தமிழ் சினிமா- பெண்ணடிமைத்தனத்தின் பிரச்சார சபை. (1)


பொதுவாக, எழுதுவதற்கு  சிரமம்வைக்காத தலைப்புக்களில் ஒன்று சினிமா. நகைச்சுவையாகவோ அல்லது காரமாகவோ எப்படி வேண்டுமானாலும் சுலபமாக எழுத உகந்தது இந்தத் துறை. மேற்கு மாம்பலத்துக்கும் கோடம்பாக்கத்துக்கும் இடையேயான எல்லையில் ஓராண்டு வசித்ததில் சினிமாவில் தோல்வியடைந்தவர்களின் நிலையும், எப்படியும் ஜெயித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருப்பவர்கள் நிலையும் எனக்கு ஓரளவு பரிச்சயம். ஆகவே அவசரத்துக்கு உப்புமா செய்வதுபோல எதுவும் கிடைக்காவிட்டால் சினிமா தொடர்பாக ஒரு கட்டுரை எழுதிவிடலாம்.

இதற்கு நேரெதிரானது பெண்ணுரிமை பற்றி எழுதுவது. இதை ஒரு பெண் பேசினால் அது அதிகப்பிரசங்கித்தனமான புலம்பலாக கருத்தப்படும் (இணையவெளியில்கூட). ஆண் பேசினால்  அத்தகைய சிக்கல் வராது என்றாலும் நமக்கும் இந்த தலைப்பு ஏராளமான எதிர்வினைகளை தரவல்லது. வேலைக்குப் போவதும் விரும்பிய ஆடைகளை அணிவதுமே மகளிருக்கான முழுமையான சுதந்திரமாக பரவலாக நம்பப்படும் சமூகத்தில்  எதிர்வினைகள் பலமாகத்தான் இருக்கும்.  அதிகம் அலட்டிக்கொள்ளாமல் எழுதிவிட முடிகிற சினிமாவையும் சற்று கவனமாக எழுதவேண்டிய பெண்ணடிமைத்தனத்தையும் ஒரு கட்டுரையில் கொண்டுவரும் முயற்சிதான் இப்பதிவு.

தமிழ்ப் படங்களின் காட்சியமைப்புக்களில் உள்ள பெண்களுக்கு எதிரான பிற்போக்குத்தனங்களையும் விஷமத்தனங்களையும் விவாதிக்கும் முன்னால் அந்த துறையின் செயல்பாடுகளே எப்படி பெண்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்பதை விவாதிப்பது சரியாக இருக்கும் என கருதுகிறேன்.

உள்ளூர் பெண்கள் ஏன் அதிகம் சினிமாவில் நடிப்பதில்லை?. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, சமூகத்திற்கு நடிகைகள் மீதிருக்கிற மோசமான அபிப்ராயம். இரண்டு, தமிழ் சினிமா உள்ளூர் பெண்களை நடிக்க வைக்க விரும்பாதிருக்கலாம். மக்களுக்கு பல துறைகள் மீது மோசமான அபிப்ராயம் இருந்திருக்கிறது. ஆனால் காலப்போக்கில் இந்த எண்ண ஓட்டம் மறைந்துவிடுகிறது. திரையுலகில் மட்டும் இது மாற்றமின்றி தொடர்வதன் காரணம் திரையுலகமேதான். நடிகைகள் சமூகத்தில் இருந்து விலகியிருப்பது அவர்களுக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது. அதன் மூலம்தான் அவர்களை மனரீதியாக நிராதரவானவர்களாக்கி அவர்கள் மீதான வன்முறையை எளிதாக செய்ய முடியும்.

பிரபுதேவா மீது ஒரு பாலியல் குற்றச்சாட்டை சில ஆண்டுகளுக்கு முன்னால் வைத்தார் ராதிகா சவுத்ரி எனும் நடிகை. விருப்பத்துக்கு இணங்க வைக்க கடுமையான நடன அசைவுகளை கொடுத்தார், கடுமையான சொற்களால் ஏசினார் என்பது குற்றச்சாட்டு. ஒரு தெலுங்கு நடிகர் மீது ஒரு பாலியல் குற்றச்சாட்டை சொன்னார் மாளவிகா எனும் நடிகை. ஒரு பாடல் காட்சியில் வேண்டுமென்றே அத்துமீறி நடந்துகொண்டார் என்பது குற்றச்சாட்டு. நிலா எனும் தமிழ் நடிகை, தயாரிப்பாளர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக குற்றம்சாட்டி படப்பிடிப்பில் இருந்து வெளியேறினார். தயாரிப்பாளரோ நடிகை குளிக்கும் காட்சிக்கு மினரல் தண்ணீர் கேட்டு கலாட்டா செய்தார் என பதில் குற்றம் சாட்டினார் (தொட்டியிலோ அல்லது குளத்திலோ சுத்திகரிக்கப்பட்ட நீரை நிரப்புவது திரையுலகில் சாதாரண செயல்பாடே). இவையெல்லால் வெளியே வந்த மிகச் சில குற்றச்சாட்டுக்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள்.

ஏழாண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கவல்ல இந்த குற்றச்சாட்டுக்களுக்கு திரைத்துறை எடுத்த நடவடிக்கை என்ன? புதிய அரசு அமைந்து மந்திரிகள் பதவியேற்பதற்குள் பாராட்டுவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யும் அளவுக்கு வேகமான திரையுலகம் இந்த மாதிரி விவகாரங்களில் மவுனமாக இருப்பது ஏன்? காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான், நடிகைன்னா ‘அதுக்கும்’ சேர்த்துத்தானே எனும் சிந்தனைதான் இந்த அலட்சியத்தை வரவழைக்கிறது. சில நூறு தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் பாலியல் குற்றச்சாட்டை தடுக்க ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்கின்றன அரசு விதிகள். தங்கள் சுதந்திரத்திற்க்கு இடையூறு வரக்கூடாதென்றுதான் இந்த ‘முதலமைச்சர் தொழிற்சாலை’ மட்டும் இந்த விதிகளை பின்பற்ற மறுக்கிறது.

கவர்ச்சியாக நடிக்கும் பல நடிகைகள் ஏன் அளவுக்கு மீறிய பக்தி கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பது குறித்து எப்போதேனும் நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? இதன் உளவியல் பிண்ணனி மிக எளிமையானது. அவர்களை சாதாரண குடும்பப் பெண்களாக சுற்றம் ஏற்க மறுக்கிறது (அவர்கள் நடிப்பதை விட்டு விலகினாலும்). ஆகவே சமூகம் தன்னை ஏற்றுக்கொள்ள ஒரு தளம் தேவைப்படுகிறது. ஒரு பக்தையாக காட்டிக்கொள்ளும்போது அவர்கள் தான் விலக்கிவைக்கப்படுவதில்லை என கருதுகிறார்கள். அதுவே நித்யானந்தா, சாய் பாபா வகையறாக்களுக்கு சாதகமாகிவிடுகிறது. ஒருவேளை சமூகம்தான் இப்படி நடிகைகளை சக பெண்ணாக ஏற்க மறுக்கிறதென்று திரையுலகம் வாதிடுகிறதென்று வைத்துக்கொள்வோம்.. அதனை சரிசெய்ய இவர்கள் என்ன நடவடிக்கை எடுதார்கள்?

நடிகைகள் சமூகத்தில் இருந்து விலக்கிவைக்கப்படுவது திரையுலகிற்கு மிக அவசியம். தனிமைப்படுத்தப்பட்டவர்களை மட்டும்தான் எவ்வளவு வேண்டுமானாலும் மோசமாக நடத்தலாம். இந்த நோக்கத்துக்கு வலு சேர்க்கத்தான் நடிகைகள் வெளிமாநிலங்களில் இருந்து அழைத்து வரப்படுகிறார்கள். வெளியிடத்தில் பணியாற்றினால் அவ்வளவு சுலபமாக நாம் எதிர்த்து பேச முடியாது, அதே லாஜிக்தான் இங்கேயும். பெரும்பாலும் மிக இளம்வயது பெண்கள்  நடிக்க தெரிவு செய்யப்படுவதும் இந்த காரணத்துக்காகத்தான். மஞ்சுளா, லதா, பானுப்பிரியா என தொடரும் பட்டியல் சமீபத்தில் அறிமுகமான கார்த்திகா (நடிகை ராதாவின் மகள்) வரை நீள்கிறது. வசனங்களில் உள்ள ஆபாசத்தையோ அல்லது காட்சிகளிளு அத்துமீறலையோ எளிதில் கண்டறியத் தெரியாத வேற்றுமொழி பேசுகிற மற்றும் மன முதிர்ச்சி இல்லாத பெண்களுக்கு இருக்கும் வரவேற்புக்குப் பின்னால் இந்தக் காரணம் மட்டும்தான் இருக்க முடியும்.

ஒரு பட்டப் படிப்பை முடித்த பிறகு சினிமாவுக்கு வாருங்கள் என பல சந்தர்ப்பங்களில் நமக்கு அறிவுரை சொல்லும் கமலஹாசன், ஏன் சினிமா நடிகைகள் விசயத்தில் இந்த அறிவுரையை வலியுறுத்துவதில்லை??? பிற்போக்குவாதிகள் மட்டுமில்லை தன்னை அறிவுஜீவியாக காட்டிக்கொள்ளும் நபர்களும் சினிமாவில் இப்படித்தான் இருக்கிறார்களென்றால், இது தனி நபர்கள் பிரச்சனை அல்ல.. ஒட்டுமொத்த குழுவின் மனோபாவம்.

கவர்ச்சி நடிகைகள் பலரது மகள்கள் கவர்ச்சி நடிகைகளாகவே இருக்கவேண்டிய தலைவிதி இங்கேயிருக்கிறது, இதை விலக்கிவைத்து விட்டு பார்த்தாலும் அப்படி வரும் வாரிசுகள் பதினைந்து வயதுக்குள்ளே நடனமாட வந்துவிடுகிறார்கள். லக்ஷா (அவர் யார் மகள் என்பது நினைவில்லை) எனும் நடிகை எனக்கு தோழிகளே இல்லை என ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். அவர் பதின்மூன்று வயதில் அறிமுகமானார் என்பது இன்னொரு செய்தி. பத்தாம் வகுப்பு படிக்கும் முன்பாக ஒரு பெண்ணை, ரிக்கார்டு டான்ஸ் ஆட எவ்வித உறுத்தலும் இல்லாமல் அவரது பெற்றோரால் தயாரிக்க முடிகிறதென்றால், திரையுலகில்  பெண் பிள்ளைகளது நிலை எவ்வளவு அபாயகரமாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.

உள்ளூர் குழு நடனப்பெண்களின் (குரூப் டான்சர்கள்) சம்பளம் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் (எல்லா நாளும் வேலையிருக்காது). மும்பையில் இருந்து வரவழைக்கப்படும் பெண்களுக்கு அதனைவிட பத்து மடங்கு அதிக சம்பளம், வெளிநாட்டுப்பெண்கள் என்றால் மும்பை பெண்களைக் காட்டிலும் மூன்று மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட சம்பளம். எல்லா தரப்பிலும் பெண்கள் இள வயதினராய் இருப்பது அவசியம். இப்படி ஊர்,வயது மற்றும் நிறத்தை அடிப்படையாகக் கொண்ட பாரபட்சமான சம்பள விகிதம் சினிமாவைத் தவிர இன்னும் ஒரேயொரு துறையில்தான் இருக்கிறது…

எல்லா வன்முறைகளைக் காட்டிலும் மோசமான வன்முறையொன்று இங்கு இருக்கிறது. மோசமான் அங்க அசைவுகள் கொண்ட நடனத்தை நடிகைகளுக்கு பயிற்றுவிப்பது அனேகமாக சமயங்களில் பெண்கள்தான். பெண்கள் கண்களை அவர்களது விரலைக்கொண்டே குத்தும் இந்த செயல்பாடுதான் தமிழ் திரையுலகின் மன்னிக்க முடியாத குற்றமாக இருக்கும்.

தமிழ்ப் படங்களில் உள்ள பெண்களுக்கு எதிரான வசனங்களும் காட்சியமைப்புக்களும் அவர்களின் சிந்தனையிலும் நடவடிக்கைகளிலுமிருந்தே உருவாகின்றன. வெறுமனே காட்சிகளில் இருக்கும் வன்முறையாக கருதினால் நாம் கோடம்பாக்கத்தை பாதிகூட புரிந்துகொள்ளவில்லை என பொருள்.

(இது ஒரு தொடர் பதிவாக எழுத திட்டமிடப்பட்டிருக்கிறது. கட்டுரையின் அடுத்தடுத்த பாகங்கள் கொண்டிருக்க வேண்டிய வடிவம் மற்றும் கருத்துக்கள் குறித்து உங்களுக்கு ஏதேனும் யோசனைகள் இருந்தால், சிரமம் பாராமல் தெரிவிக்கவும். கட்டுரையை கொஞ்சம் உருப்படியாக கொண்டுவர அது உதவும்)

Advertisements

“தமிழ் சினிமா- பெண்ணடிமைத்தனத்தின் பிரச்சார சபை. (1)” இல் 3 கருத்துகள் உள்ளன

 1. //இதை ஒரு பெண் பேசினால் அது அதிகப்பிரசங்கித்தனமான புலம்பலாக கருத்தப்படும் (இணையவெளியில்கூட). ஆண் பேசினால் அத்தகைய சிக்கல் வராது என்றாலும் நமக்கும் இந்த தலைப்பு ஏராளமான எதிர்வினைகளை தரவல்லது. // தவறான புரிதல்.

  //நடிகைகள் சமூகத்தில் இருந்து விலகியிருப்பது அவர்களுக்கு மிகவும் அவசியமாயிருக்கிறது. அதன் மூலம்தான் அவர்களை மனரீதியாக நிராதரவானவர்களாக்கி அவர்கள் மீதான வன்முறையை எளிதாக செய்ய முடியும்.// பொதுவாக பிரபலமானவர்கள் மக்களோடு மக்களாக சுதந்திரமாக நடமாட முடியாது. தொந்தரவு அதிகமாக இருக்கும் என்பதால் விலகி இருப்பார். இதற்கு நீங்கள் கண்டுபிடித்திருக்கும் காரணத்திற்கும் சம்பந்தமில்லை.

  //நடிகைன்னா ‘அதுக்கும்’ சேர்த்துத்தானே எனும் சிந்தனைதான் இந்த அலட்சியத்தை வரவழைக்கிறது. // இது நடிக்க வரும் பெண்களுக்கும் தெரியும். ஆனாலும் பண ஆசையினாலும் புகழ் கிடைக்கும் என்பதாலும் தன்மானத்தையும் அடகு வைத்துதான் சினிமா என்னும் சாக்கடைக்குள் குதிக்கின்றனர். எந்த மானமுள்ள பெண்ணும் நடிகையாக மாட்டாள்.

 2. //ஒரு பக்தையாக காட்டிக்கொள்ளும்போது அவர்கள் தான் விலக்கிவைக்கப்படுவதில்லை என கருதுகிறார்கள்.// மன அமைதிக்காக ஆன்மீகத்தை தேடுவோரே அதிகம்.

  //வசனங்களில் உள்ள ஆபாசத்தையோ அல்லது காட்சிகளிளு அத்துமீறலையோ எளிதில் கண்டறியத் தெரியாத வேற்றுமொழி பேசுகிற மற்றும் மன முதிர்ச்சி இல்லாத பெண்களுக்கு இருக்கும் வரவேற்புக்குப் பின்னால் இந்தக் காரணம் மட்டும்தான் இருக்க முடியும்.// அந்த அளவுக்கெல்லாம் நடிகைகள் விவரம் தெரியாதவர்கள் அல்ல.

  //கவர்ச்சி நடிகைகள் பலரது மகள்கள் கவர்ச்சி நடிகைகளாகவே இருக்கவேண்டிய தலைவிதி இங்கேயிருக்கிறது, // தலைவிதி எல்லாம் ஒன்றுமில்லை. பேராசையினால் தங்கள் மகள்களையும் இந்த சாக்கடையில் தள்ளி விடுகின்றனர்.

 3. ‘உப்புமா’ கிளற, பிரியாணியாய் முடிந்த கதையாயிருக்கிறது இத் தொடர்!! இருக்கட்டும். ஒரு டவுட்டு.

  சுதந்திரம் – கொடி – கனவு – கோவணம் – களவு என்று என்றோ எழுதிய கல்லூரிக் காலத்து ‘கவியரசரின்’ கோபம் கொண்ட கவிதை வரிகள், முதுமைக்காலத்தில் ‘மல்லே மல்லே மல்லே, மருத மல்லே’ என்று மருகும் தருவாயிலிருக்கும்போது, கனவுக்காக கொடி பிடிக்க முடியாத நடிகைகள் ‘மல்லே’வுக்காக மட்டும் கோவணத்தை வரிந்து கட்டுவது, கவிதை வரிகளின் கனத்தாலா அல்லது வரிககளுக்கேற்றவாறு கோவணங்கட்ட மனமுவந்து வரும் நடிகைகளின் தெகிரியத்தாலா அல்லது ரசிகர்மேல் குற்றம் சாட்டும் தயாரிப்பாளர்களாலா அல்லது ‘இந்தக் கோவணமா அல்லது அந்தக் கோவணமா’ என்று தடுமாறும் ரசிகர்களாலா அல்லது……………………..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s