நோயைவிடக் கொடியது நோயாளியாய் இருப்பதே. (பாகம் 2)


https://villavan.wordpress.com/2010/12/22/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/ — பதிவின் இரண்டாம் பாகம்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பல முறை சிகிச்சை பெறுவோரை பார்க்கவும் சிலமுறை மருத்துவ ஆலோசனை பெறவும் சென்றிருக்கிறேன். உள்ளே நுழைந்து வெளியே வருவதற்குள் நீங்கள் ஏழைகள் சிகிச்சை பெறுவது எத்தனை வலி நிறைந்தது என்பதை ஏராளமான உதாரணங்களோடு உணர முடியும். புற்று நோயாளியான அம்மாவை உயர்சிச்சைக்கு மதுரைக்கு அழைத்துப் போகுமாறு சொல்கிறார் மருத்துவர் (கரண்ட் (கதிரியக்க சிகிச்சை) வச்சா இன்னும் நாலஞ்சு வருசம் நல்லபடியா இருப்பாங்க). அங்கின போகலையின்னா எவ்வளவு நாளக்கிங்க உயிரோட இருப்பாங்க என்று கேட்கிறார் மகன். அவர் மீது கோபப்படமுடியாது, காரணம் ஒரு விவசாயக் கூலிக்கு மதுரை போய் வருவதுகூட சிரமமான காரியம் (அப்போது ஒரு நாள் கூலி முப்பது ரூபாய்).

எக்ஸ்ரே ஊழியருக்கு இருபது ரூபாய் லஞ்சம் தர முடியாமல் கையைப் பிசைந்துகொண்டு நிற்கும் உறவினர், பக்கத்து படுக்கை நோயாளிக்கு வரும் உணவை கேட்டு வாங்கி சாப்பிட்ட நோயாளிகள், எந்தப்பக்கம் போவதென தெரியாமல் அல்லாடும் கிராமத்து மக்கள், இரவுவேளையில் வரும் மோசமான விபத்தில் சிக்கிய மனிதர்கள், அவர்களுக்கு தண்ணீர் கொடுக்கலாமா என்ற கேள்விக்கே பதில் சொல்ல முடியாமல் தடுமாறும் பயிற்சி மருத்துவர்கள் என நம்மை முழுமையாக திகைக்க வைக்கும் பல சம்பவங்கள் அங்கு சர்வசாதாரணமாக நடக்கும். ஏழ்மை, அறியாமை, அலட்சியம் மற்றும் லஞ்சம் என இந்தியாவின் எல்லா அடையாளங்களையும் அங்கு காணலாம்.

தனியார் மருத்துவமனைகளில் நீங்கள் ஏழைகளைக் காண இயலாது. ஆனால் மேலே சொன்ன பிரச்சனைகளுக்கு சற்றும் சளைக்காத சிரமங்கள் அங்கு இருக்கிறது. ஒரு பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு மூன்று லட்சம் வசூலிக்கும் மருத்துவமனைகள்கூட தங்கள் செவிலியர்களுக்கு ஐந்தாயிரம்தான் சம்பளம் தருகின்றன. அன்றாட செலவைகூட சமாளிக்கப்போதாத சம்பளம் வாங்கும் ஒரு ஊழியர் நோயாளியிடம் தாயினும் சாலப்பரிந்து சேவை செய்ய முடியுமா? நடுத்தர மற்றும் சிறிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஒரு நோயாளி டிஸ்சார்ஜ் ஆகும் செய்தி கிடைத்தால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் கிளம்புகையில் கிடைக்கும் பத்து இருபது ரூபாய் இனாமுக்காகத்தான் இந்த கண்காணிப்பு.

தனியார் மருத்துவமனைகளில் அலட்சியம் இருக்காது எனும் கருத்து முட்டாள்தனமானது. பல சாதாரண மருத்துவமனைகளில் முறையான பயிற்சி பெற்றவர்கள் வேலைக்கமர்த்தப்படுவதில்லை. விபத்தில் காயமடைந்தோருக்கு முதலுதவி மட்டுமே செய்துவிட்டு உறவினர் வரும்வரை காத்திருப்பது பல இடங்களில் பின்பற்றப்படும் “சிகிச்சை” முறை. செலவு செய்ய முடியாதவனுக்கு வைத்தியம் செய்து காசை வீணாக்கும் ரிஸ்கை எடுக்க இவர்கள் விரும்புவதில்லை. இப்போது கோவையில் விபத்து காரணமாக உண்டான தலைக்காயத்துக்கு சிகிச்சைபெறும் ஒருவரது நிலையை சொன்னால் உங்களுக்கு இதன் தீவிரம் புரியும். பத்து நாளில் ஏறத்தாழ ஐந்து லட்சம் செலவாகியிருக்கிறது அவர்களுக்கு, ஒவ்வொரு முறை பணம் கட்ட தாமதமாகும்போதும் நோயாளி மிகவும் அலட்சியமாக நடத்தப்படுகிறார், மருத்துவர் பதில் சொல்வதை தவிர்க்கிறார். அங்கு இன்னும் ஐந்தாறு லட்சம் இவர்கள் செலவழிக்க வேண்டிருக்கும். சம்மந்தப்பட்டவர்கள் வீட்டை விற்கும் முடிவுக்கு வந்துவிட்டபடியால் கங்கா மருத்துவமனைக்கு எந்த நட்டமும் வர வாய்ப்பில்லை. ஆனால் மருத்துவமனை தவணைமுறையில் காட்டிய அலட்சியத்துக்கு என்ன பரிகாரம்?

அரசு மருத்துவமனைகளை மோசமான நிலையில் பராமரிப்பதன் வாயிலாக தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை விரட்டும் அரசு, இப்போது ஒருபடி மேலேபோய் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு படியளக்க காப்பீட்டுத்திட்டம் கொண்டு வந்திருக்கிறது. குறிப்பிட்ட வியாதிகளுக்கு எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் சிகிச்சை செய்துகொள்ளலாம் என்று கருணையை பொழிகிறது விளம்பரம். பட்டியலில் இல்லாத வியாதி உடையோர் என்ன செய்வார்கள்? சிறுநீரக செயலிழப்பு போன்ற ஒவ்வொரு வாரமும் ஆயிரங்களைப் பிடுங்கும் நோய் வந்தால் என்ன செய்வது? சிகிச்சை செலவு ஒருலட்சத்துக்கு மேலே போனால் என்ன செய்வது? ஒரு நோய்க்கு காப்பீட்டில் சிகிச்சை பெற்ற பிறகு இன்னொரு வியாதி வந்தால் அந்த சிகிச்சை என்ன செய்வது… கனிமொழி காப்பீட்டுத்திட்டம் என்ற ஒன்றுக்காக காத்திருப்பதா?

இன்றைய சூழலில் மருத்துவமானது நடுத்தர வர்கத்தினருக்குக்கூட எட்டாததாகிக்கொண்டிருக்கிறது. முனுக்கென்றால் டாக்டரிடம் ஓடப் பழகிவிட்ட நாம் மற்ற நோயாளிகளை பற்றி லட்சியம் செய்வதில்லை. இப்போது வரும் உடல்நலக் கோளாறுகள் பற்றியும் அதற்கான செலவுகள் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. அரசு காப்பீடோ அல்லது தனிப்பட்ட நபர்களது சொந்த காப்பீடோ பெரும்பாலும் அது ஒரு லட்சத்தை தாண்டுவதில்லை. தலைக்காயமோ அல்லது புற்றுநோயோ குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு வந்தால் அது அவர்களின் மொத்த ஆயுளுக்கும் கடனை இழுத்துவிடவல்லது. இப்பட்டியலில் இன்னும் ஏராளமான வியாதிகளை இணைக்க முடியும். எனது முன்னாள் மேலாலரது அப்பாவின் I.C.U செலவு நாளொன்றுக்கு பதினேழாயிரம் ஆனது (தீவிரமான காய்ச்சலுக்கான சிகிச்சை),இது கோவையில் ஓரளவு நியாயமான கட்டணம் வாங்கும் PSG மருத்துவமனையின் கட்டணம். கடைசியில் என்ன வியாதி என்று தெரிந்துகொள்ள முடியாமலே லட்சங்களை செலவழித்து அவரது பூத உடலை கொண்டுவந்தார்கள்.

மேற்கூறிய விவரங்கள் உங்களுக்கு தெரியாதெனில், உங்களை அச்சுறுத்துவதற்காக இவை எழுதப்படவில்லை. மருத்துவத்துறையின் ஒவ்வொரு அங்குலத்திலும் சீர்திருத்தம் அவசியப்படுகிறது என்பதை இப்போதாவது நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆட்டோவுக்கு கட்டணம் நிர்ணயிக்கத் தெரிந்த அரசுக்கு அறுவை சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய முடியவில்லை என்பது என்ன நியாயம்? வேலை மெனக்கெட்டு ஜானி வாக்கர் விஸ்கியின் மீதான வரியை பாதியாக குறைக்கத்தெரிந்த காங்கிரஸ் கட்சி எப்படி எயிட்ஸ் மற்றும் புற்றுநோய் மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்று வெட்கமில்லாமல் பாராளுமன்றத்தில் சொல்ல முடிகிறது? (மன்மோகனின் போன ஆட்சிகாலத்தில் ப.சிதம்பரம் ஜானிவாக்கரின் விலையை குறைத்தார், மருந்துகள் பற்றிய கையாலாகாத்தனம் இந்த நவம்பரில் ரசாயணத்துறை இணையமைச்சரால் பாராளுமன்றத்தில் சொல்லப்பட்டது).

மூத்த குடிமக்களை பராமரிக்கும் வேலையை அரசே செய்கிறது நார்வேயில். இங்கோ அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவரை நியமிக்கக்கூட துப்பில்லாத அரசுகள் கோலோச்சுகின்றன. ராணுவத்துக்கு நிதியை கொட்டிக்கொடுக்கும் அரசு சுகாதாரத்துக்கு ஏன் செலவழிப்பதில்லை என்று நாம் எப்போதுமே கேட்பதில்லை. ஐந்து ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர் புகழேந்தி வசதிக்குக் குறைவில்லாமல் வாழ்வதாக சொல்கிறார். அவரைப்போல கம்பீரமான வாழ்வை வாழ ஏன் அனேக மருத்துவர்கள் முன்வருவதில்லை? கேள்விகளை அடுக்குவதில் பிரயோசனமில்லை. பொதுமக்களையும் சேர்த்து மருத்துவத்துறையோடு தொடர்புடைய எல்லா மட்டங்களிலும் மாற்றங்கள் மிக அவசரமாக தேவைப்படுகிறது.

இதற்கான கேள்விகளை நன்றாக இருக்கையிலேயே நாம் கேட்டாக வேண்டும். இல்லையேல் நோயாளியான பிறகு, அழுவது மட்டுமே நமக்கு சாத்தியப்படும் ஒரே சிகிச்சையாக இருக்கும்.

Advertisements

“நோயைவிடக் கொடியது நோயாளியாய் இருப்பதே. (பாகம் 2)” இல் 6 கருத்துகள் உள்ளன

  1. நேரமின்மை, மனிதாபிமானமின்மை, பணவெறி காரணங்களால், ‘வாழ்க வளமுடன்’ என்று மட்டும் சொல்லிவிட்டு,
    கட்டணம் வசூலிக்கும் காலம் வெகு தொலைவிலில்லை. மருத்துவ மனைகளில் அனுமதிக்குமுன்னரே, நோய்க்கேற்றவாறு, முன்பண ‘டெபாசிட்’
    வாங்கினாலும் ஆச்சர்யமில்லை. மொத்தத்தில் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் கூட்டாக செய்த கூட்டுக்களவாணிகளின்
    ‘ஆப்பரேஷன் சக்சஸ்; பேஷண்ட் க்ளோஸ்’!

  2. போராட்டமெல்லாம் பிறகு. நாம் மருத்துவர்களிடம் கேட்கவேண்டியதையே கேட்கத் தயங்குகிறோமே.. அது சரியாகவே எவ்வளவு நாளாகுமோ என்றுதான் முதலில் கவலைப்படவேண்டியிருக்கிறது.

  3. கங்கா மருத்துவமனைக்கு எந்த நட்டமும் வர வாய்ப்பில்லை. ஆனால் …………..அய்யா மிக மிக அவசரமான தீர்க்க பட வேண்டிய பிரச்சனைங்க…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s