விலைவாசி- பறிகொடுத்தோரின் மௌனம், திருடர்களின் பரிகாரக்கூட்டம்


உணவுதானியங்கள் மற்றும் சமையல் எண்ணைகளின் விலையெல்லாம் கணிசமாக உயர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. வெங்காயம் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டுக்கான காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தும் இரண்டு மாதங்களாகிவிட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின்போது போட்ட முக்காட்டை இன்றுவரை விலக்காதிருக்கும் மன்மோகன் திடீரென விழித்துக்கொண்டு ஒரு அவசர கூட்டத்தை கூட்டியிருக்கிறார். இதென்ன ஜெயதாபூர் அணுமின் நிலையமா அல்லது அமெரிக்க ஒப்பந்தமா உடனடியாக நடவடிக்கை எடுக்க! சாதாரண மக்களை பாதிக்கும் பிரச்சனைக்கு இவ்வளவு விரைவாக கூட்டப்படுவதனால் மன்மோகனைப் பொருத்தவரை இது நிச்சயம் அவசரக்கூட்டமே.

ஒருவேளை இந்த விலைவாசி உயர்வு அம்பானியின் சம்சாரத்தையோ அல்லது பிர்லா வீட்டுப்பெண்களையோ மனம் கோணச்செய்திருக்கலாம் அதனாலேயே கருணையே வடிவான நம் பிரதமர் அவசரகூட்டம் கூட்டியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. கூட்டத்தில் மாண்டெக் சிங் அலுவாலியா கலந்துகொள்கிறார், இவர் விலைவாசி ஏறும் ஏறியபடியே இறங்கும், எதுக்கும் வியாழக்கிழமை ஆஞ்சனேயருக்கு வடமாலை சாத்திப்பாருங்களேன் என்கிற ரீதியில் பதில் சொல்பவர். சரத் பவாரும் கலந்துகொள்கிறார், இவரோ விலைவாசிக்கு ஏறினதுக்கு என்னை என்ன செய்ய சொல்றீங்க என்று எரிந்து விழுபவர். இவர்களை வைத்துக்கொண்டு விலைவாசியை குறைப்பதைப் பற்றி விவாதிக்கப்போகிறார் பிரதமர். பேசாமல் பிரச்சனையை கபில் சிபலிடம் ஒப்படைத்திருந்தால் விலைவாசி உயரவேயில்லை, மளிகைக் கடை பில்லில் சில மனிதத் தவறுகள் நிகழ்ந்திருக்கலாம் என்று சொல்லி சமாளித்திருப்பார்.

விவாதங்களைப் பார்க்கும்போது எந்த கட்சியும் விலைவாசி குறையவேண்டும் என விரும்பாதது புரியும். மைனாரிட்டி திமுக அரசால் வெங்காய விலை ஏற்றம் என்கிறது ஜெயா டிவி. ஜெயலலிதா வெங்காயத்தை பார்த்திருப்பாரா என்பதே சந்தேகம், அவருக்கு வெங்காயம் விளைவது பற்றியும் அவை பல இடைத்தரகர்களை கடந்து நுகர்பவனை அடைவதையும் பற்றி எப்படித் தெரியும்! அவரிடம் அனுமதி பெற்றே எந்த செய்தியும் ஒளிபரப்பாகும் ஜெயா டிவியில் அப்படித்தான் செய்தி போட முடியும். ஜெயா டிவியில் மட்டும் அரசியல் பாடம் கற்கும் அதிமுக தொண்டர்களுக்கும் அதற்குமேல் தெரிந்திருக்க நியாயமில்லை.

காவி அணிந்த காங்கிரசான பாஜக, ஆன்லைன் வணிகத்தைப் பற்றி மூச்சுகூட விடாமல் விலைவாசி பற்றி எல்லா சேனல்களிலும் புலம்புகிறது, எங்கே விலை குறைந்துவிடுமோ எனும் அச்சமும் அவர்களிடம் இருப்பதை மறுப்பதற்கில்லை. கம்யூனிஸ்டுக்கள் தயவில் அரசு நடந்தபோதே அவர்களது குரல் மதிக்கப்பட்டதில்லை, இப்போதோ சொல்லவே வேண்டாம். விலைவாசி உயர்வுக்கு மழை அதிகமாக பெய்ததே காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை இன்று கலைஞர் டிவியில் சொல்லியிருக்கிறார் சுப.வீ. காங்கிரசுக்கு கிடைத்த கபில் சிபலைப் போல கழகத்துக்கு கிடைத்த முத்துதான் வீரபாண்டியன். குடும்ப கோட்டா போக ஏதாவது சட்டமன்ற உறுப்பினர் சீட்டு மிச்சமிருந்தால் பெரியவர் இவரை பரிசீலனை செய்யலாம்.

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் வருவதால் ஏதாவது நடவடிக்கை எடுப்பதுபோல பாவனை செய்தாகவேண்டிய கட்டாயம் மன்மோகனுக்கு. குடிசையில் சப்பாத்தி சாப்பிட்டு லண்டனில் பிறந்தநாள் கொண்டாடும் ராகுல் காந்தியின் ஃபார்முலா பீகாரில் புட்டுக்கொண்ட நெருக்கடிவேறு காங். க்கு இருக்கிறது. காலாகாலத்துல இந்த நாட்ட கார்பரேட்ஸ் கையில புடிச்சு குடுக்குறதுவரைக்கும் வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டுல்ல இருக்கவேண்டியிருக்கு என்று அங்கலாய்த்தபடியே பிரதமர் கூட்டம் கூட்டிவிட்டார். இதனால் விலைவாசி குறைந்துவிடுமா என்ன? சர்கரை ஏற்றுமதியை அனுமதிக்கக் கூடாது என்று சொன்ன ப.சிதம்பரத்தை கடுமையாக எதிர்த்தாராம் சரத் பவார். பாய்ந்து சீனாதானாவின் குரல்வளையை அவர் கடிக்கும் முன்னர் மன்மோகன் தலையிட்டு காப்பாற்றியிருக்கிறார் என்று தகவல். பாவம், சிதம்பரத்துக்கு சர்க்கரை ஏற்றுமதியால் எந்த லாபமும் இல்லை போலிருக்கிறது. விலைவாசி உயர்வுக்கு எதிரான சிறு நடவடிக்கையும் யாரோ ஒரு அமைச்சரை பாதிக்கும் என்பதுதான் நிதர்சனம்.

விலைவாசி உயர்வை தடுப்பது அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்திருக்கும் பெருநிறுவனங்களை ஒழிப்பதிலும், இடைத்தரகர்களை ஒழிப்பதிலும்தான் இருக்கிறது. ஆனால் இந்த இரண்டுதரப்பின் வருமானத்தையே தேசத்தின் வளர்ச்சி என்று மனதார நம்புபவர் நம் பிரதமர். பதவியைகூட சோனியாவிடம் யாசகம் வாங்கி வகிப்பாரேயன்றி மக்களை சந்தித்து பெற அவர் விரும்பியதில்லை. விவசாயத்தையே நம்பிக்கொண்டு இருப்பதை விட்டுவிட்டு மக்கள் தொழில் தொடங்க முன்வரவேண்டும் என்று தான் மனம் விட்டு பேசிய பத்திரிக்கையாளர் சந்திப்பொன்றில் சொல்லியிருக்கிறார் மன்மோகன்.  ஒருகோடி பேர் பட்டினியால் இறந்தாலும் அதனால் இந்துஸ்தான் லீவருக்கு ஏற்படும் நட்டம் பற்றித்தான் அவர் கவலைப்படுவாரேயன்றி இந்தியாவுக்கு உண்டாகும் இழப்பைப் பற்றி கவலைப்படமாட்டார். உலக வங்கியின் முன்னாள் அதிகாரிக்கும் இன்னாள் ஏஜெண்டுக்கும் தரப்படும் பயிற்சி அப்படித்தான் இருக்கும்.

வியாபாரிகளின் கிடங்குகளில் சோதனை நடத்துவது மற்றும் பொதுவினியோகத்தின் மூலம் ஏழைகளுக்கு காய்கறி வழங்கப்போகிறோம் என்பதெல்லாம் சிரங்கை சொறிந்துவிடும் வேலைகள், தற்காலிகமாக மட்டும் ஆறுதல் தருபவை. தேசத்தை ஆள்வதே பெருவியாபாரிகளும் தரகர்களும்தான் எனும்போது அவர்கள்மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்பதெல்லாம் மக்களை வைத்து செய்யப்படும் காமெடியே. பாஜக ஆட்சியின்போது மும்பை மற்றும் குஜராத்தில் இருக்கும் சில பங்குசந்தை தரகர்களிடம் வருமான வரி சோதனைகள் நடந்தது. மறுநாளே பங்கு சந்தையை வீழ்ச்சிகாண வைத்து அரசுக்கு தங்கள் பலத்தை காட்டினார்கள் அவர்கள். பொதுவிணியோகம் சுரண்ட மற்றொரு வாய்ப்பு. அமைச்சர்கள் மட்டத்திலான சுரண்டலுக்கு ஊகவணிகம் வழவகுக்கும் என்றால் மாவட்ட செயலர் லெவலுக்கு பொதுவிணியோக திட்டம் பயன்படும். மானியம் எனும் பெயரில் அரசின் பணம் மறைமுகமாக முதலாளிகளுக்கே போகும். சுற்றிவளைத்து அந்த செலவும் நம் தலையில்தான் விடியும்.

ஆகவே விலைவாசியை அரசு குறைத்துவிடுமென்றோ அல்லது அதுவாகவோ குறையுமென்றோ நம்புவதற்கு யாதொரு முகாந்திரமும் இல்லை. கட்டுப்பாடற்ற லாபவெறியும் தினசரி வெளியாகும் ஊழல்களும் விலைவாசியை குறையவிடாது. அது குறைவது நாம் விலை உயர்வு குறித்து அறிவுடையோராவதிலும் கோபமுடையோராவதிலும்தான் இருக்கிறது.

திராவிட இயக்கம் துவக்க காலத்தில் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. அறிவை தேடிப்பெறும் ஆர்வத்தை அவ்வியக்கம் மாநிலமெங்கும் வளர்த்தெடுத்தது. எழுபதுகளின் பிற்பகுதியில் பெரும்பாலான இடதுசாரி இயக்க உறுப்பினர்கள் பட்டதாரிகள் (அப்போது இடதுசாரி உறுப்பினராயிருக்க அரசியலை தெரிந்துகொள்வதும் அதை விவாதித்து மேம்படுத்துவதும் கட்டாயம்). இப்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது. பொது விசயங்களை வாசிப்பது அனாவசியமாகிவிட்டது. சமூகம் சார்ந்த நடவடிக்கைகளில் அதிகம் விலகியிருப்பது படித்தவர்கள்தான். உலகின் மொத்த உற்பத்தி மதிப்பைக் காட்டிலும் ஊக வணிகத்தில் புழங்கும் பணம் பல மடங்கு அதிகம் (இது பற்றி வாசித்த கட்டுரையை தேடிக்கொண்டிருக்கிறேன்.. கிடைத்ததும் பதிவில் தெளிவான விவரத்தை இணைக்கிறேன்). உற்பத்திக்கும் விற்பனைக்கும் இடையே ஊதிப்பெருக்கப்பட்ட விலை நுகர்வோரைத்தானே வந்தடைய முடியும்? இந்த பொருளாதாரம் தொடர்புடைய செய்திகளே தெரியாவிட்டால் பொருளாதார சுரண்டலை எதிர்க்கும் உந்துதல் எங்கிருந்து வரும்?

கட்டுமானப்பொருள் விலை உயர்வுக்கு கட்டிடத்தொழிலார்கள் மட்டும் போராடும் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது தமிழ்நாடு. கட்டிடம் கட்டி பயன்படுத்தப்போகிற மக்களோ வாய்மூடி இருக்கிறார்கள். 91-96 ஜெயலலிதா ஆட்சியில்கூட பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர் போராட்டங்கள் நடந்ததுண்டு. இப்போது பெட்ரோல் விலை மாதாமாதம் உயர்கிறது. அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலையெல்லாம் மடங்குகளில் உயர்ந்திருக்கிறது. ஆனாலும் பெருந்திரளான மக்கள் பங்கேற்பில்லாமல் பல போராட்டங்கள் தோல்வியடைகின்றன. டாஸ்மாக்கும் கேபிள் டிவியும் மக்களை சிந்திக்கத்தெரியாத ஜடங்களாக மாற்றிவிட்டதாவே கருதவேண்டியிருக்கிறது. நம்மிடம் பரவிட்ட இந்த மொன்னை மனோபாவம் காரணமாக எந்த அரசும் விலையை உயர்த்துவது குறித்து இப்போது கவலைப்படுவதே இல்லை.

எல்லா இழப்புக்களையும் அமைதியாக தாங்கிக்கொள்பவன் விக்ரமன் படத்தில் வேண்டுமானால் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் ஒரு தேசத்தின் மக்கள் அப்படி இருந்தால் அது அடுத்த விலையேற்றத்துக்கு அவர்கள் தந்த அனுமதியாகவே ஆள்வோரால் புரிந்துகொள்ளப்படும். ஆகவே நாம் வாய்மூடியிருக்கும்வரை இதுவரையான விலையேற்றத்தையும் சரி இனி வரப்போகும் விலையேற்றத்தையும் சரி, நம்மால் தடுக்கவே முடியாது.

Advertisements

“விலைவாசி- பறிகொடுத்தோரின் மௌனம், திருடர்களின் பரிகாரக்கூட்டம்” இல் 3 கருத்துகள் உள்ளன

  1. நூற்றுக்கு நூறு உண்மையான சேதிகள். “இதென்ன ஜெயதாபூர் அணுமின் நிலையமா அல்லது அமெரிக்க ஒப்பந்தமா உடனடியாக நடவடிக்கை எடுக்க..விலைவாசி உயர்வுக்கு மழை அதிகமாக பெய்ததே காரணம் என்ற அரிய கண்டுபிடிப்பை இன்று கலைஞர் டிவியில் சொல்லியிருக்கிறார் சுப.வீ. காங்கிரசுக்கு கிடைத்த கபில் சிபலைப் போல கழகத்துக்கு கிடைத்த முத்துதான் வீரபாண்டியன்..தேசத்தை ஆள்வதே பெருவியாபாரிகளும் தரகர்களும்தான் எனும்போது அவர்கள்மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்பதெல்லாம் மக்களை வைத்து செய்யப்படும் காமெடியே. ..அது குறைவது நாம் விலை உயர்வு குறித்து அறிவுடையோராவதிலும் கோபமுடையோராவதிலும்தான் இருக்கிறது”…இந்த பொருளாதாரம் தொடர்புடைய செய்திகளே தெரியாவிட்டால் பொருளாதார சுரண்டலை எதிர்க்கும் உந்துதல் எங்கிருந்து வரும்?…கட்டுமானப்பொருள் விலை உயர்வுக்கு கட்டிடத்தொழிலார்கள் மட்டும் போராடும் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது தமிழ்நாடு…ஆனால் ஒரு தேசத்தின் மக்கள் அப்படி இருந்தால் அது அடுத்த விலையேற்றத்துக்கு அவர்கள் தந்த அனுமதியாகவே ஆள்வோரால் புரிந்துகொள்ளப்படும்….!
    அருமையான சிந்தனையும்…எழுத்தும்! நிறைவாய் இருக்கிறது!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s