இது ராஜனிடமிருந்து தொடங்கியிருக்கிறது, ஆனால் ராஜனோடு முடியப்போவதில்லை.


சின்மயியின் பன்முகத்தன்மை இந்த தமிழ்கூறும் நல்லுலகம் அறியாததல்ல. வலையுலகிலும் ஒரு பெரிய கூட்டம் பின்தொடரும் அளவுக்கான வளர்ச்சிக்குப் பிறகு தனது தகுதிகளில் எங்கோ ஒரு குறையிருப்பதாக அவர் கருதியிருப்பார் போலிருக்கிறது. தன் அம்மாவுடன் தீவிரமாக ஆலோசித்து பெண்ணுரிமை போராளியாகவும் அவதாரம் எடுத்துவிட்டார். ஆதரவாளர்கள் எண்ணிக்கை லட்சத்தில் இருக்கும்போதுகூட (பிளாக் பண்ணப்பட்டவர்கள் நீங்கலாக, உட்பிரிவுகள் சம்மதம்) ஊழல் எதிர்ப்பு போன்ற ஏரியாவை விட்டுவிட்டு இணைய உலகில் பெண்களது பாதுகாப்புக்காக போராடும்போதே அவரது தன்னடக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இணைய உலகின் பெரியவர்கள் பலரும் எழுதிகுவித்துவிட்ட ஒரு விடயத்தை அவ்வுலகின் வீதிகளில் தட்டேந்தி நிற்கக்கூட தகுதியற்ற நானும் எழுதுவதா எனும் தயக்கம் மேலிட்டாலும் சாருவே பொம்மனாட்டிகளுக்காக பேசும் துர்பாக்கியம் வந்த பிறகு நம் எழுத்து யாரை என்ன செய்துவிடும் எனும் துணிச்சலில் எழுத உட்கார்ந்துவிட்டேன்.

வரலாற்றை கொஞ்சம் மீளாய்வு செய்து பார்க்கையில், நானும் ஒரு முறை ராஜனின் கருத்தொன்றை ரீட்வீட் செய்திருக்கிறேன் என்பதை அறிந்தேன். அது நான் விதியின் கொடுங்கரங்களுக்குள் சிக்குண்டிருந்த காலம்போலும், இல்லாவிட்டால் சின்மயியை மனவுளைச்சலுக்குள்ளாக்கும் ஒரு கருத்தை (அது மன்மோகனை கிண்டல் செய்யும் ஒரு ட்விட்) நான் பகிரும்படிக்கு அந்த பெருமாள் விதித்திருப்பானா? சின்மயியின் அம்மா தனது ஆனந்தவிகடன் பேட்டியில் தன் மகளைவிட நம் நாட்டின் தலைவர்கள் கிண்டல் செய்யப்படுவதைப் பற்றித்தான் அதிகம் கவலைப்பட்டிருக்கிறார். ஆகவே அடுத்த போன் எனக்கு வந்துவிடுமோ எனும் அச்சத்தில் தூக்கம் வருவதில்லை.

அமெரிக்கா, ராம் என அவர்கள் பெரிதும் மதிக்கும் இரண்டு விடயங்களை பெயரிலேயே வைத்திருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் ராமின் போன் அனுபவமே திகிலானதாக இருக்கையில், சோ கால்டு தாழ்த்தப்பட்ட கேட்டகிரியில் உள்ள நாமெல்லாம் சிக்கினால் என்னத்துக்காவது? (நான் பி.சியா, எஸ்.சியா என ஆராய வேண்டாம், ஹை(யங்கார்) லெவலில் உள்ளோருக்கு தனக்கு கீழுள்ள எல்லாரும் தாழ்ந்தோரே). இந்த நினைப்பு பெரிதாகி அது ஆன்சைட்டி (எங்கே போன் வந்துவிடுமோ என பயப்படுவது), ஆடிட்டரி ஹாலுசினேஷன் (போன் அடிப்பது போன்ற பொய்யான ஒலி கேட்பது) என பெரிய பிரச்சனைகளில் கொண்டுவிடுவதை தவிர்க்கும் பொருட்டு இந்த பிரச்சனையை ஓரளவு முழுதாக அறிந்து கொள்வது நல்லது என கருதினேன்.

இந்த விவகாரத்தை ஒரு செய்தியாக தெரிந்துகொண்டபோது, நான் தற்காலிகமாக மழையும் மழை சார்ந்த இடமாக மாறியிருந்த தஞ்சாவூரில் இருந்தேன். கணினியும் இல்லை. நமது எம்ஜியாரின் வாரமிருமுறை பதிப்பான குமுதம் ரிப்போர்டரில் வந்த அவரது பேட்டியில் கொலை மிரட்டல், கல்யாணம் பண்ணிக்கொள் எனும் மிரட்டல் மற்றும் நீண்ட நாள் மன உளைச்சல் உண்டாக்குதல் என பல குற்றச்சாட்டுக்கள் அவரால் அடுக்கப்பட்டன. அவருக்கு ராஜன் மீதிருந்த வெறுப்பு அந்த பேட்டிகளில் வெளிப்பட்ட காரணத்தால் ஏதோ ஒரு பெரிய தகராறு ட்விட்டரில் இருவருக்கும் நடந்திருக்கும் போல. அதனால்தான் இந்த சின்மயி இத்தனை கடுப்பாகி இருப்பார் என சற்று அசட்டையாக நினைக்கையில் சரவணன் கைது என செய்தி வந்தது. இந்த மாதிரியான விவகாரத்தில் அவ்வளவு சீக்கிரம் கைது நடவடிக்கை இருக்காது எனும் எனது நினைப்பில் சாணியடித்தது போல வந்தது அச்செய்தி.

பார்ப்பன லாபியின் மிதமிஞ்சிய செல்வாக்கை நான் உணர்ந்த மற்றுமோர் நிகழ்வு இது. ஒரு எஃப்.ஐ.ஆர் போட வைக்கவே நீங்கள் போலீஸுக்கு படியளப்பதில் தொடங்கி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடுவதுவரை பல ஜாலங்களை செய்ய வேண்டும். ஆனால் சின்மயி புகார் கொடுத்த நாளிலேயே இத்தனை நடவடிக்கை பாய்கிறதென்றால், அவர் ஏனைய மக்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறார் அல்லது அவருக்கு இழைக்கப்பட்ட “குற்றம்’ எவ்வாறு ஏனைய குற்றங்களில் இருந்து மாறுபடுகிறது என பார்க்க வேண்டியது அவசியமாகிறது. மற்ற குற்றச்சாட்டுகளிலாவது வெறுமனே புகார் கொடுத்தால் போதும். சைபர் கிரைம் குற்றங்களில் மட்டும் ஆதாரம் என்று ஒன்றில்லாமல் உங்களால் ஒரு புகாரை வடிவமைக்கவே முடியாது.

ராஜன் எவ்வாறு அவரது நண்பரால் விளிக்கப்படுகிறார் எனுமளவுக்கு நுணுக்கமாக தகவல்களோடு உள்ள அவரது புகார் பட்டியலில் அவரது அம்மாவை அவமதித்தார்கள் எனும் ஒரு சம்பவம் தவிர வேறெதற்கும் ஆதாரமில்லை. கோவை வந்தபோது கொலைமிரட்டல், கல்யாணம் செய்துகொள்ளாவிட்டால் ட்விட்டரில் அவமானப்படுத்துவேன் எனும் மிரட்டல் போதும் போதாததற்கு போனில் அறிவுரை சொல்ல அழைத்த அம்மாவை நேரடியாகவே அசிங்கமாக திட்டியதாக குற்றச்சாட்டு என எந்த புகாருக்கும் ஆதாரமில்லை. (எனக்கு தெரிந்து கைக்காசை செலவு செய்து அரை டசன் ஆட்களிடம் திட்டு வாங்கியதாக சொல்லிக்கொள்பவர் அகில இந்திய ரீதியில் இந்த அம்மா மட்டுமாத்தான் இருக்கும்… ஒருவேளை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அம்மா அவர்கள் பேசியது அவருக்கே எதிரொலியாக கேட்டிருக்குமோ என எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது, காலம் கெட்டுக் கிடக்கும் வேளையில் இப்படி சந்தேகப்படுவதுகூட சைபர் கிரைமாகிவிடலாமாகையால் நாம் பொத்துனாப்ல இருப்பதே நல்லது).

அதுசரி, கடவுள் இருக்கிறார் என சொல்வதற்கு என்ன ஆதாரமிருக்கிறது? ஆனால் அவரை நீங்கள் வணங்குவதில்லையா!!! அதுபோலத்தான் சின்மயி சொன்னால் அதை உணரவேண்டும். வீணாய் ஆதாரம் கேட்டால் அது இனிவரும் நாட்களில் அவதூறு செய்வதைவிட பெரிய குற்றமாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படலாம். சின்மயியின் அம்மா ஆனந்த விகடனில் வாசித்திருக்கும் புகார்பட்டியலுக்கு நடவடிக்கை எடுத்தால் அனேகமாக இணையத்தில் செயல்படும் முக்கால்வாசிபேர் உள்ளே செல்ல வேண்டியிருக்கும்.

ராஜன் சின்மயி சண்டையில் காணக்கிடைக்கும் குற்றங்கள் ஏராளம். ஜாதிவெறி, அதிகாரத்திமிர், மிரட்டல், கபடத்தனமான வழிகளில் எதிர்ப்பவனை பிரச்சனையில் சிக்க வைத்தல் என நீளும் பட்டியலில் ஆபாசமாக பேசினார் எனும் ஒரு குற்றம்தான் ராஜன் மீது வைக்கப்பட முடிவது. ஏனையவை யாவும் சின்மயியின் கணக்கில் இருப்பவை. பொய் சொல்வது அவருக்கு எத்தனை இலகுவானது என்பதை அவரது வலைதளத்தில் அவர் குடும்ப பாரம்பர்யம் பற்றிய கதைகளின் வாயிலாகவே அறிய முடியும். (வாசிக்க: http://vovalpaarvai.blogspot.in/2012/10/blog-post_24.html).

இந்த சூழலில் மூன்று தனித்தனி கோணங்களில் இந்த விவகாரம் கையாளப்படுகிறது. சின்மயிக்கு ஆதரவு எனும் குழு, இங்கு பெரிய தகுதி சாதி மட்டுதான். பழைய கடுப்பில், எதிரியின் எதிரி எனக்கு நண்பனே எனும் கொள்கையுடையோர் கணக்கு தனி. தப்பு ரெண்டு சைடும்தான் ஆனாலும் போலீஸ் வரைக்கும் போயிருக்க வேண்டாம் எனும் நடுநிலை தரப்பு இன்னொன்று. மூன்றாவது ராஜனுக்கு ஆதரவு தரும் குழு. இந்த மூன்றிலும் இல்லாமல் எங்கு நிற்பது எனும் குழப்பத்தில் உள்ளவர்களும் ஒரு பக்கம் இருக்கிறார்கள். இந்த குழப்ப குழுவில் இருந்த வெளியேறியவனாகவே நான் பின் வரும் வரிகளை எழுதுகிறேன்.

இணையவெளியில் மட்டும் மிச்சமிருக்கும் பெயரளவுக்கான சுதந்திரத்தையும் தூக்கிலிட அதிகாரவர்கம் விரும்பும் சூழலில் தூக்குமேடையின் லீவரை இழுக்கும் வேலையைத்தான் சின்மயி ஏற்றுக்கொண்டிருக்கிறார் அல்லது முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அரசு தட்டிவைக்க விரும்பும் கூட்டத்தில் ஒருவரை தட்டிவைக்க சின்மயி விரும்புகிறார். இரண்டு பேரின் அலைவரிசை ஒத்துப்போனதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் பாடகியின் ஜாதியும் பிரபலம் எனும் தகுதியும் வினையூக்கிகளாக செயல்பட்டிருக்கிறது.

ராஜன் மற்றும் சரவணன் என்ற இருவர் கைதும் நம் சமூகத்தில் செய்திருக்கும் மற்றங்கள் பற்பல. ஒரு கருத்து எப்போது வேண்டுமானாலும் ஆபாசமானதாக அறிவிக்கப்படலாம் எனும் அச்சம் இங்கு பரவலாக விதைக்கப்பட்டுவிட்டது. இணையத்தில் அத்துமீறினால் மூன்றாண்டு தண்டனை உறுதி என்கிறார் ஜார்ஜ். எது ஆபாசம் என்பதை தமிழ்நாடு போலீஸ் முடிவுசெய்வதைவிட ஒரு பேரபாயம் கருத்துலகில் இருக்க வாய்ப்பில்லை. எந்த சட்டம் அதிகாரமுள்ளவனுக்கு குற்றம் நிரூபிக்கப்படும் வரைக்கும் பாதுகாப்பு வழங்குகிறதோ அதே சட்டம் ஒரு பாமரன் தன்னை நிரபராதி என நிரூபிக்கும்வரையிலான காலத்தை அவனுக்கு ஒரு தண்டனையாக வைத்திருக்கிறது. ஊடகங்கள் முற்றிலும் போலீஸ் பக்கம்தான் இருக்கும் என்பது பட்டவர்தனமாகியிருக்கிறது. தினத்தந்தி வகையறாக்கள் வெறுமனே போலீசின் பி.ஆர்.ஓ போலத்தான் செயல்படுகிறார்கள் என்பதை இந்த பிரச்சனையை கவனிப்பவர்களால் உணர முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் எத்தனை பெரிய குழுவில் இருந்தாலும் போலீஸ் நினைத்துவிட்டால் நீங்கள் தனியாள்தான் எனும் மிரட்டல் இணையப் பயனாளிகள் மூளையில் நேரடியாகவோ மறைமுகமாகவே திணிக்கப்பட்டுவிட்டது.

இதற்கு மேலும் நாம் இந்த விவகாரத்தை வெறுமனே சின்மயி ராஜன் சண்டையாக மட்டும் பார்ப்பது முட்டாள்தனமில்லையா?. சின்மயிக்கு பின்னால் போலீசும் அரசாங்கமும் இருப்பதை உங்களால் உணர முடியவில்லையா?. ராஜனுக்கு கைதுக்குப் பின்னால் பார்த்தால் இணையத்தில் சமூக சிந்தனையோடு செயல்படும் எல்லோருக்கும் விரிக்கப்பட்ட வலையிருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா?. சின்மயியின் புகாருக்கு எடுக்கப்பட்ட கைது நடவடிக்கை நியாயமானது என நீங்கள் உண்மையில் கருதுகிறீர்களா? மவுனமாயிருப்பது எனும் பெயரால் சின்மயியின் குற்றங்களையும் ராஜனின் குற்றத்தையும் சமநிலைப்படுத்துகிறீர்கள் என்பதை அறிவீர்களா?

தன் செல்வாக்கை காட்ட புகார் கொடுத்த சின்மயியையும் தங்கள் எதிர்காலத்தை காப்பாற்ற அல்லாடும் ராஜனையும் என்னால் ஒரே தட்டில் வைக்க முடியாது. முழுதாக அறிந்துகொள்ள முடியாத பிரச்சனைகளில் நாம் பலவீனமாவர்கள் பக்கமிருப்பதே சரி என நினைக்கிறேன். ஆகவே இந்த விவகாரத்தில் நான் ராஜனுக்கு பின்னால் நிற்பதையே விரும்புகிறேன். அவரை ஆதரிப்பவன் எனும் முறையில் அவர் சொன்னதாக சொல்லப்படும் “ஆபாச” கருத்துக்களுக்கான பொறுப்பை நானும் ஏற்கிறேன். ஒருவேளை, இனியும் நடுநிலை வகிக்க உங்கள்வசம் நியாயமான காரணம் இருப்பின் அதனை எனக்கு தெரிவியுங்கள். நான் எனது நிலையை மறுபரிசீலனை செய்கிறேன். இல்லாவிட்டால் நீங்கள் உங்கள் நடுநிலையை மறுபரிசீலனை செய்யுங்கள்.

கடைசியாக ஒரு வேண்டுதல்: திருவாளர் சாரு அவர்கள் இந்த பிரச்சனையில் சின்மயிக்கு தனது பேராதரவை தெரிவித்திருக்கிறார்கள். அவரும் இவரும் இணையத்தில் ஆர்வமாக இருப்பவர்கள் ஆதலால் நாளை பின்னே சாரு சாட்டிங்கில் இவருடன் நட்பாகி, பிற்பாடு  சின்மயிக்கு ஆதரவாக பதிவு போடும் நிலைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே பெருமாளே என பிரார்த்திக்கிறேன். அவ்வாறே வேண்டுதல் நிறைவேறினால் அடுத்த ஆயுதபூஜை விடுமுறையில் இரண்டு ஏழைகளுக்கு பீஃப் பிரியாணி வாங்கித்தந்து எனது வேண்டுதலை நிறைவேற்றுகிறேன்.

Advertisements

“இது ராஜனிடமிருந்து தொடங்கியிருக்கிறது, ஆனால் ராஜனோடு முடியப்போவதில்லை.” இல் 10 கருத்துகள் உள்ளன

 1. பார்ப்பன லாபியின் மிதமிஞ்சிய செல்வாக்கை நான் உணர்ந்த மற்றுமோர் நிகழ்வு இது. ஒரு எஃப்.ஐ.ஆர் போட வைக்கவே நீங்கள் போலீஸுக்கு படியளப்பதில் தொடங்கி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடுவதுவரை பல ஜாலங்களை செய்ய வேண்டும். ஆனால் சின்மயி புகார் கொடுத்த நாளிலேயே இத்தனை நடவடிக்கை பாய்கிறதென்றால், அவர் ஏனைய மக்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறார் //
  RIGHTLY,RIGHTLY said.

 2. நான் கிருஷ்ணசாமி அய்யங்கார் என்பவரின் மகன் சீனிவாசராகவன் அய்யங்காரின் மகன். 15 வயதிலேயே பார்ப்பனீயத்தையும் சாதீயத்தையும் கடுமையாக எதிர்க்கும் பெரியாரிய மார்க்சிய தமிழ்த்தேசிய சூழலில் வந்து சேர்ந்ததால் நான் மனிதன். இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த பார்ப்பனிய அடிமைப்புத்தி இருக்கும் என்று நொந்து கொள்ளத்தான் முடிகிறது. பார்ப்பன லாபியின் மிதமிஞ்சிய செல்வாக்கை உணர வைத்த மற்றுமோர் நிகழ்வு இது.
  தோழமையுடன்,
  சீனி மோகன்

 3. there is not even a single scrren shot of an abusive where rajan has mentioned chinmayi’s name.. all she can show is rajan tagging #chinnatha.this can not be proved as referring to chinmayi in court. other screenshots are ones where rajan has tweeted about jaya manmohan etc..what is chinmayis connection to these? how can she submit these in a a sexual abuse case ?

 4. hilight..பெருமாளே என பிரார்த்திக்கிறேன். அவ்வாறே வேண்டுதல் நிறைவேறினால் அடுத்த ஆயுதபூஜை விடுமுறையில் இரண்டு ஏழைகளுக்கு பீஃப் பிரியாணி வாங்கித்தந்து எனது வேண்டுதலை நிறைவேற்றுகிறேன்.

 5. // இதற்கு மேலும் நாம் இந்த விவகாரத்தை வெறுமனே சின்மயி ராஜன் சண்டையாக மட்டும் பார்ப்பது முட்டாள்தனமில்லையா?. சின்மயிக்கு பின்னால் போலீசும் அரசாங்கமும் இருப்பதை உங்களால் உணர முடியவில்லையா?. ராஜனுக்கு கைதுக்குப் பின்னால் பார்த்தால் இணையத்தில் சமூக சிந்தனையோடு செயல்படும் எல்லோருக்கும் விரிக்கப்பட்ட வலையிருப்பது உங்களுக்குத் தெரியவில்லையா?. சின்மயியின் புகாருக்கு எடுக்கப்பட்ட கைது நடவடிக்கை நியாயமானது என நீங்கள் உண்மையில் கருதுகிறீர்களா? மவுனமாயிருப்பது எனும் பெயரால் சின்மயியின் குற்றங்களையும் ராஜனின் குற்றத்தையும் சமநிலைப்படுத்துகிறீர்கள் என்பதை அறிவீர்களா? //

  நான் இந்தக் கருத்தை ஆமோதிக்கிறேன், நண்பரே.

 6. //கடைசியாக ஒரு வேண்டுதல்: திருவாளர் சாரு அவர்கள் இந்த பிரச்சனையில் சின்மயிக்கு தனது பேராதரவை தெரிவித்திருக்கிறார்கள். அவரும் இவரும் இணையத்தில் ஆர்வமாக இருப்பவர்கள் ஆதலால் நாளை பின்னே சாரு சாட்டிங்கில் இவருடன் நட்பாகி, பிற்பாடு சின்மயிக்கு ஆதரவாக பதிவு போடும் நிலைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே பெருமாளே என பிரார்த்திக்கிறேன். அவ்வாறே வேண்டுதல் நிறைவேறினால் அடுத்த ஆயுதபூஜை விடுமுறையில் இரண்டு ஏழைகளுக்கு பீஃப் பிரியாணி வாங்கித்தந்து எனது வேண்டுதலை நிறைவேற்றுகிறேன்.//

  இந்த முத்தாய்ப்பை ரசித்தேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s