ஆண்டர்சனின் பாதுகாவலர்கள் அருந்ததிராயை கைது செய்யத் துடிப்பதில் வியப்பென்ன இருக்கிறது?


காங்கிரசும் பாரதீய ஜனதாவும் ஒருமித்த கருத்துடன் செயல்படுவது ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில் இவர்கள் ஒன்றினைந்து குரைத்தது அருந்ததி ராயை கைது செய்வதற்காக. தேச துரோக வழக்கு பதிவு செய் என்று இரண்டு கட்சிகளின் செய்தித்தொடர்பாளர்களும் அரசுக்கு உத்தரவிட்டுவிட்டார்கள். ஆர் எஸ் எஸ் விரும்பியபடி தீர்ப்புக்களே வாசிக்கப்படுகையில் செக்ஷனைக் குறிப்பிட்டு வழக்கு பதியச்சொல்வதெல்லாம் ஒன்றுமே இல்லாத சமாச்சாரம். எதற்காக இந்த கொலைவெறி? காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக என்றைக்குமே இருந்ததில்லை என்று அருந்ததிராய் சொல்லிவிட்டாராம். அவ்வளவுதான் சீக்கியர்களை படுகொலை செய்தவர்களும் இசுலாமியர்களை படுகொலை செய்தவர்களும் ஒன்றுசேர்ந்து பொங்கித் தீர்த்துவிட்டார்கள்

அது மட்டுமா அவர் மீது கோபம்கொள்ள இன்னும் ஏராளமானவை இருக்கின்றனவே.. ஒரு படைப்பாளி என்பவன் எப்படி இருக்கவேண்டும்?? இயக்குனர் சங்கரைபோல இருக்கலாம். எதிலும் பட்டுக்கொள்ளாமல் இருந்துவிட்டு தன் படத்தின் ஆபாசக் காட்சிகளைக் காப்பாற்ற அதை ஆந்திராவுக்கு சென்சாருக்கு அனுப்பலாம்,வெற்றிக்கு ஷர்ட்கட் நேர்மைதான் என்று பாட்டும் எழுதிக்கொள்ளலாம். ரஜினி கமலைப்போல இருக்கலாம், யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு பக்கவாத்தியம் வாசித்துக்கொண்டு ஆட்சியில் இருப்பவர்கள் கூப்பிடும்போதெல்லாம் போய் வாழ்த்திவிட்டுவரலாம். இல்லை வைரமுத்து மாதிரி ஒரே தலைவனின் காலை நக்குவதையும் தினசரி கடமையாகக் கொள்ளலாம் காலைக்கடனைப் போல. அதுவும் இல்லாவிட்டால் சத்தியராஜைப் போல ஷேமத்துக்கு சேதாரம் வராத அளவுக்கு மட்டும் கொள்கை பேசலாம். இன்னும் குழுச்சண்டை முதல் குடிப்பதைப்பற்றிக்கூட இலக்கியவாதிகள் சிலாகித்து எழுதலாம்.

இப்படி படைப்பாளிகளுக்கென சுதந்திரங்கள் கொட்டிக்கிடக்கையில் ஒரு எழுத்தாளர் மட்டும் எப்படி மக்களைப் பற்றி சிந்திக்கலாம்? பத்தாயிரம் கோடிக்கு முகேஷ் அம்பானி வீடுகட்டுமளவுக்கு தேசம் வளர்ந்துவிட்டது. பெருமிதம் கொள்ளவேண்டிய தருணத்தில் சட்டீஸ்கர் பழங்குடிகளின் வறுமை பற்றியும் வாழிடம் பற்றியும் ஒரு எழுத்தாளர் கவலைகொள்வது தேசதுரோகமன்றி வேறென்ன? ஒடுக்கப்படும் மக்களின் உரிமையையும் சுதந்திரத்தையும் பற்றி பேசுவோர் கைதுகூட செய்யப்படாவிட்டால் ராஜபக்சேவின் உயிர்த்தோழனாக விளங்கும் ஒரு அரசு நடக்கும் ஒரு நாட்டுக்கு அசிங்கம் இல்லையா?

அரசைக்காட்டிலும் அருந்ததிராயை சிறைவைக்க துடித்த இன்னொரு கூட்டமும் இருக்கிறது. அருந்ததிராய் பேசிய அந்த குறிப்பிட்ட கருத்தரங்கம் நடந்த அன்று அளவுக்கு மீறி கொந்தளித்தது டைம்ஸ் நவ் தொலைக்காட்சிதான். இதை இன்னும் எத்தனை நட்களுக்கு நாம் அனுமதிக்கப்போகிறோம் என்று ஆத்திரப்பட்டார் அர்னாப் கோஸ்வாமி. இது அர்னாபா அல்லது மாறுவேடமணிந்த மன்மோகனா என்று சந்தேகமே வந்திருக்கும் அன்று அவரை டிவியில் நீங்கள் பார்த்திருந்தால். அனேக ஊடகங்கள் அவர்களது வாசகர்களுக்கு விசுவாசமாக இல்லாமல் விளம்பரம் தரும் முதலாளிகளுக்கு விசுவாசமாக இருக்கின்றன. அதனால்தான் தாராளமயத்துக்கு எதிரான எந்த ஒரு சிறு சலனத்தையும் அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அருந்ததிராயுடனான நேர்கானல் ஒன்றில் கரண் தாப்பர் கேட்ட எல்லா கேள்விகளிலும் அவரையும் ஒரு மாவோயிஸ்டாக அடையாளப்படுத்தும் நரித்தனமே மேலோங்கியிருந்தது. (புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் மாவோயிஸ்டுக்களை ஆதரிக்கிறார் என்பதைவிட புக்கர் பரிசு பெற்ற மாவோயிஸ்ட் எழுத்தாளர் எனும் பிரச்சாரம் செய்யப்படுவதற்கான முயற்சி இது)

இந்த தேசபக்தர்களின் எப்போதும் சாதாரண மக்களைப் பற்றி கவலை கொள்பவர்கள் அல்லர். ஜெசிகா லால் எனும் மாடல் அழகியின் கொலைக்காக லட்சக்கணக்கான கையெழுத்தை பெற்று நாள் கணக்கில் செய்தியாக்கிய என் டி டி வி, காஷ்மீர் இளம்பெண்கள் இருவர் ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட செய்தியை மட்டும் ஏன் கண்டுகொள்ள மறுக்கிறது? காமன்வெல்த் கிராமத்தின் கட்டிட சுவர்களில் படிந்திருந்த பான்மசாலா எச்சிலைக்கூட புலனாய்வு செய்து செய்தியாக்கிய சி.என்.என் தொலைக்காட்சி, கலவரத்தை அடக்க நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட காஷ்மீர் சிறுவர்கள் மிக அருகிலிருந்து (பாயிண்ட் பிளங்க்) சுடப்பட்டார்கள் என்கிற செய்தியை மட்டும் ஏன் ஒரு வரியில் முடித்துக்கொள்கிறது? இதையெல்லாம் கேள்வியாக்குகிறார் அருந்ததி.. பதில் சொல்ல திராணி இல்லாமல் அதை பலவீனமான பின்வாங்கல் (weak U turn) என்று வீரம் பேசுகிறார் அர்னாப்.

அருந்ததியின் கேள்விகளுக்கு இவர்களிடம் பதில் நிச்சயம் இருக்காது., அமிதாப் வீட்டு திருமணத்தை படமெடுக்கப்போய் தெருநாயைப்போல அடித்துவிரட்டப்பட்டவர்கள் இந்த தேசிய ஊடகத்தவர்கள். பாதுகாப்புத்துறை அமைச்சராய் இருந்த ஜார்ஜ் பெர்னாண்டர்சை அம்மணமாக்கி சோதனை செய்தது அமெரிக்கா அதுவும் ஒன்றுக்கு இரண்டுமுறை. அதை அவரே ஒத்துக்கொண்டபிறகும் அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று சாதித்து தேசத்தையே அம்மணமாக்கியவர்கள் இந்த ஆட்சியாளர்கள். இந்த இரண்டு கூட்டுக்களவானிகளையும் அம்பலப்படுத்தும் ஆளாக இருப்பதால்தான் இந்த இரு தரப்பினரும் அருந்ததிராயை முடக்கிவிட நினைக்கிறார்கள்.

சிறுவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதையும் அப்பாவிப்பெண்கள் வன்புணர்ச்சி செய்து கொல்லப்படுவதையும் கண்டிக்காதவன் மனிதனாகவே இருக்கமுடியாது. மனிதனாகவே இல்லாதவர்கள் இந்தியனாக இருந்து மட்டும் என்ன கிழிக்கப்போகிறார்கள்? உலகம் அறிந்த எழுத்தாளர் நாளொன்றுக்கு இருபது ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிக்கும் என்பத்துமூன்று கோடிபேருக்காக சிந்திக்கிறார் என்பதும் சொந்த நாட்டு ராணுவத்தின் அத்துமீறலுக்கு எதிராக குரல்கொடுக்கிறார் என்பதும் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய சங்கதி. ஒரு கோடிரூபாய் செலவில் பயணம் செய்து ஒரு ஏழைவீட்டில் சப்பாத்தி சாப்பிடும் ராகுல் காந்தி பற்றி சிலாகித்து எழுதிவிட்டு, உயிரைப் பணயமாக வைத்தாவது பழங்குடிகளில் அவலம் குறித்து எழுதவிரும்பும் அருந்ததியைப் பற்றி அரசுக்கு கோள்மூட்டும் வேலையை செய்வதற்காக ஊடகங்கள்தான் வெட்கப்படவேண்டும். அவர் தேசதுரோகி என்றால் நாமெல்லாம் தேசபக்தனாக இருப்பதைப் பற்றித்தான் வருந்தவேண்டும்.

இப்போது அரசு அருந்ததிராய் மீதும் கிலானி மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறது. எனவே இவர்கள் பேச்சு சுதந்திரத்தை மதிப்பவர்கள் என்று கருதிவிட முடியாது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச விவாதமாக மற்ற அரசு விரும்பவில்லை என்பதால் அருந்ததிராயை எரிச்சலுடன் சகித்துக்கொண்டிருக்கிறது. அருந்ததி போன்றோரிடம் மென்மையாக நடந்துகொள்வதாக பாஜக அரசாங்கத்தை நொந்துகொள்கிறது. காங்கிரசும் மனிதஉரிமை பற்றிப் பேசும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத இந்த சூழலைக்குறித்து நொந்துகொண்டிருக்கும். அதற்கான தருணத்தை எதிர்நோக்கித்தான் அரசு காத்திருக்கிறது, அதுவரை தேசதுரோக பழிபோட்டு பரப்புரை செய்ய தங்கள் எடுபிடி ஊடகங்கள் இருக்கின்றன எனும் திருப்தியோடு.

Advertisements

“ஆண்டர்சனின் பாதுகாவலர்கள் அருந்ததிராயை கைது செய்யத் துடிப்பதில் வியப்பென்ன இருக்கிறது?” இல் 7 கருத்துகள் உள்ளன

 1. அருந்ததி ராய் ஒரு அதிசயப்பிறவியான அறிவுஜீவிதான். அவரொருவர்தான் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கிறார். ஆனால் அவர் பாதிக்கப்பட்டோரின் அவலங்களைக் குறித்துப் பேசியவைகளை இருட்டடிப்பு செய்துவிட்டு பிரிவினைவாதம், பயங்கரவாதம் என்ற சொற்களுக்குள் அடக்க வைக்கும் பேச்சுக்களை மட்டும் பெரிதுபடுத்தி அவரை அவதூறு செய்கின்றனர்.

  //காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச விவாதமாக மற்ற அரசு விரும்பவில்லை என்பதால் அருந்ததிராயை எரிச்சலுடன் சகித்துக்கொண்டிருக்கிறது. அருந்ததி போன்றோரிடம் மென்மையாக நடந்துகொள்வதாக பாஜக அரசாங்கத்தை நொந்துகொள்கிறது. காங்கிரசும் மனிதஉரிமை பற்றிப் பேசும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத இந்த சூழலைக்குறித்து நொந்துகொண்டிருக்கும். அதற்கான தருணத்தை எதிர்நோக்கித்தான் அரசு காத்திருக்கிறது//
  உண்மை

 2. அருந்ததிராய்க்கு இப்படியொரு நிலையை உருவாக்குவார்கள் என்பது அப்படியொன்றும் விளங்கிக்கொள்ள முடியாத விடயமல்லவே. இதை இப்போது செய்வதற்காக நேரம் குறித்தது ஏன் என்பது தான் எனக்கு புரியவில்லை.

 3. ரதி,

  அருந்ததியை கைது செய்ய எடுத்த முயற்சி திடீரென எடுக்கப்பட்ட நடவடிக்கையல்ல. அவர் எப்போதுமே அரசு எந்திரத்தின் கோபப்பார்வைக்கு ஆளானவராகவே இருந்திருக்கிறார். நீதிமன்ற தீர்ப்பொன்றை விமர்சனம் செய்தமைக்காக அவரை ஒருநாள் சிறையில் அடைத்தது நீதிமன்றம்.

  நர்மதா அணை விவகாரம், அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட அநியாயமான தூக்கு (இதுவும் பெரும்பான்மை மக்களது நம்பிக்கை எனும் வாதத்தால் வழங்கப்பட்டது), காட்டுவேட்டை (பழங்குடி மக்கள் வேட்டை), இந்துத் தீவிரவாதம் என அவர் சமரசமில்லாமல் எதிர்க்கும் விவகாரங்கள் அரசை கடுமையாக சிக்கலுக்குள்ளாக்குபவை. அவரைப்போல கடுமையான உழைப்பை தந்து சரியான ஆதாரங்களோடு மக்களை எளிதாக புரிந்துகொள்ள வைக்கும் கட்டுரைகளை எழுதும் அறிவுஜீவிகள் இந்தியாவில் அனேகமாகக் கிடையாது.

  இந்திய அரசு நிர்வாகத்தை அச்சுறுத்தும் விசயம் இதுமட்டுமல்ல, அவர் அச்சமில்லாதவராக இருக்கிறார் என்பதும் களத்தில் இறங்கி குரல் கொடுக்கிறார் என்பதுமே அவர் மீதான பயத்தை அதிகரித்திருக்கிறது. சர்வதேச அறிமுகமில்லாதவராக அவர் இருந்திருந்தால் இந்தநேரம் அவர் சிறைவைக்கப்பட்டிருப்பார், மருத்துவர் பினாயக் சென்னைப்போல. ஏற்கனவே கிழிந்துபோன தன் ஜனநாயக முகமூடியை மேலும் கிழியாமல் காப்பாற்றவே அவர் விட்டுவைக்கப்பட்டிருக்கிறார்.

  மேலும் இப்போது அவர் காஷ்மீர் சுதந்திரம் பற்றிப் பேசுவது மக்களிடம் ஒரு நடுநிலையான பார்வையை உருவாக்கும் என்கிற அச்சம் அரசுக்கு இருக்கிறது, கணிசமான பொய் பிரச்சாரத்தையும் மீறி இந்த எண்ணம் ஓரளவு மக்களிடம் உருவாவதாகவே கருதுகிறேன். ஆகவே அவரை இந்த சூழலில் மிரட்டி வைப்பது இந்தியாவுக்கு அவசர அவசியம். அவர் கைது செய்யப்படுவார் என்ற பரப்புரையும், பாஜக அவர் வீட்டைத் தாக்கியதும் ஆழம் பார்க்கும் நடவடிக்கைதான். உண்மையான ஜனநாயகத்தை விரும்புவோர் இப்படியெல்லாம் துன்புறுத்தப்படாவிட்டால் அதுதான் இந்தியாவின் பெரிய அதிசயமாக இருக்கும்.

 4. நன்றி வில்லவன். நான் அருந்தி ராயின் எழுத்துக்களை தேடிப்படிப்பதுண்டு. கொஞ்ச நாட்களுக்கு முன் இங்கே கனடாவில் தேசியப்பத்திரிகை ஒன்றில் அவரின் கட்டுரை தொகுப்பான “Listening to Grasshoppers” என்ற விமர்சனம் படித்துவிட்டு, இப்போது அதை நான் படிப்பதுடன் என் நண்பர்களுக்கும் (வெளிநாட்டவர்கள் தான்) என் செலவில் வாங்கி படிக்கும் படி கொடுத்திருக்கிறேன்.

  //சர்வதேச அறிமுகமில்லாதவராக அவர் இருந்திருந்தால் இந்தநேரம் அவர் சிறைவைக்கப்பட்டிருப்பார்,//

  இது தான் என் கருத்தும். அருந்ததி ராய் போன்றவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.

 5. அது சரி.. அருந்ததி ராய்க்கு முதலில் என்ன தகுதியிருக்குன்னு சொல்லுங்க.. ஒரே ஒரு புத்தகத்த எழுதிட்டு அதுக்கு ஒரு புக்கர் பரிசு வாங்கிட்டா என்னத்த வேணும்னாலும் பேசலாமா?

  காஷ்மீர் பண்டிட்கள் 4 லட்சம் பேர் துரத்தியடிக்கப்பட்டு இன்றும் அகதியாய வாழ்கிறார்களே.. அவர்களை பற்றி என்றைக்காவது அருந்ததி பேசியிருக்கிறாரா.. இல்லை நீங்கதான் பேசியிருக்கீங்களா.. முஸ்லிம்களை பற்றி மட்டும் அருந்ததி பேசுவது, அவர் ஒரு கைக்கூலி (யாரோட கைக்கூலிங்கறது அப்பட்டமான் விஷயம்) என்பது தெளிவாக தெரிகிறது.. உங்கள மாதிரி கம்யுனிஸ்ட்கள் அருந்ததிக்கு வக்காலத்து வாங்கறது ஒன்னும் ஆச்சரியமான் விஷயம் இல்லை.. ஏனா கம்யுனிஸ்ட்களே ஒரு கைக்கூலிதானே..

  முஸ்லிமை கொன்னாங்க.. சீக்கியர்களை கொன்னாங்கன்னு எழுதுறீங்களே.. கம்யுனிஸ்ட்கள் என்ன அகிம்சைவாதிகளா? தினம் தினம் ஏகப்பட்ட மக்களை மாவோயிஸ்ட்கள் கொல்கிறார்களே.. அவைகளெல்லாம் உயிர்கள் இல்லையா?

  எவ்வளவு நாள் நீங்க இந்த மாதிரி மக்கள ஏமாத்துவீங்க..

  அது சரி.. இந்த கமெண்ட அனுமதிப்பீங்களா இல்ல அழிச்சிடுவீங்களா? ஏன் கேட்கிறேன்னா , கம்யுனிஸ்ட்களுக்கு யாராவது எதிரா பேசினா புடிக்காது..

 6. உங்கள் குற்றச்சாட்டுக்களுக்கு ஓரிரு நாட்களில் பதில் தருகிறேன் செந்தில். ஏனெனில் ஒரு தனி இடுகைக்கு தேவையான அளவு உழைப்பு உங்களுக்கான பதிலுக்கு தேவைப்படும்.

  மற்றபடி எந்த பின்னூட்டமும் இந்தத் தளத்திலிருந்து நீக்கப்படாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s