திருப்பூர்- சாயம்போன கனவு.


சில ஆண்டுகளுக்கு முன்னால் கனவு நாயகன் அப்துல் கலாம் திருப்பூர் வந்திருந்தார். அப்போது அவருக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சார்பில் ஒரு படோடாபமான வாக்குறுதி தரப்பட்டது. பத்தாயிரம் கோடியாக இருக்கும் ஏற்றுமதியை இருபதாயிரம் கோடியாக உயர்த்துவோம் எனும் அறிவிப்புதான் அது. அப்போது சாயக்கழிவுப் பிரச்சனை இல்லையா என கேட்காதீர்கள். எப்போதும்போல அப்போதும் அது பெரிய பிரச்சனையாகவே இருந்தது. கூடுதலாக அப்போது விவசாயிகள் மீதான அலட்சியம், அரசு நடவடிக்கையை தள்ளிப்போடும் சாமர்த்தியம் மற்றும் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பணம் பார்த்துவிடும் ஆசை ஆகியவையும் இருந்தன.

சாயத்தொழில்  நொய்யலாற்றுப் பாசனப்பரப்பிலும் ஒரத்துப்பாளையம் அணை வட்டாரத்தையும் மட்டும் பாதிக்கவில்லை. திருப்பூரில் பிறந்து வளர்ந்த மூத்த தலைமுறையினரைக்கேட்டால் இங்கு நடைபெற்ற விவசாயம் பற்றி சொல்வார்கள். ஏரளமான முகவரிகள் இங்கு இன்னும் தோட்டம் எனும் பெயரை தாங்கி இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். இப்போது அவை ஏறத்தாழ காணாமல் போய்விட்டன. இடத்தை கம்பெனிக்கு விற்றுவிட்டுப் போவது எனும் பழக்கத்தால் மட்டும் இங்கு விவசாயம் அழியவில்லை.

சாய ஆலைகளின் பெரும் தேவைப்பாட்டுக்குரிய தண்ணீர் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் உறிஞ்சப்பட்டது. நான் இங்கு வந்த புதிதில் (2003) சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் உறிஞ்சி ஆலைகளுக்கு கொண்டுவரும் நடைமுறை உச்சத்தில் இருந்தது. ஏதேனும் ஒரு கிராமத்தில் தண்ணீர் லாரி மறிக்கப்பட்ட செய்தி தினசரி வெளியாகும். காரணம் நகரத்தில் உறிஞ்ச தண்ணீர் தீர்ந்துவிட்டிருந்த சமயம் அது. நான் குடியிருந்த வட்டாரத்தில் தண்ணீரை காசுக்கு வாங்கித்தான் பயன்படுத்த வேண்டும். ஒரு குடம் உப்புத்தண்ணீர் ஒரு ரூபாய், நல்ல தண்ணீர் இரண்டு ரூபாய். அவசரத்தேவைகளுக்கு வைத்திருக்கும் தண்ணீருக்காக குளியலறையை நாங்கள் பூட்டிவைப்போம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

தண்ணீர் அசுரத்தனமாக உறிஞ்சப்பட்டதால் விவசாயம் செய்வோருக்கு ஆழ்குழாய் கிணறு தோண்டுவது அவசியமாகி பிறகு அதை ஆழப்படுத்துவது என தொழிலே செலவுமிக்கதானது. அதேவேளையில் சாயஆலைகளின் கழிவுநீர் அருகிலிருக்கும் ஓடைகளிலும் பாறைக்குழிகள் மற்றும் குளங்களிலும் கலக்கப்பட்டது. இது பெரிதாக கவனிக்கப்படாத ஒரு பிரச்சனை, ஆனால் இதுதான் திருப்பூர் வட்டாரத்தில் விவசாயத்தை லாபமில்லாத மற்றும் “முட்டாள்தனமான” தொழிலாக்கியது. இது ஏன் பரவலாக அறியப்படவில்லை என்றால் விவசாயத்தை துறந்த விவசாயிகள் ஏதோ ஒரு தொழிலை தொடங்கவோ அல்லது நிலத்தை நல்ல விலைக்கு விற்கவோ முடிந்தது. நிலமில்லாதோர் செல்ல ஏதேனும் வேலை வாய்ப்பு இருந்தது.ஆகவே பனியன் தொழில் ஈரோட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் முன்பே திருப்பூர் விவசாயத்தின் சுவாசத்தை நிறுத்திவிட்டது.

திருப்பூரின் வளர்ச்சியோடு தொடர்புடைய இன்னொரு விவசாய வீழ்ச்சி தலைகீழானது. இங்கே சாயத்தொழிலால் விவசாயம் வீழ்ந்ததென்றால் தஞ்சை மற்றும் மதுரை வட்டார விவசாயம் நிராதரவாக்கப்பட்டதால் இங்கு பனியன் தொழில் வளர்ச்சியடைந்தது. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பிழைப்புக்காக திருப்பூர் வந்ததால் தொழில் விஸ்தரிப்பு மிக சுலபமாகியது. என்பது மற்றும் தொன்னூறுகளில் ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிலாபகரமான தொழில். அப்போது கள்ளநோட்டு அடிப்பதற்கு அடுத்ததாக குறைவான முதலீட்டில் அதிக லாபம் பார்க்கும் தொழில் எக்ஸ்போர்ட்தான் என சில ஆடைத்துறை அரக்கர்கள் (ஜெயண்ட்டுங்க) சொல்லக் கேட்டிருக்கிறேன்.

வேறெந்த தொழிலையும்விட இங்கு ஆட்களின் தேவை அதிகம். என் நண்பர் ஒருவரது சிறு நிறுவனத்தில் அவர் தொழிலாளருக்குத் தரும் ஒரு வாரச் சம்பளம் அவரது ஆலையின் மொத்த முதலீட்டில் மூன்றிலொரு பங்கு. தன் மகன் மற்றும் மகளுக்குத் துணையாக வசிக்க மட்டுமே வந்த  பட்டுக்கோட்டை விவசாயக்கூலி ஒருவருக்கும் வேலை வீடுதேடி வந்தது, சாய ஆலையொன்றில் விறகு உடைக்கும் வேலைதான் அது. போதுமான எண்ணிக்கையில் கிடைக்கும் ஆட்கள் இங்கு எத்தனை பெரிய முதலீடு என்பதை நீங்கள் அறியவே இந்த உதாரணங்களை சொல்கிறேன்.

வெளிமாவட்ட விவசாயிகளின் இடப்பெயர்வு இங்கு தொழிலை வளர்க்க பேருதவி செய்ததென்றால் மறுபுறம் அந்தந்த மாவட்டங்களில் விவசாயத்தொழிலின் நசிவை பெரிய மக்கள் பிரச்சனையாகாமல் பார்த்துக்கொண்டது. ஒருவேளை திருப்பூர் எனும் வாய்ப்பு இல்லாதிருந்தால் காவிரிப் பிரச்சனையும் முல்லைப்பெரியாறு விவகாரமும் இன்னும் வீரியமான போராட்டங்களை மக்களிடம் உண்டாக்கியிருக்கும். அதற்காக இப்போதைய திருப்பூரின் வீழ்ச்சி மக்களை வீதிக்கு வரவைக்குமா என அறிவாளித்தனமாக நாம் யோசிக்கக்கூடாது. ஏனெனில் மக்களின் சிந்தனைக்கு வாசக்டமி செய்வதற்கென்றே டிவியும் டாஸ்மாக்கும் மாநிலமெங்கும் பரவியிருக்கின்றன.

கடைசியாகத்தான் இப்போது சாயஆலைகளை மூடவைத்த ஈரோட்டு விவசாயிகளின் பிரச்சனை வருகிறது. நொய்யல் பாயும் வட்டாரங்களில் வயல்வெளிகளை நாசம் செய்த சாயக்கழிவு ஒரத்துப்பாளையம் அணையின் புண்ணியத்தால் ஓரிடத்தில் தேங்கி ஒரு நிரந்தர கருப்பு பிராந்தியத்தை இங்கு உருவாக்கிவிட்டிருக்கிறது. அணைக்கு அருகில் உள்ள நிலங்கள் இப்போது எதற்கும் லாயக்கற்ற நிலங்களாகிவிட்டிருக்கின்றன. அணையைத் திற என அங்குள்ள மக்கள் போராட திறக்காதே என காவிரிப் பாசன விவசாயிகள் போராட (கரூர் வட்டார விவசாயிகள்) ஒரு வினோதமான சிக்கலாக இது உருமாறி சில ஆண்டுகளாகிறது. விவசாயிகளின் நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகான நீதிமன்றத்தின் செயல்பாட்டை சுருக்கமாக இப்படி சொல்லலாம் “சாவுக்காவது வந்திருக்க வேண்டியவர்கள் பாலுக்கு வந்திருக்கிறார்கள்”.

சாய ஆலைகளின் மூடல் எந்த மாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என சுருக்கமாக பார்க்கலாம். சென்றவாரமே திருப்பூருக்கு வரும் விறகு லோடுகளின் வரத்து தொன்னூறு சதவிகிதம் குறைந்துவிட்டது (சாய ஆலைகளின் எரிபொருள் விறகுதான்). சாயமிடும் வேலை இல்லையானால் பின்னல் துணி உற்பத்தி உற்பத்தி நிறுத்தப்படும். தையல் வேலை செய்யும் ஆலைகளுக்கு இன்னும் ஓரிரு வாரங்களுக்குப்பிறகு தைக்க துணி இருக்காது. சாதாரணமாகவே ஆடை உற்பத்தியின் பாட்டில் கழுத்துப் பகுதியாக சாயமிடல்தான் இருந்தது. இப்போது அது முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டதால் ஏறத்தாழ திருப்பூரின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டதாகவே கருதலாம்.

நீதிமன்ற நடவடிக்கையை ஒரு அற்புதமான சுற்றுச்சூழல் நடவடிக்கை எனக் கருதுவது முட்டாள்தனமானது. நீதிமன்றம் மிகவும் சாவகாசமாக பல அத்துமீறல்களை கண்டும் காணாமல் இருந்துவிட்டு இப்போது ஆலைகளை மூடவைத்திருக்கிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை இவர்களால் பல ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை செய்திருக்க முடியும். எதிர் சவ்வூடு பரவல் முறையில் சுத்திகரிக்கும் முறை எந்த அளவு வெற்றிகரமானது மற்றும் எந்த அளவு நடைமுறைக்கு சாத்தியமானது என்பதை ஆய்வு செய்ய அரசை பணித்திருக்க முடியும். நீதிமன்றம் ஆரம்பத்திலேயே கடுமையாக நடந்துகொண்டிருக்கும்பட்சத்தில் இங்கு ஆலைகளும் பெருத்திருக்காது நிலங்களும் இவ்வளவு அதிகமாக பாழடைந்திருக்காது.

இப்போதும் கோவை, கரூர் மற்றும் ஈரோட்டில் சாய ஆலைகள் இயங்குகின்றன. ஈரோட்டு ஆலைகள் நேரடியாக சாயக்கழிவை காவிரியில் கலக்கின்றன. ஒருவேளை நமக்கு அடுத்த தலைமுறையில் காவிரி விவசாயிகளின் வழக்கு வெற்றிபெற்று ஈரோட்டு ஆலைகள் மூடப்படலாம். அதற்குள் பல சுடுகாடுகள் தஞ்சை வட்டாரத்திற்கு தேவைப்படும். அனேக பெருநகரக் கழிவுகள் அருகிலிருக்கும் ஆற்றில்தான் கலக்கின்றன. ஆறுகள் உருவாகுமிடங்களிலேயே பல ஆலைகள் முளைக்கின்றன. கடலூர் இப்போது அபாயகரமான ரசாயனக் கழிவுகளால் நிறைந்த நகராக சுட்டிக்காட்டப்படுகிறது. எங்கேனும் ஓரிடத்திலாவது எதிர்கால நலன் கருதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால்  நாம் திருப்பூர் சாய ஆலை பிரச்சனையை ஒரு நல்ல ஆரம்பமாகக் கொள்ளலாம். ஆனால் இப்போதைய செயல்பாடுகளை  தேவை முடிந்த கருவியை கைகழுவும் நடவடிக்கையாகவோ அல்லது  உள்நோக்கமுடைய நடவடிக்கையாகவோ கருதுவதற்குத்தான் அதிக முகாந்திரமிருக்கிறது.

திருப்பூர் விவகாரத்தை மட்டும் எடுத்துக்கொண்டாலும் அரசின் நடவடிக்கை பூஜ்ஜியமே. சாயக்கழிவுகளை கையாள நமக்கான தனிப்பட்ட தொழில் நுட்பங்களை உருவாக்கும் முயற்சி ஏறத்தாழ இல்லை. இதற்காக மற்ற நாடுகளை நாம் சார்ந்திருக்கவும் முடியாது, காரணம் அவர்களது சூழலைப்போல நமது சூழல் சாதகமானது அல்ல. ஆறுகளின் நீர் இருப்பு மிக அதிகமாக இருக்கையில் சாயக்கழிவை வெளியேற்றுவது மிக சுலபம், ஓரளவு சுத்திகரித்து ஆற்றில் விட்டால் பாதிப்பு பெரிதாக இராது. நம் நொய்யலைப்போல ஓடைகளோ அல்லது காவிரியைப்போல ஆறுமாத (அல்லது மழைக்கால) ஆறுகளோ சாயக்கழிவை தாங்குவன அல்ல.

இன்றுவரை பயன்பாடில் இருக்கும் சாயமிடலுக்கான வேதிப்பொருட்கள் பல தடைசெய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது (பயன்பாட்டுத்தடை அல்ல உற்பத்தியே தடை செய்யப்பட்டது). ஆகவே நமக்கிருக்கும் ஒரேவழி மூலப்பொருட்களை ஆபத்தில்லாதவையாக உருவாக்குவதும் அதன் பயன்பாட்டின் அளவைக் குறைப்பதும்தான். எனக்குத் தெரிந்து இது ஒரு கருத்துருவாகக்கூட எங்கேயும் விவாதிக்கப்பட்டதாக தெரியவில்லை (அனேக மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுபவை.. ஏதாவது புரியுதா?). ஆகவே இந்தப் பிரச்சனையில் அடுத்ததாக எடுக்கப்படும் நடவடிக்கை சமரசமாகத்தான் இருக்குமேயன்றி நிச்சயம் ஒரு தீர்வாக இருக்காது.

இவ்விவகாரத்தின் பெரிய பொறுப்பாளி அரசுதான். டாலர் வரவுக்காக அரசே மறைமுகமாக ஊக்கப்படுத்தியதுதான் இந்த தொழில். இப்போது டாலருக்கு மாற்று வழிகள் கிடைத்தாயிற்று. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு நம்மைக் காட்டிலும் மலிவாக ஆடை உருவாக்க வங்காள தேசம் வந்துவிட்டதால் நம் அரசுக்கு இப்போது எஜமானர்களுக்கு ஆடை அனுப்பவேண்டிய கட்டாயமும் கிடையாது.  விவசாயத்தை வேலைக்காகாத தொழிலாக்கியது முதல் சூழலியல் விதிகளை காற்றில் பறக்க விட்டதுவரை எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்துவிட்டு இப்போது ஆடைத்தொழில் காலியாகும் நிலையில் தனக்கேதும் பொறுப்பு இல்லாததுபோல விலகி நிற்கிறது அரசு.

இந்த நீர்வள மாசு முந்தாநாள் திடீரென முளைத்தது அல்ல இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்ததுதான் நொய்யல், ஆகவே அரசின் மறைமுக ஒப்புதலோடுதான் இந்த மாசுபாடு நடந்திருக்கிறது என்பது தெளிவு. அறுநூறு சாஃப்ட் ஃபுளோ எந்திரங்களுடன் சன் குழுமம் ஒரு சாய ஆலையை கடலூரில் நிர்மாணிக்க இருப்பதாக ஒரு பேச்சு இங்கு உலாவுகிறது. இது வெறும் வதந்தி எனும் நிலையில் இருந்து என்றைக்கு வேண்டுமானாலும் செய்தியாக மாறலாம். இதையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். இந்த சிக்கலை சமாளிக்க என்ன வழி எனக்கேட்டால் என்னிடம் விடையில்லை. ஆனால் இது திருப்பூர்காரர்களால் மட்டும் தீர்க்க முடிகிற பிரச்சனை அல்ல என்பது மட்டும் புரிகிறது…

Advertisements

“திருப்பூர்- சாயம்போன கனவு.” இல் 13 கருத்துகள் உள்ளன

 1. ONLY SOLUTION IS GET NEW TIRUPUR SCHEME WATER AND MIX IT WITH NOYAL RIVER AND REDUCE THE TDS CONTENT TO THE ACCPET LEVEL

  OR

  SURRENDER TO SUN TV GROUP.

  OUR PROBLEMS LIKE COTTON PRICE, YARN PRICE AND DYEING CLOSURE ARE RELATED TO DAYANIDHI MARAN DEPARTMENT. HE TAKE ANY STEPS OR SAID ANY COMMENT ??.

  HE KEPT SILENT.

  WHY…?????????

  WE GO BACK TO OUR THOTTAM LIFE. ITS BETTER.

  NICE ARTICLE.

 2. Maranuku kidaitha padavi spectrom patri pesamal irruka mattume…u will not expect any action from him for this issue

  @Long term plan like taking the semisolid sludge to kadalur to drop in sea water may workout ..

  @modern dyeing like (with out water or less water consum.,) may work out ?

  Nice artical…..Keep on rocking

 3. na nenaikaran dying open aakum aana aakadu,
  vote vangavaraikum dying work aakum, vote vangaiyatchuna dying close aakum. tirupur macgal ellam cheif rate ikku nelam, veedo, poon, porul veithuito epati vanthgalo aathi veda mosama povanga, karuppu panam vatchirukira muthali ethai sapitdo nenju vali, kunju vali vanthu sakum.

 4. “சாவுக்காவது வந்திருக்க வேண்டியவர்கள் பாலுக்கு வந்திருக்கிறார்கள்”.

  நிதர்சனமான உண்மை.

  “நமக்கிருக்கும் ஒரேவழி மூலப்பொருட்களை ஆபத்தில்லாதவையாக உருவாக்குவதும் அதன் பயன்பாட்டின் அளவைக் குறைப்பதும்தான். எனக்குத் தெரிந்து இது ஒரு கருத்துருவாகக்கூட எங்கேயும் விவாதிக்கப்பட்டதாக தெரியவில்லை.”

  அதிக வண்ணங்களில் ஆடை உற்பத்தியை குறைப்பதும், வண்ணம் குறைவான அல்லது விவசாயிகளைப் போன்று வெள்ளை உடைகளை அதிகப் படுத்துவதே நீண்ட கால நோக்கில் சிறந்தது.

  இது குறித்த எனது பதிவுகள்:

  ஆடைகளில் மின்னுவது வண்ணங்களா – இரத்தச் சுவடுகளா?
  http://hooraan.blogspot.com/2011/02/blog-post_06.html

  திருப்பூர்: சாயப்பட்டறைகளின் இரட்டைப் படுகொலை!
  http://hooraan.blogspot.com/2011/02/blog-post.html

 5. அருமையான கட்டுரை வில்லவன். இதில் தற்பொழுது உள்ள முறையில் உருவாகும் திடக்கழிவுகளை அகற்றுவதற்கான எந்த ஒரு வழிமுறையும் இல்லை என்பதையும் யாரும் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அதே போல கழிவு நீரை கடலில் கொண்டு சேர்த்து கடல்வளத்தை கொன்று புதைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளைப் போலவே இந்த தீர்ப்பு உள்ளது.

  ஒரத்துபாளையத்தில் பாதிக்கப்பட்டது விவசாயம் மட்டுமல்ல, அங்கு வாழும் மக்கள் அனைவருக்குமே தோல் தொடர்பான ஏதாவது ஒரு நோய் இருக்கின்றது. ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுமே அங்கு கெட்டு விட்டது. உலகத்திலேயே ஒரு அணையை திறக்கக்கூடாது என்று மக்கள் போராடினார்கள் என்றால் அது ஒரத்துபாளையம் அணையை ஒட்டிய போராட்டமாகத்தான் இருக்கும் என நான் எண்ணுகின்றேன்.

 6. Hi,
  its a very nice and detailed artigle.you are much watch tirupur and its all are correct.But the soulution is an mgr song below;

  “”Thirudanai parthu thirunthavittal thiruttai olikka mudiyathu””

 7. வினவுத் தோழர்கள் தங்களது வருத்தத்தை தெரிய வைத்தார்கள். நான் எழுதிய ஜீரோ டிஸ்சார்ஜ் என்றொரு பூதம் ( மூடு என்ற தலைப்பில் புதிய தலைமுறையில் அட்டைபடக்கட்டுரையாக வெளிவந்துள்ளது) என்ற கட்டுரை தெளிவான முறையில் இல்லாமல் முதலாளி ஆதரவு போலவே உள்ளது என்றார்கள். எனக்கே சற்று யோசனையாக இருந்தது. ஆனால் என் பார்வையில் உள்ள முதலாளிகள் தொழிலாளிகள் இருவரையும் மிக நெருக்கமாக பார்த்த காரணத்தால் இயல்பான விசயத்தை மட்டுமே எழுத முடிகின்றது என்பதை புரியவைத்தேன். இந்த கட்டுரையை சேமித்து வைத்து இன்று தான் படிக்க முடிந்தது. மிக அற்புதமாக எழுதி இருக்கீங்க.

 8. அந்த கட்டுரை உங்களுடையது என நீங்கள் சொல்லித்தான் தெரிந்துகொண்டேன் (ஆனால் கட்டுரையை வாசித்துவிட்டேன், ஒரு பயணத்தினிடையே அவசரகதியில்). நிதானமாக ஒருமுறை வாசித்துவிட்டு அதுகுறித்து உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன் (வேறென்ன ஏதாவது சந்தேகம்தான் கேட்பேன்)..

  ஒரு விசயம் கேட்க எண்ணியிருந்தேன், நல்வாய்ப்பாக தங்களது பின்னூட்டம் அதை நினைவுபடுத்திவிட்டது, நன்றி. வண்ணமா, அவலமா கட்டுரையின் சமீப பின்னூட்டங்களில் பேராசியர் ராமசாமியின் தொழில் நுட்பம் பற்றி விவாதம் வருகிறதே.. அது உங்களுக்கு புரிகிறதா?

  சாயக்கழிவை ஆவியாக்கினால் தண்ணீர் மட்டுமா ஆவியாகும்? மற்ற அபாயகரமான வேதிப்பொருட்கள் ஆவியாகி காற்றுமாசுபாடு வராதா? நேரமிருக்கையில் அதனைப்பற்றி பரிசீலித்து எழுதுங்களேன் (நான் சாயமிடல் பற்றிய பாடங்கள் படித்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆகவே இப்போது அது பற்றிய அறிவு எனக்கு போதுமான அளவு இல்லை). இணைப்பு ஏதுமிருப்பின் கொடுங்கள், எனக்கு ஏதாவது விளங்குகிறதான் என பார்க்கிறேன்.

  நன்றி.

 9. /SURRENDER TO SUN TV GROUP.//
  சன் டிவியிடம் சரணடந்தாலும் நம்மில் பாதிபேரை பலியிடவேண்டிவரும்.

  //OUR PROBLEMS LIKE COTTON PRICE, YARN PRICE AND DYEING CLOSURE ARE RELATED TO DAYANIDHI MARAN DEPARTMENT.//

  நூல்விலை உயர்வு மற்றும் சாய ஆலை பிரச்சனைக்கு தயாநிதி மாறனது துறை மட்டும் காரணமல்ல.. தயாநிதியும் தனிப்பட்ட முறையில் ஒரு காரணமே. அவர் வளர்ந்துவரும் நூற்பாலை முதலாளி மற்றும் நூல் ஏற்றுமதியாளர்.

  இந்த பிரச்சனைக்கு நம்மிடையே உள்ள ஒற்றுமையின்மையும் நமக்கென்ன எனும் சிந்தனையுமே காரணம். இவ்வளவு சிக்கலிலும் திருப்பூர் எந்த சலனமும் இல்லாமல் இருப்பதை பாருங்கள்….

 10. ”Thirudanai parthu thirunthavittal thiruttai olikka mudiyathu//

  திருடன் திருந்தும்வரை காத்திருந்தால் நம் கதை முடிந்துவிடும். திருட்டே நடக்காத மாதிரி கண்காணிப்பதுதானே சரி??

 11. //உலகத்திலேயே ஒரு அணையை திறக்கக்கூடாது என்று மக்கள் போராடினார்கள் என்றால் அது ஒரத்துபாளையம் அணையை ஒட்டிய போராட்டமாகத்தான் இருக்கும் என நான் எண்ணுகின்றேன்//

  சேலம், கரூர், ஈரோடு மற்றும் திருச்சி நகரக் கழிவுகள் காவிரியில்தான் கலக்கின்றன. கூடிய சீக்கிரம் தஞ்சை மாவட்ட மக்களும் ஒரத்துப்பாளையம் மக்களைப்போல வீதிக்கு வரவேண்டியிருக்கும் என நான் நினைக்கிறேன்.

 12. பல முதலாளிகளுக்கு கம்ப்யூட்டர் பற்றிகூடத்தான் தெரியாது.. அதற்காக அவர்களது நிறுவனங்களில் கணிணி இல்லையா என்ன? ETP பற்றி தெரியாததால்தான் அவர்கள் அதை செயல்படுத்தவில்லை என்றா நீங்கள் கருதுகிறீர்கள்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s