரே குறிப்பிட வேண்டும் என நினைத்திருந்தேன். இந்த கட்டத்தில் அதைக் குறிப்பிட்டு தங்களை வாழ்த்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

 4. வில்லவன் பல நேரங்களில் சோம்பேறித்தனத்தின் காரணமாகவும் மற்ற பொறுப்புகளின் காரணமாகவும் உடனுக்குடன் படிக்காவிட்டாலும் தொடர்ந்து உங்களின் தளத்தை வாசித்து வருகிறேன்.உங்களை என் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தபோதும் முதன்முதலில் நான் வாசித்தபோதும் எங்களை ஈர்த்தது உங்களின் எழுத்து நடை.பொருட்செரிவோடும் முழுமையான விவரங்களோடும் உள்ள தளங்களின் கட்டுரைகள் மக்கள் மொழியில் இருப்பதில்லை.உதரணத்திற்கு பூவரசி கட்டுரை அதில் நீங்கள் பேசிய அரசியல் சரியானதாகவும் எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையிலும் இருந்தது.//ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்துக்கொண்டு அதற்கான முழுமையான தயாரிப்புக்களோடு கட்டுரைகள் எழுதுவது என்கிற இலக்கு இருக்கிறது// இந்த இலக்கை விரைவில் அடைய வாழ்த்துக்கள் அவ்வாறு அடைந்த பின்னும் உங்களின் மக்கள் மொழியை மாற்றாமல் இருக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் என்னெனில் கருத்துக்கள் மக்களை அடைய இன்றைய அவசிய தேவை அவர்கள் மொழியில் இருக்க வேண்டும் என்பதே. நன்றி

 5. உங்கள் கட்டுரைகளை அவ்வப்போது வாசித்திருக்கிறேன். சீரான நடையில், எளிமையான சொற்களில், அரசியல் உள்ளடக்கம் மீறாமல் எழுதும் பாங்கு பிடித்திருக்கிறது. கட்டுரையில் தென்படும் நிதானமும், பொறுப்புணர்வும் உங்கள் சொந்த குணநலனுடன் இணைந்தது என்றே யூகிக்கிறேன். வாழ்த்துக்கள் தோழர்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s