தமிழக பள்ளிகள்- வர்க வேறுபாடுகளின் புதிய காவலன்.


எனது அலுவலக வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக 15.வேலம்பாளையத்தில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு அவ்வப்போது செல்ல வேண்டும். மதிய உணவுக்குப் பிறகு திரு.வி.க. நகர் சுப்பையா பள்ளி வழியே வேலம்பாளையம் சுற்றுச்சாலையில் அமையும் அப்பயணம். அப்போது சுப்பையா பள்ளியை சுற்றி ஏராளமான கார்கள் குழந்தைகளை அழைத்துச்செல்ல (பள்ளி முடிவதற்கு நீண்ட நேரம் முன்பாகவே) காத்திருக்கும். அங்கிருந்து பத்து நிமிட தூரத்தில் வேலம்பாளையம் சுற்றுச்சாலையில் ஒரு அரசு ஆரம்பப்பள்ளி இருக்கிறது, அந்த நேரத்தில் மாலைநேர இடைவேளைக்கு வெளியே வரும் அப்பள்ளியின் குழந்தைகள் பலர் செருப்புகூட அணிந்திருக்க மாட்டார்கள். ஆம் சில விதிவிலக்குகள் தவிர பெரும்பாலானவர்கள் தங்களது பொருளாதார பின்புலத்தை வைத்துத்தான் தமது பிள்ளைகளின் பள்ளியை தீர்மானிக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு என் தோழியொருவருடனான உரையாடலின்போது குழந்தைகளை தமிழ் மீடியத்தில் படிக்கவையுங்கள் என்று சொன்னபோது அவர் தீயை மிதித்ததுபோல பதறினார். சோத்துக்கில்லாதவங்க மாதிரி என் பிள்ளைகள் ஏன் அரசுப்பள்ளியில் படிக்கனும்? என்றார். இதில் நம்மை பயமுறுத்தும் அம்சம் இரண்டு, அரசுப்பள்ளியில்தான் தமிழ் மீடியம் இருக்கமுடியும் எனும் நினைப்பு முதலாவது, சாப்பாட்டுக்கில்லாதவன்தான் அரசுப்பள்ளிக்கு போகவேண்டும் எனும் முடிவு இரண்டாவது. இதை இன்னும் உற்று நோக்கினால் சாப்பாட்டுக்கில்லாதவனுடனெல்லாம் என் குழந்தை ஏன் படிக்கனும் என்ற உட்கருத்தையும் அவர் கருத்து கொண்டிருக்கிறது என்பது புலனாகும். நம் கண்ணுக்குத் தெரியாமலே ஒரு நவீன தீண்டாமை நம்மிடையே உருவாகிக்கொண்டிருக்கிறது. சமச்சீர் கல்விக்கு முன்னால் சமச்சீர் கல்விக்கூடம் பற்றிய விழிப்புணர்வுதான் பிரச்சாரம் செய்யப்படவேண்டுமென கருதுகிறேன்.

இந்த ஆண்டு படோடாபமாக மத்திய அரசால் பிரச்சாரம் செய்யப்பட்டது 14 வயதுக்கு உட்பட்டோர் அனைவருக்கும் இலவச கட்டாயக்கல்வி எனும் சட்டம் (இன்னும் அமலாகவில்லை). அதன் ஒரு அம்சம் தனியார் பள்ளிகள் இருபத்தைந்து சத இடங்களை ஏழைகளுக்கு தரவேண்டும் என்பது. அதன் பிறகு  பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளி தமது மாணவர்களின் பெற்றோருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. புதிய சட்டத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு “விழிப்புணர்வு” கடிதம் எனும் பெயரில் அது பெற்றோரை சென்றடைகிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் உங்கள் குழந்தைகள் சிகரெட் பிடிக்க கற்றுக்கொள்வார்கள் (ஏழைகுழந்தைகள் உடன் படிப்பதால்) என்கிறது அவ்வறிக்கை. உங்கள் பெண் குழந்தைகள் மற்ற மாணவர்களால் தவறாக நடத்தப்பட்டால் என்ன செய்வீர்கள் என கேள்வி கேட்கிறது. சேரிப்பிள்ளைகளுடன் படித்தால் கெட்ட வார்த்தைகளை உங்கள் பிள்ளைகளும் பேசுவார்கள் என விழிப்புணர்வூட்டுகிறது அவ்வறிக்கை. அந்த பள்ளிமீது நடவடிக்கை எடுத்த மாதிரியும் தெரியவில்லை இதுபற்றி பரவலாக செய்திவந்த மாதிரியும் தெரியவில்லை. ஆனால் குட்டி ராதிகா குமாரசாமியை கல்யாணம் பண்ணிக்கொண்ட தகவல் மட்டும் கடைக்கோடி தமிழனையும் சென்றடைந்துவிட்டது. ( நல்வாய்ப்பாக இச்செய்தியை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மட்டும் வெளியிட்டதாக நினைவு)

சொல்லக் கேவலமாக இருந்தாலும் இப்படியொரு அறிக்கை தமிழ்நாட்டில் உலவினால் குறிப்பிட்ட அந்த சட்டத்துக்கு எதிராக பல பொதுநல வழக்குகள் பாயும் என்பது நிச்சயம். ஏற்கனவே தாய்மொழிக்கல்வியை எதிர்த்து வழக்கு தொடுத்த வரலாறு நமக்குண்டு. சிகரெட் பிடிக்கிற மற்றும் பெண்களை வன்பகடி செய்கிற பணக்கார மாணவர்கள் சேரியில் போயா அதை கற்றுக்கொள்கிறார்கள்? ஆனால் ஏழைகளை முற்றாக தள்ளிவைக்க விரும்பும் பணக்கார மற்றும் நடுத்தர வர்கம் மேற்கூறிய செய்தியுடன் ஒத்துப்போவதால்தான் இத்தகவல் மேலும் பரவாமல் நீர்த்துப்போனது என கருத அதிகபட்ச வாய்ப்பிருக்கிறது. சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன் ஒரு பள்ளி நடத்துகிறார் சென்னையில். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஃபீஸ் கட்ட முடியாதுன்னா கார்பரேஷன் ஸ்கூலுக்கு போ என பகிரங்கமாக சொல்கிறார் அவர். நம்மிடமிருந்து ஒரு முணுமுணுப்புகூட கேட்கவில்லை.

எல்லோரும் சமம் என்பதை முதல் பாடமாக சொல்லித்தர வேண்டிய  பள்ளிகள் பொருளாதார பிரிவின் அடிப்படையில் மாணவர்களை பிரித்துவைத்து பாடம் நடத்தும் அவலம் குற்ற உணர்வின்றி எப்படி பின்பற்றப்படுகிறது? உடையில்கூட வேறுபாடு தெரியக்கூடாது எனும் எண்ணத்தில் உருவான சீருடை எனும் ஒழுங்கு இப்போது மாணவனின் செலவிடும் சக்தியை அல்லது அவனது கல்வியின் விலையை கண்டறியும் அடையாள சின்னமானது ஏன்? சுயநலம் ஒரு பொது அடையாளமாக மறிவிட்டதன் விளைவு இது. தங்களின் இலக்கை அடையும் கருவியாகவும் கவுரவத்தின் அடையாளமாகவும் குழந்தைகள் மாற்றப்பட்ட பிறகு பள்ளிகள் அவர்களின் மதிப்பு கூட்டும் ஆலைகளாக செயல்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

பணக்காரர்கள் எப்போதுமே தங்களுக்கென ஒரு தனிப்பட்ட இடங்களையே விரும்புகிறார்கள், பள்ளி உட்பட. ஆகவே அவர்கள் இதை நீண்ட நெடுங்காலமாக செய்துவருகிறார்கள், .(எனக்குத் தெரிந்த ஒரு சாய ஆலை அதிபர் ஐந்தாண்டுகளுக்கு முன்பு வேலன் ஹோட்டல் பாருக்கு போவதை நிறுத்திக்கொண்டார். காரணம் அவர் கடைசியாக அங்கு சென்றபோது அவருக்கு முன்பு அங்கே குடித்துக்கொண்டிருந்தவர்கள் அவரது நிறுவனத்தின் கடைநிலை ஊழியர்கள்.) ஆனால் இப்போது அந்த பட்டியலில் நகரங்களில் வாழும் நடுத்தரவர்கத்தவரும் இணைந்துவிட்டார்கள். இது நியாயமற்ற நடைமுறை என்பது கிடக்கட்டும். அவர்களது எண்ணப்படியே இது குழந்தைகளுக்கு நன்மைதரக்கூடியதா என்றால் பதில் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

தனியார் பள்ளிகளில் நாம் எதிர்கொள்ளும் முதல் பிரச்சனை பணம். இருக்கும் பணத்துக்குத் தக்க பள்ளி என்று ஒருவர் தேடுகையில் வீட்டில் இன்னொருவர் எதிர்காலத்துக்கான பள்ளி என்று வேறொன்றை சொல்லுவார். பெரும்பான்மை நடுத்தரவர்க பெற்றோர்கள் தங்கள் வசதிக்கு மீறிய பள்ளிகளிலேயே தம் குழந்தைகளை சேர்க்கிறார்கள். எனக்கு அறிமுகமான ஊழியர்கள் பலர் பள்ளி திறக்கையில் கடும் பண நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்.  இந்த நெருக்கடி ஏதோ ஒருவகையில் குழந்தைகள் மீதே விடிகிறது. பெற்றோர் சக்திக்கு மீறி செலவிடுகையில் பிள்ளைகளும் சக்திக்கு மீறிய மதிப்பெண் வாங்கவேண்டும் என்று எதிபார்க்கிறார்கள். அல்லது போட்ட முதலீடு வீணாகிவிடக்கூடாது என்று இன்னும் அதிகம் செலவிடுகிறார்கள். கூடுதல் செலவு ஒரு டியூஷனாக இருக்கலாம் அல்லது யாரேனும் ஒரு சோதிடன் சொன்ன பரிகாரமாக இருக்கலாம். என்னுடன் முன்பு பணியாற்றிய ஒருவர் தன் மகனுக்கு கணக்கு டியூஷன் தனியே வைத்திருக்கிறார், மகன் படிப்பது மூன்றாம் வகுப்பு.

இரண்டாவது, கல்வி வணிகமயமாகிவிட்டதால் பாடங்கள் மிகவிரைவாக மாணவர்கள் மனதில் திணிக்கப்படுகின்றன. இந்த நடைமுறை முதலில் கைவைப்பது மாணவர்களின் ஆளுமையில்தான். எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கவனிப்புத்திறன் இருக்காது, படிப்பில் பின்தங்கினால் அதற்கு வேறு காரணிகள் இருக்கக்கூடும் என்கிற மாதிரியான அம்சங்களை பல பள்ளிகள் கவனிப்பதே இல்லை (உடல் சவால் காரணமாக கவனிப்புத்திறனில் குறைபாடு உள்ள குழந்தைகள் பல தனியார் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்). சராசரி மதிப்பெண் பெறும் மாணவர்களை தன்னம்பிக்கை இழக்கச்செய்யும் கல்வி முறைதான் இப்போது பயன்பாட்டில் இருக்கிறது. படிப்பு என்பது ஒருவனை பண்புடையவனாக்குவது மற்றும் அவனுக்கு வேண்டிய அறிவை தேடிப்பெறும் அளவுக்கு தகுதியுடையவனாக்குவது. அதெல்லாம் இப்போது பழங்கதை, இங்கு நடப்பதெல்லாம் ஒரு ஓட்டப்பந்தயம். முதல் மூவர் மட்டும் கவனிக்கப்படும் ஒரு போட்டி. நடுத்தரமான மற்றும் பின்தங்கிய மாணவர்கள் ஒன்று குற்ற உணர்வுடன் வளர்வார்கள் அல்லது பேமெண்ட் சீட் வாங்கித்தா என்று பெற்றோரை மிரட்டுவார்கள்.

மூன்றாவது சமூகக் காரணிகள். இப்படியான பள்ளி சூழல் மூலம் அவர்கள்  சமூகத்தின் எல்லா தரப்பு மக்களுடனும் (அதாவது எல்லா தரப்பு மாணவர்களுடனும்) பழகும் வாய்ப்பை இழக்கிறார்கள். கல்விக்குப் பிறகு இவர்கள் எல்லா பொருளாதார நிலையிலும் உள்ள மக்களுடனும் பழகியாக வேண்டும். அந்த சூழலில் இவர்கள் கடுமையான சிரமங்களை அனுபவிக்கக்கூடும். ஒருவேளை அவர்கள் பொருளாதார ரீதியில் பலவீனமடைகையில் முற்றிலும் நிலைகுலைந்தவர்களாகிறார்கள். ஏனெனில் அவர்கள் ஏழ்மையை அறியாதவர்களாக வளர்க்கப்பட்டு பிறகு ஏழ்மையை வெறுக்கும் நபர்களாக நிலை பெறுகிறார்கள். எதை வெறுக்கிறார்களோ அந்த வாழ்வை எப்படி ஏற்கத்துணிவார்கள்? வேலைபோய்விடுமோ என அஞ்சி தற்கொலை செய்த விமானி, காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டதற்காக தூக்கிட்டுக்கொண்ட மென்பொருளாலர் போன்ற உதாரணங்கள் இப்படியான பிரச்சனையுடையவர்கள்தான். எல்லாவற்றிற்கும் மேலாக எல்லா மட்டத்து மாணவர்களுடனும் பழகும் சுதந்திரமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்த இக்கால பெற்றோர்கள் அந்த வாய்ப்பை தம் பிள்ளைகளுக்கு மட்டும் மறுதலிப்பது எவ்வகையில் நியாயம்?

இந்தியாவின் பெருநகரங்களில் மேற்படிப்பைக் காட்டிலும் பள்ளிக்கல்வி செலவுமிக்கது என புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இவ்வளவு செலவும் தாய்மொழிக்கல்வியும் அரசுப் பள்ளிக்கல்வியும் எதிர்காலத்துக்கு நல்லதல்ல எனும் முட்டாள்தனமான எண்ணத்தினை அடிப்படையாகக்கொண்டு செய்யப்படுகின்றன. இப்படி நடுத்தர மக்கள் விலகிச்செல்வதால் அரசுப்பள்ளிகள் மற்றும் தமிழ்வழிக்கல்வியின் நிலை மேலும் பரிதாபகரமாகிக்கொண்டிருக்கிறது. ஏழைகள் பலர் தம் பிள்ளைகளின் கல்வி பற்றிய பெரிய ஞானம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அன்றாட வாழ்வுகூட சிக்கலாக இருந்தால் நம்மாலும் நம் பிள்ளைகளின் கல்வி பற்றி அக்கறைப்பட முடியாது. கல்வியின் அவசியம் பற்றிய தெளிவுடைய மற்றும் அதை கண்காணிக்கும் அளவு வசதியும் நேரமும் உடைய மத்தியதரவர்கம் அரசுப்பள்ளிகளை தெரிவு செய்தவரை அவற்றின் தரம் நன்றாகவே இருந்தது. நாம் கடவுள் முதல் கல்விவரை எல்லாவற்றிலும் தராதரம் பார்க்கத்துவங்கிய பிறகு நாமும் குட்டிச்சுவராகி கல்வியின் நிலையையும் குட்டிச்சுவராக்கிவிட்டோம்.

இந்த மத்தியதர முட்டாள்தனம் எவ்வளவு அபத்தமானது என்பதற்கு வாழும் சாட்சியாக இருந்தது தஞ்சாவூர். இரண்டாயிரமாவது ஆண்டுவரை சொல்லிக்கொள்ளும்படி இங்கு இருந்தவை இரண்டே இரண்டு மெட்ரிக் பள்ளிகளே. மீதமிருந்தவை எல்லாம் அரசு உதவி பெறும் பள்ளிகளே. நான் படிக்கையில் அரசு உதவிபெறும் பள்ளிகள் மூலைகொன்றாக தஞ்சையில் இருந்தன. எல்லா தரப்பு மக்களும் ஏதோ ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில்தான் படிக்க வைத்தார்கள். எல்லா பள்ளிகளிலும் கட்டணம் ஒரே மாதிரியானதே (தூய பேதுரு பள்ளியில் கொஞ்சம் அதிகம், அதுவும் இருநூற்றைம்பது ரூபாயினை தாண்டாது). நான் பத்தாம் வகுப்புக்கு கட்டிய கட்டணம் அறுபத்து சொச்சம் ரூபாய்.

இந்த பள்ளிகள் யாவற்றிலும் பெரிய விளையாட்டு மைதானங்கள் இருந்தன. பாடங்கள் ஒன்றே என்பதால் விரும்பாத பட்சத்தில் வேறு பள்ளிக்கு மாறிக்கொள்ளும் வாய்ப்பு தாராளமாக இருந்தது. தொன்னூறு மதிப்பெண்களுக்கு குறையாமல் வாங்கும் மாணவர்களும் மூன்று ஆண்டுகள் ஒரேவகுப்பில் படிக்கும் மாணவர்களும் ஒன்றாகப் படித்தார்கள். அறுபது ரூபாய் கட்டணத்தைக்கூட கட்ட இயலாத மாணவனும் அரசு உயரதிகாரியின் மகனும் ஒரே மேசையை பகிர்ந்துகொண்டார்கள். இதில் குறிப்பிட வேண்டிய விசயம், இந்த பள்ளிகளில் உருவான மாணவர்கள்தான் அரசுத்தேர்வு மற்றும் நுழைவுத்தேர்வுகளில் மிகச்சிறந்த இடத்தைப்பிடித்தார்கள். அப்போது இருந்த மெட்ரிக் பள்ளிகள் இரண்டும் மற்ற அரசு உதவிபெறும் பள்ளிகளுடன் போட்டியிடக்கூடிய தகுதிகூட இல்லாதவையாக இருந்தன.

போதிய எண்ணிக்கையில் பள்ளிகள், சராசரி மாணவர்களும் சமாளிக்கும் அளவு எளிமையான பாடத்திட்டம் மற்றும் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் படிக்கும் பள்ளிக்கூட சூழல் ஆகியவை இருந்தால் மாணவர்கள் அரசுப்பள்ளியிலும் சிறப்பாக படிக்க முடியும் என்பது சில ஆண்டுகளுக்கு முன்புவரைகூட நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அரசுப்பள்ளிகளை மக்கள் புறக்கணிப்பதன் பிண்ணனியில் ஒன்று தவறான நம்பிக்கை இருக்கவேண்டும் அல்லது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சூழ்நிலை இருக்க வேண்டும்.

அரசுப்பள்ளிகளில் படிக்கவைப்பது நம் உரிமை, தமிழ்வழியில் படிக்கவைப்பது கவுரவம், இவை இரண்டையும் நாம் விட்டுத்தரக்கூடாது. கட்டணம் கூடுதலாக இருக்கிறதென்று கான்வெண்டுக்களின் வாசலில் ஆர்பாட்டம் செய்யும் அளவுக்கு முன்னேறிய நடுத்தர வர்கம், அரசுப்பள்ளியில் வாத்தியார் சரியில்லை என்றோ அல்லது எங்கள் வட்டாரத்தில் பள்ளியொன்றைத் திற என்றோ ஆர்பாட்டம் செய்ய முடியாதா என்ன? ஒருவேளை சிறுவயதில் படிப்பு வராவிட்டாலும் பிற்பாடு அதனை ஈடுகட்ட பல வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆனால் குழந்தைகளின் பால்யத்தை கல்வி எனும் பெயரால் திருடிக்கொண்டால் அதை ஈடு செய்யும் வழி உலகில் எங்கும் கிடையாது.

மனிதன் ஒரு சமூக விலங்கு, உருளைக்கிழங்கு போல அவனை கல்வி எனும் பெயரில் தரம்பிரித்து வைக்கலாகாது. தம் மக்களுக்கு கல்விதருவது ஒரு அரசின் கடமை, அதை நாம் சுமந்துகொண்டு அரசை சோம்பேறியாக்கக்கூடாது. தாய்மொழியில் படிப்பது அறிவு விசாலமாவதற்கான எளிய வழி, ஆங்கில வழியில் படிக்கவைத்து அவர்களை குறுகலான ஞானமுடையவர்களாக வளர்ப்பது அநியாயம். எப்படி நோக்கினாலும் கல்வி அரசினால் தரப்படுவதுதான் சரியானது. அரசுப்பள்ளியில் படிப்பது அகௌரவமல்ல, கௌரவம் பார்க்கவேண்டிய பல விவகாரங்களில் சொரனையில்லாமல் இருந்துவிட்டு அதை படிப்பில் பார்ப்பதுதான் அகௌரவம்.

Advertisements

“தமிழக பள்ளிகள்- வர்க வேறுபாடுகளின் புதிய காவலன்.” இல் 19 கருத்துகள் உள்ளன

 1. நினைவில்லை; நினைவிலிருகிறது!

  நிலவைக் காட்டியூட்டினாலேயே
  நெஞ்சிலிறங்குஞ்சோறு
  நீள் நெடுவிருளில்
  நெடிதுறங்கு பேயைக் காட்டினால் மட்டும்
  நெஞ்சிலிறங்கவில்லை;
  ஏன்னென் பசியடங்கவில்லை?

  பள்ளி செல்லும் பாதையிலே
  பார்த்துச் செல்ல நேரமில்லை.
  மணி நேரந்தெரியவில்லை
  பாதையிலே முள்ளிருந்தும்!

  இந்த ஆயிரத்தோராவது இறைவணக்கத்திலும்
  எத்தனையோ முயன்றும்
  ஏனிறைவா என் மண்டையில்
  தேசியகீதம் ஏறவில்லை?

  பழையசோற்றுக் கட்டிருந்தும்
  புளியமரத்துப் பாட்டியின்
  தாளித்த இட்டலிக்கு
  தாவி மனந்துடித்தது ஏன்?

  கம்பங்கொல்லை கிளிகளோட்ட
  காட்டுக்கொல்லை போனதாலே
  வீட்டுப் பாடம் எழுதவில்லை;
  வீணாய்ப்போன படிப்புமில்லை.

  எப்படியோ நான் படித்து
  பட்டமொன்றை முடித்து
  நிமிர்ந்து பர்ர்தபோது
  கைக்கும் வாய்க்குமான
  போராட்டங்கள் தொடர்ந்துதானிருக்கிறது.

  படித்ததெல்லா மேட்டுச்சுரைக்காய்.
  அடிப்படைக் கல்வியில் ஆதாரம் வேண்டும்.
  கம்ப ராமாயணத்தையும் சிலப்பதிகாரத்தையும்
  கழற்றியெறிந்துவிட்டு
  அறிவியல் தத்துவக் கோட்பாடுகளை
  சுளுவான முறையில்
  மழலையிலிருந்தே கல்வி வேண்டும்.
  அதுவும் தமிழில்!
  – புதிய பாமரன்.

 2. அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள்.
  பெங்களூருவில் என்று எழுதாமல், பெங்களூரில் என்று எழுதலாமே. ஊர் என்பதுதானே ஊரு என்று உள்ளது. தினமலர் செய்யும் தவறை நாமும் செய்ய வேண்டுமா.
  அன்புடன்
  ராதா
  December 23, 2010

 3. பொதுத்தேர்வில் வாங்கும் மார்க்குகளைப் பார்த்தால் பலர் பணத்தை வீணடித்துப் பெருமைக்காகப் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது புரிகிறது.அதே நேரத்திலே அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் ஒரு நல்ல நெருக்கத்தை பெற்றோர்,ஆசிரியர் குழுக்கள் மூலம் உண்டாக்கி வளர்த்துச் செயல் படுத்த வேண்டும்.மிகவும் மோசமாக 30% தேர்வு பெற்றுக் கொண்டிருந்த பள்ளியை சில ஆண்டுகளிலே 100% தேர்வு பெறும் படிச் செய்த தலைமை ஆசிரியரைப் பாராட்டியுள்ளேன்.இந்த அதிசயங்களைத் தொடர வைக்க வேண்டும்.

 4. மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள். //மனிதன் ஒரு சமூக விலங்கு, உருளைக்கிழங்கு போல அவனை கல்வி எனும் பெயரில் தரம்பிரித்து வைக்கலாகாது. தம் மக்களுக்கு கல்விதருவது ஒரு அரசின் கடமை, அதை நாம் சுமந்துகொண்டு அரசை சோம்பேறியாக்கக்கூடாது. // உண்மைதான். தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் நண்பரே.

 5. “என்னுடன் முன்பு பணியாற்றிய ஒருவர் தன் மகனுக்கு கணக்கு டியூஷன் தனியே வைத்திருக்கிறார், மகன் படிப்பது மூன்றாம் வகுப்பு.”

  பக்கத்துக்கு வீட்டில்,LkG படிக்கும் பையனுக்கு டியுசன்.
  வருதமாகயிருந்தது

 6. “அரசுப்பள்ளிகளில் படிக்கவைப்பது நம் உரிமை, தமிழ்வழியில் படிக்கவைப்பது கவுரவம், இவை இரண்டையும் நாம் விட்டுத்தரக்கூடாது.”

  முற்றிலும் உண்மை

 7. வில்லவன் வாழ்த்துக்களும் வந்தனங்களும். எனக்கு (தாய்மொழிக்கு எதிரான) இந்தப் பின்னூட்டம் போடவே விருப்பமில்லை. நான் தாய்மொழி, தமிழ்வழிக்கல்விக்கு நான் ஆதரவானவன். தனியார் கல்விக் கொள்ளையர்கள், பள்ளிகள் போதிக்கும் தன்னலவாதம், பணக்காரர்களின் திமிர்த்தனம், அழியும் தமிழ் இவையனைத்திற்கும் உடன்படமுடியாமல் வெட்கப்படவும், வருந்தவும் செய்கிறேன். ஆனால் ஆங்கிலவழியில் படித்தவர்களுடன் போட்டி போட தமிழ்வழியில் படித்தவர்களால் முடியுமா? தற்போதைய சூழலில் வேலை கிடைக்க ஆங்கிலம் முன்னெப்போதுமில்லாத அளவு தேவையாயிருக்கிறது. உபயம் உலகமயம். தமிழ்வழியில் சிறப்பாக படித்தவர்களே ஆங்கிலத்தில் நொண்டியடிக்கும் நிலையில்(சமீபத்தில் அண்ணா பல்கலைக் கழக மாணவி ஜோதி தற்கொலைக்கு அவரது தமிழ்வழிக்கல்வியை பகடி செய்ததாகவும் ஒரு கேள்வி) சராசரி மாணவர்கள் ஆங்கிலத்தில் எப்படியிருப்பார்கள் ? தற்போது தமிழ்வழியில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பவர்களைக் கேட்டால் தெரியும் தமிழ்வழிக்கல்வியின் அருகதை. என்னுடைய சொந்த அனுபவமே இதற்குச் சான்று. இங்கு முதலில் ஒரே பாடத்திட்டமே இல்லை, கிட்டத்தட்ட 8 வகையான பாடவகைகள் உள்ளன. தமிழ்வழி, ஆங்கில வழி அரசுபாடத்திட்டம், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், நடுவண் அரசு பாடத்திட்டம் போன்ற வகைகளில் ஒவ்வொன்றும் மற்றோன்றை விடவும் “அதிகதரத்துடன்” இருக்குமாறு மனுஸ்மிருதியின் திறமையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் மெட்ரிகுலேசன் கல்வியே மிக சாதாரணமானது மற்ற பாடத்திட்டங்களுடன் ஒப்பிடும்போது. இதில் தமிழ்வழியில் பயின்றவர்கள் எந்த இடம் என்று சொல்லாமலே தெரியும் கடைசியிடம்தான் அறிவிலல்ல. பணிக்குத் “தேவைப்படும் தகுதிகளில்”. பெற்றோர்களின் ஆங்கிலக் கல்வி மோகத்தையும் வெறும் மேட்டிமைத்தனமாகக் கருதி விமர்சிக்க முடியாது. ஏனென்றால் அவர்களால் பெறமுடியாத ஆங்கிலக் கல்வியைத் தரவேண்டு என்றே கருத வேண்டும். இதெல்லாம் போக இந்த மனப்பாடக் கல்வியால் மனிதனுக்கு (பண்பாடு, மனிதவளத்தை மேம்படுத்துவதில் ) எந்த நன்மையும் இல்லை தமிழ்வழியும் சேர்த்துத்தான் சொல்கிறேன், படிப்பதற்கே வேலைக்குத்தான் என்றபோது அதை ஆங்கிலத்தில் படித்துத் தொலைத்தால் என்ன என்று நினைக்கிறேன். இது என்னுடைய அனுபவத்தின் விளைவால் வந்த சொந்தக் கருத்து இது சரியானது என்று கூற வரவில்லை, எதார்த்தமாக இருக்கிறது என்கிறேன். யாராவது முடிந்தால் விளக்கவும்.

 8. இங்கே பெரும் பிரச்சனை, யார் பூனைக்கு மணி கட்டுவதென்பதுதான்… இங்கே இந்த பதிவை பாராட்டியிருக்கும் பலரும், படித்து இதிலிருக்கும் உண்மையை உணர்ந்தவர்களும் தம் வாழ்வில் தன் குழந்தைகள் என வரும்போது என்ன செய்வார்கள் என்பது பெரும் கேள்வி.

  சுற்றிலும் உள்ள குழந்தைகள் பல புதிய திறமைகளை வளர்த்துக்கொள்ள களம் அமைந்துகொண்டிருக்கையில் (அவர்கள் உண்மையாகவே அதை பயன்படுத்திக்கொள்கிறார்களா இல்லையா என்பது வேறு).. எல்லோரும் முன்னால் செல்ல முயற்சிக்கையில், இப்படி ஒரு முயற்சியை செய்து தம் குழந்தைகளுக்கு கிடைக்கப்போகும் வாய்ப்புகளில் (opportunities) பரிசோதனை முயற்சி செய்ய யார் முயன்று வருவார் ?

  முன்பொரு காலத்தில் கோடைக்கால விடுமுறையை எதிர்பார்திருக்கும் மாணவர்கள் எங்கே, இன்று கோடைக்காலமென்றாலே போகவேண்டிய பல activities வகுப்புகள் நினைத்து கவலைப்படும் குழந்தைகள் எங்கே ? மற்ற குழந்தைகள் அத்தனை கற்றுக்கொள்கிறார்கள், நம் குழந்தை வெட்டியாய் 2 மாதம் வீட்டில் இருப்பதா, இது அவர்களின் எதிர்காலத்திற்கு பின்னடைவாக ஆகாதா என்ற பயம், எல்லோரையும் ஆட்டுமந்தையாய் ஆக்கி வருகிறது..

  இங்கே மந்தையை விட்டு புதுவழி செல்லும் முதல் ஆடு யார் என்பதுதானே கேள்வி ? எங்கிருந்து மாற்றம் தொடங்கும் ?

 9. சீனமும், ஜப்பானும், பிரான்சும், ஜெர்மனியும், மற்றும் ஆங்கிலக் காலனிகளாயில்லாத மற்ற நாடுகளும், அவரவர் சொந்த தாய் மொழியில் பயின்று (உயிரியல் போன்ற மிக கடினமான, பயாலஜிக்கல் வார்த்தைகளைக் கொண்ட துறைகளையும் சேர்த்து) உட்கார்ந்து தின்னும் சோத்துப் பிண்டம் அமெரிக்காவுக்கே தொழில் துறை வளர்ச்சியில் சவால் விடுகின்றன.

  குடும்பத்துடன் ஒருமுறை கடற்கரைக்குச் சென்றபோது,
  ‘மினரல் வாட்டர் எங்கே கிடக்கும்?’ என்று ஆங்கிலத்தில் கேட்கத் தெரியாமல் சைகைகளைக் காட்டி என்னிடம் தெரிவிக்க முயன்ற ஒரு டோக்கியோக் காரரை
  இன்றும் நினைவிருக்கிறது.

  ‘உங்கள் வேலை என்ன?’ என்ற எனது சைகைக் கேள்விக்கு அவரின் பதில் : ‘டோக்கியோவில் நானொரு ஆட்டோமொபைல் எஞ்சினீயர்!’.

  – புதிய பாமரன்.

 10. அருமையான & உண்மையான கருத்துக்கள். ஆழமான சிந்தனைக்கு வாழ்த்துக்கள்!.

  இப்படிக்கு,
  அரசு பள்ளியில் பெருமையுடன் படித்த ஒரு சாதாரண மாணவன்

 11. அருமையான பதிவு.
  அருமையான & உண்மையான கருத்துக்கள். ஆழமான சிந்தனைக்கு வாழ்த்துக்கள்
  ஒவ்வொரு தமிழனையும் சென்று அடைய வேண்டிய கருத்துகள்

  வாழ்த்துக்கள்.
  சி .திருமூர்த்தி

 12. மிக அருமையான post. ஒரு சில இடங்களில் உங்களுடன் உடன் படவில்லை… தாய் மொழி கல்வி… ம்ம்ம்… நடைமுறைக்கு இது எவ்வளவு தூரம் சாத்தியம்? France’ஐப் பார், Germany’ஐப் பார்… என்றெல்லாம் கூறி உபயோகம் இல்லை… அங்கெல்லாம் அந்த மொழியில் வேலையும் கிடைக்கும்… இப்போதைய globalisation’ல் அது கடினம்… இன்னும் சொல்லப்போனால், இன்னும் 20, 25 வருடங்களில் France, Germany’க்குமே கடினம். எல்லாவற்றுக்கும் மேல், உங்களது Post’ன் மூலம் சொல்ல வருவது, “பாடங்களைப் புரிந்து படிப்பது தான்”… எனக்குத் தெரிந்து, நமது தற்போதைய கல்வி முறையில், தமிழ் வழியோ, ஆங்கில வழியோ, எதிலும் அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. எங்கு படித்தாலும் மனப்பாடம் செய்வதற்குத் தானே சொல்லித் தருகிறார்கள்!! College’க்கு வரும் வரை, நிறைய பேர் தான் படித்த பாடங்களைப் புரிந்து படிப்பார்களா என்பது சந்தேகமே… (அதன் பிறகும் சிலர் புரிந்து படிப்பதில்லை என்பது வேறு விஷயம்) மேலும், Engineering, Medical, B.Sc, B.A, B.L… இதைத் தாண்டி எத்தனை பேருக்கு (நகரத்தில் இருப்பவர்க்கும்) வேறு fields’ம் இருப்பது தெரியும்? தனது பிள்ளையை creative field’லோ, விளையாட்டுத் துறையிலோ, R & D’லோ விடுவதற்கு எத்தனை பெற்றோர் முன் வருவார்கள்?
  சிறு வயதிலிருந்தே, குழந்தைகளை “கேள்வி கேட்காதே” என்று சொல்லி வளர்க்கும் போது, அவர்களுக்குப் பாடங்களை புரிந்து படிக்க வேண்டும் என்று எப்படி தோன்றும்? (நம்மில் எத்தனை பேர் சிறு குழந்தைகள் கேட்கும் “எல்லா” கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் சொல்லியிருப்போம்?)

  எனவே தாய்மொழி கல்வியை விட, புரிதல் மூலம் கல்வி கொண்டு வரப்பட வேண்டும். அதை அரசுப் பள்ளிகளிலும் கொண்டு வந்து, அதன் தரத்தையும் மேம்படுத்த வேண்டும் (அதில் தாங்கள் சொல்லியிருப்பது போல், பெற்றோரின் பங்கும் இதில் முக்கியம்)… இதைத் தவிர நீங்கள் சொல்லியிருக்கும் சமுதாய ஏற்ற தாழ்வு குறித்த அனைத்தும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய விஷயம்.

  பி.கு: தனியார் பள்ளிகளில் கட்டண நிர்ணயம் கொண்டு வந்த பொழுது பாராட்டிய எந்த பத்திரிக்கையும், அதற்குப் பதிலாக அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தினால், மக்கள் தானாக அரசுப் பள்ளியை நோக்கி வருவார்களே என்ற கருத்தை பதிவு செய்தது போல் எனக்குத் தெரியவில்லை. (சோ மட்டும் எழுதினார் என்று நினைக்கிறேன்)

 13. அருமையான பகிர்வு..அதுவும் திருப்பூரில் இருந்து என்பது இன்னும் மகிழ்ச்சி…அரசுப்பள்ளிகளில் மக்கள் தங்கள் குழந்தைகளைச்சேர்க்க தயங்குவதற்கு அரசு/ நகராட்சிப்பள்ளிகளின் சுற்றுச்சூழல் மாசுபாடும்,அடிப்படை வசதிகள் இன்மையும் ஒரு காரணமாகும்.. நமது மக்கள் ஒரு சின்னக்கோவிலுக்குத்தரும் மரியாதையைக்கூட அரசுப்பள்ளிகளுக்குத்தராமல்,அப்பள்ளிகளை கழிப்பரையாகப்பயன் படுத்துகிறார்கள்..இதைத்தட்டிக்கேட்க பள்ளிகளில் காவலாளிகள் இல்லை!மக்களும் தயாராக இல்லை…அரசு/ நகராட்சிப்பள்ளிகள் தேசத்தின் சொத்துக்கள் என்ற எண்ணமில்லாமல் அப்பள்ளிகளை ஊதாசீனம் செய்கிறோம். அரசியல் வாதிகளின் ஆதரவுடன் பள்ளியை தனியார் தொண்டு நிறுவனம்(ரோட்டரி கிளப்)ஜெய்வாபாய் மா நகராட்சிப்பெண்கள் மேல் நிலைப்பள்ளியின்இ ந்தியளவில் மிக அதிகமான மாணவிகள் 7200 பேர் படிப்பது மட்டுமல்ல இன்னும் பல்வேறு சாதனைகளுக்கு சொ ந்தமானது) ஒரு ஏக்கர் இடத்தை 40 ஆண்டுகளாக ஆக்கிரமித்து மெட்ரிகுலேசன் பள்ளி நடத்திவருகிறது.சென்னை உயர் நீதி மன்றம் 2005–2008- 2010 என்று மூன்று முறை ரோட்டரிபள்ளியை ஜெய்வாபாய் பள்ளி வளாகத்திற்குள் இருந்து வெளியேற வேண்டும் என்று தீர்ப்பு சொன்ன பிறகும்,இன்னும் காலி செய்யாமல் அரசியல் வாதிகள்/கல்வித்துறை அதிகாரிகளின் துணையுடன் நீதிமன்றத்தீர்ப்பை உதாசீனப்படுத்தி வருகிறார்கள்..இ ந்தக்கொடுமையை எங்கே போய் முறையிடுவது…உலகளவில் சேவை செய்யும் அமைப்பென மார்தட்டும்,கோடீஸ்வரர்களான ரொட்டேரியன்கள் அரசுப்பள்ளி நிலத்தை ஆக்கிரமிக்கலாமா? வில்லவன் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள்…இதைப்பற்றியும் ஒரு நல்ல பகிர்வைப்போடுங்கள்…தொடர்புக்கு 9443024086.

 14. திரு.ஈசுவரன்,

  உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி. கல்வி பற்றி ஒரு தொடர்பதிவுக்கான முயற்சிதான் மேலே உள்ள இடுகை. நீங்கள் சொன்ன கருத்துக்களில் ஒன்றுகூட அடுத்த இடுகையில் குறிப்பிடும் எண்ணம் இருந்தது (குப்பைத்தொட்டி வைக்குமிடமாக அரசுப்பள்ளிகளை பயன்படுத்துவது). உங்களது மற்றொரு முக்கியமான கருத்தையும் உள்ளடக்கி வேறொரு இடுகையை நிச்சயம் பதிவிடுகிறேன் (ஜெய்வாபாய் பள்ளி ஆக்கிரமிப்பு). மேலதிக தகவல்களை திரட்டிக்கொண்டிருக்கிறேன், இந்த ஆண்டு இறுதிக்குள் ஐந்து அல்லது ஆறு கட்டுரைகள் கல்வியைப் பற்றி வெளியிடும் திட்டமிருக்கிறது.

  நன்றி.

  தோழமையுடன்,
  வில்லவன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s