லஞ்சம் ஊழல் என்று வந்துவிட்டால் நான் நெருப்பு.. (என் பங்கை சரியாக கொடுக்காதபட்சத்தில்)


வழமையாக தமிழக முதல்வர் தானே கைப்பட தயாரித்த (மேட் இன் கோபாலபுரம்.. எங்களுக்கு சிஐடி காலனி தவிர வேறு எங்கும் கிளைகள் கிடையாது) கேள்வி பதிலை தினசரி பத்திரிக்கைகளுக்கு அனுப்புவது வழக்கம். ஆனால் பல கேள்விகளையும் அவர் தவிர்த்துவிடுவதாக இரக்கமற்ற தமிழ் மக்கள் குறைபட்டுக்கொள்கிறார்கள்.

சினிமா நிகழ்ச்சி, பாராட்டுவிழா என ஏராளமான பணிகள் காத்திருக்கும் ஒரு அரசியல் தலைவருக்கும் இந்தியாவிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் வசனகர்த்தாவுக்கும் உள்ள பணிச்சுமையை மக்கள் உணராதது துரதிருஷ்டவசமானதே. தலைவர் சாய்சில் விட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, உடன்பிறப்புக்கு எழுதிய ஒரு ரகசியக் கடிதம் கீழே தரப்படுகிறது (நம் கேள்வியை அவரே எழுதிக்கொ(ல்லு)ள்ளும்போது அவர் பதிலை நாம் எழுதக்கூடாதா என்ன???)

உடன்பிறப்பே, சில தினங்களுக்கு முன்னால் நான் வெளியிட்ட சொத்துப்பட்டியலைக் கண்டு நீ உள்ளம் பூரித்துப்போயிருப்பாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் சிறுமதிகொண்ட லட்சக்கணக்கான மக்கள் அச்செய்தி வெளியான அன்று பேப்பர் வங்கிய உடன் என் சொத்துக்கணக்குக்கான இலவச இணைப்பை கேட்டு கடைக்காரர்களிடம் தகராறு செய்திருக்கிறார்கள். நான் மஞ்சள் துண்டிலிருந்து பட்டு வஸ்திரத்துக்கு முன்னேறிய கேப்பில் ஆரியம் திராவிடத்தை கெடுத்துவிட்டதைப் கண்டாயா?

மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவையே மண்டியிட வைத்த என்னை, குமுதத்தின் குடுமியை கொத்தாக பிடித்திருக்கும் என்னை இந்த பத்திரிக்கையுலகம் என்ன பாடுபடுத்துகிறது பார்த்தாயா? பத்திரிக்கைக் குடும்பத்தில் மூத்த உறுப்பினரான என்னை குடும்பமே இல்லாத அம்மையாரைப்போல விமர்சிக்கிறார்கள் இவர்கள். விஜயகுமார் வீட்டில் இத்துனை களேபரம் நடக்கும் இவ்வேளையிலும் அந்த செய்திக்கு மயிரளவும் மரியாதை தராது இன்னமும் ஸ்பெக்ட்ரம் ஊழலையே இந்த வட இந்திய ஊடகங்கள் ஊதிப்பெரிதாக்கும்போதே தெரியவில்லையா நம் மீது வைக்கப்படுபவை உள்நோக்கமுடைய குற்றச்சாட்டு என்று?

இந்த இலங்கைப் பிரச்சனையில் இந்த மாநிலமே என்னை துவைத்து காயபோட்ட விசயம் நீ அறியாததல்ல. உலக வரலாற்றில் ஒரு வேளை உண்ணாநோன்பிருந்து ஒரு போரையே நிறுத்தி அதற்காக ஒரு பாராட்டுவிழாகூட நடத்திக்கொள்ளாத ஒரு உத்தமனை வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிவிட்டார்களே இந்த வீணர்கள்?. இலங்கைத் தமிழர்களுக்காக நூற்றுக்கணக்கில் கடிதம் எழுதி அதனை லட்சக்கணக்கான முறை நானே சொல்லியும் காட்டிவிட்டேன். இன்னமும் இந்த வரலாற்றை தமிழ்நாட்டு மூடர்கள் புரிந்துக்கொள்ளவில்லையே என்று அவர்களை நீ வையாதே. அண்ணாமலை பல்கலைக்கழக உதயகுமார் முதல் மாஞ்சோலை தொழிலாளர்கள் வரை உள்ள நீண்ட வரலாற்றை அவர்கள் புரிந்துகொண்டு நினைவில் வைத்திருந்தார்கள் என்றால் நம் கதை கந்தலாகிவிடும் என்பதை நீ மறக்கலாகாது.

தமிழுணர்வாளர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள் அடிக்கும் கொட்டம் என்னை கொந்தளிக்க வைத்தாலும் நீ அதனைக்கண்டு கலங்காதே. ஏற்கனவே அங்கே இருந்து கூப்பாடு போட்டுக்கொண்டிருந்த சுப.வீயும் வீரமணியும் இப்போது நம்மிடம் தினக்கூலிக்கு வேலைக்கு வந்துவிட்டதை நினைத்து தைரியம் கொள். ஜெயலலிதா ஒரேயொரு முறைதான் சோனியாவை பதிபக்தியற்றவர் என்று சொன்னார், நானோ நாளுக்கொருமுறை அவர் சொன்னாரென்பதை சொல்லிக்கொண்டேயிருக்கிறேன், இதெல்லாம் யாருக்காக?

தியாகத்தாயின் கடும் கண்காணிப்பில் இருக்கும்போதே தமிழ்செல்வனுக்கு இரங்கற்பா இயற்றியவன் நான். பிரபாகரன் கொல்லப்பட்டதாக சொன்னபோது பண்டார வன்னியன் பற்றி கவிதை எழுதி ஒரு குத்துமதிப்பாக அஞ்சலி செலுத்தியவன் நான். பக்தி கொஞ்சம் முற்றிவிட்டதால் இவர்களை வீடணன் என்று சொல்வதா ராவணன் என்று சொல்வதா என எனக்கே புரியவில்லை. என்ன செய்வது., தமிழ்நாட்டில் இருக்கும் எண்ணற்ற நன்றி கெட்டவர்களில் இவர்களும் இருந்து தொலைக்கட்டும் என்று விட்டுவிடுவோம். இந்த சூழலிலும் இனப்படுகொலையே நடக்கவில்லை என்று சொல்லும் டி.கே.ரங்கராஜனும், இந்த நில்லா நெடுஞ்சுவர்களோடு ஜோடிபோடாமல் கமுக்கமாக இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியும் நம் மனதுக்கு கொஞ்சமேனும் ஆறுதலாக இருக்கிறார்கள் என்று என்னைப்போல ஆனந்தம் கொள்.

நீரா ராடியாவுடன் ராசாத்தி அம்மையாரும் கனிமொழியும் பேசிய ஆங்கில உரையாடல் கேட்டபோது பெண்கள் மேம்பாட்டுக்கு கழகம் எடுத்த நடவடிக்கை உனக்கு தெரியவில்லையா? கனிமொழியின் சொத்து விவரத்தைப் பார்த்து புலம்புகிறார்கள் புல்லுருவிகள். சிலி நாட்டு கவிஞன் பாப்லோ நெருடாவுக்கு அந்நாட்டிலேயே பெரிய அரண்மனை இருந்ததாம். காலச்சுவட்டிலேயே கவிதைகள் எழுதிய கவிதாயினிக்கு சிங்கப்பூரில் மாளிகை இருந்தால் மட்டும் வயிறு எரிகிறது இந்த பத்திரிக்கைகளுக்கு. இவர்கள் முதலில் நெருடாவின் சொத்து விவரத்தை வெளியே கொண்டுவந்தால் பத்திரிகா தர்மத்தை கடைபிடிப்பவர்கள் என்று நம்பலாம்.

என் சொத்து விவரத்தை சொன்ன பிறகும் அதில் குற்றம் காண்கின்றன பல குள்ளநரிகள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே பத்தாயிரம் சம்பளம் பெற்றவன் நான். பள்ளியில் படித்தபோதே எங்கள் வீட்டில் திருடர்கள் போக்குவரத்து இருந்திருக்கிறது என்று சொன்னால் கள்ளச்சிரிப்பு சிரிக்கிறார்கள் கயவர்கள். இப்போதுகூட பெண் சிங்கம் படத்துக்கு வசனம் எழுதி ஐம்பது லட்சம் சம்பளம் பெற்றவன் நான், அப்படியென்றால் வசனம் எழுதாமல் இருப்பதற்கு எத்தனை கோடி எனக்கு கிடைத்திருக்கும் என்று இவர்கள் கணக்கு போட்டு பார்த்திருக்க வேண்டாமோ?

சமாதனத்துக்கான நோபல் பரிசுக்கே தகுதியுடைய தயாளு அம்மாவையும் இவர்கள் விட்டுவைக்கவில்லையே. அவர் அறுநூறு கோடி பணம் பெற்றுக்கொண்டு தயாநிதி மாறனுக்கு பதவி பெற்றுத்தந்ததாக யாரோ இரண்டு பேர் பேசினார்களாம். அதை வைத்து அவர் மீதும் அவதூறு பரப்புகிறார்கள். ஒரு பெண்மணி தனியாக அறுநூறு கோடியை பெற்றிருக்க முடியுமா?

நூறு கோடி கொடுத்தற்கான சண்டையிலேயே மூன்று பேர் செத்தபோது அறுநூறு கோடிக்கு பதினெட்டு பேர் போய்ச்சேர்ந்திருக்க வேண்டுமா இல்லையா? அப்படியேதும் நடைபெறாதபோதே இந்த குற்றச்சாட்டு அபாண்டமானது என்பது உள்ளங்கை நெல்லிகனிபோல தெற்றென உனக்கு விளங்கியிருக்கும். நான் தயாளு அம்மாளுக்கு வக்காலத்து வாங்குவதாக சிலர் நாக்கூசாமல் பேசுவார்கள் அது குறித்து நான் அஞ்சவில்லை.. ஆனாலும் இது ராசாத்தி அம்மையார் வட்டாரத்தில் தேவையற்ற விவாதத்துக்கு இடமளித்துவிடுமோ என்றுதான் அஞ்சுகிறேன் என்பது நீ அறியாததா என்ன?

மதுரையில் அமைதியை நிலைநாட்ட டெல்லிக்கு போயிருக்கும் தம்பி அழகிரி மீது விமர்சன அம்பை எய்கிறார்களே சில அசட்டுதைரியம் கொண்டவர்கள் அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லையே என்று நீ நினைக்கலாம். என்ன செய்வது அதில் பாதி விமர்சனம் எங்கள் வீட்டுக்குள்ளிருந்துதான் வரும் போலிருக்கிறதே!!!. ஆனாலும் அதற்கெல்லாம் நான் பதில் சொல்லத் தேவையில்லை, அதை அஞ்சாநெஞ்சனும் அகிம்சாமூர்த்திகளான அவரது அடிபொடிகளுமே பார்த்துக்கொள்வார்கள்.

இணையம் என்றொரு ஏரியா இருக்கிறது, அங்கே நீங்கள் யாரும் இருப்பதாகவே தெரியவில்லை. இடைத்தேர்தல்களில் வெற்றிபெற நாம் எண்ணற்ற நுட்பங்களை புகுத்தி புகுந்து விளையாடுகிறோம். ஆனால் இணையத்தளக்காரர்களை முடக்கிவைக்கும் நுட்பத்தை நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லையே.. ஏற்கனவே கூகுளும் வேர்டுபிரஸ்ஸும் வலைப்பூவை இலவசமாக தந்து தொலைக்கிறார்கள். இல்லாவிட்டால் அதைக் கொடுத்தாவது ஆதரவு தேடலாம். சவுக்குக்கு தினசரி பதின்மூன்றாயிரம் பேர் வருகிறார்களாம், இந்த கீபோர்டு கிறுக்கர்களின் மொத்த கும்பலும் நமக்கு எதிராக இருப்பதைப் பார்த்தால் தேர்தலுக்கு மொத்த ஸ்பெக்ட்ரம் பணத்தையும் போட்டால்தான் தேறமுடியும் போலிருக்கிறதே?

ரஜினி கமலையே விழாவுக்கு மைக்செட் கட்டுபவன்போல வரவழைக்கும் நம்மால் இந்த பொடியர்களை வழிக்கு கொண்டுவரமுடியவில்லையே? .ஜெகத் கஸ்பர் மாதிரி தொழில்தெரிந்தவர் நம்மிடம் இருந்தும் என்ன புண்ணியம்? நாலணாவுக்கு பிரயோஜனம் இல்லாத இவர்களை வைத்துக்கொண்டு நாம் செம்மொழி மாநாடு நடத்திய வரலாற்றை நினைத்துப்பார்க்கிறேன். ஏதோ ஒப்புக்காவது வீரமணியின் அடிபொடிகள் சிலர் நமக்கு ஆதரவாக இணையத்தில் இருப்பது இந்த காயத்துக்கெல்லாம் ஒத்தடம் கொடுத்த மாதிரி இருக்கிறதே என்று அமைதிப்படவேண்டியதுதான்.

குடும்ப அரசியல், குடும்ப அரசியல் என்று குடும்பம் குடும்பமாக அமர்ந்து தமிழகத்தில் பேசிக்கொள்கிறார்கள். நீ இதையெல்லாம் எப்போதோ கடந்து வந்தவன் என்று எனக்குத்தெரியும். ஆனாலும் தேர்தல் வருவதால் நாம் இதற்கும் பதில் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது. நேருவின் குடும்பமே வாரிசு அரசியலை வளர்க்கவில்லையா என்று நீ அவசரப்பட்டு பேசிவிடாதே.. ஒருவேளை காலங்கள் மாறி, காட்சிகள் மாறி, கோலங்கள் மாறி கடைசியில் மத்தியில் ஆட்சியே மாறினால் நாம் பாஜகவோடுகூட கூட்டணி அமைக்கவேண்டியிருக்கும், அப்போது இந்த வசனத்தை வைத்துத்தான் நாம் வண்டியோட்ட வேண்டும், அதுவரை அமைதியாக இரு.

காலம் காலமாக கட்சிக்கு உழைக்கும் அப்பவித் தொண்டனே கண்டுகொள்ளாதபோது மற்றவர்களுக்கு என்ன வந்தது? கனிமொழியின் கணவர் என்ன சட்டமன்ற உறுப்பினராகவா இருக்கிறார்? கயல்விழியின் கணவர் என்ன கட்சியில் கொறடா பதவியிலா இருக்கிறார்?

ஆகவே, குடும்பத்தில் பலர் அரசியலிலேயே இல்லை எனும் உண்மை உணர்ந்து,

குடும்ப ஆட்சி கழகத்தில் இல்லை என நெஞ்சம் நிமிர்த்து.

இதற்குமேலும் உழைப்பால் உயர்ந்து பதவியில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் பற்றி உனக்கு நினைப்பு வந்தால் அதை கட்சி பார்த்துக்கொண்டிருக்காது. ஆம், கட்சியின் கொள்கைக்கு எதிராக யாரேனும் சிந்தித்தாலும் அதை கழகமும் பொறுக்காது, கலைஞராலும் பொறுக்க முடியாது.

Advertisements

“லஞ்சம் ஊழல் என்று வந்துவிட்டால் நான் நெருப்பு.. (என் பங்கை சரியாக கொடுக்காதபட்சத்தில்)” இல் 19 கருத்துகள் உள்ளன

 1. Amazing! நான் படித்தவற்றில் வஞ்ச புகழ்ச்சியை இதை விட நன்றாக யாரும் சொன்னதே இல்லை! மிக அருமை!

 2. உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை…realy great..////////////// ரஜினி கமலையே விழாவுக்கு மைக்செட் கட்டுபவன்போல வரவழைக்கும் நம்மால்…………………ஹாஹாஹாஹாஹா…. என் சிரிப்பை அடக்கமுடியவில்லை.. பிரமாதமான மொழியாடல் இதை எழுதுவதற்கு அபாரமான திறமை வேண்டும். உங்களிடம் இருக்கிறது .. தொடர்ந்து எழுதுங்கள். ஆனாலும் இந்த மனிதப்பன்றி ஜென்மங்கள் திருந்தாது. அதற்கு முழுமுதற்காரணம் சொரணையற்ற தமிழ் மக்களே..

 3. படித்துட்டு சிரிப்பதா அழுவதா புரியவில்லை.

  பெயர்,மின்னஞ்சல், என்று ஏன் எல்லா விபரமும் ஒவ்வொரு முறை பின்னூட்டம் இடும் போதும் கேட்பது?? வேண்டாமே, பிரச்சனை இல்லை என்றால் எடுத்து விடுங்களேன்.

 4. தம்பி..வணக்கம்.நீயாரோ எவரோ எனக்கு தெரியாது, ஆனால் நான் நினைப்பதை எழுத்தாக்கியிருக்கீங்க,,படிக்க படிக்க மனம் மகிழ்ச்சி கொள்கிறது.நன்றிங்க.

 5. அங்கங்கே கோயபல்ஸ், வசந்தசேனை, வட்டமிடும் கழுகு என்றெல்லாம் சேர்த்து எழுதுங்க. இல்லாவிடில் உடன்பிறப்புகள் வருத்தப்படுவார்கள். – நித்தில்

 6. சில சந்தர்பங்களில் பின்னூட்டமிடாமல் சிலருக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

  ஆகையால் மின்னஞ்சல் தருவது எனக்கு கொஞ்சம் தேவையான ஏற்பாடாக இருக்கிறது.

  சிரமம் பார்க்காமல் கொஞ்சம் சகித்துக்கொள்ளுங்கள் நண்பரே.
  தோழமையுடன்,
  வில்லவன்.

 7. ஆஹா… விட்டுப்போச்சே, விடுங்க நண்பரே.. இன்னொரு கடுதாசி எழுத நேரம் வராமலா போயிடும். அப்ப எல்லாத்தையும் சேர்த்துடலாம்.

 8. “”””” இப்போதுகூட பெண் சிங்கம் படத்துக்கு வசனம் எழுதி ஐம்பது லட்சம் சம்பளம் பெற்றவன் நான், அப்படியென்றால் வசனம் எழுதாமல் இருப்பதற்கு எத்தனை கோடி எனக்கு கிடைத்திருக்கும் என்று இவர்கள் கணக்கு போட்டு பார்த்திருக்க வேண்டாமோ”””

  ##### நான் தயாளு அம்மாளுக்கு வக்காலத்து வாங்குவதாக சிலர் நாக்கூசாமல் பேசுவார்கள் அது குறித்து நான் அஞ்சவில்லை.. ஆனாலும் இது ராசாத்தி அம்மையார் வட்டாரத்தில் தேவையற்ற விவாதத்துக்கு இடமளித்துவிடுமோ என்றுதான் அஞ்சுகிறேன் என்பது நீ அறியாததா என்ன?######

  excellent write up sir! really it was so good to lauugh!! But you missed parapanna sathi:)- Jokes apart what is the soultion.are we going accept this nonsense and just make some fun and forget?
  can i use this article as refrence ?
  thanks
  sathish

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s