மதச்சார்பற்ற ஒரு துறைக்கு எப்போது மாற உத்தேசம் கமல்?


இசுலாமிய அமைப்புக்களது ஒப்புதலுடன் விஸ்வரூபம் வெளியாகிறது எனும் செய்தியை வாசித்த கையோடு இந்த பதிவை எழுத ஆரம்பிக்கிறேன். இது சற்றே சிக்கலான வேலைதான். கமல்ஹாசனை எதிர்த்தால் ஜெயினுல் ஆபிதீனை ஆதரிப்பதாகிவிடும். ஜெயாவை கண்டித்தால் அது கமலை ஆதரிப்பதாகிவிடும். கருத்து சுதந்திரத்துக்காக சினிமா துறையின் இசுலாமிய விரோதப்போக்கை கண்டுகொள்ளாமல் விடுவதா அல்லது இசுலாமிய விரோதப்போக்கை எப்படியாவது ஒழித்துக்கட்ட ஜெயாவின் திமிர்த்தனத்தை கண்டுகொள்ளாமல் விடுவதா?

இந்த ஒருவார காலத்துக்குள் சோகம், கோபம், அச்சம், பவ்யம் என பல பாவங்களை கமல் தனது பேட்டிகள் வாயிலாக காட்டிவிட்டார். அவரது இன்னொரு தசாவதாரத்தை நாம் காண்பதற்குள் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கிறது (இதை மகிழ்ச்சியாக சொன்னாலும் சோகமாக சொன்னாலும் அது கமலுக்கு எதிரானதாகவே பொருள் கொள்ளப்படும் அபாயமிருக்கிறது). மத்திய பாதுகாப்பு அமைச்சரையே தெருவில் நிற்கவைத்து அழகு பார்த்த தன்னை ஒரு சாமானிய நடிகனது படம் ஊடகங்களுக்கு விளக்கமளிக்க வைக்கும் நிலைக்கு ஆளாக்கியதால் ஜெயாவுக்கு கமல் மீதான ஆத்திரம் இந்த ஜென்மத்தில் குறையப்போவதில்லை. ஆயினும் முஸ்லீம்களை வன்முறையாளர்களாகவும் கலவரக்காரர்களாகவும் பொதுப்புத்தியில் பதியவைத்த ஒரு சாதனையை அவரது ஆர்.எஸ்.எஸ் மனசாட்சி என்றென்றும் மறக்காது.

பொதுமக்கள் மத்தியில் கெட்ட பெயரை சம்பாதித்தாலும் அம்மா வாயாலேயே ஏழரை லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு என சொல்லப்பட்டதால் தவ்ஹீத் ஜமாத்துக்கும் இது மகிழ்ச்சியான தருணமே. ஜெயினுல் ஆபிதீனுக்கு பிறகு இந்த உண்மையை ஒத்துக்கொண்ட ஒரே ஆள் அம்மாதானே!!

ஆக இந்த சம்பவத்தில் எல்லோரும் ஏதோ ஒன்றை இழந்து ஏதோ ஒன்றை பெற்றிருக்கிறார்கள். இதில் பெரிய இழப்பு எதுவுமில்லாமல் அதிக பலனை பெறவிருப்பது கமல் மட்டுமே. மத்திய அரசு ஆதரவு (பின்ன.. கதை அமெரிக்க அரசு ஒப்புதல் பெற்றதாச்சே), முஸ்லீம்கள் எதிர்ப்பதால் பாஜக ஆதரவு, ஊடகங்கள் ஆதரவு, தனுஷ் மாமனாரின் இலவச கால்ஷீட் (கம்பெனியின் முடிவே இறுதியானது), திரையுலகின் ஆதரவு என நூறு கோடி முதலீட்டில் கமல் பார்த்திருக்கும் லாபம்தான் அதிகமாக இருக்கிறது. படம் பார்த்தவர்கள் (கர்னாடகாவில்) கருத்துப்படி, இந்த பிரச்சனைகள் இல்லாதிருந்தால் விஸ்வரூபம் இந்த அளவுகூட ஓடியிருக்காது.

ஆகவே இப்போதைக்கு கமல் மீது பரிதாபப்படுவது அநாவசியம். ஆனால் அவருக்கு ஆதரவான கருத்துக்கள் அவரை ஒரு பரிதாபத்துக்குரியவராக கட்டமைக்கவே அதிகம் மெனக்கெடுகின்றன. அவர் சினிமாவில் சம்பாதித்ததை அங்கேயே முதலீடு செய்கிறார். உலகத் தரத்துக்கு தமிழ் சினிமாவை கொண்டு செல்கிறார், பாபர் மசூதி இடிப்பை முதலில் கண்டித்தவர், நல்லவர், வல்லவர் என அவரது தனிப்பட்ட இயல்பைப் பற்றியே அதிகமான ஆதரவுக் கருத்துக்கள் வெளியாகின்றன. சரிதான், ஏன் எவரும் அவரது படங்களில் இருந்து அவரது நம்பகத்தன்மையை உணர்த்தும் உதாரணங்களை தருவதில்லை??

நிஜம் யாதெனில் அதனை கமலஹாசனாலேயே தரமுடியாது. ஹேராம் படத்தில் கமலுடைய பாத்திரம் ஒரு இந்து தீவிரவாதி. ஏன் அவன் கத்தியை எடுத்தான் என்பதற்கு ஒரு உணர்வுபூர்வமான காரணம் அப்படத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உன்னைப்போல் ஒருவனில் ஒரு முஸ்லீம் தீவிரவாதி காட்டப்படுகிறார். அவர் மூன்றாவது மனைவி இந்து தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதை அப்பாத்திரம் விவரிக்கிறது. அது ஒரு நகைச்சுவைக் காட்சியாக நகர்கிறது.  இவ்விரு படத்தின் ஆக்கத்திலும் கமலுடைய பங்கிருக்கிறது. ஆகவே நான் ஒரு நடிகன் மட்டுமே என சொல்லி அவர் தப்பிக்க முடியாது.

வியாபார தேவையோ அல்லது வேறெதுவோ கமலுக்கு இந்து தீவிரவாதி பாத்திரத்தை சாதாரண மனிதனாகவும் இசுலாமிய தீவிரவாதியை அங்கேயே கொல்லப்பட வேண்டியவனாகவும் காட்ட தூண்டுகிறது. இந்த வகை காட்சிகளை அர்ஜுன், விஜயகாந்த் போன்றவர்கள் செய்வது புரிந்துகொள்ளக்கூடியதுதான், காரணம் அவர்கள் அடிமுட்டாள்தனமாக செயல்படுவதற்கான எல்லா தகுதியும் உடையவர்கள். கமல் தன்னை எல்லாம் தெரிந்தவர் என காட்டிக்கொள்ள பெரு முயற்சி செய்பவர். அதை நாம் நம்புவதற்கான எல்லா தகுதியும் கொண்டவரும்கூட. ஆகவே அவர் இசுலாமியர்களை தீவிரவாதியாக காட்டுவது மற்ற அரைவேக்காடுகள் செய்வதைக்காட்டிலும் ஆபத்தானது. அவரிடம் இசுலாமிய தீவிரவாதத்துக்கான மூல காரணத்தை சொல்லும் துணிச்சலும் இல்லை. இந்து தீவிரவாதத்தை உள்ளபடி காட்டும் நேர்மையும் இல்லை. அதுவும் இல்லாவிட்டால் இரண்டு பிரச்சனையையும் சொல்லாமல் ஒதுங்கிப்போகும் குணமாவது இருந்திருக்க வேண்டும். அதுவும் இல்லை.

கமல்ஹாசனுக்கு வரவிருக்கும் இழப்பு என்பது ஈடுசெய்யக்கூடியது. சில படங்களுக்கு கொடுக்கும் தேதிகளால் அவரது வீட்டை அவர் மீட்கவியலும். ஆனால் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் இசுலாமியர்கள் தனிமைப்படுத்தப்பட்டதை எப்படி ஈடுசெய்வது? வாடகைக்குகூட வீடு கிடைக்காத அவலம், தீவிரவாதியோ என சந்தேகக்கண்கொண்டு பார்க்கும் வெகுமக்கள் இயல்பு,  கையில் சிக்கும் எல்லா முஸ்லீமையும் தீவிரவாதியாகவே நடத்தும் காவல்துறை என இன்றைய முஸ்லீம்களின் எல்லா துயரங்களுக்கும் காரணமான விஷம பிரச்சாரத்தின் முக்கிய பங்காளி தமிழ் சினிமா. ஒரு சினிமாக்காரனாக கமலும் இதில் பொறுப்புள்ளவர் இல்லையா?

இந்து அடிப்படைவாதத்தின் சகல பிற்போக்குத்தனங்களையும் தன்னகத்தே கொண்டிருப்பதுதான் தமிழ் சினிமா. பெண்களை வெறும் பாலியல் பண்டமாக கருதுவது, உயர்சாதி பெருமையை பேசுவது ஆகிய காரியங்களை இன்றுவரை சினிமா செவ்வனே செய்துவருகிறது. தீவிரவாதம் என்பதை முஸ்லீம் மதத்திலிருந்து பிரித்து பார்க்க முடியாதவர்களாக பெரும்பான்மை மக்களை ஆக்கியதில் தினமலருக்கு இணையான பங்கு தமிழ் சினிமாவுக்கும் உண்டு. தன் படங்களில் ரஞ்சிதாவின் கவர்ச்சி நடனத்துக்கு இணையான மதிப்பை தேசபக்திக்கும் கொடுக்கும் அர்ஜுனாகட்டும், மனிதர்களின் மென்மையான உணர்வுகளை படமாக்கும் ராதாமோகனாகட்டும் இருவகையினருமே இந்த சிந்தனையில் ஒத்துப்போகிறார்கள். இந்த கூடாரத்தில் இருந்து வந்த கமல் சொல்கிறார், மதச்சார்பற்ற மாநிலத்தில் குடியேறுவேன் என்று. நீங்கள் திருந்துங்கள் அல்லது உங்கள் துறை நண்பர்களோடு இடத்தை காலி செய்யுங்கள் கமல், தமிழகம் மதச்சார்பற்ற மாநிலமாக தானாகவே மாறிவிடும்.

கமல் ஆதரவாளர்கள் சொல்வதுபோல விஸ்வரூபம் இசுலாமுக்கு எதிரான படம் இல்லை என்றே வைத்துக்கொள்வோம், அவர் முஸ்லீம்களின் நண்பர் என்றும் ஏற்றுக்கொள்வோம். இந்த ஒரு நல்லவர் அநியாயமாக தண்டிக்கப்படுவதே இத்தனை துயரமானதென்றால், தீவிரவாதமென்றால் என்னவென்றே தெரியாத எண்னற்ற முஸ்லீம் மக்கள் (சினிமாவாலும் பரப்பப்பட்ட) முஸ்லீம் விரோத பிரச்சாரத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்களே அதற்கான குறைந்தபட்ச குற்ற உணர்வு எத்தனை சினிமாக்காரர்களுக்கு இருக்கிறது? இவர்கள் யாரையும் தண்டிக்கவேண்டுமென சினிமா எடுக்கவில்லை ஆனால் எங்கோயிருக்கும் ஒருவர் அதனால் பாதிக்கப்படுகிறார். அதேதான் இங்கேயும், இவர்கள் ஆண்டாண்டுகாலமாக செய்த வினை கமல் தலையில் வந்து விடிந்திருக்கிறது. என்ன செய்ய, கலைத்தாயின் தலைமகனுக்கு தாயின் பாவத்தில் பங்கு கிடைத்திருக்கிறது. (அதற்காக அவர் பாவத்தில் பங்கேற்காதவர் என நான் சொல்வதாக நினைத்துக்கொள்ள வேண்டாம்).

இவ்விவகாரத்தை கமலிடமிருந்து ஆரம்பித்து கமலோடு முடித்துவிடும் முனைப்புதான் எல்லா மட்டத்திலும் இருக்கிறது. தமிழ் சினிமா கொண்டிருக்கிற இசுலாமிய விரோத சிந்தனையும் எங்கேயும் விவாதப்பொருளாக்கப்படவில்லை. ஜெயாவின் திமிர் ஒன்றும் நமக்கு புதிய செய்தியல்ல. கமலுக்கு நட்டம் வரும் என்பதும் புதிய செய்தியல்ல. அவரை கொண்டாடுவோர் எல்லோரும் அவர் கலைக்காக எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருப்பவர் என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் எதைப்பற்றி விமர்சனம் வைத்தாலும் தொன்னூற்றொன்பது விழுக்காடு சினிமாக்காரர்கள் இது ஒரு வியாபாரம் என்றுதான் சொல்கிறார்கள். ரிஸ்க் எடுக்கும் கமலின் வியாபார நட்டத்துக்கே இவ்வளவு கவலைப்படும் மாநிலத்தில் ஒரு சமூகத்தையே அச்சுறுத்தும் ஒரு தொடர் பிரச்சாரம் சுலபமாக புறந்தள்ளப்படுவது  அவமானத்துக்குரியது.

இந்த மொத்த நிகழ்வுக்குப் பிறகு, மிகவும் பரிதாபத்துக்குரியவர்களாக மாறியிருப்பது முஸ்லீம் சமூகம்தான். இந்து அடிப்படைவாதிகளுக்கு அவர்களை குறைசொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பொதுபுத்திக்கு அவர்களை புறக்கணிப்பதற்கான ஒரு சாக்கு கிடைத்திருக்கிறது. வலுவான முஸ்லீம் அமைப்புக்கள் எல்லாம் ஜெயாவின் கண்ணசைவுக்கேற்ப ஆடும் கூலியாட்கள் எனும் பிம்பம் உருவாகிவிட்டது. விஸ்வரூபம் படம் தமிழக முஸ்லீம்களை இன்னும் அதிகமாக தனிமைப்படுத்தி இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. அந்த ஒரு காரணத்துக்காகவே கமலுக்கு இந்த ஆண்டு ஆஸ்கார் விருது கிடைக்கக்கூடும்.

Advertisements

“மதச்சார்பற்ற ஒரு துறைக்கு எப்போது மாற உத்தேசம் கமல்?” இல் 11 கருத்துகள் உள்ளன

 1. if there is no muslim in Tamil naadu it will be peafull place in the world look at all the tamil there were nealy 8 core ppl but muslim just 7 50000 thats all and why didnt they fight for the innocent muslim girl who had a death penalty

 2. //டெல்லி குற்றவாளிகள்- கல்லெறியும் உரிமை எல்லோருக்கும் உண்டு… யோக்கியனான பிறகு அதை செய்யுங்கள் என்பதுதான் என் கோரிக்கை.//

  கமல் மீது சேற்றை வாரி எரிய உங்களுக்கு உரிமை இருக்கு. நீங்க மொதல் யோகியம்மா மாறுங்க.
  கோவையில் குண்டு வெடிக்க போகிறது என்று உக்கடம் கோட்டைமேட்டில் இருக்கும் 100% முஸ்லிம்க்கு தெரியும். தெரிந்தும் அவர்கள் வாய் திறக்கவில்லை. அதனால் தான் வாங்கி கட்டி கொண்டார்கள்.

 3. “வலுவான முஸ்லீம் அமைப்புக்கள் எல்லாம் ஜெயாவின் கண்ணசைவுக்கேற்ப ஆடும் கூலியாட்கள் எனும் பிம்பம் உருவாகிவிட்டது. ”
  இதில் என்ன தவறு இருக்கின்றது.

  குஜராத் படுகொலைக்கு காரணமான மோடியை ஆதரிக்கும் ஒரே தமிழக தலைவர் ஜெயலலிதா. ஏற்கனவே மத மாற்ற தடுப்பு சட்டம் ஒன்றை கொண்டு வந்து முஸ்லிம்கள் எதிராக செயல்பாடு தனது சுரூபத்தை வெளிகாட்டியவர்.

  ஜெயலலிதாவின் ஆட்சியை ஆதரிக்கும் முஸ்லிம் கட்சிதான் தமிழ் நாட்டில் பலம் பொருந்திய ஒன்று.

  அவர்கள் ஜெயாவை ஆதரிக்க காரணம் என்ன ????

 4. விஸ்வரூபம் படத்தை முற்றாக தடை செய்ய வேண்டும் என்று போராடியவர்கள் பின் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க
  அம்மா பல்டி அடித்து பத்திரிகையாளர் மகாநாடு நடத்தினார்.

  அதன் பின் 7காட்சிகள் திருத்தினால் போதும் என்று முஸ்லிம் கட்சிகள் பெரிய பல்டி அடித்தன.

  இதன் காரண காரியங்கள் தங்களுக்கு தெரியுமா???

 5. இன்றைய ஒவ்வொரு நாளைய தினசரிகளை படித்து பார்த்தாலே நன்றாக தெரியுமே. நாட்டில் என்ன நடக்கிறது யார் காரணம் என்று. சிறுபான்மை என்று கூறிக்கொண்டு செய்யும் வேலைகள். பாவத்தில் முழு பங்கும் அவர்களுக்கே.

 6. இந்து முஸ்ஸிலிம் பிரிவினை தொடர ஜே ஜே மற்றும் முஸ்ஸிலிம் அமைப்புகள்
  காரணமாகின்றன

 7. பதிவில் ஒரு வாக்கியம் முழுமையற்றதாக் வெளியாகிவிட்டது. இசுலாமிய அமைப்புக்கள் மீது ஜெயாவின் அடியாட்கள் எனும் பிம்பம் உருவாகிவிட்டது என பாதியில் அறுந்திருக்கிறது அவ்வாசகம்.

  ஆகவே இன்றைய சூழலில் இசுலாமியர்கள் அமைப்புரீதியாக ஒரு பிரச்சனைக்காக திரண்டாலும் அந்த குழுவுக்கும் இந்த அடியாள் பிம்பம் பொருத்தப்படும். இனி ஒன்றுகூடுவது எனும் செயல்கூட அவர்களுக்கு ஒரு பிரச்சனையே என அந்த கருத்து முழுமையாக சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

  சுட்டிக்காட்டியமைக்கு நன்றி குமரன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s