மோகன்ராஜ் என்கவுண்டர்- யாருடைய குழந்தைகள் கொல்லப்பட்டால் நீங்கள் கோபப்படுவீர்கள்?


பெரும்பான்மை மக்கள் மகிழ்ந்திருக்கும் வேளையில் இந்தப்பதிவு எழுதப்படுவது சற்று ஆபத்தானதே. தலைப்பைப் பார்த்துவிட்டு  கொல்லப்படுபவர்களில் என்ன பாகுபாடு இருக்கமுடியும் என்று நீங்கள் என்மீது கோபமுறக்கூடும். முஸ்கினும் ரித்திக்கும் படுகொலை செய்யப்பட்டபோது வராதவர்கள் ஒரு குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்ட உடன் துரிதகதியில் கீபோர்டுக்கு வேலைகொடுப்பதேன் எனும் கேள்வியும் பலரிடம் எழும்பும். இருப்பினும் இந்த என்கவுண்டர் மக்களுக்கு போடப்பட்டிருக்கும் ஒரு எலும்புத்துண்டு எனும் கசப்பான எதார்த்தத்தை எழுதுவது இத்தருணத்தில் தவிர்க்க இயலாதது.

காவல்துறையின் இந்த நடவடிக்கை நீதியை விரைவாக வழங்கிவிட்டதாக கூத்தாடுகிறார்கள் பலர். காவல்துறைக்கு இந்த அதிகாரம் இல்லை என்பது கிடக்கட்டும். எந்த காலத்தில் இவர்கள் நீதி பற்றி அக்கறை கொண்டிருந்தார்கள் என்று கூத்தாடுவோர் யாராவது எண்ணிப்பார்த்திருப்பார்களா? ஒரு வழக்கை பதிவு செய்யவே நீங்கள் பணம் அழுதாகவேண்டும், அந்த வழக்கும் ஆளுங்கட்சிக்காரனுக்கு எதிரானதாக இல்லாதிருப்பது அவசியம். பணம் கொழுத்தவனுக்கு அதிகாரத்தில் இருப்பவனுக்கும் மட்டுமே சேவைசெய்யும் இவர்கள் திடீரென தாங்களே குற்றவாளியை தண்டித்திருப்பது நீதியை விரைவுபடுத்த என்றா நீங்கள் கருதுகிறீர்கள்?

பிறகு எதற்கு மோகன் கொல்லப்பட்டார்?

ஆதாயம் இல்லாமல் ஆண்டி ஆத்தோடு போகமாட்டான் என்று ஒரு வாக்கியம் உண்டு. அதைப்போல எல்லா என்கவுண்டர்களுக்குப் பின்னாலும் ஒரு தேவை இருக்கிறது, இந்த வழக்கிலும் அப்படியே. இதன் உடனடி பலன் போலீசார் மீதான பொதுமக்களின் அதிருப்தி குறைவது. கம்யூனிஸ்டுகள் போகுமிடமெல்லாம் தடிகளோடு போய் ருத்ரதாண்டவம் ஆடுகிறது போலீஸ். கோஷம் போடப்போகும் மாநில தலைவர்களே காதலன் வடிவேலுபோல ஆடை அணிந்தாக வேண்டிய நிலையிலிருக்கிறார்கள். கம்யூ.க்கள் ஓரளவு வலுவாக உள்ள கோவையில் இந்த தாக்குதல்கள் எதிமறை விளைவை உண்டாக்காதிருக்க இந்த என்கவுண்டர் மூலமாக கிடைக்கும் ஹீரோ அந்தஸ்து அவசியமாகிறது.

இன்னொரு புறம் அம்பலப்பட்டுப் போன தங்கள் என்கவுண்டர் படுகொலை நாடகங்களை மக்கள் ஆதரவு பெற்ற நடவடிக்கையாக மாற்றும் திட்டமும் இதில் இருக்கிறது. மோகன் கொல்லப்பட்டதை ஆதரிக்கும் மக்களில் தொன்னூறு விழுக்காட்டினர் இந்த என் கவுண்டர் ஒரு நாடகம் என்பதை ஒப்புக்கொள்வார்கள். நாடகமானாலும் நீதி விரைவாக கிடைத்தால் நல்லதுதானே என்பது அவர்களது வாதம். ஆனால் இந்த நாடக நீதி அரசாங்கத்தின் கொலைகாரர்களை இன்னும் வெறியேற்றுமேயன்றி புது குற்றவாளிகளை தடுக்காது. மோகனிடம் நீண்ட இந்த துப்பாக்கி  ஆறுபேர் கொலைவழக்கில் உள்ளேயிருக்கும் அமைச்சரின் தம்பியிடம் நீளுமா? அல்லது இந்த கொலைகாரன் அஞ்சாநெஞ்சனின் ஆட்களில் ஒருவனாக இருந்திருந்தால் நீண்டிருக்குமா?

இன்னும் சில சந்தேகங்கள் விடையில்லாமல் நீள்கின்றன. பல நாட்கள் திட்டமிட்டு கடத்திய ஒருவன் காயின் பாக்ஸ் போனில் மிரட்ட முடிவெடுத்திருப்பானா? கடத்தப்பட்ட ஒருமணி நேரத்துக்குள் செய்தி காவல்துறைக்கு சென்றாகிவிட்டது. கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனமும் தெரியும், இந்நிலையில் கோவை போன்ற ஒரு மாநகரில் உள்ள காவல்துறையின் வலுவுக்கு அந்த வாகனத்தை கண்டறிவது சாதாரண விஷயம், அப்போது ஏன் இவர்கள் மந்தகதியில் இருந்தார்கள்?. இந்த வழக்கில் மூன்றாம் நபரின் பங்களிப்பு உள்ளதா என்பது பற்றி எந்த விசாரணையும் செய்யப்படவில்லை, ஏன்?. முழுமையான விசாரணையில்லாமல் மோகன்ராஜ் கதை முடிக்கப்பட்டதும் வழக்கை முடித்துவைக்கவேயன்றி நீதியை விரைந்து தருவதற்கல்ல.

ஐம்பது நாட்களில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்கும் சாத்தியம் இங்கு இருக்கிறது. பல வழக்குகள் அப்படி முடித்துவைக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் விசாரணையை தவிர்க்க விரும்புவது பற்றி நாம் கவலை கொள்ள வேண்டும். பிரதான குற்றவாளியை சுட்டுக்கொன்றதன் மூலம் இவர்கள் வழக்கை மொத்தமாக மூடிவிட்டார்கள். முன்விரோதமோ அல்லது கொடுக்கல் வாங்கல் தகராறோ இந்த கொலைகளுக்கு காரணமாக இருந்திருப்பின் அதில் தொடர்புடைய குற்றவாளிகள் இனி சுதந்திரமாக நடமாடலாம். இந்த அழகில் இந்த என்கவுண்டர் குற்றவாளிகளை அச்சுறுத்தும் என்று எப்படிக் கருதமுடியும்?

மக்களின் மனோபாவம் அர்ஜுன் ரசிகர்கள் அளவுக்கு இருக்கிறதோ என்று எண்ணுமளவுக்கு இருக்கிறது இன்றைய சூழல். காஷ்மீரிலோ வடகிழக்கு மாகானங்களிலோ எத்தனைபேர் ராணுவத்தால் கொல்லப்பட்டாலும் அதை தெரிந்துகொள்ளக்கூட விரும்பாதவர்கள், அரசு விடுதியில் கொல்லப்பட்ட மாணவன் பற்றி அலட்டிக்கொள்ளாதவர்கள், (யூனிசெஃபின் ஆய்வுப்படி) உலகில் நாளொன்றுக்கு வறுமை காரணமாக 22,000 சிறார்கள் இறந்துபோவதை வெறும் புள்ளிவிவரமாக மட்டுமே பார்க்கப் பழகியவர்கள் , முஸ்கின் ரித்திக் கொல்லப்பட்டது பற்றி மட்டும் பெருங்கவலை கொள்வதையும் ஊர்வலம் போவதையும் மெழுகுவர்த்தி ஏற்றுவதையும் என்னவென்று சொல்வது? செலக்டிவ் மனிதாபிமானமென்றா அல்லது மானங்கெட்ட மனிதாபிமானமென்றா? ஊடகங்கள் விரும்புபவர்கள் பற்றி மட்டுமே இவர்கள் கவலைப்படுவார்களா? இல்லை அதிரடி திருப்பங்களுடன் கூடிய குற்றத்திற்கு மட்டும்தான் முக்கியத்துவம் தருவார்களா?

குற்றவாளியை தண்டிக்கிறேன் எனும் போர்வையில் காவல்துறையை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் சிந்தனை மக்களிடம் திணிக்கப்படுகிறது. இதுவரை ராணுவ பஜனைக்காக மெனக்கெட்ட அரசுகள் இப்போது அதை போலீஸுக்கும் நீட்டிக்கிறது. போலீசார் இப்போது செய்யும் அத்துமீறல்களே சகிக்கமுடியாத அளவுக்கு இருக்கிறது. குற்றவாளிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள கள்ளக் கூட்டு உலகறிந்தது.இந்த சூழ்நிலையில்  அரசை எதிர்ப்பவர்கள் மட்டுமல்ல சொத்து பத்து வைத்திருப்பவர்களும் பேராபத்தில் இருக்கிறார்கள். எனவே என்கவுண்டர்களுக்கு கிடைக்கும் வெகுஜன ஆதரவு ஒரு மோசமான அரச பயங்கரவாதத்துக்கே வழிகோலும். கோவை சிறார்கள் கொல்லப்பட்டதனால் உங்களுக்கு வந்த கோபம் நியாயமானதெனில் உங்களளை மோகன்ராஜின் என்கவுண்டரும் கோபப்படுத்தவேண்டும். சட்டபூர்வமான வழிகளில் தரப்படும் தண்டனையே குற்றங்களை தடுக்க பயன்படும். அதை நியாயமாக, வெளிப்படையாக மற்றும் விரைவாக பெற வலியுறுத்துவதுதான் சரி. இல்லாவிட்டால் அடியாட்களை தீர்த்துவிட்டு பெரு முதலைகளை தப்பவிடும் அமைப்பாகவே காவல்துறை நீடிக்கும்.

இப்பதிவுக்காக நான் பலரது வசவுகளுக்கு ஆளாக நேரும் என்பதை மறுப்பதற்கில்லை (தினமலரில் இதுவரை ஆயிரத்து இருநூறு பேர் போலீசுக்கு சபாஷ் சொல்லியிருக்கிறார்கள்). வசவுகளை வாங்கிக்கொள்ள நான் தயார், ஒரு நிபந்தனையோடு. கடந்த ஏழாம்தேதி திருக்காட்டுப்பள்ளி அருகே கீர்த்திகா எனும் பத்து வயது சிறுமி பாலியல் வண்புணர்ச்சி செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவர் வறிய குடும்பத்தைச் சேர்ந்த கறுத்த கிராமத்துச் சிறுமி எனும் தகவல் உங்களுக்கு தேவையில்லாமல் போகலாம். ஆனால் எட்டாம் தேதி இந்த செய்தியை படித்தவர்கள், கோவை சம்பவத்துக்கு நிகராக இந்த செய்திக்கும் கொந்தளித்தவர்கள், அதை அக்கறையோடு பின்தொடர்ந்தவர்களின் வசவுகளை நான் முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறேன். இந்த பட்டியலில் வராதோர் கொஞ்சம் சிந்தியுங்கள், உங்கள் புறக்கணிப்பைப் பற்றியும் உங்கள் ஊடகங்களின் பாராமுகத்தைப் பற்றியும்.

“மோகன்ராஜ் என்கவுண்டர்- யாருடைய குழந்தைகள் கொல்லப்பட்டால் நீங்கள் கோபப்படுவீர்கள்?” இல் 37 கருத்துகள் உள்ளன

 1. அருமையான பதிவு.. இந்த என்கௌன்டர் செய்தியை கேள்விப்பட்டவுடனே எனக்குள் ஏற்பட்ட நியாயமான கேள்விகளை அழகாக உங்கள் வலைப்பதிவில் எழுதிருக்கீங்க..

  நீங்க ஒரு கம்யுனிஸ்ட்காரர் என்று நினைக்கிறேன்.. நான் கம்யுனிஸ்ட்களுக்கு எதிரானவன்.. ஆனா, ஒன்று மட்டும் உறுதி.. பிரிட்டிஷ் உருவாக்கிய இந்த “இந்தியா” என்ற கார்பொரேட் ஸ்டேட்டுக்கு (இது தேசம் அல்ல..) பணக்காரர்களுக்குண்டான ஒரு அமைப்பு.. யார் அதிக பணம் வைத்திருக்கிறார்களோ, அவர்கள் ஒரு லாப்பி ஏற்படுத்தி, இந்த இந்திய ஸ்டேட்டை தங்கள் சௌகரியத்துக்கு ஆட்டுவிக்கலாம்.. அப்படித்தான் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது..

  இந்த என்கௌன்டர் அதற்கு ஒரு உதாரணம்.. காவல் துறை, இங்கு யாரை காவல் காற்கிறார்கள்? ஏழைகளையா? இல்லை நடுத்தர மக்களையா? இரண்டுமே இல்லை.. பணக்காரர்களை மட்டும்தான்..

 2. கடவுளால் கொலைகாரனை தண்டிக்க முடியுமென்றால் கொலைகளையும் தடுத்திருக்க முடியும். பிறகு ஏன் பார்த்துக்கொண்டிருந்தார்?.

  பின்னூட்டம் மூலம் கடவுளையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்தமைக்கு நன்றி.

 3. காரணம் ஊடகங்கள் எதைப் பெரிது படுத்துகிறார்களோ அதையே மக்களும் நம்புகிறார்கள். மற்றபடி தினபமலர் பின்னூட்டங்கள். அடி, வெட்டு, சுடு, குத்து என்ற ரீதியிலேயே வருவதால் ஆச்சரியமில்லை. ஈழப்போரின் போது கூட இதை விடப் பெரிய அவலங்கல் நிகழ்ந்த போதும் ஊடகங்கள் பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை. வரும் காலங்களில் இது போன்று கொலைகளைச் செய்துவிட்டு அவர்கள் மீது ஏதாவது கொலை வழக்கைச் சொல்லி திசைதிருப்பலாம், ஊடகங்களின் ஒத்தாசையுடன். மக்களின் வரவேற்பு நிச்சயம். இது கவலைக்குரியது. மக்கள் யாருக்காக அழ வேண்டும் யாரைக் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். அது சிறப்பாக நிறைவேறியுள்ளது.

 4. கூர்மையான கவனிப்பு.
  மக்களின் ரசிக மனோபான்மை அதிகரித்து வருவதை அருமையாகச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள்.
  ஆனால் நம் மக்களோ திருந்தும் ரகம் இல்லை.

  >>//மக்களின் மனோபாவம் அர்ஜுன் ரசிகர்கள் அளவுக்கு இருக்கிறதோ என்று எண்ணுமளவுக்கு இருக்கிறது இன்றைய சூழல்.//

  இன்று சன் நியூஸில் ஒரு ‘சிறப்புப் பார்வை’.. அதில் அதிகரித்துவரும் குழந்தைக் கடத்தல்கள். அதற்கு காவல்துறை மற்றும் பள்ளிகள் எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி விலாவரியான அலசல்கள். இதில் இருக்கும் பொருளாதார அரசியல் காரணங்களைப் பார்க்க மறுக்கும் பார்வை. இந்நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு எனக்குத் தெரிந்த வயதான ஒரு அம்மா சொன்னார். “இது போன்று குழந்தைக் கடத்தல் செய்பவர்களை சுட்டுக் கொல்லவேண்டும்” என்று. ரசிக மனோபாவம் என்று நீங்கள் கூறுவது முற்றிலும் சரி.

  எனது நண்பர் ஒருவர் சொன்னார். வட இந்திய சேட் குடும்பத்தினர் பெரும்பாலும் தமிழ்நாட்டின் நகரங்களில் நிறைய நிலம் வைத்திருப்பவர்களாகவும், வட்டி-அடகுக்கு பணம் தருபவர்களாகவும் உள்ளனர். கொள்ளை லாபம் கொழிப்பவர்களாக உள்ளனர். தமிழர்களின் உழைப்புச் சுரண்டலில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே அவர்களுக்கு எதிரான மனோபாவமும் உருவாகிறது. சேட்டுக்களின் மீதான இந்த துவேஷம் இன அரசியலை மையப்படுத்தி இருந்தாலும் அதில் உண்மை இருக்கிறது.

 5. அவசியமான பதிவு.

  அவன் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் சமூக குற்றங்கள் அனைத்திற்குமே என்கவுன்ட்டர்கள்தான் தீர்வென்றால் இங்கே யாருமே உயிரோடிருக்க முடியாது .

  தமிழ் சினிமா கிளைமாக்ஸ் பார்த்து வளர்ந்த மக்களல்லவா..? ஒரு இன்ஸ்டன்ட் கொலையை ஆதரித்து கொண்டாடும் மனநிலையில் மகிழ்ச்சியடைவது வேதனையும் வெட்கமுமாய் இருக்கிறது. இதை விட வேறு என்ன வேண்டும்.? எங்கே சென்று கொண்டு இருக்கிறோம் நாம்..?? 😦 😦

 6. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இவனுக்கே நம்ம கராத்தே தியாகராஜன் போலவோ நம்ம தினகரன் ஆபிசை கொளுத்திய அட்டாக் பாண்டி போலவோ ஒரு அரசியல் பேக்கிரவுண்டு இருந்திருந்தா இதே போலிஸ்காரனுங்க சலாம் போட்டிருப்பாங்க….

  கொலைசெஞ்சாலும் ஒரு பேக்கிரவுண்டோட செய்யனும் இல்லின்னா இப்புடித்தான் என்கவுண்டர்

 7. எங்கே சென்று கொண்டு இருக்கிறோம் நாம்..?? //

  ஏன் பட்டர்பிளை சூர்யா இன்னும் கொஞ்சம் பாலியல் படங்களை உங்கள் வலைப்பூவில் போட்டு இன்னும் கொஞ்சம் பாலியல் கொடுமைகள் அதிகரிக்க வழி செய்யுங்களேன்..

  உங்கள் சேவை வாழ்க வளர்க,…

  ஏனெனில் அது யார் வீட்டு குழந்தைகள்தானே?…

  கொலை, பாலியல் கொடுமை, என்கவுண்டர் மட்டுமே சமூக குற்றமல்ல.. பாலியல் படங்களை பொதுவெளியில் போடுவதும்தான்..

 8. தமிழர்களின் உழைப்புச் சுரண்டலில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.//

  நம் தமிழர் வடநாட்டில் /வெளிநாட்டில் வணிகம் செய்து சுரண்டல் செய்பவர்களையெல்லாம் திரும்பி வர சொல்வோமா/..?

 9. ஆழ்ந்து சிந்தித்து உணரப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால். இந்த உலகில் பல்லுக்கு பல் கண்ணுக்கு கண் என்பது கண்டிப்பாக வெல்லக்கூடிய அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமாக இருக்க போவது இல்லை. எல்லாவற்றிலும் உணர்ச்சிவசப்படும் தமிழர்கள் இதிலும் பண்ணியது அவ்வாறே. மற்றபடி இந்திய சட்ட அமைப்பை மாற்றாமல் இது போன்ற போலீஸ் தண்டனைகள் குறையாது.
  தமிழ் உதயன்

 10. மிக அருமையான பதிவு. நாட்டில் தினந்தோறும் எத்தனையோ குழந்தைகள் கொடுமைக்கு ஆளாகிறார்கள், பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள். கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். சாதாரன குப்பன் சுப்பன் வீட்டுக் குழந்தைகள் கொல்லப்பட்டால் இங்கு எந்த என் கவுண்டரும் நடந்து விடப்போவதில்லை. சாயல்குடி அருகே அவத்தாண்டை கிராமத்தில் இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு ஏழைத் தம்பதியின் மகள் ஜந்தே வயதான சிறுமி தாஜ்முன்னிஷா பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி தலை சிதைக்கப்பட்டு க் கோடூரமான முறையில் கொல்லப்பட்டாள். இன்று என் கவுண்டர்/செட்டியார் என்று மார் தட்டிக்கொள்ள்ளும் இந்த அதிகார/சதிகார வர்க்கம் , இந்த ஏழைக் குழந்தைக்கு என்ன நியாயம் வழங்கியுள்ளனர். ஏழை என்றால் எவ்வளவு கோடூரத்தையும் தாங்கிக்கொள்வான் என்று ஊடகங்கள் கூட கண்டுகொள்வதில்லை. சிறுமி முஸ்க்கினைக் கொன்ற மோகன்ராஜிற்கு இந்த தண்டனை அவசியமே! அநியாதிற்கு எதிரான மக்களின் கொந்தளிப்பை நினைத்தால் பெருமை யாக உள்ளது. ஆனால் இல்லாத வீட்டுக் குழந்தையான தாஜ்முன்னிஷா கொலையில் இந்த மீடியாக்களும், மக்களும் ,அதிகாரவர்க்கமும், மரத்துப்போனது ஏன்?

 11. அரசியல் பின்புலம் இல்லாத குற்றவாளிகள் கொள்ளப்படுவார்கள் என மக்களுக்கு சொல்லியிருக்கிறது இந்த சம்பவம். இது போல சில கொலைகளை வரவேற்கும் நிலையிலேயே மக்கள் இருக்கின்றார்கள் என்பது நிதர்சனம்.

  இனி குற்றவாளிகள் குற்றம் செய்யும் முன் அரசியலில் பலம் வளர்ப்பார்கள் என்பது மட்டும் உண்மை. இல்லையென்றால் அவர்களுக்கு என்கவு்ன்டர்தான்.

 12. இந்த கொலைகாரனை தண்டித்தவர்களே கடவுள்.. அதாவது என்கௌன்டரில் போட்டுத்தள்ளியவர்களே இங்கு கடவுளாக தெரிகிறார்கள்..

  கடவுள் என்ற தத்துவம் இந்து மதத்தில் பரந்து விரிந்தது.. தயவு செய்து கிறித்துவ கடவுளை மனசுல நினைச்சுக்கிட்டு இந்து மத நம்பிக்கைகளை தாக்காதீர்கள்..

 13. நம்மில் எத்தனை பேர் இந்த நிகழ்ச்சியை நினைவில் வைத்து அதிகரவர்கத்திற்கு எதிராக இருக்க போகிறோம் ????

 14. என்கொவ்ண்டர் பண்ண வேண்டியது மோகன்ரஜை மட்டும் அல்ல…..முதலில் வில்லவருக்கு நன்றி…..நான் நினைத்ததை என் சகோதரர்கள் மேலே சொல்லிவிட்டார்கள். அனால் அவர்கள் சொல்ல மறந்ததை நான் இங்கு பின்னூடம் இட விரும்புகிறேன்…

  மோகன்ராஜ் கொலைகாரன் தான் மற்றும் கொடூரன் தான் அதில் எந்த சந்தேகம் இல்லை. ஆனால் அவனை கொலைகாரனாக மாற்றிய சமுதாயத்தை பற்றி யாராவது நினைத்தீர்களா…அவனும் தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைதான். அவனொன்றும் அரக்கி வைற்றில் இருந்து தாவி குதித்தவன் இல்லை அல்ல ராஜபக்சேவின் பையனும் இல்லை…அவனை இந்த அளவுக்கு காம கொடுரனாக மற்றும் மிருகமாக மாற்றியதுதான் என்ன??

  அனனத்தும் அவனை சுற்றிய சூழல். பத்திரிகை எடுத்தாள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கள்ள தொடர்பு…..அதுவும் காம கதைகளைவிட அருமையான கிளுகிளுப்பானவிளக்கம் . காம கதைகள் எல்லாம் ஒர்ரம் நிற்கணும்..
  டிவிஐ போட்டால் நாடகம் முதல் கொண்டு படம் வரை கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கள்ள தொடர்பு….இது போதாது என்று…தலிபான் மனிதன் தலையை அறுக்கும் வீடியோஇன் ஒலி,ஒளிபரப்பு…(இதுக்கு தான் இலவச டிவி ) இன்னும் பல…
  அடுத்து படங்களை எடுத்துக்கொண்டால் மேல் சொன்ன அனைத்துக்கும் தலைவர் அதுதான்……

  அவன் என்ன தாயின் வைற்றில் கொலை செய்ய கற்று கொண்டா வெளியில் வந்தான். அவனை இந்த மிருக நிலைமைக்கு மாற்றிய சமுதாயமும், மோசமான பத்திரிகைகளும், படங்களும் எப்போது தண்டிகபடும்???? இல்லை எப்போது அவை இதை உணரும்?

  சற்று யோசியுங்கள்…

  என்னால் முடிந்த வரை இந்த தவறுகளை நான் மாற்ற நினைக்கிறன்..உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள் …

 15. மோகன் ஒரு பலியாடு , அவனுக்கு பின்னால் இருந்தவர்கள் தப்பித்திருக்ககூடும் கடைசி நேரத்தில் நடந்த பண பரிமாற்றங்கள் என்ன ஆச்சு ?? பணம் படைத்த வட நாட்டு முதலாளிகளுக்கு மட்டும் தான் இந்த அரசும் காவல்துறையும் துணை நிற்கின்றது

 16. யாருடைய குழந்தைகள் கொல்லப்பட்டால் நீங்கள் கோபப்படுவீர்கள்? –

  யாருடைய குழந்தைகள் கொல்லப்பட்டால் நீங்கள் செய்தி வெளியீடுவீர்கள்?? என மாற்றுங்கள்

  ஊடகங்களும் இவர் இன்னார் என காட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளன.

  என்கவுன்ட்டர் முடிந்த இரண்டாவது நாள், பள்ளி சிறுவர்கள் மைசூர் செல்ல முயன்ற செய்தியை கூட தினமலர் என்கவுன்ட்டர் ரீதியிலேயே வெளியிட்டது.

  இது ஊடகங்களின் பிழையே அன்றி மக்களின் பிழை அல்ல.. இதைப் பற்றிய என் பார்வை –
  http://priyanparvaiyil.blogspot.com/2010/11/blog-post.html

  நீங்கள் என் கேள்விக்கு விடை அளித்துள்ளீர்கள் நன்றி..

  எந்த ஒரு SENSITIVE ISSUE பற்றிய ஊடக செய்திகளுக்கும் சட்ட துறையின் GUIDANCE நிச்சயம் இருக்கும், இதற்கு இடம் கொடுக்காமல் காட்டு தீ போல செய்தி பரவியதுக்கு காரணம், சிறார்களுக்கு எதிரான மக்களின் உண்மையான கோபம்.. ஆனால் எரியும் தீயில் எண்ணை வார்த்தது போல் கொந்தளிப்பை அதிகரிக்க செய்தது ஊடகங்கள் தான்.

  உண்மையான குற்றவாளி தண்டிக்க படவேண்டும் என்பதை விட, பொதுமக்களின் கொந்தளிப்பை தணிப்பதையே காவல்துறை தலையாய கடனாக கொண்டிருந்தது.. – இந்த நோக்கமே இச்சம்பவத்தில் நடந்தேறிய என்கவுன்ட்டர் குற்றங்களை தடுக்க உதவாது என கருதப்படுகிறது.

  மோகனகிருஷ்ணன் கடத்தல் செயலுக்கு பின்னால் யாரவது இருக்கிறார்களோ?? என தற்போது பலரும் சந்தேகப்பதன் காரணம் கூட, பொதுமக்களின் கொந்தளிப்பும், அனுதாபமும் வேண்டுமென்றே பெறப் பட்டதாக தோன்றும் நடந்த சில சம்பவங்களின் அடிப்படையே ஆகும்.

  பொதுமக்கள் “வறிய குடும்பத்தைச் சேர்ந்த கறுத்த கிராமத்துச் சிறுமி – வசதி படைத்த ஜெயின்கள்” என பிரித்து பார்த்து உணர்ச்சிவசப்படுவதில்லை, அப்படி இருக்க போவதும் இல்லை.. செய்திகளை வெளியிடும் ஊடகங்களே இதற்கு பொறுப்பு..

  ஒருவேளை அந்த வறிய சிறுமியின் கொலை பின்னணி, ஊடகங்கள் எதிர்பார்த்தது போல் திருப்பங்கள் இல்லாமல் இருந்திருக்கலாம் அல்லது மீண்டும் மீண்டும் ஒரே போல செய்திகள் கொடுத்தால் காவல்துறை ஓட்டைகள் பற்றி மக்கள் தெரிந்துகொள்ள நேரிடும் என்பதால் இருந்திருக்கலாம்.

  பொதுமக்கள் என்பவர்கள் தினந்தோறும் அவரரவர் அலுவல்களை கவனிக்க மட்டுமே நேரம் உள்ளவர்கள்.. எந்த ஒரு செய்தியும் அவர்களை சேராதவரை அவர்கள் பிழைப்பை மட்டுமே கவனத்தில் கொள்பவர்கள்..

 17. ஆதரவாகவோ அல்லது எதிர்ப்பாகவோ பின்னூட்டமிடும் ஒருவருக்கும் மனசாட்சி மட்டும் காணாமல் போனதேன்? கீர்த்திகா பற்றி யாருக்குமே கருத்து சொல்ல எதுவுமே இல்லையா?

 18. அரசாங்கம் பயிற்றுவித்த குற்றவாளிகள் தான் காவல்துறை பணம் வாங்கி கொலை செய்யும் நிழல் உலக தாதாக்கள் போல பதவியோ அல்லது நல்ல பெயரையோ அல்லது ஆளும் வர்கத்தையோ குளிர்விக்க இந்த வேட்டை நாய்கள் பயன்படுத்த படுகிறது என்பதை எவ்வளவோ என்கவுன்ட்டர் நிகழ்வுகள் உதாரணம் காட்டலாம்…..நல்ல பதிவு சகோ…..

 19. //கடந்த ஏழாம்தேதி திருக்காட்டுப்பள்ளி அருகே கீர்த்திகா எனும் பத்து வயது சிறுமி பாலியல் வண்புணர்ச்சி செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவர் வறிய குடும்பத்தைச் சேர்ந்த கறுத்த கிராமத்துச் சிறுமி எனும் தகவல் உங்களுக்கு தேவையில்லாமல் போகலாம். ஆனால் எட்டாம் தேதி இந்த செய்தியை படித்தவர்கள், கோவை சம்பவத்துக்கு நிகராக இந்த செய்திக்கும் கொந்தளித்தவர்கள்//
  naan konthalikirenya.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: