மாமாக்களை தேர்வு செய்வது கவுரவமான காரியமாகிவிட்டால், யோக்கியனாக இருப்பது ஜனநாய விரோதம்தான்..


ஒரு லாரி கண்ணீரை கொட்டி அழுத வைகோவின் சோகக்காட்சிகளும் தன்மானம் வேண்டுமென்றால் திமுகவுக்கு வாக்களியுங்கள் என கருணாநிதி சிரிக்காமல் சொன்ன நகைச்சுவைக் காட்சிகளுமாகக் கலந்து ஒரு தமிழ் சினிமாவுக்கான இலக்கணங்களுடனும் தேர்தல் வந்து, முடிந்தும் விட்டது. வீட்டுக்குத் தேவையான எல்லா பொருட்களையும் கொடுப்பதாக இரண்டு முக்கிய கூட்டணிகளும் உத்திரவாதம் தந்திருக்கின்றன. ஆனால் உங்கள் வீடோ இடமோ அடுத்து ஆட்சியமைப்போரால் பிடுங்கப்படாது என்பதற்கு யாதொரு உத்திரவாதமும் இல்லை. ஒரு திரைப்படப்பாடலில் மோகன் பாடிக்கொண்டிருக்கும்போது அம்பிகா செத்துப்போவார் இன்னொரு பாடலில் அம்பிகா பாடிக்கொண்டிருக்கும்போது மோகன் செத்துப்போவார். கிட்டத்தட்ட அப்படியான சூழலில்தான் இந்த தேர்தலும் நடக்கிறது, ஒருவரது வெற்றி இன்னொருவரது கூடாரத்தை காலிசெய்யும்.

திமுகவுக்கு இது சோதனையான தேர்தல் என கருத்து நிலவுகிறது. ஆனால் ஐந்தாண்டுகளில் நடந்திருக்கும்  குடும்ப வன்முறையை ஒப்பிடுகையில் அவர்கள் மீதான எதிர்ப்பு குறைவாகவே இருக்கிறது. திமுகவின் பலமாக ஜெயவின் பலவீனமும் ஜெயவின் பலமாக கருணாநிதியின் பலவீனமும் மட்டுமே இருக்கும் தேர்தல் இது. தனிப்பெரும்பான்மை நிச்சயம் கிடைக்காது எனும் நிலைக்கு வந்தது கருணாவின் மிகப்பெரும் சறுக்கல் என்றால் இந்த தேர்தலிலும் தன் குடும்ப சண்டையை கட்டுக்குள் வைத்திருப்பது அவரது பெரும் வெற்றி. இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த “பங்கு தந்தை” நிச்சயம் கருணாநிதிதான்.

அதிகார ஆசையால் ஒரு மொன்னையான காரணத்தை சொல்லி திகவில் இருந்து பிரிந்து தனிக்கட்சியாக துவங்கப்பட்டது திமுக என்பதால் காரணம் கண்டு பிடிப்பதில் அவர்களுக்கு நல்ல சாமர்த்தியம் உண்டு. ஆனால் அவர்களே காரணம் சொல்ல முடியாத அளவுக்கான சமரசங்களுக்கு கட்சி ஆட்பட்டிருக்கிறது. பாண்டிச்சேரியில் அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளர் கருணாவிடம் ஆசி வாங்க வந்தபோது கைதுசெய்யப்பட்டிருக்கிறார். மன்னார்குடியில் திமுகவில் விருப்பமனு வாங்கியவர்களில் டி.ஆர் பாலுவின் மனைவியும் மகனும் அடக்கம். மகனுக்கு சீட்டு கிடைக்க கொந்தளித்துப்போன மனைவி ஒரு அறிக்கை தந்திருக்கிறார் “டி.ஆர்.பி ராஜா என் கணவனின் மகன்தான்.. ஆனால் அவரது அம்மா என் கணவரின் மனைவி அல்ல. அரசு மற்றும் கட்சிப் பதிவுகளின்படி நான் தான் அதிகாரபூர்வ மனைவி” . என்ன கண்ணை கட்டுகிறதா? இனி திமுகவில் அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் முன்பு தலைவர்களின் அதிகாரபூர்வ மனைவிகளை அறிவிப்பது நல்லது.

அம்மா வட்டாரம் நியாயமாக மிகுந்த நம்பிக்கையோடு தேர்தலை எதிர்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவரது முகத்தைப்போலவே மறைக்கவியலாத இன்னொரு அடையாளமான நன்றிகெட்டத்தனம் அதற்கு இடையூறாக இருக்கிறது. வைகோவை அவர் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியது கட்சி சார்பற்றவர்களை கடுப்பேற்றியிருக்கிறது, இதற்கு யாதொரு அரசியல் சிந்தனையும் காரணம் இல்லை. ஆயிரம்தான் இருந்தாலும் ஒரு ஆம்பளைய இப்படியா ஒரு பொம்பள அவமானப்படுத்துறது? எனும் மரபான கேள்விதான் இந்த கோபத்தின் பின்னால் இருக்கிறது.

வைகோவை மட்டும் அவமானப்படுத்திவிட்டார் என மதிமுகவினர் கவலைப்படக் கூடாது. அவர் பாரபட்சம் இல்லாமல் எல்லோரையுமே அவமானப்படுத்தியிருக்கிறார். மற்ற கூட்டணியினர் இப்போதில்லாவிட்டாலும் ஜூன் மாதம் நிச்சயம் வைகோவின் நிலைக்கு வந்துவிடுவார்கள். நா.ம.க தலைவர் கார்த்திக்கையெல்லாம் ஒரு ஆளாக மதித்து அசிங்கப்படுத்திய அம்மா மற்றவர்களை விட்டுவிடுவாரா என்ன?  இது தெரிந்ததால்தான் நாடாளுமன்ற தேர்தலில் விழுந்து விழுந்து ஆதரித்த பெ.தி.க, பழ.நெடுமாறன் ஆகியோர் இப்போது அடக்கி வாசிக்கிறார்கள். நாம் ஒருவகையில் மம்மிக்கு நன்றி சொல்லவேண்டும். வழக்கமாக தேர்தல் நேரத்தில் மக்களுக்கு எதிர்கட்சிக் கூட்டணி மீதிருக்கும் மெலிதான பாசம் இப்போது இல்லை, அதற்கு ஜெயாவின் தனிப்பட்ட குணநலனே உதவியிருக்கிறது.

மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்கவில்லையே தவிர மற்றபடிக்கு கம்யூனிஸ்டுகளும் பாமக லெவலுக்கு இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஜெயா கம்பெனியில் இடமில்லை என்ற நிலை வந்தபோது இவர்கள் நாற்பது தொகுதி வாங்குமளவு மட்டுமே வலுவுள்ள விஜயகாந்திடம் ஓடினார்கள். ஒரு கூட்டணியை முன்னெடுக்க முடியும் எனும் நம்பிக்கை முந்தாநாள் கட்சி ஆரம்பித்த இ.ஜ.க பச்சமுத்துவுக்குகூட இருக்கிறது, தொண்டர்களே இல்லாத காங்கிரசுக்கு இருக்கிறது ஆனால் இவர்களிடம் அதுகூட இல்லை. ஐந்தாயிரத்துக்கு குறைவான வருமானத்தில் முழுநேரமும் வேலைசெய்யும் தொண்டர்கள் இருக்கும் அரசியல் கட்சிகள் “கம்யூ”க்கள்தான்.

ஆனால் அந்த கட்டுக்கோப்பு இப்போது காலாவதியாகிக்கொண்டிருக்கிறது. மற்ற கட்சிகளுக்கு இணையாக போட்டி வேட்பாளர்கள் இங்கும் இறங்குகிறார்கள். திமுக தேமுதிக போல சீட்டுக்கள் கோட்டா முறையிலும் டெண்டர் அடிப்படையிலும் ஒதுக்கப்படும் காலம் விரைவில் இங்கேயும் வந்துவிடும். அதற்குள் அவர்களுக்கு இருக்கும் ஒன்றே முக்கால் சதவிகிதம் வாக்கும் காணாமல்போகும் அபாயம் இருக்கிறது. இதை படிக்கும் காம்ரேட்டுக்கள் என்மீது கோபப்படாதீர்கள், டி.கே.ரங்கராஜனின் இமயம் டிவி பேட்டியை பார்த்திருந்தால் நீங்களும் என்னைப்போலவே பேசுவீர்கள்.

எம்.ஜி.ஆரின் பிரச்சார வேனை சர்வீஸ் செய்து கொண்டுவருவதாக சொல்லி ஜானகி அம்மாவிடம் வாங்கிப்போன விஜயகாந்த், அதை வைத்துக்கொண்டதாலேயே அடுத்த எம்.ஜி.ஆர் நான்தான் என சொல்லிக்கொண்டு செய்யும்  அழிச்சாடியம் கொஞ்சநஞ்சமல்ல. உண்மையில் தேமுதிக என்பது பிரேமலதாவாலும் சுதீஷ் எனும் ஒரு மேல்தட்டு இளைஞராலும்தான் நடத்தப்படுகிறது, விஜயகாந்தின் சகோதரர் மதுரை பேருந்துநிலையத்தில் சர்வராக இருக்கையில் அவரது மனைவி குடும்பம் கட்சியில் கோலோச்சுவது சொல்லும் சேதி இதைத்தான். ஒரு குடும்பத்தால் கட்டுப்படுத்தப்படும் தலைவர் எனும் அடிப்படையில் விஜயகாந்துக்கு தமிழகத்தில் மூன்றாமிடம் நிச்சயம் பொருத்தமானதே. நாற்பது சீட்டுக்கு கட்சியை அடகு வைக்க மாட்டேன் என்ற சவடாலை சரியாக புரிந்துகொண்டவர் ஜெயாதான் (அல்லது சசிகலாதான்), அதனால்தால் நாற்பத்தியோரு சீட்டுக்கு அடகுபிடித்து இருவரது தன்மானத்தையும் காப்பாற்றியிருக்கிறார்.

கடந்த பத்து வருடங்களில் எல்லா தேர்தல்களிலும் தெளியவைத்து தெளியவைத்து அடிக்கப்படும் கட்சி மதிமுக. வைகோவின் இமயம் டிவி பேட்டியில் அவரே அதை ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் இது அவர் தரவேண்டிய விலைதான். பாமர மக்கள் குறித்தும் மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றியும் யாதொரு அக்கறையோ அல்லது அறிவோ இல்லாத ஜெயலலிதாவை  ஈழத்தாய் என வர்ணிக்கும் அளவுக்கு தன்னை தாழ்த்திக்கொண்ட வைகோவுக்கு இது குறைந்தபட்ச தண்டனையே.  தட்டுவதற்கு கதவுகள் இல்லாமல் போனதும் பனிரெண்டு சீட்டுக்கு மட்டுமே தகுதியுடையவர் எனும் ஜெயலலிதாவின் தீர்மானமும் வைகோவோடு சேர்ந்து அவரை நல்லவர் வல்லவர் என நம்பிக்கொண்டிருக்கும் அப்பாவிகளுக்கும் தரப்பட்ட தண்டனை.

ஆக, மேலோட்டமாக பார்க்கும்போதே  ஆட்சியமைக்கும் அளவுக்கு பலம் கொண்ட கட்சிகள் உருப்படியாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் தெரியவில்லை, மாற்று என சொல்வதற்கு தகுதியுடையவர்கள் யாரும் இல்லை என்பது புலனாகிறது. மாற்றம் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளே நுழைந்திருக்கும் இ.ஜ.க பச்சமுத்து (பாரிவேந்தர்) மற்ற கட்சிகளுக்கு இணையாக விளம்பரத்துக்கு பணத்தை இறைத்து பிரச்சாரம் செய்கிறார் , அந்த பணம் முழுவதும் ஏராளமான பெற்றோரிடம் நன்கொடை என்ற பெயரில் சுரண்டியது. இப்படி கொள்ளையடித்தவரா  ஊழலுக்கு எதிராக போரிடுவார் என நீங்கள் கேட்பது சரியாகாது. இப்படி கொள்ளையடித்தோரால்தான் இந்திய அரசியலில் நுழையவே முடியும் என்று புரிந்துகொள்வதே சரி.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த “ஜனநாயக” ஆட்சி நடக்கிறது. நாளாக நாளாக இது இன்னும் சீரழிந்து வருகிறதேயன்றி இம்மியும் மேம்படுவதற்கான சுவடுகளே தென்படவில்லை. நீங்கள் சேவை செய்யவே அரசியலுக்கு வந்தாலும் உங்களை அறிமுகம் செய்துகொள்ளவே பல லட்சங்களை செலவு செய்யவேண்டுமென்ற நிலை வந்த பிறகு, சேவையை எங்கிருந்து செய்வீர்கள்? சாதாரண பேனர் கட்டும் தொழிலாளிகளே அப்புறப்படுத்தப்பட்ட பிறகு சாதாரண மக்கள் அரசியலில் இருந்து விலக்கிவைக்கப்படுவது ஒன்றும் அதிசயமல்ல. திவ்யா பரமேஸ்வரன், அரு நய்யார் போன்ற முண்ணனி விளம்பர மாடல்களைக்கொண்டு திமுக தனது பிரச்சார விளம்பரங்களை தினசரி தருகிறது. அதிமுகவுக்கு தற்போது அவ்வளவு சவுரியம் போதாதாகையால் அதை சாதாரண அள்வில் செய்கிறது.

ஆண்டுக்கணக்கில் கூட இருக்கும் ஆட்களை விட்டுவிட்டு ஜெயலலிதா முதலில் பேச அழைத்தது மார்கெட் போன நடிகர்களை. அதிமுககாரர்களைத் தாண்டி ஜெயாவுக்காக கூவிக்கொண்டிருந்த வைகோவுக்கு தொலைபேசி வழியே தகவல்கூட தர இயலாத ஜெயாவை ஒரு அடாசு இயக்குனர் நினைத்த நேரத்தில் எல்லாம் சந்திக்க முடிகிறது (சந்திர சேகர்). தா.பாண்டியனைவிட விரைவாக ஒரு துணை நடிகரால் (சிங்கமுத்து) ஜெயாவை சந்திக்க நேரம் பெற இயலுமென்றால், இங்கு நடப்பது எந்த வகையான மாற்றத்துக்கான தேர்தல்? திமுக ஊடகங்களின் செய்திகளில் கருணா, ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக வடிவேலுதான் முன்னிலைப்படுத்தப்படுகிறார். சன் டிவி பார்க்கும் தமிழகத்தில் வசிக்காத நபர்கள் நிச்சயம் வடிவேலு திமுகவின் முப்பெரும் தலைவர்களில் ஒருவர் என்றுதான் கருதுவார்கள். திருப்பூரில் கம்யூனிஸ்ட் பிரச்சாரமொன்றில் இளைய தளபதி ஆதரவு பெற்ற சின்னம் என விளம்பரப்படுத்துகிறார்கள்.

அறுபதாண்டுகளாக அழுகிக்கொண்டிருக்கும் இந்திய அரசியல் அமைப்பின் நாற்றம் இப்போது சகிக்க முடியாத அளவுக்கு வீசத் துவங்கிவிட்டது என்பதன் அடையாளம்தான் இந்த மிதமிஞ்சிய சினிமா ஜிகினா. அதற்கு மேக் அப் போடத்தான் தேர்தல் கமிஷனும் அறிவுஜீவிகளும் ஊடகங்கள் வழியே பிரச்சாரம் செய்கிறார்கள். வாக்கை வீணாக்காதீர்கள் என ஒரு வாதம், அப்படியானால் சென்ற முறை திமுகவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் எந்த வகையில் உருப்படியானவை? வாக்களிப்பது ஜனநாயக கடமை என்கிறார்கள், உற்று கவனியுங்கள் அதற்குமேல் உனக்கு இங்கு வேலையில்லை என்ற பொருள் புரியவரும். இருப்பவர்களில் நல்லவருக்கு வாக்களியுங்கள் என்கிறார்கள், யாருமே நல்லவனாக இல்லையென்றால் என்று கேட்டால் இருப்பதில் ஓரளவு கெட்டவனுக்கு ஓட்டுபோடு என்கிறார்கள்.  நாலு கொலை செய்தவனும் இரண்டு கொலை செய்தவனும் தேர்தலில் நின்றால் இரண்டு கொலை செய்தவனுக்கு ஓட்டுபோடுவதா?

நல்ல சுயேச்சை வேட்பாளருக்கு ஓட்டுப்போடு என்கிறார்கள், வாக்காளனுக்கு பணம் தரும் பழக்கத்துக்கு மிக முன்னதாகவே சுயேச்சைகள் விலைக்கு வாங்கப்படும் பழக்கம் துவங்கியாகிவிட்டது, தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள விரும்பும் அரை லூசுகளும் வாய்ப்பு கிடைக்காத அதிருப்தி கட்சிக்காரர்களும் மட்டுமே சுயேச்சையாக நிற்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால் கூட்டணி ஆட்சி வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றார்கள். இப்போது அதை யாராவது சொன்னால் அவர்கள் கதி என்னவாகும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. ஆளை பார்க்காதே கட்சியையும் கொள்கையையும் பார்த்து ஓட்டுபோடு என்கிறார்கள் சிலர்., பாமக, கொமுக ஆகிய கட்சிகள் வெளிப்படையாகவே இரண்டு குழுக்களை அமைத்து இரண்டு அணிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றன, இவர்கள் தொங்கு சட்டமன்றம் அமைந்தால் அங்கும் இதே இரண்டு குழு முறையை பின்பற்றுவார்களா மாட்டார்களா??

இந்தியாவில் உள்ள அரசு அமைப்பானது சப்பைக்கட்டு கட்ட வழியில்லாத அளவுக்கு அம்பலப்பட்டிருக்கிறது இப்போது. மக்களை திசைதிருப்ப தேர்தல் கமிஷன் மூலம் சினிமாக்காரர்களைக்கொண்டு (இங்கயுமா??!!!) ஓட்டளிப்பது ஒரு பெருமைக்குரிய காரியம் என பிரச்சாரம் செய்கிறார்கள். எப்படி பார்த்தாலும் நாம் தேர்ந்தெடுக்க இருப்பது ஒரு அழுதுவடியும் துரோகியை அல்லது அடாவடியான துரோகியை.. இதில் என்னய்யா புனிதமும் பெருமையும் இருக்கிறது?  மகாராஷ்டிராவின் முக்கால்வாசி சர்க்கரை ஆலைகளை கட்டுப்படுத்தும் சரத்பவாரால் இந்தியாவின் விவசாய மந்திரியாக இயலுமென்பது எதேச்சையான தவறா அல்லது அரசமைப்பில் இருக்கும் கோளாற என்று கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா? (நிறுவனங்கள் நடத்தும் ஆயிரம் ரூபாய் பரிசுப்போட்டியில்கூட அங்கு பணியாற்றுவோரின் குடும்பம் கலந்துகொள்ள முடியாது)

மக்களால் அரசின் நடவடிக்கைகளில் பங்கேற்க இயலாது வெறுமனே அரசில் பங்கேற்பவர்களை தெரிவு செய்ய மட்டுமே முடியுமென்பது எப்படி மக்களாட்சி என அழைக்கப்படுகிறது என்பது எனக்கு விளங்கவில்லை. தேர்தல் கமிஷனும் ஊடகங்களும் இந்த “ஜனநாயக கடமை” எனும் பஜனையில் சிறப்பாக பங்காற்றி அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றன. எல்லையில்லாமல் சம்பாதிப்பதற்கான கதவுகள் திறந்திருக்கும் அரசமைப்பில் திருடுவதற்கான கதவை மட்டும் அடைக்கவே முடியாது. ஈழத்தமிழர் பிரச்சனை முதல் வெங்காய விலை வரை எல்லாவற்றுக்கும் தீர்வு ஐந்தாண்டுக்கு ஒருமுறை வரும் தேர்தல் மட்டுமே என கருதுவது எத்தனை தூரம் ஆபத்தனது என்பதை நாம் பல முறை அனுபவித்த பிறகும் இன்னமும் அதை நம்புகிறோம் என்றால் ஆ.ராசாதான் வாழும் அம்பேத்கர் என்று சொன்னால்கூட நாம் நம்பிவிடுவோம் போலிருக்கிறது.

வாக்களிக்காதவர்கள் எல்லோரும் ஜனநாயக விரோதிகள் எனும் கருத்தோட்டம் மறைமுகமாக மக்களிடம் திணிக்கப்பட்டிருப்பதை கடந்த மூன்று நாட்களாக தெளிவாக உணர்ந்திருக்கிறேன். ஓட்டுபோடாதவர்களிடம் இருந்து ரேசன் கார்டையும் பாஸ்போர்டையும் பிடுங்கு என்கிறார் தமிழருவி மணியன். அவரே,  திருந்த மாட்டார்  என்று சொன்ன ஜெயாவுக்கு ஓட்டு போடு என்கிறார். கிரிமினல்கள் தேர்தலில் நிற்க முடிவது ஜனநாய விரோதமா அல்லது கிரிமினல்கள் மட்டுமே நிற்க முடிகிற தேர்தலை புறக்கணிப்பது ஜனநாயக விரோதமா என்பதை தமிழருவி மணியனின் கருத்தை ஆதரிப்பவர்கள் சிந்தித்தே ஆக வேண்டும். நாற்பது சதம் வாக்கு பதிவானாலும் என்பது சதம் வாக்கு பதிவானாலும் அரசு ஒரே மாதிரி ஊழல் நிறைந்ததாக இருக்கையில் நம் வாக்கு எந்த வகையில் பலன் தரும் என்பதை சொல்ல வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு. அதுவரை நாங்கள் ஜனநாயக விரோதியாகவே இருந்துவிட்டுப்போகிறோம்.

Advertisements

“மாமாக்களை தேர்வு செய்வது கவுரவமான காரியமாகிவிட்டால், யோக்கியனாக இருப்பது ஜனநாய விரோதம்தான்..” இல் 10 கருத்துகள் உள்ளன

 1. ஓட்டு அளிக்காமல் இருப்பதற்கு எத்தனை காரணங்கள் நம் மனதில் இருக்கின்றதோ அந்த அளவிற்கு 49 ஓ வையும் பயன்படுத்தலாமே?

 2. வில்லவன்,

  நீங்கள் இங்கே வெளிப்படையாக சொல்லியிருப்பதுதான் மக்கள் ப்லரது மனங்களிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. மௌனமாய் தங்கள் வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டு தத்தமது அளவில் மட்டும் எல்லைகளை மீறிக்கொண்டு அமைதியாய் இருக்கிறார்கள்.

  அற்புதமான கட்டுரை.

 3. //கிரிமினல்கள் தேர்தலில் நிற்க முடிவது ஜனநாய விரோதமா அல்லது கிரிமினல்கள் மட்டுமே நிற்க முடிகிற தேர்தலை புறக்கணிப்பது ஜனநாயக விரோதமா

  மக்களால் அரசின் நடவடிக்கைகளில் பங்கேற்க இயலாது வெறுமனே அரசில் பங்கேற்பவர்களை தெரிவு செய்ய மட்டுமே முடியுமென்பது எப்படி மக்களாட்சி என அழைக்கப்படுகிறது என்பது எனக்கு விளங்கவில்லை.

  ஈழத்தமிழர் பிரச்சனை முதல் வெங்காய விலை வரை எல்லாவற்றுக்கும் தீர்வு ஐந்தாண்டுக்கு ஒருமுறை வரும் தேர்தல் மட்டுமே என கருதுவது எத்தனை தூரம் ஆபத்தனது

  மகாராஷ்டிராவின் முக்கால்வாசி சர்க்கரை ஆலைகளை கட்டுப்படுத்தும் சரத்பவாரால் இந்தியாவின் விவசாய மந்திரியாக இயலுமென்பது எதேச்சையான தவறா அல்லது அரசமைப்பில் இருக்கும் கோளாற

  நாலு கொலை செய்தவனும் இரண்டு கொலை செய்தவனும் தேர்தலில் நின்றால் இரண்டு கொலை செய்தவனுக்கு ஓட்டுபோடுவதா?

  நீங்கள் சேவை செய்யவே அரசியலுக்கு வந்தாலும் உங்களை அறிமுகம் செய்துகொள்ளவே பல லட்சங்களை செலவு செய்யவேண்டுமென்ற நிலை வந்த பிறகு, சேவையை எங்கிருந்து செய்வீர்கள்?

  இப்படி கொள்ளையடித்தவரா ஊழலுக்கு எதிராக போரிடுவார் என நீங்கள் கேட்பது சரியாகாது. இப்படி கொள்ளையடித்தோரால்தான் இந்திய அரசியலில் நுழையவே முடியும் என்று புரிந்துகொள்வதே சரி.//

  மேற்கண்ட அனைத்தும் நெத்தியடிக் கேள்விகள்! பொட்டிலடித்தாற்போல அறையும் நிஜங்கள்!

  இவை அனைத்தும் தனித்தனியே பதிவு போட்டு விவாதம் நடத்துமளவிற்கு பொருள் திண்மை வாய்ந்தவை.

  தொடர்ந்து எழுதுங்கள்.

 4. ஹல்லோ வில்லு,

  இந்தக் கட்டுரையை நீங்கள் எழுதி வெளியிடுவதற்கு முன்னதாக, இதன் கரு அல்லது முன்னோட்டத்தை திருவாளர். மன்மோகனுடன் ரகசியமாக விவாதித்திருக்கிறீர்கள் என ஐயப்படுகிறேன்.

  மன்மோகன் மனந்திருந்தி, ஓட்டுப் போடாமைக்கு உமது கட்டுரை ஒரு முக்கியக் காரணம் என்பது எனது குற்றச்சாட்டு!

 5. //கிரிமினல்கள் தேர்தலில் நிற்க முடிவது ஜனநாய விரோதமா அல்லது கிரிமினல்கள் மட்டுமே நிற்க முடிகிற தேர்தலை புறக்கணிப்பது ஜனநாயக விரோதமா

  மக்களால் அரசின் நடவடிக்கைகளில் பங்கேற்க இயலாது வெறுமனே அரசில் பங்கேற்பவர்களை தெரிவு செய்ய மட்டுமே முடியுமென்பது எப்படி மக்களாட்சி என அழைக்கப்படுகிறது என்பது எனக்கு விளங்கவில்லை.

  ஈழத்தமிழர் பிரச்சனை முதல் வெங்காய விலை வரை எல்லாவற்றுக்கும் தீர்வு ஐந்தாண்டுக்கு ஒருமுறை வரும் தேர்தல் மட்டுமே என கருதுவது எத்தனை தூரம் ஆபத்தனது

  மகாராஷ்டிராவின் முக்கால்வாசி சர்க்கரை ஆலைகளை கட்டுப்படுத்தும் சரத்பவாரால் இந்தியாவின் விவசாய மந்திரியாக இயலுமென்பது எதேச்சையான தவறா அல்லது அரசமைப்பில் இருக்கும் கோளாற

  நாலு கொலை செய்தவனும் இரண்டு கொலை செய்தவனும் தேர்தலில் நின்றால் இரண்டு கொலை செய்தவனுக்கு ஓட்டுபோடுவதா?

  நீங்கள் சேவை செய்யவே அரசியலுக்கு வந்தாலும் உங்களை அறிமுகம் செய்துகொள்ளவே பல லட்சங்களை செலவு செய்யவேண்டுமென்ற நிலை வந்த பிறகு, சேவையை எங்கிருந்து செய்வீர்கள்?

  இப்படி கொள்ளையடித்தவரா ஊழலுக்கு எதிராக போரிடுவார் என நீங்கள் கேட்பது சரியாகாது. இப்படி கொள்ளையடித்தோரால்தான் இந்திய அரசியலில் நுழையவே முடியும் என்று புரிந்துகொள்வதே சரி.//

  மேற்கண்ட அனைத்தும் நெத்தியடிக் கேள்விகள்! பொட்டிலடித்தாற்போல அறையும் நிஜங்கள்!

  இவை அனைத்தும் தனித்தனியே பதிவு போட்டு விவாதம் நடத்துமளவிற்கு பொருள் திண்மை வாய்ந்தவை.

  தொடர்ந்து எழுதுங்கள்.

  ஹல்லோ வில்லு,

  இந்தக் கட்டுரையை நீங்கள் எழுதி வெளியிடுவதற்கு முன்னதாக, இதன் கரு அல்லது முன்னோட்டத்தை திருவாளர். மன்மோகனுடன் ரகசியமாக விவாதித்திருக்கிறீர்கள் என ஐயப்படுகிறேன்.

  மன்மோகன் மனந்திருந்தி, ஓட்டுப் போடாமைக்கு உமது கட்டுரை ஒரு முக்கியக் காரணம் என்பது எனது குற்றச்சாட்டு!

  repeat..

 6. நடக்கும் ஜனநாயகத்தை நன்றாகவே சாடி இருகிறீர், அனால் மற்று கருத்து ஒன்றும் காணோமே….

 7. //சன் டிவி பார்க்கும் தமிழகத்தில் வசிக்காத நபர்கள் நிச்சயம் வடிவேலு திமுகவின் முப்பெரும் தலைவர்களில் ஒருவர் என்றுதான் கருதுவார்கள். திருப்பூரில் கம்யூனிஸ்ட் பிரச்சாரமொன்றில் இளைய தளபதி ஆதரவு பெற்ற சின்னம் என விளம்பரப்படுத்துகிறார்கள்.//

  😉

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s