தினமலர் கட்டுரையில் விஞ்சிநிற்பது- அவர்கள் ஆள் செத்துப்போன கவலையா? நம் ஆட்கள் சாகவில்லையே எனும் எரிச்சலா?


செய்திகள் சற்று தாமதமாக வந்துசேரும் தூரத்தில் இருப்பதால் தினக்கோமியத்தின் தூக்குதண்டனை குறித்த கட்டுரை பற்றிய தகவலும் தாமதமாகத்தான் கிடைத்தது. காதல் தோல்வியில் தீக்குளிக்கும் செங்கொடிகளும் எனும் வாசகத்தை உள்ளடக்கிய அக்கட்டுரையை தினமலர் வெளியிட்டிருக்காவிட்டால்தான் நாம் ஆச்சர்யப்பட்டிருக்க வேண்டும். விதவைகளை காசியில் அநாதையாக தள்ளிவிட்டு அவர்களை விபச்சாரியாக்கும் ஈராயிரம் ஆண்டு இந்து பாரம்பரியத்தின் வாரிசு தினமலர். பெண்களை வெறும் பண்டமாக பார்க்கும் அவர்கள் புத்தி செங்கொடி எனும் பெண் தற்கொலை செய்துகொண்டால் அதற்கு காதல் தோல்வி தவிர வேறு காரணம் இருக்க முடியாது என்றுதான் யோசிக்கும்.

தோழர் செங்கொடி குறித்து தினமலர் நல்லவிதமாக ஏதாவது சொல்லியிருந்தால் அது அவரது பொதுவாழ்வின் பெரிய களங்கமாக இருந்திருக்கும். செங்கொடி பற்றிய தினமலரின் கருத்துக்கு அப்பால் அந்த கட்டுரை கொண்டிருக்கும் மற்ற கருத்துக்களுக்கு இந்த சமயத்தில் நாம் எதிர்வினை செய்தாக வேண்டும். உணர்ச்சிவயப்பட்டு நாம் செங்கொடி குறித்த விசமத்தனமான கருத்துக்கு மட்டும் எதிர்ப்பு காட்டிக்கொண்டிருந்தால், கட்டுரையின் மற்ற கருத்துக்களுக்கு நம்மிடம் பதிலில்லை என்றாகிவிடும்.

தினமலர், தந்தி மட்டுமல்ல ஏனைய தேசிய ஊடகங்களும் “ராஜீவ் கொலையாளிகள்” எனும் சொல்லையே பயன்படுத்துகின்றன. டை அனதர் டே என கட்டுரை எழுதுகிறது ஒரு ஆங்கில நாளிதழ். தூக்கை நிறுத்திவைக்கும் நீதிமன்ற தடையுத்தரவுக்கு சட்ட வலு இல்லை என சாம்பிராணி போடுகிறது டெக்கன் கிரானிக்கல் நாளேடு. செத்துப்போய்விட்டான் எனும் ஒரே காரணத்துக்காக ராஜீவின் சகல பாவங்களையும் மன்னித்து அவற்றை குறிப்பிடக்கூட மறுக்கும் நமது ஊடகங்கள், தூக்குதண்டனை விதிக்கப்பட்ட மூவரும் செய்த “குற்றத்தின்” தன்மையை குறிப்பிட மறுக்கின்றன. திட்டமிட்டு சமூகத்தின் வில்லன்களும் கதாநாயகர்களும் இவர்களால் உருவாக்கப்படுகிறார்கள். துரதிருஷ்டவசமாக பார்வையாளர்கள் சிந்திக்கவேண்டிய முறையையும் இவர்களே தீர்மானிக்கிறார்கள். ஆகவேதான் அன்னா ஹசாரேவை ஆதரிப்பவர்களும் மரண தண்டனையை ஆதரிப்பவர்களும் அதன் காரணம் புரியாதவர்களாக இருக்கிறார்கள்.

ராஜீவின் எழவுச்சேதி கேட்கையில் நான் ஐந்தாம் வகுப்பு கோடைவிடுமுறையில் இருந்தேன். அப்போது ராஜீவின் சாவு எனக்கு எந்த கவலையையும் ஏற்படுத்தவில்லை. அப்போது நான் சென்றிருந்த கிராமத்தில் அனேகமாக எல்லோருமே பெருங்கவலையில் இருந்தார்கள், சிலர் அழவும் செய்தார்கள். இப்போதும் என் நிலையில் மாற்றமில்லை, அந்த சாவு குறித்த கவலை எனக்கில்லை. ஆனால் இன்றைய சூழலில் இருக்கும் ஒரே மாறுதல் என்னை சுற்றியிருப்பவர்கள் பலர் ராஜீவ் மரணம் பற்றி கவலைப்படவில்லை. ஆகவேதான் ஈழவிடுதலைக்கான குரலும் மூவர் விடுதலைக்கான குரலும் தமிழகமக்களின் இதயங்களில் இருந்து தயக்கமில்லாமல் வெளிப்படுகிறது.

தினமலர் உண்மையில் அச்சமடைவது மூவருக்கு ஆதரவான குரலுக்காக இல்லை. மக்களிடம் உருவாகியிருக்கும் ஒருமித்த கருத்தும், ராஜீவ் பிணத்துக்கு இதுவரை இருந்துவந்த மதிப்பு காலாவதியாவதும்தான் இவர்களை அதிகம் கலக்கமுற வைக்கிறது. இல்லாவிட்டால் சீமான், வைகோ மற்றும் நெடுமாறன் ஆகியோர் தங்கள் சுயலாபத்துக்கு செய்யும் போராட்டம் என தினமலரே குறிப்பிடும், ஒரு வெகுமக்கள் ஆதரவில்லாத செயல்பாட்டுக்கு (அவர்களது கணிப்பின்படி) ஏன் இத்தனை முக்கியத்துவம் தருவானேன்? இதுநாள்வரை ராஜீவ் கொலை என்று மட்டும் செய்தி போட்ட தினமலர் இப்போது திடீர் ஞானோதயம் பெற்றதுபோல அவனுடன் இறந்த அப்பாவிகளுக்காக கண்ணீர் வடிக்கிறது. இனி ராஜீவ் பிணம் இங்கு போணியாகாது என தினமலரே மறைமுகமாக ஒத்துக்கொள்கிறது.

இந்த பத்திரிக்கையின் கபடத்தனத்தை எதிகொள்ளும் முன்னால் தினமலர் என்பது ஒட்டுமொத்த மக்கள் விரோத சக்திகளின் ஒரு அங்கம் என்பதை புரிந்துகொள்வது மிக முக்கியம். ராஜீவ் கொலைவழக்கை விசாரித்த சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமனின் ஜூவி பேட்டி உங்களுக்கு நினைவிருக்கலாம். பேரறிவாளன் தூக்கு தண்டனைக்கு தகுதியானவரே என அவர் அடுக்கும் காரணங்கள் இவைதான் 1. அவர் எதற்காக என்று தெரிந்தேதான் பேட்டரி வாங்கித்தந்தார். 2. புலிகளுக்கு ஆதரவாக புத்தகம் வெளியிட்டார் 3. ராஜீவ் சாகவேண்டும் என அவர் விரும்பியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆக ஒரு அரசு அதிகாரியின் கருத்துப்படி ஒருவர் கொலையை செய்திருக்காவிட்டாலும் அதற்கு உதவி செய்த காரணத்திற்காகவே அவர் தூக்கிலிடப்படலாம். இன்னும் ஆழமாக அவரது கருத்தை உற்று நோக்கினால் அவர் ஒட்டுமொத்த தமிழினத்தையுமே குற்றவாளியாக கருதுவது புரியும். புலிகளுக்கு ஆதரவாக எழுதுவது குற்றமென்றால் வலையுலகில் உள்ள ஏராளமான தமிழர்கள் அந்த பட்டியலில் வருவார்கள். ராஜீவ் சாகவேண்டும் என விரும்பியவர்கள் குற்றவாளிகள் என்றால் தமிழகத்தில் பாதிபேர் தூக்கிலிடப்படவேண்டும். ரகோத்தமன் பேட்டி ஒரு தனிமனிதனின் கருத்தல்ல, அரசின் ஒரு முன்னாள் கூலியாகவே அவர் பேசியிருக்கிறார். அதனை அரசின் கருத்தாகவே நாம் பார்க்கவேண்டும்.

சட்டத்தின் முன்னால் எல்லோரும் சமமெனில் லீலாவதியை கொன்றவர்கள் ஏழாண்டு தண்டனையோடு விடுதலையாவதும் ராஜீவ் கொலைவழக்கு குற்றவாளிகள் பரோல்கூட கிடைக்காமல் இருபதாண்டுகள் சிறையில் இருப்பது எப்படி சாத்தியம்? இந்த யோசனை தினமலருக்கும் ரகோத்தமன்களுக்கும் வராதா? வரும்.. ஆனால் அவர்கள் கடுமையான தண்டனைக்கு வலியுறுத்துவதன் நோக்கம் நடந்த குற்றத்துக்கு தண்டனை வழங்குவதல்ல. அரசின் நடவடிக்கை எத்தனை கொடூரமானதாக இருப்பினும் அதனை மக்கள் சகித்துக்கொள்ள வேண்டுமேயன்றி எதிராக சிந்திக்கவோ அல்லது சிந்திப்பவர்களுக்கு உதவவோ கூடாது என்பதை வலியுறுத்தத்தான். காந்தகார் விமானக் கடத்தல் சம்பவத்தில் ரூபின் கட்யால் எனும் பயணி கொல்லப்பட்டார். கடத்தல்காரனுக்கு எதிராக அவர் எதுவும் செய்திருக்காதபோது அவர் ஏன் கொல்லப்படவேண்டும்? அது ஒரு எச்சரிக்கைக்கான படுகொலை, அதற்கு காரணம் எதுவும் தேவையில்லை. அதேபோலத்தான் இதுவும்.

ஆகவே இவ்விடயத்தில் அரசின் கருத்தையே தினமலர் பிரதிபலிக்கிறது. கூடுதலாக அவர்களுக்கே உரிய லட்சியங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு தமிழர்கள் ஒன்றிணைவது இடையூறாக இருக்கும் என்பதால் அவர்கள் கூடுதலாக கவலைகொள்கிறார்கள். ஒருவேளை நாம் மெனக்கெட்டுப் போராடி தினமலர் ஒழித்தாலும் அரசால் இன்னொரு பிணமலரை உருவாக்குவது சுலபம். தினமலர் எதிர்ப்பு எனும் ஒற்றை இலக்கோடு நாம் செயல்பட்டால் ஜெயிக்கப்போவது தினமலர்தான். அதேபோல ஈழவிவகாரத்தில் மட்டும் சோனியா மன்மோகன் கும்பலின் நிலைப்பாட்டை நாம் எதிர்த்தால் வெல்லப்போவது அவர்கள்தான்.

நாம் செல்ல வேண்டிய பாதையை மறைமுகமாக தினமலரே சுட்டிக்காட்டியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக அரசு ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டபோது தன் வியாபாரம் பாதிக்கப்படும் என தெரிந்தே அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது தினமலர் (அவர்களது பெரும்பாலான வாசகர்கள் அரசு ஊழியர்கள்). தன் எதிர்கால விற்பனைக்கு ஆங்கிலவழிக்கல்வி ஆபத்தாக முடியும் என அறிந்தேதான் அவர்கள் கல்வி தனியார்மயமாவதை ஆதரிக்கிறார்கள் (பிராந்திய மொழி நாளேடுகள் இந்தியாவில் மெல்ல அழிந்துவருவதாக ஆய்வு முடிவுகள் வந்து பத்தாண்டுகள் ஆகிறது). ஆனால் மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தவுடன் தினமலர் அஞ்சிநடுங்கி கூப்பாடு போடுகிறதென்றால், அவர்களை ஒழித்துக்கட்டும் வழி நம் ஒற்றுமையிலும் போர்குணத்திலும்தான் இருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும். தினமலரின் கட்டுரை நாம் சரியான பாதையில்தான் இந்த போராட்டங்களை முன்னெடுக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.

தெரிந்தோ தெரியாமலோ வைக்கப்படும் இரக்கம் காட்டுங்கள் தாயே, மனிதாபிமான அடிப்படையில் விடுதலைசெய்யுங்கள் எனும் வாதங்கள் நம் எதிர்தரப்புத்தான் சாதகமாக முடியும், குறிப்பிட்ட அந்த கட்டுரை மனிதாபிமான வாதத்தைத்தான் வலுவிழக்க வைக்கிறது. மனிதாபிமானம் எனும் வாதம் மறைமுகமாக அவர்கள் குற்றவாளிகள் என உறுதி செய்கிறது. நம் மாநிலத்தில் பரவலாக நடக்கும் போராட்டங்கள் அவர்கள் குற்றவாளிகள் அல்ல எனும் கருத்தை வலியுறுத்துபவை. நாம் இதனை இன்னமும் செம்மையாக வீரியமாக செய்வதுதான் நாம் செங்கொடிக்கு சரியான மரியாதை. பத்திரிக்கை எரிப்பு என்பதெல்லாம் நம் ஓய்வு நேரப்பணியாகத்தான் இருக்கவேண்டும்.

இறுதியாக, தினமலர் கட்டுரை நம் எதிரி அச்சத்தில் இருப்பதைக் காட்டுகிறது. ஆனால் அவர்கள் நிச்சயம் பலவீனமாக இல்லை. ஜெயலலிதா, சோனியா மற்றும் தினமலர் என எல்லோரும் நம்முடைய பலவீனமான தருணத்துக்காக காத்திருக்கிறார்கள். அந்த நேரம் வந்தால் இவர்களின்  இலக்கு வெறும் நால்வர் மட்டுமல்ல என்பது நிச்சயம்.

Advertisements

“தினமலர் கட்டுரையில் விஞ்சிநிற்பது- அவர்கள் ஆள் செத்துப்போன கவலையா? நம் ஆட்கள் சாகவில்லையே எனும் எரிச்சலா?” இல் 7 கருத்துகள் உள்ளன

  1. தினமலம் ஒரு ந்ச்சு ஊடகம் என்பது த்மிழுணர்வாளர்களுக்கு தெரியும். பலரும் நீங்கள் சொன்ன கண்ணோட்டத்தில் இதை நோக்குவதில்லை..அவர்களின் கூட்டத்தை கருத்தளவில் தமிழ் மக்களிடமிருந்து வேரோடு சாய்க்க வேண்டியதே இப்போது தேவை.முதலில் அஸ்திவாரம்,அதன் பின் தன்னாலே நடக்கும்.

  2. //தினமலரின் கட்டுரை நாம் சரியான பாதையில்தான் இந்த போராட்டங்களை முன்னெடுக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.//

    தந்தை பெரியாரின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன “பார்ப்பான் நம்மை எதிர்க்கிறான் என்றால் சரியான பாதையில் நாம் செல்கிறோம் என அர்த்தம், நம்மை ஆதரிக்கிறான் என்றால் நம்முடைய பாதையை பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது”.

    இதை பற்றிய மற்றுமொரு சிறப்பான கட்டுரை http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16471:2011-09-08-01-20-38&catid=1367:2011&Itemid=615

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s