காந்தி- ஆதரவும் எதிர்ப்பும் அல்லது பக்தியும் புரிதலும். 2


எதிரியை எப்படி எதிர்கொள்வது என்பதையும் நீங்கள் பகத்சிங் உள்ளிட்ட தியாகிகளின் வாழ்வில் இருந்து தெரிந்து கொள்ளலாம். தங்கள் கோரிக்கையை வெள்ளை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் அறிவிக்கவே அவர்கள் கைதானார்கள். ஒவ்வொரு விசாரணையையும் அவர்கள் தங்களுக்கான பிரச்சார களமாக மாற்றினார்கள்.

பாராளுமன்றத்தின் மீது குண்டு வீசிய வழக்கு லாகூர் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, அங்கு குண்டு வீசியதன் நோக்கம் பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அது நியாயமற்றது என அவர்கள் வாதிடுகிறார்கள்,

//நாம் நோக்கத்தை புறக்கணித்துவிட்டால், உலகின் மிகப்பெரிய தளபதிகள்கூட சாதாரண கொலைகாரர்களைப் போல தோன்றுவர். வருவாய்த்துறை அதிகாரிகள் திருடர்களாகவும் ஏமாற்றுக்காரர்களாகவும் காட்சியளிப்பர். ஏன் நீதிபதிகளும் கொலைக் குற்றத்துக்கு ஆளாகலாம்.// –விசாரணையின்போது பகத்சிங்.

அவர்களுடைய நோக்கம் அவர்களின் குற்றத்தைக் காட்டிலும் அதிகபட்ச தண்டனைக்குரியது என அவர்களுக்கு தெரியும். ஆயினும் அவர்கள் தங்கள் நோக்கம் பரிசீலிக்கப்படவேண்டும் என கடுமையாக வாதிடுகிறார்கள். நிராயுதபாணி மக்களை சுட்டுக்கொன்ற ஜெனரல் டயரின் அராஜகத்தை குறிப்பிடுகிறார்கள். தங்களது வாக்குமூலத்தில் இருந்து நீக்கப்பட்ட இன்குலாப் ஜிந்தாபாத், ஏகாதிபத்தியம் ஒழிக எனும் வாசகங்கள் நீக்கப்பட்டதை குறிப்பிடும் சாக்கில் நீதிமன்றத்தில் அதற்கான விளக்கங்களை சொல்கிறார் பகத்சிங்.

அவரது இந்த நிலைப்பாட்டை முழுதாக புரிந்துகொள்ள இன்னொரு சம்பவம் உதவிகரமாக இருக்கும். 1930 டிசம்பர் 23ல் லாகூர் பல்கலைக் கழகத்தில் பஞ்சாப் ஆளுநரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார் ஹரி கிஷன் எனும் போராளி. ஆளுநர் லேசான காயமடைய இன்னொருவர் இறந்துபோனார். இவ்வழக்கு விசாரணையின்போது ஹரி கிஷனின் வழக்குரைஞர், தன் கட்சிக்காரர் கொலை செய்யும் நோக்கில் சுடவில்லை என்றும் ஒரு எச்சரிக்கையாகவே அந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டார் என வாதிடுகிறார். இதையறிந்த பகத்சிங் புரட்சியாளர்கள் தங்கள் வழக்குகளை எவ்வாறு கையாளவேண்டும் எனும் ஆலோசனையை தன் நண்பருக்கு ஒரு கடிதமாக எழுதுகிறார், (1931 ஜூன் பீப்பிள் இதழில் வெளிவந்தது).

அதில் அரசுக்கு நாம் போதுமான எச்சரிக்கை கொடுத்த பிறகுதான் செயல்பாட்டுக்கு வருகிறோம். ஆனால் அதிருஷ்டவசமாக் ஆளுநர் தப்பித்துக்கொண்டதற்காக (அதிருஷ்டம் ஆளுநருக்கு, சுட்டவருக்கல்ல) அதனை நமக்கு சாதகமாக்கிக்கொண்டு வாதிடுவதால் நமக்கு (இயக்கம்) என்ன பலன் கிடைத்துவிடும்? இதுபோன்ற செயல்களால் இயக்கத்தின் அழகை சிதைக்கக்கூடாது என்கிறார் பகத்சிங். (அடைப்புக்குறிகளுக்குள் உள்ள அழுத்தம் நம்முடையது). அந்த நீண்ட கடிதத்தில் அவர் சொல்வதன் சுருக்கம் இதைதான், ஆளுனரைக் கொல்வது எனும் நோக்கம் இரண்டாம் பட்சமே. கொலைமுயற்சி எனும் வழக்கையே நம்க்கான போராட்ட களமாக்க வேண்டுமேயன்றி, அதனை வெறும் எச்சரிக்கை எனும் வாதத்தால் நம் போராட்ட களத்தை சுருக்கிக்கொள்ளக்கூடாது.

காந்தி ஏரியாவுக்கு வரலாம், ரவுலட் கமிட்டி அறிக்கை வெளியானபோது அவர் முடிவெடுத்த போராட்ட முறையை கொஞ்சம் படியுங்கள்,

சாத்வீக சட்ட மறுப்பை செய்வது எப்படி என்று எனக்கு விளங்கவேயில்லை. சட்ட மறுப்பு செய்வதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் அளித்தால்தானே ஒருவன் சட்டத்தை மீற முடியும்? (சத்திய சோதனை பக்கம் 552) – இது அவரது குழப்பம்.

நேற்றிரவு கனவில் ஒரு யோசனை வந்தது. பொது ஹர்தாலை நடத்த வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொள்வது என்பதே அது. நம்முடைய போராட்டமோ ஒரு புனிதமான போராட்டம். ஆகையால் அதை ஆன்ம தூய்மை செய்துகொள்வதோடு துவங்கவேண்டும். இந்திய மக்கள் எல்லோரும் அன்று தங்கள் வேலைகளைய்யெல்லாம் நிறுத்திவிட்டு உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்யட்டும்-இது அவரது தீர்வு (ச.சோதனை பக்கம் 552) மக்கள் இந்த ஹர்தாலை அனுஷ்டித்தது ஒரு அற்புதக்காட்சி என விவரிக்கிறார் காந்தி (ஒரு அற்புதக்காட்சி என்றுதான் அந்த அத்யாயத்துக்கு பெயரிட்டிருக்கிறார்).

நான் விளக்க இதில் ஏதுமில்லை. போராட்டம் என்பது எப்படியிருக்கவேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யலாம். அதற்கான முன்னோடியாக யாரை கருதவேண்டும் என்பதும் உங்கள் முடிவிற்கானதே.

பகத்சிங்கின் மீதான இன்னொரு குற்றச்சாட்டு ஆங்கிலேய காவல் அதிகாரி (டெபுடி சூப்பிரெண்டென்ட்) சாண்டர்சை கொலை செய்தது. அதன் காரணம், லாலா லஜபதிராயை தடியடி மூலம் கொன்றதற்கு பதிலடி தருவது (அவர்கள் இலக்கு லஜபதிராயை தடியால் தாக்கிய ஸ்காட்டை கொல்வது. ஜெய்கோபாலால், சாண்டர்ஸ் தவறுதலாக அடையாளம் காட்டப்பட்டார்) . கொல்லப்பட்ட லஜபதிராய் பகத்சிங்கின் இயக்க உறுப்பினரல்ல. இன்னும் சொல்வதானால் அவர் தம் கடைசி காலங்களில் புரட்சியாளர்களை வெறுக்கத்துவங்கியிருந்தார் (பகத்சிங் மற்றும் சுகதேவை அவர் தன் பங்களாவுக்குளேயே விடவில்லை). புரட்சியாளர்கள் முற்றாக வெறுத்த மதச்சார்பை அவர் வளர்த்துக்கொண்டிருந்தார் (இதனால் அவருக்கு மோதிலால் நேருவுடனும் கருத்துவேறுபாடு தோன்றியிருந்தது).

இத்தகைய சூழலில் 1928 அக்டோபர் 30ல் சைமன் கமிஷன் லாகூர் வந்தது. அப்போது ஒரு மாபெரும் கூட்டம் அந்த அதிகாரிகளுக்கு கறுப்பு கொடி காட்டியது. அப்போது நடத்தப்பட்ட தடியடியில்தான் லாலா படுகாயமடைகிறார். நவம்பர் 19ல் அவர் மரணமடைய லாலாவின் மரணத்தை தங்கள் நாட்டின் மீதான தாக்குதலாக எடுத்துக்கொள்கிறார்கள் பகத்சிங்கும் அவரது சகாக்களும். அப்போதுதான் ஸ்காட்டை கொலைசெய்யும் முடிவுக்கு வருகிறார்கள். கிட்டத்தட்ட ஒருமாத கண்காணிப்புக்குப் பிறகு டிசம்பர் 17/ 1928 ல் அந்த திட்டம் நிறைவேறுகிறது. போலீஸ் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது ராஜகுருவும் பகத்சிங்கும் அவனை சுட்டுக்கொன்றார்கள் (ஜெயகோபால் வருகையை கண்காணித்து அறிவிக்கவும், ஆசாத் சுட்டவர்கள் பாதுகாப்பாக தப்பிப்போக உதவவும் அங்கே இருந்த மற்ற போராளிகள்). மறுநாள் லாகூர் நகரெங்கும் அந்த கொலையின் காரணங்களை விளக்கும் சுவரொட்டிகளும் துண்டு பிரசுரங்களும் விணியோகம் செய்யப்பட்டன. ஏதோ இளமை வேகத்திலும் பழியுணர்ச்சியிலும் அவர்கள் கொலைசெய்ததாக உள்ள கற்பிதங்களுக்கு முடிவு கட்டவே இந்த சம்பவத்தை நாம் குறிப்பிடவேண்டியிருக்கிறது. அவர் லாலாவின் மரணத்தை தங்களது எதிர் நிலைப்பாடு கொண்ட நபரின் கொலையாக பார்க்கவில்லை. அதை தம் தேசத்தின் மீதான தாக்குதலாக பார்த்தார். காந்தியைப்போல சொந்த மக்கள் சாகையில் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்துவிட்டு ஆக்கிரமித்தவன் வீட்டு எழவுக்கு மட்டும் கடும் எதிர்வினை செய்த அகிம்சாவாதியல்ல பகத்சிங்.

பகத்சிங் வெறும் விடுதலைப் போராளி மட்டுமல்ல. அவருக்கு விடுதலைக்குப் பின்னாலான இந்தியா பற்றியும் பெரிய கனவுகள் இருந்தது.

//வெள்ளையரின் ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் முதல் கட்டமே. இறுதிப்போராட்டம் சுரண்டலுக்கு எதிராக நடக்க வேண்டியுள்ளது.//

//சமூக பொருளாதார சுதந்திரமில்லாமல் வெறும் அரசியல் சுதந்திரம் ஒரு சிலர் பலரை சுரண்டும் சுதந்திரமாகவே இருக்கும்// (இதெல்லாம் பகத்சிங் தன் நண்பர்களுடன் விவாதித்தவை.)

வெறும் துப்பாக்கி மட்டுமே அவரது ஆயுதமல்ல. மக்களை சேர்த்துக்கொள்ளாத போராட்டம் வெற்றியடையாது என்பதை அவர் பலமுறை தம் நண்பர்களிடம் வலியுறுத்துகிறார். தொழிலாளர்களிடையே பணிபுரிவது, பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதுவது, சிலைடு மூலம் பிரச்சாரம் செய்வது மற்றும் துண்டு பிரசுரம் ஆகிய எல்லா வழிகளையும் அவர் பயன்படுத்தினார். இளைஞர்களிடையே அவரது மேடைப்பேச்சுக்கள் அப்போது மிகவும் புகழ்பெற்றவை. அவரது சட்ட ஞானமும் வாதத்திறமையும் எந்த ஒரு உலகத்தலைவருக்கும் சளைத்ததல்ல. அவர் சிறையில் இருந்தபோது அரசுக்கு எழுதிய கடிதங்களையும் நீதிமன்ற வாதங்களையும் படித்தால் அவர் எத்தகைய அறிவுஜீவி என்பது புரியும்.

அவரது தனிப்பட்ட வாழ்வும் சுபாவமும் ஏராளமான செய்திகளை நமக்கு கற்றுத் தருவதாகவே உள்ளது. அவர் ஐந்து மொழிகளில் பேசவும் எழுதவும் தெரிந்தவர். இளம் தோழர்களை ஒருங்கிணைப்பதில் அவரது ஆற்றல் மகத்தானது. அவரது தோழர் சிவவர்மா அவ்வளவாக உடல்வலு உள்ளவரல்ல. அவருக்கு தன்னால் இயக்கத்தின் நடவடிக்கைகளில் ஈடுபட இயலாதோ எனும் கவலை மேலோங்கியபோது பகத்சிங் அவரிடம் நடத்திய உரையாடல் சிவவர்மாவை மட்டுமல்ல நம் எல்லோரையும் கணக்கில் கொண்டு சொன்னதுபோலவே இருக்கும். அவர் தூக்கிலிடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னால் அவரை கடைசியாக சந்தித்த நண்பர்களிடம் புன்சிரிப்போடு சொன்னவை இதைதான்,

“உணர்ச்சி வசப்படும் நேரம் இன்னும் வரவில்லை பிரபாத். நான் இன்னும் சில நாட்களிலேயே இந்த உலகத்தை விட்டு போய்விடுவேன். ஆனால் நீண்ட பயணம் ஒன்று காத்திருக்கிறது. கடமை எனும் பெருஞ்சுமை உன்னை அழுத்திக்கொண்டிருந்தாலும், அந்த நெடும் பயணத்தில் நீ களைத்துப் போய்விடமாட்டாயென்றும், தோல்வியடைந்து உட்கார்ந்துவிட மாட்டாயென்றும் நான் நம்புகிறேன்”.

காந்தி பற்றிய கட்டுரையில் இவ்வளவு அதிகமாக பகத்சிங் பற்றிய தகவல் தேவையில்லைதான். ஆனால் காந்தி இல்லாமல் வேறு யாரைத்தான் சுதந்திரப்போராட்ட வீரர் என்று சொல்லுவீர்கள்? எனும் கேள்விகள் நம்மை எப்போதும் துரத்துகின்றன. போட்டிக்கு ஆளில்லாத மைதானத்தில் காந்தியை நிறுத்தி அவரே மாபெரும் வீரர் என கொண்டாடுவது போல இருக்கிறது நம் வரலாறு. 1950ல் உத்திரப் பிரதேச பாடநூல்கள் சந்திர சேகர ஆசத்தை ரத்த வெறி கொண்டவர், கொள்ளைக்காரர், நல்வாய்ப்பாக நாடு அவர்களது பாதையை தேர்ந்தெடுக்காது காந்திய வழியில் நின்றது என மாணவர்களுக்கு பாடம் நடத்தின. எழுதிய மூதேவியின் பெயர் ஏ.எல்.ஸ்ரீவாஸ்தவா, பிரிட்டிஷ் அரசால் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் என கருதப்பட்டவர். இதே போன்ற பிரச்சாரங்கள் பகத்சிங்கின் மற்ற தோழர்கள் மீது மகாராஷ்டிர அரசு பாடநூல்களில் இருந்தது. மற்ற இடங்களில் எப்படி என்பது பற்றிய செய்தி இல்லை. ஆனால் அவர் தீவிரவாத வழியில் போராடினார்கள் எனும் வாசகங்கள் எல்லா மாநில வரலாற்றிலும் இருக்கின்றன. அப்படியே பின்லேடன், முல்லா ஓமர் ஆகியோர் தீவிரவாதிகள் எனும் செய்தி அன்றாடம் அவர்களுக்கு கிடைக்கிறது. இந்த நிலையில் பகத்சிங் உள்ளிட்ட போராளிகளின் மீதான மதிப்பீடு மாணவர்களுக்கு எப்படியிருக்கும்? இதை சரிசெய்ய வேண்டுமாயின் மேற்சொன்ன பகத்சிங்கின் வரலாறு இன்னும் அதிகமாக எழுதப்படவேண்டும். அதனை வேறொரு சந்தர்பத்தில் பார்க்கலாம்.

இப்போது, காந்தி மக்களின் ஏகோபித்த ஆதரவு கொண்ட தலைவராகவும் புரட்சியாளர்கள் மக்கள் ஆதரவற்றவர்களாகவும் இருந்தார்களா என பார்க்கலாம். 1929 டிசம்பர் 23ல் வைஸ்ராய் சென்ற ரயில் ஒரு குண்டுவெடிப்பில் சிக்கியது. அதில் வைஸ்ராய் மயிரிழையில் தப்பினார். அதற்கு கடவுளுக்கு நன்றி சொன்னார் காந்தி, காங்கிரசில் அச்செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் தீர்மானம் அவ்ரால் கொண்டுவரப்பட்டது. அதனை நிறைவேற்ற அவர் தன் செல்வாக்கு முழுவதையும் பயன்படுத்தினார். இறுதியில் அந்த தீர்மானம் 1713 உறுப்பினர்களைக் கொண்ட அந்த அவையில் வெறும் 81 வாக்குகள் முன்னிலையில் வென்றது.

அந்த பலூனையும் உடைக்கிறார் சரளாதேவி சௌதாராணி, “ நான் உரையாடிய மிகப் பெரும்பாலானாவர்கள் மகாத்மா மீதான விசுவாசம் காரணமாக தங்கள் தனிப்பட்ட கருத்தை மறைத்துக்கொண்டு காந்தியால் முன்மொழியப்படும் தீர்மானத்தை ஆதரித்தார்கள்” என குறிப்பிடுக்கிறார் அவர். (பகவதி சரண் வோரா தலைமறைவாக இருந்தபோது எழுதப்பட்ட கடிதமொன்றில் உள்ள தகவல்- இக்கடிதம் காந்தியின் வெடிகுண்டின் வழிபாடு எனும் கட்டுரைக்கு மறுப்பாக எழுதப்பட்டது). காந்தியின் பல சென்டிமென்ட் பிட்டுகளுக்கு பிறகும் அவரது சீடர் பட்டாபி சீதாராமைய்யா சுபாஷிடம் தோற்ற கதை எல்லோருக்கும் தெரிந்ததே. காந்தி தன்னிச்சையாக ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியதை நேருவே ஆதரிக்கவில்லை.

சாண்டர்சை கொன்ற பிறகு பல காங்கிரஸ்காரர்கள் பகத்சிங்கை ஆதரித்திருக்கிறார்கள். அவர்களது உதவியாலேயே போராளிகள் டெல்லிக்கு தப்பிச்செல்கிறார்கள். டெல்லி பாராளுமன்ற தாக்குதலுக்காக ஒரு காங்கிரஸ் எம்.பிதான் அவர்களுக்கு பாஸ் வாங்கித் தந்திருக்கிறார்.  சுகதேவ், ராஜகுரு, பகத்சிங் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட பிறகு நடந்த லாகூர் காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்த தலைவர்களை எதிர்த்து பெரிய போராட்டங்கள் அங்கு நடந்திருக்கின்றன. பகத்சிங்கை கொன்றவரே திருப்பிப்போ எனும் முழக்கங்கள் ஒலித்திருக்கின்றன. உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த ஜஜீந்திரநாத் தாசின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஏழு லட்சம்.

இந்திய விடுதலைக்குப் பிறகும் இவ்வளவு மெனக்கெட்டு ஏன் காந்தியை உயர்த்திக்காட்ட வேண்டும் மற்றவர்களை ஏன் இருட்டடிப்பு செய்யவேண்டும் எனும் கேள்வி கடைசியாக எழலாம். அதற்கான பதில் அதிகாரவர்கத்துக்கு இன்னும் அவரது தேவை இருக்கிறது என்பதுதான்.

காந்தியின் மற்ற சிந்தனைகள் அவரது காலத்துக்கே பொருந்தாதவை. அவரது மண் சிகிச்சை மற்றும் நீர் சிகிச்சை ஆகியவற்றை இந்த காலத்தில் கொஞ்சநஞ்ச மருத்துவ அறிவுடைய பாமரனே ஏற்க மாட்டான். மனிதன் வாழ பழங்களும் கொட்டைகளும் போதும் எனும் கருத்தை எந்த உணவியல் நிபுணரும் ஏற்கமாட்டார்கள் (சூரிய ஒளியில் பக்குவமான பழங்களையும் கொட்டைகளையும் தவிர மனிதனுடைய உணவில் வேறு எதுவும் இருக்கக்கூடாது– ச.சோதனை பக்:325). இந்திரியத்தை கட்டுப்படுத்தி பிரம்மச்சாரியாக வாழ்வதுதான் மனிதத்தன்மை எனும் வாதத்தை நவீன உளவியல் மட்டுமல்ல பழைய உளவியலே ஒத்துக்கொள்ளாது (பிரம்மச்சர்யம் இல்லாத வாழ்க்கை சாரமற்றதாகவும் மிருகத்தனமானதாகவும் எனக்கு தோன்றுகிறது– ச.சோதனை, பக்:381)

அவரது கிராமச் சார்பு பொருளாதாரத்தை இன்று வற்புறுத்தினால் காந்தி கொடும்பாவியை தன் சகாக்களுடன் கொளுத்தும் முதல் ஆள் மன்மோகனாகத்தான் இருப்பார்.சாராயமா காந்தியா எனும் நிலை வந்தால் தமிழக இன்னாள் முன்னாள் முதல்வர்கள் எதை தெரிவு செய்வார்கள் என உங்களுக்கே தெரியும்!!  ஆக சத்யாகிரகம், அகிம்சாவாதம் ஆகியவற்றைத் தவிர அவரது எல்லா சிந்தனையும் இந்தியாவில் காலாவதியானது என்பதை அவரது ஆதரவாளர்களே ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.

அகிம்சை என்பதை வரையறை துன்பங்களுக்கு தானாகவே கீழ்படிதல் என்பதாகும். அகிம்சையிலிருந்து மயிரளவு பிறழ்ந்து வெற்றி பெறுவதைவிட, ஊடறுபடாத அகிம்சையோடு படுதோல்வியடைவதையே நான் வரவேற்பேன் என பேட்டியளித்திருக்கிறார் காந்தி. இதை வாசிக்கையில் இந்திய விடுதலையைக்காட்டிலும் காந்தி அகிம்சா தர்மத்தில் பிடிப்போடு இருந்ததாக கருதவேண்டியிருக்கும். ஆனால் இந்த தருமத்தை அவர் இந்திய மக்கள் மீது மட்டும்தான் வலியுறுத்தினார்.

போர்களின்போதான அவரது பிரிட்டன் விசுவாசத்தை பார்த்தால் அவரது கடைசி ஆயுதமும் கேள்விக்குள்ளாகும்.

பிரிட்டிஷ் பிரஜை எனும் வகையில் நான் உரிமைகளை கோரினால், அந்த பிரஜை எனும் வகையில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை பாதுகாக்க போரில் ஈடுபடவேண்டியது என் கடமை- 1899ல் நடந்த போயர் யுத்தத்தில் தமது பங்கு பற்றி காந்தி (ச.சோதனை, பக் 258)

இங்கிலாந்தில் வசித்துவரும் இந்தியர், யுத்தத்திற்கு தங்களாலான உதவியை செய்ய வேண்டும் என நான் கருதினேன். ஆங்கில மாணவர்கள் ரணுவத்தில் சேவை செய்ய தொண்டர்களாக முன்வந்திருக்கிறார்கள். அவ்வளவாவது இந்தியரும் செய்ய வேண்டும்- 1914ல் பிரிட்டனில் இருந்தபோது சொன்னவை (ச.சோதனை, பக்:416,417) (போரில் பங்கேற்க வைப்பதுதான் அவர் நோக்கம்.. சேவை என்பது சமரசம் மட்டுமே- இந்த அழுத்தம் நம்முடையது)

படைக்கு ஆள் திரட்டுவது சம்பந்தமான தீர்மானத்தை நான் ஆதரிக்க வேண்டுமென வைசிராய் விரும்பினார். நான் ஹிந்துஸ்தானியில் பேச அனுமதிக்கவேண்டுமென அவரிடம் கேட்டேன். என் கோரிக்கைக்கு அவர் அனுமதியளித்தார். ஆனால் நான் ஆங்கிலத்திலும் பேச வேண்டும் என அவர் யோசனை கூறினார். “என் பொறுப்பை பூரணமாக உணர்ந்தே நான் இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறேன்”’ என்ற ஒரே வாக்கியம்தான் நான் பேசியது. ஹிந்துஸ்தானியில் நான் பேசியதை பலரும் பாராட்டினார்கள். இத்தகைய கூட்டத்தில் ஹிந்துஸ்தானியில் பேசியது அதுவே முதல் முறை என அவர்கள் சொன்னார்கள். (ச.சோதனை: பக்:532. ஆண்டு குறிப்பிடப்படவில்லை..)  அந்த முடிவுக்கு எந்த காரணத்தையும் காந்தி குறிப்பிடவில்லை. ஹிந்துஸ்தானியில் பேசியதை வைத்து அதை திசை திருப்புகிறார். படைக்கு ஆள் திரட்ட தாம் மேற்கொண்ட பெரிய அளவிலான பிரச்சாரத்தையும் துவக்கத்தில் அதற்கு கிடைத்த பெரிய அளவிலான எதிர்ப்பையும் அவர் அடுத்தடுத்த பக்கங்களில் குறிப்பிடுகிறார் காந்தி.

கடைசி யுத்த ஆதரவு காலத்தில் அவர் சத்யாகிரகத்தில் எல்லா ரிசர்ச் அண்டு டெவலப்மென்டையும் முடித்திருந்தார். ஆகவே அவர் உண்மையான அகிம்சாவாதியெனில் பிரிட்டனுக்கு “துன்பத்தை வலிந்து ஏற்றுக்கொள்ளுங்கள்” என ஆலோசனை சொல்லியிருக்கவேண்டும். வெள்ளைக்காரனுக்கு பிரச்சனை என்றால் அவன் துப்பாக்கி தூக்கலாம், அதற்கு நாம் உதவவேண்டும். இந்தியனுக்கு விடுதலை வேண்டுமானால் மட்டும் எதிரியின் கல்மனம் கரையும்வரை அவன் தாக்குதலுக்கு  நாம் முதுகையும் அதற்கு கீழும் காட்டிக்கொண்டிருக்க வேண்டுமா?

உலகின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்களிலேயே அகிம்சாவாதம்தான் எதிரிக்கு மிக அதிகபட்ச பாதுகாப்பை வழங்கியது. அதனால்தான் வெள்ளையனின் இடத்தை நிரப்பி அவனைப்போலவே இந்தியாவின் செல்வத்தை கடல்கடந்து கொண்டுசெல்லும் சுதேசி ஆட்சியாளர்கள் அவரை கொண்டாடுகிறார்கள். காந்தியின் தேசம் எனும் மறைமுக உருவகம் மக்களை ஒடுக்குமுறை எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும் கூட்டமாக வைத்திருக்கிறது. எப்படி பிராமணன் அசைவம் சாப்பிடக்கூடாது எனும் விதி அவனது பிறப்பினால் எழுதப்படுகிறதோ அப்படியேதான் இந்தியனுக்கு அகிம்சையும் மறைமுகமாக ஒரு விதியாக போதிக்கப்படுகிறது, கொஞ்சம் தீவிரத்தன்மை அடையும் போராட்டங்களின் போதெல்லாம் காந்தி பிறந்த நாட்டில் இப்படியா எனும் அங்கலாய்ப்புக்கள் கேட்கின்றன. போலீஸ் துப்பாக்கியால் சுட்டு எத்தனைபேர் செத்தாலும் “காந்தி பிறந்த நாட்டில்” எனும் சுலோகம் கேட்காது., காந்திதான் அதற்கெதிராக எதையும் சொன்னதில்லையே!. அதற்காகத்தான் இந்திய விடுதலையின் ஒட்டுமொத்த பொறுப்பும் காந்திக்கே உரியது என புகழ்பாடல்கள் இன்றும் தீவிரமாக தொடர்கிறது. அப்போதுதான் அகிம்சாவாதம் வெற்றிகரமானது என மக்கள் நம்புவார்கள்.

நிறைவாக, காந்திய வழிபாடு ஒரு மதமாக இருக்கும் நாட்டில் இந்த விவாதம் முடிவில்லாது போய்க்கொண்டே இருக்கும். காந்தி ஒரு அவதாரம் என்றோ, அகிம்சையே சர்வரோக நிவாரணி என்றோ அல்லது சப்ளா கட்டையே அதிசிறந்த ஆயுதம் என்றோ நம்புவோருக்கு இனியும் சொல்ல நம்மிடம் செய்தி ஏதுமில்லை. இந்த சூழலில் நாம் கேட்டுக்கொள்ள மட்டும் ஒரு செய்தியிருக்கிறது, காந்தி பக்தர்கள் துணிச்சலோடும் ஏனையவர்கள் ஆர்வதோடும் கவனிக்கப்படாத விடுதலைப் போராட்ட வீர்ர்களின் தேடிப்படியுங்கள். அதன் பிறகு ஒரு முடிவுக்கு வரலாம், நாட்டுக்கு அதிகம் சொல்லப்படவேண்டியது, சந்தேகத்தின் பலனை சாதகமாக்கி விடுதலைப் போராட்ட தியாகியாய் இருக்கும் காந்தியையா அல்லது சந்தேகத்திற்கிடமின்றி தியாகியாய் இருக்கும் பகத்சிங்கையா?

சில பின்னிணைப்புக்கள்:

ஆயுதங்களை உபயோகிக்க விரும்பினால் இதோ ஒரு பொன்னான வாய்ப்பு. அரசாங்கத்துக்கு கஷ்டம் ஏற்பட்டிருக்கும் இச்சமயத்தில் மத்தியதர வர்கம் வலிய வந்து அதற்கு உதவி செய்வார்களாயின், அவநம்பிக்கை மறைந்துவிடும்; மக்கள் ஆயுதங்கள் வைத்துக்கொள்ள இருக்கும் தடையும் ரத்தாகிவிடும்– பிரிட்டனின் ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் பணியில் இருந்தபோது காந்தி தந்த பிரச்சாரத்தில் இருந்து.. சத்திய சோதனை பக்: 537.

எனக்கு இருப்பதோ நான் கட்டியிருக்கும் இந்த புடவை ஒன்றுதான். இதை எப்படி துவைப்பது? மகாத்மாவிடம் எனக்கு இன்னொரு புடவை தரச்சொல்லுங்கள். அப்போது தினமும் நான் குளித்து துணிகளை சுத்தமாக வைத்திருப்பதாக வாக்குறுதி அளிக்க முடியும்.- பிகார் கிராம்மொன்றில் காந்தி சுகாதாரம் போதிக்க சென்றபோது கஸ்தூரிபாவிடம் ஒரு கிராமத்துப்பெண் சொன்னது. (ச.சோதனை, பக்:507)

நாங்கள் கட்டிய ஆகாயக் கோட்டைகளில் ஒன்று, கிராம சுகாதாரத்துடன் சம்பராணில் பசுப் பாதுகாப்பு வேலையையும் கவனிப்பது என்பது– ச.சோதனை பக்:511.

நான் உண்ணாவிரதம் இருக்க முற்பட்டது ஆலை முதலாளிகள் செய்த தவறுக்காக அன்று. தொழிலாளர்கள் தங்கள் சத்தியத்தில் இருந்து தவறி விட்டதற்காகவே உண்ணாவிரதமிருந்தேன்– ச.சோதனை பக்:518

வேண்டாம் என்று நான் சொல்லியும் கேட்காமல் பம்பாய் வர்தகர்கள் எங்களுக்கு அவசியத்திற்கும் அதிகமாக பணம் அனுப்பினார்கள்– சாம்பாரண் போராட்டத்திற்கான நிதி ஆதாரம் பற்றி காந்தி (ச.சோதனை பக்:524)

நம்மிடம் நிதி இல்லை என்று உங்களுக்குத் தெரியும். பொது ஜனங்களிடம் பிச்சை எடுத்து, அதைக்கொண்டு வேலைநிறுத்தத்தை தொடர்ந்து நடத்திக்கொள்ள நாம் விரும்பவில்லை– அகமதாபாத் வேலைநிறுத்த போராட்டத்தின் போது காந்தி (ச.சோதனை பக் 516)

ஆங்கிலேயரிடம் ஒவ்வொரு இந்தியருக்கும் விசுவாசத்தை உண்டுபண்ண நான் விரும்புகிறேன் (காந்தி வைசிராக்கு எழுதிய கடிதத்தில் உள்ள கடைசி வாசகம்). படைக்கு ஆள் திரட்டும் வேலையில் என் உடலை அனேகமாக நான் நாசப்படுத்திக்கொண்டேன் (மரணத்தின் வாயிலருகில் எனும் அத்தியாயத்தில்) ( (ச,சோதனை பக்:540)

நாம் தொழிலாளர்களை (விடுதலைப் போராட்டத்தினுள்) திருப்பிவிடக்கூடாது. ஆலைத் தொழிலாளர்களை அரசியல் ரீதியாக பயன்படுத்துவது அபாயகரமானது– அகமதாபாத் போராட்டத்துக்குப் பிறகு காந்தி; தி டைம்ஸ் மே, 1921. (பகத்சிங் எழுதிய அறிக்கையொன்றிலிருந்து.. இவ்வறிக்கை கல்கத்தாவை சேர்ந்த பாதுகாப்புக் கைதி திருமதி விமலா பிரதீபா தேவியின் வீட்டை சோதனையிட்டபோது 1931 அக் 3ல் கிடைத்தது)

செவிகளுக்கு கேட்பதற்காகவே குண்டு வீசப்படுகிறதேயன்றி எவருடைய உயிரையும் பறிப்பதற்காக அல்ல– பகத்சிங் மற்றும் தோழர்கள் பாராளுமன்றத்தில் வீசிய பிரசுரத்தில் இருந்து..

சோசலிச தத்துவம், சுயசரிதை, இந்தியாவில் புரட்சி இயக்க வரலாறு, மரணத்தின் நுழைவாயில்– பகத்சிங் எழுதிய நூல்கள். கையெழுத்துப் பிரதிகளாகவே அழிக்கப்பட்டன.

எனக்கும் வாழ்க்கையின் கவர்ச்சிகளை அனுபவிக்கவேண்டும் எனும் ஆசை நிரம்பவே உண்டு. ஆயினும் தேவைப்படும் நேரத்தில் அனைத்தையும் என்னால் துறந்துவிடவும் முடியும்– 1929 ஏப்ரல் 5 அன்று பகத்சிங் சுகதேவுக்கு எழுதிய கடிதத்திலிருந்து.

எனது உயிர் அந்த அளவுக்கு அருமையானது அல்ல. எனது கோட்பாடுகளை விலையாக கொடுத்து வாங்குமளவுக்கு அது ஒன்றும் அத்தனை மதிப்புடையது அல்ல– 1930 அக்டோபர் 4ல் பகத்சிங் அவரது தந்தைக்கு எழுதிய கடிதம் (சாண்டர்ஸ் கொலைக்கும் என் மகனுக்கும் தொடர்பில்லை என அவரது தந்தை தீர்பாயத்துக்கு கடிதம் எழுதியமைக்கு பகத்சிங்கின் பதிலில் இருந்து)

இர்வின் பிரபுவின் இடத்தில் சர்.தேஜ் பகதூர் சாப்ரு வைக்கப்படுவாராயின், ஒரு விவசாயியைப் பொறுத்தவரை அதில் என்ன வேறுபாடு இருக்கும்? (விமலா பிரதீபா தேவியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட மேற்குறிப்பிட்ட அறிக்கையில் இருந்து..)

மனித குலத்திற்க்கு நான் செய்யவேண்டி சில குறிக்கோள்களை நான் பேணிவளர்த்தேன். அதில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. ஒருவேளை நான் உயிரோடிருந்தால் அவற்றை நிறைவேற்றுவதற்குண்டான வாய்ப்பு எனக்கு கிடைக்கலாம். நான் சாகக்கூடாது என்ற எண்ணம் எப்போதேனும் என் மனதில் உண்டாகுமானால் அது இந்த நோக்கத்தில் இருந்து மட்டுமே உண்டாகும்– 1931 மர்ச் 22. பகத்சிங்கின் கடைசி கடிதத்தில் இருந்து.

Advertisements

“காந்தி- ஆதரவும் எதிர்ப்பும் அல்லது பக்தியும் புரிதலும். 2” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. இது கட்டுரையின் இறுதிப் பகுதி என்று நினைப்பவர்களுக்கு ஒரு வார்த்தை! இது இறுதிப் பகுதி அல்ல, ஒரு தொடக்கம்! நண்பரே சொன்னது போல காந்தியைப் பற்றிய கட்டரையில் எதற்கு பகத்சிங்கை பற்றி இவ்வளவு பேச வேண்டும் என்று யாரேனும் கேட்டால், அதன் பதில் இதோ, “நீ யாரை உன் வழிகாட்டியாக எடுத்துக் கொள்கிறாயோ, அதுவே உன் பாதையையும் உன் பயணத்தின் முடிவையும் தீர்மானிக்கும். பாதை என்றும் அங்கேதான் இருக்கும். ஆனால் பயணத்தின் முடிவில் நீ தலை நிமிர்ந்து தோற்பதும், தலை குனிந்து ஜெயிப்பதும் அந்த வழிகாட்டியினாலேயே என்பதை புரிந்து கொள்.”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s