காதல்- இதோட முடிச்சுக்குவோம்.


காதல் எனும் தலைப்பிட்டு இதுவரை எழுதப்பட்ட மூன்று கட்டுரைகளின் தொடர்ச்சி. புதிதாக வாசிப்பவர்களுக்கு இந்த இடுகை தொடர்பற்றதாக தோன்றக்கூடும். ஆகவே பழைய இடுகைகளை வாசித்துவிட்டு இதை தொடரவும்.

1. https://villavan.wordpress.com/2010/04/19/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/

2. https://villavan.wordpress.com/2010/07/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/

3. https://villavan.wordpress.com/2010/09/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/

காதல் பற்றிய பாடம் ஏறத்தாழ எல்லா இளைஞர்களுக்கும் சினிமா மற்றும் டி.வி வாயிலாகவே கிடைக்கிறது. எப்படியாவது பெண்களைக் கவர்வதும் அடைவதுமே ஆண்களின் அடையாளமாக விளம்பரங்கள் சித்தரிக்கின்றன. பெண்களுக்கோ கற்பு என்பது எப்படியாயினும் காப்பாற்றப்பட்டேயாக வேண்டியது எனும் செய்தியை டிவியும் திரைப்படங்களும் சொல்லித்தருகின்றன. இருபாலரையும் கிளர்ச்சியடைய வைக்கும் காட்சிகளும் செய்திகளும் இவ்விரு ஊடகங்களில் இருந்து தொடர்ச்சியாக நம்மை வந்தடைகின்றன.

சுருக்கமாக சொல்வதானால் இருபாலருக்கும் பாலுணர்வைத் தூண்டிவிட்டுக்கொண்டே ஆண்களை ஆண்மைமையை நிரூபிக்கும்படியும் பெண்களை கற்பைக் காபந்து செய்துகொள்ளும்படியுமான ஒரு போட்டியை ஏற்படுத்துகின்றன ஊடகங்கள். ஆகவே இங்கு ஆண்கள் இழக்க ஏதுமில்லை, தன் காதலியின் பலவீனமான ஒரு தருணத்துக்கு காத்திருந்தாலோ அல்லது அவர் பலவீனமடையும் ஒரு சூழலை உருவாக்கினாலோ போதும்.. அவரால் இப்போட்டியில் சுலபமாக ஜெயிக்க முடியும்.

பிரச்சனைக்கு உள்ளாகும் பல காதல்களில் இதுதான் நடக்கிறது. தான் தன்னை நிரூபித்ததன் வாயிலாக வென்றுவிட்டதாக ஆண் நினைக்கையில் பெண்ணோ தன் வாழ்வு முழுமையடைந்துவிட்டதாக கருதுகிறார் (இப்படியான பெண்கள் கண்மூடித்தனமாக காதலனை நம்புகிறார்கள்.. ஒரு நண்பராக நீங்கள் எச்சரிக்கை செய்யும்பட்சத்தில் நீங்கள்தான் அவரது வெறுப்புக்குள்ளாவீர்கள்). ஆணின் வெற்றி அவரை இன்னொரு போட்டிக்கான ஆர்வத்தை தூண்ட அதிகம் வாய்ப்பிருக்கிறது ஆனால் தன் வாழ்வு முழுமை பெற்றதாக கருதும் பெண்கள் காதலன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களாகிறார்கள். அப்படித்தான் நம் சமூகத்தின் வளர்ப்பு முறையும் இருக்கிறது.

அடிமைப் பெண்களை உற்பத்தி செய்ய விரும்பும் சமூகமும் ஆசையைத் தூண்டும் மற்றோர் உலகமும் பிரச்சனைக்குரிய காதல்களை இனிவரும் காலங்களில் அதிகரிக்கவே செய்யும். தினத்தந்தியில் வரும் செய்திகள் நம் பார்வையில் படும் தூரத்துக்குள் நடக்கும் சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. ஆகவே இவற்றை நான் எதிர்கொள்ள வேண்டிய தேவையே இருக்காது என்று நம்பி காந்தியின் குரங்குகளைப் போல கேட்காமலோ பார்க்காமலோ இருக்க முடியாது.

கணவன் எத்தகையவனாயினும் அவனுக்குப் பணிவிடை செய்து வாழ்பவளே பத்தினி என்று பாட்டொன்றில் எழுதி வைத்திருக்கிறார் குலசேகர ஆழ்வார். நூற்றாண்டுகள் கடந்தும் இந்த இலக்கணம் மாற்றப்படவே இல்லை. பெண் எப்படி இருக்கவேண்டும் என்று இதுவரை தான் நடித்த எல்லா படங்களிலும் ரஜினிகாந்த் அறிவுரை சொல்லியிருக்கிறார், ஒன்றில்கூட உன் உரிமையை விட்டுக்கொடுக்காதே என்று பெண்களை நோக்கிச் சொன்னதாக எனக்கு நினைவில்லை.

பல பிரபலங்களின் மனைவியைப் பற்றி குறிப்பிடுகையில் கணவனுக்கேற்ற மனைவி எனும்  சொற்றொடர் பயன்படுத்தப்படும். உற்றுநோக்கினால் அவை கணவனை பார்த்துக்கொள்கிற வேலையை மட்டுமே செய்யும் பெண்களுக்கு தரப்படும் பட்டம் என்பது புரியும். நல்ல பெண் எனும் அங்கீகாரம் வீட்டில் எல்லா வேலையையும் பார்க்கின்ற பெண்ணுக்குத் தரப்படுமா அல்லது உயர்பதவியை அடைந்த பெண்ணுக்குத் தரப்படுமா?

சாதாரண நடவடிக்கைகளுக்கே இப்படி கடுமையான விதிமுறைகளைக் கொண்டிருக்கிற சமூகத்தில் காதல்வயப்பட்டு தோல்வியடைந்த பெண்கள் பெரும்பாலானோரால் புறக்கணிக்கப்படுகிறார்கள், முக்கியமாக அவர்களது நண்பர்களால். இதுதான் காதல் தோல்வியால் பாதிக்கப்பட்ட பெண்களின் முதல் பிரச்சினை. இப்படி பாதிக்கப்பட்டவர்களை நாம் புறந்தள்ளுவதால்தான் முன்னிலும் தீவிரமாக தன்னை நிராகரித்த காதலனிடமோ அல்லது இப்படிப்பட்ட பெண்களை குறிவைத்துத் தேடுகிற தொழில்முறை ஏமாற்றுக்காரர்களிடமோ சரணடைகிறார்கள் (என் பார்வையில் இப்படிப்பட்டோருக்கு வரும் இரண்டாம் காதல் முன்னிலும் மோசமானதாக இருக்கிறது – இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே).

பண்பாடு கலாச்சாரமெல்லாம் என்னாவது என்று யோசிக்காமல் இன்றைய வசதி வாய்ப்புக்களில் காதலின் எல்லை எந்த அளவில் வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதை உணர்வதே காதல் பிரச்சனைகளை நாம் கையாள்வதற்கான முதல் பாடம். நாம் இந்த பிரச்சனைகள் குறையவேண்டும் என்று விரும்பினால் முதலில் செய்யவேண்டியது இவர்களை கரிசனத்துடன் அனுகுவதுதான். உறவுச்சிக்கல்களை சமாளிக்க முதல்தேவை அதைப் பகிர்ந்துகொள்ளக் கிடைக்கும் சரியான ஆட்களே.

நம் பாரபட்சமான மற்றும் பொறுப்பற்ற வளர்ப்புமுறைதான் அனேக இல்வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. பெண்களை சுயமாக முடிவெடுக்க முடியாதவர்களாகவும் ஆணை சார்ந்தே வாழ வேண்டியவர்களாகவுமே நாம் வளர்க்கிறோம் (புரியாவிட்டால் மேலே உள்ள பத்தியை மீண்டும் நிதானமாகப் படிக்கவும்). அவர்களது படிப்புகூட அவர்களது திருமணத்தை மனதில்கொண்டே பல வீடுகளில் தீர்மானிக்கப்படுகிறது. ஒருபெண் பியூட்டி பார்லர் போவதற்கு தரப்படும் சுதந்திரம் ஒரு பொதுக்கூட்டத்துக்குப் போவதற்கு நிச்சயம் தரப்படாது.

இப்படி திருமணத்தை இலக்கு வைத்து பெண்பிள்ளைகள் வளர்க்கப்படுவதால்தான் காதல் தோல்வியின்போது இவர்கள் மிகமோசமாக மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். பெண்களுக்கு சம உரிமை கிடைத்துவிட்டது என்ற கருத்து ஒன்று மிகப்பெரிய கபடத்தனமாக இருக்கலால் அல்லது மிகப்பெரிய முட்டாள்தனமானதாக இருக்கலாமேயன்றி யதார்த்தமாக இருக்கமுடியாது. நமக்கு அடுத்த தலைமுறை பெண்களாவது இப்படிப்பட்ட சிக்கல்களில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கவேண்டும் என்று நாம் விரும்பினால் சம அந்தஸ்துடையவர்களாக அவர்களை வளர்ப்பதுதான் ஒரே வழி.

ஆண் குழந்தைகள் வளர்ப்பிலும் பல மாற்றங்கள் அவசியப்படுகிறது. பெண்களை சமமாக நடத்து என்று நாம் அவர்களுக்கு கற்றுத்தராதபட்சத்தில் ஆணாதிக்கத்தைக் சொல்லித்தர இங்கு பல வழிகள் இருக்கின்றன. இவ்விசயத்தில் நாம் எத்தனைதூரம் பலவீனமாயிருக்கிறோம் என்பது நான் சந்திக்கும் புதிய ஊழியர்கள் மூலம் தெரியவருகிறது. புதிதாக படிப்பை முடித்துவிட்டு வரும் இளைஞர்கள்கூட கள்ளக்காதல் விவகாரங்களுக்கு பெண்களுக்குத் தரப்படும் அதீத சுதந்திரமே காரணம் எனக் கருதுகிறார்கள்.

நைட்டி அணிவது கலச்சாரத்துக்கு எதிரானது என பல இளைஞர்கள் சொல்கிறார்கள், இவர்களில் பலர் ஆடைவடிவமைப்பு படித்தவர்கள் (ஆடைவடிவமைப்பில் அடிப்படைப் பாடமே வடிவமைக்கப்படும் ஆடை அணிபவருக்கு சவுகர்யமாக இருக்கவேண்டும் என்பதுதான்). சமீபத்தில் திருமணமான எனது சக ஊழியர் தனது மனைவிக்கு விதித்திருக்கும் கட்டுப்படுகளில் ஒன்று அவர் வெளியே செல்லும்போது கைப்பை வைத்திருக்கக்கூடாது என்பது.

மனைவியை அடிக்கும் அப்பாவுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள் பிற்காலத்தில் தமது மனைவியை அடிக்கும் பழக்கத்தை கையாள்கின்றார்கள் என ஆய்வுகள் சொல்கின்றன. இதில் மறைந்துள்ள பொருள் யாதெனில் மனைவியை கவுரவமாக நடத்துபவர்களில் பிள்ளைகள் தங்கள் மனைவியையும் கவுரவமாக நடத்துவார்கள் என்பதே. ஆகவே நீண்ட நெடிய அறிவுரைகளைக் காட்டிலும் அவற்றை நாம் நம் வாழ்வில் பின்பற்றுவதே சரியான பாடமாக நம் பிள்ளைகளுக்கு இருக்கும்.

காதலில் நேர்மையும் ஒழுக்கமும் இல்லையென்று அங்கலாய்ப்பவர் நீங்கள் என்றால் மன்னிக்கவும், நீங்கள் தவறான இடத்தில் சரியான விசயத்தை தேடுகிறீர்கள். இப்போது எங்கே நேர்மையும் ஒழுக்கமும் வாழ்கிறது? மொத்த சமூகமும் சுயநலமாகவும் நேர்மையில்லாமலும் வாழ்வதை கண்டுகொள்ளாதபோது அந்த உயர் பண்புகள் காதலுக்கு மட்டும் எங்கிருந்து முளைக்கும்? இயல்பில் சுயநலமிக்கவன் காதலியிடம் மட்டும் பரந்த மனமுடையவனாக எப்படி இருக்க முடியும்? எனவே காதலில் ஒழுக்கத்தை வலியுறுத்துவோர் முதலில் சமூக ஒழுக்கம் பற்றித்தான் கவலைப்படவேண்டும்.

பல சமூக மாற்றங்களை காதல் சுலபமாக சாதிப்பதை நான் திருப்பூரில் பார்க்கிறேன். ஐம்பது பவுன் சந்தை மதிப்புடைய என் நண்பர் ஒருவர், ஒரு பவுனுக்கே சிரமப்படும் குடும்ப பின்புலத்தில் இருந்து வந்த பெண்ணை காதலித்து மணந்துகொண்டிருக்கிறார். திருமண செலவின் கடனைக்கூட தம்பதிகள் இருவரும்தான் இப்போது கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதீதமான சாதிப்பற்றுடன் எனக்கு அறிமுகமான மதுரை வட்டார நண்பர் ஒருவர் காதல்வயப்பட்ட பிறகு சாதில எனனங்க இருக்கு… நான் xxxxxருன்னு சொன்னதுனாலயா வேலை கொடுத்தான்? என்று புரட்சிகரமாக பேசுகிறார். ஆகவே நமது சுற்றத்தின் காதலை புறந்தள்ளுவதைக்காட்டிலும் அடுத்த தலைமுறையினரை சரியான துணையை தெரிவு செய்யுமளவு முதிர்ச்சி கொண்டவர்களாக வளர்ப்பது ஓரளவு உருப்படியான விளைவுகளை உண்டாக்கலாம்.

முற்றும்.

Advertisements

“காதல்- இதோட முடிச்சுக்குவோம்.” இல் 6 கருத்துகள் உள்ளன

 1. நீங்கள் சொன்ன கருத்துக்கள் முற்றிலும் உண்மை. இவற்றை பல தடவை நானும் சிந்தித்திருக்கிறேன். ஊடகங்கள் காதல் என்ற வார்த்தையை எப்படி எல்லாம் பயன்படுத்துகிறது இதனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உருவாகும் பிரச்சனைகள் பிழையான எண்ணக்கருக்கள் யதார்த்தமற்ற கோட்பாடுகள்…குறிப்பாக பெண்கள் இப்படியான நிலையில் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டது மிகவும் உண்மையானது. காதல் என்ற வார்த்தைக்கு தவறான அர்த்தம் தொடர்ந்தும் கற்பிக்கப்படுவதை எதிர்க்கும் மனிதர்கள் கூடும்வரை இந்த தவறும் சரியாகுவதில்லை.

 2. ஆணை நிர்பந்திக்கும் காதலோ
  பெண்ணை நிர்பந்திக்கும் காதலோ
  காதலல்ல; அவ்வளவு ஏன் –
  அதே நிர்பந்தங்கள் மணமுடித்து
  வாழ்க்கையிலிருந்தாலும்
  அது மணமுமல்ல; நிறைந்த வாழ்க்கையுமல்ல.
  சமுதாயத்தின் பிற்போக்குகளையும்,
  அவலங்களையும் புரிந்து கொள்பவர்கள்
  யாரையும் நிர்பந்திக்க முடியாது; நிர்பந்திப்பதுமில்லை.
  அப்படி வாழ்ந்தவர்கள் மார்க்ஸ் தம்பதிகள்.
  வறுமை அவர்களை வதக்கியெடுத்தாலும்
  அன்றாடம் பூத்த
  ‘தாஸ் காபிடல்’ புத்தகத்தின் பூக்களை
  ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொண்டனர்.
  கொள்கைக்காக வாழ்ந்த காதலர்கள் அவர்கள்.
  அவர்கள் பெற்றெடுத்த குழந்தைதான் கம்யூனிசம்.
  நிர்பந்தத் தம்பதிகள் பெற்றெடுத்தது :
  1. ஒருதலைப் பட்ச கொள்கையுடைய ‘அரிச்சந்திர புராணம்’.
  2. கடலில் பாலங்கட்டி, மலையைப் பெயர்த்து, பல்லாயிரக்கணக்கான வீரர்கள் போதாதென்று,
  வானரங்களையும் பயன்படுத்தி, எப்படியோ மீட்க்கப்பட்ட சீதையை, கற்பை சோதனையிட (அனுமன் வாரண்டி கொடுத்த பின்னும்)
  தீக்குளிகச் சொன்ன ராமனின் ‘ராமாயணம்’.

  காதலோ, திருமணமோ, அது கடைசிக் காலம் வரை
  தொடர வேண்டுமென்றால் அவர்கள் கொள்கையுடைய காதலர்களாக இருக்கவேண்டும்.
  கொள்கை எதைப் பொறுத்து என்பதில் அவர்களின் வாழ்க்கை நீளும்.
  ஆயுள் நீடிக்கும் காதலுக்கு முற்போக்குச் சிந்தனைகள் அவசியம்!

 3. நல்ல கருத்துகள். உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா ? ஆனா அப்புறமும் இதே போல ஒரு பதிவு போடுப்க அப்போ தான் ஒத்துக்குவேன் 🙂

 4. i read ur 4 essays on love.

  u r thinking that girls r being treated as a slave by males(lover or husband)…

  u don know 1 point…

  girls by their nature like being treated as a slave…girls dont like if they r treated wth equal respect…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s