யார் சொன்னது நாங்கள் செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் என்று?


கடவுள் மறுப்பு – பால்ய காலத்திலிருந்தே எங்கள் வீட்டவர்களின் அடையாளமாக இருந்திருக்கிறது (என் அம்மாவைத் தவிர). ஒருகாலத்தில் இந்த ஒரு விவகாரம் குறித்து எங்கள் வாயைப் பிடுங்குவதுதான் உறவினர்களது பொழுதுபோக்காக இருந்தது. இயேசுவின் படத்தை வாங்க மறுத்தமைக்காக என் தங்கை அவரது வகுப்பாசிரியரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டிருக்கிறார். நாங்கள் (நாத்திகர்கள்) எப்போதும் ஏதாவது ஒன்றுக்கான பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். கருணாநிதி மஞ்சள் துண்டு போட்டாலும் வீரமணி ஜால்ராவை மாற்றிப்போட்டாலும் நாங்கள் அதற்கு பதில் சொல்லியாகவேண்டும்.

கடவுளை மறுப்பவர்கள் வாழ்க்கை சிரமமானது. நாங்கள் தவறுதலாகக்கூட தவறு செய்ய முடியாது. ஆத்திகர்கள் ஏதாவது பூச்சியை வணங்கினாலும் அதனை தன் நம்பிக்கை என்று சொல்லிவிட்டால் போதும். ஆனால் அதனை மறுப்பவன் ஆதாரபூர்வமாகவும் அறிவியல்பூர்வமாகவும் அதை செய்தாகவேண்டும். சென்ற மாதம் செந்தழல் ரவி சொன்ன விமர்சனத்தை கண்டித்து வந்த ஒரு இடுகையை படித்தேன். பகுத்தறிவுவாதியான ரவி எப்படி ஒருவரது உருவத்தை கேலி செய்யலாம் என்ற கேள்வி அங்கு எழுப்பப்பட்டிருந்தது (அது உண்மையா என்று எனக்குத் தெரியாது). ஆக நாத்திகன் நியாயவானாக இருந்தாக வேண்டியது கட்டாயம்.

நாத்திகர்களின் வாழ்க்கை சுவாரஸ்யமானது. ஏனெனில் எங்களை சந்திக்கும் அனேக பக்திமான்கள் எங்களை தோற்றுப்போனவர்கள் என்று நிரூபிக்க போராடுகிறார்கள். அறிவுடமையை அறியாமை வெற்றிகொள்ள போராடுவது ஒரு சுவாரசியமென்றால், சமயங்களில் அறியாமை வென்றுவிட்டதாக (அவர்கள்) சொல்வது இன்னுமொரு சுவாரஸ்யம். ஒரு முன்னாள் நாத்திகர் பட்டு வேட்டி சட்டை கட்டினால் அது நாத்திகத்தின் வீழ்ச்சியாகவே பார்க்கப்படும். ஆனால் எல்லா மடத்திலிருந்தும் கசமுசா சமாச்சாரங்கள் அம்பலமானாலும் மதம் புனிதமானதாகவே நீடிக்கும். இத்தகைய சவால்களே நாத்திகர்கள் வாழ்வை சுவாரசியமாக்குகின்றன. அதனால்தான் எம்.ஆர்.ராதா வசனத்தை நூறுமுறை கேட்டாலும் சலிக்காத வெகுஜனத்துக்கு ஒருமுறை சாமி படம் பார்ப்பதே எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.

நாத்திகர்கள் வாழ்வு பொறுப்புகள் நிறைந்தது. எந்த முட்டாள்தனத்தை ஒழிக்க விரும்புகிறார்களோ அந்த முட்டாள்தனத்தை பின்பற்றுபவர்களது உரிமைகளுக்கும் அவர்கள்தான் குரல்கொடுத்தாக வேண்டும். அதனால்தான் பெரியார் கடவுளை மற என்று சொன்னதோடு நில்லாமல் மனிதனை நினை என்றும் சொன்னார். இதன் இன்னொரு விளக்கம் கடவுளை மறந்தால்தான் மனிதனைப்பற்றி நினைக்கமுடியும். தஞ்சை பெரியகோயிலின் இடது பக்கம் பன்றியைப்போல உருவமுடைய ஒரு சிலையைக்கொண்ட சன்னதி உண்டு. அதை தோப்புப்கரணம் போட்டபடியே வணங்கிய ஒருவர் “யானை மாதிரியும் இருக்கு பன்னி மாதிரியும் இருக்கே.. என்ன சாமி இது??” என்ற சந்தேகத்தை வாய்விட்டு சொல்லிக்கொண்டிருந்தார். இந்த வாய்ப்பு கடவுளை நம்பாவதவனுக்கு கிடையாது. அவர்கள் பெரியாரையும் தெரிந்துகொண்டாக வேண்டும் புராணங்களையும் தெரிந்துகொண்டாக வேண்டும்.

நாத்திகம் சிக்கனமானது மற்றும் எளிமையானது. விபூதி குங்குமத்தில் தொடங்கி மாட்டுச்சாணி வரை எதுவும் வேண்டியதில்லை. வீடு கட்டினால் ஒரு கழிப்பறைக்கான இடம் கூடுதலாக கிடைக்கும் (பூஜை அறைக்கான குறைந்தபட்ச இடம் அத்தியாவசியமான ஒரு பயன்பாட்டு இடத்துடன் ஒப்பிடப்பட்டிருக்கிறது.. அவ்வளவுதான்). ஒரேயொரு நபர் திருப்பூரிலிருந்து திருப்பதி போய்வரும் செலவைவிட என் ஒருமாத வீட்டு வாடகை குறைவு. குலதெய்வத்துக்கான பூஜை தொடங்கி பேருந்தில் நீட்டப்படும் சாமி உண்டியல்வரையான எல்லா நன்கொடை வேண்டுகோள்களை நிர்தாட்சண்யமாக நிராகரிக்க முடியும். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று நீங்கள் அறியப்பட்டுவிட்டால் சோதிடம், ஜாதகம், பரிகாரம் போன்ற தீயசக்திகள் பற்றி உங்களிடம் பிரச்சாரம் செய்யப்படமாட்டாது. மலச்சிக்கலுக்குக்கூட ஜாதகத்தை ஒருமுறை பார்த்துவிடலாம் என்று சொல்வது பேஷனாகிவிட்ட காலத்தில் இது எத்தனை பெரிய சவுரியம்?

“எல்லாம் சரி, இவ்வளவு பெருமை பேசினாலும் உங்க ஏரியா ஏன் வீக்காயிகிட்டே இருக்கு?” எனும் நக்கல் எனக்கு கேட்காமலில்லை. இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை, பெரியார் காலத்தைவிட இப்போது எங்கள் அணி பலவீனமான நிலையில்தான் இருக்கிறது. எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் மதம் பிரச்சாரம் செய்யப்படுமளவுக்கு கடவுள் மறுப்பு பிரச்சாரம் செய்யப்படுவதில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் பிரதோஷம் என்றால் என்னவென்றே தெரியாத தஞ்சாவூரில் இன்று அந்த நாளில் பெரியகோயில் பக்கமே போக முடியவில்லை. டிவியை திறந்தால் லேகிய வியாபாரிகளைவிட தாயத்து வியாபாரிகளே அதிகம் ஆக்கிரமித்திருக்கிறார்கள். சம்சாரத்தோடு சண்டையிட்டவர்களும் வாழ்வு சலித்த வெளிநாட்டவர்களும் மட்டும் வந்துபோகும் இடமான திருவண்ணாமலையில் ரஜினிகாந்தின் அருணாசலம் படத்துக்குப் பிறகு கிரிவலத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது

ஆனால் இதுகுறித்தெல்லாம் நாம் கவலைகொள்ளத் தேவையில்லை. காரணம் கடவுள் மறுப்பு என்பது கொள்கையல்ல. அது ஒரு உண்மை அவ்வளவே. பூமி சூரியனை சுற்றுகிறது என்பதைப் போல, உலகம் உருண்டை என்பதைப் போல இதுவும் ஒரு கண்டுபிடிப்பு. என்ன, மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றை பொய்யென சொல்லும் கண்டுபிடிப்பு. ஐன்ஸ்டீன் ரிலேட்டிவிட்டி தியரிகூட பலருக்கு புரிவதில்லை, அதற்காக புரிந்தவர்கள் வருந்த முடியுமா? இல்லை பெரும்பான்மையோடு ஐக்கியமாவதற்காக புரிந்துகொண்டதை மறக்க முடியுமா? பல மேம்பட்ட மனிதப் பண்புகளுக்கு இது அடிப்படையானது என்பதால் நாத்திகம் எல்லோருக்கும் பரிந்துரைக்கப்படவேண்டியது என்பது மட்டும்தான் நாம் நினைவில் கொள்ளவேண்டிய செய்தி.

மேலும் மதம் பணக்காரனையே மதிக்கும் என்பதையும் மடங்கள் கிரிமினல்களின் கூடாரம் என்பதையும் நாத்திகர்களை மெனக்கெட வைக்காமல் அவர்களாகவே அம்பலமாக்கிக்கொள்கிறார்கள். மத பாரபட்சமில்லாமல் எல்லா கடவுளரின் ஏஜெண்ட்களும் இதில் அடக்கம். கேள்வி கேட்காத ஞானத்தைக் கொடு என்கிறது பைபிள். இது எல்லா மதங்களின் பொதுக்கருத்தாக இருப்பதால்தான் டி.ஜி.எஸ்.தினகரனும் மேல்மருவத்தூர் பங்காருவும் ஆயிரக்கணக்கான கோடிகளில் புரள்கிறார்கள். பர்தா பெண்ணுக்கு பாதுகாப்பு எனும் அராஜகமான வாதத்தை கைவிட இன்றுவரை மறுக்கிறது இசுலாம். நாய்கள்கூட உலவ முடியும் கோயிலில் மூன்றிலொரு பங்கு மக்களை அனுமதிக்க மறுக்கிறது இந்து மதம். வாழ்வில் உருப்படுவதற்கான மார்க்கமானது யாதொரு மார்கத்தையும் பின்பற்றாதிருப்பதுதான் என்பதை மார்கங்களே இப்போது ஓரளவுக்கு சொல்லித்தருகின்றன. ஆகவே நமக்கு பாதிவேலை மிச்சம்.

பெண்ணடிமைத்தனம், சாதிக்கொடுமை, மூடநம்பிக்கை என சமூகத்தின் சகல நோய்களுக்கும் வேராக கடவுள் நம்பிக்கையே இருந்திருக்கிறது என்ற காரணத்தால்தான் பெரியார் தன் கோடரியை அதன்மீது வீசினார். அதனால்தான் அவரது இயக்கம் மிகவேகமாகவும் மிக வீரியமாகவும் பரவிற்று. திராவிட இயக்கம் நாற்றம் பிடிக்கத்தொடங்கியது ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் சமரசத்துக்குப் பிறகுதான். நாமும் வேரை விட்டுவிட்டு சுலபமானவற்றை வெட்டுவதற்கு முயற்சி செய்கிறோம். சூத்திரன் என்றால் வேசிமகன் என்று பொருள், அந்த அடையாளத்தை துடைத்தெறிவது பெரியாரின் நோக்கமாக இருந்தது. இப்போது அந்த நோக்கத்தின் நிலை எப்படி இருக்கிறது? வேசிமகன் எனும் அடையாளம் பற்றிய கவலை போய் இப்போது பெரிய வேசிமகன் யார் எனும் போட்டியில் திருப்தியடைந்து நிற்கிறது சமூகம். ஆகவே நாத்திகம் தோற்றதாக என்றைக்குமே கருதமுடியாது, உண்மைக்கு போட்டியே கிடையாது எனும்போது தோல்வி எங்கேயிருந்து வரமுடியும்?. ஆனால் நாத்திகர்கள் கடமைதவறிவிட்டார்கள் (அல்லது தவறிவிட்டோம்) என்பதில் வேறு கருத்து இருக்க முடியாது.

பெருமையையும் ஆராய்ச்சியும் போதும். இறைமறுப்பாளர்கள் செய்வதற்கான குறைந்தபட்ச கடமை ஒன்றுண்டு அதுபற்றி பேசிவிடலாம். சென்ற தலைமுறை நாத்திகர்கள் பலர் தங்கள் வீட்டில் புதிய நாத்திகர்களை உருவாக்கத்தவறிவிட்டார்கள். குறைந்தபட்சம் நமது பிள்ளைகளை மட்டுமாவது கடவுளை மறுப்பவர்களாக தயாரிப்பது அவசியம். இதில் சுதந்திரம் பேசுவது பேராபத்தில் முடியும். சைவமா அசைவமா என்பதை வேண்டுமானால் அவர்களே தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் அவர்களை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது நம் கடமை அதனை குழந்தையின் விருப்பத்துக்கு விட்டுவிடுவேம் என்று நியாயம் பேசக்கூடாது . அதுபோலவே இல்லாதவற்றை நம்புவோராக குழந்தைகள் வளர்வதும் ஒருவகையில் ஆரோக்யக்கேடானதுதான்.

(இனி ஆத்திகர்கள் வாசிப்பது நல்லதல்ல… வாசித்து உண்டாகும் விளைவுகளுக்கு நான் பொறுப்புமல்ல)

கண்ணைத் திறந்தாலே பக்தியையும் பஜனையையும் கற்றுத்தர ஓராயிரம் வழிகள் இருக்கின்றன. இந்த நிலையில் நாம் நம் பிள்ளைகளுக்கு நாத்திகத்தை அறிமுகப்படுத்தாததுதான் பாரபட்சமான வளர்ப்பு முறை. சுதந்திரம் என்று சொல்லி ஒன்றை திணித்து ஒன்றை மறைத்து வைத்து வளர்த்து விட்டு பிறகு அவர்கள் விபூதி குங்குமத்தோடு வந்து நின்ற பிறகு நொந்துகொள்வதில் என்ன பிரயோஜனம்?

சில எளிமையான வழிகள் வாயிலாக நம் வாரிசுகளின் பூஜை அறைக்கு போகும் எல்லா வழிகளையும் அடைத்துவிட முடியும். முதலில் கடவுள் மறுப்பை அறிமுகம் செய்யுங்கள். கூர்ந்து கவனித்தால் சாமி கும்பிடுவது எனும் பழக்கம் இரண்டு வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படுகிறது என்பது தெரியும். ஆகவே அதை மறுப்பதும் அப்போதே கற்றுத்தரப்படவேண்டும். குழந்தைகள் ஓரளவு தனது சூழலை கவனிக்கத்துவங்கும்போது இறை மறுப்பின் அவசியம் பற்றி பேசுங்கள் அல்லது அவர்கள் முன்னால் வேறு நபர்களுடன் அது குறித்து பேசுங்கள். அவர்கள் படிக்கும் வயதுக்கு வந்த உடன் நாத்திகம் பற்றிய புத்தகங்களை நீங்கள் வாசியுங்கள் (அவை நீங்கள் ஏற்கனவே வாசித்ததாயினும் சரி அல்லது உங்கள் லெவலுக்கு மிகவும் அடிப்படை புத்தகமாயினும் (basic) சரி).

கடவுள் மறுப்பை பின்பற்றும் வேறு குழந்தைகளை உங்கள் வீட்டு குழந்தைகள் முன்னால் முடியுமளவு பாராட்டுங்கள், சம காலத்தில் கிடைக்கவில்லையானால் போகிறது. உங்கள் பள்ளிப்பிராயத்தில் சந்தித்த நாத்திக மாணவர்களைப் பற்றியாவது பாராட்டி பேசுங்கள் (இது மிக சிறப்பாக வேலை செய்யக்கூடியது, ஒரு தந்தையால் செய்யப்படும் போது இதன் பலன் பிரம்மிக்கத்தக்க அளவில் இருக்கும்). சாமியார்களின் (எல்லா மதத்தையும் சேர்த்துதான்) லீலாவிநோதங்கள் செய்தியாக வரும்போது உங்கள் குழந்தைகள் முன்னாலேயே கண்டியுங்கள் (சாமியார் செய்திகள் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் வந்துகொண்டேயிருக்கும், ஆகவே அதை செய்வது சுலபமே). மூடத்தனமான பழக்கங்களை பற்றியோ அல்லது அதை பின்பற்றுவோரைப்பற்றியோ குறிப்பிடுகையில் ஒரு கடுமையான விமர்சனத்துடன் அதை செய்யுங்கள், எதையாவது மிதித்த மாதிரி முகத்தை சுழித்து வைத்துக்கொண்டு அதை செய்வது இன்னும் ஷேமமானது.

குழந்தைகள் தங்கள் தாயையும் தந்தையையும் பார்த்தே தங்கள் ஆளுமையை வடிவமைத்துக்கொள்கிறார்கள். ஆகவே நீங்கள் நாத்திகர் என்பதை பெருமையுடன் அடிக்கடி குழந்தைகளிடம் சொல்லிக்கொண்டிருங்கள். வீட்டுக்காரம்மா ஒத்துக்கொள்ளாவிட்டாலும் வீட்டில் பெரியார் படத்தை மாட்டுங்கள். மனைவிக்கு விட்டுத்தர வேண்டிய சங்கதிகள் ஏராளமான இருக்கின்றன. அந்த பட்டியலில் நாத்திகத்தை சேர்க்காதீர்கள்.

கடவுளை மறுப்பவர்கள் அதிகம் தர்மசங்கடத்துக்கு உள்ளாவது கருணாநிதி ஆன்மீகவாதியாவதாலோ அல்லது சபரிமலைக்கு கூட்டம் சேர்வதாலோ இல்லை (ஆன்மீகவாதியாகி கருணா நாத்த்கத்துக்கு சேவைதான் செய்திருக்கிறார்… காரணம் அவர் ஆன்மீக உணர்வு அதிகமாக அதிகமாக அவரது ஊழலும் வளர்ந்திருக்கிறது). மாறாக அவர்களது வாரிசுகள் கடவுள் நம்பிக்கையுடையோராக ஆகையில்தான் பெரும் தர்மசங்கடத்துக்கு ஆளாகிறார்கள். ஆகவே அவர்களே கற்றுக்கொள்வார்கள் என்று சோம்பியிராமல் பிள்ளைகளை நாத்திகர்களாக வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்.

அப்படி செய்யும்போது “நீயே ஒருநாள் கோயில் கோயிலா அலையப்போற பாரு” எனும் சாபங்கள் உங்கள் நெருங்கிய வட்டாரங்களில் இருந்தே கேட்கும். அதைக்கேட்டு பயப்படாதீர்கள் அல்லது கோபப்பட்டு சவால்விடாதீர்கள். இன்றைக்கு நான் சரியான, தெளிவான மனநிலையில் இருக்கிறேன், நாளையே மண்டையில் அடிபட்டு நான் பைத்தியமாகிவிடக்கூடும்.. அதற்காக இப்போதே சட்டையை கிழித்துக்கொண்டு அலைய முடியுமா என்று மென்மையாக கேட்டால் அவர்கள் அடங்கிவிடுவார்கள். நாம் செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் அல்ல.. செக்கு எத்தனை மகத்தான கண்டுபிடிப்பு என்ற உண்மையை உணர்ந்தவர்கள் எனும் விவரத்தை அவர்களும் ஒருநாள் புரிந்துகொள்வார்கள்.

Advertisements

“யார் சொன்னது நாங்கள் செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் என்று?” இல் 20 கருத்துகள் உள்ளன

 1. வியாபாரப் பொருள், பணம் இல்லாவிட்டால் பக்தி,கோவில் வேடங்கள் கலைந்து விகடவுள்கள்,கடவுளச்சிகள் பற்றிய அவர்களது குறிப்பையே விளக்கிச் சொல்ல வேண்டும்.ஒவ்வொரு அவதாரமும்,அதன் கதைகளும்,இந்துக் கடவுள்களின் அயோக்கியத் தனங்களும் கட்டாயம் எடுத்துச் சொல்ல வேண்டும்.புத்தரைத் தவிர மற்ற ஏமாற்றுக்காரர்களின் மத நம்பிக்கை மதங்களின் வியாபார நோக்கம் நன்கு எடித்துச் சொல்லப் படவேண்டும்.நாத்திகர்கள் எவ்வள்வு பேர் உலக அறிஞர்கள், விஞ்ஞானிகள்,இன்று நாடுகளின் தலைவர்களாக இருக்கிறார்கள் என்பதையெல்லாம் சொன்னாலே போதும்.

 2. கடவுள்கள்,கடவுளச்சிகள் பற்றிய அவர்களது குறிப்பையே விளக்கிச் சொல்ல வேண்டும்.ஒவ்வொரு அவதாரமும்,அதன் கதைகளும்,இந்துக் கடவுள்களின் அயோக்கியத் தனங்களும் கட்டாயம் எடுத்துச் சொல்ல வேண்டும்.புத்தரைத் தவிர மற்ற ஏமாற்றுக்காரர்களின் மத நம்பிக்கை மதங்களின் வியாபார நோக்கம் நன்கு எடுத்துச் சொல்லப் படவேண்டும்.நாத்திகர்கள் எவ்வள்வு பேர் உலக அறிஞர்கள், விஞ்ஞானிகள்,இன்று நாடுகளின் தலைவர்களாக இருக்கிறார்கள் என்பதையெல்லாம் சொன்னாலே போதும். மதம் இன்று ஒரு வியாபாரம்,சமயத்தில் விபச்சாரம் என்றாகி விட்டது.

 3. கருணாவிடமும் வீரமணியிடத்துமில்லை நாத்திகம்.

  நாத்திகக்த்தை அவர்கள் பரப்புவதுவதுவே அவர்கள் அவப்போது தங்களை நாத்திகர்களாக காட்டிக்”கொல்”வதுவே கூட நாத்திகம் கைக்கொள்வோருக்கான இழுக்கும் கூட.

  கடவுள் மற்றும் மத வழிபாட்டுத் தளங்கள் மிகப்பெரும் வியாபார அமைப்பின் ஒரு பாகமாகவும் அவை அதிகார வர்க்கங்களுடன் கொண்டுள்ள தொடர்பும் கூட அவற்றின் இருப்பிற்கான காரணமாகும்.

  //சைவமா அசைவமா என்பதை வேண்டுமானால் அவர்களே தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் அவர்களை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது நம் கடமை அதனை குழந்தையின் விருப்பத்துக்கு விட்டுவிடுவேம் என்று நியாயம் பேசக்கூடாது . அதுபோலவே இல்லாதவற்றை நம்புவோராக குழந்தைகள் வளர்வதும் ஒருவகையில் ஆரோக்யக்கேடானதுதான்.//

  மிக உண்மையான வரிகள்.

 4. அதே சமயத்தில், நமது ஆஸ்தான ராக்கெட் விஞ்சானிகள் (நம் நாட்டைப் பொறுத்த வரை ராக்கெட் விடுபவர்கள்தான் விஞ்சானிகள். அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொல்லிவிட்டால் மல்லாந்து படுத்து விட்டத்தைப் பார்துக்கொண்டே கனவு காணவெண்டும். அப்துலுக்கு அடுத்தவர் வந்து, பாலிடிக்ஸ் அல்லது ஈகோ காரணமாக, தூங்காதீர்கள் – கோட்டை விட்டுவிடுவீர்கள் என்றால் இரவுகளை சிவராத்திரியஆக்கிக் கொள்ளவேண்டியதுதான்.) ஒவ்வொரு ராக்கெட் ஏவும்போதும் காளஹஸ்தியில் பூஜை போடப்பட்டால் என்னைப் போன்ற உடம்பு வீக்கான நாத்திக வாதிகளுக்கு இரத்த அழுத்தம் அல்லது பல்ஸ் எகிறி விடுகிறதே. இந்த காளஹஸ்தி செய்தியைக் கேட்டபொழுது நான் உண்டு முடித்த பீங்கான் தட்டு எப்படி உடைந்தது என்பதை என்னால் நம்பமுடியவில்லை. – புதிய பாமரன்.

 5. எப்போதும் எதையும் யாரிடமும் திணிக்க கூடாது. அது ஆத்திகம் ஆக இருக்கட்டும் நாத்திகம் ஆக இருக்கட்டும். தங்களது இந்த குறிப்பு திணிப்பது போல இருக்கிறது.

 6. முழுமையாக உடன்படுகிறேன்.

  ஆத்திகம் நமது குழந்தைகளிடம் கல்வி உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் திணிக்கப்படும் நிலையில், நாத்திகத்தையும் முறையாக அறிமுகப்படுத்தப்படல் வேண்டும்

 7. சாமி யார்?
  உண்டு என்பது ஆன்மீகம்!
  இல்லை என்பது நாத்திகம்!
  உண்டா, இல்லையா? என்பதே பகுத்துவம்!

  பக்தர் சொல்லுவது – இந்த பிரபஞ்சத்தை படைத்து, பஞ்சபூதங்களைப் படைத்து, ஜீவராசிகளைப் படைத்து விளையாடுபவன் கடவுளே! கடவுள் சக்தி ரூபம்! சக்தியை உணர முடியுமே தவிர, நேரில் காண முடியாது!கடவுள் பரமாத்மா! நாம் ஜீவாத்மா! மரணத்திற்கு பிறகு ஜீவன், பரமனுடன் கலக்கிறது!

  நாத்திகர் கூற்று – கடவுள் இல்லவே இல்லை! அனைத்தும் கட்டுக்கதை! காலம் காலமாகத் தொடரும் மூடநம்பிக்கைகளின் கதை! அனைத்தையும் படைத்தவன், கடவுள் எனில், கடவுளின் மூலாதாரம்?

  பகுத்தாய்வு!
  அறிவியல் நிருபிக்காதவரை, கடவுளை ஏற்பது சிரமம்!
  கடவுள் ஒருவரா,பலரா? ஒவ்வொரு மதமும் ஏன் கடவுளை விதம் விதமாக சித்தரிக்கிறது? ஒரு மதத்தின் கடவுள், மற்ற மதக் கடவுளுக்குப் பகையா/நட்பா?

  இந்த பிரபஞ்சத்தில், ஒவ்வொரு அணுவும்/உயிரும், பிறவி/வாழ்நிலை/அழிவு எனும் சக்கரத்தில், சுழலுகிறது! இதற்கு யார் காரணம்! ஆன்மீக விதியா? அறிவியல் விதியா?

 8. //இதற்கு யார் காரணம்! ஆன்மீக விதியா? அறிவியல் விதியா?//

  அறிவியல் விதிகளைப்
  புரிந்துகொண்டும் கண்களை மூடிக்கொள்ளும்
  ஆன்மீகத்தின் சதி…!

 9. காளஹஸ்தியில் பூஜை போட்டும் பிரயோஜனமில்லாமல் போய்விட்டது. 125 கோடிக்கு வேட்டு வைத்தது மட்டுமல்லாமல் காளஹஸ்தி வாழ் கடவுளின் ‘இறையாண்மைக்கும்’ வேட்டு வைத்துவிட்டார்கள்.

 10. நானும் தான் எனது 2 மகள்களையும் நாத்திக வாதிகளாக மாற்ற முயன்று எனது மனைவியிடமும், உறவினர்களிடமும் தோற்று விட்டேன்.சரி பேரனையாவது ஆக்கலாம் என்றால் அதற்கும் விடமாட்டார்கள் போலத்தெரிகிறது..மனைவி,மகள்களின் துணைக்காக கோவிலுக்குப்போனால், 3 வயது பேரன் மூலம் என்னையும் நெடுஞ்சான் கிடையாக விழ வைத்து விட்டார்கள்…

 11. அருமையான கட்டுரை தோழர்…
  உறுதியாய் நாத்திகம் பற்றிய முறையான அறிமுகம் ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியம் தேவை….

 12. நாட்டில் எவ்ளோ பேர் வேலை இல்லாமல் இதை படிகிரிங்க …என்னையும் சேர்த்து தான் சொல்றேன். வாழ்கையில் நான் 20 மினுட்ஸ் வேஸ்ட் பண்ணி இதை படிச்சிட்டேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s