ஸ்பெக்ட்ரம்- ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகளுக்கும் அப்பால்…


வழக்கமான ஊழல்களைப்போல் இல்லாமல் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் விவகாரம் பெருமளவுக்கான மக்களை சென்றடைந்திருக்கிறது. ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய்தான் இந்திய மக்களால்  உச்சரிக்கப்பட்ட பெரிய தொகையாக இருக்கும்.  அத்தை மகள் பெயரை மறப்பவர்கள்கூட நீரா ராடியா பெயரை மறக்கமாட்டார்கள். ராசா, ராசாத்தி, கனிமொழி என ஆரம்பித்து அவர்கள் வீட்டு முன்னாள் வேலையாட்கள் வரை சுற்றிச் சுழல்கின்றன செய்திகள். இரண்டு மாதங்களாக நாம் யாவரும் ஸ்பெக்ட்ரம் செய்திகளில் நீந்திக்கொண்டிருக்கிறோம். சந்தேகமில்லை அதிகப்படியான செய்திகளைப் பெறுகிறோம், ஆனால் முழுமையான செய்திகள் கிடைக்கிறதா?

ராசா எனும் ஒரு நபரை மையம் கொண்டு மட்டுமே பெரும்பான்மை செய்திகள் வடிவமைக்கப்படுகின்றன. பலன் பெற்றவர்களாக கருணாநிதியின் குடும்பமும், ராசாவும் மற்றும் இவ்விருவருடைய வேலையாட்களும் மட்டுமே மீண்டும் மீண்டும் முன்னிருத்தப்படுகிறார்கள். ஆனால் இந்த பகல்கொள்ளையின் சூத்திரதாரிகளும் மிகப்பெரும் பயனாளிகளும் கிரீடத்துக்கு சேதாரமில்லாமல் உலா வருகிறார்கள். ஒரு ஊழல் என்பது அரசின் பணத்தை யாரோ ஒருவன் அனுபவிப்பதற்காக அரசை சார்ந்த ஒருவன் ஏற்பாடு செய்யும் செயல் என்று சொல்லலாம்.  கஜானாவுக்கு கள்ளச்சாவி போட்ட ராசா ஒருவழியாக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். கஜானாவை சுரண்டிக் கொழுத்த டாடாவும் மற்ற முதலாளிகளும் அரசாங்கத்தால் தனிப்பட்ட முறையில் அழைக்கப்பட்டு நம்பிக்கையூட்டப்படுகிறார்கள். இங்கு நீதி கிடைக்கும் என்று நீங்கள் இன்னமும் எப்படி நம்புகிறீர்கள்?

பெருமுதலாளிகளை காப்பாற்றவும் அவர்களிடம் தேசத்தை கூறுபோட்டு விற்கவும்தான் இங்கு அரசுகள் செயல்படுகிறன எனும் செய்தி திட்டமிட்ட வகையில் மறைக்கப்படுகிறது, 2ஜி விவகாரத்தில் இந்த செய்தி மொத்தமாக அம்பலமாகியிருக்கும்போதும். (இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு) எங்கள் துறையில் தலையிடாதீர்கள் என்று தயாநிதி மன்மோகனுக்கு கடிதமெழுதியிருக்கிறார். ஆக அப்போதே இந்த அலைவரிசை விற்பனையின் பலன்கள் கணக்கிடப்பட்டிருக்க வேண்டும். அதன் பிறகு நடந்த குடும்பத்தகராறால் ராசா அமைச்சராகிறார். அடுத்த ஆட்சியிலும் தொலைதொடர்புத்துறையின் அமைச்சராக ராசாதான் வரவேண்டும் என்று  இந்தியாவின் தொழில்துறை, ஊடகத்துறை ஜாம்பவான்கள் போராடியிருக்கிறார்கள்.

ராடியா டேப்களில் மத்திய அரசின் அமைச்சர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது தெளிவாக அம்பலமாகியிருக்கிறது. ஒவ்வொரு முதலாளியும் தனக்குத்தேவையான நபரை அமைச்சரவையில் உட்காரவைத்திருக்கிறார்கள். ரத்தன் டாடாவும் பெரும்பாடுபட்டு ராசாவை அமைச்சராக்கியிருக்கிறார். இது அவருக்கு தயாநிதியுடனான தனிப்பட்ட கருத்துவேறுபாட்டினால் உண்டானதாக ஒரு செய்தி மட்டும்தான் ஊடகங்களில் வலம் வருகிறது. உண்மையில் டாடா ஸ்கை பிரச்சனைக்குப்பிறகு ரத்தன் டாடா தயாநிதியை சந்தித்து விளக்கமளித்திருக்கிறார். அப்படி கௌரவம் பாராமல் நேரில் விளக்கம் கொடுத்த டாடா எதற்காக நூற்றுக்கணக்கான கோடிகளை இறைத்து ராசாவை அமைச்சராக்க வேண்டும்? காரணம் ஒன்றுதான் ஸ்பெக்ட்ரமை ராசா மூலம் பெறுவது தயாநிதியிடமிருந்து பெறுவதைவிட மலிவானது. டாடாவின் எளிமையான கணக்கு இதுதான் “முதலாளி அமைச்சரானால் பங்கு கேட்பான், வேலைக்காரனை அமைச்சராக்கினால் கூலி மட்டும்தான் கேட்பான்”.

ஏற்கனவே 2ஜி ஒதுக்கீடு முடிந்த பிறகு எதற்காக ராசாவை மீண்டும் கொண்டுவர அவர் மெனக்கெட வேண்டும் என்று  கேட்கமாட்டீர்கள் என நம்புகிறேன். 3ஜி மற்றும் வைமேக்ஸ் என்று தொடர்ந்து ஒரு தொலைத்தொடர்புத் துறை அமைச்சரால் ஆகவேண்டியது அவருக்கு நிறைய இருக்கிறது. ஆக பெருமுதலாளிகள் ஊழலை திட்டமிட்டு சாவகாசமாக செய்வதற்கு இங்கு ஒரு விசாலமான பரப்பு இருக்கிறது. அமைச்சர்களிடம் லாபி செய்து காரியம் சாதித்துக்கொள்ளும் முறை வளர்ச்சியடைந்து அமைச்சரையே தாரகர் மூலம் நியமனம் செய்வதில்போய் நிற்கிறது. அரசுகள் யாரால், யாருக்காக நடத்தப்படுகிறது என்பது வெளிப்படையாக தெரிந்தபின்னும் இன்னமும் இதுபற்றிய விவாதங்கள் ஏன் உருவாகவில்லை?

இங்குதான் ஊடகங்களின் பங்கை நாம் சந்தேகிக்கவேண்டியிருக்கிறது. ராடியாவுக்கு நிகரான தரகுவேலையில் ஈடுபட்ட பர்கா தத் மற்றும் வீர்சங்வி ஆகியோர் இன்னமும் வெட்கமில்லாமல் வேலைபார்த்துக்கொண்டு இருக்கிறார்கள், எப்படி ராசா  ராஜினாமாவுக்கு முன்னால் அசாத்திய திமிரோடு இருந்தாரோ அப்படி. நியாயமாக பார்த்தால் இந்த செய்தியும் மற்ற ஊடகங்களால் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். வியாபார ரீதியாகவும் இந்த செய்தி விற்பனையாகக் கூடியதே. அப்படியிருந்தும் ஒட்டுமொத்த ஊடகங்களும் இதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன. எல்லா ஊடகங்களும் ஏதோ ஒரு வகையில் பர்காவைப்போல தரகுவேலை செய்பவர்களாக இருப்பதால் இப்படி அமைதியாக இருக்கலாம் அல்லது  எல்லா ஊடகங்களுக்கும் படியளப்பவர்கள் கைகாட்டும் நபர்களை மட்டும் விமர்சிக்கும்படிக்கு அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கலாம்.

எனக்குத் தெரிந்தவரை பத்திரிக்கைத்துறையில் சினிமா நிருபர்கள்தான் மிகவும் செழிப்பாக இருப்பார்கள். அரசியல் நிருபர்கள் கொஞ்சம் அய்யோ பாவம்தான் (கருணாவின் உண்ணாவிரத நாடகத்தை கவரேஜ் செய்யப்போன என் அச்சு ஊடக நண்பருக்கு பெட்ரோல் அலவன்சே தரலியாம்), இலக்கிய வட்டாரத்துக்கான ஆட்கள் நிலையோ படுமோசம். கனிமொழி குரூப்பின் கடைக்கண் பார்வை கிடைக்காவிட்டால் அவர்களுக்கு கதிமோட்சமே கிடையாது. ஆனால் பர்கா மற்றும் நக்கீரன் காமராஜை பார்க்கையில் சினிமா செய்தியாளர்கள் சம்பாத்தியம் எல்லாம் பிச்சைக்காசு போலிருக்கிறது.

இதில் சில சுவாரசியங்களை கவனியுங்கள். விரும்பிய ஆளை அமைச்சராக்கவேண்டும் என்று லாபி செய்து பிரதமரின் உரிமையில் தலையிடுகிறார் டாடா. பிரதமரின் உரிமையில் தலையிடும் அவரது உரிமையை ஒட்டுக்கேட்டால் மட்டும் தனது தனிமனிதஉரிமை பாதிக்கப்பட்டதாக கோர்ட்டுக்கு போகிறார். தொலைபேசி உரையாடலை பதிவு செய்வதில் ஒரு நியாயத்தை கடைபிடிக்க வேண்டும் என்று ஒரு ராத்திரி முழுக்க நிகழ்ச்சி நடத்தி சொந்த சோகத்தில் புலம்புகிறார் பர்கா (அப்போது டாடா மனம் கோணாமல் உரையாடல் பதிவு வெளியிடப்படவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை சொன்னது- தனிமனிதர்களை காயப்படுத்தாமல் வெளியிடுங்கள் என்று நாசூக்கான வரிகளில்) அப்போது மட்டும் டாடாவின் படம் பல முறை காட்டப்பட்டது. ஆனால் ராடியாவுடன் பேச்சு நடத்திய ராசாவை வட்டம் போட்டு காட்டும் டைம்ஸ் நவ், ராடியாவின் முதலாளிகளான டாடாவையும் அம்பானியையும் பேரைக்கூட சொல்லாமல் வெறுமனே கார்ப்பரேட்ஸ் என்று குறிப்பிடுகிறது. சைக்கிளில் துணி விற்ற சாதிக்பாட்சா எப்படி முதலாளியானார் என்று புலனாய்வு செய்த தமிழக பத்திரிக்கைகள், நாலைந்து ஜோடி சட்டை பேண்டுடன் சென்னை வந்த நக்கீரன் காமராஜ்  நூற்றுக்கணக்கான கோடிக்கு எப்படி அதிபதியானார் என்று ஆராய மறுக்கின்றன.

விதிவிலக்கில்லாமல் எல்லா ஊடகங்களுமே ஏதோ ஒரு கோணத்தை மறைத்தே செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆக எல்லா ஊடகங்களும் இப்படியான ஒரு அரசியல் மத்தியஸ்த வேலையை செய்கின்றன. ஒருவரை குற்றம்சாட்டினால் இன்னொருவர் லட்சனம் அம்பலமாகிவிடுமாகையால் ஒரு பயத்துடனே குற்றத்தில் தொடர்புடைய மற்ற பத்திரிக்கையாளர்களை அனுகுகிறார்கள் என்றே கருதுகிறேன். இதில் தமிழக ஊடகங்கள் நிலை படுமோசமாக இருக்கின்றது.  ஸ்பெக்ட்ரமை பற்றி அதிகமாக பேசியது ஜெயா டிவி(காங்கிரசுக்கு சிக்கல்வராத அளவுக்கு) அதற்குப் பிறகு கலைஞர் டிவி (ஜெயா மட்டும் யோக்கியமா??- இதுதான் ஊழலுக்கான பதிலாம்).  மற்ற டிவிகாரர்கள் மிக மேலோட்டமாகவே இந்த பிரச்சனையை கையாண்டிருக்கிறார்கள். ஊடகங்களில் கருணாநிதி குடும்பத்தின் ஆதிக்கம் தெளிவாக தெரிகிறது. நக்கீரன் காமராஜ், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துடன் நேரடியாக தொடர்புடையவர். அதுபற்றிய செய்தி கிசுகிசுவாகக் கூட வரவில்லை. தமிழ்நாட்டில் ஜனநாயகத்தின் நான்காம் தூண் கருணா குடும்பத்தின் தொழுவத்தில் நடப்பட்டிருக்கிறது இப்போது.

பாஜக ஆட்சியின் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாய் என்று  சொல்கிறார் தொலைதொடர்புத் துறை அமைச்சர், அதுவும் அனுமானிக்கப்பட்ட மதிப்பீடல்ல கணக்கிடப்பட்ட இழப்பு என்று அழுத்தமாக. சொல்வது ராசா மாதிரி ரெகமண்டேஷன் அமைச்சரோ அல்லது அழகிரி மாதிரி இனிஷியலால் அமைச்சரானவரோ அல்ல. அறிவார்ந்த காங்கிரஸ்காரராக சொல்லப்படும் கபில் சிபல். சொல்வது யாரிடம்? ஐம்பது ஆண்டுகள் திராவிட பென்ச்சை தேய்த்த கருணாவால்கூட மத்திய அரசில் சாதிக்க முடியாததை சாதிக்கும் வல்லமை கொண்ட பர்காவிடம். எங்கே சொல்கிறார்? சில நாட்களில் ஒருகோடி பேரிடம் கையெழுத்தை வாங்கும் அசுரபலம் கொண்ட ஊடகமான என்.டி.டி.வியில். அதன் பிறகு வேறொன்றையும் சொல்கிறார் “ஆனால் இதற்காக தாம் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை.. அவர்கள் (பாஜக) தெரிந்துகொள்வதற்காக இதை சொல்கிறேன்”.

இந்த பணம் இவரது ஆத்தா அப்பன் சம்பாத்தியமா அல்லது அண்டோனியோ மெய்னோ கொண்டுவந்த சீதனமா? இவர் யார் அதை விசாரிக்க மாட்டோம் என்று சொல்வதற்கு?. யார் வந்தாலும் ஊழல் இருக்கும்.. உன் முறை வரும் வரை காத்திரு என பாஜகவுக்கு சொல்கிறார் கபில். நமக்குத்தான் அது புரிந்த மாதிரி தெரியவில்லை.

பத்தாயிரம் ரூபாய் இரும்புத்தாது வெறும் இருபத்தேழு ரூபாய் என டாடாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது இந்திய அரசால். உபியில் மூன்று போகம் விளையக்கூடிய பத்தாயிரம் ஏக்கர் நிலம் முகேஷ் அம்பானிக்கு இனாமாக தரப்பட்டது முலாயம் சிங் அரசால். எண்ணெய் கிணறுகள் அடிமாட்டு விலைக்கு ரிலையன்சுக்கு குத்தகைக்கு தரப்பட்டது நம் நாட்டில்தான் (அனேகமாக சந்திரசேகர் ஆட்சியில்). இப்போதும் நூறு இடங்களில் ஓஎன்ஜிசி தேடி கண்டுபிடிக்கும் பெட்ரோலிய வளத்தை  அம்பானி கம்பெனி ஒருசில இடங்களில் தேடியே கண்டுபிடிக்கிறது.. தேடுதலுக்கு லைசென்ஸ் பெறப்படும் தொழில்நேக்கு அப்படி. மக்களுக்குத் தெரியாமல்  இந்தியாவின் எந்த சொத்தையும் அரசு யாருக்கு வேண்டுமானாலும் எந்த விலைக்கு வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளலாம், எந்த ஒரு ஒப்பந்தத்தையும் போட்டுக்கொள்ளலாம், இதுதான் இன்றைய இந்திய ஜனநாயகத்தின் லட்சனம்.

மேலே சொல்லப்பட்டவை எல்லாம் புதிய பொருளாதார கொள்கை மூலம் மன்மோகனால் எப்போதோ சட்டபூர்வமாக்கப்பட்டுவிட்டது.  கடந்த இருபது ஆண்டுகளில் பெருநிறுவனங்கள் சம்பாதித்த லாபத்தின் பெரும்பகுதி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு போலவே அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி பெறப்பட்டவையே. அதனால்தான் இது வெறும் இழப்புதான் ஊழல் அல்ல என்று கருணாநிதி பேசுகிறார். நான் சட்டப்படிதான் நடந்துகொண்டேன் என்று ராசா தைரியமாக சொல்கிறார். வெறும் இருநூற்று சொச்சம் கோடிரூபாய் அபராதத்தோடு லைசென்ஸ் பெற்ற கம்பெனிகளை மன்னித்தருள கபில் சிபல் ஏற்பாடுகளைத் துவங்கிவிட்டார். ஸ்பெக்ட்ரம் அலை அடங்க ஆரம்பித்திருக்கும் இந்த வேளையில் பிரணாப் முகர்ஜி, ராசா குற்றமற்றவர் என்று பொருள்படும்படி பேச ஆரம்பித்துவிட்டார். ஆகவே அரசுக்கு ஏற்பட்ட இழப்புக்காக யாரும் தண்டிக்கப்படப் போவதில்லை, யாரிடமிருந்தும் ஒரு பழைய ஜட்டிகூட பறிமுதல் செய்யப்படப்போவதில்லை. ஊழலை முறைப்படி செய்யவில்லை எனும் ஒரு குற்றச்சாட்டு மட்டும்தான் ராசா மீது எஞ்சிநிற்கப்போகிறது.  நம்புங்கள்.. இது ஊழல் நிறைந்த அரசமைப்பு அல்ல, புதிய பொருளாதாரக் கொள்கை என பெயரால் ஊழலுக்காவே வடிவமைக்கப்பட்ட அரசமைப்பு. இதிலிருந்து உதிர்ந்த ஒரேயொரு மயிர்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல்.

உச்ச நீதிமன்றம் தலையிட்டுவிட்டது ஆகவே பங்குனி மாதத்துக்குள் நல்ல தீர்ப்பு வந்துவிடும் என்று நம்புவோர்களுக்கு பழிப்பு காட்டவே கே.ஜி. பாலகிருஷ்ணன் அவதரித்திருக்கிறார். பினாயக் சென் மீதான வழக்கில், சிதம்பரம் மனதில் நினைத்ததை தீர்ப்பாக எழுதியிருக்கிறார் நீதிபதி வர்மா. ரத்த சாட்சியாக சிவபாலன் இருக்கையிலேயே என்.கே.கே.பி ராஜா எந்த சட்டப்படி விடுவிக்கப்படுகிறாரோ, அதே சட்டப்படியே டாக்டர் சென் ஆயுள்தண்டனைக்கு உள்ளாகிறார். அலைக்கற்றை வழக்கில், இந்த நீதித்துறை நம் ஆயுள் முடிவதற்குள் ஒருவேளை தீர்ப்பு வழங்கலாம், ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து அது நியாயமானதாகவும் அமையலாம். அதிலும்கூட ராசாவும் அவரது சில அல்லக்கைகளும் மட்டும்தான் தண்டிக்கப்பட முடியும். கிடைத்திருக்கும் கொள்ளை பணத்துடன் ஒப்பிடையில் இந்த ரிஸ்க் மிக அற்பமானது என்று ராசாவுக்கும் தெரியும்.

மற்றபடி இந்தியாவை உண்மையில் ஆளும் முதலாளிகளுடைய சாம்ராஜ்யத்தில் இருந்து ஒரு செங்கல்லைக்கூட இந்த வழக்கினால் பெயர்க்க முடியாது. அந்த சக்தி மக்களிடம் மட்டும்தான் இருக்கிறது.

Advertisements

“ஸ்பெக்ட்ரம்- ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகளுக்கும் அப்பால்…” இல் 15 கருத்துகள் உள்ளன

 1. மிக பிரமாதமான் கட்டுரை …. ஆனால் சொரணையற்ற ஊழலில் தடித்துப்போன,இலவசங்களில் உடம்பை வளர்த்துகொண்டிருக்கிற.. தமிழ் சமுகத்துக்கும்,இந்தியதலைமைக்கும் இது உறைக்கவே உறைக்காது.நான் இந்திய சமுகத்தில் வாழ்வதற்கே அருவருப்படைகிறேன். முக்கியமாக ஈழப்பிரச்சினையில்…..வேறு வழியில்லை.. நம் வீட்டருகே கழிவு நீர் கால்வாய் உடைத்து நாறும் போது சகித்துகொண்டு வாழவில்லையா அது போல் தான் வாழ்க்கை கடந்துகொண்டிருக்கிறது.

 2. இந்த மக்களை காந்தி எப்படி விடுதலைக்கு தயார்ப்படுத்தினார் என்பது ஆச்சரியம்.

 3. when ever i think about our deeply rooted corruption in our political and social system as well as eelam massacre i end up with bp and huge stress.
  as sugessted by savukku we have 4 ways in our hand:
  1. dont think about all issues enjoy free schemes given by govt. (80% of our population belong to this category)
  2. try to be a partner of corruption as well as exploit our country
  3.commit sucide.
  4.fight aganist all evils (less than 1% )
  apart from above the options one more point i would like to add
  5.get job in countries where freedom exsists.
  expecting u r reply
  thank u
  vino

 4. மற்ற தொழில் அதிபர்களிடமிருந்து டாடாக்கள் மாறுபட்டவர்கள்; லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதித்துக் கொள்ள மாட்டார்கள்; அரசியல்வாதிகளை அணுகி, தொழிற் சலுகை பெற முயற்சிக்க மாட்டார்கள்; அவர்கள் பெரிய மனிதர்கள்’ என்ற எண்ணம் கொண்டிருந்தவர்களிடையே நான் ஒருவன். இப்போது அந்த எண்ணம், பொடிப் பொடியாகி விட்டது. நிரா ராடியா விவகாரம் எதைச் சாதித்ததோ இல்லையோ, டாடாவின் ‘பெயர்ச் சரிவை’ நன்றாகவே சாதித்திருக்கிறது.
  நேர்மையான அலசல்.உங்கள் சில கருத்துகளுடன் வேறுபாடு இருந்தாலும் ,ஒருசார்பற்ற நேர்மையான எழுதுக்காகவே தங்கள் தளத்தை தினமும் வந்து விரும்பி வாசிக்கிறேன்.
  வாழ்த்துக்கள்,நன்றி

 5. //5.get job in countries where freedom exsists.//

  உங்களது யோசனையின் நியாய தர்மகளெல்லாம் பிறகு விவாதிக்கலாம். ஆனால் ஈழப்படுகொலைகள் பற்றி அதிகமாக கவலையும் பதட்டமும் கொண்ட நீங்கள் எப்படி சுதந்திரமான ஒரு நாட்டுக்கு போனால் மட்டும் நிம்மதியாக இருக்க முடியும்? செய்திகளை நீங்கள் தவிர்க்கவே முடியாதே.. மேலும் இந்த வாழ்வியல் துன்பங்களும் பெருநிறுவன கொள்ளைக்கும் விதிவிலக்கான நாடு என்றொன்று இந்த உலகில் எங்கிருக்கிறது?

  இந்த சூழல் பற்றி நாம் சலிப்படைய வேண்டாம். இதைவிட மோசமான சுரண்டலையெல்லாம் மக்கள் வெற்றிகரமாக முறியடித்த வரலாறு இருக்கிறது.

  (பதில் போதாதென்னாறால் தெரியப்படுத்தவும், சரியான பதிலை வைத்திருக்கும் பெரிய மனிதர்களிடம் விவாதித்துவிட்டு உங்களுக்கு சொல்கிறேன்.

  தோழமையுடன்,
  வில்லவன்.

 6. உள்நோக்கத்தைப் பொருத்தவரை இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் பாரிய வேறுபாடுகள் இல்லை (இலங்கை விவகாரத்தில்). இரண்டு நாடுகளுமே இலங்கைப் போருக்கு ஏராளமான உதவிகள் செய்தவைதான்.

  எப்படி சர்வாதிகாரத்தை ஹிட்லரும் இடி அமீனும் வெவ்வேறு வகைகளில் செயல்படுத்தினார்களோ அப்படித்தான் இந்தியாவும் இங்கிலாந்தும் தங்களுக்கே உரித்தான வழிமுறைகளில் மக்கள் உரிமைகளை நசுக்குகின்றன. சோனியாவுக்கு மற்றும் இந்திய அரசுக்கு உள்ள தனிப்பட்ட தேவைகள் ராஜபக்சவுக்கு ராஜமரியாதை தரவைக்கிறது. அப்படியான தேவை இங்கிலாந்துக்கு இப்போது இல்லை. ஆகவே அவரது லண்டன் வருகையை கண்டிக்கும் நிகழ்வு மூலம் தன் ஜனநாயக முகத்தை காட்டிக்கொள்ள இந்த சந்தர்பத்தை இங்கிலாந்து பயன்படுத்திக்கொண்டது அவ்வளவுதான்.

  இன்றைய சூழலில் மக்களுக்கான சுதந்திரத்தைப் பொருத்தவரை எல்லா நாடுகளின் சிந்தனையும் ஒன்றே, (சிற்சில வேறுபாடுகளோடு). வேறுமாதிரி சொன்னால் கொல்வதே நோக்கம் என்றாலும் அதை செய்யும் வழி ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.

  ஆகவே தப்பித்துப்போக சிறந்த நாடென்று ஒன்று இப்போதைக்கு இல்லை என்றே நான் கருதுகிறேன்.

 7. என்னமா எழுதி இருக்கிறீர்கள்! அடடா! எல்லாம் அக்மார்க் உண்மை!

  காரணம் ஒன்றுதான் ஸ்பெக்ட்ரமை ராசா மூலம் பெறுவது தயாநிதியிடமிருந்து பெறுவதைவிட மலிவானது. டாடாவின் எளிமையான கணக்கு இதுதான் “முதலாளி அமைச்சரானால் பங்கு கேட்பான், வேலைக்காரனை அமைச்சராக்கினால் கூலி மட்டும்தான் கேட்பான்”..இதில் சில சுவாரசியங்களை கவனியுங்கள். விரும்பிய ஆளை அமைச்சராக்கவேண்டும் என்று லாபி செய்து பிரதமரின் உரிமையில் தலையிடுகிறார் டாடா. பிரதமரின் உரிமையில் தலையிடும் அவரது உரிமையை ஒட்டுக்கேட்டால் மட்டும் தனது தனிமனிதஉரிமை பாதிக்கப்பட்டதாக கோர்ட்டுக்கு போகிறார்..சைக்கிளில் துணி விற்ற சாதிக்பாட்சா எப்படி முதலாளியானார் என்று புலனாய்வு செய்த தமிழக பத்திரிக்கைகள், நாலைந்து ஜோடி சட்டை பேண்டுடன் சென்னை வந்த நக்கீரன் காமராஜ் நூற்றுக்கணக்கான கோடிக்கு எப்படி அதிபதியானார் என்று ஆராய மறுக்கின்றன…ஊடகங்களில் கருணாநிதி குடும்பத்தின் ஆதிக்கம் தெளிவாக தெரிகிறது. நக்கீரன் காமராஜ், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துடன் நேரடியாக தொடர்புடையவர். அதுபற்றிய செய்தி கிசுகிசுவாகக் கூட வரவில்லை. தமிழ்நாட்டில் ஜனநாயகத்தின் நான்காம் தூண் கருணா குடும்பத்தின் தொழுவத்தில் நடப்பட்டிருக்கிறது இப்போது..ஐம்பது ஆண்டுகள் திராவிட பென்ச்சை தேய்த்த கருணாவால்கூட…பத்தாயிரம் ரூபாய் இரும்புத்தாது வெறும் இருபத்தேழு ரூபாய் என டாடாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது இந்திய அரசால்…யாரிடமிருந்தும் ஒரு பழைய ஜட்டிகூட பறிமுதல் செய்யப்படப்போவதில்லை. ஊழலை முறைப்படி செய்யவில்லை எனும் ஒரு குற்றச்சாட்டு மட்டும்தான் ராசா மீது எஞ்சிநிற்கப்போகிறது. நம்புங்கள்.. இது ஊழல் நிறைந்த அரசமைப்பு அல்ல, புதிய பொருளாதாரக் கொள்கை என பெயரால் ஊழலுக்காவே வடிவமைக்கப்பட்ட அரசமைப்பு. இதிலிருந்து உதிர்ந்த ஒரேயொரு மயிர்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல்…”

  தொடர்ந்து இது மாதிரி எழுதுங்கள்-விடியும் போது விடியட்டும்!

 8. எனக்குத் தெரிந்தவரை (நான் படித்தவரை) காந்தி இந்திய மக்கள் விரைவில் சுதந்திரம் வாங்கிவிடாமல் இருக்கத்தான் தயார்படுத்தினார்.

  (வெள்ளையன் வேண்டுகோளின்படி) 1946 ல் நடந்த காங்கிரஸ் ஆட்சியில்தான் ஆங்கிலேயனைவிட மோசமான வகையில் மக்கள்தாக்குதலுக்கு ஆளானார்கள். அப்போது நடந்த பம்பாய் கப்பற்படை வீரர்கள் வேலைநிறுத்தத்தை சீர்குலைக்க காங்கிரஸ் தன் தொண்டர்களை அனுப்பியது ஒரு முக்கியமான உதாரணம்.

 9. “கூட்டில் கூடிநின்று
  கூவிப்பிதற்றலின்றி
  நாட்டத்தில் கொள்ளாரடி
  நாளில் மறப்பாரடி”

  என்ற பாரதியின் வரிகள் தான்
  என் நினைவிற்கு வருகிறது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s