காந்தி- ஆதரவும் எதிர்ப்பும் அல்லது பக்தியும் புரிதலும். 1


(காந்தி : வாழும்போதும் வாழ்க்கைக்குப் பிறகும்.,  கட்டுரையின் தொடர்ச்சி)

காந்தி பற்றிய முந்தைய பதிவுக்கான எதிர்வினைகள் நான் எதிர்பார்த்ததே. ஆனால் அதற்கு இரண்டாவது பதிவு எழுதவேண்டியிருக்கும் என்பது எதிர்பாராதது. இடது, வலது மற்றும் நடு சென்டரில் நிற்போர் என எல்லா தரப்பின் விமர்சனங்களும் வெவ்வேறாக இருப்பினும் அவை எல்லாமே முந்தைய பதிவு போதுமானதாக இல்லை என்பதை மறைமுகமாக உணர்த்தின.

முந்தைய கட்டுரைக்கு எதிர்மறை விமர்சனங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வந்திருந்தாலும் அதற்கு ஆதரவு எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே வந்திருந்தது. எதிர்குரல்களில் பல, எங்கே “ஆதாரத்தை காட்டு பார்க்கலாம்” எனும் தொணியில் இருந்ததை நான் வெகுவாகவே ரசித்தேன். காந்தி ஒரு மகாத்மா, அவர்தான் விடுதலை வாங்கித்தந்தார் எனும் பழமொழிகளை ஆதாரம் கேட்காமல் நம்புபவர்களை ஆதாரம் கொடு என கேட்கவைப்பது எவ்வளவு சிரமமான பணி? அதை ஒரு பதிவின் வாயிலாக சுலபமாக செய்வது எத்தனை மகிழ்ச்சிக்குரியது?

காந்தி நல்லவரே எனும் அணியில் இருந்து வந்த பின்னூட்டங்களை பொதுவில் மூன்று வகையாக பிரிக்கலாம்,

 1. சொன்னவையெல்லாம் ஆதாரமற்றவை எனும் வாதம் (காழ்ப்புணர்ச்சி, விளம்பர நோக்கம் ஆகியனவும் இதில் அடங்கும்)
 2. அவர் சொன்னவற்றை வெட்டி, ஒட்டி அர்த்தத்தை மாற்றுகிறீர்கள் என்பது இரண்டாவது வாதம்.
 3. காந்தி வெளிப்படையாக வாழ்ந்தார், எதையும் மறைத்துவைக்கவில்லை. ஆகவே அவர் மகாத்மாவே எனும் வக்காலத்து.

உண்மையில் பலரையும் கோபமுற வைத்திருப்பது காந்தியின் தனிப்பட்ட வாழ்வு பற்றிய விமர்சனங்கள்தான். அது காந்தியின் புனித பிம்பத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. காந்தியின் புனித பிம்பத்தை வைத்துதான் அவரது அரசியல் நிலைப்பாடுகள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. காந்தியின் புனிதம் கெட்டுப்போனால் அவரது அரசியல் நிலைப்பாடு காலாவதியாகும். ஆகவே எந்த அரசியல் நிலைப்பாட்டை மக்களிடம் சேதாரமில்லாமல் கொண்டு சேர்க்க காந்தியின் எந்த பரிசுத்த உருவம் அவர்களுக்கு தேவைப்பதோ அதே நிலைப்பாட்டை அம்பலப்படுத்த எங்களுக்கு காந்தியின் புனித முகத்தையும் சேர்த்து விமர்சனம் செய்யவேண்டிய அவசியம் வருகிறது அவ்வளவுதான்.

ஆகவேதான் காந்தியின் தனிப்பட்ட வாழ்வு குறித்த தகவல்கள் அவர் மீது பேரபிமானம் கொண்ட எழுத்தாளர்களிடம் இருந்து மட்டும் எடுத்தாளப்பட்டது. (சாம்பிளுக்கு இந்த இணைப்பை சொடுக்கவும்http://thoughtsintamil.blogspot.com/2008/08/blog-post_29.html). பெரியார், சட்டபூர்வமாகவும் வெளிப்படையாகவும் செய்துகொண்ட இரண்டாம் திருமணம் இன்றளவும் விமர்சிக்கப்படுகிறது. அதற்கான பதிலை பெரியாரிஸ்டுகள் இன்றுவரை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தலைவர்களின் தனிப்பட்ட முடிவுகள் பற்றி யார் வேண்டுமானாலும் பதில் சொல்ல முடியும், முடிவு நியாயமானதாக இருக்கும்பட்சத்தில். வெறுமனே கோபம் பொத்துக்கொண்டு வந்தால் அங்கே பதிலுக்கு வழியில்லாத நிலை இருக்கிறது என அர்த்தம். இதற்குமேல் காந்தியின் தனிப்பட்ட வாழ்வு பற்றி விளக்க ஏதுமில்லை.

ஒரு வாதத்துக்காக “வெட்டி ஒட்டுதல், அர்த்தத்தை மாற்றி சொல்லுதல்” ஆகியவற்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டாலும், காந்தி ஆதரவாளர்கள் சில கேள்விகளுக்கு பதிலுரைக்க வேண்டியிருக்கும்.

 1. பகத்சிங் தூக்கு தொடர்பாக இர்வினுக்கும் காந்திக்கும்       இடையேயான  கடித உரையாடல்கள் என்ன சொல்கின்றன? எங்கள் கேள்வி அவ்வளவுதான். மற்றபடி அவர் பகத்சிங்கின் தூக்குதண்டனையை விரும்பவில்லை எனும் கருத்தோ அவர் பகத்சிங்கின் விடுதலைக்கு கடிதம் எழுதினார் என்பதோ சொத்தை வாதங்கள். இந்த ஸ்டைல் ஏமாற்றுவேலைகளை கருணாநிதி புண்ணியத்தில் நாம் பல முறை பார்த்தாகிவிட்டது.
 2. காந்தி தன்னிச்சையாக முடிவெடுப்பவரா இல்லையா? எந்த விவாதமும் இல்லாமல் ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்டது மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் காங்.தலைவராக தெரிவு செய்யப்பட்டதை எதிர்த்தது ஜனநாயக விரோத செயலா இல்லையா? உள்ளுணர்வை கேட்டு முடிவெடுத்தாலும் சரி மனைவி மச்சினனை (மட்டும்) கேட்டு முடிவெடுத்தாலும் சரி, அது ஜனநாயக விரோதம்தான்.
 3. காந்தி ஆன்ம பரிசோதனை செய்து கொண்டதை அவரது ஆதரவாளர்களே ஒத்துக்கொள்வார்கள் (மனுவின் பெயர் மட்டும் மறைக்கப்படும்). இதை நியாயம் என்றோ பிரம்மச்சர்யத்தில் இருக்கும் பிடிவாதமான பிடிப்பு என்றோ எந்த அடிப்படையில் வரையறுப்பீர்கள்? இதில் மகாத்மாத்தனம் எங்கே இருக்கிறது? முன்னாள் இத்தாலி பிரதமர் பெர்லூஸ்கோனியும் இதே பரிசோதனையைத்தான் அடிக்கடி செய்கிறார். துரதிருஷ்டவசமாக அவரால் அவரது பிரம்மச்சர்யத்தை ஒருமுறைகூட நிரூபிக்கமுடியாமல் போய்விடுகிறது.

கட்டுரைக்கு திரும்புவோம், பொதுவில் தலைவர்களை இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கலாம். தனது கொள்கைகளால் மட்டுமே அறியப்படுகிற தலைவர்கள் ஒருவகை. இதற்கு சரியான உதாரணம் பெரியார். அவரது சாதியாலோ அல்லது அவரது கட்சியாலோ அவர் அறியப்பட்டிருப்பாரேயானால் பெரியார் இன்றைக்கு கரைந்துபோயிருப்பார். அவரை நேரில் பார்த்திராத ஒரு தலைமுறையிலும் அவர் செல்வாக்குடையவராக இருக்க அவரது கொள்கைகளே காரணம். நேரெதிராக வேறொரு தலைவர்கள் குழாமுக்கு அந்த சிரமம் கிடையாது. அவர்கள் ஒரு குழுவின் குறியீடாக மட்டும் அறியப்படுவார்கள்.

மிக பரிச்சயமான ஒரு உதாரணம் பசும்பொன் முத்துராமலிங்கம். அவரைக் கொண்டாட கொள்கை கோட்பாடு என ஒரு வெண்டைக்காயும் தேவையில்லை, ஒரே சாதிக்காரர்களாக இருந்தால் மட்டும் போதும். ஏறத்தாழ காந்தியும் இந்த பிரிவை சேர்ந்தவரே. ஆனால் அவர் ஒரு குறியீடாக இருக்கும் குழுவாக இந்தியா எனும் நாடு மாற்றப்பட்டிருக்கிறது. தேசியக் கொடியைப்போல தேசிய கீதத்தைப்போல காந்தியின் உருவம் ஒரு தேசிய அடையாளமாக காட்டப்பட்டிருக்கிறது. ஒரு தேசியக்கொடியின் மீது பக்தி கொள்ள எந்த புரிதலும் அவசியமில்லை, என் நாடு, எங்கள் கொடி எனும் ஒரு பந்தம் போதுமானது (துரதிருஷ்டவசமாக நம் தேசிய கீதத்துக்கு அந்த கொடுப்பினை இல்லை.. அப்பாடல் 1911 ல் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியா வந்தபோது அவரை வாழ்த்தி பாடப்பட்டது).

இந்தியாவின் விடுதலை எனும் வார்த்தை காந்தி எனும் வார்த்தையோடு பிணைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள் சுற்றத்தில் இருக்கும் மிகப்பலர் காந்தி எனும் ஒற்றை நபரால் மட்டுமே இந்திய விடுதலை சாத்தியமானதாகவும் முழு தேசமும் அவர் பின்னால் நின்றதாகவும் நம்பிக்கொண்டிருப்பார்கள். விடுதலை எனும் சம்பவத்தை காந்தியின் ஊடாக மட்டும் பார்த்து பழகிய இரண்டு தலைமுறையிடம் காந்தியை பற்றி புரிதலை உண்டாக்குவது சிரமமானது. ஆனால் நமக்கு வேறுவழியில்லை, காந்தி ஆக்கிரமித்திருக்கும் இடத்தை காலிசெய்தாலன்றி நாட்டு விடுதலைக்கு தீரத்துடனும் சமரசமின்றியும் போராடிய வீர்ர்களின் வரலாற்றை நாம் பரப்புரை செய்ய இயலாது.

தேச விடுதலைக்கு போராடியதில் அவரை விஞ்சிய நபர்கள் யாருமே இல்லையா? எனும் கேள்வியோடு இந்த விவாதத்தை துவங்குவது சரியாக இருக்கும் என கருதுகிறேன். காந்தியின் வார்த்தைகளின்படியே பார்த்தாலும் அவர் 1930 வரை இந்திய விடுதலையை கோரியிருக்கவில்லை. அவர் தலைமையிலான காங்கிரஸ் 1930ல் கூட குடியேற்ற (டொமினியன்) அந்தஸ்தைத்தான் வலியுறுத்தியது (12 மாதங்களுக்குள் அது கிடைக்காவிட்டால் பூரண சுயராஜ்யத்துக்காக போராட வேண்டியிருக்கும் என அறிவித்து விடுதலைப்போராட்டத்தை பகடி செய்தது காங்கிரஸ்.) சரியாக சொல்வதானால் 1942ல் துவங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு முன்னால் முழுமையான விடுதலை எனும் கோரிக்கையை காந்தி முன்னிலைப்படுத்தியதில்லை.

இப்போது நான் இந்தியாவின் விடுதலையைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கவில்லை. அது கட்டாயம் வரும். ஆனால் போரில் (இரண்டாம் உலகப்போர்) இங்கிலாந்தும் பிரான்சும் வீழ்ந்துவிட்டால் என்னாவது? என்றார் காந்தி 1939ல் (ஹரிஜன் செப் 9/1930). இன்னும் சரியாக வரலாற்றை கவனித்தால் 1945ல் கூட காந்தியும் காங்கிரசும் அந்த கோரிக்கையில் உறுதியாக இல்லை என்பது புலனாகும். மகாத்மா முடிவு செய்யும்வரை எந்த இயக்கமும் முடிவு செய்யக்கூடாது. எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. இறுதியாக அவர் வேறுவிதமாக முடிவு செய்யலாம். ஒரு பெரிய அனுமதி பெறாத தவறுக்கு நீங்கள் பொறுப்பாளி ஆவீர்கள். விழிப்போடு இருங்கள் ஆனால் எவ்விதத்திலும் செயல்படாதீர்கள்– 1942 ஆகஸ்ட் 7,8 ல் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தயாரிக்கப்பட்ட சுற்றறிக்கை (ஆனால் தொண்டர்களுக்கு அனுப்பப்படவில்லை). இது 1943 ஜீலை 15ல் காந்தியால் மேற்கோள் காட்டப்பட்டது.

1942 ஆகஸ்ட் 9ல் காந்தி (மற்றும் காங்.தலைகள்) கைது செய்யப்பட்டார், அதன் பிறகு மக்கள் போராட்டம் தீவிரமாக நடந்தது. 1944ல் காந்தி சிறையில் இருந்து வெளியே வந்த போதும் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை தொடரவில்லை. ஆகஸ்ட் தீர்மானம் தானாகவே ரத்தாகிவிட்டது என அறிவித்தார். 1944 ஆம் ஆண்டில் 1942 க்கு திரும்பிச்செல்ல இயலாது என அதற்கு விளக்கமும் அளித்தார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியாலோ காந்தியாலோ எந்த இயக்கமும் அதிகாரபூர்வமாக துவங்கப்படவில்லை– நேரு, படேல் மற்றும் ந.பி.பந்த் ஆகியோரால் 1945 செப்டம்பர் 21ல் வெளியிடப்பட்ட காங்கிரசின் அதிகாரபூர்வ அறிக்கை.

ஆக, காங்கிரசின் வரலாற்றுப்படி அவர்கள் இந்திய விடுதலைக்கு போராடியது ஐந்து ஆண்டுகாலம்தான். நிஜமான வரலாற்றுப்படி அது அவர்களுக்கு ஒரு தவிர்க்கவியலாத நிர்பந்தம், அல்லது விடுதலைக்கு பிந்தைய புத்திசாலித்தனமான வரலாற்று பிற்சேர்க்கை. மக்களிடம் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு வரும் அழுத்தத்தை குறைக்கும் ஒரு வால்வைப் போலத்தான் காங்கிரசும் காந்தியும் செயல்பட்டிருக்கிறார்கள். இனியும் பிரிட்டன் ஆதிக்கத்தை அனுமதிக்க முடியாது என மக்கள் முடிவெடுத்தார்கள், காந்தி (காங்கிரஸ்) அந்த முடிவை வேறுவழியில்லாமல் பின்பற்ற வேண்டியதாயிற்று. இந்த சூழல்தான், பிற்பாடு தேசமே காந்தியின் பின்னால் நின்றதாக காட்டப்பட்டது. காந்தியை பின்பற்றியவர்கள் மட்டுமே சுதந்திர போராட்ட வீர்ர்களாக பெருமளவு முன்னிலைப்படுத்தப்பட்டார்கள். ஏனெனில் மற்றவர்கள் முழுமையாக அறிமுகம் செய்யப்பட்டால் காந்தியின் தலையில் உள்ள கிரீடம் அவருக்கு உரியதல்ல என்பது தெரிந்துபோகும்.

அஸ்ரத் மகல், சந்திரசேகர ஆசாத், ஜஜீந்திர நாத் தாஸ், பி.கே.தத், பகவதி சரண் வோரா, மாகாவீர் சிங் இந்த பெயர்களில் நமக்கு யார் யாரெல்லாம் பரிச்சயம்? இந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேசன், அனுசீலன் சமிதி, கதார் கட்சி, நவ்ஜவான் பாரத் சபா, பப்பார் அகாலிகள், யுகாந்தர் குழு, கத்தார் இயக்கம், சிட்டகாங் போராளிகள் இயக்கம், இந்துஸ்தான் ஜனநாயக சங்கம்., இந்த வார்த்தைகள் எல்லாம் எத்தனை பேருக்கு அறிமுகம்?  காந்தி ஏன் அரை வேட்டியில் இருக்கிறார் என்பதும் ஏன் ஆட்டுப்பால் மட்டும் குடித்தார் என்பதும் வரலாறாக இருக்கும் நாட்டில் விடுதலைக்காக தங்கள் உயிரையும் உடமைகளையும் தொலைத்த போராளிகளும் இயக்கத்தவர்களும் மட்டும் இருட்டடிப்பு செய்யப்படுவதன் காரணம் என்ன?

இதற்கான காரணங்களை பிறகு பார்க்கலாம். அதை புரிந்துகொள்ள முதலில் பகத் சிங்குடன் காந்தியை கொஞ்சமாக ஒப்பிட்டு பார்ப்பது பேருதவியாக இருக்கும்.

மிஞ்சிப்போனால் நமக்கு பகத்சிங் பற்றி தரப்பட்ட செய்திகள் என்னென்ன? அவர் பாராளுமன்றத்தின் மீது குண்டு வீசியவர், லாலா லஜபதிராயை கொன்ற பிரிட்டிஷ் அதிகாரி சாண்டர்சை கொன்றவர் அவ்வளவுதான். இருபத்து மூன்றாண்டுகள் மட்டும் இவ்வுலகில் வாழ்ந்த அவர், சிறையில் இருந்த சில மாதங்களில் மட்டும் 151 புத்தகங்களை வாசித்து ஆறு சிறு நூல்களை எழுதிய சிந்தனாவாதி என்பது எத்தனை பேருக்கு தெரியும்? சிறை என்றால் வெள்ளைக்காரர்களின் செல்லப்பிள்ளைகளுக்கு தரப்பட்ட சகல சௌபாக்கியங்களுடன் கூடிய சிறையல்ல. மிக மோசமான சித்திரவதைகளையும் வசதிக் குறைபாடுகளையும் கொண்ட சிறைகள் அவை, அங்கே தன் இரண்டு சக போராளிகளை உண்ணாவிரதத்தில் பலிகொடுத்த உளவியல் அழுத்தத்தின் போதும் அவர் படித்த எழுதிய நூல்கள் அவை (அப்போதைய போராளிகளில் சிறையில் மிக அதிகமாக அடி உதை வாங்கியவர்கள் பகத்சிங், ஜெயதேவ் கபூர், மகாவீர் சிங், டாக்டர் கயா பிரசாத் ஆகியோரே. அதிலும் பகத்சிங்கே முன்னணியில் இருந்திருக்கிறார்.. ஏறத்தாழ விசாரணையின் போது இது தினசரி நிகழ்வு. என தம் நூலில் குறிப்பிடுகிறார் சிவ வர்மா).

இப்போது உண்ணாவிரதம் இருப்பவர்கள் பலரும் தவறாமல் சொல்லும் வாசகம் “நாங்கள் காந்தீய வழியில் போராடுகிறோம்” என்பதுதான். காந்திதான் உண்ணாவிரதத்தையே கண்டுபிடித்தார் எனும்படியான வலுவான பிரச்சாரத்தின் விளைவுதான் இந்த பொதுவான மனோநிலைக்கு அடிப்படை. பகத்சிங் தன் சிறை வாழ்வில் மட்டும் நூற்று பதின்நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். சிறையில் தங்களை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும் என்று கோரியும் கைதிகளுக்கு அடிப்படையான வசதிகள் கோரியும் இருந்தவை அந்த உண்ணாவிரதங்கள். தற்கொலை தொடர்பாக தன் நண்பன் சுகதேவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் “விடுதலைக்கு பிறகான இந்தியாவின் சிறைகளில் புரட்சிகரமான மாற்றங்கள் செய்யப்பட அது குறித்து நேரடி அனுபவம் உள்ளவர்கள் தேவை இல்லையா?” என கேட்கிறார். இரண்டாவது உண்ணாவிரதப்போராட்டம் பற்றி அரசுக்கு அறிவிக்கும் கடிதத்தில் தேவைப்பட்டால் அரசியல் கைதிகளை இரண்டு பிரிவாக பிரித்து (வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டோர் மற்றும் வன்முறையில் ஈடுபடாதோர்) கையாள வேண்டும் என கோரிக்கை வைக்கிறார் பகத்சிங்.

தூக்கு தண்டனை உறுதி என தெரிந்தே வலிய கைதான ஒரு வீரன், விடுதலைக்கு பிறகு தன் தேசத்திற்கான சிறையில் செய்யப்படவேண்டிய சீர்திருத்தங்களுக்காகவும் சமகாலத்தில் தமக்கு எதிர் நிலைப்பாடு கொண்ட கைதிகளுக்காவும் தன் உயிரை பணயம் வைத்து உண்ணாவிரதமிருக்கிறார். (இரண்டாவது உண்ணாவிரதம் அறுபத்து நான்கு நாள் நீடித்தது. ஒரு மாத உண்ணாவிரதத்துக்குப் பிறகு தன் வசீகரமான உருவத்தை இழந்து குற்றுயிராக நீதிமன்றத்துக்கு தூக்கிவரப்பட்டார் பகத்சிங் என் குறிப்பிடுகிறார் அவரது தோழர் சிவ வர்மா. பகத்சிங்கையும் அவரது தோழர்களையும் சாப்பிடவைக்க மிக மோசமான வன்முறையை கையாண்டது ஆங்கிலேய அரசு. அதிலொன்றாக அவர்கள் அறையில் உள்ள தண்ணீர் பானையில் பாலை நிரப்பி போராட்டத்தை ஒடுக்க முயன்றது. இதன் பொருள் பாலைக்குடி எனும் கருணையல்ல போராடினால் தண்ணீர்கூட இல்லாமல் சாவாய் எனும் எச்சரிக்கை).

உடல் நல ஆராய்ச்சிக்காக உண்ணாவிரதம், தொழிலாளர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாதிருக்க உண்ணாவிரதம், அம்பேத்கர் கொண்டுவர விரும்பிய இரட்டை வாக்குரிமையை ஒழித்துக்கட்ட உண்ணாவிரதம், கணக்கு போட்டு பார்த்தால் காந்தி இந்திய மக்களுக்கு எதிராக இருந்த உண்ணாவிரதம்தான் அதிகமாக இருக்கும் போலிருக்கிறது. காந்தியின் உண்ணாவிரதப்போராட்டத்தின் தன்மையை புரிந்துகொள்ள சத்திய சோதனை புத்தகத்தில் உண்ணாவிரதம் எனும் அத்தியாயத்தை (பக்கம் 516) படித்துப்பாருங்கள். அதில் தொழிலாளர்களுக்கான தன் உண்ணாவிரதம் ஆலை முதலாளிகளுக்கு நிர்பந்தம் தருவதற்காக இல்லை என மீண்டும் மீண்டும் சொல்கிறார் காந்தி. தொழிலாளர்களுக்காக போராடுவதாக சொல்லிக்கொண்டு அது முதலாளிகளை நிர்பந்திப்பதற்காக இல்லை என சொன்ன ஒரே தலைவன் காந்தி மட்டுமே (போராட்ட முடிவில் மிட்டாய்கள் சிதறியதை பற்றி விவரிக்கும் அளவுகூட அந்த போராட்டம் பற்றியோ அதன் முடிவு பற்றியோ அவர் விவரிக்கவில்லை என்பது வேறு விஷயம்).

இப்போது முடிவு செய்யுங்கள்.. உண்ணாவிரதம் என்பது உண்மையில் காந்திய வழிப் போராட்டமா?

பகத்சிங் இடுப்பில் குண்டை கட்டியபடியே அலைந்தவன் என்பது மாதிரியான வெகுஜன அபிப்ராயமும் யுத்தத்துக்கு ஆள் சேர்த்த காந்திக்கு கிடைத்த சாத்வீக பிம்பமும் ஒரு வலுவான பிரச்சாரத்தினால் உருவான ஒரு வரலாற்று மோசடி.

புரட்சியாளர்கள் எப்போதுமே ஜனநாயகத்துக்கு எதிரானவர்களாகவே சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். நம் முன்முடிவுகள் பகத்சிங் வரலாற்றிலும் அதை பொருத்திப்பார்க்கும். 1928 ல் பகத்சிங் தலைமையில் கூடிய புரட்சியாளர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு இயக்கத்தை ஜனநாயகப்படுத்துவதுதான். யாரோ ஒருவரை இயக்கத்துக்கு தலைவராக்கிவிட்டு, அவருடைய சித்தத்துக்கு இயக்கத்தை விட்டுவிடுவது பகத்சிங்கிற்கு விருப்பமில்லை. அவரது யோசனையின்படி இயக்கத்தை வழிநடத்த ஒரு மத்திய கமிட்டி அமைக்கப்பட்டது. கொள்கைகள் மற்றும் வழிமுறைகளை வகுக்க அதற்கு அதிகாரமும் வழங்கப்பட்டது.-விடுதலைப் பாதையில் பகத்சிங் நூலில் இருந்து(-பக் 59)

பாராளுமன்றத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துவதற்கு முன்னால் இயக்கத்தின் மத்திய குழு கூடுகிறது. அதில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் தொழில் தகராறு மசோதா மற்றும் பாதுகாப்பு மசோதா ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்க குண்டு வீசும் முடிவு எடுக்கப்படுகிறது, ஆட்கள் இல்லாத இடத்தில் குண்டுவீசிவிட்டு கைதாவது, அதன்வாயிலாக பிரச்சாரத்தை மேற்கொள்வது என்றும் முடிவாகிறது. அதனை தானே செய்யவதாக சொல்கிறார் பகத்சிங். மற்ற உறுப்பினர்கள் அவரை அனுப்பும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் (குண்டு வீச்சில் ஈடுபடுபவருக்கு தூக்கு உறுதி என உணர்ந்தே அவர்கள் அம்முடிவை எடுக்கிறார்கள். ஆகவே எதிர்கால இயக்க நடவடிக்கைகளுக்கு அவசியம் என்று கருதி பகத்சிங்கை இச்செயலில் ஈடுபடுத்த மற்ற தோழர்கள் விரும்பவில்லை.). முடிவு, கமிட்டியின் பரிசீலனைக்கு வருகிறது. பெரும்பான்மை முடிவுப்படி பகத்சிங் இந்த செயலில் பங்கேற்கக்கூடாது என முடிவாகிறது.

இந்த முடிவுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு சுகதேவ் பஞ்சாபிலிருந்து வருகிறார். அவர் இம்முடிவைக்கேட்டு மற்ற தோழர்களை கடிந்துகொள்கிறார். மற்ற தோழர்கள் குண்டு வீசி கைதானால் அதனை பகத்சிங் அளவுக்கு பிரச்சாரமாக்க முடியாது எனும் அச்சத்தை சுகதேவ் விளக்குகிறார். நோக்கமும் நிறைவேறாது வீணே இரண்டு பேரின் உயிரையும் பலியிட வேண்டுமா என வினவுகிறார். நீண்ட சமாதானங்களுக்குப் பிறகு மீண்டும் முடிவு ஓட்டெடுப்புக்கு வருகிறது, பகத்சிங் தாக்குதலில் கலந்துகொள்வது என முடிவாகிறது.

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.. தங்கள் வாழ்வின் இன்பங்களை நுகரும் பேரவாவில் இருக்கும் வயதுடைய இளைஞர்கள் தங்கள் உயிரை கொடுக்க முன்வந்து தங்கள் தோழனின் உயிரை நீட்டிக்க முடிவெடுக்கிறார்கள், இயக்கத்தின் எதிர்கால நலனுக்காக. காப்பாற்ற விரும்பிய நபர் உயிரைக்கொடுக்க முடிவாகிறது, தங்கள் லட்சியமும் மற்ற தோழர்களின் தியாகமும் கவனிக்கப்படாது போய்விடக்கூடாது என்பதற்காக. வீரமென்றால் இது வீரம். தியாகமென்றால் இதுதான் தியாகம். ஜனநாயகம் என்றாலும் இதுதான் ஜனநாயகம்.

மறுபுறம் காந்தியின் செயல்பாடுகளை பாருங்கள். சௌரி சௌரா சம்பவத்துக்காக தன்னிச்சையாக ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்துகிறார். சக காங்கிரஸ் தலைவர்களே திகைத்தார்கள். எல்லோருக்கும் தெரிந்த செய்திதான், பட்டாபி சீதாராமையாவின் தோல்விக்கான அவரது எதிர்வினை. தன்னை எதிர்க்கும் ஒருவரது தேர்வை ஏற்க மறுக்கும் எதேச்சதிகாரம். தன் விருப்பத்துக்கு எதிராக இருந்தால் ஜனநாயகத்தை சவக்குழிக்கு அனுப்பும் அடாவடித்தனம். இதுதானே காந்தியின் முகம்?

Advertisements

One thought on “காந்தி- ஆதரவும் எதிர்ப்பும் அல்லது பக்தியும் புரிதலும். 1”

 1. >> பகத்சிங் தூக்கு தொடர்பாக இர்வினுக்கும் காந்திக்கும் இடையேயான கடித உரையாடல்கள் என்ன சொல்கின்றன? எங்கள் கேள்வி அவ்வளவுதான். மற்றபடி அவர் பகத்சிங்கின் தூக்குதண்டனையை விரும்பவில்லை எனும் கருத்தோ அவர் பகத்சிங்கின் விடுதலைக்கு கடிதம் எழுதினார் என்பதோ சொத்தை வாதங்கள். இந்த ஸ்டைல் ஏமாற்றுவேலைகளை கருணாநிதி புண்ணியத்தில் நாம் பல முறை பார்த்தாகிவிட்டது.
  காந்தி என்ன செய்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்? அவர் தண்டனையை விரும்பவில்லை, கடிதம் எழுதினார் என்று நீங்களே சொல்கிறீர்கள். அவர் இன்னும் போராடி இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் கண்ணோட்டம். காந்தி தன்னால் முடிந்த வரை முயற்சி செய்தேன் என்று நினைத்திருக்க முடியாதா? அப்புறம் மீண்டும் மீண்டும் கடிதம் என்கிறார்கள், அந்தத் தரவுகள் இணையத்தில் இருந்தால் கொண்டுகளேன், உங்கள் வாதங்களுக்கு அவை இன்னும் நம்பகத்தன்மையை சேர்க்கலாம்.

  >> காந்தி தன்னிச்சையாக முடிவெடுப்பவரா இல்லையா? எந்த விவாதமும் இல்லாமல் ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்பட்டதும் சுபாஷ் சந்திரபோஸ் காங்.தலைவராக தெரிவு செய்யப்பட்டதை எதிர்த்ததும் ஜனநாயக விரோத செயல்கள் அல்லவா? உள்ளுணர்வை கேட்டு முடிவெடுத்தாலும் சரி மனைவி மச்சினனை (மட்டும்) கேட்டு முடிவெடுத்தாலும் சரி, அது ஜனநாயக விரோதம்தான்.
  தனக்கு சரி என்று படுவதற்கு போராடுவதற்குப் பேர் தன்னிச்சையாக முடிவெடுப்பது என்றால் ஆமாம், அவர் தன்னிச்சையாக முடிவெடுப்பவர்தான். லிங்கன் ஏன் மக்லேல்லனை டிஸ்மிஸ் செய்தார், ஏன் க்ராண்டுக்கு முழு ஆதரவு தந்தார், ஈ.வே.ரா. ஏன் அண்ணாவின் கருத்தை சுதந்திர தினம் ஒரு துக்க naaL என்று அறிவிப்பதில் கேட்கவில்லை என்றெல்லாம் கேட்பீர்களா என்ன? தலைவனுக்கு முக்கியமான குணமே எது சரி என்று படுகிறதோ அதை நிலைநிறுத்தப் போராடுவதுதான்.

  >> காந்தி ஆன்ம பரிசோதனை செய்து கொண்டதை அவரது ஆதரவாளர்களே ஒத்துக்கொள்வார்கள் (மனுவின் பெயர் மட்டும் மறைக்கப்படும்). இதை நியாயம் என்றோ பிரம்மச்சர்யத்தில் இருக்கும் பிடிவாதமான பிடிப்பு என்றோ எந்த அடிப்படையில் வரையறுப்பீர்கள்? இதில் மகாத்மாத்தனம் எங்கே இருக்கிறது? முன்னாள் இத்தாலி பிரதமர் பெர்லூஸ்கோனியும் இதே பரிசோதனையைத்தான் அடிக்கடி செய்கிறார். துரதிருஷ்டவசமாக அவரால் அவரது பிரம்மச்சர்யத்தை ஒருமுறைகூட நிரூபிக்கமுடியாமல் போய்விடுகிறது.
  என்னவோ போன பதிவில் என்னக்கு விமர்சனம் இல்லை என்றீர்கள், இந்த முறை இது நியாயம் இல்லை என்கிறீர்களே! எதுதான் உங்கள் கருத்து? எனக்கு பிரம்ச்சர்யத்தில் நம்பிக்கை இல்லை. காந்திக்கு இருந்தது. இது தனி மனித ஒழுக்கம், விழுமியம். காந்திக்கு விந்து ஒழுகியது அவரே சொன்னால்தான் தெரியும். அத்தனை transparent மனிதர் பகத்சிங் விஷயத்தில் சதி செய்தார் என்கிறீர்கள். மனுவின் பெயர் மறைக்கப்பட்டு நான் பார்த்ததில்லை.

  >>பொதுவில் தலைவர்களை இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கலாம். தனது கொள்கைகளால் மட்டுமே அறியப்படுகிற தலைவர்கள் ஒருவகை. இதற்கு சரியான உதாரணம் பெரியார். அவரது சாதியாலோ அல்லது அவரது கட்சியாலோ அறியப்பட்டிருப்பாரேயானால், பெரியார் இன்றைக்கு கரைந்துபோயிருப்பார். அவரை நேரில் பார்த்திராத ஒரு தலைமுறையிலும் அவர் செல்வாக்கு நீடிப்பதற்கு அவரது கொள்கைகளே காரணம். நேரெதிராக, வேறொரு தலைவர்கள் குழாமுக்கு அந்தச் சிரமம் கிடையாது. அவர்கள் ஒரு குழுவின் குறியீடாக மட்டும் அறியப்படுவார்கள்.
  பெரியார்? ஈ.வே.ராமசாமி இல்லை. காந்திக்கு அடைமொழி என்றால்தான் பிரச்சினையா? மிச்சப் பேருக்கு அடைமொழி கொடுத்தால் தப்பில்லை. நல்ல ஆளய்யா!

  >>மிக பரிச்சயமான ஓர் உதாரணம் பசும்பொன் முத்துராமலிங்கம். அவரைக் கொண்டாட கொள்கை, கோட்பாடு என ஒரு வெண்டைக்காயும் தேவையில்லை, ஒரே சாதிக்காரர்களாக இருந்தால் மட்டும் போதும். ஏறத்தாழ காந்தியும் இந்தப் பிரிவை சேர்ந்தவரே. ஆனால் அவர் ஒரு குறியீடாக இருக்கும் குழுவாக இந்தியா எனும் நாடு மாற்றப்பட்டிருக்கிறது. தேசியக் கொடியைப்போல, தேசிய கீதத்தைப்போல, காந்தியின் உருவம் ஒரு தேசிய அடையாளமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒரு தேசியக்கொடியின் மீது பக்தி கொள்ள எந்தப் புரிதலும் அவசியமில்லை, என் நாடு, எங்கள் கொடி எனும் ஒரு பந்தம் போதுமானது (துரதிருஷ்டவசமாக நம் தேசிய கீதத்துக்கு அந்த கொடுப்பினை இல்லை. அப்பாடல் 1911 ல் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியா வந்தபோது அவரை வாழ்த்தி பாடப்பட்டது).
  நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் எல்லாரும் இந்தியர்கள் என்று எனக்கு இது வரை தெரியாது.

  >> தேச விடுதலைக்குப் போராடியதில் அவரை விஞ்சிய நபர்கள் யாருமே இல்லையா?
  விஞ்சுவது என்றால் எந்த விதத்தில்? என்ன metric வைத்திருக்கிறீர்கள்? தாக்கமா? எத்தனை முறை ஜெயிலுக்குப் போனார், எத்தனை மாதம் ஜெயில் என்பதா? எத்தனை பேர் இந்த நபர்களின் தலைமையை ஏற்றுக் கொண்டார்கள் என்பதா? எத்தனை வெள்ளையரை கொன்றார்கள் என்ற கணக்கா?

  >>ஆக, காங்கிரசின் வரலாறு கூறுவது போல் அவர்கள் இந்திய விடுதலைக்குப் போராடியது ஐந்து ஆண்டுகாலம்தான். உண்மையிலும் அதுவும்கூட அவர்களுக்கு ஒரு தவிர்க்கவியலாத நிர்பந்தம் என்றே சொல்லவேண்டும்…
  உண்மையைத் திரிக்கிறீர்கள். 1929-30 -இல் பூரண சுதந்திரம்தான் எங்கள் குறிக்கோள் என்று காங்கிரஸ் அறிவித்தாகிவிட்டது. சரி நீங்கள் போராட ஆரம்பித்த முதல் நாளே இந்தியா வல்லரசாக வேண்டும் என்று போராடுபவராக இருக்கலாம். அதற்காக காந்தி படிப்படியான முன்னேற்றம் என்ற வழிமுறைய பின்பற்றக் கூடாதா என்ன?
  >>அஸ்ரத் மகல், சந்திரசேகர ஆசாத், ஜஜீந்திர நாத் தாஸ், பி.கே.தத், பகவதி சரண் வோரா, மாகாவீர் சிங்… இந்த பெயர்களில் நமக்கு யார் யாரெல்லாம் பரிச்சயம்? இந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேசன், அனுசீலன் சமிதி, கதார் கட்சி, நவ்ஜவான் பாரத் சபா, பப்பார் அகாலிகள், யுகாந்தர் குழு, கத்தார் இயக்கம், சிட்டகாங் போராளிகள் இயக்கம், இந்துஸ்தான் ஜனநாயக சங்கம்… இந்த வார்த்தைகள் எல்லாம் எத்தனை பேருக்கு அறிமுகம்? காந்தி ஏன் அரை வேட்டியில் இருக்கிறார் என்பதும் ஏன் ஆட்டுப்பால் மட்டும் குடித்தார் என்பதும் வரலாறாக இருக்கும் நாட்டில், விடுதலைக்காக தங்கள் உயிரையும் உடமைகளையும் தொலைத்த போராளிகளும் இயக்கத்தவர்களும் மட்டும் இருட்டடிப்பு செய்யப்படுவதன் காரணம் என்ன?
  அற்ப விஷயம் புரியவில்லை என்றால் காந்தி என்ன செய்வார்? இவர்களின் தாக்கம் லோக்கல் மற்றும் தற்காலிகமானது. சூர்யா சென்னைப் பற்றி தெரிந்த வ்னகாளிகளை விட காந்தியைப் பற்றி தெரிந்த வங்காளிகள் அதிகம்.

  >>மிஞ்சிப்போனால் நமக்கு பகத்சிங் பற்றி தரப்பட்ட செய்திகள் என்னென்ன? அவர் பாராளுமன்றத்தின் மீது குண்டு வீசியவர். லாலா லஜபதிராயைக் கொன்ற பிரிட்டிஷ் அதிகாரி சாண்டர்சை கொன்றவர்.
  தகவல் பிழை. சாண்டர்ஸ் தவறாகக் கொல்லப்பட்டார். ஸ்காட்டை கொலை செய்யவே பகத் சிங் குழுவினர் முயன்றனர். சிம்பிளான தகவல் பிழைகளைத் தவிர்க்கக்கூடாதா?

  பகத் சிங்கின் தியாகத்தை காந்தி உட்பட யாரும் தாழ்த்திப் பேசி நான் இது வரை பார்த்ததில்லை. ஆனால் காந்தியின் தியாகம் மட்டும்தான் கிள்ளுக்கீரை, இல்லையா வில்லவன்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s