பிரிவோம் சந்திப்போம்- பாகம் 2


சட்டை கிழிந்தமூர்த்திபவனில் ஐவர் குழு ஆலோசனை கூட்டம் நடத்துகிறது. பித்தளை வேலு தலையில் ஹெல்மெட் மற்றும் இரண்டு டவுசர்கள் என தக்க பாதுகாப்போடு வருகிறார். அங்கு திடலில் உள்ள நிரந்தர கண்டன ஆர்பாட்ட மேடையில் “கோஷ்டியே கூடாது” என்று சொல்லும் கோஷ்டிக்கு மூன்று சீட்டுகேட்டு ஒரு ஆர்பாட்டம் நடக்கிறது. மற்றொரு புறம் வாங்கிரசில் விரைவில் வர இருக்கும் கோஷ்டி போர்டபிலிட்டி வசதிக்கான (விரும்பும் கோஷ்டிக்கு மாறும் வசதி) விண்ணப்பங்கள் சூடான விற்பனையில் இருக்கின்றது.

கூட்ட அரங்குக்குள் வரும் பித்தளை வேலு அவரது நாற்காலி தெற்கு பார்த்து இருப்பதால் கோபமாக மற்றவர்களை பார்க்கிறார். கிழங்கோவன் அங்கிருப்பதால் இந்த வேலையை செய்த வாஸ்து விரோதி அவர்தான் என முடிவு செய்து பல்லைக்கடித்துக்கொண்டு அமைதியாகிறார் (அவரது உள்ளம் சீமான் எங்கிருந்தாலும் வாழ்க என்கிறது).

பித்தளை வேலு: ம்ம்.. ஏம்மா பாஸந்தி ஆடலரசு வழக்கம்போல நீயே கூ(ட்ட)த்த ஆரம்பி.

பாஸந்தி : கவர்மெண்ட் இஸ் ரெடி டு டிஸ்கஸ் ஆல் தி இஷ்யூஸ் இன் தி ஹவுசஸ் ஆஃப் பார்லிமெண்ட்.. பட் வி வில் நாட் அக்செப்ட் த டிமாண்ட் ஃபார் எ ஜே.பி.சி.. தி ஆப்போசிஷன் ஷுட் கம் அண்டு டிஸ்கஸ்

கேனசேகரன்: யோவ் யாராவது அந்தம்மாவ தண்ணி தெளிச்சு எழுப்புங்கையா.. ஆறு மாசமா இந்த டயலாக்க சொல்லி சொல்லி இப்ப எதை கேட்டாலும் இந்த பதிலத்தான்  சொல்லுது.

ச்சீ. ‘பீ’தம்பரம்: ஏற்கனவே நாப்பதெட்டு சீட்டு வாங்கியிருக்கோம்.. தொண்டர் பலத்துல நாம “புதிய உளுந்தூர்பேட்டை” கட்சி அளவுக்குகூட இல்லைனாலும்  இப்போ ஸ்பெக்ட்ரம் மூலமா கணிசமான பலத்தை அடைஞ்சிருக்கோம். அதுனால இந்த தேர்தல்ல நம்ம கட்சி உறுப்பினர்கள் எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்கும்படி நூத்தி இருபது சீட்டாச்சும் வேணும்…

கசந்த குமார்: ஏங்க பேசுறதுக்கு முன்னால பித்தளை வேலுவ முழுசா செக் பண்ணிடுங்க., கொலைஞர் ஏதாவது மைக்ரோ போனை அவரு உடம்புல வச்சு அனுப்பியிருக்கப்போறாரு..

பி.வேலு: ஆமா.. அவரு ரொம்ப யோக்கியம்.. பத்தவைக்கிற வேலைய நாங்க எல்லோரும் கத்துகிட்ட ஸ்கூல்ல அவருதான்யா ஹெட்மாஸ்டரு..

ச்சீ.பீதம்பரம்: என்னை பத்தி பெருமையா பேசறத நான் விரும்பல.. காலங்காலமா வாங்கிரஸ் எந்த கொள்கையை பின்பற்றுதோ அதைத்தான் நானும் ஃபாலோ பண்ணினேன். நாம தொடர்ந்து ஏமாறுபவர்களாவே இருக்கக்கூடாது. ஆறுவருசமா தரைமுருகன் நம்மை  கிண்டல் பண்ணினார் அதை பொறுத்துக்கொண்டோம். இனியும் நம்மை அவர்கள் கேவலப்படுத்துவதை நாம் சகித்துக்கொள்ள முடியாது., அந்த உரிமை சேமியாவுக்கு மட்டும்தான் உண்டு.

கிழங்கோவன்: நம்ம மாநில தலைமை சரியில்லைங்க, இவரு கடந்த ஐந்து ஆண்டுகாலமா வீட்டுக்கு சேமியாவே வாங்கல. தலைமை மேல மரியாதை இல்லைங்குறதுக்கு இதைவிட ஆதாரம் என்ன வேணும்? வாங்கிரஸ் தலைமையைத் தவிர மற்ற எல்லா இடத்துலயும் தன்மானத்தோட நடக்கனும்னு அன்னை சொன்னாங்களா இல்லையா? தன்மானம் கிடக்கட்டும்ங்க தலைமுடிகூட இல்லாதவங்க  தலைவரா இருந்தா நாம எப்படி விளங்குறது?

பித்தளை வேலு: நான் தலைமை மேல மரியாதை வைத்திருப்பவனா இல்லையா என எந்த மரியாதைக்குரிய மானங்கெட்ட நண்பர்களுக்கும் நான் சொல்லவேண்டும் என அவசியமில்லை. ஒவ்வொரு மாதமும் மளிகை பில்லை அன்னைக்கு தவறாமல் அனுப்புகிறேன், அவருக்குத் தெரியும் என் விசுவாசம் பற்றி..

ச்சீ.பீ: இங்கயாவது என்ன பேச விடுங்க.. இல்லைன்னா ரெண்டு லாரி ராணுவத்த கொண்டு வந்து ஜனநாயகத்தை நிலைநாட்டிருவேன். கொலைஞரோடு நமக்கு ஆயிரம் முரண்பாடு இருந்தாலும் கூட்டணி தர்மம் காரணமாவும் அதைக்காட்டிலும் என் மைந்தனின் எம்எல்ஏ கனவு நனவாக வேண்டும் என்பதாலும் நான்  அமைதி காக்கிறேன்.

பித்தளை வேலு: ரொம்ப சரியா சொன்னீங்க., நாம இந்த வாட்டி மட்டும் பெரியவரோட சொல்லுக்கு கொஞ்சம் கட்டுப்பட்டு போயிடுவோமே..

கோவை தகரம்: உனக்கென்னய்யா ஒரு சீட்டு கிடைச்சா போதும்.. எங்களுக்கெல்லம் புள்ள குட்டி இருக்குல்ல, அவனுங்களுக்கு சீட்டு இல்லன்னா எங்க கொரவளய கடிச்சுடுவானுங்க தெரியுமா.. முப்பது வயசுல பையனுங்க இருந்தா அந்த கஷ்டம் உனக்கு தெரியும்.

ச்சீ.பீ: அவரு பேசலய்யா., பாரினுக்கு ஆளனுப்புன கேசுல காப்பாத்துன விசுவாசம் பேசுது.

பித்தளை வேலு: அய்ய.. போன எலக்ஷன்ல எப்புடி ஜெயிச்சோமுன்னு அய்யா மறந்துட்டாரு போலருக்கு.

திருத்தணி அனந்தன்: சரி சரி.. சண்ட போடாதீயப்பா., பிரச்சாரத்துல நம்ம தொண்டர்கள் எல்லோரும் பதனிதான் குடிக்கனும்னு ஒரு தீர்மானம் கொண்டுவந்தா என்ன?

மீட்டர் அல்போன்ஸ்: இந்தாப்பா கசந்த குமாரு.. உங்கண்ணனை கொஞ்சம் சும்மாயிருக்க சொல்லு. இல்லன்னா ஏடாகூடமாயிடும்.

அசன் சளி (தலைவர்- ராஜபக்ஷ கோஷ்டி) : ரொம்ப துள்ளாம கட்டுன வேட்டி கரெக்டா இருக்கான்னு பாருங்க.. எங்க வற்றோம்னுகூட தெரியாம மறந்தாப்புல க.முக வேட்டிய கட்டிகிட்டு வந்து பேச்சப்பாரு.,

பாஸந்தி: எல்லோரும் வேண்டிய மட்டும் திட்டிகிட்டீங்களா, வழக்கம்போல அன்னை சேமியாவின் வழிகாட்டுதலின்படி செயல்படுவோம்னு அறிவிச்சுடவா?
———–
காட்சி 3.

சேமியா வீட்டு வாசலில் நிற்கிறார்கள் கொலகிரி, மெக்டோவெல்ஸ், ஜெகத்து இட்சகன் மற்றும் மூவர். உள்ளே சி.பி.ஐ. அதிகாரிகள் வீட்டை ஒட்டடை அடித்துக்கொண்டிருப்பதால் ஒரு அரைமணி நேரத்துக்கு ரோட்டிலேயே நிற்கும்படி தகவல் சொல்லிவிட்டுப்போகிறார் சேமியா வீட்டு தோட்டக்காரர்.

கொலகிரி: எல்லோரும் நல்லா கேட்டுக்கங்க.. அந்த வெள்ளை பேப்பரை உள்பாக்கெட்டுல வையுங்க., அவசரப்பட்டு யாரும் வெளியே எடுக்கக்கூடாது என்ன..

மெக்டோவெல்ஸ்: இதெல்லாம் நமக்கென்ன புதுசா என்ன மாஞ்சா நெஞ்சரே., எவ்வளவு வருசமா கட்சியில இருக்கோம் இதுகூடவா தெரியாது…

(அப்போது நகமது படேல், கலைமாமணி பெர்ணாண்டர்ஸ் மற்றும் சில்லறை சங்கர் அய்யர் ஆகியோர் வந்து அவர்களை அழைத்துச் செல்கிறார்கள். உள்ளே சேமியா காந்தி மற்றும் மரணாப் முகர்ஜி ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள்)

ஆறு அமைச்சர் பெருமக்களும் உலகமகா பவ்யத்துடன்  உள்ளே வருகிறார்கள். பின்பக்கம் கூடுமானவரை தூக்கலாகவும் தோளும் தலையும் கூடுமானவரை இறக்கமாகவும் இருக்கும்படி கற்பனை செய்துகொள்வது காட்சியை சிறப்பாக புரிந்துகொள்ள உதவும்.

மருதமலை மாணிக்கம் : (மெல்லிய குரலில்) இப்பத்தான் அ.இ.அ.தி.மு.கவுல இருக்குறது எவ்வளவு கஷ்டம்னு புரியுது (அ.இ.அ.தி.மு.க= அனைவரையும் இரக்கமில்லாமல் அவமானப்படுத்தும் தி.மு.க )

நகமது படேல்: ஏங்க பவ்யம் பயங்கரமா இருக்கே.. வந்தவங்கள வேஸ்ட் பண்ணாம நம்ம சிம்லா வீட்டுல பெருச்சாளி பிடிக்க அனுப்பிரலாமா?

சேமியாவின் பாதுகாவலர் சார்ஜ் (charge): அப்புறம் நீங்கள்ளெல்லாம் எதுக்கு தண்டத்துக்கா இருக்கீங்க,. ரொம்ப பேசினா உங்க எல்லோரையும் தூக்கிட்டு உங்க எடத்துக்கு கேரளா சர்ச்லேருந்து ஆள் கொண்டுவந்துருவேன்.,

மரணாப் (மனதுக்குள்): அடப்பாவிகளா.. அடுத்த பிரதமரா வர வேண்டியவன், இப்போ இந்தம்மா வீட்டு வாட்ச்மேனுக்கெல்லாம் பயந்து நடுங்க வேண்டியிருக்கு.

கொலகிரி: அம்மா நான் என்ன சொல்ல வற்றேன்னா…

சேமியா: உஷ் தொந்தரவு பண்ணாதீங்க., நகுல் தம்பி மூக்கு நோண்டிக்கிட்டிருக்கில்ல. எதுவா இருந்தாலும் நோண்டி முடிச்சதுக்கு பிறகு பேசுங்க. அப்புறம் ஒரு விஷயம், எதுவா இருந்தாலும் இங்கிலீஷ்ல பேசுங்க. நம்ம தம்பி என்னிக்காவது இத்தாலில பேசியிருக்கா??. அதான் அடுத்த பிரதமர் லெவலுக்கு முன்னேறியிருக்கு!!

கொலகிரி: (மனதுக்குள்) இப்போதைக்கு எனக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை இங்கிலீஷ்தான்..

ஒருவழியாக நகுல் காந்தி வேலையை முடிக்க.. பேச்சுவார்த்தை தொடர்கிறது.

கேபிள் நிதி: எங்க தாத்தா பேசினதயெல்லாம் நீங்க மனசுல வச்சுக்கப்படாது., எப்படியாவது ராஜினாமவ ஏத்துக்க மாட்டோம்னு நீங்க சொல்லனும்.,

சேமியா: தம்பி., நீ எவ்வளவு பக்குவமா பேசற. இந்த திறமை உன் தாத்தாவுக்கு இல்லையே.

நிதி: அப்படியெல்லாம் எதுவுமில்லைம்மா., அறுபத்து மூனுங்குற நம்பர் தாத்தாவுக்கு ராசியில்ல. அதான்.

அப்போது வீட்டை ஒட்டடை அடித்து முடித்த சி.பி.ஐ. அதிகாரிகள் வந்து (கோரசாக) : அம்மா வேலயெல்லாம் ஆச்சு., அடுத்த வண்டியை பிடிச்சு கோபாலபுரத்துக்கும் சி.ஐ.டி காலனிக்கும் ஒரு எட்டு போயிட்டு வந்துரட்டுங்களா?

(உடனே )அமைச்சர்கள் (பதறி): நாங்க பகுத்தறிவு வழி வந்தவங்க மேடம். அதனால அறுபத்து மூனுக்கே ஒத்துகுறோம்.

சேமியா: எங்க தகுதிக்கு உரிய சீட்டு கொடுத்ததுக்கு ஓ.கே. ஆனா உங்க தலைவர் எகத்தாளமா பேசுனதுக்கு என்ன பரிகாரம்? சீக்கிரம் சொல்லுங்க, ரோட்டு முக்குல கலாயம் சிங் சைக்கிளோட வெயிட் பண்றாரு..

உடனே கேபிள் நிதி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒரு போட்டோவை சேமியாவுக்கு தருகிறார். அதில் கொலைஞர் சேமியாவின் ஆளுயர படத்தின் காலில் விழும் காட்சி இருக்கிறது. கூடவே கூட்டணி மீண்டும் அமையாவிட்டால் கடற்கரையில் உண்ணாவிரதம் இருப்பேன் எனும் அம்மா தாயே டைப் கடிதமும் இணைக்கப்பட்டிருக்கிறது.

(சேமியா நகுலிடம் என்ன ஒத்துக்கலாமா என ஜாடையாக கேட்கிறார், அவர் ஒத்துக்கொண்டதும் டீல் ஓகே என நிதியிடம் சொல்கிறார்.)

எல்லோரும் வெளியே வந்து பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாக அறிவிக்கிறார்கள்.

சுபம் (நமக்கல்ல)..

Advertisements

“பிரிவோம் சந்திப்போம்- பாகம் 2” இல் 5 கருத்துகள் உள்ளன

  1. வில்லவன் உடனடியாக இடுகையில் எழுத ஆரம்பிங்க. அடுத்த பதிவு இடுகையில் தான வரவேண்டும். சும்மா கிச்சு கிச்சு மூட்ற வேலையெல்லாம் வேண்டாம்.

  2. வில்லவன்,
    வழக்கம் போல் மிக அருமை…
    இவனுக கிட்ட மாட்டின நம்ம நிலைமைய நினைச்சு நொந்துகிட்டாலும்………. பெருச்சாளி பிடிக்கிற மேட்டர் பயங்கர காமெடி… ஆமா எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க…
    Keep the good work going for long time .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s