கருணாநிதியும் கக்கூஸ் தொடர்பான சில வினாக்களும்…


தமிழகத்தில் தமிழே இல்லாத இடங்கள் பல உண்டு.. ஆனால் கருணாநிதியின் பெயரோ அல்லது உருவமோ இல்லாத இடங்கள் ஏதாவது இருக்குமா என்றால் சந்தேகமே. புதிதாக தீட்டப்படும் திட்டங்கள் யாவும் அவரது பெயரைத் தாங்கியே வருகின்றன. ரேசன் கடை பெயர்பலகைகளில் மட்டுமல்ல அங்கு பொட்டலமாக கிடைக்கும் பொருட்களில்கூட கலைஞர் வாயை பிளந்தமேனிக்கு சிரித்துக்கொண்டு இருக்கிறார். டிவியிலோ கேட்கவே வேண்டாம், திவ்யா பரமேஸ்வரனைக் காட்டிலும் அதிக விளம்பரங்களில் வருவது கருணாவே. இப்போதெல்லாம் காலியாக இருக்கும் சுவரையோ இல்லை ஒரு கவரையோ பார்த்தாலும்கூட அதில் கருணாநிதி சிரிக்கிற மாதிரி ஒரு பிரமை உண்டாகிறது.

இப்படி ஊர்பட்ட சமாசாரங்கள் கருணாவின் பெயரைத்தாங்கி நிற்க, கழிவறைகள் மட்டும் என்ன பாவம் செய்தது? கலைஞர் கழிப்பறை கட்டும் திட்டம் என ஒரு திட்டம் வந்தால் எப்படி இருக்கும்? அந்த விளம்பரத்தில் ஸ்டாலின் நிற்க அவரைச் சுற்றி மக்கள் எல்லோரும் சொம்போடு ஓடிவர, அவர்களை எல்லாம் ஸ்டாலின் கூட்டிக்கொண்டு அரசு கட்டிக்கொடுத்த கக்கூசுக்கு வர (அதுக்கு மஞ்சள் பெயிண்ட் மட்டும் வேண்டாமே பிளீஸ் )… கற்பனையே இப்படியென்றால் நிஜத்தில் நடந்தால் தமிழகம் எவ்வளவு பரவசப்படும்?

1991ல் எடுத்த கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் 23 சதவிகித வீடுகளுக்குத்தான் கழிப்பிட வசதி இருந்தது (இந்திய சராசரியைவிட குறைவு) . இப்போது கணக்கெடுத்தாலும் இதில் மாற்றம் ஏதும் இராது என்றே கருதுகிறேன். கிராமங்கள் அப்படியே இருக்க நகரத்தில் சேரிகள் கணிசமாக அதிகரித்திருக்கின்றன (பத்தாண்டுகளில் நகரத்துக்கு குடிபெயர்ந்த இந்திய மக்கள்தொகை பத்துகோடி). நகர்ப்புறங்களில் கழிப்பிட வசதியுடைய வீடுகளின்  சதவிகிதம் (57.47%) இந்திய சராசரியைக்காட்டிலும் (63.85%) குறைவு. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் வசிக்கும் தமிழக மக்களது எண்ணிக்கை மிக அதிகம் (ஏறத்தாழ 50% சதவிகித மக்கள் நகரவாசிகள்).

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கலைஞரது ஜால்ராக்களில் யாராவது ஒருவர் இதை சுட்டிக்காட்டி ஒரு திட்டத்தைக் கொண்டுவந்திருந்தால்  அவருக்கு “கழிப்பறை கொண்டான்” என்ற பட்டம் கிடைத்திருக்குமே? எல்லோரும் ஒன்றாக பார்க்க முடிகிற டிவியை தனித்தனியே வீட்டுக்கொன்றாக தருகிறீர்கள்.. தனித்தனியே போகவேண்டிய மேற்படிவேலைக்கு மட்டும் மக்களை பொதுஇடத்துக்கு விரட்டுகிறீர்களே., இதென்ன நியாயம்?

வீடு இருப்பவர்களது கதிதான் இப்படியென்றால் நகருக்கு வந்துபோவோர் கதி இன்னும் மோசமானது. ஒவ்வொரு ஊரின் பேருந்து நிலையத்துக்கும் வந்துபோவோரது எண்ணிக்கைக்கு தக்க கழிப்பிட வசதி இருக்கிறதா என்று கேட்டால் யாராலும் ஆம் என்று சொல்ல முடியாது. நூற்றுபத்து கோடி செலவில் கட்டப்பட்ட ஓசூர் பேருந்து நிலையத்தில் ஒரேயொரு இலவசக் கழிப்பிடம்கூட கிடையாது. ஆனால் அங்கு ஒருவரும் பயன்படுத்தாத சுரங்கப்பாதை உண்டு (பஸ் ஸ்டாண்டுக்குள் ஐம்பதடி தூரத்தைக் கடக்க நூறடியில் சுரங்கப்பாதை வைத்தால் எவன்தான் அங்கு போவான்??). எந்த ஒரு நகரத்திலும் பத்து நிமிட நடைபயணத்துக்குள் நீங்கள் ஒரு அரசு சாராயக்கடையை கண்டு பிடிக்கலாம், ஐந்து நிமிட நடையில் பிள்ளையார் கோயிலை கண்டுபிடிக்கலாம்.. ஆனால் அவசரத்துக்கோ ஒரு குட்டிச்சுவர்தான் பல இடங்களில் கிடைக்கும். கருணா சுற்றுப்பயணம் செய்யும் சாலைகளில் வேகத்தடைகள் எல்லாமே நீக்கப்படுகிறது. அவ்வளவு சிறப்பு சவுகர்யங்களை நாங்கள் கேட்கவில்லை, குறைந்த பட்சம் நாங்கள் “போகத் தடை”யில்லாமல் இருக்க ஏதாவது செய்தால் என்ன?

சீசன் காலங்களில் மக்கள் கூடும் இடங்களுக்கு வசதி எந்த அழகில் இருக்கும் என சொல்லவும் வேண்டுமோ? பௌர்ணமியின் போது திருவண்ணாமலை, டிசம்பர் அய்யப்ப சீசனில் கன்னியாகுமரி என மக்கள் குவியும் இடங்களில் சுகாதாரம் மிகக்கேவலமானது. பக்தனின் புண்ணியத்தை வேண்டுமானால் ஆண்டவன் பார்த்துக்கொள்ளட்டும் மூச்சா போவதற்கான வசதியையும் அவனே செய்துகொள்ளட்டும் என விட்டால் எப்படி? ஐந்தாயிரம் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்த சுயமரியாதை கொண்ட கலைஞர் இதற்கொரு ஏற்பாடு செய்யாமல் இருப்பது ஏனோ? ஆறுமாதங்களுக்கு ஒருமுறை கூவத்தை சுத்திகரிக்கும் முறையை தெரிந்துகொள்வதற்காகவே வெளிநாடு செல்லும் ஸ்டாலின், அவர்கள் பெருங்கூட்டம் கூடும் தருணங்களுக்கு எப்படி சுகாதார வசதிகள் செய்கிறார்கள் என்பதை ஒருமுறையாவது பார்த்துவிட்டு வரலாமே!!

கலைஞர் வீடு கட்டும் திட்டம் என ஒரு திட்டம் இருக்கிறது. இருபத்து மூன்று லட்சம் வீடுகள் கட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது, சரி. இன்றைய விலைவாசியில் அவர்கள் தரும் எழுபத்தைந்தாயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு ஒரு குளியலறையையும் கழிப்பறையும் வேண்டுமானால் கட்டலாம், அவ்வளவுதான். அவர்களே குறிப்பிடும் வீட்டின் அளவும் நூற்று சொச்சம் சதுர அடிதான் வருகிறது. இந்த திட்டத்தில் பயனாளியாக நீங்கள் சொந்த நிலமுடையவராக இருக்கவேண்டும், மேற்கொண்டு கடனை கட்ட தயாராக இருக்கவேண்டும் என பல தகுதிகள் தேவைப்படுகின்றன. ஒன்று மட்டும் கேட்கிறேன் கலைஞரே., வெறுங்கையோடு சென்னைக்கு வந்த உங்களுடைய தற்போதைய வீட்டில் இருக்கும் மொத்த குளியல் & கழிப்பறைகளின் அளவு என்ன? நீங்கள் பொழுது ஓயாமல் பீற்றிக்கொள்ளும் கலைஞர் வீடுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவென்ன.. கொஞ்சம் ஒப்பிட்டு சொல்லுங்களேன்!!.

தமிழகத்தில் மொத்தம் ஐம்பத்து மூன்றாயிரம் அரசுப்பள்ளிகள் இருக்கின்றன (2008ம் வருட கணக்கீட்டின்படி). அவற்றில் 13,808 பள்ளிகளில் கழிப்பறை வசதியே கிடையாது. 17,000 பள்ளிகளில் பெண்களுக்கென தனி கழிப்பிட வசதி கிடையாது. ஆக சரிபாதி பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை. மீதமிருக்கும் பள்ளிகளில் கழிவறைகள் எப்படி இருக்கும் என்பது பற்றிய விவரங்கள் இல்லை என்றாலும் அது எப்படி பராமரிக்கப்படும் என்பதை உணர பெரிய ஞானம் அவசியமில்லை. எல்லா மாணவர்களுக்கும் சைக்கிள் தருகிறார்களே எதற்கு என பல முறை நான் யோசித்ததுண்டு, அவசரமெனில் விரைவாக வீட்டுக்குப் போகத்தன் என இப்போது புரிகிறது. 1660 பள்ளிகளில் குடிநீர் வசதி கிடையாது மற்றும் சற்றேறக்குறைய 13,000 பள்ளிகளுக்கு மின்சார வசதி கிடையாது ஆகியவை உபரித் தகவல்கள். கடந்த ஐந்தாண்டுகளில் விழாக்களுக்கு வாரியிறைத்த பணத்தைக் கொண்டே இந்த பள்ளிகளை மேம்படுத்தியிருக்க இயலுமே? பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இப்படியிருக்கும் மாநிலத்தில்தான் 1,100 கோடி செலவில் தலைமைச்செயலகம் கட்டப்படுகிறது. நினைத்தாலே குமட்டுகிறது.. ஆனால் அது அதிகமானால் அதற்கும் கழிவறைக்கு ஓடவேண்டுமே என பயமாக இருக்கிறது.

அரசு அலுவகங்களுக்கு வந்துபோவோருக்கு மட்டுமல்ல, அங்குள்ள அலுவலர்களுக்கே பல இடங்களில் சரியான கழிப்பிட வசதி கிடையாது. ஊனமுற்றோருக்கென சிறப்பு கழிப்பறைகள் தமிழ்நாட்டின் பொது இடங்களில் ஒன்றிரண்டு இருந்தாலே அதிகம் (ஊனமுற்றோர் நலவாரியமே மூன்றாவது மாடியில்தான் செயல்படுகிறது).  ஏராளமாக கூட்டம் வரும் விமான நிலையங்களிலும் வணிக வளாகங்களிலும் கழிப்பறைகள் சிறப்பாக பராமரிக்கப்படுகையில் மற்ற இடங்களில் பராமரிப்பதும் சாத்தியமே. போதுமான எண்ணிக்கையில் அவை இருப்பதும் அதன் பராமரிப்பு முறையாக இருப்பதும் நிச்சயம் மக்களுக்கு பொறுப்புணர்வைத் தரும். அதன் மூலம் மக்கள் இதுபோன்ற இடங்களை வீணாக்கிவிடுவார்கள் என்ற பிம்பத்தை மாற்றலாம். தஞ்சை வட்டாரங்களில், வெளியே தெரியாமல் ஒரு வேலையை முடித்தான் என சொல்வதற்கு ‘குந்துனாப்ல முடிச்சுட்டான்’ என்று சொல்வார்கள். ஆனால் தமிழ்நாட்டில் சரிபாதிபேரால் குந்துகிற வேலையை ‘குந்துனாப்ல’ முடிக்க முடியாத நிலையே நிலவுகிறது. ஆகவே அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் கலைஞரே… அதற்கும் வேண்டுமானால் ஒரு விளம்பரம் கொடுத்துக்கொள்ளுங்கள் “அன்புள்ள முதல்வருக்கு..” (ஆங்காங்கே குத்த வைத்து அமர்ந்திருக்கும் மக்கள் கையெடுத்து கும்பிடுவதுபோல காட்சி வைத்தால் இன்னும் விசேஷம்.)

Advertisements

“கருணாநிதியும் கக்கூஸ் தொடர்பான சில வினாக்களும்…” இல் 33 கருத்துகள் உள்ளன

 1. //எந்த ஒரு நகரத்திலும் பத்து நிமிட நடைபயணத்துக்குள் நீங்கள் ஒரு அரசு சாராயக்கடையை கண்டு பிடிக்கலாம், ஐந்து நிமிட நடையில் பிள்ளையார் கோயிலை கண்டுபிடிக்கலாம்.. ஆனால் அவசரத்துக்கோ ஒரு குட்டிச்சுவர்தான் பல இடங்களில் கிடைக்கும்.//

  🙂

 2. //வெறுங்கையோடு சென்னைக்கு வந்த உங்களுடைய தற்போதைய வீட்டில் இருக்கும் மொத்த குளியல் & கழிப்பறைகளின் அளவு என்ன? நீங்கள் பொழுது ஓயாமல் பீற்றிக்கொள்ளும் கலைஞர் வீடுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவென்ன.. கொஞ்சம் ஒப்பிட்டு சொல்லுங்களேன்!!.//

  வில்லவன் இது முக்கியமாக குடிசையை மாற்ற ஏற்படுத்தப்பட்ட திட்டமே [உள் கலெக்சன் விவகாரங்களுக்குள் நான் வரவில்லை :-)] அதனால் அதை ஒப்பிடும் போது பரவாயில்லை ரகமே!

  மற்றபடி கலைஞர் அறிவித்த இலவச திட்டங்களுக்கு பதிலாக இதைப்போல கழிப்பறை திட்டத்தை ஏற்படுத்தி இருந்தால் நம்ம ஊராவது நாறாம இருந்து இருக்கும் 🙂 ஆனாலும் அதை பராமரிக்க மாட்டாங்க.. அது வேற சிக்கல் இருக்கு… கட்டி விட்டதோட சரின்னு கிளம்பிடுவாங்க.. அது இன்னும் கொடுமையா இருக்கும்.. ம்ம்ம் எப்படி செய்தாலும் நம்மாளுங்க கிட்ட பிரச்சனை தான் போல 😉 ரொம்ப கஷ்டம் தான்.

 3. //ஏராளமாக கூட்டம் வரும் விமான நிலையங்களிலும் வணிக வளாகங்களிலும் கழிப்பறைகள் சிறப்பாக பராமரிக்கப்படுகையில் //

  இல்லைங்க.. விமான நிலையத்திலும் (இங்கே கொஞ்சம் பரவாயில்லை) ரயில் நிலையத்திலும் படு மோசமாக இருக்கிறது.

 4. //அன்புள்ள முதல்வருக்கு..” (ஆங்காங்கே குத்த வைத்து அமர்ந்திருக்கும் மக்கள் கையெடுத்து கும்பிடுவதுபோல காட்சி வைத்தால் இன்னும் விசேஷம்.)//

  ஹா ஹா ஹா

 5. வில்லவன் நீங்க நகைச்சுவை நக்கலாக்கூட எழுதுவீங்களா? சிரித்து மாளல. கிரி சொன்னது தான் முக்கிய அம்சம். கழிப்பட வசதி என்பது நம் மக்கள் மனதில் இன்னமும் உருவாகத ஒன்று. படித்தவர்கள் கூட தங்களது கழிப்பறையை வைத்திருக்கும் லட்சணத்தைப் பார்த்து நொந்து போயிருக்கேன்.

 6. நீங்கள் சொல்வது போல ஓசூர் பேருந்து நிலையத்தில் நான் கழிப்பறையை தேடித், தேடி சலித்துப் போனது தான் மிச்சம். இதில் ஆண்களை விட அதிகமாக பாதிக்கப்படுவது பெண்களே. தேவையான புள்ளிவிவரங்களுடன் கட்டுரை மிக நன்றாக வந்துள்ளது தோழர். வில்லவன்…///////அதற்கும் வேண்டுமானால் ஒரு விளம்பரம் கொடுத்துக்கொள்ளுங்கள் “அன்புள்ள முதல்வருக்கு..” (ஆங்காங்கே குத்த வைத்து அமர்ந்திருக்கும் மக்கள் கையெடுத்து கும்பிடுவதுபோல காட்சி வைத்தால் இன்னும் விசேஷம்.) ///// அருமையான சோயசனை, கண்டிப்பாக இந்த விளம்பரம் கலைஞர் தொலைக்காட்சியில் வரும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.

  மேலும் நீங்கள் சொல்வது போல வீடுகட்டும் திட்டத்திற்கு ரூபாய் 75,000 ஒட்டு மொத்தமாக கிடைப்பது இல்லை. உங்களுக்கு இருக்கும் நிலத்தில் நீங்கள் முதலில் வீட்டுக்கான பணிகளை ஆரம்பிக்க வேண்டும். கால்வாசி பணிகளை நீங்கள் முடித்த பின்னர் தான் உங்களுக்கு ரூபாய் 25,000 கிடைக்கும், பகுதி பணிகளை நீங்கள் முடித்த பின்னர் தான் உங்களுக்கு இரண்டாம் தவணையாக ரூபாய் 25,000 கிடைக்கும், இறுதி பணிகளை முடிக்கும் நிலையில் இறுதி தவணையாக ரூபாய் 25,000 கிடைக்கும். கண்டிப்பாக வீடு கட்டி முடித்த உடன் வாங்கிய கடனை திருப்பிக் கட்டமுடியாமல் நிலம், வீடு எல்லாம் மொத்தமாக இழக்கும் நிலை தான் ஏற்படும். ஏழைகளிடம் உள்ள சிறு நிலத்தையும் அவர்களிடம் பிடுங்கும் மிக நல்ல திட்டம் தான் “ஒழுகாத வீடு திட்டம்” (வீடு இருந்தாத் தானே ஒழுகும்).

 7. நல்ல பதிவு..

  இதையெல்லாம் தனியார் கூட எடுத்து நடத்தலாமே.. எல்லாவற்றையும் அரசை எதிர்பார்க்காமல்… அரசு அடிப்படி வசதி செய்து தரணும் என்றாலும், வெளிநாட்டில் செய்வது போல் கட்டண கழிப்பிடங்கள் ஏற்படுத்தலாம்..

 8. dmk not even give up the contract of paid toilets. in thambaram its local M.L.A or his take&catch ( i mean allakkai in tamil)running this shit business. that not a issue but do u know how much they charge for urinals its very costly 5 rupees!!!

  rice 1 rupee. long live tamilnadu.

 9. நகைச்சுவை எனக்கு ஏற்படவில்லை. இஃது ஒரு கவனிக்க்வேண்டிய பதிவு.

  கழிப்பறை ஒன்றை நவீன வசதிகளுடன் கருனானிதியின் புதல்வன் அஞ்சானெஞ்சன் மதுரையில் கட்டிக்கொடித்திருக்கிறார்.

  கழிப்பறை கட்டிக்கொடுத்தல் அரசு வேலையல்ல. அது அரசாங்க அதிகாரிகளின் வேலை. அது நகராட்சிகளின் வேலை. நகர மக்களிடமிருந்து பிரிக்கப்படும் வரிப்பணத்தை வைத்து நகரை அழகுபடுத்துவது, அத்தியாவசிய தேவைகளைப்பூர்த்தி செய்வது அவர்களின் கடமையாகும். முதலமைச்சரின் அன்று. போதுமான அதிகாரங்கள் நகராட்சிகளுக்குக் கொடுக்க்ப்பட்டிருக்கின்றன. ஏன் ஓசூர் நகராட்சி அதைப் பயன்படுத்தவில்லை. ஏன் கருனானிதி ஒரு திட்டத்தை ஆரம்பிக்க்வேண்டும் ?

  மேலும், கழிப்பறைகளைக்கட்டிக்கொடுக்கப்பட்டால் வெள்ளைக்காரன் அதை நாகரிகமாக பயன்படுத்துவான். ஆனால் இங்கே சிறிது காலத்திற்கப்புறம் அவை நாறும். ஏன் மக்கள் அப்படிப்பட்டவர்கள்.

  கருனானிதிக்கு மட்டுமல்ல். நம் சமூகத்தில் தாயில் தொடங்கி ஒவ்வொருவருக்கும் இதில் பொறுப்புண்டு.

  தமிழர்களுக்கும் சுகாதாரத்துக்கும் தொலை தூரம்.

  அதை மாற்ற முடியுமா என்று பாருங்கள். முடியாவிட்டால் அவர்களுக்கு உரைக்கும்படி (உரைக்காது!) ஒரு அங்கதப் பதிவு போடுங்கள்.

 10. மிக முக்கியமான, ரசிக்கும்படியான ஹாஸ்யத்துடன்கூடிய ஒரு சிறந்த விழிப்புணர்வு பதிவு. வாழ்த்துகள் வில்லவன்…..

  கழிப்பறைகளை அரசு/அரசு அதிகாரிகள் தேவைக்கேற்ப கட்டிக்கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுகருத்தே இல்லை! ஆனால் நம்ம வீட்டு கழிப்பறை தொடங்கி பொது கழிப்பறைகள் வரை, அவற்றை பராமரிக்கனும்னுங்கிற எண்ணம் நம்ம ஊருல சுத்தமா இல்லவே இல்ல! முதல்ல அதை மாத்தனும். அந்த மாற்றம் குழந்தைப் பருவத்துல இருந்தே ஆரம்பிக்கனும். இங்கே (ஜப்பானில்) ஒரு வழக்கமுண்டு. கழிவறைகளை சுத்தம் செய்வதை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க ஒரு சின்ன உத்தியை கையாளுகிறார்கள்.

  கழிவறையை நாம சுத்தமா வச்சிக்கலைன்னா, தாய்ரே (கழிவறை) நோ காமிசமா (தெய்வம்) நம்மள ஆசீர்வதிக்காது அப்படின்னு சொல்லி குழந்தைகளை வளர்க்கிறாங்க. அதனால சின்ன வயசுலயே குழந்தைங்க மனசுல, கழிவறையை சுத்தமா வச்சிக்கனும்ங்கிற எண்ணம் ரொம்ப ஆழமா பதிஞ்சிடுது! இதுல நாம தெய்வத்தைப் போய் கழிவறையோடு சம்பந்தப்படுத்துறாங்களே என்ன கொடுமை இதுன்னு ரொம்ப மேலோட்டமாகவும் யோசிக்கலாம். அப்படியில்லைன்னா, தெய்வம் அப்படீங்கிற ஒரு விஷயமே மனிதனை நல்வழிப்படுத்தத்தானே, அதனால சுகாதாரத்துக்கு அடிப்படைய சுத்தத்தை கழிவறைக்கும் கொடுக்க தெய்வ நம்பிக்கையை பயன்படுத்திக்கிறது நல்லதுதானேன்னும் நினைக்கலாம். (நான் ரெண்டாவது கட்சி!).

  அதனால, கட்டிக்கொடுத்திருக்கிற கழிவறையை சுத்தமா வச்சிக்கிட்டு. பொதுவிடங்கள், பள்ளி இப்படி தேவையான இடங்களிலெல்லாம் இன்னும் கழிவறைகளை கட்டிக்கொடுங்களேன்யா அப்படீன்னு ஓட்டு கேக்க வர்ற வேட்பாளர்களை சட்டையை பிடிச்சி கேளுங்க எல்லாரும்! தமிழ்நாடு அப்பத்தான் வெளங்கும்! நன்றி
  பத்மஹரி,
  http://padmahari.wordpress.com

 11. எல்லோரும் ஒன்றாக பார்க்க முடிகிற டிவியை தனித்தனியே வீட்டுக்கொன்றாக தருகிறீர்கள்.. தனித்தனியே போகவேண்டிய மேற்படிவேலைக்கு மட்டும் மக்களை பொதுஇடத்துக்கு விரட்டுகிறீர்களே., இதென்ன நியாயம்….

  ஐந்தாயிரம் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்த சுயமரியாதை கொண்ட கலைஞர் இதற்கொரு ஏற்பாடு செய்யாமல் இருப்பது ஏனோ? ஆறுமாதங்களுக்கு ஒருமுறை கூவத்தை சுத்திகரிக்கும் முறையை தெரிந்துகொள்வதற்காகவே வெளிநாடு செல்லும் ஸ்டாலின்….

  ஊனமுற்றோர் நலவாரியமே மூன்றாவது மாடியில்தான் செயல்படுகிறது).

  சிரிக்கவும் சிந்திக்கவும் ..வாழ்த்துகள்

 12. ‘குந்துனாப்ல முடிக்கிறது’
  ஒரேயொரு வேலைதான்.
  நீங்க சொல்லுவது ஊரரிந்த ரகசியம்.
  ஆனால்;
  ‘குந்துனாப்ல’ இருந்துகிட்டே
  இன்னும் பல வேலைகளை
  கச்சிதமாய் முடிப்பார் கருணா.
  2 ஜியை வாயில போட்டுக்கிறது
  என்பதிலிருந்து ஆரம்பித்து
  பலவற்றை வாயிலே போட்டுக் கொண்டு,
  ‘குந்துனாப்லயே’ செறித்தும் தள்ளுகிறார்.

 13. //கழிப்பறை கட்டிக்கொடுத்தல் அரசு வேலையல்ல//

  அப்போது வெட்டித்தனமாக விழாக்களுக்கு பணத்தை வாரியிறைப்பது மட்டும்தான் அரசு வேலையா?? பஸ்ஸ்டான்டில் கழிப்பறை கட்டுவது அரசு வேலையில்லை.. போகட்டும். பள்ளிக்கூடங்களுக்கு கழிப்பறை கட்டுவது யார் பொறுப்பு உடன்பிறப்பே? கல்வித்துறையை தங்கம் தென்னரசுதானே பார்த்துக்கொள்கிறார்.. (அது கபில் சிபல் பொறுப்பு என்று சொல்லிவிடாதீர்கள்)

  //கழிப்பறை ஒன்றை நவீன வசதிகளுடன் கருனானிதியின் புதல்வன் அஞ்சானெஞ்சன் மதுரையில் கட்டிக்கொடித்திருக்கிறார்.//

  கழிப்பறை ஒன்றை “அஞ்சா நெஞ்சன்” கட்டிக்கொடுத்திருக்கிறாரா? மன்னிக்கவும் மதுரை முழுக்க அவரது பேனர்களே மறைத்துக்கொண்டு இருப்பதால் அந்த கழிப்பறையைப் பற்றி தெரியவில்லை. (அஞ்சாநெஞ்சனைப் பற்றி நினைத்தாலே எனக்கு தா.கிருட்டிணனும் தினகரன் ஊழியர்களும்தான் நினைவுக்கு வந்தார்கள்.. இனி வேண்டுமானால் இந்த டாய்லெட்டையும் கணக்கில் சேர்த்துவிடுகிறேன்)

  //தமிழர்களுக்கும் சுகாதாரத்துக்கும் தொலை தூரம்.

  அதை மாற்ற முடியுமா என்று பாருங்கள். முடியாவிட்டால் அவர்களுக்கு உரைக்கும்படி (உரைக்காது!) ஒரு அங்கதப் பதிவு போடுங்கள்.//

  பெரிய வணிக வளாகங்களில் இருக்கும் சுத்தமான கழிவறைகளை பயன்படுத்துபவர்கள் இதே மக்கள்தான். நான் ஒத்துக்கொள்கிறேன் நாங்கள் சுகாதாரத்தில் கொஞ்சம் பலவீனமானவர்கள்தான். ஆனால் நீங்கள் சிலாகிக்கும் தலைவர்களையும் அவர்தாம் புத்திரர்களையும்விட நாகரீகம் தெரிந்தவர்கள், பொது இடங்களில் அடுத்தவர்களின் சவுகர்யம் பாதிக்கப்படாதிருக்க விரும்புபவர்கள்..

 14. //எல்லோரும் ஒன்றாக பார்க்க முடிகிற டிவியை தனித்தனியே வீட்டுக்கொன்றாக தருகிறீர்கள்.. தனித்தனியே போகவேண்டிய மேற்படிவேலைக்கு மட்டும் மக்களை பொதுஇடத்துக்கு விரட்டுகிறீர்களே., இதென்ன நியாயம்?//

  எப்படி இந்த மாறி எல்லாம் யோசிக்க தோணுது… நமக்கு ஒண்ணும் தோன மாட்டேங்குதே..

 15. இந்த கட்டுரையை படித்தவுடன் எனக்கு திருச்சி மற்றும் சாயல்குடி அனுபவங்களே நினைவுக்கு வருகின்றன. திருச்சியைப் பொருத்தவரை நகரின் மையப்பகுதிகளில்கூட ஆங்காங்கே இருக்கும் வேலிகாத்தான் முட்புதர்களே மக்களின் கழிப்பிட காப்பான்கள். அதிலே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே ஏல்லைக்கோடு வேறு. மிக எச்சரிக்கையாக செல்ல வேண்டும். இல்லை என்றால் மானம் கப்பலேறி விடும். அதே நேரத்தில் கையில் ஒரு குச்சியையும் எடுத்துச் செல்ல வேண்டும். இல்லை என்றால் மலத்தைக் கவ்வ வரும் பன்றிகளின் கூட்டம் குண்டியைக் குதறிவிடும். அப்பப்ப நினைத்தாலே குலை நடுங்குகிறது. மலத்தைக் கழிப்பதா அல்லது பன்றிகளை துரத்துவதா? மலம் கழிக்கும் போது ஒரே இடத்தில் இருக்கமுடியாதல்லவா? சற்று நகர்ந்தாலே போதும். பன்றிகளுக்கிடையில் நடக்கும் போட்டா போட்டியை பார்க்க வேண்டுமே. நேஷனல் ஜியாகரபிக் சேனல்காரனுக்கு இதெல்லாம் தெரிந்தால் ஒரு பெரிய எபிசோடே கிடைக்கும்.

  கலைஞரின் கக்கூஸ் திட்டம் செயல்படுகிறதோ இல்லையோ பன்றிகளே பல நகரங்களை நாத்தத்திலிருந்து காப்பாற்றி வருகிறன்றன..

 16. வில்லவன் இந்தியாவில் நாகரீகமில்லாத ஒரு சமுகம் உண்டெனில் அது அரசியல் அதிகார வர்க்க சமுகம்தான்… எந்த சொரணையும் இல்லாத தடித்தனம் ஏறிய வர்க்கம் அது. எந்த இடித்துரைப்புகளும் அதுகளை ஒன்றும் செய்யப்போவதில்லை.. நாம் ஊதவேண்டிய சங்கை ஊதாமலும் இருக்கமுடியாது. கொஞ்சம் கூட மனசாட்சியற்ற பிண்டங்கள் வரலாற்றில் காறித்துப்பும் குறிப்பில் இடத்தில் கூட இடம்பெற முடியாது.

 17. //கலைஞரின் கக்கூஸ் திட்டம் செயல்படுகிறதோ இல்லையோ பன்றிகளே பல நகரங்களை நாத்தத்திலிருந்து காப்பாற்றி வருகிறன்றன..//

  எனது ஓட்டு பன்றிகளுக்கே!! 🙂

  (எனது பின்னூட்டத்தில் எந்த உள்குத்தும் இல்லை! :-))

 18. பொதுவாக இந்தத் தோழரின் பின்னூட்டங்களில் தேவையான கோபமும் ஆக்ரோஷமும் இருக்கும். இந்த பின்னூட்டத்தைப் பாருங்கள்! மேதகு. ஊரான் அவர்கள் (உண்மையான) பன்றிகளிடம் எப்படி பயந்து நடுங்கியிருக்கிறார் என்பதில் அவரின் மலரும் நினைவுகள் போட்டு உடைப்பதை…!

 19. இங்கே பின்னூட்டம் எழுதிவிட்டு பிறகு யோசித்துப் பார்த்தேன். இது பின்னூட்டத்தோடு் நிறுத்தப்படக்கூடிய ஒன்றல்ல, ஒரு தனி இடுகையை இதற்காக எழுதலாமே என முடிவு செய்துள்ளேன். முயற்சிக்கிறேன் விரைவில் வெளியிட… ஊரான் வலைப்பூவில்தான்.
  நன்றி தோழர் புதிய பாமரன்.

 20. எனது சிறுவயது நினைவுகளைக் கிளறி விட்ட ஊரான் அவர்களுக்கு நன்றி!
  அது ஒரு அலாதியான அனுபவம்தான்!!

 21. நண்பர் வில்லவன்,

  வாழ்த்துக்கள்.
  கொஞ்சம் இங்கே வந்து பாருங்களேன் –

  http://vimarisanam.wordpress.com/2011/02/22/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE/

  அன்புடன்
  காவிரிமைந்தன்

 22. //கழிப்பறை கட்டிக்கொடுத்தல் அரசு வேலையல்ல//

  சிம்ம்க்கல் எனும் உடன்பிறப்பே ”தமிழர்களுக்கும் சுகாதாரத்துக்கும் தொலை தூரம்.

  அதை மாற்ற முடியுமா என்று பாருங்கள். முடியாவிட்டால் அவர்களுக்கு உரைக்கும்படி (உரைக்காது!) ஒரு அங்கதப் பதிவு போடுங்கள்.”

  நீங்கள் சந்திர மண்டலத்தில் வாசம் புரிகிறீரோ?

 23. //முதல்ல அதை மாத்தனும். அந்த மாற்றம் குழந்தைப் பருவத்துல இருந்தே ஆரம்பிக்கனும்.//

  உங்கள் கருத்து முற்றிலும் சரியானதே.,

  மேலும், மூன்று வயதுக்குள் குழந்தைகளுக்கு தனியே கழிப்பறையை பயன்படுத்தும் பழக்கத்தை கற்றுத்தருவது அவர்களது ஆளுமையை சிறப்பானதாக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன.

 24. வில்லவன்!
  இதை ஏன் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை?
  அதில் நான் பார்க்கவில்லையே..

 25. சென்ற திங்கள் அன்றே இணைத்துவிட்டேன் நண்பரே..

  தமிழ்மணத்தில் மற்றும் இண்ட்லியில் மட்டும் இணைத்திருக்கிறேன்.

 26. இது பற்றி நான் நிறைய வருத்தப் பட்டு “உண்ண உணவகங்கள் சென்னையில் உண்டு கழிக்கத்தான் ஒன்றும் இல்லை” என்னும் வகையில் பல வருடங்களுக்கு முன் கவிதைகள் எழுதியது உண்டு. சென்னையில் பிறந்து சென்னையில் வளர்பவன் என்னும் வகையில் சென்னையின் பல குறைபாடுகளை நான் அறிவேன். அதில் இது பிரதானமானது. எனது அலுவலகம் இருக்கும் கட்டிடத்திலேயே நல்ல கழிப்பிட வசதி கிடையாது. அதற்கென்று சில சமயம் உணவகங்களுக்கு சென்றால் அங்குள்ள கழிப்பறைகள் இன்னும் நரகம்! அதற்கென்று ஒரு தேநீர் சிற்றுண்டி சாப்பிட்டு கைப்பணம் அழுது, ஏதோ சாப்பிட வந்தது போல ‘பாவலா’ காட்டவேண்டும். பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் நிலை நினைத்து நான் உள்ளுக்குள் வருந்தாத நாளில்லை. பெரும் வணிக நிலைய கட்டிடங்களில், சிறு சிறு இடங்களைக் கூட கடைகளாக மற்றும் வணிக புத்திக்கு நடுவில் இதற்கென்று ஒரு சிறு இடம் இருக்கும் என்று நினைத்தால் அது முழு பைத்தியக் காரத்தனம்! அரசு டெண்டர் விட்டு நடத்தும் அலங்கோலமான நகராட்சி கழிப்பிடங்கள் சென்னை முழுதும் விரல் விட்டு எண்ணி விடலாம் என்று நினைக்கிறேன். அதிக பட்சம் ஒரு ஐம்பது நூறு இருந்தால் கூட ஒரு கோடி பேர் புழங்கும் மாநகரத்தில், திடீரென்று மல-ஜலம் வந்தால் கழிக்க மக்களுக்கு ஒரு வசதியான கட்டமைப்புகள் இல்லாதது பெரும் குற்றமாக எவருக்கும் படவில்லை. எங்கெங்கு இருக்கிறது என்றும் எவருக்கும் தெரியாது. உதாரணமாக தி-நகரில் ஷாப்பிங் செய்யும் ஒருவருக்கு திடீர் உபாதை ஏற்பட்டால் அவர் உபாதை கழிய ஒரு இடம் எங்கே இருக்கிறது என்று நான் கேட்கிறேன்…நீங்கள் யோசித்து உங்கள் மண்டையை உதைத்துக் கொள்ளுங்கள். அதற்குள் அவர் ‘வழியிலேயே-வழிந்து விடுவார்! இதெல்லாம் ஒரு சிங்கார சென்னை….தூ! தூ! மாறி மாறி வந்த திராவிட ஆட்சிகள் கிழித்த கிழிப்பு இதுதான்!

 27. நிறுவனங்களில் கழிப்பறைகள் பற்றிய அக்கறை பூஜ்ஜியம்தான் என்பதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். டாடாவின் ஆயத்த ஆடை அலுவலகம் ஒன்று பெங்களூரில் இருக்கிறது. அலுவலக கட்டிடத்தின் உள்கட்டமைப்புக்கு சற்றும் பொருந்தாத வகையில் இருக்கும் அவர்களது கழிப்பறை, காரணம் அது அந்த தளத்துக்கு பொதுவானதாம்.

  கூர்ந்து கவனித்தால் ஒன்று விளங்கும்.. இடம் எதுவாயினும் கழிப்பிட வசதி குறித்து அக்கறையற்றிருக்கும் எல்லா பெருந்தலைகளும் அவர்களது தனிப்பட்ட இடத்தில் அந்த வசதியை சிறப்பாக வைத்துக்கொள்கிறார்கள் (அது மேயரோ அல்லது பொது மேலாளரோ., யராயினும்)

  அரசு மருத்துவ மனைக்குப் போனால் ரத்தக்கண்ணீரே வடித்துவிடுவோம். பல கழிப்பறைகள் தண்ணீர் வாளிகள் இருக்காது, தஞ்சையில் பக்கெட்டுக்காக காத்திருந்த நோயாளிகளை நான் பார்ததுண்டு. ஆனால் முரண்நகையாக இந்த வசதியை புறக்கணிக்கும் அமைச்சர் பெருமக்கள் தங்கள் பிரச்சார வாகனத்தில்கூட டாய்லெட் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள்.

 28. தனியார் பலர் இதை நடத்துகிறார்கள், அங்கு இரண்டு முதல் ஐந்து ரூபாய்வரை வசூலிக்கிறார்களளென்பதுதான் விசயம். சாதாரண மக்கள் இதை எப்படி சமாளிப்பார்கள் என்பதுதான் கேள்வி.. ஒரு ஹோட்டல்காரன்கூட அவனது வாடிக்கையாளர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என விதி இருக்கும்போது (பின்பற்றப்படுகிறதா என்பது விவாதத்துக்கு உரியது) அரசு ஏன் அப்படியான கடமைகளை புறக்கணிக்கிறது எனும் கேள்வியை நாம் எழுப்புவது அவசியம். பேருந்து சேவையையும் பள்ளி கல்வித்துறையையும் அரசு வைத்திருக்கிறது அங்குதான் வசதிகள் மிக பரிதாபமாக இருக்கிறது. ஆகவே இதன் முதல் பொறுப்பாளி அரசுதான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s