தமிழ்நாட்டில் எது இல்லாமல் இனி வாழ முடியாது?


தமிழ்நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு நாளும் ஸ்போக்கன் இங்கிலீஷின் அவசியம் பற்றிய அறிவுரையை ஒருமுறையேனும் கேட்காமலோ அல்லது பார்க்காமலோ தூங்கப்போக முடியாது. ஆங்கிலம் பேசத்தெரியாமல் எப்படி இண்டர்வியூவுக்குப் போவீர்கள்? என்கிறது ஒரு விளம்பரம். தன்னம்பிக்கை பெற ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள் என்கிறது ஒரு சுவர் விளம்பரம். எஞ்சினியர்களை உற்பத்தி செய்யும் பெரிய தொழிற்சாலையாகிவிட்ட தமிழகத்தில் மாணவர்களின் ஆங்கிலப்புலமைதான் அண்ணா பல்கலையின் பெரும் கவலையாக இருக்கிறது. ஒரு முறை நைவேத்தியம் செய்தால் ஆங்கிலம் நன்றாகப்பேசலாம் என்று ஒரு கோயிலைப்பற்றி புரளி கிளம்பினால் பிறகு நம் மாநிலத்தில் அதுதான் முக்கியமான கோவிலாக இருக்கும்.

வேறெந்த நாட்டிலாவது தாய்மொழியல்லாத ஒரு மொழியை கற்பது இவ்வளவு அத்தியாவசியமாக இருக்குமா என்பது சந்தேகமே. நான் சென்னையில் படிக்கையில் மாணவர்களில் இரு பெரும் பிரிவுகள் இருந்தன. ஒன்று ஆங்கிலம் (பேசத்) தெரியும் என்று கம்பீரமாக திரிபவர்கள். மற்றொன்று அது தெரியாது என்ற தாழ்வுமனப்பான்மையோடு இருப்பவர்கள். (பிரியாவை ஒருதலையாக காதலிப்பவர்கள் மற்றும் காதலிக்காத மாதிரி நடிப்பவர்கள் என வேறொரு விவகாரத்திலும் இரண்டு பிரிவுகள் இருந்தன என்றாலும் அது இந்த இடுகைக்கு அவசியமில்லாதது) ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் ஆங்கிலம் பேசத் தெரிந்ததையோ அல்லது தெரியாததையோ இயல்பாக எடுத்துக்கொள்பவர்கள் மிகக்குறைவே.

ஏதேனும் ஆங்கில வகுப்பு எடுத்துவிடுவேனோ என்று யாரும் அச்சமடைய வேண்டியதில்லை. பள்ளி காலம் முதல் பாலிடெக்னிக் வரை நான் ஆங்கிலத்தில் நாற்பது மதிப்பெண்ணை தாண்டியதில்லை. பள்ளியை விட்டு ஓடிவிடலாம் என்று முடிவெடுத்த பல தருணங்களுக்கு பின்னால் ஆங்கிலம் இருந்திருக்கிறது. ஏழாம் வகுப்பு படிக்கையில் எனக்கும் என் ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவருக்கும் பிடித்துக்கொள்ளாமல் போனதற்கு, எனக்கு ஆங்கிலம் வராது என்பதும் அவருக்கு அது நன்றாக தெரியும் என்பதுமான ஒரே காரணம் போதுமானதாக இருந்தது (இயல்பில் அவர் பேரன்புடையவர்.. அவரை பெருங்கோபம் கொண்டவராக மாற்றும் வல்லமை ஆங்கிலத்துக்கும் உண்டு அவ்வளவே). ஆகவே ஆங்கிலப்பாடத்துக்கும் எனக்கும் ஸ்நானப் பிராப்தம்கூட கிடையாது. அந்த மொழியுடனான எனது “உறவு” பற்றிய பகிர்வுதான் இந்த இடுகை.

ஆங்கிலப்பாடம் ஒரு சிரமமாகத் தோன்றத்துவங்கியது ஆறாம்வகுப்புக்குப் பிறகுதான். ஐந்தாம் வகுப்புவரை கேள்வித்தாள் தேர்வுக்கு ஒருவாரம் முன்னதாகவே தந்துவிடுவார்கள் என்பதால் அப்போது சிரமம் தெரியவில்லை (அதிலும்கூட நாற்பது மார்க்தான்).  ஆறாம்வகுப்புக்கான நுழைவுத்தேர்விலேயே ஆங்கிலத்தில் இருந்த கேள்விகள் ஒன்றுகூட புரியவில்லை.. மற்ற பாடத்தில் எடுத்த மதிப்பெண்களும் அதைவிட முக்கியமாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியரின் சிபாரிசும்தான் பள்ளியின் கதவுகளை திறக்கவைத்தன. அது எத்தனை பெரிய தவறு எனும் பாடத்தை அடுத்த இரண்டாண்டுகளில் அவருக்கு நான் கற்றுக்கொடுத்துவிட்டேன் என்பதும்கூட இப்பதிவுக்கு தேவையில்லாத செய்தியே.

என் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழைப் பார்க்கும்வரை என் அம்மா நான் ஒரு ஓட்டுனராகவோ அல்லது ஒரு ஃபிட்டராகவோதான் ஆகப்போகிறேன் என்று உறுதியாக நம்பினார். இறுதித்தேர்வைத் தவிர மற்ற எல்லா தேர்வுகளிலும் அவரது நம்பிக்கையை காப்பாற்றவென்றே நான் ஆங்கிலத்தில் தோல்வியடைந்துகொண்டேயிருந்தேன். நான் ஒரு விதிவிலக்கல்ல, அனேக தமிழ்வழி மாணவர்கள் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் ஆங்கிலப்பாடத்துடனான சிரமத்தை அனுபவித்திருப்பார்கள். பாலிடெக்னிக் வரை பல மாணவர்கள் படிப்பைவிட்டுவிட்டு ஓடக் காரணம் ஆங்கிலப்பாடம் அல்லது ஆங்கில ஆசிரியர்கள். இதற்காக நாம் குற்றம்சாட்டுவதாக இருந்தால் முதலாவதாக ஆசிரியர்களைத்தான் சொல்லவேண்டும்.

மிகச்சிலரைத் தவிர பல ஆசிரியர்கள் காலாண்டுத்தேர்வுக்கு முன்பே ஆங்கிலம் வராத மாணவர்கள் எனும் பட்டியலை உருவாக்கிவிடுகிறார்கள். ஒரு மொழியை கற்பிக்கிறோம் என்ற உணர்வே இல்லாது இப்படி கேள்வி வந்தால் இந்த பதிலை எழுது என்ற பயிற்சிதான் அனேக வகுப்புகளில் நடந்தது. ஆங்கில மோகம் கரைபுரண்டு ஓடத்துவங்கிய என்பதுகளுக்குப் பிறகுதான் இந்த ஸ்டைலில் பாடங்கள் நடக்கத்துவங்கியது. கடந்த இருபது ஆண்டுகளில் பணிக்கு வந்த மாணவர்களின் பலவீனமான ஆங்கிலத்துக்கு பொறுப்பானவர்கள் ஆசிரியர்களே.

படிப்பு முடித்து பணிக்கு வந்த பிறகே ஆங்கிலத்துக்கு நாம் தரும் அதிகப்படியான மற்றும் அநாவசியமான முக்கியத்துவம் பற்றி உணர முடிந்தது. நானும் சக மாணவர்கள் நால்வரும் ஒன்றாக பணியில் அமர்ந்தோம். ஐவரும் வாட் இஸ் யுவர் நேம் என்ற ஒரு கேள்வியைத் தவிர வேறு எந்த கேள்விக்கும் ஆங்கிலத்தில் பதில் சொல்லத் தெரியாதவர்கள். அது ஒரு உயர்தொழில் நுட்ப ஆயத்தஆடை நிறுவனம். அத்தொழிற்சாலையின் பல சாவிப் பணியில்!!! (கீ போஸ்டுங்க) இருப்பவர்கள் ஆங்கிலத்தில் மிக பலவீனமானவர்கள். அந்த தொழிற்சாலை முழுவதும் அவர்களையே முற்றிலும் சார்ந்திருந்தது. ஆங்கிலம் தெரிந்தோர் பலர் தகவலை கடத்துவோராக மட்டுமே இருந்தார்கள் (messenger).

ஒரு முறை எங்கள் தொழில்நுட்ப மேலாலர் (அவர் ஒரு ஐரோப்பியர்) சட்டையில் தோள்பகுதி மேல் தையலில் (armhole top stitch) வரும் சுருக்கத்தைத் தவிர்க்க ஒரு யோசனை சொன்னார் (சட்டையுடன் கையை இணைத்ததும் அதை அயர்ன் செய்துவிட்டு மேல் தையல் போடுவதுதான் அந்த யோசனை). அது செயல்பாட்டுக்கு உகந்ததல்ல என்று விளக்குவதற்கு பெரிய கூட்டமாக அவர் அறையில் நிற்கிறோம். ஒன்றரை மணிநேரம் சிலர் (சரியான ஆங்கிலத்தில்) பெரும்பாடுபட்டு அதை விளக்கினார்கள். அவர் எதையும் ஒப்புக்கொள்ளத் தயாரில்லை. பொறுமையிழந்த எங்கள் மூத்த கண்காணிப்பாளர் எல்லோரையும் தள்ளிக்கொண்டு முன்னே வந்தார். கீழ்காணும் சில வார்த்தைகளின் தொகுப்பை கடகடவென சொன்னார்,

சார்.. ஒன் லைன், 22 மெஷின், ஒன்லி 2 டேபிள், ஸ்லீவ் ஸ்டிச்சிங் நெக்ஸ்ட் டேபிள் ஹெல்பர் டேபிள், லைன் புரொடக்ஷன் நோ ஸ்பேஸ், ஒன் ஹெல்பர் 300 பீஸ் அயர்னிங் டோண்ட் ஒர்க் (எல்லாவற்றுக்கும் வெவ்வேறு சைகை காட்டுகிறார்). சில வினாடி அமைதிக்குப் பிறகு i see என்று சொல்லிக்கொண்டே அந்த கூட்டத்தை அவர் முடித்தார். அதன்பிறகு அந்த யோசனை முற்றாக கைவிடப்பட்டது. சில மாதங்கள் நீங்கள் ஆடைத் தொழிற்சாலையில் இருந்தீர்களெயானால் உங்களுக்கும் எங்கள் கண்காணிப்பாளர் சொன்னது புரிந்திருக்கும். ஒருவருக்கு ஒரு செய்தியை புரியவைக்க ஆங்கில ஞானத்தைத் விட அந்த செய்தி பற்றி உங்களுக்கு இருக்கும் ஞானமே முக்கியம் என்பதை அப்போதுதான் புரிந்துகொண்டேன்.

பிற்பாடு திருப்பூர் வந்ததைத் தொடர்ந்து அந்த எண்ணம் இன்னும் வலுவடைந்தது. வந்த புதிதில் இத்தாலியிலிருந்து வந்த ஒரு இளைஞனை தொழிற்சாலைகளுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்கவேண்டியிருந்தது (அவரது நிறுவனம் சார்பாக எங்களை கண்காணிக்க வந்தவர்). அவருக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது எனக்கும் அவ்வாறே ஆயினும் நாங்கள் பணி தொடர்பாகவும் சொந்த விசயங்களையும் பேசிக்கொண்டுதான் இருந்தோம். நான் சந்தித்த பல இத்தாலியர்கள் மருந்துக்குகூட ஆங்கிலம் தெரியாதவர்கள், இங்கு வந்து மாதக்கணக்கில் அவர்கள் பணி செய்கிறார்கள். ஒருவரும் தங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று கவலைப்பட்டது கிடையாது. மின்னஞ்சல்களைக்கூட இணையத்தில் இத்தாலியில் மொழிமாற்றம் செய்தே அனுப்பிக்கொண்டிருந்தோம்.

அமெரிக்கா தவிர்த்து மீதமிருக்கும் இறக்குமதி செய்யும் பெரிய நாடுகளின் வர்த்தக முகவர்கள் பலரை சந்தித்திருக்கிறேன், அவர்கள் யாரும் ஓட்டை ஆங்கிலமானாலும் நிதானமாக கவனித்து புரிந்துகொள்ள முயல்கிறார்கள். ஆனால் நம் ஆட்கள்தான் இதற்கு நேரெதிராக இருக்கிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளில் என் ஆங்கிலத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்கும் புதிய பணியாளர்களின் மின்னஞ்சல்களை சரிபார்க்கவும் இப்போது நான் முதல் ஆளாக பரிசீலிக்கப்படுகின்றேன். கூடுதலாக யாதொரு முயற்சியும் இல்லாமல் தன்னியல்பாக இது நடந்திருக்கிறது. அலுவலகம் சாராத உரையாடல்களில் என்னால் இப்போதும்கூட சில நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது, ஆயினும் அதுகுறித்து நான் கவலைப்படுவதே இல்லை. டிவி, சினிமா, அலுவலகம் என நம் நேரத்தை விழுங்கும் எல்லா இடங்களும் ஆங்கிலத்தைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றன (உதாரணம் காபி வித் அனு மற்றும் கௌதம் மேனன் படங்கள்). இனி இங்கே தனிப்பயிற்சி இல்லாமல் தமிழைத்தான் கற்கமுடியாதே தவிர ஆங்கிலத்தை போகிறபோக்கில் கற்றுக்கொண்டுவிட முடியும்.

ஆகவே ஆங்கிலம் பற்றி கவலைப்படவேண்டாம். கற்றுக்கொள்ள அதைவிட முக்கியமானவை ஏராளமாக இருக்கின்றன. அதில் நம் தாய்மொழியும் இருக்கிறது.

——————————————————————————-

ஒருவேளை நீங்கள் ஆங்கிலம் தெரியாதது பற்றி கவலைப்படுவீராயின் கீழேயுள்ள கருத்துக்கள் உங்களுக்குப் பயன்படக்கூடும். (கண்டிப்பாக ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்களுக்கோ அல்லது பேசத் தெரியும் என்று நம்புவோருக்குகோ அல்ல)

ஆங்கிலம் பேசத் தெரியாதது குறித்து கவலைப்படாதீர்கள். எருமைமாடு மேய்ப்பது முதல் ஏரோப்பிளேன் ஓட்டுவது வரை நமக்கு தெரியாதவை உலகில் ஏராளமாக இருக்கின்றன. ஒரு மொழியை பேசமுடியாததற்கு மட்டும் ஏன் இத்தனை கவலைகொள்ள வேண்டும்?. கவலைப்படுவதால் பிரயோசனம் இல்லை என்பது ஒருபுறம் அதனால் கற்பது நிச்சயம் தாமதமாகும்

முதலில் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். இது சற்று குழப்பமானதாக தோன்றக்கூடும். ஆனால் என் வட்டாரத்தில் இருக்கும் பலர் தமிழில் பேசவே தடுமாறுகிறார்கள் (நான் வெறும் அரட்டை பற்றி குறிப்பிடவில்லை). ஆங்கிலம், கன்னடம் மற்றும் இந்தி என எந்த மொழியும் பேசியிராத என் நண்பன் முதல் முறையாக பெங்களூர் சென்றான். நண்பர்கள் அறைக்கு வந்த முதல் நாளிலேயே அவனுக்கு இரண்டு தொலைபேசி அழைப்புக்கள் வந்தன (அப்போது செல்பேசி எங்களிடம் கிடையாது). அழைத்தவர்கள் தமிழ் என்றால் வெஜ்ஜா நான்வெஜ்ஜா என்று கேட்கிற வட இந்திய பெண்கள். நண்பர்கள் திகைத்து நின்றபோது அவசரமாக வந்த இன்னொருவர் “ஏய், மல்லேஷ்வரம் பார்க்ல நம்ம #$$%^&ஐ பார்த்தேண்டா.. ரெண்டு பொண்ணுங்களோட” என்றார். இரண்டாயிரம் நாட்களுக்குப் பிறகும் எங்கள் திகைப்பு அப்படியே இருக்கிறது. ஆங்கிலம் பேசுவதெல்லாம் பிறகு, முதலில் வேண்டியது சொல்ல வந்ததை சரியாக பேசும் பழக்கம்.

பேசுவதற்காக நிறைய விசயங்களை தெரிந்துகொள்ளுங்கள். பேச்சில் சரக்கு இருக்கும்பட்சத்தில் உங்கள் மொழியறிவு இரண்டாம்பட்சமாகிவிடும். ஆங்கிலத்தில் வாக்கியம் அமைக்கத்தெரிந்து பேச எதுவுமில்லாவிட்டாலும் நாம் சும்மாதான் இருப்போம். ஆகவே ஆங்கிலத்துக்கு இணையான முக்கியத்துவம் மற்ற செய்திகளுக்கும் அவசியம்.

ஆங்கிலம் பயன்படுத்தவேண்டிய சூழலை தவிர்க்காதீர்கள். திருப்பூரில் நான் கவனிக்கும் (ஆங்கிலம் பேச வராதவர்கள்) பலர் ஆங்கிலம் புழங்குகிற சூழலை தவிர்க்கவே விரும்புகிறார்கள். கொஞ்சம் கற்றுக்கொண்டு பிறகு அங்கு போகலாம் என்பது அவர்கள் கருத்தாக இருக்கிறது. இது அனாவசியமானது. சிறந்த பேட்ஸ்மேன் பந்துவீச்சை நன்றாகத் தெரிந்தவனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவன் பலமுறை பந்துவீச்சை எதிர்கொண்டவனாக இருப்பது அவசியம்.

பிறர் பேசுவதை கவனியுங்கள். உரையாடல் தடுமாற பெரும்பாலும் காரணமாக அமைவது கவனமின்மைதான். சிலர் அடுத்தவர் பேச ஆரம்பிக்கையிலேயே மனதுக்குள் பதிலை தயாரிக்க துவங்குகிறார்கள், இது சரியான பழக்கமல்ல. ஜாக்கிரதை, கேள்வி புரியாவிட்டால் தெரிந்த பதிலைக்கூட சொல்ல முடியாது.

ஆங்கிலம் கற்க எந்த குறுக்கு வழியும் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். முப்பதுநாளில் ஆங்கிலம் கற்கலாம், மூக்கு சிந்துவதற்குள் கற்கலாம், ஒருமணிநேரம் செலவழித்தால் போதும் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளே. எதைக் கற்பதாக இருந்தாலும் அதற்கான காலத்தையும் உழைப்பையும் நாம் நிச்சயம் தரத்தான் வேண்டும்.

தலைகீழான கற்றல் முறையை மறுபரிசீலனை செய்யுங்கள். subject+verb+ எனும் வழக்கமான ஃபார்முலாவில் ஒவ்வொரு வார்த்தையாக கோத்து வாக்கியத்தை அமைப்பதற்குள் நம் ஆயுள் தீர்ந்துவிடும். விரைவாக ஒரு மொழியைப் பேச அதனை வாக்கியங்களாகத்தான் கற்கவேண்டும். குழந்தைகள் எப்படி பேசக் கற்றுக்கொள்கின்றன? இலக்கணத்தையும் வாக்கியத்தை அமைக்கும் முறையையும் கற்றுக்கொண்ட பிறகு அவர்கள் பேச ஆரம்பிப்பதில்லை. குழந்தைகள் அடுத்தவர் பேசுவதை கவனிக்கின்றன, முதலில் ஒரு வார்த்தையில் பதிலளிக்கின்றன பிறகு எளிமையான வாக்கியங்களை பேசுகின்றன அதன்பிறகு கடினமான வாக்கியங்களை பேசத்துவங்குகின்றன. இதில் குறிப்பிடவேண்டிய செய்தி, குழந்தைகள் இலக்கணத்தை கற்கும் முன்பாகவே முழுமையாக பேச கற்றுக்கொள்கின்றன. .

.

.

Advertisements

“தமிழ்நாட்டில் எது இல்லாமல் இனி வாழ முடியாது?” இல் 26 கருத்துகள் உள்ளன

 1. அற்புதமான கட்டுரை…
  அறிவு வளர ஆங்கிலம் தேவையில்லை……….
  அது ஏனோ ஆசிரியர்களுக்குக் கூட புரிவதில்லை….!!!

 2. //முப்பதுநாளில் ஆங்கிலம் கற்கலாம், மூக்கு சிந்துவதற்குள் கற்கலாம், ஒருமணிநேரம் செலவழித்தால் போதும் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளே. எதைக் கற்பதாக இருந்தாலும் அதற்கான காலத்தையும் உழைப்பையும் நாம் நிச்சயம் தரத்தான் வேண்டும்.

  // சபாஷ் சரியான பதில்…

 3. “இங்க்லீஸ் பிள்ளையார்” பெயர் காப்புரிமை பெற்றது. ஆங்கிலத்தில் தடையில்லாமல் பேச இங்க்லீஸ் பிள்ளையார் கோவிலில் அர்ச்சனை செய்யவும்.நேர்முக தேர்வுகளில் ஆங்கிலத்தில் சரளமாக பேசி பணியில் அமர இங்க்லீஸ் பிள்ளையார் கோவிலில் நைவேத்தியம் செய்யவும்.தொடர்பிற்க்கு *#06#.மின்னஞ்சல் englishpillaiyaar@gmail.com

 4. (பிரியாவை ஒருதலையாக காதலிப்பவர்கள் மற்றும் காதலிக்காத மாதிரி நடிப்பவர்கள் என வேறொரு விவகாரத்திலும் இரண்டு பிரிவுகள் இருந்தன என்றாலும் அது இந்த இடுகைக்கு அவசியமில்லாதது)

 5. //இனி இங்கே தனிப்பயிற்சி இல்லாமல் தமிழைத்தான் கற்கமுடியாதே தவிர ஆங்கிலத்தை போகிறபோக்கில் கற்றுக்கொண்டுவிட முடியும்.\\

  correct
  நச்சின்னு இருக்கு நண்பா ……

 6. ||கற்றுக்கொள்ள அதைவிட முக்கியமானவை ஏராளமாக இருக்கின்றன. அதில் நம் தாய்மொழியும் இருக்கிறது.||

  ||முதலில் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். இது சற்று குழப்பமானதாக தோன்றக்கூடும். ஆனால் என் வட்டாரத்தில் இருக்கும் பலர் தமிழில் பேசவே தடுமாறுகிறார்கள் ||

  நட்சத்திர வாரத்தில் நல்ல ஒரு கட்டுரை.

  ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே;ஆங்கிலத்தில் பேசுபவர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் ஒரு தலைமுறையின் குருதியில் ஊறியிருக்கிறது.அதை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கட்டுரையை கன்னா பின்னாவென்று வழிமொழிகிறேன்.

  ஆயினும் வேற்று மொழி என்று ஒதுக்க வேண்டியதில்லை எனபதும் என எண்ணம்.

  மற்றபடி மேற்குறிப்பிட்ட இரு வாக்கியங்கள் புன்னகையை வரவழைத்தன.

 7. http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/

  கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

  நூல் வெளியிடுவோர்:
  ஓவியர் மருது
  மருத்துவர் ருத்ரன்

  சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
  தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

  நாள்: 26.12.2010

  நேரம்: மாலை 5 மணி

  இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை

  அனைவரும் வருக !

 8. தோழர் வில்லவன்,

  முதலில் எனது பாராட்டுக்களை பதிவு செய்கிறேன்.

  இந்தக் கட்டுரையை படிக்கும் போது உங்களது தந்தையின் பொதுக்கூட்ட உரையைக் கேட்டது போன்ற ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டது. தங்கு தடையின்று ஓடும் தெளிந்த நீரோடை போல – உங்களது தந்தையைப்போலவே கருத்துக்களை முன்வைத்துள்ளீர்கள். அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.

  “ஒருவருக்கு ஒரு செய்தியை புரியவைக்க ஆங்கில ஞானத்தைத் விட அந்த செய்தி பற்றி உங்களுக்கு இருக்கும் ஞானமே முக்கியம் என்பதை அப்போதுதான் புரிந்துகொண்டேன்.”

  ஒரு குறிப்பிட்ட செய்தியைப்பற்றிய தெளிவின்மையே தாழ்வுமனப்பான்மைக்கு முதன்மைக் காரணம். தெளிவிருந்தால் தைரியம் தானே வரும்.

  “இங்கே தனிப்பயிற்சி இல்லாமல் தமிழைத்தான் கற்கமுடியாதே தவிர ஆங்கிலத்தை போகிறபோக்கில் கற்றுக்கொண்டுவிட முடியும்.”

  சிறு வயது முதலே ஆங்கில வழியில் பயின்றவர்கள் இறுதிவரை தமிழ் தெரியாமலேயே திண்டாடுகிறார்கள். தமிழ்வழியில் படித்தவர்களோ பிற்காலத்தில் ஆங்கிலத்தில் சக்கைபோடு போடுகிறார்கள்.

  “பிறர் பேசுவதை கவனியுங்கள். உரையாடல் தடுமாற பெரும்பாலும் காரணமாக அமைவது கவனமின்மைதான்.”

  “குழந்தைகள் எப்படி பேசக் கற்றுக்கொள்கின்றன? இலக்கணத்தையும் வாக்கியத்தை அமைக்கும் முறையையும் கற்றுக்கொண்ட பிறகு அவர்கள் பேச ஆரம்பிப்பதில்லை. குழந்தைகள் அடுத்தவர் பேசுவதை கவனிக்கின்றன, முதலில் ஒரு வார்த்தையில் பதிலளிக்கின்றன பிறகு எளிமையான வாக்கியங்களை பேசுகின்றன அதன்பிறகு கடினமான வாக்கியங்களை பேசத்துவங்குகின்றன. இதில் குறிப்பிடவேண்டிய செய்தி, குழந்தைகள் இலக்கணத்தை கற்கும் முன்பாகவே முழுமையாக பேச கற்றுக்கொள்கின்றன. ”

  அறிவைப் பெறுவதற்கான முதற்படியே புலனறிவுதானே. புலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை இந்த மூன்று படி நிகைளில்தான் அறிவை வளர்த்துக் கொள்ள முடியும்- ஜார்ஜ் தாம்சன்-மனித சாரம். இதைக் குழந்தைகள் மிகச் சரியாகச் செய்கின்றன. அறிவைப் பெருக்கிக் கொள்கினறன.

  ஆங்கிலம் தெரியவில்லையே என திண்டாடும் இளைஞர்களுக்கு பெரிதும் உதவும் கட்டுரை.

 9. //ஆகவே ஆங்கிலம் பற்றி கவலைப்படவேண்டாம். கற்றுக்கொள்ள அதைவிட முக்கியமானவை ஏராளமாக இருக்கின்றன. அதில் நம் தாய்மொழியும் இருக்கிறது.//

  அருமையான ஆய்வை..;அழகாக, நறுக்கெனத் தலையில் குட்டி முடித்துள்ளீர்கள்.
  வேற்று மொழி கற்க நல்ல ஆசிரியர்கள் அமைய வேண்டுமென்பது உண்மை!

 10. ‘ஜன கண மன’வைப் புரிந்து கொள்ளாமலேயே மனனம் செய்தோம். புரிய வைக்க, அதைப் ‘புரிந்துகொண்ட’ ஆசிரியர்களும் இல்லை.
  தமிழ்த் தாய் வாழ்த்தைக் கூட ‘ப்ரேயரில்’ நெளிந்தால் ஹெட்மாஸ்டர் அடித்துவிடுவார் என்கிற காரணத்துக்காவே படித்தோம்.
  அதுபோலத்தான் ஆங்கிலமும். ஆங்கிலம் தெரிந்துகொள்ள அல்ல – மதிப்பெண் வாங்க. ஆங்கிலத்துக்குப் பதில் செக்கோஸ்லொவாக்கிய மொழியை நமது ஆசிரியர்களும் அரசாங்கமும் சொல்லிக்கொடுத்திருந்தாலும் அதே அரைவேக்கட்டுப் பாண்டித்யம்தான். “எங்கே செக்கோஸ்லொவாக்கியா சொல்லு…?” என்று நமது அப்பாக்கள் மட்டும் கேட்டுவைத்து புல்லரித்துப் போயிருப்பார்கள்!

  மற்றபடி, நானும் உமது ஜாதிதான். ‘வாட்டீஸ் யுவர் நேம்யா?’.

  மொழியைக் குறித்த நமது புரிதலை (வினவுவில் பின்னூட்டமிடப்பட்டது) கீழ் காணும் வரிகள் விளக்க முற்படலாம் :

  மொழியெனும் மென்பொருள்:

  அடித்தால் அலறவும்
  பசித்தால் கேட்கவும்
  மூளையிலுதிக்கும் சிந்தனைகளை
  மற்றவர்க்குச் சொல்லவும்
  செயல்பட வைக்கவும் செய்வது
  மொழியெனும் மென்பொருள்.

  சிந்தனையில் பதிந்து
  மனித உயிரில் அனிச்சையாய்
  பதிந்துவிட்ட தாய்மொழி.
  தமிழொரு மென்பொருள்.

  வள்ளுவர் காலத்திய நெய்தல் கிழத்தியும்
  கருவாடுதான் காயப்போட்டிருந்தாள்.
  ஆனால் அவள் பேசியது பைந்தமிழ்.
  அவளின் பைந்தமிழுக்குப் பொறுப்பு
  வள்ளுவரல்ல; நாலடியுமல்ல.
  அந்த தமிழென்ற மென்பொருள்தான்.
  இதுதான் “மொழி ஏன், எதற்கு?”
  என்பதற்கான பதில்.

  சாதிமதக் கலப்பின்றி
  பட்டையும் நாமமுமின்றி
  பாமர மக்களால் பேசப்படிருந்த தமிழ்.
  விபூதி வாசனயோடு வந்த
  வடமொழி.
  அனிச்சைச் செயலான மென்பொருளில்
  கலந்தது வொரு வைரஸ்.
  கடவுளென்ற கற்பனை வீடியோகேம்
  வந்திறங்கிவிட்டது.
  இதுவரையிலும் நாத்திகர்களும் ஆத்திகர்களும்
  விளையாடிக்கொண்டிருக்கிறர்கள்.
  அண்ணாத்துரைக் காலம்வரையிலும்
  வடமொழி கலந்து
  ஸ்பரிசித்தது பைந்தமிழ்.
  ஆங்கிலேயர்கள் வந்ததும்
  டமிங்கிலிஷ் ஆனது.
  இன்று பைந்தமிழ் பேசினால்
  அவன் பைத்தியக்காரன்.
  இதுதான் தமிழ் முடமானதின்
  வரலாறு.

  நமாய் அதன்மீது எச்சமிடுவதை
  நிறுத்தினாலொழிய
  தமிழ் என்பது என்றென்றும்
  செம்மொழிதான்.
  உழைக்கும் வர்கத்தினர்
  குரலிருக்கும்வரை
  தமிழை உச்சரிப்பர்.
  தமிழை வாழ்த்த
  யாருக்கும் அருகதை இல்லை.

  -புதிய பாமரன்

 11. வணக்கம்
  இந்தக் கட்டுரையில் வரும் விடயங்களை ஏற்றுக் கொள்கின்றேன். என்னுடைய நிலையும் அதே.( அனுபவங்களினூடாக குறிப்பிடுகின்றேன்)
  ஆங்கில நாட்டை சேர்ந்த வெள்ளையர்களை தவிர்ந்த ஏனைய வெள்ளையர்களுக்கு ஆங்கிலத்தின் மீது எந்தவித நாட்டமும் இல்லை அத்துடன் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொள்ளாத ஏனைய வெள்ளையர்கள் ஆங்கிலத்தை அறிந்திருந்தாலும் அதனை பயன்படுத்துவில்லை. தத்தமது நாட்டு மொழியை எதுவித பிறமொழி சொற்களையும் கலவாது தூய்மையாக பேசுகின்றார்கள். தமிழர்கள் தான் தமது தாய்மொழியை கொல்லுகின்றார்கள் எத்தனை கலப்பட சொற்கள் இருக்கின்றது பாருங்கள். குறிப்பாக புலம் பெயர் தமிழனாக இருகம் நான் புலம் பெயர் தமிழர்களை மதிப்பதிலஇலை காரணம் அவர்கள் தான் மொழி அழிவுக்கு காரணமாகிறார்கள்.
  என்னுடைய மொழி அனுபவம் தொடர்பாக எதிர்வரும் பதிப்புக்களில் எழுத இருக்கின்றேன் இந்த பதிவுகளையும் பாருங்கள்.
  http://vincentjeyan.wordpress.com/2010/03/03/somebody-save-me-somebody-try-to-kill-me/

 12. It is very true that even the literates do not have rational thinking to realize language is just a tool to communicate. This thinking is overdosed in India. The language keeps changing and evolving with new words/phonetics and will always, because of changing context of socio-economical-political paradigms. My writing skills are very much appreciated, but I am really a bad speaker. My superiors are very good speakers, but not good their drafting skills, are not technically legitimate and good (their own rating). We complement each other and represent each other, wherever our group skills are needed.

 13. இந்த இடுகைக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு என்னை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.

  நீண்ட தயக்கத்துக்குப் பிறகே இதை பதிவிட்டேன். காரணம் ஆங்கிலம் கற்க வழிசொல்லுமளவுக்கு நான் தகுதியானவனா எனும் கேள்வி. அடுத்து பதிவில் கொஞ்சம் சுயபுராண வாடையடிக்கிறதோ எனும் சந்தேகம்.

  //சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்கும் புதிய பணியாளர்களின் மின்னஞ்சல்களை சரிபார்க்கவும் இப்போது நான் முதல் ஆளாக பரிசீலிக்கப்படுகின்றேன்.//

  மேலேயுள்ள இந்த வாக்கியத்தை தவிர்க்க எடுத்த அவகாசம் பதிவெழுத எடுத்த அவகாசத்தைக் காட்டிலும் அதிகம். ஆயினும் அப்படி மாற்றினால் கட்டுரை இன்னும் நீளமாக இருந்ததாகையால் வேறுவழியில்லாமலும் தயக்கத்துடனுமே (இவ்வாக்கியத்துடன்) பதிவு வலையேற்றம் செய்யப்பட்டது.

  வாசிப்பின் மூலமும் பின்னூட்டம் வாயிலாகவும் உற்சாகப்படுத்திய யாவருக்கும் நன்றி.

  தோழமையுடன்,
  வில்லவன்.

 14. மிக அருமைங்க…பள்ளியில் ஆங்கிலத்தில் பார்டரில் பாஸ் ஆனவங்க பல பேர் இன்னைக்கு பின்னி பெடலை எடுக்கிறாங்க.

 15. ஆங்கிலத்தை புறக்கணிக்க சொல்லவில்லை. பயப்பட வேண்டாம் என்றுதான் சொல்ல நினைத்தேன்.

  ஒரு மொழியாக அதை கற்பதில் யாருக்குமே ஆட்சேபம் இருக்காது.. உங்களைப்போலவே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s