லேப்டாப்பை சும்மா கொடுப்போம்.. புத்தகத்தை மட்டும் சுப்ரீம் கோர்ட் சொன்னால்தான் கொடுப்போம்.


“ஜுடீஷியல் லாட்டரி” என்றொரு சொற்றொடர் நீதித்துறை வட்டாரங்களில் புழங்குவதுண்டு. சிக்கலான வழக்குகள் நல்ல நீதிபதிகளிடம் வரும்போதும், தவிர்க்கவே முடியாமல் சில தீர்ப்புகள் எளியோருக்கு சாதகமாக வரும்போதும் இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படும் (இதற்கான சரியான விளக்கம் வேறென்றால் அதை குறிப்பிடவும்). இதற்கு முன்னால் வடலூர் (ராமலிங்க அடிகளின்) ஜோதிவழிபாடு குறித்த வழக்கொன்றின் தீர்ப்பு நீதியரசர் சந்துருவால் வழங்கப்பட்டபோது இவ்விரு வார்த்தைகளை பயன்படுத்தும் வாய்ப்பு வந்தது. இப்போது சமச்சீர் கல்வி குறித்த வழக்கின் தீர்ப்பு அந்த வாய்ப்பை மீண்டும் வழங்கியிருக்கிறது.

இதை நீதி வென்றது என சுலபமாக சொல்லிவிட இயலாது (ஆத்தா கண்ணை தொறந்துட்டா என்று சொல்வது மாதிரி). ஸ்பெக்ட்ரம்(கலைஞர்) டிவி மாதிரி கலைஞருக்கு வெற்றி எனவும் சொல்ல முடியாது. சமச்சீர் கல்விக்காக ஏராளமான கல்வியாளர்களும் முற்போக்காளர்களும் கருணாநிதி காலத்திலேயே கடுமையாகப் போராடியதால்தான் இக்கல்வி முறை அறிமுகமே ஆனது. இப்போதும் இந்த வழக்கின் வெற்றிக்கு உரிமை கொண்டாடும் திமுக வழக்கை நடத்த ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை. ரவுடிகளை ஜாமீனில் எடுக்க வராத வழக்கறிஞர் அணியை கடிந்துகொண்ட கருணா சமச்சீர் வழக்கில் தீர்ப்பை கேட்பதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை (ஆனால் தீர்ப்புக்குப் பிறகு பட்டாசு வாங்கி வெடிக்கமட்டும் திமுகவினர் தயங்கவில்லை). எல்லா எதிர்கட்சிகளும் இதேபோல பாராமுகமாகவே இவ்விவகாரத்தில் இருந்தன.

ஆக ஒரு தரப்பின் மூர்கமான எதிர்தாக்குதல் இன்னொரு தரப்பின் பாரமுகம் என அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இவ்வழக்கை நடத்தியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டது ஒருபுறமென்றால், ரஜினிக்கு குணமாகவேண்டும் என்ற வேண்டுதலுக்கு ஆயிரத்தெட்டு பேர் மயிரை மழிக்க தயாராக இருக்கும் மாநிலத்தில், மாணவர்களில் எதிர்காலத்துக்கான போராட்டத்துக்கு மாவட்டத்துக்கு பத்தாயிரம் பேரைக்கூட திரட்டவியலாத அவலம் மற்றொருபுறம். இப்படியொரு மிகக்கடினமான சூழ்நிலையில்தான் இந்த வழக்கு, பிராமண மாகாசபையான உச்ச நீதிமன்றத்தை அடைந்தது. இத்தகைய பலவீனமான பக்கத்தில் நின்றுகொண்டுதான் இந்த வழக்கை முற்போக்கு  சக்திகள் வென்றெடுத்திருக்கின்றன. ஆகவே இது ஒரு மகத்தான வெற்றி என்பதில் சந்தேகமில்லை.

சமச்சீர் கல்வி எனும் திட்டம் ஒரு கருத்துருவாக இருந்த காலத்தில் இருந்தே அது தொடர்பான விவாதங்கள் எங்கே நடந்தாலும் அங்கு சென்று பொதுப் பாடத்திட்டத்துக்கு ஆதரவான கருத்துக்களை வைத்தது தொடங்கி இன்றைய உச்சநீதிமன்ற வழக்கு வரை பங்கேற்ற பிரின்ஸ் கஜேந்திரபாபு, வழக்கு மன்றத்திலும் அதற்கு வெளியேயும் தொய்வில்லாமல் போராடிய மனித உரிமை பாதுகாப்பு இயக்கம் மற்றும் கல்வி உரிமைக்கான பெற்றோர் இயக்கம் ஆகியோர்களின் பங்களிப்புதான் இந்த வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது. இவர்கள் யாவரையும் வாழ்த்தவும், நன்றி சொல்லவும் வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

மற்றொருபுறம் இது ஒரு எச்சரிக்கை. ஏழுகோடி மக்கள் இருக்கும் ஒரு மாநிலத்தில் ஒரு அதிமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைக்கு இத்தனை குறைந்த எண்ணிக்கையுடைய அமைப்புக்கள் மட்டும் போராடியிருப்பது தமிழினத்துக்கு பெருமைதரக்கூடியதில்லை. கம்யூனிஸ்ட் இயக்கங்கள் அறிக்கையோடு வேலையை முடித்துக்கொள்ள அவர்களது மாணவர் இயக்கங்கள் வீதியில் இறங்கிப் போராடுவது அவர்கள் மாணவர்கள் மத்தியில் செல்வாக்கு இழக்கக்கூடாது என்பதற்காகவே. சமச்சீர் கல்வியை ஆதரிப்பதாக காட்டிக்கொண்ட பிரதான எதிர்கட்சிகள் ஒன்றுகூட இந்த சட்ட நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை. தனியார் பள்ளிகளுடனான கள்ளக்கூட்டணி அல்லது மாணவர் சமச்சீர் கல்வி மீதான அக்கறையின்மை ஆகியவற்றைத்தவிர வேறு காரணங்கள் இதற்கு இருக்க முடியாது. (கஜேந்திரபாபு (சி.பி.எம்) மற்றும் பாலு (பா.ம.க) ஆகியோர் தனிப்பட்ட நபர்களாகவே வழக்கில் பங்கேற்றிருக்கிறார்கள்)

எல்லோருக்கும் சமமான பாடம் என்பதை ஜெயாவின் மேட்டுக்குடி மனோபாவத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. வழக்கில் வென்றாலும் வெற்றியை கிட்டத்தட்ட ஜெயாவிடமே ஒப்படைத்திருக்கிறோம். அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த கல்வி முறையை ஜெயா என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். சொறி பிடித்தவன் கையும் சோ.ராமசாமியின் வாயும் சும்மாயிருக்காது. போதாக்குறைக்கு இ.கம்யூ மகேந்திரனைப்போன்ற உண்ட வீட்டுக்கு துரோகம் செய்யும் வீடணர்களும் இருக்கையில் (அவரது சமீபத்தைய டி.வி பேட்டியை பார்த்தவர்களுக்கு புரியும்), நம்மில் பெரும்பாலானவர்கள் அமைதியாக இருந்தால் இந்த வெற்றி சீக்கிரமே பயனற்றதாக்கப்பட்டுவிடும். மற்றவர்கள் பெற்றுத்தந்த வெற்றியை காப்பாற்றிக்கொள்ளவாவது நாம் வேலைசெய்தாக வேண்டும். நீதிமன்றத்தை சமாளிப்பதில் நம் எல்லோரைக்காட்டிலும் ஜெயலலிதா கில்லாடி. ஆகவே சமச்சீர் கல்வியை காப்பாற்றுவது நம் கைகளில் மட்டும்தான் இருக்கிறது.

பொதுப் பாடத்திட்டம் என்பது நம் மாநிலத்தின் கல்வி மேம்பாட்டிற்கான மிகச்சிறிய முன்முயற்சி. இன்னும் நாம் செல்ல வேண்டிய தூரம் ஏராளம். அதையெல்லாம் மனித உரிமைப் பாதுகாப்பு இயக்கமும், ம.க.இ.கவும் பார்த்துக்கொள்வார்கள் என நாம் சும்மாயிருந்துவிட முடியாது. ஜெயலலிதா தொடர்ந்து அவர்களுக்கு ஏராளமான வேலைகளை தந்துகொண்டேயிருப்பார்.

ஆகவே சமச்சீர் கல்வியை காப்பாற்றவும் அதன் ஏனைய இலக்குகளை அடையவும் நமக்கு சாத்தியமான வழிகள் யாவற்றிலும் முயல்வோம். இது குறித்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கு ஏற்படுத்துவது தொடங்கி, அரசின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது மற்றும் இதற்கான இயக்கங்களில் பங்கேற்பதுவரையான எளிமையான வேலைகள்தான் நமக்கிருக்கிறது…

————————————————————————————————————

சமச்சீர் கல்வி- ஒரு வேளை இந்தக் கருத்துக்கள் உங்களுக்கு பயன்படலாம்.

இதற்கு முன்னால் எழுதப்பட்ட (பள்ளிக்கல்வி தொடர்பான) இடுகை முழுமையற்றதாக இருந்ததாக ஒரு விமர்சனம் வந்தது. அதுமட்டுமில்லாமல் தற்போது உள்ள அல்லது இதுவரை இருந்த கல்விமுறை ஏன் நிராகரிக்கப்படவேண்டும் என்பதற்கான அடிப்படை விளக்கங்களை ஒரு நண்பர் கேட்டிருந்தார் (அவரது நண்பர்களுக்கு மின்னஞ்சலாக அனுப்ப..). இரண்டுக்கும் பொதுவாக இந்த இடுகை எழுதப்படுகிறது. ஓரளவு வாசிப்புப் பழக்கம் இருக்கும் எல்லோருக்கும் தெரிந்த கருத்துக்கள்தான் இதில் இடம் பெறவிருக்கிறது.. ஆகவே நீங்கள் சலிப்படையும் வாய்ப்பு அதிகம் என்பதை மனதில்கொண்டு வாசிக்கவும். கூடுதல் கருத்துக்கள் இருப்பின் மறக்காது பின்னூட்டமிடவும், பாடத்திட்டம் குறித்து நிஜமாகவே குழப்பத்தில் இருக்கும் சிலருக்கு அது பயன்படலாம்.

பழைய பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டியது அவசியம், ஏன்?: தமிழகத்தில் அதிக அளவு மாணவர்கள் பயிலும் மாநில மற்றும் மெட்ரிக் பாடத்திட்டங்கள் முழுமையாக மனப்பாடம் செய்யும் திறனை மட்டும் நம்பியிருக்கின்றன. கல்வியானது மாணவனை பதிலில் இருந்து கேள்வி கேட்பவனாக வளர்க்கவேண்டும். ஆனால் இங்கு கையிருப்பில் இருக்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லும் மாணவர்கள்தான் உருவாக்கப்படுகிறார்கள். இந்த வகையான பாடத்திட்டங்கள் உலகில் அனேக நாடுகளில் பயன்பாட்டில் இல்லாதவை.

நம் கல்விமுறை வெறுமனே மதிப்பெண் வாங்குவது மட்டுமே வெற்றி என நிர்ணயிக்கிறது. இந்த ஒற்றை இலக்கு மாணவர்களை துன்புறுத்துவதாகவும் ஆசிரியர்கள் தங்கள் அனேக கடமைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் உதவுகிறது. தகுதியற்றவர்கள் ஆசிரியர்களாக நீடிக்கவும், தகுதியுள்ளவர்கள் சோம்பேறியாகவும் இந்த ஒப்பிக்கும் ஆசிரியப்பணிதான் காரணம். ஒரு பாடமானது ஆசிரியரைத்தான் வேலை வாங்க வேண்டும், அவர்கள்தான் தன் மாணவனை மதிப்பிட்டு அவனது புரிதலுக்கு ஏற்றவாறு பாடம் நடத்த தன்னை தயாரித்துக்கொள்ள வேண்டும். தலைகீழாக இங்கு பாடங்கள் மாணவர்களை வேலைவாங்கி ஆசிரியர்களை சூப்பர்வைசர்களாக மட்டும் வைத்திருக்கிறது. ஆகவே பழைய பாடத்திட்டம் இதுவரை பயன்படுத்தப்பட்டதே நியாயமில்லாதது,

தரமற்ற பாடங்கள் திணிக்கப்படுவதை எப்படி ஏற்பது: இது கல்வி வியாபாரிகள் மற்றும் சில பொதுப்பாடத்திட்டத்துக்கு எதிரான நபர்களின் பிரச்சாரத்தின் விளைவு. உண்மையில் நம்மில் தொன்னூறு விழுக்காடு மக்களுக்கு எது தரமான பாடம் என் தீர்மானிக்கத் தெரியாது. இத்தனை ஆண்டுகளும் பயன்பாட்டில் இருந்த மாநில மற்றும் மெட்ரிக் பாடங்கள் தரமானவையா என் பரிசீலித்தா ஏற்றுக்கொண்டோம்? பாடம் தரமானதா என தெரிந்துகொள்ள விரும்பினால் நாம் செய்திகளை தெரிந்துகொள்ளும் பரப்பை விசாலமாக்குவதுதான் வழி. புதிய பாடத்திட்டம் தரமற்றது என ஜெயாவும் காவிப்படைகளும்தான் எதிர்க்கிறார்கள். புதிய பாடத்திட்டம் ஓரளவுக்கேனும் உருப்படியானது என உறுதிப்படுத்த இதுவே சிறந்த ஆதாரம்.

வேறு வேறு பாடத்திட்டங்கள் இருப்பதால் என்ன குறைந்துவிடும்? ஒரே பாடத்திட்டம் என்பது பெற்றோர் மற்றும் மாணவர் உரிமையை பறிப்பதாகாதா? நான்கு வெவ்வேறான பாடங்களை நடத்தும் பள்ளிகள் பெற்றோரை குழப்ப மட்டுமே பயன்படும். ஒரே பாடத்திட்டம் இருக்கையில் நாம் நமக்கு அருகிலிருக்கும் பள்ளியை தெரிவு செய்ய முடியும். பணத்தை கொட்டி படிக்க வைக்கும் பள்ளியின் தரத்தை ஒரு மாநகராட்சிப் பள்ளியின் தரத்தோடு ஒப்பிட இயலும். அப்போது நாம் கேள்வி கேட்கவேண்டியது தனியார் பள்ளியையா அல்லது அரசாங்கத்தையா என முடிவுக்கு வர இயலும் (அப்படி ஏதாவது நடந்துவிடும் என பயந்தே மெட்ரிக் பள்ளிகள் பொதுப் பாடத்திட்டத்தை எதிர்க்கின்றன). தங்கள் வியாபாரத்துக்காகத்தான் தனியார் பள்ளிகள் ஒரு தனிப்பட்ட பாடத்தை விரும்புகிறார்கள். அதனால் அவர்கள் விரும்பிய விலையை கல்விக்கும் புத்தகங்களுக்கும் நிர்ணயம் செய்யலாம். பாடம் பொதுவானால் இரண்டையும் கட்டுப்படுத்த இயலும். ஆகவே பெற்றோர்கள்தான் பொதுப் பாடத்திட்டத்தினை முதலில் ஆதரிக்கவேண்டும்.

இதில் பெற்றோர் உரிமை மாணவர் உரிமை என்பதெல்லாம் வேறு காரணம் கிடைக்காமல் சொல்லப்படுபவை. மருத்துவத்துக்கு ஒரே பாடம்தான் மாநிலம் முழுக்க இருக்கிறது. பொறியியல் ஒரே பல்கலைக்கழகத்தின் கீழ்தான் வருகிறது. பள்ளிகளுக்கு மட்டும் ஏன் ஒரே பாடத்திட்டம் இருக்கக்கூடாது?

பொதுப் பாடத்திட்டத்தில் கருணாநிதியையும் கனிமொழியையும் பாரட்டும் பாடங்கள் இருக்கின்றன: இதுவும் நம் கவனத்தை திசைதிருப்ப செய்யப்படும் பிரச்சாரமே. பிரதான விவாதம் பொதுவான பாடங்கள் தேவையா என்பதுதான். கருணாநிதி பற்றி பாடம் இருக்கிறதா என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். பலரும் சொல்வதுபோல அதுதான் சிக்கலென்றால் அந்தப் பாடத்தை நீக்குவது சுலபம். கடந்த ஐந்தாண்டுகளாக கருணாநிதியின் படத்தையும் பேரையும் எதிர்கொள்ளாமல் அரைமணி நேரத்தையாவது நாம் கடந்திருக்க முடியுமா? நாம் அதற்காக ஊரை காலிசெய்துவிட்டோமா? தலைவர்கள் பற்றிய பஜனையை எல்லா இடங்களிலும் திணிப்பது தமிழகத்தில் நாற்பதாண்டுகளாக இருக்கும் நோய். அதை தனியே சரிசெய்ய வேண்டும். அதை காரணமாக்கி புதிய பாடத்திட்டத்தையே மறுதலிப்பது புத்திசாலித்தனமாகாது.

பாடங்களைக் குறைத்தால் போட்டித்தேர்வுகளுக்கு எப்படி மாணவர்கள் தயாராவார்கள்? அதிசயிக்கத் தக்க வகையில் நான் சந்தித்த அனேக பெற்றோர்களுக்கு இந்த சந்தேகம் இருந்தது. கடந்த இருபதாண்டுகளில் போட்டித்தேர்வுகளில் தேறிய மாணவர்களின் பின்புலத்தை ஆய்வு செய்தால் இந்த சந்தேகம் வராது. என் அறிவுக்கு எட்டியவரை, போட்டித்தேர்வுக்கு மாணவர்களை தயாரிப்பதில் மெட்ரிக் பாடங்கள் எந்த வகையிலும் மாநில பாடத்திட்டத்தைக் காட்டிலும் மேம்பட்டதாக தெரியவில்லை.

மேலும், தேர்வுகள் மட்டுமே உங்கள் குழந்தைகளின் திறனை மதிப்பிடும் கருவியல்ல. அறுபது மதிப்பெண்தான் வாங்குவான் என தெரிந்துகொண்டால் உங்கள் மகனை மகனில்லை என்று சொல்லிவிடுவீர்களா? நுழைவுத்தேர்வில் தேற இயலாத மாணவன் அபாரமான இசைஞானமுடைய கலைஞனாகலாம். நாம் செய்ய வேண்டியது இசைக்கலைஞனுக்கும் நியாயமான சம்பளம் மற்றும் சமூக அங்கீகாரம் கிடைக்க உழைப்பதே. தனக்கு தேவையான செய்திகளை தேடிப்போய் படிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தால் மாணவர்கள் தனக்கான போட்டித்தேர்வை தாங்களே தெரிவு செய்வார்கள். அதுதான் அவர்களை அதில் வெற்றி பெறவும் வைக்கும்.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்தாமல் பாடத்தை மட்டும் மாற்றுவதால் என்ன பிரயோஜனம்?:  சமச்சீர் கல்வி குறித்த தீர்ப்புக்குப் பிறகும் வீரியம் குறையாத வாதம் இதுவே. ஞாநி போன்ற பத்திரிக்கையாளர்களும் இதை சத்தமாக சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள். பள்ளிகள் தரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. இன்னமும் எழுபதாயிரம் ஆசிரியப் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும். கூரையில்லாத பள்ளிகள், கழிப்பறை இல்லாத பள்ளிகள் என வசதியில்லாத பள்ளிகள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அவற்றை மேம்படுத்திவிட்டுத்தான் பாடத்திட்டத்தினை மாற்ற வேண்டும் எனும் வாதம் வாய்தா வாங்கும் செயலேயன்றி நியாயமான கவலையில்லை.

தனியார் பள்ளிகளும் ஏராளமான வசதிக் குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றன. தகுதியற்ற ஆசிரியர்கள், நெருக்கடியான வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் இல்லாமை என மெட்ரிக் பள்ளிகளின் குறைபாடுகள் வண்டி வண்டியாக இருக்கின்றன. அனுமதி பெறாத பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்காதீர்கள் என அரசே எச்சரிக்கும் துர்பாக்கியம் நம் நாட்டைத்தவிர வேறெங்கும் இருக்க முடியாது. நிலைமை இப்படியிருக்கையில் அரசுப் பள்ளியின் தரத்தை மேம்படுத்து பிறகு பாடத்தை மாற்று என்பது என்ன நியாயம்? வசதியில்லாத பள்ளிகளில் புதிய பாடத்திட்டம் பயனளிக்காதென்றால் பழைய பாடம் மட்டும் பலனளித்துவிடுமா? பொதுப்பாடத்திட்டமும் முழு வசதி பெற்ற பள்ளிகளும் நமக்கு அவசியமானவையே. வசதியை காரணமாக்கி பாடத்தை நிராகரிக்காது பாட மாற்றத்தைத் தொடர்ந்து வசதியையும் மேம்படுத்து என அரசை அழுத்துவதுதான் சரி. இரட்டைப் பிள்ளைகளில் யாருக்கு முதலில் திருமணம் நடந்தால் என்ன? இன்னொருவருக்கு சம்பந்தம் பார்ப்பதை விட்டுவிட்டு முடிவான கல்யாணத்தை ஏன் நிறுத்திவைக்கவேண்டும்?

விளக்கங்கள் போதாதுதான். ஆனால் இவை சமச்சீர் கல்வியின் நியாயத்தை ஓரளவுக்கு உங்களுக்கு விளக்கியிருக்கும். உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது என்பதற்காக சமச்சீர் கல்வியை ஏற்கவேண்டாம். அதனைப்பற்றி சரியாக புரிந்துகொண்டாலே நமக்கு நீதிமன்றத்தின் பரிந்துரை தேவைப்படாது.

தொடர்புடைய பதிவு:

பள்ளிக்கல்வி- முட்டாள்கள் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள், புத்திசாலிகள் புத்தகங்களுக்காக காத்திருக்கிறார்கள்.

https://villavan.wordpress.com/2011/08/04/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/

தமிழக பள்ளிகள்- வர்க வேறுபாடுகளின் புதிய காவலன்.

https://villavan.wordpress.com/2010/12/24/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81/

Advertisements

“லேப்டாப்பை சும்மா கொடுப்போம்.. புத்தகத்தை மட்டும் சுப்ரீம் கோர்ட் சொன்னால்தான் கொடுப்போம்.” இல் 12 கருத்துகள் உள்ளன

 1. //மருத்துவத்துக்கு ஒரே பாடம்தான் மாநிலம் முழுக்க இருக்கிறது. பொறியியல் ஒரே பல்கலைக்கழகத்தின் கீழ்தான் வருகிறது.//

  அப்படியென்றால் அண்ணாப் பல்கலைக்கழகத்தில் படிப்பவனும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒட்டன்சத்திரம் பொறியியல் கல்லூரியில் படிப்பவனும் ஒரே மாதிரி தான் இருக்கின்றனரா? இது சமச்சீர் கேள்விக்கான எதிர் கேள்வி இல்லை, கற்றுக்கொடுக்கும் விதமும் கல்வியில் முக்கியப்பங்கு வகிக்கிறது என்பதற்காக சொல்கிறேன். அதை மேம்படுத்த வேண்டும் என்பதே இந்தத் திட்டம் அமல் படுத்தும் முறையில் பெற்றோர்கள் எதிர் பார்ப்பது. எந்தக் கல்வித்திட்டமனாலும் பெற்றோர்கள் நல்ல திறமையான ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் இருப்பதை கவனித்தால் அங்கு தான் சேர்ப்பார்கள். அதனால் தனியார் பள்ளிகளுக்கு சமச்சீர் கல்வியால் இழப்பு என்னும் வாதம் முழுமையாக சரி அல்ல.

  //வசதியில்லாத பள்ளிகளில் புதிய பாடத்திட்டம் பயனளிக்காதென்றால் பழைய பாடம் மட்டும் பலனளித்துவிடுமா?//

  வசதி என்று இங்கு சொல்லப்படுவது ஆசிரியர் வசதியையும் கூறுகிறது. பல அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் வருவதில்லை. பள்ளிகளே சரியாக நடப்பதில்லை. இப்படி இருக்கையில் எந்த கல்வித்திட்டமனாலும் அங்கு இப்படித் தான் இருக்கும். அதனால் அந்தப் பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதும் முக்கியம் தான். அப்போது தான் நீங்கள் சொல்வது போல் தனியார் பள்ளிகளுக்கு ஒரு நெருக்கடி இருக்கும். எந்த பள்ளியில் படித்தாலும் கல்வி ஒன்று தான். ஆசிரியர்கள் அதை எளிமையாக நடத்தும் விதம், அதன் மூலம் நல்ல மதிப்பெண்கள் என்று ஒரு சமமான சூழ்நிலை நிலவும். இப்போது சமச்சீர் கல்வி அமலாகிறது. அடுத்த கல்வியாண்டில் நாம் கண்கூடாகப் பார்க்கப்போகும் ஒரு விஷயம். நல்ல திறமையான ஆசிரியரைக் கொண்ட பள்ளிகளிலிருந்து வரும் மாணவர்கள் முன்னிலை பெறுவார். உடனே இப்போது ஆசிரியர் காலியிடங்களை நிரப்பினால் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று சொன்னால், அப்போதும் ஆசிரியரின் அனுபவமே தீர்மானியாக அமையும்.

  //புதிய பாடத்திட்டம் தரமற்றது என ஜெயாவும் காவிப்படைகளும்தான் எதிர்க்கிறார்கள். //

  ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், ஒரு குழு இந்த சமச்சீர் கல்வியை முழுமையாக பரிசீலித்து ஒரு அறிக்கை அளித்ததே, அதைப் பற்றி தாங்கள் கருத்து ஏதும் இந்த சமச்சீர் கல்வி பற்றிய விளக்கங்களில் சொல்லவில்லையே?

  //தனக்கு தேவையான செய்திகளை தேடிப்போய் படிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தால் மாணவர்கள் தனக்கான போட்டித்தேர்வை தாங்களே தெரிவு செய்வார்கள்.//

  அதற்கு நம் பழைய முறையான குருகுலக் கல்வியே சிறந்த முறை. இந்தியா சுதந்திரம் அடைந்த பின், ஆங்கிலேயர் கொடுத்த கல்வி முறை வேண்டாம், நாம் மீண்டும் குருகுலக் கல்விக்கே செல்லலாம் என்று மகாத்மா காந்திஜி சொன்னதாக கேள்வி. என்ன காரணத்தலோ அது அமல்படுத்தப் படவில்லை… ?

  //எல்லோருக்கும் சமமான பாடம் என்பதை ஜெயாவின் மேட்டுக்குடி மனோபாவத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. வழக்கில் வென்றாலும் வெற்றியை கிட்டத்தட்ட ஜெயாவிடமே ஒப்படைத்திருக்கிறோம். அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த கல்வி முறையை ஜெயா என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். சொறி பிடித்தவன் கையும் சோ.ராமசாமியின் வாயும் சும்மாயிருக்காது.//

  தேவை அற்ற வார்த்தைகள். தவிர்த்திருக்கலாம். எந்த பொது கருத்து தெரிவுக்கும் போதும், நீங்கள் மட்டும் அல்ல பெரும்பாலான பதிவு எழுதுபவர்கள் மேட்டுக்குடி என்றும், பார்ப்பனர் என்றும், பிராமணர் என்றும் நீங்கள் குறிக்கும் அந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை தாக்கி எழுதவதை வழக்கமாகக் கொண்டுள்ளீர்கள். நல்லது. நிறைய பேர் ரசித்துப் படிப்பார்கள் என்ற எண்ணம் போலும். உங்களை ஆதரிக்கும் வண்ணம், நாலு பேர் அருமை, அற்புதம் என்று வேற இந்தக் கருத்தை வரவேற்பார்கள். இப்படித்தான் கருணாநிதியைக் குறிக்கும் போதும் மற்ற அரசியில் மற்றும் பொதுக்கருத்துகள் தெரிவிக்கும் போதும் அதில் சொல்லப்படும் நபர்களை அவர்கள் ஜாதி சொல்லி அழைக்கிறீர்களா? அவர்களின் கருத்து தவறாக இருப்பின், அவர்கள் ஜாதியையும் சேர்த்து இழிவு படுத்துவீர்களா? அப்போதும் அந்த நாலு பேர் ஆதரிப்பார்களா? மனதில் தோன்றியதை சொன்னேன். தவறாகக் கூறியிருந்தால் மன்னிக்கவும்.

 2. உங்கள் கடைசி பத்திக்கு முதலில் பதில் சொல்லிவிடுகிறேன் தோழர்.

  பிராமண, பார்ப்பன ஆகிய வார்த்தைகள் அந்த சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கில் சொல்லப்படுவதில்லை. பாசிசம், நாசிசம் என்பது போல இந்துயிசம் எனும் இசம் இருக்கிறது. அதனை வரையறுத்து முதல் கட்டுப்படுத்துவது வரை பிராமணர் எனும் இனத்தவரால் செய்யப்படுவதால் பார்பனீயம் எனும் வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

  மனுதர்மத்தின் வார்த்தைகளின்படி, பிறப்பால் தாங்கள் உயர்ந்தவர்கள் என பிராமணர்கள் நம்பும்போதே மற்றவர்கள் கீழானவர்கள் எனும் சிந்தனை வந்தே தீரும். இந்த நவீன யுகத்திலும் இந்த மனுதர்ம விதியை கைவிட மறுக்கும் சோவையும் தினமலரையும் இன்ன பிற நபர்களையும் அவர்தம் செயல்பாடுகளையும் குறிப்பிடும்போது மட்டுமே இந்த வார்த்தைகள் சொல்லப்படுகின்றன.

  காபியை அன்னாத்தி (எச்சில் படுத்தாமல்) குடி எனும் சிறப்பு கவனிப்பை உங்கள் நண்பர்கள் வீட்டில் எதிர்கொண்டிருக்கிறீர்களா? உங்கள் காசில் உருவான உங்கள் கடவுளை நீங்கள் தூரநின்றுதான் கும்பிடவேண்டும் என்பதன் நியாயத்தை எப்படி உங்களால் விளங்கிக்கொள்ள இயலும்?

  எங்களை ஏன் கோயிலுக்குள் அனுமதிக்க மறுக்கிறீர்கள் என தலித்துக்கள் கேட்டபோது முதல்ல குளிச்சுட்டு சுத்தபத்தமா வாங்கோ என ஜெயேந்திர சரஸ்வதி சொன்னால் அதை எப்படி பார்ப்பனீயம் எனும் வார்த்தையை பயன்படுத்தாமல் கண்டிக்க இயலும்? ராசா ஒரு தலித்தாக இல்லாவிட்டாலும் 2ஜி ஊழலை செய்ய இயலும். ஆனால் ஜெயேந்திரன் ஒரு பிராமணராக இல்லாவிட்டால் இந்த திமிர் பிடித்த வாசகங்களை சொல்லிவிட முடியுமா என சொல்லுங்கள்..

  சின்னக்குத்தூசியை யாரேனும் பார்ப்பனனே என கூப்பிட்டு பார்த்திருக்கிறீர்களா? பிறகு ஏன் சோவை மட்டும் அப்படி சொல்கிறார்கள் என கொஞ்சம் யோசியுங்கள். எல்லோரும் சமம் என நினைத்தால் ஒரு பிராமணன் தன்னை பிராமணனாக அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கம்யூனிச(ஒரிஜினலுங்க..) மற்றும் பெரியாரின் சிந்தனைகளை ஏற்றுக்கொண்ட பிராமணர்கள் அப்படித்தான் வாழ்ந்தார்கள். அவர்களும் பார்ப்பன எனும் வார்த்தையை பயன்படுத்தியே இந்துத்துவாவை விமர்சித்தார்கள்.

  என் வாதம் உங்களுக்கு நியாயமாக தோன்றாது போகலாம். வலுவான சாதி அமைப்புள்ள நம் சமூகத்தை நிதானமாக அவதானியுங்கள், இந்து மதத்தை உயர்வானதென்று சொல்லும் புத்தகங்களையும் இந்து மதம் அநீதியானது என சொல்லும் புத்தகங்களையும் நேர்மையாக வாசித்து ஒப்பிடுங்கள். பிறகு உங்களால் எங்கள் வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தை உணர இயலும்.

  ஒருவேளை பிராமணர்கள் சமூகத்தில் இரண்டாம் தர குடிமக்களாக இருந்திருந்தால், பெரியார் அவர்கள் பக்கம் இருந்துகொண்டு முதல்தர குடிமக்களாக தங்களை சொல்லிக்கொள்ளும் சாதிக்காரர்களுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பார். இப்போதும் சங்கரராமன் எனும் பிராமணரின் கொலைக்கு நியாயம் வேண்டி போராடும் நபர்கள் “பிராமணீயத்துக்கு” எதிராக விமர்சனம் செய்பவர்கள்தான்.

  மற்றபடி நிறையபேர் ரசித்து படிப்பதற்காக இவை எழுதப்படுவதில்லை. அதற்கு சினிமாவும் பாலியலுமே போதும். (குறிப்பாக எனது தளம் நிறைய பேர் படிக்கும் தளமும் அல்ல.)

  உங்கள் மற்ற கருத்துக்களுக்கு பிறகு கருத்திட முயற்சி செய்கிறேன். (அவகாசமிருந்தால்). இது தொடர்பான மேல் விவாதங்களுக்கும் நான் தயாராக இருக்கிறேன்.

 3. எனக்கு ட்விட்டர் முகவரிகூட கிடையாது நண்பரே.. கட்டுரை எழுதும்போது கிடைக்கும் திருப்தியை (யாரும் படிக்காவிட்டாலும்கூட) ட்விட்டரின் சிறுவாக்கியங்கள் பறித்துக்கொள்ளுமோ எனும் அச்சத்தால் நான் அதற்கு முயற்சி செய்யவில்லை. (எதற்கும் இருக்கட்டும் என ட்விட்டர் கணக்கு துவங்கலாம் என ஒரு முறை முயன்றேன்.. ஆனால் அப்போது அது முடியவில்லை).

 4. சமச்சீர் கல்வி குறித்த்த அடிப்படையான கேள்விகளுக்கு சிறப்பான வகையில் பதிலளித்துள்ளீர்கள். கல்வி முறையை பற்றி சிறப்பான பார்வை கொண்டுள்ளீர்கள். வரும்காலங்களிலும் சமச்சீர் கல்வியை பற்றி மட்டுமல்லாது ,பொதுவான கல்வி சார்ந்த கட்டுரைகளையும் தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

  //ஆயிரத்தெட்டு பேர் மயிரை மழிக்க தயாராக இருக்கும் மாநிலத்தில், மாணவர்களில் எதிர்காலத்துக்கான போராட்டத்துக்கு மாவட்டத்துக்கு பத்தாயிரம் பேரைக்கூட திரட்டவியலாத அவலம் மற்றொருபுறம்.//- உண்மையான பிரச்சனை எதுவென்று தெரியாத அளவிற்கு மக்கள்தான் மயக்கத்தில் இருக்கிறார்களென்றால், இதை கண்டிக்க வேண்டிய ஊடகங்களோ, இதை பெரும் சாதனையாக்கி செய்தி வெளியிடும் கொடுமையை என்னவென்று சொல்வது?

 5. கட்டுரையில் நல்ல அனுபவம் வெளிப்படுகிறது. தரமான பதிவு.

  இதனை பலரும் படிபதற்க்கு சரியான தளத்தையும் தேர்ந்து எடுத்தால், குழம்பியுள்ள மக்கள் தெளிவு பெறுவார்கள். சமசீர் கல்வியை பற்றி ஊடகங்களில் கருத்துக்கள் பதிவை படிக்க நேர்ந்தது அதில் பலருடைய அறியாமையும் கூடவே மறைமுகமாக பதிந்துள்ளார்கள்…அவர்களுக்கு இந்த கட்டுரை தெளிவைதரும் என நம்புகிறேன்.

  மேலும் இது போல் கட்டுரைகள் தொடரட்டும்.

  வாழ்த்துக்கள்.

  அருட்பிரகாசம்.

 6. // மனுதர்மத்தின் வார்த்தைகளின்படி, பிறப்பால் தாங்கள் உயர்ந்தவர்கள் என பிராமணர்கள் நம்பும்போதே //
  நீங்களே கூறுகிறீர்களே அது அவர்களின் நம்பிக்கை அவ்வளவு தான். அந்த நம்பிக்கை தன் எல்லை மீறி அடக்குமுறையாக தலையெடுத்தது உண்மை. பெரியார் போன்றோர் அதை எதிர்த்து உண்மை. இப்போது அது மீண்டும் நம்பிக்கை என்ற அடிப்படையில் தான் உள்ளது என்பது என் கருத்து. பெரியார் காலத்தில் பச்சையாகத் தெரிந்தது, இன்றும் பச்சையாகத் தான் இருக்கிறது என்று பச்சைக்கண்ணாடி அணிந்து சொல்லாமல், அது உண்மையா இல்லையா என்று நடுநிலைமையோடு ஆராய வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

  // காபியை அன்னாத்தி (எச்சில் படுத்தாமல்) குடி எனும் சிறப்பு கவனிப்பை உங்கள் நண்பர்கள் வீட்டில் எதிர்கொண்டிருக்கிறீர்களா? //
  ஆம். எதிர் கொண்டிருக்கிறேன். ஆனால், அதைச் சொல்பவரும் அதைக் கடைபிடித்தார். அதனால், இதில் பேதம் தெரியவில்லை. காபியை எச்சில் படுத்திக் குடித்தால் கிருமிகள் எச்சில் மூலமாக பரவும் வாய்ப்பு உண்டு தானே? இது மருத்துவர் சொன்னால் தான் சரியாகப் படுமா?

  // உங்கள் காசில் உருவான உங்கள் கடவுளை நீங்கள் தூரநின்றுதான் கும்பிடவேண்டும் என்பதன் நியாயத்தை எப்படி உங்களால் விளங்கிக்கொள்ள இயலும்? //
  இப்பவும் இது உள்ளதா? இல்லைப் பச்சைக்கண்ணாடி கதையா?

  // முதல்ல குளிச்சுட்டு சுத்தபத்தமா வாங்கோ என ஜெயேந்திர சரஸ்வதி சொன்னால் அதை எப்படி பார்ப்பனீயம் எனும் வார்த்தையை பயன்படுத்தாமல் கண்டிக்க இயலும்? //
  சொன்னவர் ஒரு மருத்துவராக இருந்தால், இப்படி கண்டீப்பீர்களா என்பது சந்தேகமே. மேலும், அவர் வரக்கூடாதுன்னு சொல்லலியே குளிச்சிட்டு வாங்கனு தான் சொல்றார். தொழு நோய் வேகமாக பரவி வந்த காலங்களில், கோயில் வாசலில் ஒரு பலகை வைத்திருப்பார்கள், எளிதாகப் பரவக்கூடிய நோய்வாய்ப் பட்டவர்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்று. இதுவும் அடக்கு முறையா? கோயில் என்னும் இடம் கூட்டமாக மக்கள் சேரும் இடம் ஆதலால், நோய் பரவும் வாய்ப்புக்கள் அதிகம். குளித்து விட்டு வந்தால் கொஞ்சம் தவிர்க்கலாம்.

  இப்படி விளக்கங்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். ஆனால், சமச்சீர் கல்விக்கும் இந்துயிசம்கும் என்ன சம்பந்தம்? இதை இந்துயிசம் கடைபிடிக்கும் மக்கள் மட்டும் தான் எதிர்கிறார்களா? நீங்கள் சோவாகட்டும் இல்லை இன்ன பிற கருத்து தெரிவிக்கும் அன்பர்கள் ஆகட்டும் அவர்களின் கருத்து என்ன என்று பாராமல், அதைச் சொன்னது யார், அவர் எப்படிப்பட்டவர் என்று பார்கின்றீர்கள். அதன் விளைவே இந்தப் பார்ப்பனச் சாடல். இப்படியாக சொல்கின்ற கருத்தைப் பார்க்காமல், சொல்லுபவர் யார் என்று ஆராய்ந்து இப்படிச் சாடிக்கொண்டே இருந்தால், பிறகு எப்படி அந்த வலுவான சாதி அமைப்பு மாறும்?

  நான் முழுமையாக அலசாமல் அதிகபிரசங்கித் தனமாகப் பேசி இருந்தால், மன்னிக்கவும், அது என் அறியாமையே. நன்றி.

 7. கோயில்கள்தான் இன்னமும் இந்து மதத்தின் சாதிப் பாகுபாட்டை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. பிராமணர்கள்தான் உயர்ந்தவர்கள் எனும் கருத்துதான் பிராமண வட்டாரங்களிலும் பயிற்றுவிக்கப்படுகிறது, மற்றவர்களிடமும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. சொல்லிக்கொள்ளும்படியான மாற்றம் இன்னமும் வந்துவிடவில்லை நண்பரே..

  இது உங்கள் பின்னூட்டத்திலேயே வெளிப்படுகிறது (//அவர் வரக்கூடாதுன்னு சொல்லலியே குளிச்சிட்டு வாங்கனு தான் சொல்றார்//) . தலித் மக்கள் குளிக்க மாட்டார்கள் என எந்த அடிப்படையில் ஜெயேந்திரனால் சொல்ல முடிகிறது. நீங்கள் எந்த ஆய்வின் அடிப்படையில் அது சுகாதாரம் தொடர்பான கருத்து எங்கிறீர்கள்? ஜெயேந்திரன் மட்டும் குளித்துவிட்டுத்தான் கோயிலுக்கு வருகிறார் என்பதற்கு சங்கர மடத்தில் ஏதேனும் செக்-லிஸ்ட் பராமரிக்கிறார்களா? எந்த மருத்துவரும் கம்யூனிட்டி சர்டிபிகேட்டை கேட்டு ஆலோசனை சொல்ல மாட்டான்.

  சமூகத்தில் உங்களுக்கும் எனக்கும் தினசரி வாழ்வுக்கு அடிப்படையான சேவைகளை செய்யும் மக்களை முற்றாக அவமதிக்கும் ஜெயேந்திரனின் செயல்பாடு உங்களுக்கு சாதாரணமாக தெரிகிறதென்றால், மன்னிக்க வேண்டும் சாரதி.. நீங்கள் உலகின் மிக அநாகரீகமான இனதுவேஷத்துக்கும் வன்கொடுமைக்கும் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறீர்கள்.

  உங்களது மற்ற வாதங்களுக்கு பதிலளிக்க வேண்டுமானால் நான் ஒரு வாரம் விடுப்பு எடுத்துவிட்டுதான் பதிலிட வேண்டும். பல நூற்றாண்டு வரலாறும் போராட்டமும் உங்கள் பார்வைக்கு வந்தாக வேண்டும். அம்பேத்கர், பெரியார் ஆகியோரது நூல்கள் முதல் சமகால முற்போக்கு சக்திகளின் நூல்கள் வரை வாசியுங்கள் (உண்மையாகவே நீங்கள் பாரபட்சமற்ற முடிவுக்கு வர விரும்பினால்). பிறகு எங்கள் வார்த்தைகளின் நியாயம் உங்களுக்கு தெரியக்கூடும்.

  சமச்சீர் கல்வி வாதத்தில் ஏன் இந்துயிசம் வருகிறது என கேட்கிறீர்கள்.. ஜெ.வும் சோவும் முழு இந்துத்துவ வாதிகள் என்பது முதல் காரணம். பாமரர்களையும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டவர்களையும் படிப்பில் இருந்தும் வழிபாட்டில் இருந்தும் விலக்கி வைத்தது இந்து மதம். இப்போது அந்த செயல்பாட்டில் நீட்சியாக வருவதுதான் வர்கத்துக்கு ஒரு கல்வி எனும் “சோ” விரும்பும் கோட்பாடும். இந்துயிசத்தை குறிப்பிடாமல் சமச்சீர் கல்வி எதிர்ப்பை அம்பலப்படுத்தவே முடியாது..
  இது தொடர்பான விரிவான பதிவு ஏதேனும் கிடைத்தால் பரிந்துரை செய்கிறேன். அல்லது அவகாசமிருப்பின் இன்னொரு பதிவை எழுத முயற்சி செய்கிறேன்.

 8. இங்கு இடப்பட்டுள்ள பின்னூட்டங்கள் சமச்சீர் கல்வியின் முக்கியத்துவத்தை விட ஜாதீயப்பிரச்சினைகளை அதிகம் பேசுகின்றன. உண்மையிலேயே நண்பர் சொன்னது போல் கல்வியைப் பற்றிய அக்கறை நம் சமூகத்தில் சினிமா நடிகர்களுக்காக காட்டும் அக்கறையை விடக் கம்மிதான் அல்லது இல்லை எனச் சொல்லலாம். இதே நிலை கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருக்கும் போது நடந்திருந்தால் நாயும்..பேயும்.. குய்யோ முய்யோ என்று கத்தியிருக்கும். என்ன செய்வது? நம்மைநாமே நொந்து கொள்ள வேண்டியதுதான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s