நாம் தமிழரின் தமிழ்தேசியம்- திமுகவினர்கூட கிண்டலடிக்கும் நிலையா உங்களுக்கு வரவேண்டும்?


என் அப்பாவும் அம்மாவும் முறையே மன்னார்குடி மற்றும் குடவாசலுக்கு அருகேயிருக்கும் கிராமங்களில் பிறந்தவர்கள். அவர்களது முன்னோர்கள் எங்கிருந்தும் இடம் பெயர்ந்ததற்கான சாத்தியம் இல்லை (எங்கள் தந்தைவழி மூதாதையர்கள் சில தலைமுறைகளுக்கு முன்னால் மன்னார்குடி வட்டாரத்துக்கு பஞ்சம் பிழைக்க சென்றவர்கள் என்றாலும் அவர்கள் புறப்பட்ட இடமான தஞ்சாவூர் செங்கிப்பட்டி தமிழ்தேசிய எல்லைக்குள்தான் வருகிறது).

என் மனைவி, மூன்று மொழிகள் சரளமாக புழங்கும் ஊரில் பிறந்து வளர்ந்திருந்தாலும் அந்த ஊர் தமிழக எல்லைக்குள்தான் இருக்கிறது. என் மாமனார் மதுரைக்காரர், அவரது பாரம்பரியமும் வேறொரு தேசிய இனமாக இருக்க வாய்ப்பில்லை. என் மாமியாருக்கு மட்டும் தனது தாய்மொழி பற்றிய குழப்பம் உண்டு, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளும் மாறி மாறி பேச்சில் வெளிவரும் சிக்கலான வட்டாரம் அவருடையது. ஆயினும் அவர் படித்தது தமிழ் வழியில் என்பதாலும், அவருக்கு சொந்தமான வீட்டின் பத்திரம் தமிழில்தான் இருக்கிறது என்பதாலும் பிறந்தது வளர்ந்தது வாழ்வது யாவுமே தமிழக எல்லைக்குள் இருக்கிறது என்பதாலும் சான்றோர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மனது வைத்தால் அவரையும் தமிழராக ஏற்றுக்கொள்ள இயலும்.

ஒருவேளை இந்த பதிவின் இறுதியில் யாருக்கேனும் கோபம் வந்து எனது இனம் பற்றிய ஆராய்ச்சியிலிறங்கி நேரத்தை வீணாக்க வேண்டாமே என்றுதான் இவ்வளவு விவரங்களையும் தரவேண்டியதாகிவிட்டது. பின்னால் வரும் பத்திகள் சீமானின் தம்பிகள் பற்றிய விமர்சனமோ அல்லது அவர்களுக்கான அறிவுரையோ அல்ல. அவர்களது சமீபத்தைய சில விமர்சனங்கள் பற்றிய எனது கருத்துக்கள் மற்றும் அவர்களது அக்மார்க் தமிழ்தேசியம் பற்றிய சில சந்தேகங்களையுமே இங்கு பட்டியலிடுகிறேன்.

எனது முதல் திகைப்பு அவர்களது கொள்கை ஆவணத்தில் இருக்கும் மறைமுகமான பெரியார் எதிப்பு பிரச்சாரம். பெரியாரை வெறுப்பவர்கள் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுக்கவும் இருக்கிறார்கள். அவரை பார்ப்பனர்கள் எதிர்ப்பதில் ஒரு அடிப்படை இருக்கிறது, அவர்களது இரண்டாயிரம் ஆண்டு ராஜ்ஜியம் பெரியாரால் ஆட்டம் கண்டது. பார்பனரல்லாத ஆர்.எஸ்.எஸ்காரர்கள் எதிர்ப்பதில் ஒரு அர்த்தமிருக்கிறது, தமிழ்நாட்டில் அவர்களது கோப்பை ரத்தத்தால் நிறையாமல் இருப்பதற்குப் பின்னால் பெரியாரின் கடுமையான உழைப்பு இருக்கிறது. ஆனால் சீமானின் கூட்டத்துக்கு வரும் ஆட்களில் பாதிக்கு மேலானவர்கள் பெரியாரை ஏற்றுக்கொண்டவர்கள். இதுநாள்வரை அவர் ஓரளவு அறிமுகமான நபராக இருப்பதற்குப் பின்னால் அவருக்கு கூடிய கூட்டத்துக்கும் பங்கிருக்கிறது. தனக்கான ஆதரவு சக்தியை விலக்கி வைக்கும் முடிவுக்கு எப்படி அவர் வந்தார் என்பது இன்னமும் என்னால் விளங்கிக்கொள்ள முடியாத விடயமாயிருக்கிறது.

இது அவசரத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணமாக கொள்ள முடியாது. நீண்ட முயற்சிக்குப் பிறகுதான் இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்கிறது என அவர்களே குறிப்பிட்டிருப்பதாகத்தான் எனக்கு ஞாபகம். சீமானுக்கு தெரியாமல் தயாரிக்கப்பட்டதாகவும் இருக்க முடியாது. அவரே சமீபமாக திராவிடத்தால்தான் நாம் வீணாய்போனதாக சொல்லிக்கொண்டிருக்கிறார். பெரியார் பற்றிய அவர்களது விமர்சனங்களுக்கு பல தளங்களில் இருந்தும் பதில் வந்து கொண்டிருப்பதால், நான் குறிப்பிட எதுவும் மீதமில்லை. இந்த ஒரு விடயத்துக்காக நான் அவர்களிடம் கேட்டுக்கொள்ள ஒரேயொரு செய்திதான் உண்டு, பெரியாரை விமர்சனம் செய்வதாக இருப்பின் அதனை நேரடியாக அவரது பெயரைக் குறிப்பிட்டே செய்யுங்கள். ஒரு குழுவினரால் பெரியார் வெறுக்கப்படுவதும் அவர்களது அவதூறுகளுக்கு நாங்கள் பதில் சொல்வதும் நீண்ட காலமாக நடப்பவையே.

ஆனால், உங்கள் தரப்பில் பெரியார் பற்றிய விமர்சனம் கபடத்தனமாக இருப்பதுதான் சிக்கலானதாக தோன்றுகிறது. தமிழ் சமூகத்துக்கு கடுகளவு சேதாரம் செய்திருந்தாலும் அதனை நீங்கள் விமர்சிப்பீர்கள் என்று வைத்துக்கொண்டாலும்கூட, நூறு வருட திராவிட சித்தாந்தத்தையே இந்த புரட்டு புரட்டுகிறீர்களே இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் சமூகத்தை நசுக்கிய பார்ப்பனீயத்தின் மீது எந்த விமர்சனமும் இல்லையே, ஏன்? தமிழன் ராஜராஜன் கொண்டாடிய பார்பனீயத்தை எப்படி விமர்சிப்பது என ஒரு தமிழனாக இருந்து யோசித்தீர்களோ?

முருக பக்தரான பிரபாகரன் பக்கத்தில் பெரியார் புகைப்படமா என ஒரு பேட்டியில் கொந்தளிக்கிறார் அர்ஜுன் சம்பத். பெரியார் ஒரு பாடம், பாடம் முக்கியமேயன்றி படம் முக்கியமல்ல என சொல்கிறார் சீமான் (பெரியார் படங்களை மேடையில் வைப்பதில்லையே ஏன் எனும் கேள்விக்கான பதிலில்). சூலாயுதத்தின் இரண்டு முனைகள் கிருஸ்துவர் மற்றும் இசுலாமியர்களை இலக்கு வைத்திருப்பதாக சொல்கிறது காவிக் கும்பல். இசுலாமிய மற்றும் கிருஸ்துவர்களை எச்சரிக்கையோடு அணுக வேண்டியவர்கள் என வரையறுக்கிறது உங்கள் கொள்கை ஆவணம். நிதானமாக பார்த்தால் உங்கள் ஆவணம் துக்ளக் அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டு தினமலர் ஆட்களால் சரிபார்க்கப்பட்டது மாதிரி தெரிகிறது. ஒருவேளை இந்த ஆவணம் உங்கள் சகவாச தோஷத்தால் விளைந்ததென்றால்.. இதில் நாங்கள் சொல்ல எதுவுமில்லை, உங்கள் நண்பர்களே உங்களுக்கான பாடத்தை கற்றுத்தருவார்கள். ஆவணத்தில் இருப்பதெல்லாம் உங்கள் சொந்த கருத்துக்கள் எனும்பட்சத்தில் உங்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றேயொன்றுதான், “வரலாற்றை முறையாக படியுங்கள்”.

ஆவணத்துக்கு அப்பால் உங்களது தமிழ் சமூகத்துக்கான பங்களிப்பு பற்றிய கேள்வி எழுப்பப்படுவது இப்போது அவசியமாகிறது. தங்களது டபுள் ரீஃபைண்டு தமிழ் தேசியம் பற்றிய கருத்துக்களில் திராவிட எதிர்ப்பிற்குப் பிறகு தமிழர்களுக்கான கருத்தாக இருப்பது “தமிழனை தமிழனே ஆளவேண்டும்” என்பதுதான். தமிழனை மற்றவர்கள் ஆண்டதால்தான் இத்தனை பிரச்சனையும் என்பது உங்களது தீர்மானம். தமிழகத்தை தமிழனே ஆண்டால் என்ன சாதித்துவிட முடியும் என்பதை நீங்கள்தான் விளக்கியாகவேண்டும். கட்டபொம்மன் (சாதியால் மட்டும்) தெலுங்கர், தொண்டைமான் தமிழர்.. முன்னவர் வெள்ளையனை எதிர்த்தவர், பின்னவர் வெள்ளையனுக்கு அடிமையாக இருக்க ஒப்புக்கொண்டவர். தொண்டைமான் தமிழன் என்பதால் வரலாற்றை மாற்றிவிடலாமா? இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது தமிழனை அடித்து துவைத்த போலீஸ்காரனெல்லாம் தமிழன்தான். மிசா காலத்தில் தமிழரல்லாத மத்திய அரசின் உத்தரவுப்படி தமிழர்களை விரட்டி விரட்டி அடித்த போலீஸ்காரனெல்லாம் தமிழன்தான். இந்தியாவின் உள்துறை அமைச்சர் ஒரு தமிழன்தான், அந்த ஜென்மத்தால் தமிழ் சமூகத்துக்கு கிடைத்த ஒரேயொரு நன்மையை சொல்லுங்களேன் பார்க்கலாம்!!

ஒரு வரியில் சொல்வதானால் உங்கள் கட்சியின் கொள்கை, ஒரு தமிழனை முதலமைச்சராக்கினால் (அதாவது சீமானை முதல்வராக்கினால்) அதன் மூலம் தமிழினத்தின் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்பதுதான். இந்தியாவில் ஒரு மாநில அரசை கைப்பற்றுவதும் ஒரு நகராட்சியை கைப்பற்றுவதும் ஒன்றுதான். வேண்டிய அளவு திருடித்தின்னலாம், ஆனால் மாற்றங்களை மயிரளவும் கொண்டுவரமுடியாது. கருணாநிதிகூட அரசியலுக்கு வந்தபோது உங்களைவிட அதிக லட்சிய வெறியோடு இருந்திருக்கக்கூடும். தேர்தல் அரசியல் முதலில் கற்றுத்தருவது திருட்டையும் பொய்யையும்தான். கருணாவும் ஜெயாவும் பூசிக்கொண்ட சாணி நாறும்மென்றால் அது நீங்கள் பூசிக்கொள்ளையில் மட்டும் எப்படி நறுமணம் பரப்பும்?

சீமானது முதல்வர் பதவி லட்சியம் இங்கு பிரச்சனையல்ல. சொந்தமாக ஒரு வாக்கியம் பேச முடியாத நடிகனெல்லாம் முதல்வர் கனவில் இருக்கும்போது அவருக்கு அந்த கனவு இருப்பதை குறை சொல்ல முடியாது. ஆனால் இன மீட்சிக்கு நீங்கள் வைக்கும் தீர்வாக முதல்வர் பதவி இருப்பதுதான் உதைக்கிறது (உங்கள் ஆவணப்படி இந்திய இறையாண்மைக்கு கட்டுப்பட்டு தமிழனை தமிழனே ஆளவேண்டுமென்றால் ஒன்று முதல்வராகவேண்டும் அல்லது சோனியாவின் உதவியாளர் ஜார்ஜை துரத்திவிட்டு அந்த பதவியில் போய் உட்காரவேண்டும்.. பின்னது சாத்தியப்படாது என்பது உறுதி). சமூகத்தில் வேர்பிடித்து நிற்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் பொருளாதார பிரச்சனைகளையும் பற்றி எந்த பிரஞ்சையும் இல்லாமல் தமிழகத்தை தமிழனே ஆளவேண்டும் என்று சொல்வதைப் பார்க்கையில் நீங்கள் ராமதாஸ் திருமாவளவன் குழுவைக்கூட நல்லவராக்க உதயமானவராக காட்சியளிக்கிறீர்கள்.

ஒரு இனத்தை நாம் எல்லையைக் கொண்டு வரையறுக்க முடியாது. இடுக்கி மாவட்டத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் இருக்கிறார்கள். கிருட்டினகிரி மாவட்டத்தில் பலர் கன்னடர்கள். ஆந்திர எல்லையிலும் இதுதான் நிலை. பரம்பரையைக் கொண்டு முடிவெடுக்க முயன்றால் அது அவனது ஜாதியை இனத்துக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்தும். இந்த குழப்பத்திற்கு ஒரே தீர்வு, யார் தமிழன் என ஆராய்வதல்ல.. தமிழ் மொழியை காப்பாற்றுவதுதான். மொழி ஒன்றுதான் மக்களை பாகுபாடு ஏதுமின்றி பிணைக்க முடியும். கர்நடகா மாநிலத்தில் உள்ள சிமோகா மாவட்டத்தில் சரிபாதி மக்கள் தமிழ் வம்சாவழியினர்தான். ஆனால் அவர்கள் தங்களை கன்னடர்களாகத்தான் கருதுகிறார்கள். காரணம் இப்போது அவர்களது மொழி கன்னடம்தான். எனக்கு தெரிந்து தமிழை அதீதமாக நேசிக்கும் சவுராஷ்டிர மாணவர்கள் இருக்கிறார்கள். தமிழை எழுதப்படிக்கத் தெரியாத பச்சைத் தமிழ் மாணவர்களும் இருக்கிறார்கள். உண்மையில் தமிழ் இன உணர்வை நாம் வளர்க்க விரும்பினால் தமிழை எல்லா மட்டங்களிலும் கொண்டுவருவதுதான் வழி.

ஆனால் இதை செய்வதற்கு உங்களது திட்டம் என்ன? சீமான் முதல்வரானால் இதையெல்லாம் செய்துவிடலாம்தான். அவர் முதல்வராக இன்னும் 20 வருடம் பிடிக்குமென்று வைய்யுங்கள்.. அப்போது தமிழ் வெறும் பேச்சு மொழியாகத்தான் இருக்கும். இப்போதே பெருநகர மாணவர்களிடையே அதுதான் நிலைமை. தமிழ் அநாவசியம் என கருதும் ஒரு சமூகமும் கல்வி எட்டாக்கனியாகிவிட்ட ஒரு சமூகமும் வேகமாக உருவாகி வருகிறது. உங்களது தமிழ்ப் பற்று நிஜமெனில், இத்தகைய சிக்கலான தமிழ்ச்சமூக சூழலில் நாம் தமிழர் கட்சியின் இலக்கு முதல்வர் பதவியாக இருக்காது.

மொழியால் தமிழக மக்களை ஒன்றினைத்தது நீங்கள் கரித்துக்கொட்டும் திராவிட இயக்கம்தான். அவர்கள்தான் சமஸ்கிருத கலப்பற்ற தமிழ் மொழியை எழுத்திலும் பேச்சிலும் கொண்டுவந்தார்கள். வாசிப்பு எனும் பழக்கத்தை மாநிலம் முழுமைக்கும் பரவலாக்கியதும் திராவிட இயக்கம்தான். இவ்வளவு ஏன், நீங்கள் கட்சி நடத்த அடிப்படையாக இருக்கும் இன உணர்வுகூட அங்கிருந்து வந்ததுதான். நீங்கள் பாடம் கற்க வேண்டிய ஆசிரியர்களைத்தான் துரோகியென சித்தரிக்கிறீர்கள். (ஒரிஜினல்) கருணாவை வைத்து விடுதலைப்புலிகளை மதிப்பிடுவது சரி என்றால் கருணாநிதியை வைத்து திராவிட இயக்க சிந்தனையை மதிப்பிடுவதும் சரியானதே. ஆகவே உங்களது உண்மையான இலக்கை முடிவு செய்யுங்கள், ஆட்சிதான் இலக்கென்றால் தயைகூர்ந்து தமிழை விட்டுவிடுங்கள்.

இந்தியா எனும் நாட்டின் எல்லா மூலையிலும் சந்தைப்பொருளாதாரத்தின் கொடுங்கரங்கள் நீண்டிருக்கின்றன. பெட்ரோல் விலையுயர்வு தமிழனை ஒரு மாதிரியும் தெலுங்கனை ஒருமாதிரியும் பாதிக்கப்போவதில்லை. மதம் சார்ந்த அல்லது இனம் சார்ந்த அடிப்படை உணர்வு முதலாளித்துவத்திற்கு நூறு சதவிகிதம் விசுவாசமானது. குஜராத்தை நோக்கி ஓடும் பெருநிறுவனங்களே அதற்கான சமகால சாட்சி. பொருளாதாரம் குறித்த சரியான புரிதலும் அதனை சரிசெய்ய வேண்டுமென்கிற உந்துதலும் இருக்கையில் இந்தியாவுக்குள்ளேயே தமிழையும் தமிழினத்தையும் சிறப்பாக வாழவைக்க முடியும். அது இல்லாதபட்சத்தில் தமிழ்நாடு தனிநாடாக இருந்தாலும் தமிழினம் நாசமாகத்தான் போகும். இந்த அறிவு இல்லாதபோதுதான் தெலுங்கனும் மலையாளியும் நமக்கு முதல் எதிரியாகிறான், நிஜமான எதிரி இன்னும் வலுவாகிறான் (உடனே கே.ஆர்.நாராயணன் மேனன் என பட்டியலிடவேண்டாம், அவர்கள் பிடுங்கியதைத்தான் சிதம்பரமும் சுப்ரமணிய சாமியும் பிடுங்கினார்கள்). மனசாட்சியோடு சொல்லுங்கள்., தமிழனின் பொருளாதாரப் பின்னடைவை சரி செய்யும் தீர்வும் முயற்சியும் உங்களிடம் இருக்கிறதா?? இனியும் தமிழகத்தை தமிழனே ஆள்வதுதான் தீர்வு என நீங்கள் நம்பினால், தமிழகத்தில் வாட்டாள் நாகராஜன் குழுவொன்று இல்லாத குறை தீரப்போவது உறுதி.

ஈழப்போர் உச்சத்தில் இருந்தபோது சீமான் மீது அபார நம்பிக்கை வைத்திருந்த பலரை எனக்கு தெரியும். இந்த பதிவும் அவர்களை மனதில் வைத்தே எழுதப்பட்டது. ஒரு இனத்தின் (மொழியை அடிப்படையாகக் கொண்ட) மீட்சி என்பது அந்த இனத்தை இணைக்கும் மொழியையும் அந்த மொழிபேசும் மக்களின் பொருளாதார சமூக சூழலையும் சார்ந்தே இருக்கும். மொழியில்லாவிட்டால் நம்மை இணைக்க எதுவுமில்லாமல் போய்விடும். சாப்பாட்டுக்கே வழியில்லாதவனிடம் இனப்பெருமை பேசுவது அயோக்கியத்தனம். நாம் தமிழர் இப்போது பயணிக்கும் பாதை தேமுதிக சென்று சேர்ந்த இடத்துக்குத்தான் போய்ச்சேரும். திருமாவளவன் சீமானைவிட வீரியமாக பேசியவர்தான், இப்போது அவரால் கருணாநிதிக்கு வால் பிடிக்கும் பணியை மட்டும்தான் செய்ய முடிகிறது. இதேகதிதான் சீமானுக்கும் வரும்.. என்ன ஜெயலலிதா கோஷ்டியில் ஐக்கியமாக வேண்டியிருக்கும், அது ஒன்றுதான் வித்தியாசம். சீமான் அபிமானிகளும் அவரது கட்சி உறுப்பினர்களும் சீமானிடம் மேலே குறிப்பிட்டுள்ள கேள்விகளை எழுப்புங்கள். அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு வெறும் ரசிகர் மன்றத்துக்காரனாக உங்களை சுருக்கிக்கொள்ளாதீர்கள்.

Advertisements

“நாம் தமிழரின் தமிழ்தேசியம்- திமுகவினர்கூட கிண்டலடிக்கும் நிலையா உங்களுக்கு வரவேண்டும்?” இல் 11 கருத்துகள் உள்ளன

 1. தமிழனின் பொருளாதாரப் பின்னடைவை சரி செய்யும் தீர்வும் முயற்சியும் உங்களிடம் இருக்கிறதா?
  சபாஷ் சரியான கேள்வி . பதில்தான் யவரும் செப்ப பொய்யே லேது .

 2. நீங்கள் மறுமொழியொன்றை இட சொல்கிறீர்கள் ஆனால் நான் ஆதரவு மொழியே இட வந்துள்ளேன், அருமையான விளாசல், திடீரென்று தந்தை பெரியாருக்கு எதிராக கிளம்பினார்கள் என்றவுடன் ஒன்றும் புரிய வில்லை எமக்கு, எப்படி பதில், என்ன பதில் என்று…உங்கள் கட்டுரை அருமை, இதற்கு பதில் சொல்லட்டும்…ஈழம் மற்றும் போராட்டம் எல்லாம் சரிதான் சொந்த நாட்டில் தலித்களுக்கு எதிராக நடக்கும் இன்னல்களுக் குரல் கொடுக்க காணோம் ஆனால் சொல்வதெல்லாம் ஈழம் ஈழத்தமிழன் என்று…இருவருக்கும் சேர்ந்து குரல் கொடுங்கள் சீமான்…..

 3. இந்தக் கட்டுரை எழுதத் தூண்டிய சீமானின் நாம் தமிழர் இயக்கத்தின் அந்த கொள்கை வெளியீடு பற்றிய சுட்டியை மேலே இணைத்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.

 4. அந்த ஆவணத்தின் நகலை பெற நானும் முயற்சி செய்தேன். அது இணையத்தில் கிடைக்கவில்லை. அது குறித்த பரவலான விவாதங்களுக்குப் பிறகுதான் இந்த தலைப்பை நான் எடுத்துக்கொண்டேன். அந்த ஆவணம் வெளிப்படையாக பார்வைக்கு வைக்கப்படவில்லை, ஆயினும் அதன் உள்ளடக்கம் பற்றிய விமர்சனங்களுக்கு அவர்கள் மறுப்பும் சொல்லவில்லை. அதனை வைத்து மட்டுமே நாம் அந்த ஆவணத்தின் சாரம்சத்தை உறுதி செய்ய வேண்டியிருக்கிறது.

  ஆவணம் முழுமையாக கிடைத்திருப்பின் கட்டுரை இன்னும் விரிவாக தயாரிக்கப்பட்டிருக்கும்…

  நாம் தமிழர் கொள்கை ஆவணம் பற்றி உங்களுக்கு மேலதிக தகவல் வேண்டுமாயின் கீற்று இணையத்துக்கு செல்லவும்.

 5. நேரமிருப்பின் கொஞ்சம் விரிவாக குறையை சுட்டிக்காட்டவும். அடுத்த கட்டுரைகளுக்கு அது உதவும்.

  நன்றி.

 6. வாழ்த்துக்கள் வில்லவன்..நான் உங்கள் ரசிகன்..சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இக்கட்டுரை அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று..ஒரே ஒரு குறை..நிறைய எழுதுங்கள்..

 7. //உங்கள் கொள்கை ஆவணம். நிதானமாக பார்த்தால் உங்கள் ஆவணம் துக்ளக் அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டு தினமலர் ஆட்களால் சரிபார்க்கப்பட்டது மாதிரி தெரிகிறது. ஒருவேளை இந்த ஆவணம் உங்கள் சகவாச தோஷத்தால் விளைந்ததென்றால்.. இதில் நாங்கள் சொல்ல எதுவுமில்லை, //

  அருமை ..இதைவிட அழகாக ஆவணத்தின் கோவணத்தை எவரும் உருவமுடியாது. நாம் தமிழர்களின் ஆவணத்தின் மூலஸ்தானம் எங்குபோய் முடிகிறது என்று பார்த்தால்,தமிழ்ஹிந்து தளத்திலும்,மடிசார்மாமி ஜெயஸ்ரீ தளத்திலும் உள்ள செய்திகளைத்தான், பார்ப்பானுக்கு சான்றான்,சீரியன் என்று எழுதிய பூமாலையைத்தான் தங்கள் ஆவணத்தில் சுற்றியுள்ளார்கள். நன்றி ஐயா! –

 8. //இந்தியாவில் ஒரு மாநில அரசை கைப்பற்றுவதும் ஒரு நகராட்சியை கைப்பற்றுவதும் ஒன்றுதான். வேண்டிய அளவு திருடித்தின்னலாம்

  //தமிழ் மொழியை காப்பாற்றுவதுதான். மொழி ஒன்றுதான் மக்களை பாகுபாடு ஏதுமின்றி பிணைக்க முடியும் .

  நீங்கள் கூறுவது உண்மை.

  //இனியும் தமிழகத்தை தமிழனே ஆள்வதுதான் தீர்வு என நீங்கள் நம்பினால்

  தமிழகத்தை தமிழனே ஆள்வது இந்த வாக்கியத்தில் உள்ள தவறு என்ன?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s