சொல்லவே இல்ல…


(ஏறத்தாழ 100%  சொந்தக்கதை. பொதுவான விசயம் குறித்த பதிவை எதிபார்த்திருந்தால் வாசிப்பதை தவிர்க்கவும், அல்லது சாய்வெழுத்துக்களில் உள்ள பத்திகளை மட்டும் வாசிக்க எடுத்துக்கொள்ளவும்)

கடந்த மூன்று மாதங்களாக  புதுப்பிக்கப்படாததால் இனி இத்தளம் அவ்வளவுதானோ எனும் சந்தேகம் என் நண்பர்கள் சிலருக்கு வந்தது (எனக்கும் அப்படியொரு பயம் இருந்தது, இருக்கிறது). ஏனைய நண்பர்கள் கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற எனது திருமணம் காரணமாகவே நான் வலையுலகில் இருந்து விலகியிருந்ததாக கருதிக்கொண்டிருந்தார்கள். அப்படியொரு அபாண்டமான குற்றச்சாட்டை எனது திருமணத்தின் மீது வைக்க விரும்பாததால் இந்த இடுகையை எழுதும் முடிவுக்கு வந்திருக்கிறேன்.

மார்ச் இறுதியில், நான் தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் வேலைக்கான ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டது. அப்போதே எழுத்து வேலைகள் பாதிக்கப்படும் என அனுமானித்திருந்தேன், ஆனால் இவ்வளவு மோசமாக அது அமையும் என எதிர்பார்த்திருக்கவில்லை. என்ன செய்வது, செருப்படி வாங்குவது அவமானம் என்பது எல்லோருக்கும் தெரியும்.. அது எவ்வளவு அவமானகரமானது என்பது வாங்கிப்பார்த்தால்தானே தெரியும்??? கடந்த பத்தாண்டுகளில் இப்படி சக்கையாக பிழியும் வேலையை நான் பார்த்ததில்லை. இரவு 12.15 க்கு வேலை முடிந்தால் அந்த நாளை நல்ல நாளாக கருதலாம். நேரம் எனும் ஒரு சிக்கல் மட்டுமில்லாமல் நம் சிந்தனையையும் முழுமையாக களவாடும்  வேலை இது. கடந்த மூன்று மாதங்களில்தான் என் வாழ்நாளின் மிக அதிகமான கெட்ட வார்த்தைகளை கேட்டிருக்கிறேன் (கவனிக்க: திட்டு வாங்கவில்லை.. மற்றவர்கள் வாங்குவதை கேட்கிறேன்). இந்த சூழலில்தான் எனது சகோதரனது திருமண தேதியும் எனது மணநாளும் முடிவானது.

துவக்கத்தில் இரண்டு திருமணங்களையும் ஒரே நாளில் வைத்துவிடலாம் என்றுதான் திட்டமிட்டோம். ஆனால் எனது மாமனார் வீட்டில் அதற்கு ஒத்துக்கொள்ளாத காரணத்தால் திட்டம் கைவிடப்பட்டது (என் மனைவி தரப்புக்கு செய்யப்பட்ட ஒரே சமரசம் அதுதான் என்று நினைக்கிறேன்). இருபது நாள் இடைவெளியில் இரண்டு கல்யாணங்கள் என்பது எங்களுக்கு கொஞ்சம் மலைப்பானதுதான். ஆகவே எனது அண்ணனின் மணவிழாவுக்கு அனைவரையும் அழைப்பது எனவும் எனக்கு முடிந்தவரை எளிமையாக செய்வது எனவும் முடிவு செய்தோம் (எளிமை என்றால் குறைவான அளவில் நபர்களை அழைப்பது, மற்றபடி இரு திருமணங்களும் மிக சாதாரணமாகவே நடந்தது).

ஒரு தலைமுறை இடைவெளிக்குள் சுயமரியாதைத் திருமணங்கள் நம் சமூகத்தில் அன்னியப்பட்டிருக்கின்றன  என்று  அனுபவபூர்வமாக இந்த சந்தர்பத்தில் உணர்ந்தோம். எங்கள் வீட்டு மூன்று திருமணங்களிலும் முதலாவது தடைக்கல் தாலிதான். ஆனாலும் வைதீகத் திருமனங்களின் நிழல்கூட நாங்கள் வாழ்க்கைத்துணையை கைப்பிடிக்கையில் இருக்கக்கூடாது என்பதில் நானும் என் சகோதரனும் உறுதியாக இருந்தோம். இதில் எங்களது தாயாருக்கு கூட முழுமையான உடன்பாடு கிடையாது. அதெப்படி ஒரு பொண்ணு மாங்கல்யம் இல்லாம இருப்பா?? என எனது மாமிகள் கேட்டுக்கேட்டு மாய்ந்து போனார்கள். தாலி இல்லாவிட்டால் எப்படி திருப்பூரில் வாடகைக்கு வீடு தருவார்கள் என கவலையோடு கேட்டார் ஜோதிஜி (தேவியர் இல்லம்).

ஆனால் நான் பயந்த அளவுக்கு இல்லாமல் உறவுகளுக்கு வெளியேயும் எங்களது மணவிழா நல்லவிதமாகவே வரவேற்கப்பட்டது. வாழ்க்கைத் துணையேற்பு விழா எனும் அழைப்பிதழின் தலைப்புக்காகவே எனது சக பெண் ஊழியர்கள் எனை தேடி வந்து பாராட்டினார்கள் (சிலருடன் நான் அதுவரை பேசியதில்லை). அதிகம் கிண்டலடிக்கப்படும் என எதிர்பார்த்த “புத்தகங்கள் தவிர வேறு அன்பளிப்புக்கள் ஏற்கப்பெற மாட்டாது” எனும் அழைப்பிதழில் இருந்த வாக்கியம் கூட நண்பர்களை ஆச்சர்யப்படுத்த மட்டுமே செய்தது. திருமணத்திற்கு வந்திருந்தவர்களில் இரண்டு தாய்மார்கள் வாய்ப்பு கிடைத்தால் தங்கள் வீட்டிலும் இப்படியொரு திருமணம் செய்யலாம் என வேறொரு சந்தர்பத்தில் குறிப்பிட்டார்கள்.

இந்த வேளையில் நான் கொஞ்சம் விளக்கமாக சொல்லவேண்டிய ஒரு விடயம் இருக்கிறது. தாலியில்லாமல் மற்ற வைதீக சடங்குகள் இல்லாமல் கல்யாணம் செய்வது ஒரு வறட்டுத்தனமான பிடிவாதம் எனும் கருத்தோட்டம் சில கம்யூனிஸ்டு நண்பர்கள் உள்ளிட்ட பலருக்கும் இருக்கிறது. அதை பலரும் நேரடியாகவே கேட்கவும் செய்தார்கள். மற்றவர்களுக்காக கொஞ்சம் சமரசம் செய்துகொள்வதனால் என்ன ஆகிவிடும் எனும் கேள்வியை  வேறு வேறு வடிவங்களில் கேட்கும்படியானது.

 இதற்கான பதில் மிக எளிமையானது, மற்றும் நியாயமானது. பாரம்பரியமாக பின்பற்றப்படுவது என்பதனால் மட்டுமே மதச் சடங்குகளை நாங்கள் எதிர்க்கவில்லை. எப்படி புனிதம் என்ற பெயரால் தீண்டாமை நிலைநிறுத்தப்பட்டதோ அப்படியே திருமண சடங்குகள் எனும் பெயரால் பெண்ணடிமைத்தனம் நிலை நிறுத்தப்படுகிறது.

 நாம் பின்பற்றும் சடங்குகள் நம் சாதியை பாதுகாப்பாக வைத்திருக்கும் கருவியாக இருக்கிறது. சடங்குகள் பாரம்பரியமானது எனும் போர்வைக்குள் வரதட்சணை கௌரவமானது எனும் கபடவாதமும் ஒளிந்திருக்கிறது. குறைந்தபட்ச சமூக மேம்பாட்டிற்கான முயற்சிகளில் பலவற்றை நாம் திருமணத்திலிருந்தே துவங்கவேண்டியிருக்கிறது. ஆகவே சீர்திருத்த திருமணம் என்பது அவசர அவசியம்.

ஆயினும் ஒன்றை நேர்மையாக ஒப்புக்கொண்டாக வேண்டும். தாலி மற்றும் இன்னபிற சடங்குகள் இல்லாமல் திருமணம் செய்துகொண்டதைப் பற்றி நான் ரொம்பவும் பெருமிதப்பட்டுக்கொள்ள முடியாது. காரணம், இந்த திருமண முறையின் நியாயம் ஏதும் தெரியாமல் இது எனது விருப்பம் எனும் ஒரே காரணத்துக்காக மட்டுமே ஒப்புக்கொண்டிருக்கிறார் என் மனைவி (சீர்திருத்த திருமணத்தை நான் வலியுறுத்தும் வரை தாலியை சங்கிலியில் இணைத்து அணிவதையே பண்பாட்டு விரோதமாகக் கருதியவர் அவர்). ஏறத்தாழ இதுவும் ஒருவகையில் கருத்து திணிப்பு என்பதால் பெருமிதம் கொள்ளும்படியான காரியங்களை நாங்கள் இனிமேல்தான் செய்யவேண்டும். பெரியாரை பின்பற்ற விரும்புபவர்கள்  அதிகமாக உதை வாங்குவது அவர்கள் வீட்டு திருமணங்கள் குறித்த விவாதத்தின்போதுதான். அந்த வகையில் எங்கள் வீட்டு திருமணங்கள் திருப்தியடையும்படியானவை என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

ஒரு கல்யாணக் கதையை இதற்குமேல் நீட்டுவது நியாயமில்லை. ஆகவே விசயத்துக்கு வருகிறேன். என் வேலைச் சூழ்நிலை மற்றும் எதிர்பார்த்த அளவில் (size) மண்டபம் கிட்டாமை போன்ற பல்வேறு காரணங்களால் என்னால் ஆகப் பெரும்பாலான நண்பர்களை திருமணத்துக்கு அழைக்க இயலவில்லை. அழைக்க இயலாமைக்கு எல்லோரிடமும் மன்னிப்பு கோருகிறேன். தூரத்தையும் நெரிசலையும் பொருட்படுத்தாது  (அன்று தஞ்சாவூர் கண்டிராத அளவுக்கு ரயில் மற்றும் பேருந்துகள் நிரம்பி வழிந்தது) வாழ்த்த வந்த நண்பர்களுக்கு நன்றி (கோயம்பேடு வரை வந்து கூட்டத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து வர இயலாமல்போன நண்பர்களுக்கும் இது பொருந்தும்)

இறுதியாக, சீர்திருத்தத் திருமணம் செய்து கொள்வது ஒரு தனிச்சிறப்பான அனுபவம். வழமையான திருமண சடங்குகள் யாவும் எங்கெங்கோயிருந்து கடன் வாங்கப்பட்டவை. சீர்திருத்தத் திருமணங்கள்தான் நம் மண்ணுக்கு சொந்தமானது. ஈரோட்டுக்கிழவரின் சொத்துக்கள்தான் வீரமணி கூட்டத்தால் களவாடப்பட்டதென்றால் அவரது கொள்கைகளும் கனவுகளும்கூட கைவிடப்படுவது தமிழகத்துக்கு நல்லதல்ல. தமிழ்நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஓரளவுக்கேனும்  கௌரவமான வாழ்வை வாழ்கிறார்கள் என்றால் அதற்கு பெரியாரின் உழைப்புதான் முதல் காரணம். இல்லாவிட்டால் இன்று அதிகாரிகளா இருக்கும் பலரும் பண்ணையடிமையாக இருந்திருப்பார்கள்.

ஆகவே பெரியாரது கொள்கைகளை பின்பற்றுவதென்பது அவருக்கு செலுத்தும் நன்றியல்ல, நமது அடுத்த தலைமுறையையும் தன்மானத்தோடு வாழவைப்பதற்கான வழி. சீர்திருத்தத் திருமணம் என்பது நம் வாழ்க்கைத்துணையின் தன்மானத்தை அங்கீகரிக்கும் செயல். ஆகவே உங்கள் வீடுகளிலும் இந்த மாதிரி கல்யாணம் செய்வது பற்றி பரிசீலியுங்கள். குறைந்தபட்சம் ஜோசியக்காரர்களாவது உழைத்துப்பிழைக்கும்  முடிவுக்கு வருவார்கள்.

Advertisements

“சொல்லவே இல்ல…” இல் 19 கருத்துகள் உள்ளன

 1. Pingback: Indli.com
 2. வாழ்த்துக்கள் 🙂
  பரவாயில்லையே…..
  பண நகை பைத்தியங்கள் தான் தமிழ் நாட்டில் அதிகம்..இவர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு திருமணமா 🙂
  இப்படி பட்ட பெண் கிடைக்க நீர் தான்யா உன் மனைவிக்கு நன்றி சொல்ல வேண்டும்…

 3. நீர் புரட்சி செய்ய வில்லை ….நீர் தினம் தினம் எதோ ஒன்றை படித்து கொண்டு புரட்சி செயவதாய் நினைத்து கொண்டு உளறி கொண்டு உள்ளீர் 🙂

  ஆனால் நமது (மட்டமான) சமுகத்தில் இருந்து வந்து….தாலி இல்லாமல் கல்யாணம் செய்து கொண்ட உன் மனைவியான தமிழ் நாட்டு பெண் தான் உண்மையாக புரட்சி செய்தவர் 🙂

 4. தாலியை வைத்தே, இன்ன சாதி என்று கண்டுபிடிக்கலாம். அதாவது ஒவ்வொரு சாதியினரும், ஒவ்வொருவிதமாக தாலியை செய்வார்கள்.

 5. ஒரு வேளை இந்த திருமண தாக்கம் என் மகள் திருமணத்தின் போது உதவுமா? என்று இந்த திருமண நிகழ்ச்சியை பார்த்தது முதல் என் மனதிற்குள் அலை ஒன்று இடைவிடாது எழுந்து கொண்டேயிருக்கிறது.

  பார்க்கலாம்?

 6. சமச்சீர் கல்வித்தடையை எதிர்த்து போராட்டக்காரர்களின் சாலை மறியல் நிகழ்வில், தன்னையுமறியாமல் துள்ளிக்குதிக்கும் ‘வெள்ளைக் காலர் ஆப்பீசர்களின்’ குடைந்தெடுக்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லி, அந்த ஆப்பீசர்களையும் ‘இவர்கள் போராடுவது என் குழந்தைக்கும் சேர்த்துத்தான்’ என்று புரியவைப்பது போல;

  ஒரு சீர்திருத்த மணம் செய்துகொள்வதற்கு முன்னால், குடைந்தெடுக்கும் சொந்த பந்த கேள்வியாளர்களைப் புரிந்துகொள்ளவைப்பது / சமாதானப்படுத்துவதென்பது, மிகவும் கடினமான செயல்தான்.

  ஆனால் அது ஒரு மகிழ்ச்சியான தருணம்!!

 7. சொல்லவே இல்ல… எனக்கும்தான். ஏன் என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் அதை அப்பாவிடம்தான் கேட்க வேண்டும்.

  தாலி இல்லாமல், சடங்கு – சப்பிரதாயங்கள் இல்லாமல், வரதட்சணை – சீர் – மொய் எதுவும் இல்லாமல் 1986 ல் எனது திருமணம் புரட்சிகரமாக நடந்த போது பெரிய அளவில் எதிர்ப்பு ஏதும் இல்லைதான். காரணம் சிறு வயதிலிருந்தே சமூக ஓட்டத்திலிருந்து மாறுபட்ட சிந்தனைகளைக் கொண்டு வளர்ந்தவன் என்பதால். எனது திருமணம் அன்று பலருக்கு ஒரு முன்னோடித் திருமணமாக பார்க்கப்பட்டது.

  புரட்சிகரத் திருமணமோ அல்லது சீர்திருத்தத் திருமணமோ செய்து கொள்வது அப்படி ஒன்றும் கடினமானதல்ல. தான் கொண்டிருக்கும் அல்லது மதிக்கும் ஒரு கொள்கையை நடைமுறைப் படுத்துவதுதான் சுயமரியாதை. அத்தகைய சுயமரிதையை இழக்காத எவரும் இத்தகைய த் திருமணங்களை செய்வது எளிதுதான். எதிர்ப்புகள் இல்லாத வாழ்க்கை ஏது? எதிர்ப்புகளை எதிர்கொண்டு எதிர் நீச்சல் போட கற்றுக் கொண்டால் நெருப்பாற்றையும் எளிதில் நீந்திவிடலாம்.

  அந்த வகையில் எதிர் நீச்சல் போட்டுள்ள உங்களுக்கு எனது வாழ்த்துகள்.

  தாலி இல்லாத வாழ்க்கை! இதில் ஆணுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. பெண்கள்தான் கேள்விக்கணைகளை அதிகம் எதிர்கொள்ள வேண்டும். தாலியைப் பற்றிய சரியான புரிதல் இருந்தாலே போதும். கேள்வி கேட்பவர்களையும் எள்ளி நகையாடுபவர்களையும் எளிதில் வீழ்த்தி விடலாம். அப்படித்தான் எனது துணைவியார் அனைத்தையும் எதிர்கொண்டு தவிடு பொடியாக்கியுள்ளார். இந்தப் பாதையில் சவால்களை எதிர்கொள்ளவிருக்கும் தங்களது துணைவியாருக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் காள்கிறேன்.

 8. உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழர்.

  முதலில் உங்களை அழைக்காதமைக்கு மன்னிக்கவும். (இடுகையில் கேட்கப்பட்ட பொது மன்னிப்பு உங்களையும் உள்ளடக்கியதே).

  மறுநாள் முரட்டு முகூர்த்தமாகையால் அனேக திருமண மண்டபங்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. என் அண்ணன் மஸ்கட் கிளம்புவதற்கு முன்னால் திருமணத்தை நடத்த வேண்டிய கட்டாயம், அது விடுமுறை நாளாகவும் இருக்க வேண்டும். ஆகவே கிடைத்த சிறிய மண்டபத்தில் நடத்த வேண்டியதாகிவிட்டது (அதுவும் ராகுகாலத்தின் புண்ணியத்தால் கிடைத்தது).

  இருநூற்றைம்பது பேருக்கு மேல் அழைக்க முடியாது எனும் இக்கட்டான சூழலில், வேறுவழியில்லாமல்தான் நண்பர்கள் வட்டாரத்தையே அழைக்க இயலாமல் போய்விட்டது. இதற்கு முழுப் பொறுப்பும் நான்தான், ஆகவே என் அப்பாவிடம் சங்கடப்பட வேண்டாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s