தேவைக்கு மேலிருப்பவை திருடப்பட்டவையே.


எனக்காக சில வாக்கியங்கள்.

நவம்பர் மாத மத்தியில் தமிழ்மணத்திலிருந்து நட்சத்திர அழைப்பு வந்தபோது நான் கொஞ்சம் குழம்பித்தான் போனேன். காரணம் ஏழு பதிவுகள் எழுதவேண்டும் என்பதாக இருக்கலாம். ஒரு பிறவி சோம்பேறிக்கு இருபதுநாளில் ஏழு கட்டுரைகள் எழுதுவது எப்படி சாத்தியம்? (நான் எங்க போவேன்.. எனக்கு யார தெரியும்…) ஆகவே அவர்களிடம் மேலும் இருவாரங்கள் அவகாசம் வாங்கி, இப்போது அந்த நாளும் வந்தாயிற்று.

ஏதாவது செய்தியைத் தொடர்ந்தே நான் பலமுறை பதிவிட்டிருக்கிறேன், ஆகவே கட்டுரைகளுக்கான மேலோட்டமான யோசனையை கொண்டுவருவதே சற்று சவாலாக இருந்தது. காலியான மனதுடன் எப்படி ஏழு தலைப்புக்களை பிடிப்பது என்கிற குழப்பத்திலேயே பாதிநாட்களை கடத்திவிட்டேன். நல்வாய்ப்பாக உன்னதம் இதழுக்கு எழுதி பதிவேறாத பணம் எனும் கட்டுரை கையில் இருந்தது (அதுதான் முதல் கட்டுரையாக கீழே தரப்பட்டுள்ளது). மீதி கட்டுரைகளை முடிந்த அளவுக்கு வெவ்வேறு தளங்களில் இருந்து எடுத்து எழுத முயற்சி செய்திருக்கிறேன்.

உங்கள் வாசிப்பையும் விமர்சனங்களையும் எதிர்நோக்குகிறேன்.

நன்றி,

வில்லவன்.

————————————————————————

பணம், கடந்த இரு நூற்றாண்டுகளாக மிக அதிகமாக உச்சரிக்கப்பட்ட சொல்.இன்று உலகின் பெரும் பேரழிவுகளுக்கான உந்துசக்தி. இதை கைப்பற்றும் விதத்தில்தான் நீங்கள் நல்லவரா, கெட்டவரா, இளிச்சவாயரா அல்லது திறமைசாலியா என்பது முடிவு செய்யப்படும். திருடனாய் இருந்தாலும் திருடும் பணத்தின் அடிப்படையிலேயே ஒருவன் போலீசாரால் நடத்தப்படுவான். நூறுரூபாய் வழிப்பறி செய்பவன் கைவிலங்கிட்டும் மூவாயிரம் கோடி திருடிய கேதான் தேசாய் மாகாராஜா போலவும் நடத்தபடுவதன் பின்னனியில் வேறென்ன இருக்க முடியும்? பத்து ரூபாய் கஞ்சா விற்பவனை விட கோடி ரூபாய் கோகைன் விற்பவனுக்கு சிறையில் சட்டபூர்வமாகவே பல சலுகைகள் வழங்க இயலும். சந்தேகமில்லை பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை எனும் சொற்றொடர் நூறு சதவிகிதம் பொருந்தும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

மனிதன் தனித்த ஒரு இடத்தில் நிரந்தரமாக வாழத்துவங்கியபோதே பணம் போன்றதொரு பொருளுக்கான தேவையும் எழுந்துவிட்டது. உங்களுக்கு வேண்டியது யாவற்றையும் உங்களால் உற்பத்தி செய்ய இயலாது. நீங்கள் கூடுதலாக உற்பத்தி செய்ததைக் கொடுத்து உங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்ளலாம் எனும் பண்டமாற்று முறை அவ்வளவு சிறப்பானதாக இல்லை. எந்தப் பொருளுக்கு எவ்வளவு மதிப்பு என்பது எப்படித் தீர்மானிப்பது? ஒருவர் அரிசியை உற்பத்தி செய்கிறார் அவருக்கு பருப்பு தேவையாக இருக்கிறது என்று வைத்துக்கொண்டால் எவ்வளவு அரிசியைக் கொடுத்து எவ்வளவு பருப்பை வாங்குவது என்ற குழப்பம் அங்கு மேலிடும். ஆகவே இரண்டு பொருட்களை பரிமாற்றம் செய்துகொள்ள இடையே ஒரு பொதுவான ஒரு வஸ்து தேவையாக இருந்தது. இந்த இடைப்பட்ட பரிமாற்றத்துக்கான பல பொருட்கள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. ஆலிவ் எண்ணையும் மீன் எண்ணையும்கூட பணத்திற்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

பணம் எனும் பொருள் வணிகத்தை சுலபமாக்கியிருக்கிறது என்பதை நம்மால் உணர இயலாது. ஒரு உதாரணத்தை சொல்வதன் மூலம் இதை ஓரளவு புரியவைக்க முடியும். இன்றைய மியான்மரில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை நடந்த சந்தையில் நீங்கள் பொருட்கள் வாங்கப் போவதாக வையுங்கள்,  நீங்கள் ஒரு கட்டி வெள்ளியை நீங்கள் எடுத்துச்செல்லவேண்டும். வாங்கும் பொருளுக்கு ஈடாக  கொஞ்சம் வெள்ளியைத் தரவேண்டும். ஆகவே ஒரு உளியையும் தராசையும் நீங்கள் எடுத்துச்செல்ல வேண்டும். போகட்டும் என்று நீங்கள் அதையும் எடுத்துச்சென்றாலும் உங்கள் தராசும் பொருளை விற்பவனது தராசும்  நியாயமானது என்று எப்படி நம்புவது? ஆகவே எல்லா சந்தைகளிலும் சிலர் தராசுடனும் எடைக் கற்களுடனும் எடைபோடும் வேலைக்காக இருப்பார்கள், நடுநிலையான எடைபோடுவதற்காக அவர்களுக்கும் கூலியை வெள்ளியில் தரவேண்டும்.  இந்தத் தலைசுற்றவைக்கும் ‘ஷாப்பிங்குடன்’ இன்றைக்கு அட்டையை உரசி  வாங்குவதை கொஞ்சம் ஒப்பிட்டுப்பாருங்கள்.

தேவைக்கு என்று மட்டும் இருந்தவரை நாணயம் ஒரு ஆட்கொல்லியாக இருந்திருக்க முடியாது. கள்ள நாணயம் முகம்மது பின் துக்ளக் காலத்திலிருந்தே இருக்கிறது (அவர்தான் தோலாலான நாணயத்தை அறிமுகப்படுத்தினார்). பணத்தின் மதிப்பு வரையறைக்கு உட்பட்டதாக்கப்பட்ட பிறகும் அதன் பரிமாற்றங்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட பிறகும்தான் அதன் மோசமான விளைவுகளை நாம் சந்திக்கிறோம்.

சர்வதேச பொதுச்செலாவனியாக அமெரிக்க டாலர் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன் அமெரிக்கா தனது டாலர் இருப்பை இருமடங்காக உயர்த்தியது, கூடுதலாக அச்சடித்த பணத்திற்கு ஈடாக தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கவேண்டும் என்பது நிபந்தனை. ஆயினும் இன்றுவரை அந்த நிபந்தனை நிறைவேற்றப்படவில்லை. அதிகாரமிருந்தால் வெறும் காகிதத்தை மட்டும் சொத்தாக மாற்ற இயலும் என்பது இதில் கவனிக்கப்படவேண்டிய செய்தி.

பணம் விழுங்கிய முதல் விசயம் தொழில் தர்மம். உண்ண லாயக்கில்லாத காலாவதி உணவை அம்பானியின் கம்பெனி மலிவான விலைக்கு விற்பனை செய்கிறது, பொருள் மலிவானதாக இருக்க வேண்டுமென்றால் உன் உடல் நலத்தை விலையாகக் கொடு என்கிறார் அம்பானி ( சென்னையில் உள்ள ஒரு ரிலையன்ஸ் கடையில் காலாவதியான அமேஸ் ப்ரெயின் ஃபூட் எனும் குழந்தைகள் உணவு பாதி விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது).

அணுவிபத்து இழப்பீட்டு மசோதா எத்தனை பெரிய அணுவிபத்து இந்தியாவில் நடந்தாலும் முதலாளிகள் ஐந்நூறு கோடி தந்தால் போதும் என்கிறது, இதே முதலாளிகள் அமெரிக்காவில் விபத்து நடந்தால் இதுபோல நூற்று நாற்பது மடங்கு அதிகத் தொகை தரவேண்டும். அணு முதலீடுகள் வந்துவிட்டால் ஊரெல்லாம் விளக்கெரியும் என்று நமக்கு ஆசை காட்டுகிறது அரசு, ஊரே எரிந்தாலும் ஐந்நூறு கோடி கொடுத்தால் போதும் என்று கணக்கிடுகின்றன நிறுவனங்கள். விமான விபத்தில் செத்தவர்களுக்கு “இழப்பீடு” எழுபது லட்சம் அரசுப்போருந்து விபத்தில் இறந்தவருக்கு முதல்வரின் “கருணைத்தொகை” ஐம்பதாயிரம், வேறுபாடு புரிகிறதா? ஒரு உயிரின் விலை அவன் வசிக்கும் தேசத்தையும் அவனது பயணச்சீட்டையும் பொறுத்தது, யார் சொன்னது உயிர் விலைமதிப்பற்றது என்று?

உலகமயமாக்கல் எனும் வார்த்தையின் பொருளே பணத்தை தடையில்லாமல் சுரண்டுவது என்பதுதான்.  ஈராக் போரில் பங்கேற்காத நாடுகள் போருக்குப் பிறகான புணரமைப்புப் பணிகளில் பங்கேற்க முடியாது என்றார் ஜூனியர் புஷ். காண்ட்ராக்ட் வேண்டுமானால் படுகொலைக்கும் பங்காளியாக வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தது வெள்ளை மாளிகை. எத்துனை நாடுகள் கோபப்பட்டன? ஈழத்துப் போரழிவுக்குப்பிறகு, ஒவ்வொரு பேரழிவுக்குக் பின்னாலும் ஒரு சிறப்பான வாய்ப்பு காத்திருக்கிறது என்றார் பசுமைப்புரட்சி நாயகன் எம்.எஸ்.சுவாமிநாதன். அப்போது தமிழ்நாட்டில் அவருக்கு எதிராக பெரிய கண்டனங்கள் ஏன் எழவில்லை? காரணம் எளிமையானது, நாடுகளும் நிறுவனங்களும் மட்டுமல்ல நம்மில் பலரும் சுவாமிநாதனைப்போலவே சிந்திக்குமாறு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம்.

உலகமயமாக்கலில் முதல் வெற்றி மக்கள் தங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவர்களாக மாற்றுவதில்தான் இருக்கிறது. நம் நாட்டிலும் அதுதான் நடந்தது. மின்வெட்டா? ஊரைகூட்டி ஏன் ஆர்பாட்டம் செய்யவேண்டும், ஒரு இன்வெர்ட்டர் வாங்கு. விலைவாசி அதுபாட்டுக்கு உயர்ந்துகொண்டுதான் இருக்கும், குறைக்கச்சொல்லி ஏன் கத்தவேண்டும், கூடுதலாக சம்பாதித்தால் போகிறது? பணத்தை நோக்கி ஓடு எனும் ஒரே பாடத்தின் மூலம்  இந்தியாவின் பெரும்பான்மை நடுத்தர வர்கத்து மக்கள் இப்படிப்பட்ட எருமைமாட்டு சிந்தனை திணிக்கப்பட்டிருக்கிறது. நானும் என் சகோதரனும் IT படிக்காததுதான் என் அம்மாவின் குறையாக இருக்கிறதேயன்றி மற்ற துறைக்காரர்களுக்கு  ஏன் சம்பளம் குறைவாக இருக்கிறது எனும் கேள்வி அவருக்கு எழுவதே இல்லை.

சௌகர்யங்களை அனுபவிக்க கற்றுத்தந்த பணம் அதற்கு பதிலாக உரிமையை கேட்கும் பழக்கத்தை மறக்கடித்தது. என் மகன் யோக்கியன் என்று எந்த தந்தையாவது சொன்னால் அதுக்கென்ன இப்போ என்ற நக்கலான பதில்தான் எதிரிலிருந்து வரும், மாதம் என்பதாயிரம் சம்பாதிக்கிறான் என்று ஒரு தந்தை சொன்னால் அதுக்குமேல என்னவேணும் என்ற கௌரவமான பதிலை பெற்றுவிடலாம்.

சம்பாதிக்கும் வெறியை தூண்டிவிடும் அதே அளவுக்கு நுகர்வு வெறியும் தூண்டப்படுகிறது. வாங்கும் சம்பளத்துக்கு ஏற்ப கடன் தரப்படும், அதற்கேற்ப நீங்கள் உங்கள் வாழ்வின் வசதிகளை மேம்படுத்திக்கொள்ளலாம். சவுரியத்துக்கான பணத்தேவையும் பணத்துக்காக விட்டுத்தரப்படும் சவுகர்யங்களும் ஒன்றோடொன்று போட்டியிடுகின்றன. எது வெற்றி பெற்றாலும் நாம் கடனாளியாவது நிச்சயம். சேமிப்பதோடு நிறுத்திக்கொள்ள விரும்பினாலும் நீங்கள் தப்ப முடியாது.

பங்கு சந்தையில் பணத்தை கொட்டிவிட்டு மறுவேலை பாருங்கள் என்று எல்லா ஊடகங்களும் கத்தித் தீர்க்கின்றன. நான்கு ஆண்டுகளில் நூறு சதவிகித வளர்ச்சி நிச்சயம் என்று சொல்லிக்கொண்டே மிகுதியாக இருக்கும் பணத்தை மட்டும் முதலீடு செய்யுங்கள் என்று எச்சரிக்கையும் செய்கிறார்கள். உள்ளிருக்கும் செய்தி ஒன்றுதான் கூடுதலாக இருக்கும் பணத்தை ஒரு முதலாளிக்கு கொடுத்துவிடு. உன் தேவைக்கான பணத்தை முதலீடு செய்யாதே, ஏனெனில் வேலைசெய்து வருமானத்தைப் பெருக்கவும் சேமித்ததை முதலீடாக்கவும் முடிகிற இருபலன்தரும் அடிமைகள் இருப்பது இன்றைய முதலாளிகளுக்கு அவசியம்.

குடும்பத்தகராறிலிருந்து குலோபல் வார்மிங் வரை எல்லா பிரச்சனைகளுக்குப் பின்னாலும் பணமிருக்கிறது. உங்களுக்குப் பணம் வேண்டும் அது உங்களுக்கு கீழிருப்பவன் சாப்பாட்டை பறித்துவிட்டு வந்ததானாலும் சரி என்று நீங்கள் ஒரு நியாயம் கற்பித்துக்கொள்ளும் வேளையிலேயே உங்களிடமிருந்து பறித்துக்கொள்ளும் உரிமையை உங்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பவனுக்கு நீங்கள் வழங்கியதாகத்தான் பொருள். மதுகோடா என்ற ஒருவனின் சொத்து மதிப்பு சட்டீஸ்கர் மாநிலத்தில் வாழும் எல்லா சிறுவிவசாயிகளின் மொத்த சொத்துமதிப்பைவிட அதிகம். மதுகோடாவின் மொத்த ஊழல் மதிப்பைக் காட்டிலும் முகேஷ் அம்பானியின் மும்பை வீட்டின் மதிப்பு அதிகம்.

அம்பானி உழைத்து முன்னேறினார் என்று நாம் வாதிட்டால் மதுகோடாவும் ஏதோ ஒரு வகையில் உழைத்தே இந்த பணத்தை சம்பாதித்திருக்கிறார், ஆகவே அவரையும் நாம் உழைப்பால் உயர்ந்தவர் என்றே குறிப்பிட்டாக வேண்டும். அம்பானி உழைத்து இந்த சொத்தை சம்பாதித்தார் என்றால் சொத்து ஏதுமில்லாத என்பது சதவிகித மக்களை நாம் உழைக்காத சோம்பேறிகள் என்று சொல்வதாகத்தான் பொருள்.

பணமே எல்லாம் எனும் சிந்தனையை நம் மூளையில் இருந்து வெளியேற்றுவதுதான் நாம் மனிதனாக வாழ்வதற்கு எடுக்கப்படும் முதல் முயற்சியாக இருக்கும். ஏனெனில் ஒருவனிடம் தேவைக்கு அதிகமாக இருக்கும் பணம் எல்லாம் யாரோ ஒருவரிடமிருந்து திருடப்பட்டதே.

Advertisements

“தேவைக்கு மேலிருப்பவை திருடப்பட்டவையே.” இல் 20 கருத்துகள் உள்ளன

 1. சிறப்புப் பதிவரே, வாழ்த்துகள். உலகப் பொருளாதாரம் பேச எனக்கு அறிவு பத்தாது. அப்பாலிக்கா வர்றேன்.

 2. ஊரே எரிந்தாலும் ஐந்நூறு கோடி கொடுத்தால் போதும் என்று கணக்கிடுகின்றன நிறுவனங்கள். //

  சாதாரண மழைக்கே ஆயிரக்கணக்கான கோடிகள் ஒதுக்குகிறது அரசு!

 3. //ஏனெனில் ஒருவனிடம் தேவைக்கு அதிகமாக இருக்கும் பணம் எல்லாம் யாரோ ஒருவரிடமிருந்து திருடப்பட்டதே. //

  உங்ககிட்ட உங்க தேவைக்கு அதிகமா எவ்வளவு பணம் இருக்குன்னு சொல்லுங்க…. அத என்னோட அக்கவுண்டுக்கு அனுப்பிடுங்க.. திருட்டுப்பணம் உங்களுக்கு எதுக்கு..

  முதல்ல தேவைன்னா என்ன? எவ்வளவு?

  அவ்வ்வ்……:))))

 4. ““பத்து ரூபாய் கஞ்சா விற்பவனை விட கோடி ரூபாய் கோகைன் விற்பவனுக்கு சிறையில் சட்டபூர்வமாகவே பல சலுகைகள் வழங்க இயலும்.““

  முன்னால் சிறைவாசியான நான் இதை வழி மொழிகிறேன்.

  ““சர்வதேச பொதுச்செலாவனியாக அமெரிக்க டாலர் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன் அமெரிக்கா தனது டாலர் இருப்பை இருமடங்காக உயர்த்தியது““

  உண்மையில் உலக வங்கி ஏழை நாடுகளுக்கு குறைந்த வட்டியில் வழங்கும் கடன் வெறும் வெத்து பேப்பர்தான். லாபம் அமெரிக்காவுக்கு.

 5. நல்ல கருத்தாழமிக்க கட்டுரை.
  முதல்ல தேவைன்னா என்ன? எவ்வளவு? இந்த மாதிரி கேள்வி கேட்பவர் இருக்கும் வரை பணத்தின் மீது உள்ள வெறி குறைய வாய்ப்பு இல்லை

  ராம்ஸ்

 6. பணம் என்பது பண்ட மாற்றுக்கு என்பது பண்டைய காலத்துக்கு ஓரளவு பொருந்தியது.
  ஆனால் இன்றோ, மற்றவன் உழைப்பை திருடி விடவும், அவர்களின் வியர்வையை ஸ்விஸ் வங்கியில்
  சேமிக்கவும், ஜன நாயகத்தை விலை கொடுத்து ஒட்டாக வாங்கவும் மட்டுமே பணம் பயன்படுகிறது.
  – புதிய பாமரன்.

 7. நீங்கள் வினவில் எழுதுவது தெரியும். ஆனால் வலைப்பூ நடத்துவது தெரியாது. மிக்க மகிழ்ச்சி. தமிழ்மணம் நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டமைக்கு பாராட்டுக்கள். உங்கள் படைப்புகள் குறித்து பின்னர் பின்னூட்டமிடுகிறேன்.

  வாழ்த்துக்களுடன்

  ஊரான்.
  http://www.hooraan.blogspot.com

 8. வாழ்த்துகள் வில்லவன். உங்களை தமிழ்மண நட்சத்திரமாக கண்டதில் மிக்க மகிழ்ச்சி. அறிமுகத்தில் கொடுத்துள்ள பல வார்த்தைகளை படித்து விட்டு நான் கடந்து வந்த பாதையை பார்த்தது போலவே இருந்தது. காரணம் இருவரும் இருப்பதும் ஒரே ஊராக இருப்பதால்.

  பணம் குறித்து நீங்கள் சொல்லியுள்ள விசயங்கள் ஏற்புடையதாக இருந்தால்

  இருக்கும் போது எல்லாமே வித்யாசமாய்?

  இல்லாத போது எல்லாமே அடிப்படை இருப்பியல் சார்ந்த பிரச்சனையாய்?

  ஆனால் எந்த வகையில் பார்த்தாலும் தேவைக்கு மேற்பட்டு இருப்பவர்களின் வாழ்க்கையும் இதற்காகவே தங்களை அவர்கள் மாற்றிக் கொண்டு வாழும் வாழ்க்கையும் அவர்களின் குணாதிசியங்களை இருவரும் ஒரே நோக்கில் பார்க்கும் பார்வை மட்டும் ஒற்றுமையாய் இருக்கிறது.

 9. நல்ல பதிவு. மக்களின் பொறுப்பற்றதனத்தையும் விமர்சித்துள்ளீர்கள். இவ்வாறு அவ்வப்போது மக்களின் தலையிலும் குட்டாமல் போனதால் தான் மக்கள் விழிப்புணர்வே இன்றி நுகர்வு வெறியில் ஊறிப்போய்க்கிடக்கிறார்கள்.

 10. ”சம்பாதிக்கும் வெறியை தூண்டிவிடும் அதே அளவுக்கு நுகர்வு வெறியும் தூண்டப்படுகிறது. வாங்கும் சம்பளத்துக்கு ஏற்ப கடன் தரப்படும், அதற்கேற்ப நீங்கள் உங்கள் வாழ்வின் வசதிகளை மேம்படுத்திக்கொள்ளலாம். சவுரியத்துக்கான பணத்தேவையும் பணத்துக்காக விட்டுத்தரப்படும் சவுகர்யங்களும் ஒன்றோடொன்று போட்டியிடுகின்றன. எது வெற்றி பெற்றாலும் நாம் கடனாளியாவது நிச்சயம். சேமிப்பதோடு நிறுத்திக்கொள்ள விரும்பினாலும் நீங்கள் தப்ப முடியாது.”

  பணத்தை மட்டுமே குறியாகக் கொண்டவர்கள் பணத்துக்காக வாழ்வைத் தொலைப்பவர்கள்.
  இரசனையற்ற வாழ்வையே பணம் பரிசாகத் தருகிறது.

  ”அம்பானி உழைத்து இந்த சொத்தை சம்பாதித்தார் என்றால் சொத்து ஏதுமில்லாத என்பது சதவிகித மக்களை நாம் உழைக்காத சோம்பேறிகள் என்று சொல்வதாகத்தான் பொருள்.”

  சாட்டையடி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s