தாமதமாகப்போகும் புதிய மீட்பரது வருகை- ஆம், திரீ இடியட்சில் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்டது.


தமிழ் நாட்டில் ஒரு கட்சி தொடங்க பெரிய காரணங்கள் இருக்கத் தேவையில்லை. திமுக தொடங்கி நாடாளும் மக்கள் கட்சிவரை இதில் விதிவிலக்கில்லை.  மற்றவர்கள் கட்சி ஆரம்பிப்பதற்கும் சினிமாகாரர்கள் ஆரம்பிப்பதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. மற்றவர்கள் கட்சி ஆரம்பித்து பெரிய கூட்டத்தை கூட்டினால்தான் அவர்களுக்கு போதிய கவனம் கிட்டும். சினிமாக்காரர்களுக்கு மட்டும் மூன்று படம் ஓடிய உடனே அவர்களது அரசியல் பிரவேசம் குறித்த எதிர்பார்ப்புக்கள் கிளப்பப்படுகின்றன.

ஒவ்வொரு நடிகனையும் இந்த கேள்வி பின் தொடர்கிறது.. நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள்?. நடிகர் விஜயும் இதற்கு ஆட்பட்டு இப்போது ஆனந்தவிகடனில் தன் அரசியல் வருகைக்கான முன்னோட்ட பேட்டியை கொடுத்திருக்கிறார். புலனாய்வு வார இதழ்கள் அவருக்கு இருக்கும் பதின்நான்காயிரம் ரசிகர் மன்றங்கள் ஆட்சியை தீர்மானிக்கவல்ல சக்திகள் என்று சந்திரசேகர மைந்தனை உசுப்பேற்றுகின்றன. ரசிகர் மன்றம் எனும் பெயரில் இயங்கும் அல்லது இயக்கப்படும் முட்டாள்கள் கூட்டத்துக்கு தரப்படும் இயக்கம் மற்றும் சக்தி ஆகிய பெயர்கள் தமிழகத்தை கேவலப்படுத்துபவை என்பதை வேறொரு சந்தர்பத்தில் விவாதிக்கலாம்.

இந்த கூட்டத்தை வைத்துக்கொண்டு இவர்கள் தங்களை நாட்டின் அதிசக்திவாய்ந்த நபர்களாக கற்பனை செய்துகொள்கிறார்களோ என எண்ண வேண்டியிருக்கிறது. சரி விஜய் பெரிய ரசிகர் கூட்டம் கொண்ட மனிதராகவே இருக்கட்டும், அது மட்டுமே எப்படி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தகுதியாகும்? ஆனால் கோடம்பாக்கத்துக்காரர்களுக்கு இந்த கேள்விகள் பிடிக்காது. அரசியலுக்கு யார்வேண்டுமானாலும் வரலாம் எனும்போது சினிமாக்காரன் வந்தால் மட்டும் ஏன் உங்களுக்கு வயிறு எரிகிறது எனும் ரெடிமேட் பதில் அவர்கள் எல்லோரிடமும் இருக்கும். நடிகனாவதற்கு நடிக்கத்தெரியவேண்டும் என்பது போய் அப்பனுக்கு செல்வமும் செல்வாக்கும் இருந்தால்போதும் என்ற நிலை வந்த பிறகு கட்சி ஆரம்பிக்க ரசிகர் கூட்டம் மட்டும் போதும் எனும் எண்ணம் எழுவதில் ஆச்சரியமில்லை.

விஜய் பேட்டியைப் பாருங்கள். அவர் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் வரிசையில் அடுத்த நபராக தன்னைக் காட்டிக்கொள்கிறார். அவரது கணிப்புப்படி ராமச்சந்திரனை கட்சியை விட்டு துரத்தினார்கள் அதனால் அவர் விசுவரூபம் எடுத்து முதல்வரானார். ஜெயாவை எம் ஜிஆரின் சவ வண்டியை விட்டு இறக்கினார்கள் , அவரும் முதல்வரானார். கல்யாண மண்டபத்தை இடித்தார்கள் ஆகவே விஎஸ்ஓபி காந்த் மன்னிக்கவும் விஜயகாந்த் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியானார். இப்போது என் படத்துக்கு தொடர்ந்து சிக்கலை உண்டாக்குகிறார்கள் என எச்சரிக்கை செய்திருக்கிறார். அவருக்கு போதிய வரலாற்று ஞானம் இல்லாதது நல்லதாய் போயிற்று, இல்லாவிட்டால் லெனின், ஸ்டாலின் மற்றும் காஸ்ட்ரோவுக்கு அடுத்தது நான்தான் என்றுகூட சொல்லியிருப்பார்.

சிவனே என மாடுமேய்க்கும் லதா வீட்டுக்காரர் வில்லன்களால் சீண்டப்பட்டு கோடீசுவரனாக்கப்படும் படங்களைப் பார்த்து மட்டுமே வளர்ந்த இளைஞரில்லையா.. அவரை முதல்வராக்க காவலன் படத்துக்குத் தரப்படும் இடையூறுகள் மட்டுமே போதாதா என்ன? விஜயின் அப்பா கடந்த சில ஆண்டுகளாக மகனின் அரசியல் பிரவேசம் பற்றி உடுக்கை அடித்துக்கொண்டேயிருக்கிறார். அரசியல் ஆசை வந்த பிறகாவது மக்கள் பிரச்சனையி பற்றி ஏதாவது கருத்து சொன்னார்களா என்றால் கிடையாது. அட சங்கவி, சுவாதி போன்ற நடிகைகளின் தயவில் நடித்தபோது சொல்லியிருக்காவிட்டால் பரவாயில்லை, பத்து வருடங்களாக படத்தின் தயாரிப்பாளர்களே அவரை நம்பி இருக்கும் நிலையிலும் எதையும் சொல்லக்காணோமே?  சில மாதங்களுக்கு முன்னால்கூட இந்த திடீர் புரட்சிக்காரர் கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் என்று சொல்லி வைரமுத்து வேலைபார்த்தவர்தான்.

கருணா குடும்பத்தால் தமிழன் வீட்டில் எழவு விழுந்தபோதெல்லாம் அவரை வெட்கமில்லாமல் குளிப்பாட்டிக்கொண்டிருந்துவிட்டு இப்போது படத்தை வெளியிட இடையூறு செய்கிறார்கள் என்பதால் அவரை குறை சொல்வதும் அரசியலுக்கு வரப்போகிறேன் என்பதையும் நாம் சாதாரணமாக கேட்டுக்கொண்டிருப்பதும் நம் தலையில் நாமே செருப்பால் அடித்துக்கொள்வதும்  ஒன்றுதான் (செருப்பு பழசாக இருப்பது அவசியம்). தனது கால்சட்டை உருவப்பட்டால்தான் அநியாயம் குறித்து கவலைப்படுவேன் என்பது தமிழனின் தனிப்பட்ட குணம், அதையே விஜய் செய்தால் நாம் குற்றம் சொல்வது நியாயமில்லை. ஆனால் அதனை தியாகமாக்குவதும் அரசியலுக்கு வர நியாயமான காரணமாக கருதுவதும்தான் அநாகரீகமானது என்கிறோம். திரீ இடியட்சுக்காக முடியை ஒட்ட வெட்டிய விஜய்க்கு அந்த வாய்ப்பு பறிபோனதால் அவரது அப்பா கடுங்கோபம் கொண்டு தமிழ்நாட்டின் அம்மாவை சந்தித்திருக்கிறார். இப்போது ஏதேதோ மாற்றங்கள் நடந்து திரி இடியட்சில் அவரது இருப்பு உறுதியாகிவிட்டது. ஆகவே ஏழுகோடி இடியட்சுக்கும் அவரது அரசியல் பிரவேசத்தைக் காணும் வாய்ப்பு தள்ளிப்போயிருக்கிறது. ஆனால் அவர் வீட்டு சாக்கடை அடைத்துக்கொண்டால்கூட அவருக்கு அரசியல் சிந்தனை வரும் என்பதை மறுப்பதற்கில்லை.

இது விஜய் எனும் ஒரு நடிகனின் இயல்பு மட்டுமல்ல. தமிழ் சினிமா எனும் துறையினை கட்டி ஆளும் ஜாம்பவான்களின் பொது இயல்பு. ரஜினி வீட்டுக்கு போக தாமதானதுதான் அவர் ஜெயலலிதாவை எதிர்த்தற்கான முதல் காரணம். ஒரு படம் மூன்றாண்டுகளுக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகக் கூடாது என்பது விதி, அது மீறப்படுவதை எந்த சினிமாக்கார பிரபலமும் எதிர்த்ததாக காணோம். வீடியோ பைரசியை ஒழிக்க மட்டும் வீரமுழக்கமிடுகிறார்கள் எல்லோரும். பைரசி தயாரிப்பாளரையும் மற்ற பிரபலங்களையும் பாதிக்கும், சீக்கிரமே டிவியில் ஒளிபரப்பானால் இரண்டாம் ரிலீஸ் செய்யும் சிறு மற்றும் புறநகர் திரையரங்க உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். திரைத்துறையினருடைய போர்குரலின் அழகிற்கு இது ஒன்றே சிறந்த உதாரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.

இவர்களது தர்ம சிந்தனையும் கட்சி நடத்தும் முறையுமே சினிமா தொற்றுகொண்டதாகவே(இன்ஃபெக்ஷன்) இருக்கிறது. சரத்குமார் சமீபத்தில் கொல்லப்பட்ட மீனவர் ஜெயக்குமார் குடும்பத்துக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் தந்திருக்கிறார். விவரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள், சரத் அவரது குடும்பத்துடன் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சாப்பிடப்போனால் ஆகும் செலவு எவ்வளவு இருக்கும்? அதனுடன் இந்த இருபத்தைந்து ஆயிரம் ரூபாயை ஒப்பிடுங்கள். எத்தனை அருவறுப்பாக இருக்கிறது? ஆனால் இதை ஒரு நாட்டாமைக்குரிய கம்பீரத்துடன் தருகிறார் சமக தலைவர்.

இவர் லட்சணம்தான் இப்படியென்றால் இவரைக் காட்டிலும் பல வகையிலும் சிறந்தவரும் யோக்கியருமான சீமானின் நிலை எப்படி இருக்கிறது? ஒரு நல்ல நாளில் வைகோவை சந்திக்கிறார் சீமான், அப்போதே அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன் என்கிறார். ஒரு அதிமுக்கியமான கட்சி நிலைப்பாட்டை தன்னிச்சையாக அறிவிப்பது அவரது கட்சி உறுப்பினர்களுக்கு இழைக்கப்படும் அநீதியன்றி வேறென்ன? தமிழ்நாட்டில் ஒரு கட்சிக்கு தமிழ்தேசிய சிந்தனையைக் காட்டிலும் அவசியமானது ஜனநாயக சிந்தனை. இந்த அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை அவரது கட்சியினருடன் விவாதிக்க ஒரு வாரம் ஆகுமா? ஒரு குறுந்தகவலை அனுப்பியே கருத்து கேட்கலாமே..        

ஆக சினிமாவில் இருந்து வருவோர் தன் முகரையை மட்டும் நம்பி அரசியலுக்கு வரும் சரத் ஆனாலும் சரி, மாதக்கணக்கில் சிறைசென்று போதிய அரசியல் அனுபவத்தோடு (அது சரியானதா இல்லையா என்பது விவாதத்துக்குரியது) வரும் சீமானாலும் சரி அடிப்படையான அரசியல் தகுதிகள் இல்லாமலே இங்கு வருகிறார்கள். இவர்கள் தங்களை உப்பரிகையில் நின்று மக்களுக்கு தரிசனமும் தானமும் தரும் ஜமீனாகவும் கூட்டதின் முன்னால் நின்று கைகளை உயர்த்தி கோஷமிட்டு மக்களை வழிநடத்தும் சூப்பர் கதாநாயகனாகவுமே எண்ணிக்கொண்டு அரசியலுக்கு வருகிறார்கள். இவர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் கருணா நாற்பது ஆண்டுகளில் செய்த அக்கிரமங்களை நான்காண்டுகளில் செய்பவர்களாகத்தான் இருப்பார்கள். இன்றைக்கு ஜெயலலிதாவை ஆதரிப்பதில் தெரியும் நியாயம் நாளை நிச்சயம் ஜெயலலிதா ஆட்சியில் செய்வதும் நியாயம் என்ற நிலைக்கு இவர்களை இட்டுச்செல்லும்.

யுத்தம் செய் படத்தை கலைஞர் டிவி வாங்கியிருக்கிறது. அதன் கதாநாயகன் சேரன் சினிமாவில் கருணா குடும்ப ஏகாதிபத்தியத்துக்கு வக்காலத்து வாங்குகிறார் (முடிஞ்சா நீயும் அவங்களோடு போட்டி போடு என பொருள்கொள்ளும்படி இருக்கிறது அவரது சென்றவார விகடன் பேட்டி). எது விஜயை அரசியலுக்கு வர வைக்கிறதோ அது சேரனுக்கு நியாயமாக தெரிகிறது. இதுதான் கோடம்பாக்க சுயநல சிந்தனையின் விகாரமான ஆதாரம்.

இவற்றுக்கெல்லாம் நாம் திரையுலகினரை குறை சொல்லிப் பயனில்லை. நமக்கு அரசியல் அறிவு இல்லாதபோது நம் நாட்டு அரசியலை தகுதியற்ற ஆட்களும் பேராசைக்கார ஆட்களும்தான் நிறைப்பார்கள். சாதாரணமாகவே கதாநாயகர்கள் தங்கள் உழைப்பிற்கு சற்றும் சம்மந்தமில்லாத அளவுக்கு பெரும் பொருளை சம்பாதிக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்து இருக்கும் சுரண்டல் மையம் அரசியல்தான். (எனக்கு நினைவு தெரிந்து விஜயகாந்த் நடித்து ஓடிய படங்கள் பத்துகூட இருக்காது. ஆனால் அவருக்கு நூற்றுக்கணக்கான கோடிகளுக்கு சொத்து இருக்கிறது). அதிகாரத்தையும் சம்பாத்தியத்தையும் விரும்புபவனெல்லாம் அரசியலுக்கு வராதிருக்க நமக்கு அரசியல் கொஞ்சமாவது தெரிந்திருப்பது அவசியம்.

ஆகவே அரசியலை கற்போம், பிறகு அதில் சரியானதை சுலபமாக கண்டுபிடிக்கலாம். ஒரு நகைச்சுவைக் காட்சியை நூறுமுறை பார்க்க தேரமிருக்கும் போது இதற்கு நேரமிருக்காதா என்ன? நேரமில்லை என கருதினால் மேனேஜர் சீனா கட்சி ஆரம்பிக்கும் காலம்கூட வந்து தொலைக்கலாம்…

Advertisements

“தாமதமாகப்போகும் புதிய மீட்பரது வருகை- ஆம், திரீ இடியட்சில் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்டது.” இல் 11 கருத்துகள் உள்ளன

 1. காலத்திற்கேற்ற கட்டுரைதான் வில்லவன்… ஆனால் பாருங்கள் வெட்டி அரட்டை என்றால் பல பிளாக்கர்கள் மறுமொழி கூறியிருப்பார்கள்.. ஒரு தீவிர அரசியல் கோமாளித்தனத்தை எதிர்த்து எழுதியிருக்கீறிர்கள் பேசுவதற்கே பயப்படுகிறார்கள். முதற்காரணம் எல்லோருக்குள்ளும் மலினமான சினிமா ரசிகன் ஒளிந்து கொண்டிருப்பதே.

 2. ஹிட்லருக்கு சினிமாவில் நடிக்க சர்வாதிகாரி வேடமா?
  ஒரு சர்வாதிகாரியே சர்வாதிகாரியாக வேடமிட்டால்…
  நடிக்காமலேயே வெளுத்து வாங்கி விடுவார்.
  விஜய்கு இடியட் வேடமா?
  இடியட்டாகவே வாழ்பவருக்கு வேடம் எதற்கு?

 3. dear vills,
  i request u to provide the share facility with facebook as well as twitter. that wiil facilitate all u r readers to share the article with their friends and make them aware about u r site. i dont have tech. expertise, kindly refer idlyvadaiblogspot.com they r providing sharing facility.
  thank u

 4. வழமை போல அருமையான பதிவு வில்லவன். விஜய் என்று சொல்லும் போது தான் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகின்றது, அவர் என்றைக்கு அரசியலுக்கு வருவேன் என்றாறோ, அன்றே அவரது இரசிகர் மன்ற மாவட்ட தலைவர்களாக இருந்தவர்கள் பலர் மன்றத்திலிருந்தே கழண்டு விட்டார்கள். எல்லாம் இப்ப கொஞ்சம் விவரமாயிட்டாங்கன்னு நினைக்கிறேன் அப்படி இல்லைன்னா தயாரிப்பாளர போண்டி ஆக்குன மாதிரி இப்ப நம்மளை ஆக்கிருவாறோ என்ற பயமாக இருக்கலாம். இதுல ஒரு கொடுமை உங்களுக்கு மறந்துருக்கும்னு நினைக்கிறேன். இந்த விஜய் நடிகர் சங்க உண்ணாவிரதத்துல பேசுனது இருக்கே, “போர் நிறுத்தத்தை உடனே நிறுத்தனும் (ஒரு வேளை இரண்டு முறை நிறுத்தனும்னு சொன்ன நிறைய கைதட்டல் கிடைக்கும்னு சொன்னாரன்லா தெரியாது). இதை கேட்ட இராசபக்சேவே ஒரு நிமிடம் ஆடிப்போயிட்டார்னா பார்த்துக்குங்களேன். இது தான் அவரோட பொது அறிவு..

 5. அவர் வீட்டு சாக்கடை அடைத்துக்கொண்டால்கூட அவருக்கு அரசியல் சிந்தனை வரும் என்பதை மறுப்பதற்கில்லை.

  சத்யமன உண்மை

 6. உங்கள் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி வினோ.

  முகநூலில் எனக்கு கணக்கு இருக்கிறது, அவை இந்த தளத்துடன் இணைக்கப்பட்டு இருக்கின்றன.

  ட்விட்டரில் எப்படி கணக்கு ஆரம்பிப்பது என தெரியவில்லை, பல முயற்சிகள் வெற்றிபெறவில்லை. நண்பர்கள் யாரேனும் அதில் கணக்கு வைத்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.

  எவ்வளவு சீக்கிரம் முடியுமே அவ்வளவு சீக்கிரம் உங்கள் யோசனைகளை செயல்படுத்த முயற்சி செய்கிறேன்.

 7. மறுமொழிகள் வராதமைக்கு நானும் ஒரு காரணம் வேந்தன், பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வது மற்றும் பதிவுகளை சரியாக வாசிப்பவர்களுக்கு கொண்டு சேர்ப்பது என பல நடவடிக்கைகளை நான் மேற்கொள்வதில்லை. இவற்றை சரியாக செய்யும் பல தளங்களில் பின்னூட்ட விவாதங்கள் சிறப்பாவே இருக்கின்றன.

  ஒரு சினிமா ரசிகன் நம்மில் பலருக்குள்ளும் ஒளிந்திருக்கிறான் என்றாலும் அவற்றை கடுமையாக கண்டிக்கிற பலரும் நம்மில் இருக்கிறார்கள்.. சினிமாவில் பணியாற்றும் நபர்களும் இதில் அடக்கம். ஆகவே கட்டுரை வரவேற்கப்படாதமைக்கு கட்டுரையோ அல்லது கட்டுரையாளனோதான் காரணமாக இருக்க முடியும்.

  மற்றபடி, (தாங்கள் குறிப்பிட்டபடி) சினிமா மோகம் நம்மிடையே மிகையாக இருப்பதும் அது குறித்த செய்திகள் அல்பமானதாக இருந்தாலும் பெரிய அளவில் கவனிக்கப்படுவதும் நிச்சயம் கவலைக்குரியதே.

  நன்றி,
  வில்லவன்.

 8. /ஒரு சினிமா ரசிகன் நம்மில் பலருக்குள்ளும் ஒளிந்திருக்கிறான்/

  இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.
  மட சாம்பிராணிகளுக்கான சினிமா ரசிகனும் எனக்குள் ஒளிந்திருக்கப்போவதுமில்லை. இந்த அசமந்தைகளைவிட, தெருக்கூத்துக் கட்டியக்காரனை மிகச் சிறப்பான நடிகனென்பேன்!

 9. //மட சாம்பிராணிகளுக்கான சினிமா ரசிகனும் எனக்குள் ஒளிந்திருக்கப்போவதுமில்லை.//

  பலர் என்றுதானே சொன்னேன்.. எல்லோருமே என்றா சொன்னேன்?

 10. தமிழ் சினிமா ரசிகன் மட்டுமே இதுபோல மடத்தனமாக நடிகர்களை துதிபாடி கொண்டாட முடியும்.
  மிக மிக அருமையான நேர்மையான சாடல்…….

  சினிமா நம் குடிநீரில் கலந்துவிட்ட சாக்கடை….

  இன்றைய கட்சித் தலைவர்களின் எண்ணிக்கையே இதற்க்கு சாட்சி……….

  சினிமா சம்பத்தப்பட்ட எல்லா வலைத்தளம், வலைப்பதிவுகளையும் நிறுத்த ஒரு போராட்டம் நடத்த வேண்டும்………..
  சினிமா தயவில் தொழில் நடத்தும் அணைத்து தொ(ல்)லைகட்சிகளையும், பத்திரிக்கைகளையும் நிறுத்த ஒரு போராட்டம் நடத்த வேண்டும்…………

  த்தூ… பிணம் தின்னி கழுகுகள்……………

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s